Tuesday, September 27, 2011

இன்றைய செய்திகள்.

மஹிந்த ராஐபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை.

அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரிய வருகிறது.
கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வத்சலாதேவி எதிர் ராஜபக்ச வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
கேணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.தே.கவில் குடும்பவாத அரசியல் கிடையாது : கரு ஜயசூரிய.
ஐக்கிய தேசியக் கட்சியில் குடும்பவாத அரசியல் கிடையாது என கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமானதல்ல.இந்த நாட்டில் தகுதியானவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுவதில்லை.
சகல விடயங்களிலும் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியல்வாதிகள் சகல விடயங்களிலும் தலையீடு செய்கின்றனர்.மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அம்பாறையில் பிரதி பொலிஸ் அத்தியட்சகரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரியும் மரணம்.
அம்பாறையில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்ட மஹாஓயா விசேட அதிரடிப்படைத் தளபதியான 45 வயதுடைய சிசிர குமாரவுடன் ஏற்பட்ட வாக்குவாதமொன்றையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தனது கைத்துப்பாக்கியால் ஏ.எஸ்.பி. சிசிரகுமாரவை சுட்ட பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவர்கள் இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஏ.எஸ்.பி. சிசிரகுமார உயிரிழந்திருந்தார்.
தற்கொலை செய்துகொள்ள தன்னைத்தானே சுட்ட பொலிஸ் அதிகாரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லை: வெளிவிவகார அமைச்சு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து ஜனாதிபதி தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், அவர்களின் அனுதாபிகளும் நம்பியதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனினும் ஜனாதிபதி மகிந்த தனது அமெரிக்க நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்காமல், அங்கேயே தங்கியுள்ளதாகவும், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு அமெரிக்காவை விட்டு ஓடிவிட போவதில்லை என்று அவர் சூளுரைத்துள்ளதாகவும்; கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக  விசேட அதிரடிப்படை பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல் மஹிந்தவிடம் இல்லை: ரணில்.
நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்;க்கும் ஆற்றல் ஜனாதிபதியிடம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை நாட்டின் பிரச்சினைகளுக்கு இன்னும் உரிய வகையிலான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மஹிந்த அரசாங்கத்தினால் முடியாது போய் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது.அதனை மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினர் மீது ஆளுங்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
பண்டாரநாயக்க பெயரை இல்லாதொழிக்க சதித் திட்டம் தீட்டப்படுகிறது – சந்திரிக்கா.
பண்டாரநாயக்க பெயரை இல்லாதொழிப்பதற்கு பாரிய சதித் திட்டமொன்று திட்டப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் இன்று அத்தனகல்ல ஹொரகொல்லவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, முன்னாள் ஜனாதிபதியும் புதல்வியுமான சந்திரிக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கட்சித் தலைமையகத்தில் சந்திரிக்காவின் படம் அகற்றப்பட்டுள்ளது.தந்தை, தாய் மற்றும் நான் தொடர்ச்சியாக 62 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி கிண்ணஸ் சாதனை படைத்துள்ளோம்.தற்போது கட்சிக் கூட்டங்களில் எனது பெயரை குறிப்பிடுவதில்லை, எனினும் வீதியில் இறங்கினால் மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர்.அந்தக் காலம் போன்று தற்போது இல்லை என மக்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.
இரத்தம் வியர்வை சிந்தி இந்தக் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றேன், எனினும், அமைச்சர்கள் என்னிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவின் ஐம்பதாம் நினைவு நிகழ்வுகளில் கட்சியின் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மஹாராஜா குழும நிறுவனத்தின் தலைவர் ராஜமஹேந்திரனுடன் தாம் நட்புறவைப் பேணியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனில் ரபானியை கொலை செய்தது யார்: விசாரணைக்கு கர்சாய் உத்தரவு.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த பர்ஹானுதீன் ரபானி கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த அதிபர் ஹமித் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஹமித் கர்சாய் அமைதி கவுன்சில் அமைத்துள்ளார். அதன் தலைவராக முன்னாள் அதிபர் ரபானி நியமிக்கப்பட்டார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்த இவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். சமாதான பேச்சு நடத்துவதாக தலிபான்களும் கூறினர். இதுகுறித்து பேச கடந்த 20ம் திகதி ரபானி வீட்டுக்கு ஒருவர் வந்தார். திடீரென வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இதில் ரபானி கொல்லப்பட்டார்.
ரபானி கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவருடன் போனில் பேசியவரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த ராணுவ அமைச்சர் அப்துல் ரகீம் வர்தாக் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அதிபர் ஹமித் கர்சாய் கூறினார்.
போப் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் பொய்யானது: வாடிகன் அதிகாரிகள்.
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை வாடிகன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் நேற்று முதல் பக்கத்தில் வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின் நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி இருந்தார்.
அதில் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றசாட்டுகளால் போப் மனமுடைந்து காணப்படுகிறார்.
அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன் போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது.
டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும் மேற்பட்ட குழந்தை பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த செய்திகளை வாடிகன் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து வாடிகன் நகர செய்தி தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோ லோம்பார்டி கூறியதாவது, போப்பின் உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும் எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை.
ஜேர்மனிக்கு சென்ற போதும் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது.
ராஜினாமா குறித்த தகவல்களை எழுதியவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றார்.இதுகுறித்து செய்தி வெளியிட்ட நிருபர் ஆண்டோனியோ கூறியதாவது, இந்த வதந்தியை கிளப்பி விட்டதே வாடிகன் நகரத்தை சேர்ந்தவர்கள் தான். ராஜினாமா செய்வது குறித்து தகவலை போப் இதுவரை மறுக்கவே இல்லை என்றார்.
ஸ்பெயினின் புகழ் பெற்ற காளைச் சண்டைக்கு வருகிறது தடை.
ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற காளைச் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. நேற்று இந்த காளைச் சண்டையின் கடைசிப் போட்டி பார்சிலோனாவில் நடைபெற்றது.2012 முதல் காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற காட்டலோனியா பிராந்தியம் முழுவதும் காளைச் சண்டைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டு இந்த காளைச் சண்டை. நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த பழம் பெறும் வீர விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் அவர்களுக்கும், காளைச் சண்டைப் பிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதலும் வெடித்து வந்தது.
ஸ்பெயினின் காட்டலோனியா பிராந்தியத்தில்தான் இந்த விளையாட்டு பிரபலமானது. தற்போது இந்தப் பிராந்தியத்தில் காளைச் சண்டைக்குத் தடை விதிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
2012ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து பார்சிலோனாவில் நேற்று கடைசி காளைச் சண்டை நடந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட சீட்களைக் கொண்ட அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.காளைச் சண்டைப் பிரியர்கள் கடைசிச் சண்டையை மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு பார்வையிட்டு ரசித்தனர். பார்சிலோனாவின் லா மொனுமென்டல் அரங்கில் இந்த விளையாட்டு நடந்தது.
இந்தத் தடை காரணமாக காளைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துளளனர். அதேசமயம் இந்தத் தடைக்காக போராடி வந்த எதிர்ப்பாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இனி காளைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த காளைச் சண்டை பிரபலமானது. இருப்பினும் ஸ்பெயினில் அதிலும் பார்சிலோனாவில் நடக்கும் காளைச் சண்டைதான் மிகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் துறைக்காக நோபல் பரிசு பெற்றவர் புற்றுநோயால் மரணம்.
புற்றுநோயால் அவதியுற்று வந்த நோபல் பரிசு பெற்ற பிரபல பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் வேங்காரிமாத்தாய் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஆப்ரிக்க நாடான கென்யா நாட்டைச் சேர்ந்தவர் வேங்காரிமாத்தாய்(71) . நீண்ட காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நைரோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைபலனின்றி கடந்த ஞாயிறன்று இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் கடந்த 1977ம் ஆண்டு கென்யாவில் “பசுமை இயக்கம்” என்ற அமைப்பை நிறுவினார். உலகினை சுற்றுச்சூழலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக ‌போராடி வந்தார். இவரது அயராத முயற்சியால் ஆப்ரிக்கா முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 40 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1980களில் சுற்றுச்சூழ‌லால் ‌நைரோபி நகரம் மாசுபடர்ந்து வருவதை அறிந்த மாத்தாய் இனி தலைநகரான ‌நைரோபி நகரில் உயர்ந்த கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.அப்போதைய அரசை எதிர்த்து போராடியதற்காக சிறை சென்றார். இவரது சிறந்தபணியினை பாராட்டி கடந்த 2004ம் ஆண்டு இவருக்கு சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நோபல் பரிசினை பெறும் முதல் ஆப்ரிக்க பெண் என்ற பெருமையினை பெற்றார். கடந்த 2002ம் ஆண்டு ‌கென்யா நாட்டின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
லிபிய சிறையில் கொன்று புதைக்கப்பட்ட 1270 நபர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு.
லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. எனவே அவரது ஆட்சி வீழ்ந்தது.அவரது மகன்கள், மகள் மற்றும் ஆதரவாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது லிபியாவில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
புதிய அரசு இன்னும் ஒரு வாரத்தில் அமைக்கப்பட்டு பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் உள்ள அபுசலீம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கடாபி ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டிருப்பதை இடைக்கால அரசு கண்டுபிடித்துள்ளது.
கடாபிக்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லையெனில் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு 1270 பேர் கொலை செய்யப்பட்டு சிறைக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த கொடூர செயல் நடந்துள்ளது. அந்த சிறையை சமீபத்தில் பார்வையிட்ட இடைக்கால அரசின் பிரதிநிதிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது சிறையின் பின்புறம் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. பலரது உடையும் மண்ணின் மேற்பரப்பில் தெரிந்தது. இதுகுறித்து அங்கு பணி புரியும் சிறை காவலர்களிடம் விசாரித்தபோது மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.எனவே சிறையின் பின்புறத்தில் கைதிகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் அரியனா ஓட்டல் வளாகம் உள்ளது. அதை அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 4.45 மணியளவில் தீவிரவாதிகள் அந்த அலுவலகத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அமெரிக்க படைகளும் சுட்டன. இந்த சண்டை சில மணி நேரம் நடந்தது. இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சித்திக் சித்திடு உறுதி செய்துள்ளார்.
அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதை பொலிசார் கேட்டதாக அவர் கூறினார். அது கூட்டு படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஆப்கானிஸ்தான் படைகளோ, பொலிசாரோ நுழைய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அச்சம்பவத்தை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளும் உறுதி செய்தனர். நிலைமையை சமாளிக்கப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து சொல்ல காபூலில் உள்ள அமெரிக்க தூதர் கவின் சுந்தாவால் மறுத்து விட்டனர். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க தூதரகத்தில் புகுந்து 19 மணி நேர தாக்குதல் நடத்தினர். மேலும் முன்னாள் அதிபர் பக்ருதீன் ரப்பானியை மனித குண்டு மூலம் கொலை செய்தனர்.இச்சம்பவங்களுக்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பாகிஸ்தானின் ஹக்கானி தீவிரவாதிகள்தான் காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டியிருந்தது.
பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
லண்டனின் வெம்பிளி அரங்கில் மினாஜ் உல் குரான் எனும் இஸ்லாமியக் குழுவின் 12,000 முஸ்லிம்கள் திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.2012இல் சமாதானத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒரு மில்லியன் மக்களை ஒன்லைனில் கையெழுத்திட வைத்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.
10 வருடமாக இடம்பெறும் பயங்கரவாதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என இந்த மாநாடு ஒரு செய்தியை வெளிப்படுத்தும் என மினாஜ்-உல்-குரானின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.இவரது பேச்சின் போது பயங்கரமான 9/11 என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட போதும் அவருக்குக் கைதட்டல்கள் பாராட்டாகக் கிடைத்தன.
வழமையாக இந்த அரங்கில் பொப் நட்சத்திரங்கள் தான் கூட்டங்களை இழுப்பார்கள். ஆனால் இன்று இந்த முஸ்லிம் கல்வியாளர் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார்.இவரது சொற்கள் கருத்தாழமிக்கவையாக இருந்தன. இஸ்லாமிற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அவர் பயங்கரவாதத்தினையும் பயங்கரவாதிகளையும் கண்டித்தார்.
இக்கூட்டத்தை ஒழுங்குசெய்ய இவர்களுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பலதரப்பட்ட மொழிகளில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் போது முன்னரே பதியப்பட்ட பல தலைவர்களது கருத்துக்களும் ஒலி, ஒளி பரப்பப்ட்டன.
இங்கு பலதரப்பட்ட சமயங்களினதும் குருமார்களும் கலந்து கொண்டு அமைதிக்கான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.இதில் முஸ்லிம் உலகில் ஜனநாயகம் மற்றும் நல்ல செயற்பாடுகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஏழ்மைக்கு எதிராகவும் பிரகடனங்கள் செய்யப்பட்டன.
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை.
சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா(87) நேற்று அறிவித்தார். அப்போது அடுத்து நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில்(ஷீரா) பெண்களையும் பங்குபெற செய்ய முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.சவுதி அரேபியாவில் வருகிற 29ந் திகதி 285 நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் 5 ஆயிரம் ஆண்கள் போட்டியிடுகின்றனர்.இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெண்களும் பங்கேற்க முடியும். தேர்தலில் அவர்களும் போட்டியிடலாம். ஓட்டு போடலாம்.
உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களாக முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந்த நிலை இங்கும் ஏற்படக்கூடாது என கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததாக தெரிகிறது.சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போது அங்கு பெண்கள் கார் ஓட்டி வருகின்றனர். இதேநிலை மற்ற விஷயங்களிலும் ஏற்பட்டு விடக்கூடாது என அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 13 தீவிரவாதிகள் பலியாயினர்.பிலி்ப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஹிலிடாலிப்போ நகரத்தில் துப்பாக்கி ஏந்தி வந்த 50 தீவிரவாதிகள் திடீரென அதிகாலையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 13 தீவிரவாதிகளும், இரு கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர் என்று கடற்படைத் தலைவர் கால் ரோமியோ டெனால்கொ கூறினார்.இத்தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இத்தீவிரவாதிகள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினரால் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ அலுவலகம் கருதுகிறது.
இத்தீவிரவாதிகள் ஹடீப் காரியாவை தலைவனாகக் கொண்ட புதியதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத இயக்கம் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கால் ரான்டோல்ப் கேபன்ங்பேங் கூறினார்.அப்பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகளை எதிர்த்தே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று டெனால்கொ கூறினார்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி.
ஈராக்கின் கர்பாலா நகரில் நிகழ்ந்த தொடர் கார் குண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈராக்கின் தலைநகர் பாக்தாத் நகரில் 90 கி.மீ தொலைவில் உள்ள கர்பாலா நகரில் அரசு கட்டடம் ஒன்று உள்ளது.
இங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள பொலிஸ் ஸ்டேஷனிலும் இரு முறை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதலில் 12 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது: ஐ.எம்.எப் தலைவர்.
யூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிப்பதற்கான பணம் சர்வதேச நிதியமைப்பிடம் இல்லை என கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார்.
யூரோ நாணயம் பயன்படுத்தும் 17 நாடுகளில் தற்போது கிரீஸ் எந்நேரமும் திவாலாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தலைவர்களிடம் கிரீசை திவால் ஆவதில் இருந்து மீட்பதற்கு எவ்வித யோசனையும் இல்லை.
இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில் இரு நாட்களாக உலக நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.
மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் வராமல் தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த ஐ.எம்.எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட்,”ஐ.எம்.எப்.பிடம் தற்போது உள்ள பணம் தற்போதைய பிரச்னைகளைச் சமாளிக்க போதுமானது தான். ஆனால் இந்தக் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிக்க ஐ.எம்.எப்.பிடம் பணம் இல்லை” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா நாட்டுப் பிரதிநிதிகள் மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படுமானால் அதைப் போக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.அதேநேரம் கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் கூறுகையில்,“கிரீஸ் ஒரு போதும் திவாலாகாது. யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறாது. அந்த நிகழ்வுகள் நடந்தால் அது யூரோ மண்டலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என உறுதியளித்தார்.
அணுசக்தி ரகசியங்களை லிபியாவிற்கு பாகிஸ்தான் வழங்கியது அம்பலம்.
பாகிஸ்தான் தனது அணுசக்தி ரகசியங்களை ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.மேலும் அந்த ரகசியங்களைப் பெறுவதற்காக லிபியா கொடுத்த ஐந்து மில்லியன் டொலர் பணம் இந்தியா, சிங்கப்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் “பாக்ஸ் நியூஸ்” செய்தி நிறுவனம் ஐ.எஸ்.ஐ.யின் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில் இருந்து பாகிஸ்தானின் அணுசக்தி ரகசியங்கள் லிபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு விஞ்ஞானி அப்துல் காதீர் கான் மூலம் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான அப்துல் காதீர் கான் 2004ல் நாட்டின் விஞ்ஞான ரகசியங்களை ஈரான், ஈராக், வடகொரியா, லிபியா ஆகிய வெளிநாடுகளுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்கான ஆதாரங்களை அமெரிக்கா அப்போது வெளியிட்டிருந்தது. தொடர்ந்த விசாரணையில் 2009ல் கான் மீதான குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிராகரித்து அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இவ்வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் கானை நேரில் அழைத்து விசாரித்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அப்போது அதை அதிகாரிகள் மறுத்தனர்.இதையடுத்து அதற்கான ஆதாரங்கள் மேற்கத்திய நாடுகளின் உளவுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் சிலவற்றைத் தான் தற்போது பாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ ஆவணங்களில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி தொழில் நுட்பங்களை சட்ட ரீதியாகவும், கள்ளத்தனமாகவும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கு அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.அதற்கு வசதியாக 1976ல் அணுசக்தி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்ட போது அதன் திட்ட இயக்குனருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இலங்கைத் தமிழர்களும், துபாயில் வசித்து வருபவர்களுமான பரூக் மற்றும் தாகிர் இருவரும் கானின் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அணுசக்தி தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக லிபியா இவர்கள் இருவரிடமும் ஐந்து மில்லியன் டொலர் பணம் கொடுத்தது.
அதில் கொஞ்சம் டாக்டர் நியாசி வழியாக இந்தியா, சிங்கப்பூர் என அனுப்பப்பட்டு ஐதர் ஜமானின் வங்கிக் கணக்கில் போடப்பட்டது. இந்தக் கணக்கில் இருந்து தாகிர் கொஞ்சம் எடுத்து தகவல்கள் அளித்தவர்களிடமும், கானால் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சமூக, கல்வி நலத் திட்டங்களுக்கும் அனுப்பியுள்ளார்.டாக்டர் நியாசி மூலம் லிபியர்களைத் தொடர்பு கொள்ள பரூக் முக்கியமானவராக இருந்திருக்கிறார். இவர் தான் வரைபடங்களை லிபியர்களுக்கு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்: விளாடிமிர் புடின்.
ரஷ்யாவில் அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் தற்போது பிரதமராக விளாடிமிர் புடினும், அதிபராக டிமிட்ரி மெட்வடேவும் உள்ளனர். கடந்த 2000 முதல் 2008 வரை புடின் அதிபராக இருந்தார்.ரஷ்ய அரசியல் சாசனம், ஒருவர் இருமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக இருக்கக் கூடாது என, தடை விதித்திருப்பதால் 2008ல் புடின் மெட்வடேவை அதிபராக்கி தான் பிரதமரானார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாஸ்கோவில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் மெட்வடேவ்,“அதிபர் தேர்தலில் வேட்பாளராக புடின் நிற்பதற்கு கட்சி ஆதரவளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதன்பின் பேசிய புடின் அதிபர் வேட்பாளராக நிற்க ஒப்புக் கொண்டார். 2012ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நிற்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு கட்சிக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் யார் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற குழப்பத்துக்கு புடினின் இந்த ஒப்புதல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதே நேரம் பிரதமர் பதவிக்கு மெட்வடேவ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் புடினின் ஆதரவாளரும், தற்போதைய ரஷ்ய நிதியமைச்சருமான அலக்சி குத்ரின் நேற்று வாஷிங்டனில் அளித்த பேட்டியில், தற்போதைய அதிபர் மெட்வடேவ் பிரதமராகும் பட்சத்தில் தான் அவரது அமைச்சரவையில் பணியாற்ற முடியாது என கூறியுள்ளார்.குத்ரின் பிரதமர் பதவியைக் குறிவைத்துள்ளதாகவும், அதனால் தான் அவர் இவ்விதம் பேசியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் உடனே நாடு திரும்ப உத்தரவு.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துக்காக அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர்ரை உடனே நாடு திரும்பும்படி அந்நாட்டுப் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதையடுத்து கிலானி இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“அந்நிய சக்திகளில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டவும் கிலானி ஏற்பாடு செய்துள்ளார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபி சொந்த ஊரின் மீதான தாக்குதல்கள் நிறுத்திவைப்பு.
லிபிய அதிபர் மம்மர் கடாபியின் சொந்த ஊரான சிர்தேவின் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடாபியின் சொந்த ஊரான சிர்தே அரசு எதிர்ப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கடாபியின் படைகளுக்கும், அரசு எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமையிலிருந்து கடுமையான சண்டை நடந்து வந்தது.
இந்நிலையில் நேட்டோவின் உத்தரவின் பேரில் அரசு எதிர்ப்புப் படையினர் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாலேயே அரசு எதிர்ப்புப் படையினரின் தாக்குதல் திங்கள்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகரைக் கைப்பற்றும் நோக்கில் வலுவான சுற்று முற்றுகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவச வாகனங்களும், பீரங்கிகளும், ராக்கெட் ஏவு வாகனங்களும் நகரைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் தொடங்கப்பட்டால் நகரினுள் கடுமையான சண்டை மூளும் என்றும், வீதிகளில் தான் அதிகளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறும் என்றும் அரசு எதிர்ப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கூறினார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் அரசு எதிர்ப்புப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 145 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF