கடந்த கால கசப்பான அனுபவங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66ம் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கப்படும்.
மக்களின் மனதில் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.வடக்கு மாகாணத்தில் படையினர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர்.வடக்கு மாகாணத்தில் மிகவும் சொற்ப அளவிலான படையினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
உலகில் சிறிய நாடுகள் உதாசீனம் செய்யப்படக் கூடாது, அவ்வாறான நாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மனித உரிமை என்னும் பெயரில் நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கியூபாவிற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும், நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் போது ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் எதிர்கால சந்ததியினர் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு சர்வதேச ரீதியான தீர்வுகளை வழங்க முடியாது, அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது- மகிந்த
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியூயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார்.
உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல், சர்வதேச நிதிக் கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இலங்கையுடன் போர்ப் பயிற்சியை இடையில் திடீரென நிறுத்தியது இந்தியா.
நேற்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வருவதாக இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ஆம் திகதி தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக இலங்கை அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப் பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இன்னமும் வெளியிடப்படவில்லை.
ஐ.தே.க.விலிருந்து சஜித்தை விரட்டியடிக்க தீர்மானம்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் பின் பெரும்பாலும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பேரில் கட்சியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐ.தே.க. விலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
அதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட சட்டத்தரணிகளின் உதவியை நாடியுள்ளார்.
ஐ.தே.க.வைப் பலவீனப்படுத்தி இரண்டாக பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்துடன் இசைந்து செல்லும் சஜித் பிரேமதாச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருவது பரவலாகப் பேசப்படும் விடயமாகும்.
தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழு செயற்பட வேண்டும்.
நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் பொதுநலவாய அமைப்பு நாடுகள் கூட்டத்தொடரில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொதுநலவாய அமைப்பு நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல துறை அதிகாரி லின் பெஸ்கோ மற்றும் செயலாளர் பான் கீ மூனின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் நம்பியார் ஆகிய இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹனவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லி்ன் பெஸ்கோவுடனான சந்திப்பு பயனுடையதாக அமைந்ததாக சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தமக்கு விளக்கமளித்ததாக லின் பெஸ்கோ இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது!– தயாசிறி ஜயசேகர.
பொரளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.காணிகளின் மெய்யான உரிமையாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
எமது வீடுகளை பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் போராட வேண்டியுள்ளது.பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நியூயோர்க்கில் பான் கீ மூனுடன் சந்திப்பு.
ஐ.நா. பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதிக்கு ஐ.நா. பொதுச் செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை பான் கீ மூன் வெளியிட்ட பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரைச் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வாரம் சந்திக்கவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பார் என்றும் புதுடில்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாண எதிர்க்கும் இனவாத அமைச்சர்கள்!- சமாளிக்க கடும் முயற்சி.
13 வது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்படுவதை ஆட்சேபிக்கும் இனவாத அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோரைச் சமாளிப்பதற்கு இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் பலர் தயாராகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வு யோசனைகளைத் தயாரிக்கும் போது 13 வது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று சில விடயங்களில் உடன்பாடு காண்பதென்று அரசு யோசித்து வருகிறது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சர்வதேச அழுத்தமும் அரசுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கும் விடயத்தை அரசின் கடும்போக்குடைய இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் ஆட்சேபித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சில அமைச்சர்கள் இவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவித்து வருவது குறித்தான தமது அதிருப்தியை தமிழ் அரசியல்வாதிகள் பலர் மூத்த அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
அமைச்சரவைக்குள்ளேயே இவ்வாறான எதிர்ப்பு வருமாயின் அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகளை எப்படி நம்பிக்கையுடன் முன்னெடுக்கமுடியும் என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் பிரமுகர்களின் இந்தக் கவலையை நன்கு செவிமடுத்த மூத்த அமைச்சர்கள் சிலர் மேற்படி கடும்போக்கு அமைச்சர்களுடன் இதுபற்றிப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்குத் தம்மால் முடியுமென உறுதியளித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதன்படி கடும்போக்குடைய இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ ஆகியோருடன் பேசுவதென்றும், 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பாக அவர்களின் சிபார்சுகளை உள்ளடக்குவது பற்றி ஆராய்வதென்றும் இந்த மூத்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
டுபாயிலிருந்து 700 கையடக்கத் தொலைபேசிகளைக் கடத்தியவர் கட்டுநாயக்கவில் கைது.
இன்று அதிகாலை 5 .00 மணியளவில் டுபாயிலிருந்து புறப்பட்ட யூ.எல். 228 என்ற இலக்கமுடைய சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தி வந்த கையடக்கத் தொலைபேசிகளின் பெறுமதி 35 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் ரணிலின் ஆசனத்தை கைப்பற்ற முனைந்த நாடாளுமன்ற உறுப்பினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி குழுவை சுஜீவ சேனசிங்கவே எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனத்தில் அமர முயற்சித்தார்.எனினும் அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா தடுத்து விட்டார்.
இது நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான செயல் என்று அவர் குறிப்பிட்டார்.ஏற்கனவே சஜீத் பிரேமதாஸ அணிக்கும் ரணிலின் அணிக்கும் இடம்பெற்று வருகின்ற உட்கட்சிப் பிரச்சினை இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் முன்னிலையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான கனடாவின் முயற்சிகளுக்கு ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் அதிருப்தி.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தி வருகின்றது.
எனினும், இந்த முயற்சிகளுக்கு ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை அமைப்புக்களும், மகளிர் அமைப்புக்களும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என இலங்கைக்கு ஆதரவான நாடுகள் கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைகோள்.
நாசா அனுப்பியிருந்த செயலிழிந்த செயற்கை கோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் அது எங்கு விழும் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 1991ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, யு. ஏ.ஆர்.எஸ் எனும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட செயற்கை கோளினை விண்ணில் செலுத்தியது.
வளிமண்டலம் குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டதால் கடந்த 2005ம் ஆண்டே பூமியை நோக்கி விழத்தொடங்கிவிட்டது.
அதன்படி இன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கீழே விழுவதற்கு முன்பாக இந்த செயற்கை கோள் பல ஆயிரம் துண்டுகளாக சிதறும், கடைசியாக அதன் 26 துண்டுகள் பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் செயற்கை கோள் துகள்கள் வட அமெரிக்காவில் விழும் என எதிர்பார்த்த நாசா விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் தந்துள்ளதால் தற்போது பூமியில் எங்கு விழும் என உறுதியான தகவல் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இரு விமானங்கள் மட்டும் இரட்டை கோபுர தகர்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது: ஈரான் அதிபர்.
அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரு விமானங்கள் மட்டும் மோதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு பொறியியலாளர் என்பதனால் இரண்டு விமானங்களால் மட்டும் இவ்வாறானதொரு பாரிய சேதத்தினை ஏற்படுத்தமுடியாதெனவும் வேறு ஏதாவது திட்டமிடப்பட்ட வெடிப்பு சம்பவமும் அதனோடு தொடர்புபட்டிருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அமெரிக்காதான் இதனை நடத்தியதாக அவர் கருத்தெதனையும் குறிப்பிடவில்லை.
ஐ.நாவின் பொதுக் கூட்டத்திற்காக தற்போது நியூயோர்க் சென்றுள்ள அவர் ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலின் போதே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல வெளியிட்டு புகழ் பெற்றுள்ள அஹமட் நிஜாட்டின் இக்கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
செயற்கைகோள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழ வாய்ப்பு: ரஷ்யா.
நாசா அனுப்பியிருந்த செயலிழிந்த செயற்கைகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் அது எங்கு விழும் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ரஷ்யா விண்வெளி நிபுணர்கள் இந்திய பெருங்கடலில் விழலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய விண்வெளி நிபுணர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 1991ம் ஆண்டு வளிமண்டல ஆராயச்சிக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, யு. ஏ.ஆர்.எஸ் எனும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட செயற்கை செயற்கைக்கோள் கடந்த 2005ம் ஆண்டே பூமியை நோக்கி விழத்தொடங்கிவிட்டது.
இந்த செயற்கைக்கோள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழ வாய்ப்புள்ளது. ரஷ்ய விண்வெளி மையத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸி ஜூலோடுஹின் தனது இணையதள பிளாக்கில் கூறியதாவது: யு.ஏ.ஆர்.எஸ் செயற்கை கோள் இந்திய பெருங்கடலின் குரோசட் தீவு பகுதிகளில் விழலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த தீவுகள் தென் இந்தியாவின் 1,340 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள 40 சிறு தீவுகளை கொண்ட பகுதியாகும்.இது மடாகஸ்கர் நாட்டின் அருகேயும், தென் ஆப்ரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் அருகே உள்ளது. இப்பகுதியில் விழுந்தால் சுமார் 800 கி.மீ தொலைவிற்கு இதன் சிதறிய பாகங்கள் பரவி இருக்கும் என்றார்.
அதிகம் சாப்பிடும் நபர் போட்டியில் வென்றவர் மரணம்.
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான்மெண்டல்(77). தென்ஷபோரிஷியா மாகாணத்தில் உள்ள தொக்மாக் நகரில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது. அதில் இவான் மெண்டல் கலந்து கொண்டார்.
இவர் 1/2 நிமிடத்தில் 10 பிளேட் உணவை சாப்பாட்டு வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு பொருளுடன் கணிசமான தொகையும் வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து சாப்பிட்டது செரிக்க ஒரு லிட்டர் புளிப்பான கிரீமை சாப்பிட்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
முஸ்லிம் என்பதற்காக மாணவனை தாக்கிய இன வெறியர்கள்.
தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய்(15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில், 20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.
இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.
அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.
ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது.இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பொலிஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
பில்கேட்சின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.20000 கோடியை எட்டியது.
அமெரிக்காவின் முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் கோடி. உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டியலை பொருளாதார இதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
இந்த ஆண்டின் அமெரிக்க முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில் 400 பேர் இடம்பெற்றுள்ளனர்.பட்டியலில் ரூ.2.83 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ.20,000 கோடி உயர்ந்தது. ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பப்பெட் 2வது இடம்பெற்றுள்ளார்.நிதி முதலீட்டு குழுமத்தை நடத்தி வரும் அவரும், பில்கேட்சும் ஒன்றாக இணைந்து உலக அளவில் சமூக நல திட்டங்களுக்கு அதிக நன்கொடை அளித்து வருகின்றனர்.
அத்துடன் கடந்த ஆண்டை விட தனது வருமானத்தை பெருமளவு குறைத்துக் கொண்டதால் அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் 20 பேரைவிட முதல் முறையாக குறைவாக வரி செலுத்தினார். கடந்த ஓராண்டில் சொத்து மதிப்பு ரூ.28,000 கோடி அதிகரித்தது.
ரூ.1.48 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் ஆரக்கிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி லேரி எலிசன் 3ம் இடத்தில் இருக்கிறார்.பைனான்சியர் ஜார்ஜ் சாரோஸ் ரூ.99,000 கோடி சொத்து மதிப்புடன் 7ம் இடமும், பேஸ்புக் சமூக இணைப்பு இணைய தள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ரூ.84,000 கோடியுடன் 14வது இடமும் வகிக்கின்றனர்.
அமெரிக்க கோடீஸ்வரர்கள் 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் கோடி என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
லிபியாவின் முன்னாள் பிரதமருக்கு துனிஷியாவில் சிறைத்தண்டனை.
துனிஷியா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக லிபியா நாட்டின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு துனிஷியா நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. லிபியா நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் பஹாதி அல் மொகமதி.இவர் கடந்த ஆகஸ்ட் 28ம் திகதியன்று லிபியா பிரச்னையால் துனிஷியா நாட்டிற்கு அனுமதியின்றி நுழைந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ம் திகதியன்று தான் லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் உதவியாளர் ஹமீதி என்பவர் துனிஷியாவிற்கு நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில் தற்போது முன்னாள் பிரதமர் துனிஸ் நாட்டின் தெற்கு மாகாணமான டோஸியூர் நகரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மொகமதிக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தைவான் நாட்டுக்கு ஆயுத சப்ளை: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்.
தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.தைவான் நாடு தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது. இருப்பினும் தைவான் நாட்டின் ஆட்சி நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக உள்ளது.
இதற்கிடையே தைவானுக்கு 5.85 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு எப்.16 ரக விமானங்களையும், விமான உதிரி பாகங்களையும் சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.அதுமட்டுமல்லாது அமெரிக்காவின் லூக் விமானப்படை தளத்தில் தைவான் நாட்டை சேர்ந்த விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கண்டித்துள்ளது. தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுக்கு ஆயுத சப்ளை செய்வது சீன-அமெரிக்க பாதுகாப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமா: ஹினா ரப்பானி கண்டனம்.
காபூலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ புகலிடம் அளித்துவருவதாக அமெரிக்கா கூறியதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்காண்டின்டல் ஹொட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ புகலிடம் அளித்து பாதுகாத்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமை தளபதி அட்மிரல் மைக்முல்லன் கூறியிருந்தார்.
தற்போது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர் இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ எந்தவகையிலும் புகலிடம் கொடுக்கவில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தினையும் மைக்முல்லன் தெரிவிக்கவில்லை என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தியது பயங்கரவாதிகள் தான் அதற்கு வருந்துகிறோம். அதற்கு பிறகு அமெரிக்காவில் தாக்குதல் இல்லை.
ஆனால் பாகிஸ்தானில் இதுவரை 311 தற்கொலைப்படை தாக்குல்கள் நடந்துள்ளன. மேலும் பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்துவது சரியா, இதனை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
கடாபியின் நகரை கைப்பற்றிய புரட்சிப்படையினர்.
லிபியாவில் 42 ஆண்டு கால கடாபியின் ஆட்சிக்கு புரட்சி படை முடிவு கட்டியது. இருந்தும் கடாபியின் ஆதரவாளர்களின் ஆதிக்கத்தில் பானிவாலிட், சிர்த் உள்ளிட்ட இன்னும் சில நகரங்கள் இருந்து வருகின்றன.
பானிவாலிட், சிர்த் நகரங்களை ஓட்டியுள்ள பகுதிகள் புரட்சி படையின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரின் முக்கிய பகுதிகள் முழுமையாக அவர்களின் கைக்கு வரவில்லை. எனவே புரட்சிபடை அந்த நகரங்களை முற்றுகையிட்டு போரிட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடாபியின் ஆதரவாளர்கள் நிறைந்த முக்கிய பகுதியாக ஷபா பகுதி இருந்தது. இது சகாரா பாலைவனத்தில் உள்ளது. அங்கு யுரேனிய தாது நிறைந்துள்ளது. எனவே அவற்றை கைப்பற்ற கடாபி ராணுவத்துடன் புரட்சிபடை கடும் சண்டையில் ஈடுபட்டது. அதில் புரட்சிபடை வெற்றி பெற்று ஷபா நகரத்தை கைப்பற்றியது.
இந்த சண்டையில் புரட்சிபடையை சேர்ந்த 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஷபா நகரம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து புரட்சிப்படை வீரர்கள் வானில் துப்பாக்கியால் சுட்டு தங்கள் வெற்றி விழாவை கொண்டாடினர். அதில் அந்த நகர மக்களும் ஈடுபட்டனர்.
புரட்சிபடையின் பிடி இறுகுவதை தொடர்ந்து கடாபி வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லிபியாவில் இருந்து துனிஷியா, எகிப்து, சாட் மற்றும் சூடான் நாடுகளுக்கு செல்லும் ரோடுகள் அடைக்கப்பட்டன. அவை புரட்சி படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.
அல்-ஜீப்ரா ஓயாசிஸ் பகுதியில் உள்ள ஹூன், வாட்டன் மற்றும் சக்னா ஆகிய 3 முக்கிய நகரங்களும் புரட்சி படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. லிபியாவின் பெரும் பகுதி புரட்சிபடையின் கட்டுப்பாட்டில் வந்ததை தொடர்ந்து திரிபோலியில் மூடிய தூதரகத்தை அமெரிக்கா நேற்று மீண்டும் திறந்தது. அங்கு தனது நாட்டு கொடியை பறக்கவிட்டுள்ளது.
ஜீன் கிரட்ஷ் மீண்டும் அமெரிக்க தூதராக பதவி ஏற்க உள்ளார். லிபியாவில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அறிவிக்கப்பட உள்ளது. தற்போது நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் லிபியாவின் இடைக்கால பிரதமர் மக்மூத் ஜூபிரில் பங்கேற்றுள்ளார்.
கடாபியின் ஆட்சி வீழ்ந்ததும் அவரது மந்திரி சபையில் பிரதமராக இருந்த அல்-பக்தாதி-அல் மக்மூதி அல்ஜீரியா எல்லை வழியாக துனிசியாவுக்குள் புகுந்தார். அங்கு அவர் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததாக கருதி கைது செய்யப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொலிஸ்காரரை கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
அமெரிக்காவில் பொலிஸ்காரரை சுட்டுக் கொன்ற நபருக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் டிராய் டேவிஸ்(42). 1989ல் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சவன்னா நகரில் மார்க் மாக்பாய்ல்ஸ் என்ற பொலிஸ்காரரை சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பான வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இறுதியில் டேவிசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டு மேல் முறையீடு, கருணை மனு போன்றவை காரணமாக தண்டனை நிறைவேற்றப்படாமல் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் ஜார்ஜியா பொது மன்னிப்பு குழு வாரியமும், டேவிசின் கருணை மனுவை நிராகரித்தது. டேவிசுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என உலகில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இறுதியாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும், மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் டேவிசுக்கு மரணம் விளைவிக்கக் கூடிய விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஊசி போடப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் டேவிசின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,"தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை தன் மீது எந்த தவறும் இல்லை என டேவிஸ் கூறினான். சிறையில் கடைசியாக வழங்கப்பட்ட பர்கர் உணவைக் கூட சாப்பிட மறுத்து விட்டான்" என்றனர்.
சீனாவில் ஒரு குழந்தைக்கும் வருகிறது தடை உத்தரவு.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 1979ல் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதி பின்பற்றப்பட்டு வந்தது.
தற்போது அதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் விருப்பத்தின் பேரில் குழந்தை வேண்டாம் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை நெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சேவை அமைப்பு ஒன்று தகவல் தருகிறது.
மேலும் சுதந்திரமாக இருப்பதற்கு குழந்தை தேவை இல்லை என்ற கருத்து பெரும்பாலான இளம் பெண்களிடம் காணப்படுவதாக பெண்கள் அமைப்பு கூறுகிறது.
இந்த திட்டத்திற்காக 30 சீன பெண்கள் அமைப்பும், 57 பெண்கள் மேம்பாட்டு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன. சீனாவில் சராசரியாக 75 வயது வரை உயிர்வாழ்வதாகவும், ஆண்களை விட இரண்டு, மூன்று ஆண்டுகள் பெண்கள் அதிகமாக வாழ்வது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் நிலநடுக்கம்.
கிழக்குத் துருக்கியின் எர்ஜிங்கான் மாகாணத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.6 அளவுக்குப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என மாகாண ஆளுநர் சல்மான் யேனிகன், அனடோலியா என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை மாகாணங்களிலும் உணரப்பட்டதாக இஸ்தான்புல்லில் உள்ள கண்டில்லி ஆய்வு மையம் கூறியது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் துருக்கி அமைந்துள்ளது. குறைந்த தரத்துடன் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் மிதமான நிலநடுக்கம் கூட பலத்த சேதத்தை இப்பகுதியில் உண்டாக்கும்.
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 80 பேர் பலி.
பாகிஸ்தான் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இறந்த 80 பேருமே இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்களில் முன்னாள் அமைச்சரவைச் செயலர், கல்லூரி பேராசிரியர் ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாள்களுக்கு முன்பு சிந்து மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். முதல் நாளில் 55 பேர் இறந்தனர்.
இதையடுத்து சிந்து மாகாணம் முழுவதும் மருத்துவக் குழுக்களை மாகாண நிர்வாகம் அனுப்பி வைத்தது. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தத் தேவையான மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2ம் நாளான வியாழக்கிழமை மேலும் 25 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாயினர். இதையடுத்து டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது.முன்னாள் அமைச்சரவை செயலரும், பஞ்சாப் மாகாண பொதுத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த கியாசுதீன் அகமது டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை இறந்தார்.
இதேபோல சிந்து மாகாண அரசு இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஷக்ரா பாதூலும் காய்ச்சலுக்குப் பலியானார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அவர்களது உடல் உறுப்பு செயலிழந்து இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் லாகூரிலுள்ள சர்வீஸஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தத் தேவையான டெக்ஸ்டிரான் 40 என்ற மருந்து தேவையான அளவுக்கு இல்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை இயக்குநர் அஸ்லம் செüத்ரி கூறியதாவது: டெக்ஸ்டிரான் 40 ரக மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.ஏற்கெனவே இந்தியாவிலிருந்து டெக்ஸ்டிரான் 40 ரக மருந்துகள் ஊசிகளை பெற்றிருந்தோம். ஆனால் அவை உடனடியாகத் தீர்ந்துவிட்டன என்றார் அவர்.
ஜப்பான் அணு உலையில் புயல் தாக்கியது: 10 பேர் பலி.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலை மீது நேற்று கடுமையான புயல் தாக்கியது. இந்தப் புயலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இங்குள்ள புகுஷிமா அணு உலை உள்ளிட்டவை பெரும் சேதமடைந்தன.கடந்த சில நாட்களாக ஜப்பானில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய தீவான ஹொன்சூ மற்றும் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளில் நேற்று ரோகோ புயல் தாக்கியது.
அப்போது புகுஷிமா அணு உலையும் புயல் தாக்குதலுக்கு உள்ளானது. புயலில் சிக்கி 101 வயது பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்குக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேரைக் காணவில்லை. இதுவரை நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. புயல் தாக்குதல் காரணமாக புகுஷிமா அணு உலையில் கதிர் வீச்சு அபாயம் ஏதும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பான் கி மூனிடம் அப்பாஸ் இன்று மனு.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி இப்பகுதியின் தலைவர் முகமது அப்பாஸ் ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனிடம் இன்று மனு அளிக்க உள்ளார்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்க முடியாத நிலையில் உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன.இதற்கிடையே ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களுடன் ஒபாமா நேற்று பாலஸ்தீனம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் இதில் சுமுக முடிவு ஏதும் ஏற்படவில்லை.
ஐ.நா.வின் அறிக்கைகளாலோ, தீர்மானத்தாலோ பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. தொடர் பேச்சு வார்த்தை மூலம் தான் அங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அமைதி காண குறுக்கு வழி ஏதும் இல்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் இந்த பேச்சுக்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐ.நா சபையில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக 120 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒபாமா பேசி வருகிறார்.எனவே அனைத்து அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வெள்ளிகிழமையன்று போராட்டம் நடத்த வேண்டும் என பாலஸ்தீன தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து ஐ.நா.வின் உறுப்பு நாடாக அறிவிக்க வேண்டும் என பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ், ஐ.நா பொதுச் செயலரை இன்று சந்தித்து மனு கொடுக்க உள்ளார்.