Thursday, September 15, 2011

இன்றைய செய்திகள்.

அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்.

அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.
சிங்கள ராவய தேசிய இயக்கம், பௌத்த பாதுகாப்புப் பேரவை, தம்மவிஜய மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களான கடும்போக்கு இனவாதிகள் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்டு பள்ளிவாசலை இடித்தழித்துள்ளனர்.
பள்ளிவாசல் இடிக்கப்படும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிசார் இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறுபான்மை மக்களின் வணக்கத்தலங்கள் பேரினவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அதே நேரம், அரசாங்கமும் இவ்விடயத்தில் பராமுகமாக இருக்கின்றதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் : யாழ். மாவட்ட மக்களின் நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன் ரொபர்ட் பிளெக்.
வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார்.
வடக்கில் தமிழ் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளால் தான் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகளவில் தமிழ் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் நீண்டகாலத்துக்கு சிறிலங்கா படைகளை அங்கு நிலை கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் ஈபிடிபி பலமான துணைஆயுதக்குழுவை வைத்திருப்பதாகவும் பிளேக் குறிப்பிட்டதுடன், துணை ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி தனது பலத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களைத் தான் சந்திப்பதை தடுத்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

மிகக் குறைந்தளவு அவசரகாலச்சட்டவிதிகளே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் நடைமுறையில் இருப்பதால் அவசரகாலச்சட்ட நீக்கத்தின் பலனை மக்களால் அனுபவிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரப்பகிர்வு தொடர்பாகவும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அறிக்கை வர முன்னரே அதுபற்றி முன்கூட்டியே கருத்து வெளியிட முடியாது என்று கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் ,அதில் என்ன உள்ளது, என்ன பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி அது வெளியான பின்னர் முடிவுக்கு வருவோம் என்றும் பிளேக் தெரிவித்துள்ளார்.அதைச் செய்யும் சில பொறிமுறைகளை உறுதி செய்வதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும், ஆனாலும், அத்தகைய அழுத்தங்கள் தேவைப்படும் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நண்பர்களை மிரட்டுவது தமது வேலை அல்ல என்று கூறியுள்ள பிளேக், அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்காஇணங்கிச் செயற்பட வேண்டும் என்றும்,குறிப்பாக ஐ.நாவுடன் சிறிலங்கா சாதகமானமுறையில் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா அரசகுழு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் பற்றிய தகவலை வெளியிடும் என்று நம்புவதாகவும் பிளேக் கூறியுள்ளார்.புதிய மட்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்க காரணமாகியுள்ள கிறீஸ் பேய்களின் பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிளேக், ஊடகவிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட மக்களின் நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன்
யாழ். மாவட்ட மக்களின் துயரங்களை உரிய அதிகாரிகள் மூலம் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன் என்று தெற்காசிய விவகா ரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் நேற்று யாழ்ப்பாணத்தில் கூறினார்.யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இவர் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை யாழ். கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள், துயரங்கள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு என்பவற்றை விரிவாக எடுத்துக் கூறினர்.பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி விளக்கி கூறுகையில் நாம் எமது பிரதேசத்தில் கலாசாரம், மொழி என்பவற்றின் உரிமைகளை பாதுகாத்து வாழவும் எம்மை நாம் ஆள்வதற்கான கட்டமைப்புமே எமக்குத் தேவை.

எமது மண்ணில் இருந்து எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எமது போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எமது மண்ணில் நாம் இருந்தும் கூட எதுவும் செய்ய முடியாதுள்ளது. பேசுவதற்கு கூட முடியா துள்ளது. எம்மை நாம் ஆள்வதற்குரிய கட்டமைப்பு எமக்குத் தேவை. எமது பிரதேசத்தின் கலாசாரம், மொழி, உரிமைகளை பாதுகாத்து வாழவும் எமக்கான உரிமைகள் தேவை.
தற்போதும் கூட நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ வேண்டியுள்ளது. கிறீஸ் பூதம், மர்ம மனித தாக்குதல்கள், நடமாட்டங்கள் உளவியல் ரீதியான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தாக்குதலால் இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்குத் தடையாக உள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்க்கை நடைபெ றுகின்றது எனவும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப் பட்டுள்ளார்கள் எனவும் பிரசாரம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னமும் முகாம்களுக்குள்ளும் தகர கொட்டகைகளுக்குள்ளும் வாழ்வாதாரம், பாதுகாப்பு அற்ற முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான வீடமைப்பு வேலை வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படவில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் தொடர்கிறது. தமிழ் மக்களது நிலங்கள் சூறையாடப்படுகின்றன. குறிப்பாக தென்னிலங்கை நிறுவனங்களுக்கு தொழில் முயற்சிக்காக அவை வழங்கப் பட்டு பின்னர் குடியமர்தலுக்கான திட்டமாகவே காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதிகளவான குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டே உள்ளன. இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் பற்றாக்குறையாக உள்ளன.

கடற்றொழில் முறைகள் பல தடவைகள் மாற்றம் செய்யப்பட் டுள்ளமையால் கடற்றொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையிலுள்ளன. இத்தகைய துன்பங்களின் மத்தியில் எதுவும் செய்யமுடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றனர்.யாழ். குடாநாட்டில் மக்கள் ஏன் சொந்த இடங்களில் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை என யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கத்திடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் கேள்வி எழுப்பியுள்ளார். விசேடமாக மீள்குடியேற்றம் தொடர்பாக கவனம் செலுத்திய பிளேக் மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கான காரணங்களை விரிவாக கேட்டறிந்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவமயத்திட்டம். அதிகாரங்கள் யாவும் ஜனாதிபதி, அவரின் சகோதரர்கள், இராணுவத்தினர் கைகளில் உள்ளன.- சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றச்சாட்டு.
போர் நிறைவடைந்து இரண்டு வருடங்களாகியும் இலங்கையில் இன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்படாமை குறித்து சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கண்டனம் வெளியிட்டுள்ளது
போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லெணத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கொண்டு வரும் சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் இழந்து வருவதாக அந்தக்குழு நேற்று 13 ஆம் திகதி வெளியிட்ட தமது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைத்த, அரசியல் இணக்கம், அதிகாரப்பரவாலாக்கம், இராணுவ பரம்பலை கட்டுப்படுத்தல், அரச அதிகாரிகள் மீது இராணுவத்தினரின் ஆதிக்கத்தை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவே இலங்கையில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது அவசரகால தடை சட்டம், பயங்கரவாத தடை சட்டம், இராணுவமயம், இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்தல் , சிறுபான்மையினர் மத்தியில் அதிகாரப்பரவலாக்கம், முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன

அரசாங்கம் இவை தொடர்பில் சர்வதேசத்துக்கு ஒன்றை கூறுகிறது எனினும் களத்தில் மாறுபட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே உண்மை நிலைமையை உலகுக்கு எடுத்துக்காட்ட, காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொளளும் சர்வதேச குழுக்கள், சட்டவிரோத கொலைகள், பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறைகளை தொடர்பில் விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் அதிகாரி, போன்றவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி நாட்டில இனிமேல் அவசரகால சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று அறிவித்தார் இனி எதுவும் சாதாரண சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்

ஆனால் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட அவசரகால சட்டத்தின் முக்கிய சரத்துக்கள் பயங்கரவாத தடை சட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன இதன்மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் வைத்திருந்தல், மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் விடுவிக்காமலிருத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடரவுள்ளன இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம், பொதுமக்களின் உடமைகளை பயன்படுத்தவும்,சித்திரவதைகளை ஊக்குவிக்கவும், நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கவும் உதவுவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது இலங்கையின் வடக்குகிழக்கில் போருக்கு பின்னர் எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை

கிறீஸ் மனிதர்கள் என்ற சொல்லக்கூடியவர்களின் வன்முறைகளை தவிர வேறு எதுவும் இடம்பெறவிலலை என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. வடக்கு கிழக்கில்; அபிவிருத்தியுடன் கூடிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் கூறுகிறது எனினும் உண்மையில், வடக்குகிழக்கில் தமிழ் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ஜனாதிபதி மறுத்தாலும் கூட வடக்குகிழக்கு மத்திய மலைநாடு என்ற இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிறீஸ் பூதங்கள் என்ற சர்ச்சை தொடர்கிறது இதன்காரணமாக பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

குறித்த நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரே மேற்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரி;ல் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் இந்தநிலையில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார் எனினும் எவ்வாறு ஜனாதிபதி அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறமுடியும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கேள்வி எழுப்பியுள்ளது வடக்குகிழக்கில் சிங்கள ஆண் இராணுவ வீரர்கள், தமிழ்பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகி;ன்றனர் பெரும்பாலான இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகி;ன்றனர் எனினும் அரசாங்கம் வடக்குகிழக்கில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்புவதாக கூறிவருகிறது

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொய்யான தகவலை வழங்கி வருகிறது இன்னும் 8000 பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது எனினும் உண்மை நிலவரப்படி 60 ஆயிரம் பேர் இன்னும் தற்காலிக கொட்டகைகளிலும் இடைதங்கல் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர் மெனிக் பாமில் 7 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையி;ல் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை கைதுசெய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது

எனினும் கண்கண்ட சாட்சியங்களின்படி கைதுசெய்யப்பட்ட சரணடைந்த பல போராளிகள் இன்னும் எங்கிருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படும் முன்னாள் போராளிகள், மீண்டும் கைதுசெய்யப்படுகிறார்கள் அவர்களுக்கு உரிய வாழ்வாதார வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை அத்துடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளை எடுத்தால், அதிகார பரவலாக்கல் மூலம் இனப்பிரச்ச்pனைக்கு தீர்வுக்காணப்போவதாக அரசாங்கம் கூறிவருகிறது

எனினும் அரசாங்கத்தினால் எவ்வித முன்னேற்றமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த மே மாதத்தில் இந்தியாவுடன் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் 13 வது அரசியல் அமைப்பின்கீ;ழ் தீர்வு முன்வைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உரிய காத்திரமான விடயங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை இதன் காரணமாக அந்த பேச்சுவார்த்தை இடையில் கைவிடப்பட்டுள்ளது இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் புலிகள் அழிக்கப்பட்டனர். எனவே அங்கு அதிகார பரவலாக்கம் எதுவும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இனப்பிரச்சினை தீர்வுக்காக பரிந்துரைத்துள்ளது எனினும் அதில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அதிக கட்சி உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர் இதனை தவிர வடக்குகிழக்கு உட்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ மயத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலேயே இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி நிற்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது இலங்கையின் அதிகாரங்கள் ஜனாதிபதி, அவரின் சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினரிடமே தற்போது உள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குறிப்பிட்டுள்ளது.
தலைமைப்பதவியில் ரணில் நீடிக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது!- ரியன்ஸி விஜேதிலக்க.
தலைமைப் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிக்கும் வரையில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என முன்னாள் ஹட்டன் நசனல் வங்கியின் தலைவர் ரியன்ஸி விஜேதிலக்க கோரியுள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய ரணில் விக்ரமசிங்க தவறி வருவதாகவும் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் அதே தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ரணில் விக்ரமசிங்க தலைமையில் நீடிக்கும் வரையில் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
கட்சித் தலைவர் உரிய ஜனநாயக விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய தலைவருக்கு பதிலீடாக யாரை நியமிப்பது என்பது பற்றிய பெயர்களை வெளியிட முடியாத போதிலும், ரணில் விக்ரமசிங்கவை விடவும் வேறு எந்த நபரும் திறமையாக செயற்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.  
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மெக்ஸி புரொக்டர் நியமனம்.

இலங்கையின் புதிய பொலிஸ்  ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றிய மெக்ஸி புரொக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை பொலிஸ்  ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த  பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக செல்வதனால், அந்த வெற்றிடத்திற்காக மெக்ஸி புரொக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெக்ஸி புரொக்டர் 1976ம் ஆண்டு முதல் பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றார்.
பொலிஸ் ஒழுக்காற்றுக் குழுவின் பணிப்பாளராக மெக்ஸி புரொக்டர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பணத்துடன் சென்ற இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.

10  கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் சென்ற இலங்கையரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை அதிகாலையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்னும் எண்ணப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இதுவரை எண்ணப்பட்ட பணத்தின் பெறுமதி 5 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்தப் பெறுமதி 10 கோடி ரூபாவைத் தாண்டலாம் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் அரசுடமையாக்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்திய பதுங்கு குழிகளை சேதப்படுத்திய சீனா.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி‌.மீ தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும்.

இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கூறியதாவது: நேற்று முன்தினம் இதே போன்று லே பகுதியின் சூமோர் என்ற இடத்தில் சீன ஹெலிகாப்டர் அனுமதியின்றி தரையிறங்கியது.
சீனாவின் இந்த அத்துமீறிய செயல் இரண்டாவது முறையாகும். இதே போன்று கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் மெளன்ட் கயாக பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளது என்றார்.
லிபியாவில் இருந்து கொண்டே தனக்கு ஆதரவாக படை திரட்டும் கடாபி.
லிபிய அதிபர் கடாபி நாட்டை விட்டு ஓடவில்லை. அவர் லிபியாவில் தங்கி சண்டைக்கு படைதிரட்டி வருகிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
லிபியா கடாபியின் கையைவிட்டுப் போனவுடன் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடாபியும் நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் லிபியாவில் தான் இருப்பதாகவும், சண்டைக்கு படைத் திரட்டி வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் மூசா இபுராகிம் சாட்டிலைட் போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,"எங்கள் தலைவர் நலமாக உள்ளார். அவர் லிபியாவில் தான் இருக்கிறார். உலகம் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த சண்டை இருக்கும். நாங்கள் இன்னும் சக்திவாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறோம். லிபியாவில் பெரும் பகுதி இன்னும் எங்கள் ஆதிக்கத்தில் தான் உள்ளது. நாங்கள் படைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
ஆனால் அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். கடாபி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கடாபியின் மகன் அல் சாதி ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகரில் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னதாக கடாபியின் மனைவி, மகள், 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆப்கனில் தலிபான்களின் தாக்குதல் முறியடிப்பு: 14 பேர் மரணம்.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் கடந்த இரு நாள்களாக நடந்துவந்த தலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதல் புதன்கிழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். 6 அமெரிக்க நேசப் படை வீரர்கள் காயமுற்றனர். 19 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் நேட்டோ படைகளின் தலைமையிடத்தையும் குறி வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கத் தூதரகத்தின் அருகே கட்டப்பட்டு வந்த பல மாடிக் கட்டடம் ஒன்றில் மறைந்திருந்து தூதரகத்தை தலிபான்கள் தாக்கினர். அதே சமயம் நேட்டோ தலைமையிடத்தையும் தாக்கினர்.
ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் என பல வகையிலும் தொடர் தாக்குதலை தலிபான்கள் நடத்தினர். அமெரிக்கத் தூதரக முற்றுகையை முறியடிக்கப் பல மணி நேரமானது. இரண்டு தலிபான் பயங்கரவாதிகள் உயரமான கட்டடத்திலிருந்து தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர்.
இறுதியில் நேட்டோ படையின் தலைமையில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் துணையுடன் நடத்திய ஆகாயவழி பதில் தாக்குதலுக்குப் பிறகு தான் எஞ்சிய இரு தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் ஏழைகள் அதிகம்: கருத்துக்கணிப்பில் தகவல்.
அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2009ம் ஆண்டு 43.6 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு(2010ம் ஆண்டு) 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் வாங்கும் சக்தி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டொலர் ரூ. 5லட்சம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும், ஆண்டு வருமானம் 22,314 டொலர்( ரூ. 10 லட்சம்) மேல் என அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி கடந்த ஆண்டு(2009) 49. மில்லியன் மக்களும், 2010ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும்.
ஒசாமா பின்லேடன் தப்பிச் செல்ல ஐ.எஸ்.ஐ உதவி: ஆப்கன் உளவுத்துறை தலைவர் தகவல்.
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பின்னர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் உள்ள தேராபோரா குகையில் பதுங்கி இருந்தார்.
மேலும் அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களும் இருந்தன. இந்த நிலையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பின்லேடன் பதுங்கியிருந்த குகையை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்தது. எனவே இந்த குகையின் மீது குண்டு வீசி தாக்கியது. ஆனால் அதில் இருந்து பின்லேடன் தப்பினார்.

அவர் அங்கிருந்து தப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஐ.எஸ். ஐ. உளவு நிறுவனம் உதவியுள்ளது. இந்த தகவலை ஆப்கானிஸ்தான் முன்னாள் உளவுதுறை தலைவர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாரப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கேபிரா போரா குகையில் இருந்த பின்லேடனுக்கு உதவ பாகிஸ்தான் உளவுதுறையை சேர்ந்த சையத் அக்பர் சமீரு தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாகிஸ் தானின் சிட்ரடில் வழியாக அவர் பெஷாவருக்கு சென்றார் என்று கூறினார்.
அம்ருல்லா சலே ஆப்கானிஸ்தான் உளவுத்துறையில் கடந்த 2004 முதல் 2010ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் உளவுத்துறையினரால் பாகிஸ்தான் உளவுதுறையை சேர்ந்த சையத்அக்பர் சபீர் மற்றும் பிடா முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்த விவரங்கள் தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார்.
மேற்கண்ட தகவல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "தி நியூ பார்கெர்" என்ற வார பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய வரிகள்: ஒபாமா அறிவிப்பு.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் சீர்திருத்தம் கொண்டு வரும் புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டுள்ளார் அதிபர் ஒபாமா. இதற்கான வரைவு மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களவையின் முன்பு அவர் தாக்கல் செய்துள்ள இந்த மசோதா சட்டமானால் புதிய வரிகள் மூலம் ரூ. 20 லட்சம் கோடி அரசுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி நபர்களும், எண்ணெய், இயற்கை வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் புதிய வரிகளைச் செலுத்துவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.

இது வரை எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெற்று வந்த பல வரிச்சலுகைகள் புதிய மசோதா சட்டமாவதன் மூலம் பாதிக்கப்படும். அந்த நிறுவனங்களையும் பிற நிறுவனங்களைப் போலவே வரிகளுக்கு உள்படுத்த உத்தேசிக்கிறது இந்த மசோதா.
இந்த மசோதாவுக்கு குடியரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய வரிகள் எதையும் கொண்டு வருவதை அக்கட்சி ஆட்சேபித்து வருகிறது. இதனால் இம்மசோதா சட்டமாவதில் சிக்கல் எழும் என்று தெரிகிறது.
ஆனால் நாட்டின் முக்கிய தேவையான வேலைவாய்ப்பு விஷயத்தில் குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை 9 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தப் புதிய மசோதா மூலம் அதைப் போக்க முடியும். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்தே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதை கீழ்ச்சைபயான காங்கிரஸ் நிறைவேற்றுவதுதான் முறையாக இருக்கும். இதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று ஒபாமா கூறியுள்ளார்.
தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரிகளினால் அடுத்த பத்து வருடங்களில் ரூ.20 லட்சம் கோடியைத் திரட்ட முடியும் என்று அமெரிக்க அரசு எதிர்பார்க்கிறது.
அர்ஜென்டினாவில் பேருந்தின் மீது ரயில் மோதி விபத்து: 11 பேர் பலி.
அர்ஜென்டினாவில் ரயில்வே கிராஸிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து ஒன்று ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே கிராஸிங் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.

அப்போது குறுக்கே அதிகவேகத்தில் வந்த ரயில் பஸ் மீது பயங்கரமாக மோதியதில் 11 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தினால் பேருந்திற்கு பின்னால் தொடர்ந்து வந்த சில வாகனங்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 20 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அர்ஜென்டினாவின் அவசர மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம்: அல்கொய்தாவின் வீடியோ வெளியீடு.
அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அல்கொய்தா வெளியிட்டுள்ள வீடியோவில் அரபுலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கங்களின் அறிவிப்புகளை வெளியிடும் சைட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ஒரு மணிநேரம் ஓடக்கூடியதாக உள்ளது.

இதில் பேசிய அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி,"துனிஷியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியால் அந்நாட்டு அதிபர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இது தான் உண்மையான இஸ்லாம்" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் கடந்த மே மாதம் கொல்லப்படுவதற்கு முன் ஒசாமா பின்லேடன் பேசிய ஒரு காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அமெரிக்கர்கள் தனியார் நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருகின்றனர் என கூறியுள்ளார்.
ஏமனில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: துணை அதிபர் கலந்துகொள்ள சலே அங்கீகாரம்.
சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வரும் ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே ஏமன் விவகாரத்தில் தனக்குப் பதிலாக துணை அதிபர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கையெழுத்திடுவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தலையிட்ட வளைகுடா கூட்டுறவு கவுன்சில் சில பரிந்துரைகளை முன்வைத்தது.

அதில் கையெழுத்திடுவதாகக் கூறி சலே போக்குக் காட்டி வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் அவர் தனது அதிபர் மாளிகையில் உள்ள பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது எதிர்ப்பாளர்கள் வீசிய சிறிய ரக ராக்கெட் பள்ளிவாசலைத் தாக்கியது.
இதில் காயமடைந்த அவர் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நாடு திரும்பப் போவதாக வெளியான செய்திகளை அடுத்து கடந்த மூன்று மாதங்களாக சலேவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முன்வைத்த அதிகார மாற்றத்திற்கான பரிந்துரைகளை ஏற்பதற்கும், அதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்குமான அதிகாரத்தை துணை அதிபர் அப்துரபு மன்சூர் ஹாடிக்கு அதிபர் சலே அளித்து அங்கீகரித்துள்ளார்.
இதனால் இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிபருக்கு பதில் துணை அதிபர் கையெழுத்திடுவார். ஒப்பந்தத்தை நிறைவேற்ற குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து அதன் பின் அவர் அதில் கையெழுத்திடுவார் என அதிபர் சலே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் அமெரிக்காவில் 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான பேங்க் ஆப் அமெரிக்கா 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய புகழ்பெற்ற பேங்க் ஆப் அமெரிக்கா(பி.ஏ.சி) வங்கியில் தற்போது இரண்டு லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட சப் பிரைம் கடன் விவகாரத்தை அடுத்து ஏற்பட்ட அடமானக் கடன் சிக்கலில் இருந்து இந்த வங்கி இன்னும் மீளவில்லை.

இந்நிலையில் 2014ம் ஆண்டுக்குள் வங்கியின் செலவுகள் ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர் அளவிற்குக் குறைக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டத்தை வங்கி கொண்டு வந்துள்ளது.
அதன்படி வங்கியின் 63 தகவல் மையங்கள் மூடப்படும். பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 30 ஆயிரம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். தற்போது வங்கி ஆண்டுக்கு பல்வேறு இனங்களில் 27 பில்லியன் டொலர் செலவழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF