Friday, September 30, 2011

பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்கிய கண்டுபிடிப்பு....

Posted Image
பேரண்டத்தில் வேகமாகப் பயணம் செய்யக்கூடியது எது எனும் கேள்விக்கு இதுவரை “ஒளி” என்பதே விடையாக இருந்து வந்தது, ஆனால் அது இப்போது பொய்க்கும் என்ற தோற்றப்பாடு அண்மைய ஆராய்வுகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ.
நியூட்ரினோக்கள் (neutrino) அல்லது நுண்நொதுமிகள் எனப்படுபவை லெப்டான்கள் (Lepton) அல்லது மென்மிகள் எனப்படும் அணுக்கூறின் அடிப்படைத் துகள்கள் வகையில் அடங்குகின்றன. இவை எதிர்மின்னிகள் (இலத்திரன்கள்) போன்று இருந்தாலும் ஏற்றம் அற்ற நடுநிலை கொண்டமையால் நியூட்ரினோக்கள் என அழைக்கப்படுகின்றன. நியூட்ரினோக்கள் வேறு நியூட்ரான்கள் (neutron) அல்லது நொதுமிகள் வேறு; நொதுமிகள் வன்மி அல்லது 

ஆட்ரான் பிரிவுக்குள் அடங்குவன. 
நியூட்ரினோக்கள் பேரண்டத்தில் இருந்து சூரியன் மற்றும் வேறு விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. நித்தமும் புவியை நோக்கிப் பாய்ந்த வண்ணம் இருக்கும் பல கோடி நியூட்ரினோக்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
ஒளியின் வேகமும் ஐன்ஸ்டைனும்.
ஒளியின் வேகம் 299,792,458 மீட்டர்/ செக்கன்கள் (m / s) ஆகும். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஒளியின் வேகத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது, இதன்படி ஒளியே இப்பிரபஞ்சத்தில் மிகவும் வேகமான பொருளாகும். ஆனால் நியூட்ரினோக்கள் 299,798,454 மீட்டர்/ செக்கன்கள் (m / s) வேகத்தில் பயணித்தாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வு.
சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய துகள்களான நியூட்ரினோக் கற்றைகளை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளி பயணிக்க எடுக்கும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின. 60 நானோ செக்கன்களால் (0.00000006 செக்கன்கள்) ஒளியைவிட விரைவாக வந்தடைந்ததை அறிந்தார்கள். 

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அத்தனை முறையிலும் நுண்நொதுமியானது ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன. தாங்கள் கண்டறிந்தது உண்மைதானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

இந்தப் பரிசோதனைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்கள் ஐயம்தெரிவித்துள்ளார்கள். எல்லாத் தரப்பினரும் மேலதிக ஆய்வுகள் தேவை என்று கூறிஉள்ளார்கள். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிகமுக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்புஅமையும்.ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF