Friday, September 9, 2011

இன்றைய செய்திகள்.

இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டார் சிறிலங்கா அதிபர் - பிரகாஸ் கரட் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் தமிழர்களுக்கு சமஉரிமையும், அதிகபட்ச சுயநிர்ணய உரிமையும் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் கரட், மத்திய குழு உறுப்பினர்கள் பிருந்தா கரட், வரதராஜன், தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ராமகிருஸ்ணன், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலர் சுதா சுந்தர்ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா மற்றும் பெருமளவு பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தப் போராடத்தில் பங்கேற்க பெருமளவு இடதுசாரித் தொண்டர்கள் புதுடெல்லி வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரகாஸ் காரட், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதாக இந்திய மத்திய அரசுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச காப்பாற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசை இணங்க வைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருப்பதாகவும் அவர சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்மக்கள் தமக்கு சமஉரிமை வழங்குமாறும், தமிழை அரசகருமமொழியாக அங்கீரிக்குமாறும் கோரிய போது தான் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசு போராளிகளுக்கு எதிராக தொடுத்த போர் தமிழ்மக்களுக்கு எதிரான போராகவே நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதும், அதன் படைகள் மீதும் நடுநிலையான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிருந்தா கரட், சிறிலங்கா ஆயுதப்படைகளால் சிறிலங்காவில் தமிழ்ப் பெண்கள் மோசமான முறைகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல் - ஓடி ஒளிந்த சீனக்கப்பலை தேடி வந்தது?

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாக கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் வேவு பார்க்கும் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்தவொரு சீனக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது.இந்தநிலையிலேயே இந்திய கடற்படையின் போர்க்கப்பல் திடீரென கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும்!- விமல் வீரவன்ச.

அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ரொபர்ட் ஓ பிளேக் பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் இனவாதத்தை அரசியல் ரீதியாக வென்றெடுக்க உதவி வழங்கும் வகையில் பிளேக் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 கிறீஸ் பூதம் விரட்டப்படும்! ஜனாதிபதி உறுதிமொழி! தமிழ்க்கட்சிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டன.

வடக்கு,கிழக்கில் இடம்பெற்று வரும் கிறீஸ் மனிதர்கள் விடயத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதையடுத்து எதிர்வரும் 10 ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் தாம் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவதென்று தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதிக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் இடையில் இன்று இந்த விடயம் தொடர்பில் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது வடக்கு, கிழக்கில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுவோரின் செயற்பாடும் இதன் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பிரசன்னங்களும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
இந்தநிலையில் அண்மையில் நாவாந்துறையில் படையினரால் தாக்கப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மக்களை அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி உடனடியாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.  அத்துடன் பிரச்சினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் தமிழ்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து உறுதிமொழி கோரிக்கை என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போட தமிழ்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. 
அவசரகாலச்சட்டம் நீக்கத்தினால் எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை!- மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை மீது விமர்சனம்.

இலங்கையில் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அங்கு இன்னும் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசின் இந்த நடவடிக்கையால் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லையென்று கூறியிருக்கின்றது. 
ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை விவகாரம் பேசப்பட இருக்கின்ற நிலையில், அவசரகால சட்ட விதிகளை நீடிக்காது விட்ட அரசின் நடவடிக்கையை சில நாடுகள் சற்று எச்சரிக்கையுடன் வரவேற்றிருந்த பின்னணியிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்த விமர்சனம் வந்திருக்கின்றது.
அவசரகால நிலை நீக்கப்பட்டாலும், எவரையும் கைது செய்து தடுத்துவைக்கக் கூடிய விதத்தில் இன்னும் ‘கொடுங்கோலான, துஷ்பிரயோகங்கள் மிக்க’ அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்வதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் அந்த மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
சட்டவிரோத நடவடிக்கை என்று கருதப்படும் ஒருச் செயலைக்காட்டி, எவரையும் கைது செய்து, எவ்வித குற்றச்சாட்டுமின்றி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் நீதவான் முன்னிலையில் வெறுமனே ஆஜர்படுத்திக்கொண்டே 18 மாதங்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசிற்கு வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
அவசரகால நிலை முடிவுக்கு வரவுள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன் பிபிசிக்கு கருத்துத் தெரிவித்த பதவிக்காலம் முடிந்து செல்லும் சட்ட மா அதிபர்,
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, குறிப்பாக விடுதலைப்புலி சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலையை இந்த தீர்மானம் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த அவர், அவ்வாறான கைதிகள் உண்மையில் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.
இதற்கிடையே, அவசரகால சட்டவிதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைக்கக்கூடிய விதத்தில் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டு, அவை பின்னோக்கி ஆளக்கூடிய விதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் சுமார் 2000 பேர் வரையில் பல ஆண்டுகளாக எவ்விதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இதேவேளை புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தையும் கடற்படையையும் விமானப்படையையும் ஈடுபடுத்துவதற்கு சிறப்பு அதிகாரங்களைப் பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 12ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இடம்பெறும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 
ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வந்த நிலையில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை ஐ.நா. வின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் பட்டியலில் இலங்கை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரியவருகிறது.
அத்துடன் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கையினை எதிர்வரும் கூட்டத்தில் சமர்ப்பிப்பது குறித்த முடிவுகள் பற்றி ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் எதனையும் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
பொருளாதார நன்மைக்காக விளையாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது!- ஜனாதிபதி.

பொருளாதார நன்மைகளை அடையும் பொருட்டு விளையாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
37ம் தேசிய விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு விளையாட்டுத்துறைக்கு வீர வீராங்கணைகள் துரோகம் இழைக்கக் கூடாது.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகளுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியமானது.
இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 7,000 வீர வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு மறுத்த சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசு தயார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்ட சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என ஆணைக்குழுவின் பேச்சாளரான லக்ஷ்மன் விக்கிரமசிங்க, கூறினார்.
அதேநேரம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு உரிய நேரத்தில் உரிய விதத்தில் நாம் பதிலளிப்போம் என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச மன்னிப்புச் சபை அது விரும்பும் அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்தபின் நாம் பொருத்தமான வகையில் பதிலளிப்போம் என அவர் கூறினார்.
அதேசமயம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளராக லக்ஷ்மன் விக்கிரமசிங்க, ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபையை சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்டது. எனவே அதன் அறிக்கை பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என கூறினார்.
மேலும்,சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு பதில் கூறுவதால் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கத்திலிருந்து கவனம் கலைக்கப்படும். பல்வேறு அறிக்கைகளுக்கும் பதில் கூறப்போய் எமது முக்கிய கடமையை நாம் தவறவிடக்கூடாது.
மன்னிப்புச் சபையின் செயற்பாடானது அதன் வாண்மை, பொறுப்புக் கூறும் தன்மை ஆகியவற்றைச் செயற்பட வைக்கும் ஊக்கிகள் பற்றி சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.

கொழும்பு, ஆமர்வீதியில் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின்போது பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய தலைவரான 'களு துஷார' என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 
கொல்லப்பட்ட பிரஸ்தாப நபரிடமிருந்து ரி - 56ரக துப்பாக்கி, 90 மில்லிமீற்றர் பிஸ்ரல் என்பனவும் மீட்கப்பட்டன.

ஆமர்வீதி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து  பொஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றதாகவும் அவர்களில் ஒரு சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மற்றைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் மீதான தடையை நீடிக்க, அவசரகால விதிகள் அடங்கிய பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம்!- ஹக்கீம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பதற்கும், நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றில் விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் ஒத்திவைப்பு பிரேரணை வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில்,
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதிலுள்ள கெடுபிடிகளை நீடிப்பதற்கான மறைமுக செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் இங்கு கூறுகின்றன.
எனினும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாலும் அதேநேரம் யுத்தத்தின் பின்னரான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வினை எட்டுவதற்கும் இந்த விதிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.
நீதியமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பில் இதனை தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன். அவசரகாலச் சட்டமானது கடந்த 30 வருடங்களாக அமுலில் இருந்து வந்தது. இந்த சட்டம் அமுலில் இருந்தமையால் சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் பொலிஸார் பலர் இருந்தனர்.
தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கென அவசர காலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெருமளவான புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்த இவர்களுக்கு தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென புனர்வாழ்வு ஆணையாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
ஆனாலும் புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆதலால் புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் இருத்தல் அவசியமாகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்ட விதிகள் தொடர்ந்தும் பேணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேணுவதற்கும் மேற்படி அவசரகாலச் சட்ட விதிகள் அவசியமாக அமைகின்றமை இவ்வாறான காரணங்களையிட்டே நீக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்தியாளர் எனக் கூறி யாழ். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த இரகசியப் பொலிஸார்! உடனடியாக வெளியேற்ப்பட்டனர்.

குடாநாட்டில் மர்ம மனிதர்களால் ஏற்படும் வேண்டத்தகாத விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது உதயன் செய்தியாளர்கள் எனக்கூறிக் கொண்டு உள்நுழைந்த இரகசியப் பொலிஸார் இருவர் மாணவர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்தனர்.
பின்னர் விசாரித்ததில் அவர்கள் இருவரும் இரகசியப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தவுடன்  அவர்களிருவரும் மாணவர்களால் வெளியேற்றப்பட்டனர்.
போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான இருவர் வளாகத்தினுள் நுழைந்தனர். மாணவர்கள் அவர்களை யார் என விசாரித்தனர். தாம் உதயன் பத்திரிகைச் செய்தியாளர்கள் என்றுகூறிவிட்டு அவர்களில் ஒருவர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஒளிப்படம் எடுக்க முயன்றார்.
நிகழ்வில் செய்தி சேகரிக்க ஏற்கனவே வந்திருந்த செய்தியாளரிடம் இதுபற்றி விசாரித்தபோதும் அவர்கள் இருவரும் தாம் உதயன் செய்தியாளர்கள் என்றே மீண்டும் கூறி வாதிட்டனர்.
அதன் பின்னர் ஏற்கனவே வருகைதந்திருந்த செய்தியாளர் இவர்கள் இருவரும் எமது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இல்லை என்றும் நீங்கள் யாரென்று உண்மையைச் சொல்லுங்கள். எங்கே உங்களை உறுதிப்படுத்தக்கூடிய அடையாள அட்டைகளைக் காட்டுங்கள் என்று கூறினார். அத்துடன் இது பற்றி நிறுவனத்தின் ஆசிரியருக்கு கைத்தொலைபேசியில் அறிவிக்கவும் முற்பட்டார்.
உடனே அந்த இருவரும் தாம் செய்தியாளர்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டதுடன், தாம் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் என்றும் ஒப்புக்கொண்டனர்.
அதனை அடுத்து அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லுமாறு மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் யாரிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தீர்கள் என மாணவர்கள் அந்த இருவரையும் கேட்டனர்.
பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலகத்தில் அனுமதி பெற்றே தாம் உள்ளே வந்ததாக அவர்கள் கூறினர்.
உடனே பாதுகாப்பு உத்தியோகத்தர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ள மாணவர்கள் முயன்றபோது அந்த இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து சடுதியாக வெளியேறி விட்டனர்.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது : பசில் ராஜபக்ஸ.

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இல்லாத கிறிஸ் பூதங்களை வடக்கில் உருவாக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக இவ்வாறு கிறிஸ் பூத பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
சர்வதேச சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் நோக்கில் தமிழ் கூட்டமைப்பினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
வடக்கில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. இதுவரையில் ஒரு சிங்களக் குடும்பமேனும் வடக்கில் குடியேற்றப்படவில்லை.
போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை பிழையான வழியில் நடத்துகின்னர்.
இவ்வாறான பிரச்சாரங்களின் மூலம் வடக்கு தமிழ் மக்களிடையே பதற்ற நிலைமையை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வயிற்றினுள் போதைப்பொருள் வைத்திருந்த பை வெடித்ததனால் உயிரிழந்த பெண்மணி.
நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் அப்பொருள் வெடித்ததனால் உயிரிழந்துள்ளார்.
சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார்.
இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஒன்று வயிற்றினுள்ளே வெடித்துள்ளது. இதனாலேயே இவர் உயிரிழந்துள்ளமை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அச்சிறிய கெப்சுல் வடிவ பையொன்றின் நிறை 20 கிராம் எனவும் இவற்றின் மொத்த பெறுமதி 91,000 பவுண்ட்ஸ்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லிபியாவின் போர் ஆயுதக்கிடங்கில் ஏவுகணைகள் கொள்ளை.
லிபியாவின் போர் ஆயுதக்கிடங்கில் இருந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் தரைதளத்தில் இருந்து விண்ணில் சீறி சென்று இலக்குகளை தகர்க்க கூடியது ஆகும்.
அமெரிக்காவின் ஸ்டின்சர் ஏவுகணைகளுக்கு இணையான திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் கரின்ச் எஸ் ஏ-24 ஏவுகணைகள் என அழைக்கப்படுகின்றன.
இந்த ஏவுகணைகள் இக்லா எஸ் ஏவுகணைகள் என்றும் பரவலாக அறியப்படுகிறது. போர் விமானம், ஹெலிகாப்டர்களை தகர்ப்பதற்காக இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகிறது.
விமானம் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் அதனை சுட்டு வீழ்த்தக்கூடிய திறன் இந்த ஏவுகணைகளைக்கு உண்டு. இந்த ஏவுகணைகள் 19 ஆயிரம் அடி தூரம் வரை பறந்து செல்லும் திறன் படைத்தது.
போர் ஆயுதக்கிடங்கில் வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள் ஆகியவையும் மாயமாகி இருந்தன என்று மனித உரிமை கண்காணிப்பு அவசர நிலை அமைப்பு இயக்குநர் பீட்டர் தெரிவித்தார்.
ஈரானில் போதைமருந்து கடத்திய நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர்களுடைய பெயர்கள் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இது 179ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.
கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.
ரூ.30,000 கோடி செலவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: ஒபாமா அறிவிப்பு.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என்று ஒபாமா நம்புகிறார்.
இதற்காக அவர் 30 ஆயிரம் கோடி செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் திட்டம் ஒன்றை ஒபாமா இன்று வெளியிட இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசும் போது இந்த திட்டத்தை அவர் வெளியிடுகிறார். அது டி.வி.சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த திட்டம் குறித்து ஒபாமா உதவியாளர்கள் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த திட்டம் உடனடியாக வேலைவாய்ப்புகளை அளிக்கும் என்று மட்டுமே தெரிவித்தனர்.
இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் சாதகமாக பேசினாலும் குடியரசு கட்சி எம்.பி.க்கள் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
ஒபாமா பல நல்ல விஷயங்களை நாளை அறிவிப்பார். அவற்றை எல்லாம் தனித்தனியாக பார்த்தால் நன்றாக இருப்பது போல தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தமாக அவை நடைமுறைக்கு வரும் போது தோல்விதான் ஏற்படும் என்கின்றனர் குடியரசு கட்சியினர்.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரி வீட்டுக்குள் மனித வெடிகுண்டுத் தாக்குதல்.
பாகிஸ்தான் எல்லைப் படை மூத்த கமாண்டர் வீட்டின் மீது தற்கொலை படை தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 26 பேர் உடல் சிதறி பலியாயினர்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்தினரை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரான குவெட்டாவில் எல்லைப் படை டிஐஜி குராம் ஷெசாத் வீட்டின் மீது தலிபான் தற்கொலை படை தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
முதலில் காரில் வேகமாக வீட்டை நோக்கி வந்த ஒரு தற்கொலை படை தீவிரவாதி அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
அந்த காரில் வைக்கப்பட்டிருந்த 90 கிலோ வெடிமருந்து வெடித்ததில் சுற்றியிருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். அதன்பின் இன்னொரு தற்கொலை படை தீவிரவாதி டிஐஜி வீட்டுக்குள் புகுந்து தன்னை தானே வெடிக்க செய்தான். இதில் குராம் வீடு மற்றும் அருகில் இருந்த கட்டிடங்கள் முற்றிலும் நொறுங்கி தரைமட்டமாயின.
இந்த தாக்குதலில் அதிகாரி குராம் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார். ஆனால் அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 26 பேர் பரிதாபமாக உடல்சிதறி பலியாயினர்.
வீட்டுக்கு முன் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த 2 சிறுவர்களும் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தலிபான்கள் எங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் யூனுஸ் அல் மொரிடானியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளோம் என்றனர். இந்த தாக்குதலால் குவெட்டாவில் கடைகள் மூடப்பட்டன. பீதி நிலவுவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவை விட்டு ஓடவில்லை: கடாபி.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப்படையினர் தலைநகரம் திரிபோலியை கைப்பற்றினார்கள்.
இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
கடாபியின் சொந்த ஊர் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்கு தான் கடாபி பதுங்கி இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பக்கத்து நாடான நைஜருக்கு லிபியாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் நள்ளிரவில் அணிவகுத்து சென்றன.
இந்த வாகனம் ஒன்றில் கடாபியும் அவரது மகனும் நைஜருக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை நைஜர் நாட்டு வெளியுறவு மந்திரி முகமதுபசும் மறுத்தார்.
கடாபியோ அல்லது அவரது மகனோ எங்கள் நாட்டுக்குள் வரவில்லை. ஆனால் அதிகாரிகளும், அகதிகளும் வந்துள்ளனர் என்று கூறினார்.
நைஜர் வெளியுறவு மந்திரி தவறான தகவலை தெரிவிப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடாபியே நான் நைஜர் நாட்டுக்கு தப்பிச்செல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.
சிரியா நாட்டு டெலிவிஷன் நிலையத்துக்கு போனில் தொடர்பு கொண்ட கடாபி நான் இப்போதும் லிபியாவில் தான் இருக்கிறேன். எந்த நாட்டுக்கும் தப்பி ஓடும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, நான் தற்போது பின்வாங்கி இருப்பது போர் தந்திரமாகும். நாங்கள் புரட்சிப்படை மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டுப் படையையும் தோற்கடிப்போம். லிபியாவை யாரும் கைப்பற்ற முடியாது என்றார்.
பாகிஸ்தான் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்சின் இரண்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு சென்ற விமானத்தின் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானம் அவசரமாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் தரையிறக்கப்பட்டது.
அதில் பயணம் செய்த 378 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோதனையில் புரளி என தெரியவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
அதேபோல் இஸ்லாமாபாத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேநேரம் விமானம் கோலாலம்பூர் சென்றடைந்தது. சோதனையில் அதுவும் புரளி என கண்டறியப்பட்டது.
விளையாட்டு வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து விபத்து: 43 பேர் பலி.
விளையாட்டு வீரர்களை ஏற்றிச் சென்ற ரஷிய விமானம் விழுந்து நொறுங்கி 43 பேர் பலியானார்கள்.
ரஷியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று யாரோஸ் லாவி நகரில் இருந்து புறப்பட்டது. அதில் ஹொக்கி விளையாட்டு வீரர்கள் பயணம் செய்தனர்.
விமானிகள், பணியளர்கள் உள்பட 43 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
உடனே விமானி அவசரமாக விமானத்தை யாரோஸ்லாவி விமான நிலையத்தில் தரை இறக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் உடைந்த பாகங்கள் கால்வாயிலும் கரையிலும் சிதறி கிடந்தது. இதில் விமானத்தில் இருந்த ஹொக்கி விளையாட்டு வீரர்கள் உள்பட 43 பேரும் பலியானார்கள். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



ஐரோப்பிய கடன் பிரச்சனையில் ஜேர்மனி அரசை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு.
ஐரோப்பிய மண்டலத்தில் கிறீஸ் போன்ற சில நாடுகள் கடுமையான நிதி பற்றாக்குறையில் தள்ளாடுகின்றன. இந்த கடன் பிரச்சனைக்கு தீர்வு காண ஜேர்மனி அரசு உரிய நிதி உதவி அளிக்கிறது.
ஜேர்மனி அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஜேர்மனி அரசின் ஐரோப்பிய மண்டல கடன் உதவி சட்டப்பூர்வமானது. அதனை குறை சொல்ல முடியாது. எனவே அரசின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்கிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
ஐரோப்பிய மண்டலம் கடன் பிரச்சனையில் இருந்து மீளுவதற்கு ஜேர்மனி அரசு பெருமளவு நிதி உதவி செய்தால் உள்நாட்டு நிதி நிர்வாகத்தில் பிரச்சனை ஏற்படும் என அரசின் முடிவை எதிர்த்து கிறிஸ்டியன் சோசியல் யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் மற்றும் சில பேராசிரியர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கை நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்தது. கடந்த 2010ஆம் ஆண்டு கிறீசின் அவசர நிதி உதவியாக ஐரோப்பிய கடன் மீட்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. கிறீசிற்கு 17 ஆயிரம் கோடி யூரோ அளிக்க ஜேர்மனி உறுதி அளித்தது. இந்த அறிவிப்பால் ஐரோப்பிய பங்குசந்தை மீட்சி அடைந்தது.
ஆப்கானிஸ்தானில் 75வது பிரான்ஸ் வீரர் மரணம்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் படைவீரர் புதன்கிழமை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட 75வது வீரர் அவர் ஆவார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளில் பிரான்ஸ் இருந்து வருகிறது. அந்த துருப்புகளுக்கு உயிரழப்பு தொடந்து ஏற்பட்டு வருகிறது. இது பிரான்சுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் காபிசா மாகாணத்தில் பிரெஞ்சு துருப்புகள் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு இருந்தது.
ஆப்கானிஸ்தான் படையினரும் உடன் வந்தனர். இந்த மாகாணத்தில் தான் இரண்டு தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் ஹெர்வே கெஸ்குயர் மற்றும் ஸ்டெபானே தபோனயர் ஆகியோர் 18 மாதங்களாக தீவிரவாதிகளின் பிடியில் பிணை நபர்களாக உள்ளனர்.
அந்த இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிரெஞ்சு பாராசூட் படைப்பரிவில் உள்ள லெப்டினன்ட் மரணம் அடைந்தார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொலைக்காட்சி நிருபர் பாட்ரிசியா அலேமோனேரே காயம் அடைந்தார்.
உலக பொருளாதார நாடுகளின் பட்டியல்: கனடா பின்னடைவு.
உலக பொருளாதார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்தில் இருந்து கனடா பின்னடைவு பெற்றுள்ளது. கனடா தற்போது 12வது இடத்தை பிடித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஹாங்காங்கிற்கு பின்னர் கனடா இடம் பிடித்துள்ளது. உலக பொருளாதார பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது என்று உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
தற்போது பின்னடைவை பெற்றுள்ள கனடா மதிப்பு கூட்டுபொருட்கள், சேவைகள் மற்றும் சந்தை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் உலக நாடுகளை தரப்பட்டியலிடும் கான்பரன்ஸ் போர்டு ஆப் கனடா கூறுகையில்,"உலக போட்டியாளர்கள் எந்த அளவு முன்நோக்கி செல்கிறார்கள் என்பதற்கு கனடாவின் பின்னடைவு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றது.
கான்பரன்ஸ் கனடாவின் துணை தலைவர் மைக்கேல் ப்ளூம் கூறுகையில்,"கனடா தற்போது பெற்றுள்ள 12வது இடத்தை எண்ணி திருப்தி அடையக்கூடாது" என்று தெரிவித்தார்.
தனது உற்பத்தி திறனை மேம்படுத்துவது குறித்து அதிக அளவில் செயல்களை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார திறன் மற்றும் உலக போட்டிகளை எதிர்கொள்ள கனடா மக்களின் திறன்களை மிக சிறப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் மக்களின் திறன் அதிக அளவு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பை குற்றவாளிக்கும், பாகிஸ்தான் உளவுத் துறைக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ் அம்பலம்.
கடந்த 1993ல் நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுக்கும், ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருந்ததை அமெரிக்க அறிந்தே வைத்திருந்தனர் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவை மையமாக வைத்து பல பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் உளவுத் துறை ஐ.எஸ்.ஐ உருவாக்கியது.
அவற்றில் காத்மாண்டில் செயல்பட்டு வந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி(ஜே.கே.ஐ.எப்) என்ற பயங்கரவாத அமைப்பு மிக முக்கியமானது. கடந்த 1996ல் டெல்லியின் லஜ்பத் நகர், கன்னோட் பிளேஸ் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது.
அதோடு 1993ல் நிகழ்ந்த மும்பைத் தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனோடு, ஐ.எஸ்.ஐ நீண்ட காலமாகத் தொடர்பில் இருந்தது. இத்தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க அதிகாரிகள் தெரிந்து வைத்திருந்தனர்.
இந்தியாவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதர் பிராங்க் பிஸ்னர் 1997 ஜூலை 8ம் திகதி வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த மனிதர்கள், குண்டுகள் அனுப்புவதற்கு காத்மாண்டு மையமாக இருக்கிறது.
ஜே.கே.ஐ.எப் இதற்காக காஷ்மீரில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து பணத்தைக் கறக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் ஜாவேத் க்ராவா காத்மாண்டில் ஒரு தரைவிரிப்புக் கடை நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பு டைகர் மேமனாலும், ஐ.எஸ்.ஐ.யாலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.யால் நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் பிலால் பேக் என்பவரை ஜே.கே.ஐ.எப் அமைப்பினர் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.யின் கர்னல் பரூக் என்பவர் பிலால் மற்றும் மேமன் மூலமாக காத்மாண்டில் உள்ள லத்தீப் மற்றும் ஜாவேத்தை இயக்கி லோக்சபா தேர்தல்களுக்கு முன் குண்டுவெடிப்பை நிகழ்த்த வைத்துள்ளார்.
ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காக்க நல மையங்கள்.
ஜப்பானில் மார்ச் மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக 3 மாநிலங்களில் நல மையங்களைத் தொடங்க ஜப்பானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இவாடே, மியாகி, புகுஷிமா ஆகிய மாநிலங்களில் இந்த மையங்கள் நிறுவப்படும். சுமார் 1,500 குழந்தைகள் தாய், தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்துவிட்டனர்.
இவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதைக்கு இவர்கள் தங்களுடைய சோகங்களை மறந்துவிட்டது போலத் தெரிந்தாலும் எதிர்காலத்தில் இந்த சோகத்தால் அவர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்களுடைய ஆழ் மனதில் உள்ள சோகத்தை ஆற்ற இந்த மையங்கள் உதவும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
நடப்பு நிதியாண்டில் 3.5 கோடி அமெரிக்க டொலர்கள் இதற்காக ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 234 குழந்தைகள் அனாதைகளாகி விட்டனர். இவர்களில் 93 பேர் இவாடே, 120 பேர் மியாகி, 21 பேர் புகுஷிமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
1,295 குழந்தைகள் தாயையோ தந்தையையோ இழந்தவர்கள். ஜப்பானில் இந்தப் பகுதியில் அரசுக்கு உதவ குழந்தைகளுக்கென 300 உளவியல் நிபுணர்கள் தான் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை போதாது என்று அரசு கருதுகிறது.
இந்தப் பற்றாக்குறையைப் போக்க குழந்தைகளுக்கு வழிகாட்டும் அலுவலகங்களின் அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மாநகராட்சியிலும் குழந்தைகள் நலனுக்கென தனி உளவியல் மையம் ஏற்படுத்தப்படும். அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்களிடம் நட்பு பூண்டு குழந்தைகளின் சோகத்தைப் போக்க உதவிகள் செய்வர்.
குழந்தைகளின் உறவினர்களுக்கு அவர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தி செய்முறைத் தேர்வுகளை நடத்திக் காட்டுவர்.
சிறுவர்களை விடுவிக்க தலிபான்கள் விதித்த நிபந்தனைகள்.
நாங்கள் பிடித்து வைத்துள்ள 25 சிறுவர்களையும் விடுவிக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள அனைத்து தலிபான் பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஜாவுர் பழங்குடியினப் பகுதியிலிருந்து 25 சிறுவர்களை ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தின் பாகிஸ்தானி தலிபான்கள் சமீபத்தில் பிடித்துச் சென்றனர்.
சிறுவர்களை விடுவிப்பது குறித்து தலிபான்களுடன் பழங்குடியினத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு சிறையில் வைத்துள்ள அனைத்து தலிபான் பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும். பழங்குடியினங்கள் அனைத்தும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெற வேண்டும் என பாகிஸ்தானி தலிபான் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
லிபிய எல்லையில் பதுங்கியுள்ள கடாபி: எதிர்ப்பாளர்கள் சுற்றிவளைப்பு.
லிபியாவின் தெற்கு எல்லை ஓரமாக கடாபி பதுங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளதால் அவர் இருப்பதாகச் சொல்லப்படும் இடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடாபி பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் நைஜர் நாட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
லிபியா மற்றும் நைஜர் எல்லைப் பகுதியில் உள்ள க்வாத் என்ற கிராமத்தின் ஏதாவது ஒரு பகுதியில் கடாபி பதுங்கியிருக்கலாம் என்று தகவல் கிடைத்ததால் கடாபி எதிர்ப்பாளர்கள் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
அதேநேரம் கடாபி நைஜருக்குள் நுழைய முற்பட்டால் தடுத்து நிறுத்தும்படி லிபியா இடைக்கால அரசு நைஜர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடாபியின் பாதுகாப்புப் படைத் தளபதி மன்சூர் டாவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலர் நைஜர் நாட்டுக்குள் வந்து விட்டதாக அந்நாட்டு அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடாபியின் உதவியாளர்களில் ஒருவரையாவது கைது செய்யும்படி அமெரிக்கா நைஜர் அரசை வற்புறுத்தியுள்ளது.
இதற்கிடையில் பானி வாலித் நகர் பழங்குடியினத் தலைவர்களுடன் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நகரில் உள்ளவர்களுக்கு தங்களால் எவ்வித பாதிப்பும் சேதமும் ஏற்படாது என உறுதியளித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF