Monday, September 12, 2011

இன்றைய செய்திகள்.

மனித, அரசியல் உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாவிடில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை – கனடியப் பிரதமர் அதிரடி.

மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் நிலைப்பாட்டில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படாவிடில் அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் ஏனைய நாட்டின் தலைவர்களும் இவ்வாறான நிலைப்பாட்டினையே மேற்கொள்வார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர்களுடனான சந்திப்பு நிகழ்வொன்றின்போது கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) ஊடகவியளாளர் ராகவன் பரஞ்சோதியின் கேள்விக்கு பதிலளித்த கனடியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரனை அவசியம் எனக்குறிப்பிட்ட அவர் இலங்கையில் ஐனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கும் கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனிய பகுதியில் வரி செலுத்தாத ஹோட்டல்களை பூட்டி சீல் வைப்பு!- மேர்வின் சில்வா அதிரடி.

கிரிபத்கொட நகரில் உள்ள பல உல்லாச ஹோட்டல்களும், உணவகங்களும் பிரதேச சபைக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபா வரியைச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தமையையடுத்து இன்று அந்த ஹோட்டல்களைப்பூட்டி சீல் வைக்கப்பட்டது.
 பொதுசன தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் அதிரடியாகச் சென்ற களனிப் பிரதேசசபை உத்தியோகத்தர்களும், பொலிஸாருமே இந்தக் ஹோட்டல்களைப் பூட்டி "சீல்" வைத்துள்ளனர்.
கிரிபெத்கொட, ஹூணுப்பிட்டிய வீதியில் உள்ள மூன்று, நான்கு ஹோட்டல்கள் இவ்வாறு திடீரென சீல் வைத்து மூடப்பட்டதால் அங்கு உல்லாசமாகத் தங்கியிருந்த பல ஜோடிகள் சிக்கிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
உரிமையாளர் அங்கு இருக்கவில்லை. அவருடன் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் மேர்வின், "சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. நீங்கள் தெரிந்தவர் என்றாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. பணம் வேண்டுமானால் நான் தருகின்றேன்'' என்று கூறி அப்போதே தனது மனைவியை கைத்தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட ஹோட்டல்காரருக்கு 80 ஆயிரம் ரூபாவைக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதேவேளை, கோடிக் கணக்கான ரூபா வரிப்பணத்தை அறவிடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள் நால்வரின் பணிகளும் அமைச்சரின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றது – திஸ்ஸ அத்தநாயக்க.

அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி பல்வேறு வழிகளில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குழுக்களாக அலரி மாளிகைக்கு அழைத்து விருந்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு வாக்காளர்களுக்கு விருந்து வழங்குவதனை அரசாங்கம் தேர்தல்களின் போது வழமையாக்கிக் கொண்டுள்ளது.
அலரி மாளிகைக்கு வாக்காளர்களை அழைத்து விருந்து வழங்குவது தேர்தல் சட்டத்திற்கு முரணானது.
அரசாங்க சொத்துக்கள் மட்டுமன்றி உத்தியோகத்தர்களும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். 
அரசாங்கத்துக்கெதிரான மனித உரிமைக்குற்றச்சாட்டுகள் வலுவானவை: அமைச்சர் சமரசிங்க.

அரசாங்கத்துக்கெதிராக சர்வதேச சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வலுவானவை என்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலையில் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு நற்சான்று கொடுக்கப் போய் தனது அரசியல் எதிர்காலத்தை பாழ்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்னை நாள் அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2007ம் ஆண்டின் ஜனவரி மாதம் 30ம் திகதி அன்றைய அமெரிக்கத் தூதர் பிளேக், இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் பரிமாற்றத்தின்போதே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களான பசில் மற்றும் கோத்தாபய ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் உரிய பலனைத் தரவில்லை என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின்  வேண்டுகோள் பிரகாரம் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டுமென்பதே தனது நிலைப்பாடு என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாக பிரஸ்தாப தகவல் பரிமாற்றக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் எந்தவிதமான பலனையும் தரப்போவதில்லை என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 40 பேர் கடற்படையினரால் கைது.

சட்டவிரோதமாக படகு மூலம்  அவுஸ்திரேலியா செல்லவிருந்த 40 பேரை கிழக்கு மாகாணத்தில் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை கிழக்கு கரையோரப் பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்திருந்த குறித்த படகில் பயணம் செய்தவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் டி.டபிள்யு.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இணைப்பு
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்க கூறப்படும் இந்தப் படகில் பயணித்தவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியிடம் கூறினார்.
கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் பெருமளவு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இவர்கள் 24 மணி நேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி பிபிசியிடம் கூறினார்.
கடல் வழியாக நாட்டை விட்டு வெளிறே முயன்ற இந்த 44 பேருக்கு எதிராகவும் குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இலங்கையின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் கோத்தபாயவின் கீழ் வருகிறது.

இலங்கை பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. 
இதன்படி பல்கலைக்கழக பாதுகாப்பு ஏற்பாடுகள், இரண்டு நிறுவனங்களிடம் இருந்து ரக்னா அரஸ்கா லங்கா லிமிடெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜெயந்த நவரட்ண தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 15 பல்கலைக்கழகங்களின்; பாதுகாப்பு அனைத்தும் அடுத்த மாதம் முதல் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையிலான குறித்த ரக்னா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நிறுவனத்தில் முன்னாள் இராணுவ வீரர்களும் கடமையாற்றுகின்றனர்.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கும் கோத்தபாய ராஜபக்சவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ரக்னா அரஸ்கா நிறுவன பாதுகாப்பு ஊழியர்களே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 
பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலீடாக தாய்நாட்டை பாதுகாக்கும் சட்டம் அறிமுகம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக தாய்நாட்டை பாதுகாக்கும் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உள்ளடக்கிய வகையில் புதிய பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தாய்நாட்டை பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் வலுவிழக்கும்.
இலங்கையின் சகல இன மக்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடை மற்றும் பிரிவினைவாதத்தை தடக்கும் சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டியது அவசியமானது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் தாய்நாட்டை பாதுகாக்கும் புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - வவுனியாவுக்கான புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்.

கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு அநுரதபுரத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு அநுரதப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில், நாளைமுதல் கொழும்பில் இருந்து நாளாந்தம் வவுனியாவுக்கான சேவையை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 6.50க்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில், முற்பகல் 10.02க்கு அநுரதப்புரத்தில் தரித்து நிற்கும்.
முற்பகல் 10.50க்கு அது வவுனியாவை சென்றடையும்.
பின்னர் இந்த ரயில் பிற்பகல் 3.10க்கு வவுனியாவில் இருந்து புறப்பட்டு இரவு 8.15க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
பொல்கஹாவெல, குருநாகல், கல்கமுவ, அநுரதபுரம், மதவாச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் மாத்திரம் இது தரித்து நிற்கும்.
எகிப்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம்.
இஸ்ரேல் தூதரகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது. இந்த தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.
தங்கள் நாட்டு தூதரகம் தாக்கப்பட்டாலும் எகிப்துடன் அமைதி பேச்சு நடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது என அந்நாட்டு பிரதமர் நெடன்யகு தெரிவித்தார்.
எகிப்தில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு கடுமையாக போராடுகிறார்கள். மூன்று பேர் உயிரிழந்து பதட்டம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனம் காசா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலின் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக இந்த தாக்குதல் நடைபெறுகிறது.
இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எகிப்தில் உள்ள அனைத்து அயல்நாட்டு தூதரகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எகிப்து அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
எகிப்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை முதல் கிளர்ச்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக திரிபோலியில் புரட்சிப் படையின் தலைவர்.
லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சி அகற்றியப் பின்னர் முதன் முறையாக கிளர்ச்சியாளர்கள் படையின் முன்னாள் தலைவர் தலைநகர் திரிபோலி வந்தார்.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. லிபியாவில் கடந்த 6 மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நேட்டோப்படையினரும், கிளர்‌ச்சியாளர்களுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றனர். ‌கடாபியின் வசம் இருந்து பானிவாலித், பெங்காஸி உள்ளிட்ட நகரங்கள் வீழ்ந்தன.
தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களின் வசம் சிக்கியது. இதனால் அதிபர் கடாபி தனது 42 ஆண்டுகால ஆட்சியை விட்டு விலகினார்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் முன்னாள் படைத்தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று தனி விமானம் மூலம் முதன் முறையாக தலைநகர் திரிபோலி வந்தார்.
அவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அப்போது வழிநெடுகிலும், கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியை உயர்த்தி முஸ்தபாவிற்கு ஆதரவாக ‌கோஷம் எழுப்பினர்.
சீனாவில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாவோயங் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 11ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 9 பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் விடுமுறையைக் கொண்டாடிவிட்டு வீட்டுக் திரும்பிக் கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து நிகழ்ந்த போது அந்த படகில் மாணவர்கள் உள்ளிட்ட 50 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து 38 பேர் மீட்கப்பட்டனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 50 அமெரிக்க வீரர்கள் படுகாயம்.
செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் நினைவு கூறும் இந்த நாளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அமெரிக்கப் படையினர் 50 பேர் உள்பட நேட்டோ படையினர் 90 பேர் படுகாயமடைந்தனர். நேட்டோ படையின் ராணுவச் சாவடி மீது லாரி மூலம் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 90 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 50 பேர் அமெரிக்கர்கள்.
இதை நாங்கள் தான் நடத்தினோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். செப்டமபர் 11 நினைவு நாளையொட்டி அமெரிக்காவே சோகமாக உள்ள நேரத்தில் தலிபான்கள் நடத்தியுள்ள தாக்குதலில் பெருமளவிலான அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்கொய்தா இனி தலைதூக்க முடியாது: ஒபாமா.
அமெரிக்காவை தீண்டிய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இனி தலைதூக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
அதிபர் ஒபாமா வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வானொலியில் நாட்டு மக்களுக்காக நிகழ்த்தும் உரையில் இதைத் தெரிவித்தார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு: கடந்த 10 ஆண்டுகள் நமக்கு நெருக்குதலான காலக்கட்டம். இரட்டைக் கோபுரத்தை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கிய சம்பவம் சோகமானது.
இருப்பினும் அதைக் கண்டு நாம் அயர்ந்திடவில்லை. மாறாக நமக்குள் துணிவுதான் அதிகரித்தது. நம்மை தீண்டியவர்களை பழிவாங்கி அவர்களுக்கு தக்கப் பாடம் புகட்டுவோம் என்று சவாலிட்டு அதை சாதித்தும் காட்டினோம்.
கடந்த 10 ஆண்டுகளில் அல்கொய்தாவின் முக்கிய தலைவர்களில் பலரை தீர்த்துக் கட்டிவிட்டோம். ஏன்? இரட்டைக் கோரபுத் தாக்குதலின் மூலகர்த்தாவான அல்கொய்தா தலைவர் பின்லேடனையே கொன்றுவிட்டோம்.
இதை எல்லாம் தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடித்த நமது ராணுவ வீரர்களை மறந்திடக் கூடாது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், மரியாதை செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் என்றார் ஒபாமா.
குழந்தையின் பிரிவை தாங்க முடியாமல் பெற்றோர் இறப்பது அதிகரிப்பு.
தங்களுடைய பிறந்த குழந்தை ஒரு வயதிற்கு முன்னதாக இறக்கும் போது அதனை தாங்க முடியாத பெற்றோர் முன்கூட்டியே மரணம் அடைவது அதிகரித்துள்ளது.
இந்த அதிர்ச்சி உண்மையை யார்க் மற்றும் ஸ்டிர்லிங் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். குழந்தையின் பிரிவை தாங்க முடியாத பெற்றோர் மரணம் அடைவது 4 மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தை இறந்த 10 ஆண்டுகளுக்குள் அவர்களது மரணமும் நிகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிரிவை தாங்க முடியாமல் இதயம் நொறுங்கி வாழ்க்கை துணைகள் உயிழப்பதாக முந்தய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை பிரிட்டன் மெடிக்கல் இதழான சப்போர்டிவ் மற்றும் பாலேடிவ் கேர் இதழில் வெளியாகி உள்ளது.
இது குறித்து மேலும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்கொலை அல்லது மன அழுத்த பிரச்சனை காரணமாக இறந்தவர்கள் விவரங்களை ஆய்வு செய்த போது குழந்தை இறப்பை தாங்க முடியமால் அவர்கள் உயிரிழக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
போரில் உருக்குலைந்த நாடுகளுக்கு 3800 கோடி நிதியுதவி அளிக்க ஜி8 மாநாட்டில் முடிவு.
அரபு நாடுகளான துனிஷியா, எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகள் போரால் உருக்குலைந்துள்ளன.
இந்த நாடுகளில் மீண்டும் உரிய கட்டமைப்பு ஏற்பட வளர்ந்த 8 நாடுகளின் நிதித்துறை தலைவர்கள் 3800 கோடி டொலர் நிதி உதவி அளிக்க உறுதி அளித்துள்ளனர்.
இதனைத் தவிர சர்வதேச நிதியமும் அரபு நாடுகளின் மேம்பாட்டுக்கு 3500 கோடி டொலர் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. லிபியாவில் கடாபி ஆட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் புதிய இடைக்கால நிர்வாகம் ஏற்பட்டு உள்ளது.
அந்த நாட்டிற்கும் உரிய நிதி உதவி அளிக்க வளர்ந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. லிபியாவின் புதிய நிர்வாகத்தை சர்வதேச நிதியம் அங்கீகரித்துள்ளது. ஜி8 தலைவர்கள் கூட்டம் பிரான்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் பிரான்சின் மத்திய  துறைமுகமான மார்சிலியில் நடைபெற்றது. கடந்த மே மாதம் பிரான்சின் கடல் நகரமான டெயுவிலியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரபு நாடுகள் மேம்பாட்டுக்கு 2000 கோடி டொலர் நிதி உதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த அளவை விட இருமடங்கு அதிகமாக தற்போதைய கூட்டத்தில் 3800 கோடி அளிக்க முடிவு ஆகி உள்ளது என நிதி அமைச்சர் பிரான்காய்ஸ் பரோய்ன் கூறினார்.
லிபியாவின் நேட்டோ படையில் ஜேர்மன் வீரர்கள் பங்கேற்பு.
லிபியாவில் சர்வாதிகாரி கர்னல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியை அகற்ற போராட்டம் நடத்தி வரும் புரட்சிப்படையினரை கடாபி ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றதுடன் அப்பாவி மக்களையும் கொன்றது.
இந்த மனித உரிமை மீறலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தது. இதனைத் தொடர்ந்து பொருளாதார தடை விதித்ததுடன் பொது மக்களை பாதுகாக்க நேட்டோ கூட்டுப் படையையும் அனுப்பியது. இந்த கூட்டுப்படையில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் படைகள் இடம் பெற்று உள்ளன.
லிபியா மீது நேட்டோ படைகள் செல்வதற்கு ஜேர்மனி முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தனது படை பிரிவு எதனையும் அனுப்பவில்லை. தற்போது லிபியாவில் புரட்சிப்படையினரின் இடைக்கால நிர்வாகம் கையில் ஆட்சி வந்து விட்டது.
இந்த நிலையில் லிபியாவில் 103 ஜேர்மனி வீரர்கள் பங்கேற்று இருந்தனர் என்ற தகவலை ஜேர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டு உள்ளது. இந்த எண்ணிக்கை திட்டமிட்டதை விட 10 மடங்கு அதிகமாகும்.
கிறீன் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஹான்டன் ஸ்ட்ரோபெலே கேட்ட கேள்விக்கு அமைச்சகம் இந்த பதிலை அளித்தது. லிபியாவில் உள்ள ஜேர்மனி வீரர்கள் கடாபிக்கு எதிராக குண்டு வீசும் இலக்குகளை தேர்வு செய்யும் முக்கியப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
விண்வெளித்துறையில் கனடா பின்னடைவு.
கனடா விண்வெளித்துறை பின்னடைவு பெற்றுள்ளது. கனடாவின் விண்வெளித் திட்டங்களை இந்திய விண்வெளித்துறை மிஞ்சி விட்டது என்று இந்த ஆண்டிற்கான விண்வெளித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஆலோசனை நிறுவனமான புர்ட்ரான் சர்வதேச விண்வெளித்துறையில் உள்ள நாடுகள் மேற்கொண்டு வரும் விண்வெளித் திட்டங்கள் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரித்துள்ளது.
நீண்ட கால விண்வெளித் திட்டங்களை மேற்கொள்வதில் கனடா கால தாமதம் செய்து வருகிறது. இந்த தாமதம் காரணமாக கனடாவை இந்தியா முந்தி சென்று விட்டது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புர்ட்ரான் நிறுவனம் விண்வெளித்துறை பணிகளில் ஈடுபட்டு உள்ள 10 நாடுகளை தரவரிசை பட்டியலிட்டதில் முந்தய ஆண்டில் 6 வது இடத்தை பெற்று இருந்த கனடா அந்த இடத்தை இந்தியாவிடம் தர வேண்டியதாகி விட்டது.
தற்போது பிரேசில், சீனா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் கனடாவுக்கு விண்வெளித்துறையில் கடும் சவால் தரும் வகையில் முன்னேறி வருகின்றன. நீண்ட கால திட்டத்தில் தேக்கம், எதிர்கால அறிவியல் திட்டங்களில் தேக்கம், அடிப்படை ஆராய்ச்சியில் பின்னடைவு போன்றவை நமது முயற்சிகளை முடக்குவதாக உள்ளது என கனடா விண்வெளித்துறை வணிக அமைப்பின் நிதியாளர் சக் பிளாக் எச்சரித்துள்ளார்.
புகுஷிமா அணு கதிர்வீச்சு குறித்து கேலியாக பேசிய அமைச்சர் பதவி ராஜினாமா.
ஜப்பானின் புதிய அரசில் உள்ள அமைச்சர் ஒருவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புகுஷிமா அணு உலை கதிர்வீச்சு சம்பவம் குறித்து கேலியாக பதில் கூறியதால் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
ஜப்பானின் புதிய பிரதமராக யாஷிஹிகோநெளடா கடந்த 3ம் திகதி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த யாஷிஹியோ ஹச்‌சிரோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து ஜிஜிங் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் யாஷிஹியோ ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி நடந்த சுனாமி தாக்குதலில் புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியதில் ஏற்பட்ட கதிர்வீச்சு சம்பவம் பற்றியும், அங்கு சென்று பார்வையிடுவீர்களா என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, புகுஷிமாவிற்கு சென்று விட்டு உங்களுக்கு கதிர்வீச்சை உண்டாக்குகிறேன் என கேலியாக பதில் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்கு பலதரப்பில் எதிர்ப்பும், கண்டனமும் ஏற்படவே பொதுமன்னிப்பும் கேட்டும் பயனில்லை. ஆதலால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு சுற்றுச் சுவரைத் தகர்த்தனர்.
இந்தக் கலவரத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் 18ம் திகதி இஸ்ரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எகிப்து போலீசார் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் கோபமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.
தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு ஓடும்படி வற்புறுத்தினர். தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த கிளர்ச்சியாளர்கள் தூதரகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை எரித்தும், கிழித்து எறிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எகிப்து ராணுவத்தினரும், போலீசாரும் கவச வாகனங்களுடன் வந்து கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம் தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.
இரட்டை கோபுர தாக்குதலின் 10வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு செப்டம்பர் 11 நினைவுநாள் இன்று அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு மத்தியில் கடைபிடிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் உயிர்களை காவு வாங்கிய அல்கொய்தா தாக்குதலின் 10வது ஆண்டு நினைவு நாள் என்றாலும் ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் அனுஷ்டிக்கும் நினைவுநாள் என்பதால் இந்த ஆண்டு அமெரிக்கர்கள் மத்தியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
செப்டம்பர் 11 நினைவுநாளில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மக்கள் ஆங்காங்கே தாக்குதலில் மறைந்த நபர்களின் நினைவாக மலரஞ்சலி மற்றும் இறை துதி பாடினர்.
சில இடங்களில் நட்சத்திர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பென்டகனில் ஷாங்கஸ்வில்லியில் நிறுவப்பட்டுள்ள நினைவு பார்க்கில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், டபுள்யூ ஜார்ஜ் புஷ், லாரா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் புஷ் பேசும் போது விமானத்தில் கடத்தி செல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் இன்றும் மறையவில்லை. இவர்கள் என்றும் நம்மிடையே வாழுபவர்களாக நினைவில் உள்ளனர். இதில் சிக்கி இறந்தவர்கள் அந்நாள் முதலே பயங்கரவாததத்திற்கு எதிரான போரை துவக்கி விட்டனர் என்று புகழாரம் சூட்டினார்.
நினைவு நாளில் அமெரிக்க அதிபர் புஷ் வெளியிட்டுள்ள செய்தி:அமெரிக்கா மீது நடந்த தாக்குதல் அல்ல. இது உலகத்தின் மீது நடந்த தாக்குதல். மனித நேயத்திற்கு எதிராக நடந்த தாக்குதல். இதனை உலக மக்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
காரணம் 90 நாட்டை சேர்ந்த பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என இழந்தோம். 9/ 11 க்கு பின்னர் அமெரிக்கா பயங்கரவாதிகள் அழிப்பதில் முழு பங்காற்றி வருகிறது. குறிப்பாக ஆப்கனில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இங்கு மக்கள் சுதந்திரமாக வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் உலகளாவிய ஒத்துழைப்பு கருத்தில் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒழிப்பதில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
பல நாடுகளில் அல்கொய்தாவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களே. அமெரிக்கா எப்போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிட்டதில்லை.இவர்களுக்கு எதிராக போரிட போவதும் இல்லை. நாங்கள் அல்கொய்தாவுக்கு எதிராகத்தான் போராடி வருகிறோம்.
நினைவுநாளில் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்று கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் வீட்டில் இருந்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் நகர் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF