Thursday, September 8, 2011

இன்றைய செய்திகள்.

மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை.

சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் கூறியுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறை தவறிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அரசியல் மற்றும் வர்த்தகப் போட்டியே இதன்பின்னணியில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபரின் செயலர் பதவியையும் பிடித்தார் கோத்தாபய.

சிறிலங்கா அதிபரின் பதில் செயலராக கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாடு சென்றுள்ளதாலேயே கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வழக்கத்தில் லலித் வீரதுங்க வெளிநாடு செல்கின்ற போது, சிறிலங்கா அதிபரின் பணியக தலைமை அதிகாரி காமினி சேனாரத் பதில் செயலராக கடமையாற்றுவார். ஆனால் இம்முறை கோத்தாபய ராஜபக்ச பதில் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். லலித் வீரதுங்க நாடு திரும்பும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.

சிறிலங்காவின் அடுத்த பிரதமராக கோத்தாபய ராஜபக்சவை முன்னிறுத்த சிறிலங்கா அதிபர் முனைவதையே இது காட்டுவதாக அமைச்சர்கள் பலரும் விசனமடைந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு?

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக பிரபல சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு காணப்படும் விசேட அதிகாரங்களின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடிதம் ஊடாக இந்த அறிவிப்பினை நாடாளுமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன் மூலம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் கலகங்களின் போது இராணுவத்தினரை ஈடுபடுத்தக் கூடிய இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீக்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று நாடாளுமன்றில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்தநாயக்க'விற்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக அநாமதேய நபர் தொலைபேசியில் எச்சரிக்கை.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள அநாமதேய நபர் ஒருவர், ஒரு சிலர்  அவரை கொலை செய்ய முயல்வதாகவும் அதன் காரணமாக எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.
இப்படியான எச்சரிக்கைகள் ஒரே இலக்க கையடக்கத் தொலைபேசியிலிருந்து செப்ரம்பர் 3 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தினங்களில் கிடைக்கப்பெற்றுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
உரிய முறையில் ஆங்கில மொழியை பேசமுடியாத ஒர் நபரினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திஸ்ஸ அத்தநாயக்காவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தரான குமார விஜேசிங்க, இது தொடர்பான முறைப்பாட்டைச் செய்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தரான சார்ஜன்ட் அஜித் மெண்டிஸ் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு மஜிஸ்திரேட் பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலியிடம் பொலிஸார் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன், இது தொடர்பாக ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவின் வாக்குமூலத்தை கறுவாத்தோட்டம் பொலிஸார் பதிவு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகக் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தன: விக்கிலீக்ஸ்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று "விக்கிலீக்ஸ்' இணையத்தளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி "விக்கிலீக்ஸ்' வெளியிட்டிருக்கும் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட் டுமே இருந்தது என்று 2006 இல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
2007 நவம்பர் 20 ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுரியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரசையும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். மேலும் அவர் இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகப் பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்ப்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்துப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள மற்றுமொரு செய்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என தி.மு.க. விரும்பியதாக கூறியுள்ளது. இது குறித்து மேலும் கூறப்படுவதாவது,
கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவப்பிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க. ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009 ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதில் தி.மு.க. விருப்பம் கொண்டிருந்தது. அதையே தமிழக மக்களும் விரும்பினார்கள்.
அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம். ஆனால் தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க. ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் இரண்டு முயற்சிகள் – விக்கிலீக்ஸ்.

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை மே 19ம் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும், பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நோர்வே தூதுவர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள போராளிகளை சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் சிறிலங்கா அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
மே 17ம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளை சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போர் முடிந்து விட்டது என்று கூறி கோத்தபாய ராஜபக்ச அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்து விட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு படையினருக்கு தான் அறுவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை அன்றையநாள் போர் வலயத்தில் இருந்து சடலங்களையும். காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

தனது வேண்டுகோளை நிராகரித்த பசில் ராஜபக்ச, சிறிலங்கா அரசாங்கமே அதனைப் பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
போர் முடிவடைந்து வன்னி அழிவுகளை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பான் கீ மூன்!- விக்கிலீக்ஸ்.
வன்னியில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நிறைவடைந்த  பின்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் ஊடாக ஹெலிகப்டரில் செல்லும் போது தான் முழு அழிவினையும் பார்த்ததாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், தான் பார்த்தவற்றுள் மெனிக்பாம் அகதிகள் முகாம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததார்.
2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இரவு பான் கீ மூன் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவென கொழும்பு விமான நிலையத்துக்கு சென்ற போது இலங்கைக்கான நிவாரண தூதுக்குழுவின் இணைத் தலைவரான இராஜதந்திரியிடம் இவ்வாறு கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் நோர்வே தூதுவர் மெனிக்பாம் விஜயம் குறித்து கேட்டபோது அதுவொரு துன்பகரமான விஜயம் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான 200,000 பொதுமக்கள் தங்கியுள்ள மெனிக்பாம் முகாமின் நிலை சூடானின் டாபர் மற்றும் கோமாவில் உள்ள முகாம்களிலும் பார்க்க அதிமோசமானது என இராஜாங்க அதிகாரிகளிடம் பான் கீ மூன் விமர்சித்துள்ளார்.
இதேவேளை மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட உயர்மட்ட அரச தரப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இந்த தகவல் அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி ஜேம்ஸ் ஆர் மூவர் அவர்களினால்  வெளியிடப்பட்டுள்ளது.
அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட மக்கள் போதுமான தங்குமிடம் இல்லாமலும், நிழலுக்கு கூட மரங்கள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : நிமால் சிறிபால டி சில்வா.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்கு தேவையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நல்வாழ்விற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் மிகவும் அவசியமானது, தேவை ஏற்பட்டால் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயங்காது.
புலிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுப்பதற்குமே கிறிஸ் பூதப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கில் பதற்றம் நிலவுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பக்ரைனுக்கு விஷக் குண்டுகளை வழங்கிய அமெரிக்கா.
பக்ரைன் அரசாங்கமானது அங்கு இடம்பெற்ற கலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமெரிக்காவிடம் இருந்து விஷத்தன்மை கொண்ட கண்ணீர்ப் புகைக்குண்டுகளை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரேபிய மொழி ஊடகமான அல் அலாம் பக்ரைன் படைகள் உபயோகப்படுத்திய கண்ணீர்ப் புகைக்குண்டுகள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது என்பதனை உறுதிப்படுத்தும் விதத்திலான காணொளியொன்று தன்னிடம் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பக்ரைனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னராட்சியில் மாற்றம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் இதன் போது கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் போயினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 14 வயதான ஐல் ஜவாட் என்ற சிறுவன் அந்நாட்டு படைகளின் மேற்படி கண்ணீர்ப்புகைக் குண்டுப்பிரயோகத்தினால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒசாமா கொல்லப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சி அடையவில்லை: முன்னாள் அதிபர் புஷ்.
9/11 தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடையவில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆவணப்படங்கள் தயாரிக்கும் பீட்டர் ஸ்னால் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஜார்ஜ் புஷ் டாலாஸில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த போது அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களுடன் பேச விரும்புகிறார் என்று ரகசிய சேவை பொலிசார் தெரிவித்தனர்.
அப்போது தான் அவருக்கு ஒசாமா கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த செய்தியைக் கேட்டு எனக்கொன்றும் மகிழ்ச்சியாக இல்லை என்று புஷ் தெரிவித்தார்.
அப்பாடா ஒரு வழியாக முடிந்தது என்ற உணர்வு தான் அவரிடம் இருந்தது என்று கூறியுள்ளார். 9/11 தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்னால் ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார்.
அதற்காக அவர் புஷ்சிடம் பேட்டி எடுத்துள்ளார். அவருக்கு புஷ் அளித்த பேட்டியில், இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த போது நான் புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்தேன். நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஒரு கோபுரம் தாக்கப்பட்டுள்ளது என்றதும் ஏதோ சிறிய ரக விமானம் என்று முதலில் நினைத்தேன்.
வானிலை மோசமாக இருந்திருக்கும் அல்லது விமானிக்கு ஏதாவது நடந்திருக்கும் என்று நினைத்தேன். வெள்ளை மாளிகை தலைமை ஊழியர் ஆன்டி கார்ட்ஸ் இன்னொரு கோபுரமும் தாக்கப்பட்டது என்று காதில் மெதுவாகக் கூறினார். அப்போது தான் அது தீவிரவாதத் தாக்குதல் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார் புஷ்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று புஷ்ஷிடம் கேட்டதற்கு இந்த கேள்வியை வெறுக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
நைஜீரியாவில் இனக்கலவரம்: 18 பேர் பலி.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து பல முறை கலவரம் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவின் ஜோஸ் பகுதியில் ஒரு கும்பல் நேற்றிரவு 9 மணிக்கு புகுந்தது.
கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதியில் கும்பல் தாக்குதல் நடத்தியது. பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. குரு, மராராபன், ஜகாலியூ ஆகிய கிராமங்களிலும் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத் தலைவர் திமோதி புபா கூறுகையில்,"மர்ம கும்பல் தாக்கியதில் பலர் மரண ஓலம் எழுப்பினர். அந்த சத்தம் கேட்டும் கூட பாதுகாப்புப் படை வீரர்கள் வரவில்லை. வீடுகள் தீயில் எரிவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்" என்றார்.
இந்நிலையில் தாக்குதலை கண்டித்து கிராம மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். முக்கிய சாலைகளில் மறியல் நடத்தி வருகின்றனர். இந்த இனக் கலவரம் நைஜீரியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
ஈராக்கில் 8 ராணுவ வீரர்கள் மர்ம மனிதர்களால் கொன்று எரிப்பு.
ஈராக்கில் 8 ராணுவ வீரர்கள் கொன்று எரிக்கப்பட்டனர். ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈராக் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்பார் மாகாணத்தில் உள்ள ஹதிதா- பைஜி ஆகிய நகரங்களுக்கு இடையே ராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாகனத்தில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் சோதனை சாவடியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் அவர்களது உடல்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத் துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
சிரிய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரபு கூட்டமைப்பு நாடுகள் விருப்பம்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சீரமைப்பு செய்ய அரபு கூட்டமைப்பு நாடுகள் விரும்புகின்றன.
இதற்காக அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நபில் அல் அரபி 13 அம்ச திட்டத்தை சிரியா ஜனாதிபதி அசாத்திடம் தருவதற்கு திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் செல்ல இருந்தார். ஆனால் அவரது வருகையை அசாத் தள்ளிபோட வைத்தார்.
இங்கு நிலைமை எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது நீங்கள் வரவேண்டாம் என அவர் அரபு கூட்டமைப்புக்கு தெரிவித்து உள்ளார். இதனால் அரபு கூட்டமைப்பு குழு தங்களது பயணத்தை தள்ளி வைத்துள்ளது.
அல் அரபி அலுவலகம் கெய்ரோவில் உள்ளது. அந்த அலுவலகம் கூறுகையில்,"அரபுக்குழு பயணம் திகதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது" என தெரிவித்தது.
தற்போதைய ஜனாதிபதி அசாத் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாத்திற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 2500 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதில் 350 பேர் போராட்டக்காரர்கள் ஆவார்கள். பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.
கடாபி நைஜருக்கு தப்பி ஓட்டம்: அமெரிக்கா சந்தேகம்.
லிபிய அதிபர் கடாபி நைஜரில் தஞ்சம் அடைந்திருப்பாரா? என அமெரிக்க சந்தேகிக்கிறது.
கிளர்ச்சியாளர்கள் திரிபோலியை கைப்பற்றியதால் பாதுகாப்பு கருதி அண்டை நாடான நைஜரில் தஞ்சம் அடைவாரா என்பதை அமெரிக்கா நம்ப மறுக்கிறது.
நைஜரில் அமெரிக்க தூதரிடம் இது குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதால் அங்கு கடாபி தஞ்சம் அடைய மாட்டார் என அமெரிக்க வெளியுறவு ‌செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் தாய்மார்கள்.
பிரிட்டனில் குழந்தை பாதுகாப்புக்கு ஆகும் செலவாலும், வரிசலுகை ரத்து செய்யப்படாததாலும் பிரிட்டனில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் வேலையில் இருந்து விலகி உள்ளனர்.
பெண்களுக்கு கிடைக்கும் சம்பளமும் குறைவாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பிரிட்டனில் பெண்கள் சம்பாதிக்கும் சம்பளத்தில் 3ல் ஒரு பகுதியை குழந்தை பாதுகாப்பு செலவுக்கு அளிக்க வேண்டி உள்ளது. இந்த செலவினம் அதிகரிப்பால் பெண்கள் தங்களது உணவுக்கான செலவை குறைத்துக் கொண்டு அளிக்க வேண்டி உள்ளது.
பத்தில் ஆறு பெண்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு அலுவலகத்தில் உரிய சம்பளமும் கிடைப்பது இல்லை. இந்த அதிர்ச்சி தகவல் சில்ட்ரன் அண்ட் டே கேர் டிரஸ்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
12 ஆயிரம் பவுண்ட்டுக்கு குறைவாக சம்பளம் வாங்கும் பெண்கள் தாங்கள் பார்க்கும் வேலையை விட்டு விலகுகின்றனர். ஏனெனில் வேலைக்கு செல்வதால் கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு அளிக்க வேண்டி உள்ளது.
இதனால் குழந்தையை தனது பாதுகாப்பில் பராமரிக்கும் போது அந்த செலவை தவிர்க்கலாம் என்று தாய்மார்கள் கருதுகின்றனர். இங்கிலாந்தில் வாரம் 25 மணி நேரம் குழந்தைகள் பாதுகாப்புக்கு என ஆண்டுக்கு 5000 பவுண்ட் கட்டணம் அளிக்க வேண்டி உள்ளது. லண்டனில் இந்த கட்டணம் 6 ஆயிரம் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலின் 10வது நினைவு தினம்: அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு.
இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்பதால் அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். அதில் 3000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இதையடுத்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. அண்மையில் பாகிஸ்தானில்ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக் கொன்றது. இருப்பினும் தீவிரவாதம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் செப்டம்பர் 11ம் திகதி இரட்டை கோபுர தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சிறிய ரக விமான மூலம் தாக்குதல் அச்சம் எழுந்துள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் விமானங்களை மிகவும் உண்ணிப்பாக கவனிக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்ட பின்பும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. தற்போது எந்தவொரு அமைப்பிடம் இருந்தோ, வேறெந்த வழியிலும் குறிப்பிடத்தக்கவகையில் மிரட்டல் இல்லை.
இருப்பினும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது என்று அமெரிக்க உள்துறை மற்றும் வெளியுற அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். 
லிபியாவில் ஜேர்மனியின் நடவடிக்கை: ஒபாமா பாராட்டு.
லிபியாவில் கர்னல் கடாபி ஆட்சியை அகற்றுவதற்கு புரட்சி படையினருக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களம் இறங்கின. இந்த கூட்டுப்படையில் ஜேர்மனி முதலில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் எதிர்பார்த்ததை விட வான் வழி நடவடிக்கையில் ஜேர்மனி பெரிதும் உதவியாக இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பெருமிதம் அடைந்துள்ளார்.
இதனை ஒபாமாவின் அயல்துறை விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் காய்ட்லின் ஹேடன் தெரிவித்தார்.
லிபியாவில் தற்போது கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு புரட்சி படையின் தேசிய மாற்றக் கவுன்சிலின் இடைக்கால நிர்வாகம் அமைந்துள்ளது. லிபியாவில் கட்டமைப்பு மற்றும் இதர மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜேர்மனியின் உதவி தேவை என்றும் ஒபாமா எதிர்பார்த்துள்ளார் என காய்ட்லின் தெரிவித்தார்.
லிபியாவின் புரட்சிப்படையினர் தான் சரியான தலைமை என்பதை ஜேர்மனி உடனடியாக புரிந்துகொண்டது. இது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்றும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
லிபியாவில் முதலில் தாக்குதல் நடத்த அமெரிக்கா விரும்பிய போது அதனை ஜேர்மனி ஏற்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஜேர்மனியும் நேட்டோ படைகளுக்கு சாதகமாக தனது நிலையை மாற்றிக்கொண்டது.
முன்னாள் ஜனாதிபதி சிராக்கிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவரங்களை பிரான்ஸ் நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
இருப்பினும் நீதிமன்ற விசாரணைக்கு சிராக் வரவில்லை. மருத்துவ காரணங்களால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சிராக் முதல் விசாரணைக்கு வராததை நீதிபதிகள் அனுமதித்தனர்.
79 வயது சிராக்கிற்கு கடுமையான நினைவு இழப்பு நோய் உள்ளது. இதனால் தீர்ப்பின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. சிராக் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு முன்னர் பாரிசின் மேயராக 1977ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை இருந்தார்.
அந்த கால கட்டத்தில் அவர் தனது கட்சி உறுப்பினர்கள் முனிசிபால் ஊழியர்களாக இல்லாத போதும் அவர்களுக்கு சம்பளம் அளித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் பொது நிதியை முறைகேடு செய்தது தொடர்பாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிதி முறைகேடு வழக்கு விசாரணை முதலில் மார்ச் மாதம் நடைபெற இருந்தது. பின்னர் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய நகரங்களின் பட்டியல்: மெல்பர்ன் முதலிடம்.
சகல வசதிகளுடன் மனதுக்கு நிம்மதி தரும் மாநகரங்கள் என்ற வரிசையில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம் முதலிடத்தில் இருக்கிறது.
உலக அளவில் பொருளாதாரம், தொழில், கம்பெனிகள் நிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளை அலசி ஆராய்ந்து ஆய்வு முடிவுகளை இங்கிலாந்தின் எகனாமிஸ்ட் குழுமத்தின் ஒரு பகுதியான "எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்" வெளியிட்டு வருகிறது. வாழ்வதற்கு ஏற்ற நகரம் எது? என்பதுதான் இந்த அமைப்பு லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் பட்டியல்.
சமூக ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாசாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி மக்கள் நெருக்கம், போக்குவரத்து, சுற்றுச்சூழல், இட வசதி, செலவு உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உலகின் 140 முன்னணி நகரங்களை இது வரிசைப்படுத்தி உள்ளது.
இதில் அதிகபட்சமாக 97.5% மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம். 2, 3-வது இடங்களை ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, கனடாவின் வான்கோவர் நகரங்கள் பிடித்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் சிட்னி 6-வது இடத்திலும், பெர்த் மற்றும் அடிலைடு நகரங்கள் 8-வது இடத்திலும் இருக்கின்றன. பாரீஸ்-16, டோக்கியோ-18, ஹாங்காங்-31, சான்பிரான்சிஸ்கோ-51, சிங்கப்பூர் மற்றும் லண்டன் 53, நியூயார்க்-56 என்று போகிறது பட்டியல்.
ஆசிய அளவில் இதில் முன்னணி இடத்தில் இருப்பது 72-வது இடத்தில் இருக்கும் சீன தலைநகர் பீஜிங் மற்றும் 79-ல் இருக்கும் ஷாங்காய். இந்தியாவின் பிசினஸ் தலைநகராக கருதப்படும் மும்பை 116-வது இடத்தில் இருக்கிறது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா, லிபியா தலைநகர் திரிபோலி, வங்கதேச தலைநகர் தாகா, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே ஆகியவை மும்பைக்கும் கீழே உள்ளன. வாழ்வதற்கு கொஞ்சம்கூட லாயக்கு இல்லாத இடங்களாம்.
உலகின் மிகப்பெரிய உப்பு ஏரியை பாதுகாக்க ஈரான் அரசு தீவிரம்.
ஈரான் நாட்டில் உள்ள உலகின் மூன்றாவது பெரிய உப்பு ஏரியான உர்மியா ஏரியைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டுத் துணை அதிபர் முகமது ரெசா ரஹிமி தெரிவித்தார்.
ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ளது உர்மியா ஏரி. இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய உப்பு ஏரியாகும். மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இதுவே ஆகும். இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளில் பாதியாகச் சுருங்கி விட்டது.
எனவே இந்த ஏரியை பாதுகாக்க ஈரான் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆரஸ் ஆற்றிலிருந்து ஈரானுக்கு வரவேண்டிய நீரின் பங்கை இந்த ஏரிக்கு திருப்பிவிட ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி ஏரியைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் ஈரான் அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த ஏரியின் பிரதான நீர் ஆதாரமாக உள்ள ஆரஸ் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டதாலும், வறட்சியினாலும் ஏரி பாதியாக சுருங்கிப் போய் விட்டது. ஆரஸ் ஆறு துருக்கி, ஆர்மீனியா, ஈரான், அஜர்பெய்ஜான் ஆகிய நாடுகளின் வழியாகப் பாய்கிறது.
வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய வழக்கறிஞர் 11 மணிநேரப் போராட்டத்திற்கு பின் கைது.
அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் தன் மகளைக் கடத்தி வைத்துக் கொண்டு தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய வழக்கறிஞர் ஒருவர் 11 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியான பராமாட்டாவில் கோர்ட் ஒன்றின் அருகில் உள்ள சட்டத் துறை அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் காலை 52 வயதுடைய ஒருவர் தனது 12 வயது மகளுடன் சென்றார்.
அவர் தனது தலையில் வழக்கறிஞர்கள் அணியக்கூடிய "விக்" அணிந்திருந்தார். அவர் அங்கிருந்த வரவேற்பாளரிடம் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரைக் கூறி அவரைப் பார்த்துப் பேச வேண்டும் எனக் கேட்டார்.
அந்தப் பெயரில் ஒருவரும் அலுவலகத்தில் இல்லை என வரவேற்பாளர் அவரிடம் தெரிவித்தார். மகளுடன் வந்த அந்த நபரோ வரவேற்பாளரை ஓங்கி அடித்து விட்டு,"எனது பையில் வெடிகுண்டு இருக்கிறது. இத்தகவலை அட்டர்னி ஜெனரலிடம் சொல் போ" எனக் கூறி விட்டு உள்ளே போய்விட்டார்.
தகவல் அறிந்த பொலிசார் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர். அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதி ஆளில்லாத மயானமாக காட்சியளித்தது.
அதன்பின் பொலிசார் அக்கட்டடத்தை முற்றுகையிட்டனர். உள்ளே இருந்த நபரிடம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் அந்த நபர் அலுவலகத்தின் கண்ணாடிக் கதவை உடைத்து சில துண்டுக் காகிதங்களை வெளியில் போட்டார். இந்த நாடகம் 11 மணி நேரம் நீடித்தது.
ஒரு கட்டத்தில் அந்த நபர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதேநேரம் அவருக்குத் தெரியாமல் பொலிசார் உள்ளே புகுந்து அந்த நபரைக் கைது செய்தனர். அவரால் சிறைபிடிக்கப்பட்ட சிறுமி கதறிக் கண்ணீர் விட்டபடி அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தாள்.
பின் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாள். அந்த நபர் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் சிட்னி நகர பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பயங்கரவாதி ஒருவர் தன் கழுத்தில் வெடிகுண்டைக் கட்டியிருப்பதாக புரளியைக் கிளப்பிய இளைஞர் ஒருவர் அமெரிக்காவிற்குத் தப்பியோடினார். பின் அங்கு அவர் கைது செய்யப்பட்டார். விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு அவர் தண்டனைக்கு அனுப்பப்பட உள்ளார்.
செர்னோபில் அணு உலையில் ஆய்வு நடத்த ஜப்பான் குழு விரைவு.
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் ஆய்வு நடத்துவதற்காக ஜப்பான் நிபுணர் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல உள்ளது.
ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தகாஹிரோ யோகோமி சி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி உருவானது. இதில் அங்குள்ள புகுஷிமா அணு உலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அணுக் கதிர்வீச்சு வெளியேற தொடங்கியது. இதனால் அங்கு வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்நாட்டின் நிபுணர் குழு ஒன்று உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணு உலையை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 4வது உலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் அணு உலையில் இருந்து 30 கிலோமீற்றர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அணு உலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள பல்வேறு உலக நாடுகள் நிதியுதவி அளித்தன. அதன்படி தற்போது அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள புகுஷிமா அணு உலையில் எவ்வாறு மறு நிர்மாணப் பணிகள் மேற்கொள்பது, தூய்மைப் பணி மேற்கொள்வது ஆகியவை குறித்து உக்ரைன் நாட்டு அணு விஞ்ஞானிகளின் அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக ஜப்பான் நிபுணர் குழு அங்கு செல்ல உள்ளதாக தகாஹிரோ யோகோமி சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அணுக்கதிர் வெளியேறத் தொடங்கியதால் ஏற்பட்ட கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் உலைகளை குளிர்விக்கும் பணிகள் புகுஷிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் பயனாக கடுமையாக பாதிக்கப்பட்ட 3வது உலையின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1வது உலையின் வெப்பம் ஏற்கெனவே 90 டிகிரி அளவுக்கு குறைந்துவிட்டது.
இதனால் அணுக்கதிர் வீச்சின் அளவும் வெகுவாக குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அணு உலைகளை குளிர்விக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF