Monday, September 19, 2011

இன்றைய செய்திகள்.

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த புகைப்படங்களுடன் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!- கோத்தா பணிப்பு.
தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்களின் தொப்பி அணித்த புகைப்படங்களுடனான விண்ணப்பங்களை ஏற்குமாறு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலுள்ள ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் ஜகத் பி. விஜயவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த உத்தரவினை பாதுகாப்பு செயலாளர் வழங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலமாக்கள் மற்றும் அரபு கல்லூரி மாணவர்கள் மாத்திரம் தொப்பி அணித்த புகைப்படங்களுடன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்திருந்தது.
எனினும், இதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஹஜ் பெருநாளின் போது குர்பான் கொடுப்பதற்காக மாடுகளை அறுப்பதற்கு பொலிஸார் எந்த தடைகளையும் விதிக்காத வண்ணம் பொலிஸ் திணைக்களம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்று நிருபங்களை அனுப்பும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
லண்டன் ஆடையலங்கார நிகழ்வில் இலங்கைப் பெண் பங்கேற்கிறார்.
உலகிலேயே பிரபலமான ஆடை அலங்கார நிகழ்வுகளில் ஒன்றான லண்டன் பாஷன் வீக் எஸ்தனிகா நிகழ்வில் இந்தத் தடவை இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிபுணர் ஒருவரும் பங்குபற்றுகிறார்.
இலங்கை பாரம்பரிய ஆடையலங்காரங்கள் மற்றும் நவீன அலங்காரங்கள் ஆகியவற்றை இணைத்து புதிய உடையலங்காரங்களை வடிவமைத்துள்ள சரினி சூரியஹே இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இலங்கை ஆடையலங்கார விழுமியங்கள் விருதை 2010 ஆம் ஆண்டு வென்ற சரினி ஆடையலங்காரத்தை தனது பட்டப்படிப்புக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்றவராவார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்பதில் அவர் பெருமையடைகிறார்.
பல சர்வதேச வாடிக்கையாளர்களையும், ஊடகங்களின் கவனத்தையும் தான் இதன் மூலம் பெறலாம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகில் ஒரு முக்கிய ஆடை ஏற்றுமதி நாடாக இலங்கை திகழுகின்ற போதிலும், ஆடை வடிவமைப்புத்துறையில் அது ஜொலிக்கவில்லையே என்று கேட்டதற்குப் பதிலளித்த சரினி அவர்கள், அதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை தான் உணர்வதாகவும் தற்போது இலங்கையில் நிறைய உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ள பிரித்தானியா.
இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
குறித்த காலக்கெடுவை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரித்தானிய வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விடயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரித்தானியாவும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, உரிய கரிசனையை காட்டவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. அதில் தோல்வி கண்டுள்ளது என்று பிரித்தானிய வெளியுறவு குழு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வில்லியம் ஹேக் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுக்குழுவின் கருத்துக்களுக்கு தாம் உடன்படுவதாக வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளியும் இதனை தெளிவாக காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் செயற்பாடு குறித்து இலங்கை கடும் விசனம் : மஹிந்த நியூயோர்க் விஜயம்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் செயற்பாட்டை விமர்சித்து இலங்கை அரசாங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று ஐக்கிய நாடுகள் 66 வது பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நியூயோர்க் பயணமாகவுள்ளார்.
இந்தநிலையிலேயே பான் மூனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை அனுப்பும் உத்தரவு ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தமை, ஐக்கிய நாடுகளின் ஒழுங்குகளை மீறும் செயல் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பான் கீ மூன் உறுப்பு நாடுகள் விடயத்தில் தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தால், சர்வதேச நாடுகள், அவ்வாறு நடக்காதிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி அங்கு, பல்வேறு நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
குரோத அரசியலில் ஈடுபட மாட்டேன்!- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
குரோத அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் குரோதத்துடன் நடவடிக்கைகளை ஒருபோதும் மேற்கொண்டதில்லை, அனைவரையும் ஒரே விதமாகவே நோக்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைக் கொள்வனவு செய்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர், இந்த குற்றச்சாட்டு உண்மையானதே, ஆளும் கட்சியில் பல்வேறு தரப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.
சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகளுக்கு மாவிலாறு பகுதியில் நீர் வழங்க மறுத்த காரணத்தினால் புலிகள் மீது தாக்குதல் நடத்துமாறு படையினருக்கு உத்தரவிட்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளே யுத்தத்தை ஆரம்பித்தனர், நாம் முதலில் தாக்குதல் நடத்தவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
முன்னேஸ்வரம் பலிபூஜையை தடுத்த சாபத்திலிருந்து நீங்க மோ்வினுக்கு 1500 போதி பூஜைகள்.
பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஆசீர்வாதம் கோரி நாடு முழுவதும் 1500 போதி பூஜைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறவிருந்த மிருக பலிபூஜையை தடுத்து நிறுத்திய அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஏற்படக்கூடிய சாபங்களிலிருந்து நீங்குவதற்காக இத்தகைய போதி பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதான பூஜை, களனி விகாரையின் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் பல ஆலயங்களிலும் பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனது ஆதரவாளர்களினாலேயே குறித்த போதி  பூஜைகள் ஏற்பாடு செய்துநடாத்தப்படுவதை அறிந்துள்ளதாகதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் மட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மிருகபலி பூஜைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவுள்ளேன் எனவும், ஏனைய இந்துமதக் குருக்களிடமும் இது குறித்து பேசுவேன் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திலிலிருந்து அகற்றப்பட்ட சுமார் 50 ஆடுகளும் சேவல்களும் தனியார் தோட்டமொன்றில் வைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த புதன்கிழமை ஆலய தர்மகர்த்தாவிடம் ஒப்படைக்கப்படவிருந்தன.
எனினும் தாம் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதால் பொலிஸாரே இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தர்மகர்த்தா தெரிவித்துள்ளதால் இந்நிகழ்வு இடம்பெறவில்லை.
பலிகொடுக்கப்படவிருந்த மிருகங்கள்  உழவுயந்திரம் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டபோது பொலிஸார் அதை தடுக்கவில்லை என்பது வழிபாட்டுக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.
ஐ.நா செயலாளர் நாயகத்தை பிழையாக வழிநடத்தும் இரு அரச சார்பற்ற நிறுவனங்கள் : திவயின குற்றச்சாட்டு.
இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகத்தை பிழையாக வழிநடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான  குழு  ஆகிய இரண்டு அமைப்புக்களுமே இவ்வாறு பான் கீ மூனை பிழையாக வழிநடத்தியுள்ளன.
இலங்கைக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபை 69 பக்க அறிக்கை ஒன்றையும், சர்வதேச நெருக்கடிகளுக்கான  குழு 8 பக்க அறிக்கை ஒன்றையும் பான் கீ மூனிடம் ஒப்படைத்துள்ளன.
போர் இடம்பெற்ற காலத்தில் வன்னியில் சேவையாற்றிய 21 அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றிய நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி ஆதரவாளர்களிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை ஆதாரங்களை திரட்டியுள்ளது.
வன்னிப் போர் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்டுள்ள தொராயா ஒபேட் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
மகளிர் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பட்டு வந்த இவர் முதல் தடவையாக போர் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
ஐ.நாவின் பக்கச் சார்பற்ற தன்மை குறித்து திவயின ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி?
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மனித உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்பற்றி வரும் கோட்பாடுகளும் கொள்கைகளும் போலியானவை.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் எதற்காக? யாருக்காக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்?
கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவருக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படையினர் போர் நடத்தி வெற்றியீட்டினர்.
இந்தப் போர் ஓர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா, ஒசாமா பின் லேடன் என்ற தீவிரவாதியை எவ்வாறு இல்லாதொழித்ததோ அதேபோன்று பிரபாகரனை இல்லாதொழிக்க அரச படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
போர் என்பதே குற்றச் செயல்தான் எனவும் இதில் நல்ல போர், தீய போர் என்றெல்லாம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென குரல்கொடுக்கும் பல தரப்பினர் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்ததை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.
தாருஸ்மன் அறிக்கை ஓர் போலியானது, அந்த அறிக்கையின் மூலம் எவருக்கும் நன்மை ஏற்படாது என திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூகுள் இணையதங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம்: மாலிக் எச்சரிக்கை.
தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கூகுள் மற்றும் யூடியூப் இணையதளங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அவ்வப்போது சில கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கராச்சியில் தீவிரவாதிகள், கிரிமினல்களால் பெரும்பாலான கொலைகள் நடக்கவில்லை. பொறாமை பெண்கள், மனைவிகளால் தான் கொலைகள் நடக்கின்றன என்று கூறி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார் மாலிக்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல், சதி திட்டங்கள், தகவல் பரிமாற்றங்களுக்கு இணைய தளங்களை பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் விசாரணைக்கு கூகுள் மற்றும் யூடியூப் இணைய தளங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பாகிஸ்தானில் அவற்றை தடை செய்வோம் என்று நேற்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக எதுபோன்ற தகவல்களை அளிக்கவில்லை என்ற விவரங்களை மாலிக் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள கூகுள் இணையதள நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மாலிக் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
சீனாவில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாக குறைவு.
உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. சீனாவில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையும் மிக அதிகளவில் ஏற்பட்டது.
இந்த குழந்தை இறப்பை தடுப்பதற்காக பிரசவங்கள் உரிய வசதி உள்ள மருத்துவமனைகளில் நடைபெற வேண்டும் என அரசு பிரச்சாரம் செய்தது.
அரசின் இந்த தீவிர நடவடிக்கையால் அங்கு குழந்தை இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதமாக குறைந்து உள்ளது. இந்த ஆய்வு விபரம் புகழ்பெற்ற லான்செட் இதழில் வெளியாகி உள்ளது.
பெய்ஜிங் மற்றும் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரியவந்தது. சீனாவில் 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பிறந்த 15 லட்சம் குழந்தை பிறப்புகளை ஆய்வு செய்த போது அங்கு குழந்தை இறப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு முதல் சீன அரசு பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெற வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த பிரச்சாரங்களில் 8 ஆண்டுகளில் நல்ல பலன் கிடைத்து உள்ளது.
சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 15 பேர் பலி.
சிரியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 15 பேர் பாதுகாப்புப் படையினரால் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து கடந்த 6 மாத காலமாக அந்நாட்டில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சனிக்கிழமை தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா அதிபருக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் ரெசப் தாயிப் எர்தோகன் சிரியாவில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டித்துள்ளார். அடக்குமுறையைக் கையாளும் சர்வாதிகாரச் சூழ்நிலையெல்லாம் எப்போதோ முடிந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
எர்தோகன் அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் அசாதாரணச் சூழ்நிலை குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியை ஒதுக்கிய அமெரிக்க அதிபர்.
ஐக்கிய நாட்டு பொதுச்சபை குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட முழு அளவில் தயாராக இருந்த பாகிஸ்தான் பிரதமர் அப்துல் ரசூல் கிலானி அப்செட் ஆனார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க நேரம் ஒதுக்காத காரணத்தினால் தமது ஐ.நா பயணத்தை ரத்து செய்திருப்பார் என பாகிஸ்தான் பத்திரிகையான டான் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா சபை கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். லிபியா, பாலஸ்தீனம் மற்றும் உலகளாவிய பயங்கரவாத வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறித்து வெளியாகியிருக்கும் செய்தியில் இவர் அமெரிக்கா செல்வது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. இந்நேரத்தில் அவர் பயணத்தை திடீரென ஒத்தி வைத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இவருடன் வரும் குழுவினருக்கு நியூயார்க்கில் பெரும் நட்சத்திர ஓட்டல்கள் அறைகள் கேன்சல் ஆகி விட்டது. இவரது அலுவலக செய்திக்குறிப்பில் வெள்ள சேதம் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருப்பதால் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி இல்லை ஒபாமாவை சந்திக்க பிரதமர் கிலானி விருப்பம் தெரிவித்தும் அமெரிக்கா தரப்பில் எவ்வித சிக்னலும் கிடைக்காதாதல் கிலானி தமது பயணத்தை ரத்து செய்திருக்கிறார் என்றும், இது அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், பாகிஸ்தான் ஈரான் பைப்லைன் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தியதால் பாகிஸ்தான் அதிருப்பதியில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடாபியை ரகசியமாக சந்தித்த பிளேர்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இரண்டு முறை ரகசியமாக லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் கடாபியை சந்தித்துள்ளார்.
இந்த இரண்டு பயணமும் தனிப்பட்ட முறையில் அமைந்த ஒன்றாகும். அரசு முறையில் அல்லாத அந்த பயணத்தில் லாக்கர் பி குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியை அங்கிருந்து விடுவிப்பது தொடர்பாக பிளேர் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
பிளேர் 2007ம் ஆண்டு ஜுன் மாதம் பதவியிலிருந்து வெளியேறினார். அவர் லிபியா ஆட்சியாளர்களின் விமானத்தில் கடாபியை சந்திக்க 2008ம் ஆண்டு ஜுன் மாதம் மற்றும் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்றுள்ளார்.
தலைநகர் திரிபோலியில் தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போது பிளேரின் ரகசிய பயணம் தெரியவந்துள்ளது. பிளேரின் ரகசிய பயணத்தை செய்தித் தொடர்பாளர் ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
2010ம் ஆண்டு ஜுன் மாதம் கடாபியுடன் பிளேர் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியவந்துள்ளது. 1988ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் நகரத்தில் பான் ஆம் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 270 பேர் மரணமடைந்தார்கள்.
இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் ஆவர். இந்த குண்டு வெடிப்பின் குற்றவாளி மெக்ரகி. இவர் புற்றுநோயால் அவதிப்படுகிறார். இன்னும் 3 மாதத்தில் அவர் இறக்கலாம், இந்த நிலையில் அவரை விடுவிப்பதற்கு கடாபியை பிளேர் சந்தித்து உள்ளார்.
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்திய பிரிட்டன் நபர் கைது.
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்திய பிரிட்டன் நபர் கைது செய்யப்பட்டார்.
போதை மருந்து கடத்தியது தொடர்பாக மான்செஸ்டர் விதேன்ஷவே பகுதியை சேர்ந்த 53 வயது ஜாக் வாக்கர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி பொலிசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து அயல்துறை மற்றும் காமன்வெல்த் அலுவலக பெண் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"இந்தோனேஷிய சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டன் நபர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்து உள்ளது. அந்த நபருக்கு பிரிட்டன் தூதரக உதவிகள் அளிக்கப்படும்" என்றார்.
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தப்பட்ட குற்றம் உறுதிபடுத்தப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
தலிபான் ஆதரவு அமைப்புடன் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு: அமெரிக்க தூதர் தகவல்.
பாகிஸ்தானில் ஹக்கானி தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்பிற்கும், பாகிஸ்தான் அரசிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஹக்கானி தீவிரவாத அமைப்பு தலிபான் ஆதரவு அமைப்பாகும் என பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர் குற்றம்சாட்டி உள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த வாரம் அமெரிக்க தூதரக அலுவலகம் மற்றும் நேட்டோ படை பிரிவு மையத்தை தலிபான் தீவிரவாதிகள் தாக்கினர்.
இந்த நிலையில் அமெரிக்க தூதர் கமரோன் முன்டர் பாகிஸ்தான் பேட்டியில் கூறும் போது,"அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் நெருங்கிய உறவு தேவை" என வலியுறுத்தினார். கடந்த புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 6 தீவிரவாதிகள், 4 பொலிசார், 2 பொதுமக்கள் இறந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள ஹக்கானி தீவிரவாத அமைப்பு காரணம் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இதே தகவலை அமெரிக்க தூதர் கமரோன் முன்டரும் தெரிவித்துள்ளார். ஹக்கானி தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகை சுற்றி வந்த வயதாக கடல் பயணி.
உலக நாடுகளை கடல் மார்க்கமாக படகின் மூலம் சுற்றி வந்த மினோரு செயிட்டோ தாய்நாடு ஜப்பான் திரும்பினார்.
அவர் 1080 நாட்கள் கடல் நீரில் பயணம் செய்தார். உலக நாடுகளை கடல் நீரில் கடந்து வந்த சாதனையாளர் பட்டியலில் மிக வயதான நபர் என்ற பெருமையும் மினோருக்கு உள்ளது.
இந்த சாதனை வீரர் பயணம் மேற்கொள்ளும் போது ஒரு நிலநடுக்கம், 2 சுனாமி, 2 பனிகட்டிகள் மற்றும் சீறி வந்த கடல் அலைகள், சூறாவளி போன்ற அபாயங்களை எதிர்கொண்டார்.
இந்த சாதனை வீரருக்கு 77 வயது ஆகிறது. இவருக்கு முதுகு வலி, ஹெர்னியா பிரச்சனை, முழங்கால் அறுவைசிகிச்சை போன்றவையும் நடந்து உள்ளது. இதே பிரச்சனைக்காக மாத்திரையும் எடுத்துக் கொள்கிறார்.
இயற்கை பேரிடர் மற்றும் உடல் நோய்கள் ஆகிய இரண்டையும் சமாளித்து மினோரு உலக நாடுகளை கடலில் கடந்து வந்து உள்ளார். அவருக்கு ஜப்பானில் உள்ள யோகோ ஹமா துறைமுகத்தில் பலத்த வரவேற்பு அழைக்கப்பட்டது.
யூரோ பிரச்சினை: ஜேர்மனி கட்சிகள் இடையே மோதல்.
ஐரோப்பிய மண்டலத்தில் பொது நாணயமாக யூரோ உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி நிலவுவதால் இந்த யூரோ மதிப்பு குறைந்துள்ளது.
இதனால் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியும் பின்தங்கி உள்ளது. இதனால் யூரோ நாணய புழக்கத்தை கைவிட்டு ஜேர்மனியின் தனி நாணயத்தை கையாள வேண்டும் என்று ஜேர்மனியில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடனில் திவால் ஆகியுள்ள கிரீஸ் நாட்டிற்கு ஜேர்மனி அதிகளவில் கடன் அளிப்பதை எதிர்கட்சிகள் வரவேற்கவில்லை. கிரீஸ் நாட்டின் நிதி நிலையை சரி செய்து ஐரோப்பிய பொது நிதியான யூரோவை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
கிரீஸ் நாட்டின் பிரச்சனையை கைவிட்டு ஜேர்மனி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜேர்மனி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்கட்சிகள் மட்டும் அல்லாமல் ஏங்கலா மார்கெலின் கன்சர்வேடிவ் கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ்(சிடியு) கட்சியின் இளைய கூட்டணி கட்சியான ப்றீ டெமாக்ரேட்ஸ் கட்சி இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சிக்கும் யூரோவை பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை.
ஹிட்லரின் புகைப்படங்கள் 3டி வடிவில் பரபரப்பாக விற்பனை.
ஐரோப்பிய நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என ஆஸ்திரியா போன்ற நாடுகளுடன் கடுமையாக போர் செய்து சர்வாதிகாரம் செய்தவர் அடால்ப் ஹிட்லர் ஆவார்.
இவரது சர்வாதிகார ஆட்சி ஜேர்மனியை தலைமையிடமாக கொண்டு நடந்தது. ஹிட்லர் தனது ஆட்சிக் கால பெருமைகளை மக்களுடன் கொண்டு சேர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது 3டி எனப்படும் முப்பரிமாண வடிவத்தில் வந்துள்ளது.
இந்த 3டி வடிவம் மூலமாக ஹிட்லர் நம்மிடம் நேரடியாக பேசுவதைப் போல உணர முடியும். இந்த 3டி ஆல்பம் வெள்ளிக்கிழமை முதல் ஜேர்மனியில் பரபரப்பாக விற்பனை ஆகிறது.
இந்த 3டி ஆல்பம் தொகுப்பிற்கு "தி பேஸ் ஆப் தி டிக்டேடர்ஷிப்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த 3டி தொகுப்பை வரலாற்று ஆய்வாளரும், பத்திரிக்கையாளரும் ஆன ரால்ப் ஜார்ஜ் ரூத் தொகுத்துள்ளார்.
இதில் ஹிட்லர் மற்றும் நாஜி வீரர்கள் மற்றும் ஹிட்லர் காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3டி தொகுப்பை வெளியிட்டுள்ள பதிப்பாளர் பென்டோ முப்பரிமாண வடிவத்தில் படங்களைப் பார்க்க உரிய கண்ணாடிகளையும் வழங்கி உள்ளது.
இந்த தொகுப்பில் 7,000 படங்கள் உள்ளன. இவற்றை ஹிட்லரின் பிரத்யேக புகைப்படக்காரர் ஹென்ரிச் ஹாப்மென் எடுத்துள்ளார்.
லண்டனில் 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.
வைத்தியர்களின் ஊகங்களை முறியடித்து, தலை ஒட்டிப் பிறந்த, ஆண், பெண் இரட்டையர்கள் தங்கள், 50வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினர்.
ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண், பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர்.
பிறக்கும் போதே, இருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும், மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன. இதனால், மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேறாத அக்காலத்தில், இந்த விசித்திரமான பிறவிகள், நீண்ட நாள் வாழ முடியாது என, டாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.ஆனால், டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, இவர்கள் தற்போது தங்களது, 50வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தை லண்டனில் நிகழ்த்தியுள்ள இவர்களில், லோரி ஐந்தடி 1 அங்குல உயரமும், ஜார்ஜ் நான்கடி 4 அங்குல உயரமும் கொண்டவர்களாக தற்போது உள்ளனர்.ஜார்ஜ் மேற்கத்திய இசைப் பாடகராகத் திகழ்கிறார். லோரி "டென் பின் பவுலிங்' என்ற விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வாழ்க்கை குறித்து, "டெய்லி மெயில்' பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் பிறந்த போது, எங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர். ஆனால், அவர்களின் ஊகங்கள் தவறு என்று, நாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்' என்று பெருமிதத்துடன் கூறினார்.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து கிடையாது: கனடா முடிவு.
பாலஸ்தீனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி நாடு அந்தஸ்து கோரி போராடி வருகிறது.
பாலஸ்தீனத்திற்கும் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டிற்கும் கடுமையான மோதல் நிகழ்வு நடந்து வருகிறது. இதனால் மேற்கு கரையின் எல்லைப் பகுதியில் இரு தரப்பினர்களின் தாக்குதல்கள் நடந்து உயிரிழப்புகள் தொடர்கின்றன.
இந்த இரண்டு நாடுகள் மோதிக் கொள்வது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு நடந்த போரின் போது பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து உள்ளது.
அந்த இடத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த யூதர்களுக்கு இஸ்ரேல் அரசு குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் 23ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரிக்கை வாக்கெடுப்புக்கு நடைபெறும்.
இந்த வாக்கெடுப்பில் ஒரு தரப்பு நிலையாக தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு தரக்கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு கடுமையாக எதிர்த்து வருகிறார்.
அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க கூட்டணியான கனடா பாலஸ்தீன தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வெள்ளிக் கிழமை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறுகையில்,"ஒரு சார்பு ஆதரவு முடிவு பயனளிக்காது" என தெரிவித்தார். ஹார்ப்பர் உடன் நியூயார்க் செல்லும் கனடா அயல் துறை அமைச்சர் ஜான் பெயர்ட் கூறுகையில்,"பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து என்பது கனடாவின் திட்டமிட்ட முடிவு ஆகும்" என்று கூறுகிறார்.
லிபியாவின் இடைக்கால அரசுக்கு ஐ.நா அங்கீகாரம்.
லிபியாவின் இடைக்கால அரசுக்கு ஐ.நா அங்கீகாரம் அளித்துள்ளது. லிபியாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான தடைகளைக் களைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் போரால் சீரழிந்த லிபியா பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கில் மீண்டு வர முடியும். இதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 2009ம் ஆண்டுத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
லிபிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, மனித உரிமைகளைக் காப்பது, ஜனநாயக அரசை உருவாக்குவது ஆகியவற்றுக்கான ஐ.நா.வின் புதிய முயற்சிகளை பாதுகாப்பு கவுன்சில் முழுமையாக அங்கீகரித்தது.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுக்குழுவில், கடாபி அரசை வீழ்த்திய லிபிய இடைக்கால அரசுக்கு ஐ.நா.வில் இடம் அளிப்பதற்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் கிடைத்தன. இந்தியா இடைக்கால அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்த வாக்கெடுப்பு முடிந்த சில மணி நேரங்களில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வரவேற்றுள்ள அமெரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்காக லிபிய மக்களைப் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனும் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.
அதேநேரத்தில் சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியன லிபிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து நாட்டின் பொது நிதி மேலாண்மையை சீர்படுத்த உதவ வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் லிபியாவின் சில பகுதிகளில் இன்னமும் சண்டை நடந்து வருவதால் தங்கள் படைகளைப் பயன்படுத்துவதற்கு நேசப் படைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இடைக்கால அரசு இன்று அறிவிப்பு: லிபியாவில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விதத்தில் இடைக்கால அரசில் இடம் பெறுவோர் பெயர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
30 உறுப்பினர்கள் கொண்ட இந்த அரசில் அனைத்து அரசியல் குழுக்கள், அனைத்துப் பிரதேசங்கள், பெண்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் இடம்பெறுவர் என்று இரண்டு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். லிபியா முழுமையாக விடுதலை பெற்ற பிறகு புதிய அரசு அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நீடிக்கும் மோதல்: இதனிடையே லிபிய தலைநகர் திரிபோலியிலிருந்து 140 கி.மீ தள்ளியுள்ள மலைப்பகுதியான பானி வாலிட் பகுதியில் கடாபி ஆதரவாளர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கடுமையான மோதலின் முடிவில் புரட்சிப் படையினர் மலைப்பகுதியிலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று.
ஆப்கனில் நேட்டோ படையினர் தாக்குதல்: 18 பயங்கரவாதிகள் பலி.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய வான் தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் பர்காய்மெட்டால் மாவட்டத்தின் லோகால் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சர்வதேச பாதுகாப்புப்‌ப‌டையினருக்கும், நேட்டோ படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நேட்டோ படையினர் இப்பகுதி மீது திடீர் வான் தாக்குதல் நடத்தினர். இதில் 18 பயங்கரவாதிகள் ‌கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பலியாகிவி்ல்லை என அம்மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜாஹித்நெளரிஸ்தானி கூறினார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தலிபான்கள் என தலிபான்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் என உறுதி செய்துள்ளார்.
யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் கைது செய்யும் சட்டத்தில் தளர்வு!!
இங்கிலாந்திற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களை யுத்தக்குற்றம் தொடர்பாக தடுத்துவைக்கும் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பழைய சட்டவிதிமுறைப்படி அந்நாட்டிற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக யுத்தக்குற்றம் தொடர்பாக பொதுமகன் எவரும் வழக்குத்தாக்கல் செய்து எதாவது நீதிமன்றத்தினூடாக கைது உத்தரவைக்கோர முடியும்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இது மாற்றப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின்படி, உலகளாவிய அதிகார வரம்புகளின் மீதான வழக்குகளின் போது பிடிவிறாந்து பிறப்பிப்பதற்கு முன், பொது வழக்குகள் இயக்குனரின் ஒப்புதலை பெறுதல் வேண்டும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் இந்த சட்டத்தில் திருத்தத்தை வேண்டியிருந்தது. பாலஸ்தீன் காசா மீதான 2008 /2009 போர்க்குற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் Tzipi Livni இங்கிலாந்தில் வைத்து கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகளிருந்தன.
இதன் காரணமாகஅவர் அந்நாட்டுக்கான தனது விஜயத்தை ரத்துச்செய்திருந்தார். தற்போதைய புதிய சட்டத்தை Livni வரவேற்றுள்ளார்.
படையதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் எதிராக இங்கிலாந்து நாட்டின் சட்டம் பயன்படுத்தப்படுவதை இது தடுத்து நிறுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.
பழைய சட்டத்தின் கீழ் மனிதவுரிமை ஆர்வலர்கள், முன்னாள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் Henry Kissinger, சீன கம்யுனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவர் Bo Xilai , மற்றும் Livni ஆகியோருக்கெதிராக யுத்தக்குற்றம் தொடர்பாக பிடிவிராந்தைக்கோர முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச மன்னிப்புச்சபை கடந்தவருடம் இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்திருந்தது. குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் இதன்மூலம் வழியமைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF