அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும்.இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை சுவீடனின் பிரபல இசைச்சேவையான 'ஸ்பொடிபை' பேஸ்புக்குடன் இச்சேவையை வழங்க கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'ஸ்பொடிபை' சேவையானது சுமார் 15 மில்லியன் பாடல்களைக் கொண்டுள்ளதுடன் சுமார் 10 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டது. எனவே பேஸ்புக்கின் இச்சேவையானது அப்பிளின் ஐ டியூனுக்கு தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.