Tuesday, September 20, 2011

இன்றைய செய்திகள்.

சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான இணையவழி நுழைவுவிசா - ஜனவரி 1இல் நடைமுறைக்கு.

சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டவர்கள் இணையவழி நுழைவு விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை செப்ரெம்பர் 28ம் நாள் தொடக்கம் இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 

78 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கா வரும்போது முன்கூட்டியே நுழைவிசைவுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வருகை நுழைவிசைவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் நாளுடன் நிறுத்தப்படவுள்ளது.

ஜனவரி 1ம் நாளுக்குப் பின்னர் சிறிலங்கா வரவிரும்பும் 78 நாடுகளின் குடிமக்கள் முன்கூட்டியே இணைய மூலம் விண்ணப்பித்து நுழைவிசைவு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சிங்கப்பூர் , மாலைதீவு நாடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி மேலும் கூறியுள்ளார். எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் இடிக்கப்பட்ட தர்காவை மீண்டும் கட்டிக்கொடுக்க தன்னால் முடியாது! கோத்தபாய விளக்கம்.
இலங்கையின் அநுராதபுரத்தில் இம்மாதத்தில் முன்னதாக புத்த பிக்குகள் சிலரால் இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்கா தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு தற்போது கோத்தபாய விளக்கமளித்துள்ளார். செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல இந்த தர்கா மீண்டும் கட்டித் தரப்படுவதற்கு தன்னால் உத்தரவிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தர்கா இடிப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளில் சிலர், இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படும் என்று கோத்தபாய உத்தரவாதம் வழங்கியுள்ளார் என்ற புரிதலுடன் வெளிவந்திருந்தனர்.
கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே ஒழிய, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என்று கோட்டாபய பிபிசியிடம் விளக்கமளித்துள்ளார்.மீள் கட்டுமானம் பற்றி பேசவேண்டுமானால் முஸ்லிம் மற்றும் பௌத்த பிரதிநிதிகள் மதவிவகார அமைச்சிடம் அவ்விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
பிக்குகள் செயலை விமர்சித்தார்.
தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்றும், சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது என்றும் சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்த தர்கா நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. ஆனால் பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார்.
இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.தர்கா இடிப்புக்கு அவ்வட்டாரத்தின் முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ள கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்த மாத ஆரம்பத்தில் வரிசையாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கில் இடம்பெறும் ஐ.நா. சபை அமர்வில் கனடியப் பிரதமரைச் சந்திக்க மகிந்த தரப்பு கடும் முயற்சி?
ஐ.நா.வின் தலைவர்களிற்கான அமர்வு நாளை மறுதினத்திலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் போது கனடியப் பிரதமரான ஸ்டீபன் ஹாப்பரைச் சந்திக்க மகிந்த தரப்பு இராஜதந்திர நடைமுறைகளினூடாக முயன்று வருவதாகத் நம்பகரமாகத் தெரியவருகிறது.
குறிப்பாக ஐ.நா. அமர்வின் போது இடம்பெறவுள்ள நாடுகளின் தலைவர்களின் இராப்போசன விருந்துபசாரம் அல்லது ஒன்றுகூடல் சந்திப்பின் போது கனடியப் பிரதமரைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளபோதும் அது சாத்தியப்படாது என்றே தெரியவருகிறது.
இதேபோன்றதொரு விருப்பம் கடந்த முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா. சபை அமர்வு நிகழ்விலும் சிறீலங்காத் தரப்பால் கனடாவிற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை கனடா தட்டிக் கழித்திருந்தது. அதனையொத்த பதிலே தற்போதும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இதேவேளை கனடியத் தமிழ் கொன்சவேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின் ஆளும் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியிடம் சிறீலங்கா விவகாரம் தொடர்பான கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பாகவே இவ்வறிப்பு விடுக்கப்படுமெனவும் தெரியவருகிறது.
நியூயோர்க்கை சென்றடைந்தார் மஹிந்த.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதியும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நியூயோர்க் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பரான கேணல் கடாபியை கைவிட்டார் மஹிந்த ராஜபக்ச.
தமது நண்பரான கேணல் கடாபியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைவிட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடாபிக்கு எதிரான போராளிக்குழுவின் லிபிய இடைக்கால அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையும் ஆதரவளித்தன் மூலம் இது வெளிப்பட்டுள்ளது.
முன்னதாக நேட்டோ படைகளின் உதவியுடன் கடாபிக்கு எதிராக தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கடாபிக்கு இலங்கை வந்தால் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதி வழங்கியிருந்தார்.
கடாபியின் படையின் மீது நம்பிக்கை வைத்தநிலையிலேயே இந்த உறுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து மேற்குலக நாடுகள் தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தன.எனினும் அவர் தோல்வியடைந்தமையை அடுத்து, தமது நண்பரை அவர் கைவிட்டு விட்டார்.
யாழ்ப்பாணத்திலும் ஜனாதிபதிக்கான மாளிகையொன்று அமைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கோட்டையினுள் ஜனாதிபதிக்கான மாளிகையொன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் காலத்துப் புராதன கோட்டையை புனரமைப்பதற்கான பணிகளுக்கென நெதர்லாந்து அரசாங்கம் ரூ. நூறு மில்லியன்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
அந்த நிதியைக் கொண்டு புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதில் கோட்டையினுள் ஜனாதிபதி மாளிகையொன்றை நிர்மாணிக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.
பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் இலங்கை ஆளப்பட்டபோது கோட்டையினுள் அரச மாளிகை அமைக்கப்பட்டிருந்த இடத்திலேயே புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வடக்கின் ஆளுநராக உள்ள மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ்ப்பாணக் கச்சேரியின் முன்பாக அமைந்துள்ள பழைய பூங்கா பகுதியில் ரூ. நூறு மில்லியன் செலவில் ஆளுநருக்கான மாளிகையொன்றைக் கட்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்போது நூற்றுக்கணக்கான வருடங்கள் பழைமையான மரங்கள் மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் என்பவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு சர்வதேசத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: ரவி கருணாநாயக்க.
நாடு தனிமையான பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநயக்க தெரிவிக்கின்றார்.
இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
கோட்டே மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாரளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
இலங்கையை உலக நாடுகளுடன் இணைப்பதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடுவதாகவும், இந்தியாவுடன் கொஞ்சிக்குலாவுவதாகவும், ஜப்பானுக்கு உதவிகளை வழங்கப் போவதில்லை எனக் கூறுவதாகவும், ஐரோப்பாவைக் காலால் உதைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சிறிய இலங்கை தனித்து பயணிப்பதாக குறிப்பிட்ட ரவி கருணாநாயக்க இலங்கையை உலக நாடுகளுடன் இணைத்து அதனை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டிய தேவை எமக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை யோசனைகள் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படுகின்றது!– தயாசிறி.
தாருஸ்மன் அறிக்கை யோசனைகள் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை வேண்டாம் என நாடாளுமன்றில் குரல் கொடுத்த நபர்கள் தற்போது அந்த அறிக்கையின் யோசனைத் திட்டங்களை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.
அவசரகாலச் சட்ட நீக்கம் தாருஸ்மன் அறிக்கையின் ஓர் யோசனைத் திட்டமாகும்.நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 24 மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கண்டி குண்டசாலை பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த ஜெனரல்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்!– சரத் பொன்சேகா.
மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் சில இராணுவ ஜெனரல்கள் ஈடுபடுத்துகின்றனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போரை வென்றெடுத்த படையினரதும், காவல்துறையினரினதும் கடமை மக்களைப் பாதுகாப்பதாகும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்கத்துடன் இணைந்து சீருடைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்.
அரசியல்வாதிகளுடன் இணைந்து பாதுகாப்பு தரப்பினர் தங்களது கௌரவரத்திற்கு களங்கம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் நலனைக் கருத்திற் கொள்ளவில்லை : ரணில்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மக்களை நலனைக் கருத்திற் கொண்டு செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுயலாப அரசியலில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பதவிகளையும், வரப்பிரசாரங்களை பெற்றுக் கொள்வதனை இலக்காகக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்த மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்காக கட்சி என்ன விதமான சேவையாற்றியுள்ளது?
கல்முறை மாநகரசபையில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் நோக்கில் நiபெற்ற பிரச்சார நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோர்டன் வெய்ஸின் புத்தகத்தையே ஐ.நா. நிபுணர் குழு பிரதி செய்துள்ளது!- ராஜீவ விஜேசிங்க.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் கிளையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸின் புத்தகத்தையே தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழு பிரதி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த நேர் காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சனல்4  காணொளி மற்றும் கோர்டன் வெய்ஸினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டு ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தயாரித்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட முடியாது.
படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்கள் போர் வலயத்தில் விழுந்திருக்கலாம்.
பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதனால் வடக்கில் அதிகளவு துருப்பினர் குவிக்கப்பட்டுள்ளதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வுக்கு அரசின் மூத்த அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு!
தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் அரசின் முடிவுக்கு அமைச்சர்கள் சிலரே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அரசு கூறுவது போன்று அரசமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று ஒரு தீர்வைக் காண நாம் விடமாட்டோம் என்று மூத்த அமைச்சர் ஒருவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
தேசியப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்பினருக்குமிடையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள பேச்சில் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பது தொடர்பில் இரு தரப்புகளும் இணங்கி இருந்தன.
பகிரப்பட வேண்டிய அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வரைவில் தெரிவிக்கப்பட்டிருந்த 51 அதிகாரங்களில் 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலானவை என்று அரசு தெரிவித்திருந்தது. எனினும் அவை குறித்துப் பேசித் தீர்க்கலாம் என்றும் அது தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அரசு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க எடுக்கும் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமைச்சர்மார் சிலர் தீர்மானித்துள்ளனர்.
அந்த எதிர்ப்பு அரசினால் பொருட்படுத்தப்படாத பட்சத்தில் அமைச்சர் பதவிகளையும் தூக்கி எறியவும் தாம் தயாராக இருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவேண்டுமென்று சர்வதேச அழுத்தம் அரசுக்கு வந்துவிட்டது.
அரசு இதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் இலங்கையில் ஆட்சி ஸ்திரமற்றுப் போய்விடும். இந்த நிலைமையைப் பயன்படுத்தி சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த சர்வதேச நாடுகள் முயல்கின்றன.
எனவே, எமது நாட்டையும் எமது தலைவர்களையும் காப்பாற்றுவது எமது பொறுப்பு. 13வது திருத்தத்துக்கு அப்பால் ஒரு திருத்தத்தை வரவே விடமாட்டோம்'' என்று கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இது குறித்து நேரடிப் பேச்சு நடத்தவும் இந்த அமைச்சர்மார் தயாராகியிருக்கின்றனர்.
ஜப்பான் கடலில் சிறுமி தூக்கி எறிந்த பாட்டில்: ஹவாய் தீவுப்பகுதியில் கிடைத்த அதிசயம்.
ஜப்பானின் தெற்கு கடற்கரையில் ஒரு சிறுமியால் தூக்கி வீசப்பட்ட ஒரு பாட்டில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவின் ஹவாய் தீவு கடற்கரையில் கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜப்பானின் தென்கோடியில் உள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா என்ற நகரின் கடற்கரையில் சாகி அரிகவா என்ற சிறுமி ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலை கடலில் வீசி எறிந்துள்ளார்.
கடந்த வாரம் ஹவாய் தீவில் உள்ள குவாய் பகுதியில் கடற்கரையை பணியாளர்கள் சுத்தப்படுத்திய போது ஒரு பாட்டில் கிடைத்தது. அந்த பாட்டிலுக்குள் சில பொருட்கள் இருந்ததை அடுத்து அதை அதிகாரிகளிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அந்த பாட்டிலை அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கொக்கு, அரிகவா சிறுமி படித்த துவக்கப் பள்ளியின் புகைப்படமும், அதன் பின்புறம் அரிகவாவின் கையெழுத்தும் இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகவல் அரிகவாவுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது 17 வயதாகும் அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில்,"இதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பாட்டில் திரும்பக் கிடைத்ததன் மூலம் என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகின்றன" என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
கிரீஸ் திவாலாகும் நிலை: பிரதமர் அவசரமாக நாடு திரும்பினார்.
ஐ.நா பொதுச்சபை மற்றும் சர்வதேச நிதியமைப்பின்(ஐ.எம்.எப்) கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ சென்றார். 
இந்நிலையில் முக்கிய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் நாடு திரும்பினார். கிரீஸ் திவாலாகும் நிலையில் உள்ளதால் தான் பிரதமர் நாடு திரும்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
யூரோ  நாணயம் பயன்படுத்தும் நாடுகளில் கிரீஸ் தற்போது கடன் சுமையில் மூழ்கியுள்ளது. இதுவரை ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பில் இருந்து இருமுறை தவணைகள் பெற்ற போதும் அதனால் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் நடந்த யூரோ நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கிரீசுக்கு மூன்றாவது தவணை அளிப்பது குறித்து அக்டோபர் முதல் வாரத்தில் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 15ம் திகதி வரை தான் தன்னிடம் பணம் இருப்பதாகவும், அதற்கடுத்து அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லாமல் போய்விடும் எனவும் சமீபத்தில் கிரீஸ் தெரிவித்தது.
இதற்கிடையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க உள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் மற்றும் ஐ.எம்.எப் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ நேற்று புறப்பட்டார்.
லண்டனை அடைந்த அவர் அங்கிருந்தபடி பிரான்ஸ் நிதியமைச்சருடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தார். இதையடுத்து அவர் நாட்டின் நிதி நெருக்கடி குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பயணத்தை ரத்து செய்து நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார்.
அவரது அறிவிப்பு வெளியானதை அடுத்து கிரீஸ் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டதால் தான் பிரதமர் நாடு திரும்புகிறார் எனத் தகவல்கள் வெளியாயின. இதை பிரான்ஸ் நிதியமைச்சர் மறுத்துள்ளார்.
சாகச நிகழ்ச்சியின் போது விமானம் விழுந்து விபத்து.
அமெரிக்காவில் சாகச நிகழ்ச்சியின் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆனது.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ஆண்டுதோறும் விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆண்டு சாதனை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் சாகசங்களை காண ஆர்வமாக கூடியிருந்தனர். இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்களில் வீரர்கள் சாகசங்கள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறிய விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் 80 வயதான பைலட் ஜிம்மி லீவர்ட் உள்பட 3 பேர் இறந்தனர்.
ஐம்பதுக்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பார்வையாளர்கள் கூட்டத்துக்கு அருகில் விமானம் வெடித்து சிதறியதால் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க ரெனோ விமான ரேஸ் அசோசியேஷன் தலைவர் மைக் ஹூடன் மறுத்துவிட்டார்.
பணக்காரர்களுக்கு அதிக வரி: ஒபாமா அறிவிப்பு.
அமெரிக்காவில் புதிய குறைந்தபட்ச வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.
இதன்படி 10 லட்சம்(ஒரு மில்லியன்) டொலருக்கும் அதிகமான வருமானம் கொண்டோர் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்த வேண்டி வரும். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க வரியின் சதவீதம் கூடிக் கொண்டே போகும்.
இதன் மூலம் அமெரிக்காவின் நீண்ட கால பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க அவர் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த திட்டத்தால் சேமிப்புக்கான முக்கியத்துவம் அமெரிக்காவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் நடுத்தர வருமானம் கொண்டோர் பணக்காரர்களை விட அதிக வரி செலுத்த வேண்டியுள்ளதாக நீண்ட காலமாக உள்ள குற்றச்சாட்டுக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
இந்த புதிய திட்டத்துக்கு "பபே ரூல்" என பெயரிட்டுள்ளார் ஒபாமா. பணக்காரர்கள் மிகக் குறைந்த வரியை செலுத்துவதாக குற்றம்சாட்டியவர்களில் முக்கியமானவர் பிரபல முதலீட்டாளரான வாரன் பபே. இதைக் குறிப்பிட்டே தனது திட்டத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டியுள்ளார் அதிபர் ஒபாமா.
ஆனால் ஒபாமாவின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது. காரணம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பணக்காரர்களுக்கு அதிக வரிச்சுமை தரக்கூடாது என்று கூறிவரும் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறையைத் தவிர்க்க இது முக்கிய வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
ஒபாமாவின் இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் மெடிகேர், மெடிஎய்ட் போன்ற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எந்த அளவு வருமானத்துக்கு எவ்வளவு வரி என்ற விவரத்தை இன்னும் ஒபாமா விரிவாகக் கூறவில்லை. இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் தோராயமாக 1.5 ட்ரில்லியன் கூடுதல் வருமானம் அமெரிக்க அரசுக்கு கிடைக்கும் என்றும், இது அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் என்றும் தெரிகிறது.
கிரீஸ் வங்கி முன்பாக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபரால் பரபரப்பு.
வட கிரீஸில் அரசாங்கம், வங்கிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 55 வயது நபரொருவர் தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
தெஸ்ஸாலோனிகி எனும் இடத்திலுள்ள வங்கியொன்றின் கிளைக்கு வெளியே தீக்குளித்த மேற்படி நபரின் உடலில் பரவிய தீயை அங்கிருந்த பொலிசார் துரிதமாக செயற்பட்டு அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மார்புப் பகுதியில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அந்த நபர் காணப்படுகிறார்.
நிதிப் பிரச்சினை காரணமாக மேற்படி நபர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சி நிலையங்களை மூடும் உலக வங்கிகள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 2008ல் ஏற்பட்டது போல மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகளவில் ஏற்படலாம் என பல பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதையடுத்து ஜப்பானின் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான நொமுரா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான(எம்.இ.என்.ஏ) தன் ஆராய்ச்சிப் பணிகளை முடக்கியுள்ளது.
இதனால் துபாய் மற்றும் லண்டனில் நொமுரா சார்பில் பணியாற்றிய ஐந்து பேர் வேலையிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூசே ஏ.ஜி நிதி நிறுவனம், லண்டனில் உள்ள தன் எம்.இ.என்.ஏ ஆராய்ச்சிக் கிளையை மூடிவிட்டது.
ஜேர்மனியின் டாயிட்ச் வங்கியும் எம்.இ.என்.ஏ ஆராய்ச்சிப் பிரிவை மூடிவிட்டது.
சீனாவில் ஆட்டோ மொபைல் வாகனங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
சீனாவில் ஆட்டோ மொபைல் வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடியை தொட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவில் சாலைகளின் தரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மோட்டாரால் இயங்கும் வாகனங்கள் நான்கு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கார், வேன் போன்றவை ஆட்டோ மொபைல் வாகனங்கள் என்றும், இதர வாகனங்கள் டிராக்டர்கள், ட்ரக்குகள், மோட்டார் சைக்கிள்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
எல்லாவற்றையும் சேர்த்து நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் இயங்குகின்றன. இந்நிலையில் ஆட்டோ மொபைல் வாகனங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 90 லட்சம் என அதிகரித்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்றரை கோடி பேர் புதிதாக ஆட்டோ மொபைல் வாகனங்கள் வாங்கியுள்ளனர். இதன்மூலம் தனியார் கார் உரிமையாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோ மொபைல் வாகனங்களின் எண்ணிக்கை சமீபத்தில் பத்து கோடியை எட்டியுள்ளது. ஏற்கனவே நாட்டின் முக்கிய நகரங்களில் டிராபிக் நெரிசல் அதிமுக்கிய பிரச்னையாக உள்ளது.
இதன் காரணமாக புதிதாக மோட்டார் வாகனங்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சம்பந்தப்பட்ட மாகாண அரசுகள் முடிவு செய்துள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானம் மாயம்.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா அருகிலுள்ள கெலொவ்னா என்ற நகரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று மாயமானது.
இதனால் விமான நிலைய அதிகாரிகளிடையே ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிகழ்ச்சி பற்றி விக்டோரியா விமான மீட்பு குழுவின் தலைவர் டயன் லாரோஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மாயமான ஹெலிகாப்டர் லாங்லி என்ற பகுதியைக் கடந்ததும் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த ஹெலிகாப்டர் பைலட்டிடம் இருந்து எவ்வித சிக்னல்களும் வரவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஹெலிகாப்டரை 61 வயதுடைய ஒரு திறமையான, அனுபவமுள்ள பைலட் தான் ஓட்டியுள்ளார் என்றும், ஹெலிகாப்டரில் அவரைத் தவிர வேறு எந்த பயணியும் இல்லை என்றும் உறுதிபட கூறினார். ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவ அமெரிக்க சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திடீரென டெங்கு பரவ அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
லாகூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஹூசைமா புகாரி, இக்ராமுல் ஹக் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரை செய்தித் தாள்களில் நேற்று வெளியானது.
அதில்,"கடந்த 1980ம் ஆண்டு தான் பாகிஸ்தானில் டெங்கு கிருமிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ பரப்பியது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக உயிர்க் கொல்லி கிருமிகளை பரப்பியது அமெரிக்கா. அப்படியே பாகிஸ்தானுக்கும் அதை அனுப்பி வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பஞ்சாப் மாகாண சட்டசபை கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் சிலர்,"டெங்கு பரவ கடவுளின் கோபம்தான் காரணம். எனவே கடவுளிடம் மக்கள் மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அது ஒன்றுதான் டெங்கு பிரச்னைக்கு தீர்வாகும்" என்று கூறியுள்ளனர்.
டெங்கு பரவுவதை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தீவிர பணியாற்ற வேண்டும். அதனால் சட்டசபை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதை ஏற்று திகதி குறிப்பிடாமல் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார். ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு பயந்து உறுப்பினர்கள் பலர் லாகூருக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.
இரண்டு பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு லண்டனில் கண்டனம்.
லண்டனில் நடைபெறும் உலக ஆயுத நிறுவனங்களின் கண்காட்சியில் பாகிஸ்தானின் 2 நிறுவனங்களை அமைப்பாளர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
கண்காட்சி அரங்கை மூடிவிட்டு உங்கள் நாட்டுக்கே போங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டனர். பாகிஸ்தான் ஆர்ட்னன்ஸ் பேக்டரி, பாகிஸ்தான் டிபன்ஸ் எக்ஸ்போர்ட் புரோமோஷன் ஆர்கனைசேஷன் என்ற அமைப்புகளின் சார்பில் அந்த 2 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவை இரண்டிலுமே "கொத்து வெடிகுண்டுகள் இங்கே கிடைக்கும்" என்ற அறிவிப்பும், தங்களுடைய கொத்து வெடிகுண்டுகளின் திறன் குறித்த தகவல் ஏடுகளும் இருந்தன. இதை கிரீன் பார்ட்டி என்று அழைக்கப்படும் பசுமைக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லூகாஸ் பார்த்துவிட்டார்.
உலகிலேயே கொத்து வெடிகுண்டுகள் விளைவிக்கும் சேதம் தான் அதிகம் என்று அவற்றைத் தடை செய்ய உலகின் பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இன்னமும் கையெழுத்திடாமல் இருக்கும் பாகிஸ்தான் அதையே விற்க முன்வந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கண்காட்சி அமைப்பாளர்களிடம் புகார் செய்தார்.
உங்கள் கண்காட்சியில் யார் என்ன விற்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் எதற்கு கண்காட்சி நடத்துகிறீர்கள்? என்று காட்டமாகக் கேட்டார்.
உடனே கண்காட்சி அமைப்பாளர்கள் பாகிஸ்தானின் அந்த அரங்குகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த தகவல் குறிப்புகளைக் கைப்பற்றினர்.
உங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, எந்த ரகம் வேண்டும், ஒரே சமயத்தில் எத்தனை பேரைக் கொல்ல வேண்டும்? என்று அரங்கில் இருந்த பாகிஸ்தானியர்கள் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைப்பாளர்கள் அந்தப் புகார் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் அரங்குகளை மூடிவிட்டுப்போகுமாறு அவர்களுக்குக் கட்டளை இட்டனர்.
இதெல்லாம் இந்தியாவின் சதி என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் வழக்கம்போல இந்தியாவை வசைபாடுகின்றன. கொத்து வெடிகுண்டுகளைத் தயாரிக்கவோ, கையிருப்பில் வைத்திருக்கவோ, விற்கவோ, விநியோகிக்கவோ கூடாது என்று ஓஸ்லோவில் 2007ல் நடந்த சர்வதேச மாநாட்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அதில் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டுவிட்டன.
இந்த நிலையில் பீரங்கியில் போட்டு வெடிக்கும் கொத்து வெடிகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்து கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரக்ஷான் பொலிஸ் தலைமை அலுவலக வளாகத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
தரக்ஷான் நகர சி.ஐ.டி க்ரைம்பிராஞ்ச் எஸ்.பி.அஸ்லம்மெகாபுஸ் கூறுகையில், இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்தது மனிதவெடிகுண்டா? அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா ? என்பது குறித்தும்,. உயர் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சி நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறினார்.
டயானாவின் வழியை பின்பற்றும் கேத் மிடில்டன்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் தனது மாமியாரான மறைந்த இளவரசி டயானாவின் வழியைப் பின்பற்றி பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளைகளை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அடுத்தடுத்த மாதங்களில் சில குறிப்பிட்ட அறக்கட்டளைகளுக்கு நேரில் செல்ல உள்ளார். பிரிட்டன் இளவரசி மறைந்த டயானா அனாதை இல்லங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சேவைகளில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளைகளுக்கு அடிக்கடி செல்வார்.
சில நேரங்களில் தமது மகன்களையும் அழைத்துச் செல்வார். அவரது இந்த எளிமையான போக்குதான் மக்களிடையே செல்வாக்கையும், அரண்மனை வட்டாரத்தில் வெறுப்பையும் சம்பாதித்துத் தந்தது.
இப்போது டயானாவின் மகன் வில்லியமை மணந்துள்ள கேத் மிடில்டனும் தன் மாமியார் வழியைப் பின்பற்றி நடக்கத் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து புனித ஜேம்ஸ் அரண்மனை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"அடுத்த சில மாதங்களில் இளவரசி கேத் மிடில்டன் நாட்டில் இயங்கி வரும் அறக்கட்டளைகள் குறித்து விவரங்கள் சேகரிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அறக்கட்டளைகளுக்கு நேரில் சென்று அங்கு பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேத் மிடில்டனின் கணவர் வில்லியம் இவ்விவகாரத்தில் தன் மனைவிக்கு ஆதரவாக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கேத் சுயேச்சையான முறையில் இதுகுறித்த தகவல்களைத் திரட்டத் துவங்கியுள்ளார்.
கடாபி ஆதரவாளர்கள் தாக்குதல்: போராட்டக்காரர்கள் பின்னடைவு.
லிபியாவின் இரு நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் கடும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருவதால் எதிர்ப்பாளர்களின் தாக்குதல் பின்னடைந்துள்ளது.
இந்நிலையில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் லிபியாவின் இடைக்கால அரசு முனைந்துள்ளது. லிபியாவின் பானி வாலித் மற்றும் சிர்ட் நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்நகரங்களை கைப்பற்ற எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் முயன்றனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையில் சண்டை மூண்டது.
பானி வாலித் நகரின் வடபகுதியில் எதிர்ப்பின்றி நுழைந்த எதிர்ப்பாளர்களை கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கடுமையாகத் தாக்கினர்.
அதேபோல் சிர்ட் நகரிலும் எதிர்ப்பாளர்களின் முன்னேற்றம் சிறிதளவே இருந்தது. சிர்ட் நகரின் விமான நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றிய போதும் அங்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையில் பெங்காசியில் நேற்று கூடிய இடைக்கால கவுன்சில் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசித்தது. நேற்றே அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
துபாய் விமான நிலையத்தில் 14 விநாடிகளில் பயணிகளைச் சோதிக்கும் மின்னணுக் கதவுகள்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அதி நவீன மின்னணு கருவிகள் பொறுத்தப்பட்ட வாயில்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த கருவிகள் மூலம் 14 விநாடிகளில் பயணிகள் குடியேற்ற உரிமை (இமிகிரேஷன்) உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு வெளியேற முடியும். இத்தகைய வசதி கொண்ட வாயில் கதவுகள் அடுத்த ஆண்டுக்குள் நிறுவப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பயணிகள் வரத்து 9 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பயணிகளை விரைவாக சோதனையிட இந்த கருவி மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த மின்னணு வாயில்களில் பயணியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் கருவி இருக்கும். இது பயணி அளிக்கும் பாஸ்போர்ட் உண்மையானதுதானா அல்லது போலியா என்பதை ஒரு சில விநாடிகளில் சோதித்து விடும். அடுத்து இங்குள்ள கேமரா, பயணியின் உருவப்படத்துடன் பாஸ்போர்ட்டில் படம் ஒத்துப் போகிறதா என்பதை சரிபார்க்கும். மேலும் அனுமதி மறுப்போர் பட்டியலில் (தீவிரவாதி, பயங்கரவாதி உள்ளிட்டவர்கள்) உள்ளவர்களது படத்துடன் ஒப்பீடு செய்யும் ஐரிஸ் ஸ்கேன் கருவியும் இருப்பதால் அது சம்பந்தப்பட்ட நபரை அனுமதிக்கலாமா என்பதையும் தெரிவிக்கும். இத்தகைய கருவி 14 விநாடிகளில் ஒருவரை சோதித்து அனுப்பிவிடும் என்று விமான நிலைய குடியேற்ற பிரிவின் இயக்குநர் ஜெனரல் காலித் நசீர் அல் ரஸþகி தெரிவித்தார்.
இத்தகைய மின்னணு வாயில்கள் அடுத்த ஆண்டுக்குள் நிறுவப்படும். ஏ 380 ஏர்பஸ் விமானத்துக்கென தனி டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிநவீன கருவிகள் கொண்ட விரிவாக்க பிரிவாக இந்த டெர்மினல் உருவாகி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வரத்தை சமாளிக்கும் வகையில் இந்த டெர்மினலில் பல அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. குடியேற்ற உரிமை துறையானது தொழிலாளர் துறை, சுகாதாரம், காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விசா புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதாக ரஸகி தெரிவித்தார். அமெர் சேவை என்ற பெயரில் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையங்களைப் போல முழுவதும் மின்னணு சாதனங்களை உள்ளடக்கிய விசா வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் விசா கோரி வருவோர் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தங்களைப் பற்றிய தகவல்களை இத்தகைய அமெர் சேவை மையங்களில் உள்ள மின்னணு கருவிகளில் பதிவு செய்தாலே போதும்; அவை சரியானதாக இருந்தால் உடனடியாக விசா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF