Tuesday, September 6, 2011

இன்றைய செய்திகள்.

குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இலங்கை அதி தீவிர முயற்சி : மாலைதீவின் கோரிக்கை மேற்குலகால் நிராகரிப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை கொழும்பு நாடி இருந்தது.
எனினும் இது தொடர்பில் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மாலைதீவு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நெருக்கமானவர். எனவேதான் மேற்கு நாடுகளுடன் பேசி இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கு அவரது உதவியைக் கொழும்பு நாடி இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மாலைதீவு ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலுள்ள முக்கியமானவர்களுடனும் பிரிட்டனின் வெளியுறவுத்துறை உயர் மட்டத்தினருடனும் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான கடும்போக்கை இந்த நாடுகள் மேற்கொள்வது சரியல்ல என்று கேட்டுக்கொண்டார்.
மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மாலைதீவு ஜனாதிபதி இந்த இரு நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்ற வாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார். ஆனால் மாலைதீவு ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை மேற்படி நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை சரியான பதிலை வழங்கவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும், இலங்கை தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சரியான வகையில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் எடுத்துக்கூறியிருக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கைக்கு இன்னும் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கவேண்டுமென மாலைதீவு ஜனாதிபதி இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால், மேற்கு நாடுகள் இந்தக் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இதற்கிடையில் மாலைதீவு எடுத்துவரும் இந்த முயற்சிகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக மாலைதீவின் துணை ஜனாதிபதி மொஹமட் வாஹிட் ஹுசைன் கடந்த வாரம் கொழும்பு வந்து திரும்பி இருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்! சற்றலைட் படங்களை மகிந்த பார்த்தார்.

இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்த பின்னரும், பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களைக் காட்டும் சற்றலைட் படங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசிடம் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்திருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றியை அறிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி ஜேம்ஸ் ஆர். முவர், அந்தப் படங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வேளையில் வெளியுறவுச் செயலராக இருந்த பாலித்த கொஹொனவுக்கும் காண்பித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ராஜபக்ஷ, 2009 மே 5ம் திகதி உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து தனக்கு ஜனாதிபதியையும் பாலித்த கொஹொனவையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் வெள்ளை மாளிகைக்கு ஒரு பிரதியுடன் வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய இராஜங்க தகவல் பரிமாற்றமொன்றில் மூவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 27ம் திகதியன்று கடுமையான பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக மகிந்த அறிவித்தது முதல் அரச படைகள் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லையென்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பதாகவும் அந்த இராஜங்க தகவல் பரிமாற்றம் கூறுகின்றது.
போர் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட சாட்டலைட் படங்களில் ஒன்றுமே 2ம் திகதி மருத்துவமனையொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப்புலிகள் கூறிய இடத்தில் மருத்துவமனையெதுவும் இருக்கவில்லையென்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியதாகவும் விக்கிலீக்ஸ் ரகசிய கசிவு சுட்டிக்காட்டுகின்றது.
சிவில் மக்களுக்கான பாதுகாப்பு வலயத்தில் ஆட்லெறி தாக்குதல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் விதத்தில் ஏப்ரல் 26 மற்றும் 28ம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செட்டலைட் படங்களை வெளியுறவு அமைச்சராக இருந்த ரோகித்த ​போகொல்லாகமவிடமும் அமெரிக்க தூதுரக பொறுப்பதிகாரி காண்பித்ததாகவும் கூறியுள்ளார்.
ஜனவரி 2009 இலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லபட்டுள்ளதாக கூறும் உத்தியோகபூர்வமற்ற ஐநா புள்ளிவிபரங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, எங்கிருந்து யாரால் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் தகவல்களை செட்டலைட் படங்கள் காண்பிக்காது என்று ரோகித்த போகொல்லாகம கூறியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் அவதானித்தன
யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றி ஜனாதிபதி அறிந்திருக்க மாட்டார் என்ற தனது ஊகத்தை கூறியுள்ள மூவர், அந்த சந்திப்பின் பின்னர், இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஜனாதிபதி தள்ளப்படுவார் என்றும் தகவல் பரிமாற்றத்தில் குறிப்பிட்டு்ள்ளளார்.
இந்த சந்திப்புக்கு முன்னர் பகலுணவு போசனத்தின்போது, இலங்கையின் யுத்தகளத்தில் என்ன நிலமை என்று இந்தியாவும் செட்டலைட் மூலம் அவதானித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் தாங்களும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பது இலங்கை அரசுக்குப் புரிந்திருக்கும் என்றும் அமெரிக்க தூதரக அதிகாரி வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கும் அனுப்பிய இராஜங்க தகவல் பரிமாற்றத்தில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கணக்கு அறிக்கைளில் பாரிய குழப்ப நிலைமை.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கணக்கு அறிக்கைகளில் பாரிய குழப்ப நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீண் செலவுகள், பிழையான சொத்துப் பதிவுகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நிறுவனத்திற்கு சொந்தமான 67 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் இருப்பதாக கணக்கு விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான காணி உறுதி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டதாக செலவு விபரங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான விபரங்கள் இணைக்கப்படவில்லை.
வரி தொடர்பிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டு அமைச்சர் டியூ குணசேகர தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் இந்த மோசடிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காலி கிரிக்கட் மைதானத்திற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம்.

இலங்கையின் முன்னணி டெஸ்ட் மைதானங்களில் ஒன்றான காலி கிரிக்கட் மைதானத்திற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலி கிரிக்கட் மைதானத்தின் ஆடுகளம் உரிய தரத்தில் அமைக்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கட் போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் போர்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.
14 நாட்களுக்குள் மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் இலங்கைக் கிரிக்கட் நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆடுகளம் தொடர்பான அறிக்கைகளை சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல பார்வையிட உள்ளார்.
இவ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி 125 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தி வெற்றியீட்டியது.
டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்றை நடாத்துவதற்கு பொருத்தமான முறையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் : ஜே.வி.பி. கோரிக்கை.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மாற்றுக் கொள்கையுடைய பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு ஆட்சி மாற்றம் அவசியமானது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிற்போக்கான செல்வந்த வர்க்கத்தினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
தற்போதைய ஆட்சியாளர்கள் போலியான தேசிய பொருளாதாரமொன்றை வெளிக்காட்டுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளையே தற்போதைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர்.
சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான நாட்டுக்கு பொருத்தமுடைய பொருளாதார முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலியான அபிவிருத்தி என்னும் கரட்டை காட்டி காட்டி மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றுகின்றனர்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சாரங்கள் வெறும் மாயையே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி அவதியுறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் த.தே.கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது : சிறிபால டி சில்வா.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சிரேஸ்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் இடைநடுவில் நிபந்தனைகளை விதிப்பது எந்தளவிற்கு நியாயமானது?
தீர்வுத் திட்டத்தை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தின் சார்பிலான அர்ப்பணிப்புக்களில் மாற்றமில்லை.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவது எந்தளவிற்கு பொருத்தமானது என்பது ஆராயப்பட வேண்டியது அவசியமானது.
இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூரணமான அரசாட்சியொன்று உலகில் எந்தவொரு நாட்டிலும் கிடையாது, எல்லா நாட்டு ஆட்சிகளிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
100 வீதம் சிறந்த ஆட்சி எந்த நாட்டிலும் கிடையாது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக சில சக்திகள் தொடர்ச்சியாக சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவாக இயங்கி வருகின்றது.
ஈழ இராச்சியமொன்று இலங்கையில் கட்டியெழுப்பட வேண்டுமென வலியுறுத்தும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நபர்களுக்கு எதிராக இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கடந்த தடவைப் போன்று இந்த தடவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுக்க தயார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 46 அரச சார்பற்ற நிறுவனங்களும், 262 நபர்களும் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் 95 வீதமானவை மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவை.
இந்த நிறுவனங்களுக்காக குரல் கொடுக்கும் உள்நாட்டு முகவர்கள் பற்றியும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று 200 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசாங்கம் தேர்தலில் வெற்றியீட்டினால் குடிசை மக்கள் நடுத்தெருவில் நிற்க நேரிடும்!- சரத் பொன்சேகா.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வெற்றியீட்டினால் மக்களுக்கு அது பாதகமாக அமையும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு குடிசைகளில் வாழும் அப்பாவி சேரி மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தத் தேர்தலில் வெற்றியீட்டும் வரையில் அரசாங்கம் பொறுமை காத்து வருகின்றது.
தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் குடிசை மக்ளை விரட்டி விட்டு அந்தக் காணிகளும் அபகரித்துக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகை கிடைக்கும் வாய்ப்பு.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக நடவடிக்கை திணைக்களத்தின் சர்வதேச வர்த்தக கொள்கை தொடர்பிலான பொருளாதார நிபுணர் மைக்கல் ஓ டொனவன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தமது இலங்கை விஜயத்தின் போது தொழில்துறை அதிகாரிகள், முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த அமெரிக்க பிரதிநிதி, வரிச்சலுகை கிடைப்பதற்காக சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது என குறிப்பிட்டதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் பணியாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அன்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் காரியாலயமும் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மீளவும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஊடாக அது இந்த வருடத்தில் மீளமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்ச தாக்கு.

தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு, மேற்கத்தைய நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாக்குதல் தொடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அடுத்த வாரம் ராஜபக்ச கலந்து கொள்கிறார். இதற்காக நியூயோர்க் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜபக்ச அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
மனித உரிமைகளை மதிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்று எங்கள் மீது குற்றம் சொல்லும் நாடுகள்தான், எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தன.
இலங்கையில் தீவிரவாத செயலுக்கான கொள்கை வகுத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் அவர்கள்தான். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக சர்வதேச நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. சில நாடுகள் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி உதவி அளித்து வருகின்றன.
இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு அவை அடைக்கலம் கொடுத்தன. அவர்களுக்கு இராஜ மரியாதை கொடுத்து வருகின்றன.  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டி இவ்வாறு பேசினார் ராஜபக்ச.
எங்களிடம் பெரிய அளவில் பலம் இல்லாத நிலையிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்கி, தெற்கு ஆசியாவை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்தோம். ஆனால், வல்லரசு நாடான அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான தனது போரை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ள மற்ற நாடுகளை நாங்கள் பின்பிற்றவில்லை. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் ஏராளமாக உள்ளன. இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போரை நடத்தியும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை கிண்டலடித்து இவ்வாறு கூறியுள்ளார்.
ரொபட் ஓ பிளேக் வரும் 14ம் திகதி இலங்கை வருகிறார்.

அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் செப்டம்பர் 14 ம் திகதி தமது இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே அவர் கடந்த மாதம் வரவிருந்த போதும், அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படுத்திய ஐரின் சூறாவளியால் விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக இலங்கை விஜயம் பிற்போடப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் 14 ம் திகதி மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு ரொபட் ஓ பிளேக் இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, இலங்கை ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், அந்த சந்திப்பு இடம்பெறுமா என உறுதிப்படுத்தப்படவில்லை.
இருந்தபோதும், ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இதேவேளை அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் வரும் 12ம் திகதி தமது இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என வேறொரு தகவல் வெளிவந்துள்ளது.
அத்துடன் 12ம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரொபர்ட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் வரும் 14ம் திகதி இலங்கையிலிருந்து நேரடியாக இந்தியா செல்லுவார் எனவும், அங்கு அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அத் தகவல் தெரிவித்துள்ளது.
அரிசியை ஏற்றுமதி செய்து ஆயுதங்களை இறக்குமதி செய்த மியான்மர்: விக்கிலீக்ஸ் தகவல்.
மியான்மர் அரசு வட கொரியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்து விட்டு அதற்கு ஈடாக ஆயுதங்கள் பெற்றதாக விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிலீக்ஸ் இணையதளம் சமீபத்தில் தன்வசம் இருந்த இரண்டரை லட்சம் அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.
அவற்றில் கடந்த 2009 ஜூலையில் மியான்மரின் யாங்கூன் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்ததாவது: மியான்மர் ராணுவ அரசு தனக்குச் சொந்தமான "மியான்மர் எகனாமிக் ஹோல்டிங்ஸ்" நிறுவனம் மூலம் 20 ஆயிரம் டன் அரிசியை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்தது.
அரிசி தவிர விவசாயப் பொருட்களையும் வடகொரியாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு ஈடாக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை மியான்மர் இறக்குமதி செய்து கொள்கிறது.
கடந்தாண்டில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின்படி மியான்மர் பல ஆண்டுகளாக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா சந்தேகம் கொண்டிருந்தது.
மேலும் ஐ.நா வெளியிட்ட அறிக்கையின்படி ஈரான், சிரியா மற்றும் மியான்மருக்கு வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை வழங்க தடை விதிக்கப்பட்டது. வடகொரியா உடனான அணு ஆயுதப் பரிமாற்றம் பற்றிய தகவலை மியான்மர் ஏற்கனவே மறுத்து விட்டது.
இனப்படுகொலை குற்றவாளிகள் மீது பிரான்சில் விசாரணை தாமதம்: மக்கள் குற்றச்சாட்டு.
ருவாண்டாவில் மனித இனத்திற்கு எதிராக இனப்படுகொலைகள் செய்தவர்களில் 21 பேர் பிரான்சில் வசிக்கிறார்கள்.
அவர்கள் மீதான வழக்கு பாரிசில் மிக மந்தமாக நடக்கிறது என ருவாண்டா மக்கள் சார்பில் போராடும் சி.பி.சி.ஆர் அமைப்பினர் குற்றம் சாட்டினர். கடந்த 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் இனப்படுகொலைகள் நடந்தன.
இந்த படுகொலை வெறியில் ஏராளமான ருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை நிகழ்வு தொடர்பாக ஜீன்-பாப்டிஸ்டே கேட்டே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையை ருவாண்டாவிற்கான சர்வதேச நீதிமன்றம்  அளித்தது.
இந்த இனப்படுகொலையில் தொடர்புடையவர்கள் தற்போது பிரான்சில் வசிக்கிறார்கள். அவர்கள் மீது ருவாண்டா மக்கள் சார்பில் பாரிசில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிரான்சில் வசிக்கும் 21 குற்றச்சாட்டு நபர்கள் மீதான வழக்கு விசாரணை மிக மந்தமாக இருக்கிறது என ருவாண்டா மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ருவாண்டா இனப்படுகொலையில் மானசேவுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் முராம்பி பகுதியில் நீதிபதியாக இருந்த போது துடிஸ் இனப்படுகொலைகளுக்கு உதவியாக இருந்தார் என ருவாண்டா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இனப்படுகொலை 1994ஆம் ஆண்டு நடந்தது. 15 ஆண்டுகள் ஆகியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என ருவாண்டா மக்கள் தெரிவித்தனர்.
சக்தி வாய்ந்த தீவிரவாதிகளின் பிடியில் ஜேர்மனி: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை.
ஜேர்மனியில் சக்தி வாய்ந்த ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர். இவர்களில் 128 பேர் தாக்குதலை நடத்தக்கூடிய திறன் பெற்றவர்களாக உள்ளனர் என உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் தெரிவித்தார்.
இந்த தீவிரவாதிகள் முஸ்லிம் தீவிரவாதிகள் ஆவார்கள். நாட்டில் வசிக்கும் தீவிரவாதிகளில் 20 பேர் தாக்குதல் தொடர்பான தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்கா நியூயோர்க்கில் உலக வர்த்தக மைய கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அதே போன்ற தாக்குதலை ஜேர்மனியிலும் நடத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரைடிரிச் தெரிவித்தார்.
அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத இயக்கம் அதன் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அதன் திறன் குறைந்ததாக கருதப்பட்டது.
இருப்பினும் அந்த தீவிரவாத இயக்கம் பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது. எனவே ஜேர்மனியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீவிரவாத அமைப்புகள் நடவடிக்கையும் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
தனி நபர்கள் தீவரவாத நடவடிக்கையில் ஈடுபடும் போது அவர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் திருமண ஆடையை காண மக்கள் ஆர்வம்.
பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டனின் திருமண ஆடையைக் காண லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சுக்கும், கேட் மிடில்டனுக்கும் கடந்த ஏப்ரல் 29ம் திகதி திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போது கேட் மிடில்டன் அணிந்திருந்த ஆடை பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வில்லியம்ஸ்-மிடில்டன் திருமணக் கோலத்திலுள்ள பொம்மைகளும் லண்டனில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மிடில்டன் அணிந்திருந்த ஆடையை பொதுமக்கள் காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஜூலை 23ம் திகதி முதல் 3.54 லட்சம் பேர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்துள்ளனர். மிடில்டன் அணிந்திருந்த திருமண ஆடையை பொதுமக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
திருமண ஆடையைக் காண்பதற்காக ஏராளமான பேர் அரண்மனைக்கு வந்ததாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று லண்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி எக்ஸ்பிரஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 3ம் திகதி வரை பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஆடையை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். அதன் பின்னர் அரண்மனையைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால் அதற்குள் இன்னும் 5 லட்சம் பேர் திருமண ஆடையைக் கண்டுகளிப்பர் என்று டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலம் அரண்மனைக்கு 80 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
மிடில்டனின் திருமண ஆடையுடன், பிரிட்டிஷ் ராணி அளித்த மற்றொரு ஆடையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரண்மனைக்குள் பொதுமக்கள் செல்ல பெரியவர்களுக்கு 17.50 பவுண்டுகளும், சிறுவர்களுக்கு 10 பவுண்டுகளும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
கனடா பல்கலைகழக தரவரிசைப்பட்டியல்: மெக்கில் பல்கலைகழகம் முதலிடம்.
மெக்கில் பல்கலைக்கழகம் கனடா பள்ளிகளில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில் உலக பல்கலைகழக தரப்பட்டியலில் 17வது இடத்தை பெற்றுள்ளது.
உலக பல்கலைக்கழக தரப்பட்டியல் கடந்த 8 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இந்த தரப்பட்டியலில் மெக்கில் பல்கலைகழகம் முதல் 25 பல்கலைக்கழக பட்டியலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தரப்பட்டியலை விட இந்த ஆண்டு தரப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி உள்ளது. உலக பல்கலைக்கழக பட்டியல் பெருமிதம் அளித்துள்ளது என கனடாவின் முதல் பள்ளி என்ற பெருமை பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் துணை வேந்தர் ஹீத்தர் முன்ரோ-பிளம் தெரிவித்தார்.
டொரண்டோ பல்கலைக்கழகம் 23வது இடத்தை உலக அளவில் பெற்றுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை காட்டிலும் 6 இடங்கள் அந்த பல்கலைக்கழகம் முன்னேறி உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் 7 இடங்கள் பின்னுக்கு வந்து 51வது இடத்தை உலக அளவில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
உலக அளவில் முதல் தர பல்கலைக்கழகம் என்ற பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 2வது இடத்தை ஹார்வர்டு பெற்றுள்ளது.
சாவின் விளிம்பில் ஆப்ரிக்க மக்கள்: ஐ.நா அறிக்கை.
ஆப்ரிக்காவின் சோமாலியாவில் ஏழரை லட்சம் பேர் சாவின் விளம்பில் உள்ளனர். 40 லட்சம் மக்கள் உலக நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சோமாலியாவில் 1991ல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப் பகுதி அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளது.
பிற பகுதிகள் பல்வேறு இனக் குழுக்களிடம் உள்ளன. தலைநகர் மொகாடிஷூவும் வேறு ஒரு சில பகுதிகளும் மட்டுமே அரசு வசம் உள்ளன.
இந்நிலையில் ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து உணவு ஆராய்ச்சிக்கான அமைப்பு(எஸ்.எஸ்.என்.ஏ.யு)வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: சோமாலியாவில் மொத்தம் 40 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
பஞ்சம் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் ஏழரை லட்சம் பேர் இறந்து விடுவர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பலர் பட்டினியால் இறந்து விட்டனர்.
இந்த 40 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் நாட்டின் தென்பகுதியில் தான் உள்ளனர். ஒட்டு மொத்தமாக கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழையே இல்லாததால் சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் பஞ்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ஜிபவுட்டி, எரித்ரியா மற்றும் உகாண்டா நாடுகளிலும் மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கடாபியின் மகன்கள் தப்பி ஓட்டம்: இடைக்கால அரசு அறிவிப்பு.
லிபியாவின் பானி வாலித் நகரில் ஒளிந்திருந்த கடாபியின் இரு மகன்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,"என்னை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்று சித்ரவதை செய்ததற்காக பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என லிபியா ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
திரிபோலியில் இருந்து தென்கிழக்கில் உள்ள பானி வாலித் நகரை மூன்று புறமும் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டனர். அதேநேரம் ரத்தம் சிந்தாமல் அந்நகரைக் கைப்பற்றும் முயற்சியாக அந்நகரில் உள்ள பழங்குடியினத் தலைவர்களுடன் எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தை முறிந்து விட்டதாகவும், அதனால் நகர் மீதான தாக்குதல் துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து லிபியா இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா ஜலீல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பானி வாலித் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்களுக்கு வரும் 10ம் திகதி வரை கெடு விதித்துள்ளோம். அதுவரை பேச்சுவார்த்தை நடக்கும்.
நகரில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நகரில் பதுங்கியிருந்த கடாபியின் மகன்கள் சயீப் அல் இஸ்லாம் மற்றும் முட்டாசிம் கடாபி இருவரும் தப்பியோடி விட்டனர்.
கடாபி எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரது மகன் கமீஸ் கடாபியும், உளவுத் துறைத் தலைவர் சனுஸ்ஸியின் மகன் முகமதுவும் இறந்து விட்டதை முதன்முறையாக லிபிய இடைக்கால அரசு உறுதி செய்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அஜீசியாவில் உளவுத் துறை அலுவலகத்தில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய உளவு ஆவணங்கள் மூலம் கடாபியின் அரசுக்கும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டனின் உளவுத் துறையான எம்.ஐ.6 ஆகியவற்றுக்கிடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது வெளியானது.
லிபியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லிபியா இஸ்லாமிய போராட்டக் குழுவில் இருந்தவரும், தற்போதைய லிபியா ராணுவப் பிரிவில் தளபதியாகப் பணியாற்றுபவருமான அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் 2004ல் பாங்காக்கில் இருந்த தன்னை சி.ஐ.ஏ மற்றும் எம்.ஐ.6 உளவாளிகள் லிபியாவுக்கு கடத்திச் சென்றதாகவும், தன்னை கொடுமையாகச் சித்ரவதைப் படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பெல்ஹாஜ் நேற்று அளித்த பேட்டி ஒன்றில்,"எனக்கும் என் குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் சட்டவிரோதமானவை. இந்தக் கொடுமைகளுக்காக இரு உளவு நிறுவனங்களும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார். பெல்ஹாஜின் இந்தப் பேட்டி குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கருத்து கூற மறுத்து விட்டது.
இந்திய கப்பலை வழி மறிக்கவில்லை: சீனா.
வியட்நாம் துறைமுகம் அருகில் இந்தியக் கப்பல் சீனக் கப்பலால் வழி மறிக்கப்பட்ட செய்தியை சீனா மறுத்துள்ளது.
கடந்த ஜூலை 22ம் திகதி வியட்நாம் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான "ஐராவத்" என்ற கப்பலை சீனப் போர்க் கப்பல் வழி மறித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதை முதலில் இந்தியா மறுத்தது.
இதையடுத்து நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யு வெளியிட்ட அறிக்கையில்,"இந்திய ராணுவத்தால் மறுக்கப்பட்ட இத்தகவல் ஆதாரமற்றது. இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடும் போது சம்பந்தப்பட்ட அரசுகளுடன் ஆலோசித்து உறுதி செய்து பின் வெளியிட வேண்டும்" என்றார்.
கடாபிக்கு ஆயுதங்களை வழங்கிய சீனா.
லிபியாவில் கடாபிக்கு எதிராக கடைசிக் கட்டப் போர் நடந்த போது கடாபி அரசுக்கு சீனா ரகசியமாக ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கடாபிக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் அல்ஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வழியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாத இறுதியில் கடாபியின் அரசுக்கு சீன அரசுக்கு சொந்தமான ஆயுத நிறுவனங்கள் 20 கோடி டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்ப தயாராக இருந்தன.
ஐக்கிய நாடுகள் சபை தடை இருந்த போதும் ஆயுதங்களை கடாபிக்கு தர தயாராக இருந்தது. சீன நாட்டின் ஆயுதங்கள் லிபியாவை வந்தடைந்தா என்பது தெரியவில்லை.
லிபியாவில் தற்போது பொறுப்பேற்று உள்ள தேசிய மாற்ற கவுன்சில் ராணுவ நிர்வாக குழு ஆவணங்களை ஆய்வு செய்த போது புதிய ஆயுதங்கள் லிபியா வந்திருப்பது தெரியவந்தது.
கடாபியின் உயர் ராணுவ பாதுகாப்பு உதவியாளர் ஜூலை மாதம் மத்தியில் சீன தலைநகர் பெய்ஜிங் சென்று இருப்பதும் அங்கு ஆயுத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகாரிகளை சந்தித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்.
அமெரிக்காவில் கடந்த 1920 முதல் 1930ம் ஆண்டு வரை விண்கலங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்தது. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் நடந்தது.
இந்நிலையில் 1937ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஹின்டென்பார்க் நகரில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அதில் 36 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்புவது நிறுத்தப்பட்டது.
தற்போது அவை லாரிகள், ரெயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெருமளவில் அனுப்பப்படுகின்றன. இதனால் கூடுதல் நேரமும் அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது.
மேலும் போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. இதை தடுக்க மீண்டும் விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக மிகவும் பாதுகாப்பான பலூன் போன்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா மையம் வடிவமைத்து வருகிறது.
இதற்கு முன்பு சுருட்டு வடிவலான சரக்கு விண்கலம் இருந்தது. தற்போது இது கட்டை வடிவில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த சரக்கு விண்கலத்தின் முன்மாதிரி வடிவம் அடுத்த ஆண்டில் தனது சோதனை ஓட்ட பயணத்தை தொடங்க உள்ளது. வருகிற 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் இது செயல்பட தொடங்கும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான டன் சரக்குகள் ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பானி நகர முற்றுகை: கடாபி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி.
கர்னல் கடாபியின் ஆட்சி லிபியாவில் இருந்து அகற்றப்பட்ட போதும் பானி வாலித் நகர பழங்குடியின மக்கள் கடாபியின் ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
அவர்களுடன் புரட்சிப்படையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புரட்சிப்படையினருக்கு பதிலடி தரும் படையினராக கடாபியின் பானி பழங்குடியின ஆதரவாளர்கள் உள்ளனர்.
மேலும் தாக்குதலை எதிர்கொள்ள மனிதக்கேடயங்களை உருவாக்கி உள்ளனர் என்றும் புரட்சிப்படையின் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்தார்.
புரட்சிப்படையினர் ஆயுதம் ஏதும் இல்லாமல் நகருக்குள் வரவேண்டும் என கடாபியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து புரட்சி படை ராணுவம் தான் முடிவு செய்ய வேண்டும் என அந்த பேச்ச வார்த்தையாளர் தெரிவித்தார்.
கர்னல் கடாபியின் மகன் காமிஸ் போரின் போது மரணம் அடைந்ததையும் லிபியா தேசிய மாற்ற கவுன்சில் உறுதிபடுத்தி உள்ளது. அவர் பானி வாலித் அருகே புதைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உளவுத்துறை தலைவர் அப்துல்லா செனுசியின் மகன் முகமதுவும் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை தாக்கிய டலாஸ் சூறாவளி: 26 பேர் பலி.
ஜப்பானின் இரு தீவுகளை டலாஸ் சூறாவளி தாக்கியதில் 18 பேர் பலியாகினர். இரு மாகாணங்களில் பெய்த கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஜப்பானின் ஷிகோகு தீவு மற்றும் பிரதான ஹோன்ஷூ தீவு ஆகியவற்றை டலாஸ் சூறாவளி தாக்கியது. இதில் வகாயாமா மற்றும் நரா என்ற இரு மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டதால் ஐந்து லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
வகாயாமா மற்றும் நரா மாகாணங்களில் பல இடங்களில் கன மழை காரணமாக நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். 43 பேர் காணாமல் போயினர்.
நாளை ஜப்பானைக் கடந்து கிழக்கு ஜப்பான் கடலை நோக்கி டலாஸ் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் கன மழையும் அதனால் நிலச்சரிவும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முபாரக்கிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று துவக்கம்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் மீதான முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை கொன்று குவித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைநகர் கெய்ரோவில் துவங்கியது.
இந்த விசாரணையில் உயர் பொலிஸ் அதிகாரி மற்றும் 3 அதிகாரிகள் வாக்குமூலம் அளிக்கிறார்கள். 83 வயது முன்னாள் ஜனாதிபதி முபாரக் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அவரால் எழுந்து வரமுடியாத நிலையில் அவர் மருத்துவமனை படுக்கையுடன் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தார். அந்த காட்சியை பார்த்து எகிப்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அடுத்த விசாரணைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நீதிபதி தடை விதித்தார்.
முபாரக் மீதான வழக்குகளில் வாக்குமூலம் அளிக்கும் போது கமெராக்கள் பயன்படுத்தக்கூடாது. இது வழக்கை பாதிக்கும் என நீதிபதி அறிவித்தார். இதனை வழக்கறிஞர்கள் வரவேற்றனர்.
வாக்குமூலம் அளிக்கும் நபர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் சிலரால் ஆதிக்கம் செலுத்தப்படும் அபாயம் உள்ளது. எனவே தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு நீதிபதி தடை விதித்தார்.
முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது 850 போராட்டக்காரர்களை கொன்று குவித்தது தொடர்பாக பெரும் கொலை குற்றச்சாட்டு உள்ளது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒபாமா நேரில் ஆய்வு.
ஐரீன் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று நியுஜெர்ஸிக்கு வந்தார்.
சூறாவளி காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவுமாறு அரசு நிர்வாகத்தை ஒபாமா கேட்டுக் கொண்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் ஐரீன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ஒபாமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நியுஜெர்ஸி ஆலுநர் கிறிஸ் கிறிஸ்டி உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF