Monday, September 12, 2011
வெளியே வாருங்கள்.
முதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF