Friday, September 23, 2011

எய்ட்ஸ் நோய்க்கு சவால் விடும் வகையில் பூனைகள் உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை.


எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய பூனையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தகைய பூனைகள் எளிதில் கண்டறியும் வகையில் தகதகவென ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எய்ட்ஸ் நோயால் மனிதர்கள் மட்டுமின்றி குரங்குகள், பூனைகளும் பாதிக்கப்படுவது பலருக்கு அதிசயமாக இருக்கும்.
பூனைகளை தாக்கும் கிருமி "பெலைன் இம்யூனோடெபிஷியன்சி வைரஸ்" (எப்.ஐ.வி) எனப்படுகிறது. ஏறக்குறைய இதுவும் எச்.ஐ.வி போன்றது தான். எப்.ஐ.வி தாக்காத வகையில் சிறப்பு நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்ற பூனைகளை உருவாக்கி அசத்தியுள்ளனர் நியூயார்க்கின் மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெனிடிக் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பூனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய குரங்கு வகைகள் சிலவற்றின் உடலில் உள்ள ஜீன் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறது.
இந்த ஜீனை பூனையின் கருமுட்டையில் செலுத்தினர். அதோடு ஒளிரும் ஜெல்லி மீனில் இருந்து அதன் ஒளிரும் தன்மைக்கு காரணமான ஜீனும் இணைக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
இந்த கருமுட்டையில் இருந்து வளர்ந்து பிறந்த பூனை குட்டிகள் எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜீன் மாற்றம் செய்யப்பட்ட பூனையிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை எளிதில் தெரிந்து கொள்வதற்காகவே ஒளிரும் ஜெல்லி மீன் ஜீன் இணைத்து செலுத்தப்பட்டது.
இந்த பூனை மீது புறஊதா(அல்ட்ரா வயலட்) ஒளியை பாய்ச்சினால் ரேடியம் பொருத்தப்பட்ட கடிகாரம், பொம்மைகள் போல பூனை பச்சை நிறத்தில் ஜொலிக்கும். இப்படி ஒளிரும் பூனையிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை மிக எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
குரங்கின் அந்த பிரத்யேக புரோட்டீன் பொருளை பயன்படுத்தி மனிதர்களிடமும் மரபணு மாற்றம் மூலமாக எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF