Thursday, September 22, 2011

இன்றைய செய்திகள்.

வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
வெளிநாட்டுப் பணத்தை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இன்று காலை 7.20 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 90 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் (35 வயது)  இந்தியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனியில் போதைப் பொருள் விற்பனை செய்யும் அமைச்சர் மத பேதத்தை தூண்டுகின்றார்!– சரத் பொன்சேகா.
களினியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அமைச்சர் மத போதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்யும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.களனியைச் சேர்ந்த அமைச்சர் மக்களின் கை கால்களை உடைப்பதாக எச்சரிக்கின்றார்.
இவ்வாறான நபர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்தால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடங்களை நாம் கற்பிப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
இறுதிப் போரில் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கம் எங்கே?- ரவி கருணாநாயக்க கேள்வி.
இறுதிக்கட்ட போரின்போது, அரச படைகளினால் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கத்திற்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதை ஒடுக்கும் சமவாய திருத்தச் சட்டப் பிரேரணை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரண்டு கொள்கலன் தங்கம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்றும் இது தொடர்பில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பட்டுள்ளார்.
அரசாங்கம் கோழி குஞ்சுகளையும், சேலைகளையும் வழங்கி வாக்குகளைக் கொள்ளையடிக்க முயற்சி : திஸ்ஸ அத்தநாயக்க.
கோழி குஞ்சுகளையும், சேலைகளையும் வழங்கி அரசாங்கம் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதற்கு மேலதிமாக இவ்வாறு வாக்காளர்களுக்கு வித்தியாசமான லஞ்சம் வழங்கப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இலவச உணவு, இலவச பொருள் மற்றும் ஏனைய அரச சொத்து துஸ்பிரயோக நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.அரசாங்கம் சகல தேர்தல் சட்டங்களையும் மீறிச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் தொடர்பில் அரசாங்க உயரதிகாரிகள் மீது ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆப்கன் முன்னாள் ஜனாதிபதி படுகொலை: உலக நாடுகள் கடும் கண்டனம்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் ரப்பானி நேற்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உடல் சிதறி பலியானார்.
இச்சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கன் அதிபர் கர்சாயை சந்தித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.
இதுபற்றி ஒபாமா கூறியதாவது: ரப்பானியின் படுகொலை கண்டனத்துக்கு உரியது. அவரது இறப்பு ஆப்கனுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நாட்டை சீரமைக்க எண்ணற்ற பங்களிப்பை வழங்கியவர்.
இச்செய்கையின் மூலம் ஆப்கனின் பாதுகாப்பிலும், முன்னேற்றத்திலும் பணிகள் ஆற்றி வரும் அமெரிக்காவை அச்சுறுத்த முடியாது என்றார்.
கர்சாய் கூறும் போது,"இது தீவிரவாதிகளின் கோழைத்தனமான செயல்" என்றார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் உள்பட பல நாட்டு தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு.
பூகம்பம், புயல், எரிமலை உட்பட இயற்கை சீற்றங்கள் பற்றி மக்களுக்கு சரியான தகவல் தர தவறும் விஞ்ஞானிகள் சிக்கலை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் பூகம்ப எச்சரிக்கை விடுக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தாலியின் லாகுய்லா பகுதியில் 2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டரில் அது 6.3 ஆக பதிவானது. அதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 300 பேர் பலியாகினர். பூகம்பத்துக்கு ஒரு சில நாட்கள் முன்பிருந்தே அந்த பகுதியில் சிறிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.
அதுபற்றி புவியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர். அதில் பூகம்ப ஆபத்து பற்றி விரிவாக ஆராய்ந்தனர். விஞ்ஞானிகள் இடையே பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டனர். எனினும் சிறிய அதிர்வுகளை தொடர்ந்து சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படக்கூடும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடவில்லை.
அடுத்த சில நாட்களில் பூகம்பம் ஏற்பட்டு 300 பேர் பலியாக நேர்ந்தது. இதுபற்றி ஆலோசனை நடத்தியும் மக்களுக்கு எச்சரிக்கை வெளியிடாதது விஞ்ஞானிகள் கடமை தவறியதாகும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இதுவரை இயற்கை சீற்றங்கள் குறித்த விஞ்ஞானிகளின் அறிவுரை மற்றும் கருத்துகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில்லை. முதல்முறையாக விஞ்ஞானிகள் கடமை தவறியதாக தொடரப்பட்ட வழக்கு உலகம் முழுவதும் கவனத்தை கவர்ந்துள்ளது.
அதே நேரம் இயற்கை சீற்றங்கள் பற்றிய கணிப்புகள் துல்லியமாக இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் இதில் விஞ்ஞானிகளை தண்டிக்க முடியாது என்றும் ஒரு தரப்பில் விவாதம் எழுந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இத்தாலி புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 6 விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் விசாரணையை சந்திக்க உள்ளனர். இதனால் விஞ்ஞானிகளின் பணிக்கு சட்ட பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஜப்பானை தாக்கிய ரோக் புயல்: 4 பேர் மரணம்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம், சுனாமி காரணமாக பேரழிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
சோதனை மேல் சோதனையாக இப்போது புயல் தாக்குதலிலும் ஜப்பான் சிக்கியுள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்களை இன்று புயல் தாக்கியது. இதற்கு "ரோக் புயல்" என பெயரிடப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக 12 மாநிலங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், ரோடுகள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்தன. புயல் மழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். 2 பேரை காணவில்லை.
புயல் எச்சரிக்கையால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்வேறு சாலைகள் மூடப்பட்டன.
ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜப்பானில் இந்த மாத தொடக்கத்தில் தலாஸ் புயல் தாக்கியது.
கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்திய தலாஸ் புயலுக்கு 100 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி.
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.இந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில் உள்ள நெளசாநெம்போகான் பகுதியில் 36 பேருடன் பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அருகே உள்ள தீவு ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.அதில் பயணம் செய்த 11 பேர் கடலில் முழ்கி பலியாயினர். 14 பேர் மீட்கப்பட்டனர். இதே பகுதியில் தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு கவிழ்ந்ததில் 330 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 29 யாத்திரிகர்கள் சுட்டுக்கொலை.
பாகிஸ்தானில் உள்ள தென்மேற்கு பலுசிஸ்தானை சேர்ந்த ஷியா பிரிவினர் ஈரான் தப்பானில் உள்ள புனித தலத்துக்கு யாத்திரிகர்களாக சென்று உள்ளனர்.
அவர்களில் 45 பேர் ஒரு பஸ்சில் பாகிஸ்தானுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பஸ் குவெட்டா அருகே 50 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மஸ்டங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ராக்கெட் லாஞ்சரை ஏவி பஸ்சை தடுத்து நிறுத்தினர். பின்னர் 10 பேர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் பஸ்சுக்குள் ஏறினர். அதில் இருந்த யாத்திரிகர்களை கீழே இறக்கி வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டனர். அதில் 26 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.
காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களில் 3 பேர் வழியிலேயே இறந்தனர். இச்சம்பவம் ஷியா பிரிவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷியா பிரிவு யாத்திரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது. இது இரண்டாவது சம்பவமாகும். ஏற்கனவே நடந்த சம்வத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை தயாரித்து ஜேர்மன் விஞ்ஞானிகள் சாதனை.
கணணி மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன.
அதே போன்று டிரைவர் இல்லாமல் "ரிமோட் கண்ட்ரோல்" மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜேர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கார்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் போக்குவரத்து சிக்னல்களை கண்காணித்து இயங்கும் வகையில் கணணி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் முன் பகுதியில் கமெரா மற்றும் லேசர் ஸ்கேனிங் கருவிகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டத்தின் மூலம் இந்த காரின் செயல்பாடு பெர்லின் நகர வீதியில் நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இக்கார் வீதிகளில் உலாவரும் என பெர்லின் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தலைவர் ராவுல் ரொஜாஸ் தெரிவித்தார்.
ஆப்கனில் இருந்து படைகள் வாபஸ்: கர்சாயுடன் ஒபாமா ஆலோசனை.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினரைத் திரும்பப் பெறுவது, பொறுப்புகளை ஆப்கன் அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயுடன் ஒபாமா ஆலோசிக்க உள்ளார்.
இதை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து பென் ரோட்ஸ் மேலும் தெரிவித்ததாவது: ஆப்கனிலிருந்து படையினரை திரும்பப் பெறுவது என்று ஒபாமா அறிவித்த பின் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேசுவது முதல் முறையாகும்.
எனவே பொறுப்புகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைப்பது தொடர்பாக இருவரும் பேசுவர். இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவு குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் பற்றியும் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டின் இறுதியில் ஆப்கன் தொடர்பான மாநாடு இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. எனவே ஆப்கனில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் இருவரும் விவாதிப்பர் என்று பென் தெரிவித்தார்.
ஐ.நா பொதுச் சபையின் 66ம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க ஒபாமா நியூயோர்க் வந்துள்ளார். அப்போது சில நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்.
அல்கொய்தா தலைமைப்பீடம் பிரித்தானியாவிற்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்தும் திட்டமிட்டு வருவதாக உள்துறை செயலாளர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெளிநாட்டு உறவுகளுக்கான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாதம் தற்போது புதிய பரிமாணம் எடுத்துள்ளதாகவும், இணையம் உட்பட நவீன தொடர்பால் தொழில்நுட்பங்கள் பயங்கரவாதிகளுக்கு அனுகூலமாக அமைவதாகவும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் அல்கொய்தா அமைப்பு பல இழப்புகளை சந்தித்துள்ள போதிலும் அதன் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் உள்ளன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை பிரித்தானியாவிற்கு எதிரான தாக்குதல்களை அல்கொய்தா தொடர்ந்தும் திட்டமிட்டு வருகிறது, இதற்கென ஆட்களை அவ் இயக்கம் திரட்டி வருகிறது என தெரேசா மேலும் கூறியுள்ளார்.
தெரேசா மே பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக அமெரிக்க தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக அந்நாட்டுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் கடும் துப்பாக்கிச்சண்டை: 18 பேர் பலி.
பாகிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை (செப்.20) நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தாலிபானியர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.இதில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். ஒரக்ஜாய் பழங்குடியினப் பிராந்தியத்தில் உள்ள தபோரி என்ற இடத்தில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடைபற்றது.
அந்தத்தருணத்தில் சோதனைச் சாவடியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனைச் சாவடி மீது திடீரென ரொக்கெட்டுகள் மூலம் தலிபானியர்கள் தாக்குதல் தொடுத்தனர். ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர்.
இதனை சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தொடுத்தனர். தாலிபானியர்கள் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் விமானப் படைக்குத் தகவல் அளித்து வரவழைத்தனர். அவர்களும் ஹெலிகாப்டர்களில் வந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து குண்டுகளைப் பொழிந்தனர்.
பல மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் தலிபானியர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். 16 தலிபானியர்கள் காயத்துடன் தப்பியோடிவிட்டனர். தலிபானியர்கள் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 5 வீரர்கள் காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசியதில் இப்பகுதியில் இருந்த 6 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. தப்பித்துச் சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்தச் சம்பவத்தை அடுத்து ஒரக்ஜாய் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு வீரர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் மொத்தம் 7 பழங்குடியினப் பிராந்தியங்கள் உள்ளன. இதில் ஒரக்ஜாய் மட்டும்தான் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தப் பிராந்தியத்தில் தலிபானியர்கள் வலுவாகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் ராணுவத் தளம் தகர்ப்பு: 50 பேர் பலி.
ஏமனில் உள்ள சனாவில் போராட்டக்காரர்கள் ராணுவ தளத்தை தகர்த்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
ஏமனில் அதிபருக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், ராணுவத்திலிருந்து வெளியேறிய வீரர்களுடன் சேர்ந்து ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றினர். இச்சம்பவத்தால் அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதே சமயம் அதிபரின் ஆதரவுப் படைகள் தலைநகரில் கடந்த சில நாள்களாக நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சனாவுக்குச் செல்லும் வழியில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள் எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமுமின்றி கைப்பற்றினர். சிலர் கற்கள், தடிகளை மட்டுமே வைத்திருந்தனர் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அதே போல ராணுவத் தளத்திலிருந்து எந்தவிதமான தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதற்கு முன்னதாக அங்கிருந்த படையினர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிகிறது.இந்த வெற்றி போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளதாகவும், விரைவில் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் 33 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் என அதிபரின் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற முகம்மது அல்-வசூபே கூறுகையில்,"எங்களது மன உறுதிதான் இத்தகைய வெற்றியை தேடித்தந்தது" என்றார்.
மருத்துவ சிகிச்சைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ள அதிபர் சலே ஏமனுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யவும் அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமாக வளர்ந்து வரும் ஊழலை ஒழிக்க சீனா திட்டம்.
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவில் ஊழலும் அதே வேகத்தில் வளர்கிறது. ஊழலை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2006 முதல் ஊழல் வழக்குகளில் சிக்கிய நபர்களைப் பற்றிய விவரங்களை யார் வேண்டுமானாலும் அரசு அலுவலகங்களின் இணைய தளங்கள் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டது.
இந்நிலையில் சீன ஊழல் ஒழிப்பு ஆணையம்(எஸ்.பி.பி) ஊழல் வழக்குகளில் சிக்கிய நபர்களின் முழு விவரங்களும் அடங்கிய இணைய தகவல் தளம் ஒன்றை தேசிய அளவில் முதன் முறையாக துவக்க திட்டமிட்டுள்ளது.
யூரோ நாணய பிரச்சனைக்கு நாங்கள் பலிகடாவாக முடியாது: கிரீஸ்.
கிரீஸ் தனது மூன்றாவது தவணை பெறுவது குறித்து நேற்று இரண்டாவது நாளாக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். ஆனால் யூரோ மண்டலத்தின் பலிகடாவாக நாங்கள் ஆக முடியாது என கிரீஸ் நிதியமைச்சர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் கிரீஸ் தற்போது பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ளது. கடந்த மே மாதம் 110 பில்லியன் யூரோ முதல் தவணை ஐரோப்பிய யூனியன், சர்வதேச நிதியமைப்பு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய மூன்று அமைப்புகளால் அந்நாட்டிற்கு வழங்கப்பட்டது.
அதையடுத்து நடந்த கூட்டத்தில் மேலும் 109 பில்லியன் யூரோ வழங்க உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த மூன்றாவது கூட்டத்தில் 8 பில்லியன் யூரோ மூன்றாவது தவணையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு கைமாறாக ஐ.எம்.எப் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் நிர்ணயித்திருந்த பொருளாதார சீர்திருத்தங்களை தேவையான வேகத்தில் கிரீஸ் மேற்கொள்ளவில்லை எனப் புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த வார இறுதியில் போலந்து நாட்டின் வ்ரோக்ளா நகரில் நடந்த கூட்டத்தில் மூன்றாவது தவணையை அக்டோபர் மாத முடிவில் பேசி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதே நேரம் அக்டோபர் 15ம் திகதி வரை தான் தனது கையில் பணம் இருப்பதாகவும், மூன்றாவது தவணை உடனடியாக அளிக்கப்படாவிட்டால் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்க முடியாது எனவும் கிரீஸ் தெரிவித்தது.இதையடுத்து கிரீஸ் திவாலாகப் போவதாக செய்திகள் பரவின. கடந்த வார நடுவில் துவங்கி நேற்று வரை ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இதன் காரணமாக சரிவு காணப்பட்டது.
இத்தாலியின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை "எஸ் அண்டு பி" குறைத்ததும் சரிவுக்கு முக்கிய காரணமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.எம்.எப் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடனும், கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முடிவு எதுவும் காணப்படாததால் நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: யூரோ மண்டல கடன் பிரச்னையை எதிர்கொள்ள வழி தெரியாததால் மூன்று அமைப்புகளும் கிரீசை பலிகடாவாக்கப் பார்க்கின்றன. இது தொடர்பாக கிரீஸ் மிரட்டப்பட்டு வருகிறது என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மூன்றாவது தவணை வேண்டுமானால் 15 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என ஐ.எம்.எப் உள்ளிட்ட மூன்று அமைப்புகள் கிரீஸ் பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முழுப்பக்க அளவில் விளம்பரம் அளித்திருந்தன.
அவற்றில் அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோரில் ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்புதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுதல் அல்லது குறைத்தல், நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை மூடல், நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டச் செலவுகளைக் குறைத்தல், தனியார் மயமாக்கலை விரைந்து நடைமுறைப்படுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதற்கிடையில் நேற்று முன்தினம் கிரீஸ் அரசு புதிய சொத்து வரியை அறிவித்தது. இந்த வரியை மின்சார வாரியங்கள் மூலம் மக்கள் செலுத்தலாம் எனவும் கூறியது.ஆனால் ஏற்கனவே சம்பளக் குறைப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வரும் மின்சார வாரிய ஊழியர்கள் இந்த வரியை வசூலிக்க முடியாது எனக் கூறி விட்டனர். அதோடு பல அரசு ஊழியர் சங்கங்கள், பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா எச்சரிக்கவில்லை: பாகிஸ்தான்.
ஹக்கானி பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசு தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையிலான குழு நியூயோர்க் சென்றுள்ளது. அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை ஹீனா சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடனான மூன்றரை மணி நேர சந்திப்பு குறித்து வெளியான செய்தி தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவு பரஸ்பர விருப்பத்தின் பேரில் அமைந்துள்ளது. இதில் எந்தவிதமான கட்டாயப்படுத்துதலும் இல்லை என்றார் ஹீனா.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கிளிண்டனை சந்தித்த ஹீனாவிடம் ஆப்கனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஹக்கானி பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்த ஆதாரத்தை அளித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.ஆனால் இதை மறுத்துள்ள ஹீனா அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு தொடர்பாக பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அது ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருதரப்பும் இணைந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 30,000 பொதுமக்களையும், 5,000 பாதுகாப்பு வீரர்களையும் பாகிஸ்தான் இழந்துள்ளது. எனவே எங்களுக்கு அமெரிக்கா உதவ வேண்டும், குற்றம்சாட்டக்கூடாது என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் கூட குவெட்டாவில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் யூனிஸ் அல் மரிதானியை கைது செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 30 பேர் கொல்லப்பட்டனர் என்பதை ஹீனா சுட்டிக்காட்டினார்.பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்த அவர் தேச நலனை முன்னிட்டுதான் நாங்கள் செயல்படுவோம். மற்றவர்களின் விருப்பத்தின் பேரில் செயல்படமாட்டோம். ஆப்கனில் அமைதி நிலவ தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.
கடன் மதிப்பு குறியீட்டை குறைத்ததால் "எஸ் அண்டு பி' மீது இத்தாலி பாய்ச்சல்.
இத்தாலியின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை "எஸ் அண்டு பி' நிறுவனம் ஒரு படி குறைத்து அறிவித்துள்ளது. இதையடுத்து "யூரோ' மண்டலத்தில் பொருளாதார நெருக்கடி பற்றிய பீதி மேலும் பரவியுள்ளது.
இந்நிலையில்"எஸ் அண்டு பி' யின் முடிவுக்கு இத்தாலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இத்தாலியின் கடன் மதிப்பீட்டுக் குறியீடு, ஏ+/ஏ-1+ என்ற நிலையில் இருந்தது. "யூரோ' கரன்சி பயன்படுத்தும் நாடுகளில் அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்து கடன் சுமையில் விழுந்ததை அடுத்து, பொருளாதார நெருக்கடி இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கும் பரவும் என்ற ஊகம் வலுத்து வந்தது.
கடன் மதிப்பீட்டுக் குறியீட்டு நிறுவனமான "மூடிஸ்' இத்தாலியின் குறியீட்டைக் குறைக்க நேரிடலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம், இத்தாலியின் பொருளாதாரத்தை அலசி ஆராய இன்னும் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து விட்டது.எதிர்பார்த்ததற்கு மாறாக நேற்று "எஸ் அண்டு பி' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இத்தாலியின் கடன் மதிப்பீட்டுக் குறியீடு, ஏ/ஏ-1 என்ற புள்ளிக்கு குறைக்கப்பட்டது. "இத்தாலி அறிவித்துள்ள தேசிய சீர்திருத்த திட்டம் அமல்படுத்தப்பட்டாலும் கூட, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகச் சிறிதளவே உதவும்.
இத்தாலியின் பொருளாதார முன்னேற்றம் இன்னும் மந்த கதியில் தான் உள்ளது. அதனால், அரசு நிர்ணயித்துள்ள நிதி இலக்குகளை அடைவது என்பது மிகக் கடினம்' என அந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இத்தாலி அரசு,"இதன் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளது. உண்மையான நிலவரத்தைப் பார்க்காமல் ஊடகங்கள் கட்டமைத்த செய்திகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளது.
"கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் வேளையில், இத்தாலி மீதான "எஸ் அண்டு பி' நடவடிக்கை "யூரோ' மண்டலத்தில் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும். பங்குச் சந்தைகளில் மேலும் நிலையற்ற தன்மையை உருவாக்கும். கிரீசை விட இத்தாலியின் பொருளாதார நெருக்கடி அதிகம். இந்த நடவடிக்கை, யூரோ அல்லது டாலர் மதிப்பு உயர்வைத் தடுக்கும்' என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டில் ஏற்கனவே, ஸ்பெயின், அயர்லாந்து, கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் சைப்ரஸ் நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது இத்தாலியும் சேர்ந்துள்ளது.
மதுபான விடுதியில் 36 பேர் சுட்டுக்கொலை.
மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் 36 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கோவைச் சேர்ந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டனர்.புருண்டியில் இரு பிரிவினரிடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி பற்றாக்குறையை சரிகட்டும் ஒபாமாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு.
அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேலைவாய்ப்பு உருவாக்கம், வரி உயர்வு உள்ளிட்டவை அடங்கிய 3.6 டிரில்லியன் டொலர் மதிப்பிலான புதிய திட்டத்தை அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.
இத்திட்டத்தில் உள்ள வரி உயர்வுக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் வரி உயர்வு இல்லாமல் எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படும் எந்த ஒரு மசோதாவையும் தனது மறுப்பாணை(வீட்டோ) மூலம் நிராகரிக்கப் போவதாகவும் ஒபாமா எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிக்க நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 2.1 டிரில்லியன் டொலர்(ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி) செலவுகள் குறைக்கப்பட வேண்டும்.
வரி உயர்வில்லாத மசோதா: அதிகளவில் சம்பாதிப்போர் மற்றும் நிறுவனங்களின் வரியும் உயர்த்தப்பட வேண்டும் என ஒபாமா வலியுறுத்தினார். ஆனால் அடுத்தாண்டு அதிபர் தேர்தலைக் குறிவைத்துள்ள குடியரசுக் கட்சி வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதனால் வரி உயர்வு பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமலே கடன் உச்சவரம்புக்கான மசோதா கடைசி நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் 9.1 சதவீதமாக தொடர்வது, பொருளாதார நெருக்கடி ஆகியவை அடுத்தாண்டு அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்னைகளாக இருக்கும் என்பதை உணர்ந்த ஒபாமா தேர்தலைக் குறிவைத்து சில திட்டங்களை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு திட்டம்: அதன்படி இம்மாதம் 9ம் திகதி 447 பில்லியன் டொலர்(ஒரு பில்லியன் - 100 கோடி) மதிப்பிலான வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார். இதில் வரி சீர்திருத்தத்தையும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இத்திட்டம் காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வரி உயர்வுடன் கூடிய ஒபாமா திட்டம்: இதையடுத்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் பேசிய ஒபாமா அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் 3.6 டிரில்லியன் டொலர் அளவிற்கு சேமிப்புக்கான திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான மெடிகேர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கான நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான மெடிகெய்டு ஆகியவற்றில் 580 பில்லியன் டொலர் குறைப்பு, வரி சீர்திருத்தம், வரி உயர்வு மூலம் 1.5 டிரில்லியன் டொலர் வருமானம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டோ மிரட்டல்: இதுகுறித்து ஒபாமா கூறியதாவது: சராசரி அமெரிக்கனின் தலையில் அனைத்து சுமைகளையும் சுமத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். மில்லியனர், பில்லியனர்களை விட நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவு வரி செலுத்த வேண்டியதில்லை. இத்திட்டத்தில் கணிசமான அளவு மெடிகேர் உள்ளிட்ட பொது நலத்திட்டங்களுக்கான செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் எவ்விதமான வரி உயர்வையும் விதிக்காமல் மெடிகேர் உள்ளிட்ட நலத்திட்டங்களைக் குறிவைத்து செலவுகளைக் குறைக்கும் மசோதா எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டால் மறுப்பாணை(வீட்டோ) மூலம் அதை நிராகரிப்பேன்.
வர்க்கப் போர்: இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த பிரதிநிதிகள் சபை தலைவர் ஜான் பாய்னர்,"மறுப்பாணை மிரட்டல், கடுமையான வரி உயர்வு, சேமிப்பை உருவாக்குவது போன்ற மாயத்தோற்றம் இவை பொருளாதார முன்னேற்றத்திற்கோ, வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ, நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கோ உதவாது. இதுபோன்று வர்க்கப் போரை ஊக்குவிப்பது நல்ல தலைமைக்கு அழகல்ல" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். "இது வர்க்கப் போர் அல்ல, கணக்கிடுதல்" என்று பாய்னருக்கு ஒபாமா பதிலடி கொடுத்துள்ளார்.
இரு கட்சிக் குழுவில் ஒபாமா திட்டம்: ஏற்கனவே தான் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டத்தை சட்டமாக்கும்படி இரு கட்சிகளையும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஒபாமாவின் இந்த இரண்டாவது திட்டம் விரைவில் இரு கட்சி உறுப்பினர்கள் 12 பேர் அடங்கிய குழுவுக்கு அனுப்பப்படும்.
நவம்பர் 23ம் திகதிக்குள் இக்குழு ஒரு புதிய செலவுக் குறைப்பு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பது கடன் உச்சவரம்பு அதிகரிப்பு சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒபாமாவின் இந்த இரண்டாவது திட்டத்தை குழு நிராகரிக்கும் பட்சத்தில் 1.5 டிரில்லியன் டொலர் செலவுகளைக் குறைக்க புதிய திட்டத்தை குழு தயாரிக்க வேண்டும்.ஒபாமா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: வரி சீர்திருத்தம் மற்றும் வரி உயர்வு மூலம் 1.5 டிரில்லியன் டொலர் வருமானமாகக் கிடைக்கும்.
மெடிகேர், மெடிகெய்டு திட்டங்களில் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் நிதியில் 580 பில்லியன் டொலர் குறைக்கப்படும்.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் 1.1 டிரில்லியன் டொலர் சேமிக்கப்படும்.
லிபியாவில் எங்கள் ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது: கடாபி ஆவேசம்.
லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. அதை யாராலும் அகற்ற முடியாது. நேட்டோவின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது என தலைமறைவாக உள்ள லிபியா முன்னாள் தலைவர் கடாபி ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா தலைமையகத்தில் லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் நேற்று சந்தித்துப் பேசினர். தொடர்ந்து ஐ.நா பொதுச் சபையில் லிபியா விவகாரம் இடம் பெற்றது.
இந்நிலையில் சிரியாவில் ஒளிபரப்பாகும் அல்ராய் தொலைக்காட்சியில் தலைமறைவாக உள்ள லிபியா முன்னாள் தலைவர் கடாபியின் ஓடியோ பேட்டி நேற்று ஒலிபரப்பானது.
அதில் அவர் கூறியதாவது: லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. வான் மற்றும் கடல்வழித் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியைத் தூக்கி எறிந்து விட்டு இன்னொரு ஆட்சி திணிக்கப்படுவதை யாரும் நம்பிவிடாதீர்கள். லிபியாவின் மக்கள் ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. நேட்டோவின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது என அவர் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF