Wednesday, September 14, 2011

இன்றைய செய்திகள்.

பிரபாகரனை விடவும் இந்த அரசாங்கமே நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது : சரத் பொன்சேகா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் இந்த அரசாங்கமே நாட்டுக்கு அதிகளவில் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகள் கடந்த ஜென்மங்களிலிருந்தே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் சிரேஸ்ட பிரஜைகளிடமிருந்து பழிவாங்கும் நோக்கில் அவர்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
14 அரச நிறுவனங்களை அழிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,
நாட்டின் விலை மதிப்பற்ற சொத்துக்களில் ஒன்றான சிங்கராஜா வனப் பகுதியை கூறுபோட முயற்சிக்கப்படுகின்றது.
இவ்வாறான அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
30 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவேந்திர சி்ல்வாவின் நடவடிக்கையை கண்காணிக்க அமெரிக்கா சென்றுள்ள புலனாய்வு பிரிவினர்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி விதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த விசேட புலனாய்வு அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மூன்று புலனாய்வு அதிகாரிகள் இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளனர்.
அதில் இருவர் ஜனாதிபதியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும், மற்றைய அதிகாரி, சவேந்திர சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அந்த இணைய ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்றக் காலத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான தங்க ஆபரணங்களை சவேந்திர சில்வா பதுக்கி வைத்து, தற்போது அவற்றை பணமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் சவேந்திர'விற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாரியளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சவேந்திர சில்வா முயற்சி செய்து வருவதாகவும் அந்த இணைய ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னேஸ்வர பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பலி பூசை இடைநிறுத்தம்.

முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெறவிருந்த பலி பூசையை நிறுத்துமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு ஆலய பரிபாலன சபையினரால் சிலாபம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஹிலாரி பெரெராவினால் தாக்கல் செய்யப்பட்டது.
பத்திரகாளியம்மன் ஆலயத்தில் பலிபூஜையை நிறுத்துமாறு சிலாப பொலிஸ் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த பூசை நடத்தப்பட்டால் சிங்கள தமிழ் இனக்கலவரம் ஏற்படும் என்று கூறியே பொலிஸார் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நீதவான் ஆர்.எம்.ஜயவர்தன தடை உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கு முன்னதாக இந்த பலி பூசை நிறுத்தப்படவேண்டும் என்று விலங்கின பாதுகாப்பு அமைப்புகள் நேற்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தன.
எனினும் சுமார் 350 வருட காலமாக இடம்பெறும் இந்த சமய வழிபாட்டை நிறுத்தமுடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.
எனினும் இனக்கலவரம் ஏற்படலாம் என்ற காரணத்தை காட்டியே பொலிஸ் சிலாபம் நீதிவானின் தடையுத்தரவை நேற்று மாலை பெற்றுள்ளது.
இதேவேளை, இன்று பலிகொடுக்க தயாராகவிருந்த ஆடுகள், மற்றும் கோழிகளை விடுவிப்பதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.
அத்துடன் இந்த உயிரினங்களை அவர் லொறிகளில் ஏற்றிச் சென்று சிலாபம் பொலிஸிடம் ஒப்படைத்தார்.
ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்த இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலி கொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.
முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வருடாந்த உற்சவத்தின்போது நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலி கொடுக்கப்படுவது வழக்கமாகும்.
இது இந்துக் கோயிலாக இருந்தாலும் இந்தக் கோயிலில் பல சிங்களவர்களும் ஆடு, கோழி போன்ற மிருகங்களை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


நிபுணர்குழு அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் விவாதிப்பதை இலங்கை எதிர்க்கும்!- பீரிஸ்.

'தருஸ்மன் தலைமையிலாள் நிபுணர்குழு அறிக்கையை' ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுச்சபையிலும் இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.
இந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நானும் (ஐ.நா.) பொதுச்சபைக் கூட்டத்திற்காக அடுத்த வாரம் நியூயோர்க் செல்லும்போதும் எமது எதிர்ப்பை தெரிவிப்போம் என பீரிஸ் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நடுநிலைமை விவகாரம் குறித்தும் நியூயோர்க்கில் இலங்கைத் தூதுக்குழுவினர் பேசுவர் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு சமர்ப்பித்த் அறிக்கையை அவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
பிரிவினைவாத போராட்டங்களுக்கு தேவையான புறச்சூழலை அமைக்கவே பிளேக் இலங்கை வந்துள்ளார்!- விமல்.

இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டங்களை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், போராட்டங்களுக்கு தேவையான புறச்சூழலை அமைக்கவுமே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை வந்துள்ளார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
லிபியா உட்பட அரேபிய நாடுகள் மற்றும் மத்திய ஆபிரிக்க வலய நாடுகளில் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் திட்டமிட்டு சூழ்ச்சிகரமான முறையில் புரட்சிகளை ஏற்படுத்தி அந்நாடுகளின் அபிவிருத்திகளையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளன.
இதே போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையிலும் தமது நோக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள அந் நாடுகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹரகமலில் நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்கா, இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் தற்போதைய அவசர தேவையானது இலங்கையில் அதிகாரப் பகிர்வுகளின் ஊடாக பிரிவினைவாத கட்சிகளுக்கு உயிரூட்டுவதேயாகும். இதற்கான முயற்சிகளை தேசிய அரசியலில் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி தலையீடுகளுக்கான சூழலை உருவாக்குவது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் திட்டமாகும்.
இதுவரை காலமும் இலங்கை வந்த அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் உள்நாட்டு பல்கலைகழக மாணவர்களை சந்தித்து பேசியது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை வந்துள்ள ரொபட் ஓ பிளேக்கின் நிகழ்ச்சி நிரலில் மாணவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது வேறொன்றுக்கும் அல்ல. மாணவர்களை கொண்டு அரசிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துவதேயாகும்.
இதற்கேற்ற வகையிலேயே ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. போதாது என்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் நீக்குமாறு மேற்படி கட்சிகள் வலியுறுத்துகின்றன.
எனவே நாட்டிற்கெதிரான மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும். ஐ.நாவின் தேவையும் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதாகும்.
ஐ. நாவின் தலைமை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன் லிபியாவை போன்ற தலையிடு இலங்கைக்கும் அவசியம் என கூறியிருந்தார்.
இதுவே இன்று நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாக அமைந்துள்ளது எனக் கூறினார்.
போர்க்குற்ற விசாரணை நடாத்தும் பொறிமுறையை ஏற்படுத்தும் வாய்ப்பு ஜெனிவாவில் நடைபெறாது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இல்லை என்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான கால எல்லையொன்று இலங்கைக்கு வழங்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் நேற்று உறுதியாகத் தெரிவித்தன.
இறுதிச் சண்டை இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தாராளமாக இடம்பெற்றன என்றும் அதுகுறித்தான விசாரணையொன்று நடத்தப்படவேண்டுமெனவும் சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
இதன்படி தற்போது நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படியான ஒன்று இப்போதைக்கு நடைபெறமாட்டாதெனத் தெரியவருகிறது.
மனித உரிமை மீறல்கள் குறித்தான தனது பக்க நியாயத்தை விளக்குவதற்காக இலங்கைக்கு கால அவகாசமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட்ட நாடுகள் ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.
இதன்படி ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை தனது நியாயத்தைத் தெளிவுபடுத்த அவகாசம் வழங்கப்படலாமெனத் தெரிகிறது.
இது குறித்து கொழும்பு வந்துள்ள அமெரிக்க உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கும் அரச தரப்பு பேச்சுகளின்போது ஆராய்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த குடும்பத்தவர்களின் பயணத்துக்காகவே ஹெலிகள்; ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவே ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்யநாட்டு கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ஹெலிகளின் பெறுமதி 135 கோடி ரூபாவாகும். அதற்கமைய அரசு ரஷ்யாவிடமிருந்து கடனுக்கு வாங்கவுள்ள 14 ஹெலிகளுக்கும் 1895 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது.அரசு வாங்கவுள்ள இந்த ஹெலிகள் பிரபுக்களின் பயன்பாட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன.
விசேட இலங்கை விமானப்படை மற்றும் ரஷ்யாவிலுள்ள "ரொசொ பொரொன் எக்ஸ்போர்ட்'' நிறுவனத்துக்குமிடையே இந்த ஹெலிகளின் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவற்றைத் தருவிப்பது தொடர்பாக அரசும் விமானப்படையும் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தெரிவிக்கின்றன.
இந்த ஹெலிகள் இலங்கையின் கடல் வலயத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாகவே தருவிக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆனால் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் அர்ஸ அபேகுணவர்த்தன'வின் கூற்றுக்கு அமைய, இந்த ஹெலிகள் சிவில் விமானப் போக்குவரத்துச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவே தருவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உலங்குவானூர்தியொன்றில் ஒரு தடவை ஒன்பது பயணிகள் மட்டுமே பயணிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
இரண்டு ஹெலிகளை முன்பு தருவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அது தொடர்பாக 231 கோடி ரூபாய்கள் செலவு ஏற்படும் என்று "லங்கா'' செய்திப் பத்திரிகை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கவுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை : ஜே.வி.பி.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இணைந்து செயற்பட உள்ளதாக வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் கிடையாது.
வெளிநாடுகளுக்கு அடிபணிந்து, கொள்ளையிடும் பொருளாதார முறைமையை ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டுக்கு அறிமுகம் செய்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவ்வாறான ஓர் கட்சியுடன் இணைந்து நாட்டை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள முடியாது.
மாற்று சமூகப் பொருளாதார முறைமையுடைய ஓர் ஆட்சியே தற்போது நாட்டுக்கு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானை நம்ப முடியாது: அமெரிக்க துணை அதிபர்.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானை நம்ப முடியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த புகழ்பெற்ற இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் திகதி தகர்த்தனர். அதன் 10ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு தனியார் தொலைகாட்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் பேசியதாவது: அமெரிக்காவின் நம்ப முடியாத நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இன்னும் அதிகமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அந்த நாடு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் ஆப்கானிஸ்தான் அமெரிக்க வீரர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
ஆனால் மற்ற விஷயங்களில் பாகிஸ்தான் நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறது. இது போதாது. இரு தரப்பினருக்கும் அளிக்கும் வகையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
சிரியாவில் மனித உரிமை ஆர்வலர் மரணம்: அமெரிக்கா கடும் கண்டனம்.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு அசாத்தின் பாதுகாப்பு படையினர் கடுமையானத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
நியூயார்க்கை மையமாக கொண்ட 26 வயது மனித உரிமை ஆர்வலர் கியாத் மதார் சிரிய போராட்டங்களுக்கு முக்கிய நபராக இருந்தார்.
இவரை அசாத் படையினர் இந்த செப்டம்பர் மாதம் 6ம் திகதி கைது செய்தனர். அவர் காவலில் இருந்த போது சித்ரவதை தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். அவரது மார்பிலும், முகத்திலும் கடுமையான காயங்கள் காணப்பட்டன என்று இதர மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர்.
சிரிய மனித உரிமை ஆர்வலர் மதார் சிறையில் கொல்லப்பட்டதை அமெரிக்கா கடுமையாக கண்டித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க அயல்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாந்த் வெளியிட்ட அறிக்கையில்,"சிரியாவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் உறுதியுடன் எதிர்த்து போராடிய மதார் உயிர் துறந்துள்ளார். அவரது மரணம் சிரியாவின் இழிவான வன்முறை ஆட்சி முறையை காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
ஈரானில் போதைப் பொருள் கடத்திய 5 நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.
ஈரானில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சீம்னான் மாகாணத்தில், ஷகரோத் என்ற இடத்தில் சிறைச் சாலை ஒன்று உள்ளது. இங்கு கைதிகளாக இருந்த 5 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்திருந்தது. 5 பேரின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதைபோல சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான குஷா என்பவரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்களை கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதனால் இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
கடந்த 9 நாட்களில் மட்டும் 22 பேரை ஈரான் அரசு தூக்கில் போட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலரும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட காத்திருப்பதாக தெரிகிறது.
கடந்தாண்டு இதேபோல 179 பேருக்கும், இந்தாண்டு இதுவரை 192 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கனில் நேட்டோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேட்டோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர்.
அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர்.
பகல் 1 மணியளலில் ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பல்வேறு கட்டடங்களின் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 5 பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை: இந்நிலையில் பாகிஸ்தானில் மர்ம நபர் ஒருவர் பள்ளி வேன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் முட்டானி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி முடிந்து வேனில் குழந்தை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பள்ளி வேனை மறித்த அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர் வேன் மீது சரமாரியாக சுட்டார்.
இதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
துப்பாக்கி சூடு நடத்திய மர்மக் கும்பல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு அதே பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் சுழற்புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள Katia சுழற்புயல் காரணமாக நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட மோசமான புயலாக இது கருதப்படுகின்றது. இப்புயல் வேல்ஸ் பகுதியில் மணிக்கு 82 மைல் வேகத்திலும், வட இங்கிலாந்தில் மணிக்கு 70 மைல் வேகத்திலும் வீசுகின்றது.
பலத்த காற்று மற்றும் புயல் மழையினால் இரு வாகனச் ஓட்டுநர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் போட்ஸ்மவுத்திலிருந்து பிரான்சிற்குச் செல்லும் அனைத்து விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. லீட்ஸ் பிறட்போட் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் பாதை தவறி இறங்கின.
கம்பிரியாவிலுள்ள அலொன்பியில் 12 அடி உயரமான அலைகள் எழுந்தன. இதேவேளை மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 எச்சரிக்கை மட்டங்களில் 2ஆம் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் 22 பயணிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை.
ஈராக்கில் உள்ள மேற்கு பாக்தாதில் சிரியாவில் இருந்து பேருந்தில் வந்த 22 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றனர்.
சிரியாவில் இருந்து 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள நௌகைர் பாலைவனத்தில் சென்ற போது ஆயுதம் ஏந்திய சிலர் பேருந்தை வழிமறித்தனர்.
ஆயுதங்களைப் பார்த்த பேருந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். உடனே அந்த மர்ம நபர்கள் பேருந்துக்குள் உள்ள அனைவரையும் கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டனர். ஆயுதங்களைப் பார்த்து பயந்துபோன அப்பாவி மக்கள் மறுபதில் சொல்லாமல் பேருந்தில் இருந்து இறங்கினர்.
இறங்கியவர்களை வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தங்கள் கைகளில் இருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக பயணிகளை நோக்கி சுட்டனர். இதில் 22 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 218 பேர் உயிரிழப்பு.
பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இது வரை 218 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் காயம் அடைந்துள்ளனர். 55 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
45 லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 17 லட்சம் ஏக்கரில் இருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த தகவலை தேசிய பேரிடர் நிர்வாக தலைவர் டாக்டர் ஷபர் குவாதிர் தெரிவித்துள்ளார்.
தான்சான்யா படகு விபத்து: பலி எண்ணிக்கை 240ஆக உயர்வு.
ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியாவில் ஜான்சிபார் தீவில் இருந்து சென்ற படகில் கிட்டத்தட்ட 900 பேர் பயணம் செய்தனர்.
இந்த படகு புறப்பட்டதும் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் படகு கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 600க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
தொடக்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 240ஆக உயர்ந்து உள்ளது.
192 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 28 உடல்கள் அடையாளம் காட்டப்படுவதற்காக காத்து இருக்கின்றன.
ஒசாமா பின்லேடன் வீட்டில் விசாரணைக் குழு ஆய்வு.
பாகிஸ்தானில் இருந்த ஒசாமா அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழு இன்று முதல் மூன்று நாட்களுக்கு அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீட்டுக்குச் சென்று சாட்சிகளை நேரடியாக விசாரிக்க உள்ளது.
அமெரிக்கப் படையினரால் பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
பின்லேடன் அபோதாபாத்திற்கு வந்தது எப்படி? ராணுவத்துக்குத் தெரியாமல் ஏழாண்டுகள் அங்கு வசித்தது எவ்வாறு? என்பது குறித்து இக்குழு விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விமானப் படையின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் திகதி இக்குழு விசாரணை நடத்தியது.
இதையடுத்து இன்று முதல் 15ம் திகதி வரை இக்குழு பின்லேடன் வசித்து வந்த அபோதாபாத் வீட்டில் நேரில் ஆய்வு நடத்தும். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை இக்குழு பதிவு செய்யும்.
கென்யாவில் பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது: 100 பேர் உடல் கருகி பலி.
கென்யா தலைநகர் நைரோபியில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நைரோபியின் மையப் பகுதியில் இருந்து விமான நிலையம் வரை பெட்ரோல் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இக்குழாய் லுங்கா லுங்கா என்ற தொழிற்சாலைப் பகுதி வழியாகச் செல்கிறது.
இப்பகுதியில் சினாய் என்ற சேரிப் பகுதியும் உள்ளது. இங்கு நேற்று திடீரென பெட்ரோல் குழாய் வெடித்துத் தீப்பிடித்தது. மளமளவென தீ பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
குழாய் வெடித்த இடத்தில் நின்றிருந்த பலர் தீயில் கருகி பலியாயினர். சினாய் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் பெட்ரோல் குழாய் திறந்து கிடந்திருக்கிறது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலைப் பிடிக்க அக்கம் பக்கத்து மக்கள் ஆர்வத்தில் கூடியுள்ளனர்.
அப்போது அக்குழாயில் சிகரெட் நெருப்புப் பொறி ஒன்று விழுந்ததால் வெடிவிபத்து நிகழ்ந்து இந்தக் கோர சம்பவம் நடந்திருக்கிறது என முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
2011ம் ஆண்டின் மிஸ் யுனிவர்சாக அங்கோலா நாட்டைச் சேர்ந்த அழகி தேர்வு.
2011ம் ஆண்டின் மிஸ் யுனிவர்சாக அங்‌‌கோலா நாட்டைச் சேர்ந்த லைலாலூப்ஸ் என்ற மொடலிங் அழகி தேர்வு பெற்றார்.
2011ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் நடந்தது. இதில் 89 நாடுகளைச் சேர்ந்த மொடலிங் அழகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 2010ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்ற மெக்சிகோ நாட்டின் ஜிமினே நவரத்தி என்பவரும் கலந்து கொண்டார். முதல் சுற்றுப்போட்டியிலேயே முதல் 10 இடங்களில் அவுஸ்திரேலியா, கோஸ்டாரிகா, பிரான்ஸ்,உக்ரைன், போர்ச்சுகல், பனாமா, பிலிப்பைன்ஸ், அங்கோலா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர்.
இறுதிச்சுற்றில் அங்கோல நாட்டின் லைலா லோப்ஸ், 2011ஆம் ஆண்டி பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்றார். முன்னதாக இந்தாண்டு பிரபஞ்ச அழகிப்போட்டி 60வது போட்டி என்பதால் பிரேசில் நாட்டில் விழா ‌மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தாண்டு 89 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 1.25 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அங்குள்ள தாங்ஜங்கராங், தெலுக்பெடங் பகுதிகளுக்கு இடையே அது உருவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதிகளில் வீடுகள் குலுங்கின. அப்போது அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் என்னமோ ஏதோ என கருதி அலறியடித்தப்படி எழுந்தனர்.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். விடிய விடிய அங்கேயே தங்கியிருந்து விட்டு பீதி அடங்கியதும் வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே ரிக்டர் அளவில் 5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலில் வழக்கத்துக்கு மாறாக அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின.
இதனால் சுனாமி ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உறைந்து இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சுமத்ரா தீவில் கடந்த வாரம் தான் 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் வன்முறை: ஐ.நாவின் புதிய ஆய்வு.
சிரியாவில் இதுவரை இரண்டாயிரத்து 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். அவர்கள் மீது அரசு வன்முறையை ஏவி விட்டதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 18வது கூட்டம் துவங்கியது. அதில் பேசிய ஐகமிஷனர் நவநீதம் பிள்ளை,"நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாத நடுவில் துவங்கி இதுவரை சிரியாவில் 2,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியா தொடர்பாக நடந்த கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் 2,200 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் அணு மின் நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பு.
பிரான்சின் தென்பகுதியில் செயல்படாத பழைய அணுமின் நிலையத்தில் நேற்று திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர்.
கதிர்வீச்சு கசிவு அபாயம் இல்லை என பிரான்ஸ் அணுமின் நிலைய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பிரான்சின் தென்பகுதியில் மார்கோல் என்ற அணுமின் நிலையம் உள்ளது.
இதில் செயல்பட்டு வந்த மூன்று அணுமின் உலைகளும், பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது அங்கு அணுமின் உலை எதுவும் இல்லை. மார்கோல் நிலையத்தில் தற்போது அணுக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு உலையில் நேற்று திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர்.
மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் அணுக் கழிவுகள் அனைத்தும், குறைந்தளவு கதிர்வீச்சுத் திறன் கொண்டவை என்பதால் கதிர்வீச்சுக் கசிவு அபாயம் எதுவும் ஏற்படவில்லை என பிரான்ஸ் அணுமின் நிலையக் கண்காணிப்பு அமைப்பான ஏ.எஸ்.என் தெரிவித்துள்ளது. எனினும் வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF