Saturday, September 10, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகாவின் சிறைக்கூடத்திற்கு அருகில் புலி உறுப்பினர்களை தடுத்து வைக்கக்கூடாது!- நீதிமன்றம்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறைக்கூடத்திற்கு அருகாமையில் தடுத்து வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அடைத்து வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலி உறுப்பினர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியதாக வெளியான செய்தி தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதாக சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாற்றப்படும் புலி உறுப்பினர்கள் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு அருகாமையிலேயே தடுத்து வைக்கப்படுவதாகவும் சட்டத்தரணி லந்துவேஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு அருகாமையில் புலி உறுப்பினர்களை தடுத்து வைக்க வேண்டாம் என சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
பிளேக் 12ம் திகதி இலங்கை வருகிறார்! பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பார்?

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் திங்கள் (12.09.2011)  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தமாதம் 29ம் நாள் இலங்கை வரவிருந்த பிளேக்கின் பயணத் திட்டம் அமெரிக்காவில் ஏற்பட்ட ஐரின் சூறாவளியால் பிற்போடப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அவரின் பயணம் எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறும் எனவும் 14ம் திகதியே இடம்பெறும் எனவும் இருவேறான செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளேக்கின் பயணத் திட்டம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையின் படி எதிர்வரும் 12ம் நாள்  இலங்கை வரும் பிளேக் இந்தியாவிற்கும் பயணம் மேற்கொள்வார் எனவும் அவரது பயணம் 16ம் திகதி நிறைவுறும் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்க அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் பிளேக் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இலங்கை  வரும் பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும் என அம் முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் இனவாதத்தை அரசியல் ரீதியாக வென்றெடுக்க உதவி வழங்கும் வகையில் பிளேக் செயற்பட்டு வருவதாகவும் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச அதன்போது தெரிவித்திருந்தார்.
ஆயினும் பிளேக் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலகமும் அனைத்துலக அமைப்புக்களும், போர்க்குற்றம் புரிந்த  இலங்கை அரசுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அழுத்தங்கள் வழங்கி வரும் நிலையில் பிளேக்கின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அவதானிகள் கருதுகின்றனர்.
அதேவேளை, ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கின்ற 12ம் திகதி பிளேக் அவர்கள் வருகைதர உள்ளமையும், இம்முறை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளமையுமான இரு விடயங்களும் நிகழவுள்ளமையான காலத்தில் இவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது எனவும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.

வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் சனத் நிஷாந்த'வை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது. சிலாபம் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரின் கடமைகளுக்கு அமைச்சர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
விசேட கடமை ஒன்றிற்கு சமூகமளித்த காரணத்தினால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என அமைச்சரின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு பிரதேச செயலாளராக கடமையாற்றிய அதிகாரி தமது கடமையை மேற்கொள்ள முடியாத வகையில் அமைச்சர் நிஷாந்த இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெளிநாட்டு நாணயம் என்பன திருட்டு.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு முகாமையாளரது அறையிலிருந்து பல கோடி ரூபா பெறுமதிமிக்க தங்கமும் வெளிநாட்டு நாணயங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பெறுமதியான பொருட்களும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களவாடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதியை அறிந்துகொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சமாதான நீதவான்கள் தொடர்பில் முதல் தடவையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக சமாதான நீதவான்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் கே.டி.அரான்தார தெரிவித்துள்ளார்.
சமாதான நீதவான்களுக்கு உரிய மரியாதை ஏற்படுத்திக் கொடுக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த ஆய்வு வழிகோலும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1802ம் ஆண்டு முதல் இலங்கையில் சமாதான நீதவான்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரையில் இலங்கையின் சமாதான நீதவான்களின் எண்ணிக்கை தொடர்பில் தனியான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இதேவேளை, அரசியல் ரீதியான காரணங்களுக்காக சில மொழித்திறனற்ற, பொருத்தமற்ற நபர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை, வருமானத்தை எதிர்நோக்கும் சில சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சமாதான நீதவான்கள் சிலர் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சுமத்தப்படுகிறது.
இதனால் சமாதான நீதவான்களுக்கு காணப்படும் சமூக அந்தஸ்து, மரியாதை என்பன  வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 
வடக்கு கிழக்கிற்கு காணி அதிகாரங்கள் வழங்குவதில் பிழையில்லை!- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களை பகிர்வதில் பிழையில்லை என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை வழங்கலாம். எனினும், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக  பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படாத நிலையில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தற்போதைக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்புல்லா, உரிய நேரத்தில்  பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களையும் இணைப்பது தொடர்பிலான தீர்மானத்தை கிழக்கு மக்களே எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்துத்துறை,  பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் ஜெனிவாவிற்கு ஓடவேண்டிய தேவையில்லை! ரணில்.

17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் நாடு முகம் கொடுக்கும் சர்வதேச அழுத்தத்திலிருந்து 50 வீதமான பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அதற்காக ஜெனிவாவிற்கு ஓட வேண்டிய தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம். நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இவை நிறைவேற்றப்படவில்லை.
18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளான இன்று  தேசிய துக்க தினமாகும். அதேபோல குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இன்றும் (நேற்று) தேசிய துக்க தினம்.
தேசிய துக்க நாள்' “ஜனநாயக மண்சரிவு' சுயாதீனத்திற்கான அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சொன்னார்.
குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெவித்தõர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கைது செய்யப்பட்ட ஒருவருக்காக சட்டத்தரணி ஆஜராக முடியாது என அமைச்சர் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்குகளில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருக்காக சட்டத்தரணி ஆஜராகலாம். இது சர்வதேச சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இன்று பொலிசாரின் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்திருக்கலாம். அதற்கான அதிகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இருக்கின்றது. எனினும் பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்றது.
இராணுவத்தை பயன்படுத்தியே கொழும்பு கொம்பனித்தெருவில் வீடுகள் உடைக்கப்பட்டன. கொழும்பு எங்களுடையது என்று கூறிக்கொண்டே வீடுகளை உடைக்கும் இராணுவத்தினரை 48 மணிநேரம் தடுத்து வைக்க வேண்டும்.
17ஆவது திருத்தத்தில் சட்டமா அதிபர், நீதிமன்றம், பொலிஸ் சுயாதீனமாக இருந்தது. சட்டமாஅதிபர் திணைக்களம் இன்று அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
அரசியலமைப்பே பெரிய சட்டம்' அதனைவிடவும் உயர் சட்டமொன்று இலங்கையில் இல்லை. நீதிமன்றம், பொலிஸ் இலஞ்ச ஊழல் திணைக்களம், சட்டமா அதிபர் சுயாதீனமானதாகும். இன்று அவற்றில் சுயாதீனம் இல்லை.
18ஆவது திருத்தம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நிறைவேற்றப்படவில்லை என்று நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரனும் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தோம். அந்த திருத்தத்தை நிறைவேற்று வதற்கு மாகாண சபைகளின் அதிகாரத்தை பெற வேண்டும். அவ்வறறு இல்லாமையினால் எதிர்த்தோம்.
18ஆவது திருத்தத்திற்கு பதிலாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் சகலரும் இணைந்து புதிய சட்ட திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவோம். இந்த சட்டம் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உமையின் பிரகாரம் நிறைவேற்றப்படவில்லை.
இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள், ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சட்டமூலம் ஒன்றினை திருத்த முடியும். அதனால் ஒழுங்கு விதிகளை அமுல்படுத்த முடியாது. பொதுநலவாய பாராளுமன்ற சங்கம், சர்வதேச பராளுமன்ற சங்கத்திடம் இவை தொடர்பிலான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஆலோசனைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்க வேண்டியதில்லை. அதற்காக பொதுநலவாய நாடுகளிடம் நாம் அடிபணிந்ததாக அர்த்தப்படுத்திவிடவும் முடியாது. பொதுநலவாய பாராளுமன்ற தலைவராக எமது சபாநாயகர் இருப்பதனால் அதற்கான பிரச்சினை எழும்பாது என்றார். 
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி - இலங்கைக்கான வாய்ப்பு கைநழுவி போகும் சாத்தியம்?

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டையில் பெருமளவிலான பணத்தை செலவழித்து வருகின்ற நிலையில்,  அதற்கான வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது..
விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டை நகரமும், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கொஸ்ட் நகரமும் போட்டியின் ஏற்பாட்டாளர் அந்திஸ்தினைப் பெற்றுக்கொள்ள போட்டியிட்டு வருகின்றன.
விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான சகல அடிப்படைகளை வசதிகளையும் கோல்ட்கொஸ்ட் கொண்டுள்ளதாகவும், இலங்கையில் அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா சற்று முன்னணி வகிப்பதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாட்டு காரணிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா இலங்கையை விடவும் சற்று முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 71 நாடுகளின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
போட்டியை நடாத்தும் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பெருமளவிலான பணத்தை செலவழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக ஜெனிவாவில் சர்வதேச மன்னிப்புச் சபை விசேட அறிக்கை தாக்கல்.

எதிர்வரும் வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரின்போது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிரான விசேட அறிக்கையொன்றைத் தாக்கல் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை உத்தேசித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வ தேசத்தின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தலாமெனக் கருதப்படுவதால் மன்னிப்புச்சபை இந்த விசேட அறிக்கையைத் தயார் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிப்போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆராயப்படவில்லையென்று குறிப்பிட்டு தனது அறிக்கையைத் தயார் செய்துவரும் மன்னிப்புச்சபை இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதாக அந்த இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கையின் அமைச்சர்கள் அங்கு அரசுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல் திரட்ட விசேட திட்டம்.

பொலிஸ்  உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல் திரட்ட விசேட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என  பொலிஸ் பரிசோதர்கர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல்கள் ஏற்கனவே பொலிஸ்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுவதாகவும் இதனை தடுக்கும் நோக்கில் விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து, ஊழல் மோசடி மற்றும் குற்ற விசரணை போன்ற  பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் அதிகாரிகளினால் கூடுதலான ஊழல் மோசடி இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய - இலங்கை கடற்படையினருக்கு இடையில் பேச்சுவார்த்தை.

இந்திய - இலங்கை கடற்படையினருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் ரியர் அட்மிரல் முருகேசன் தலைமையிலான ஆறு பேரைக் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சார்பில் ரியர் அட்மிரல் ஜயந்த பெரேரா உள்ளிட்ட பத்து பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பாக்கு நீரிணைப் பிரதேச பாதுகாப்பு சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
க.பொ. த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில் வெளியாகும்!- பரீட்சைத் திணைக்களம்.

2011 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E. A/L exam) பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8 ம் திகதி முதல் செப்ரம்பர் 3 ம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கு நடப்பாண்டில் சுமார் மூன்று லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதன்படி பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 147 ஆயிரத்து 761 பேர் தோற்றியிருந்தனர்.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 147 ஆயிரத்து 100 பேர் தோற்றியிருந்தனர்.
ஆகவே இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களின் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியிடமுடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்திப்பு.

இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவரும் அரசாங்க அமைச்சருமான டியூ குணசேகர, நேற்று புதுடில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான டி ராஜா, எஸ்.சுதாஹர் ரெட்டி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்திய இலங்கை உறவுக் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போருக்கு பின்னர் இலங்கையில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நல்லிணக்கத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இதன்போது 13 வது திருத்தச்சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜா குறிப்பிட்டார்.
இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் அத்துடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்களை முகாம்களுக்குள் வைத்திருந்தமை போன்றவை தொடர்பிலும் தாம் இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவரிடம் கேள்வி எழுப்பியதாக ராஜா கூறினார்.
கடாபியின் பாதுகாப்பு தலைவர் நைஜர் நாட்டிற்கு தப்பி ஓட்டம்.
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியின் பாதுகாப்பு தலைவர் மான்சோர்டா மற்றும் முன்னாள் லிபிய அதிகாரிகள் அருகாமையில் உள்ள நைஜர் நாட்டின் தலைநகர் நியாமேவுக்கு தப்பி ஓடினர்.
பாலைவன நகரமான அகாடஸ் வழியாக அவர்கள் நியாமே நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததாக நைஜர் அதிகாரிகள் கூறினர்.
அந்த குழுவினர் தங்களுடன் பயங்கர ஆயுதங்கள், தங்கம் பணம் ஆகியவற்றையும் எல்லை வழியாக கொண்டு வந்தனர். அந்தக் குழுவினருடன் கடாபி வரவில்லை.
இது குறித்து லிபிய போராட்டக்குழுவின் மூத்த ராணுவ கமாண்டர் ஹிஷம் புகாக்ளர் கூறுகையில்,"கடாபி இன்னும் லிபியாவில் இருப்பதாக கருதுகிறோம்" என்றார்.
முன்னாள் சர்வாதிகாரியான கடாபி தான் உயிரோடு இருக்கும் வரை போராடுவேன் என முழங்கி உள்ளார். நைஜர் உள்துறை அமைச்சர் அப்டோலபோ கூறுகையில்,"கடாபியின் பாதுகாப்பு தலைவர் மனிதநேய அடிப்படையில் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
லிபியாவில் இருந்து நைஜருக்கு சமீபத்தில் வந்த அதிகாரிகள் குழு இதுவாகும். கடாபி பாதுகாப்பு தலைவருடன் வந்த குழுவில் கடாபி தேர்வு செய்த துராக் போர் வீரர்களும் இருந்தனர். 50 வண்டிகள் பலத்த ஆயுத பாதுகாப்புடன் சென்றன.
கல்வியை தொடர முயன்ற மகளை கௌரவ கொலை செய்த பெற்றோர்.
எதிர்காலத்தில் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்த  தனது மகளை பெற்றோர் கௌரவக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு புதன்கிழமை பிரித்தானிய நீதிமன்ற மொன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தாங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு சம்மதிக்காமல் கல்வியை தொடரப் போவதாக பிடிவாதம் பிடித்த தமது மகள் ஷாபிலியாவை(17 வயது) படுகொலை செய்த குற்றச்சாட்டில் அவரது பெற்றோரான இப்திகார் அஹ்மட்டும்(51 வயது), பர்ஸானாவும் (48 வயது) செஷியரிலுள்ள ஹால்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட வேளை காணாமல் போன ஷாபிலியாவை படுகொலை செய்ததாக 8 வருடங்கள் கழித்து அவரது பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷாபிலியாவின் அழுகிய சடலம் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆற்றங்கரை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாடசாலை விடுமுறையை கழிக்க தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு ஷாபிலியா, குடும்பத்துடன் சென்ற வேளையிலேயே அவருக்கு பலவந்த திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாபிலியா தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார். தொடர்ந்து அவர் மீளவும் கல்வி கற்க பிரித்தானியாவுக்கு வந்துள் ளார். இதன் பின்பே அவர் திடீரென ஒரு நாள் காணாமல் போயுள்ளார்.
அதன் பின் அவரது அழுகிய சடலம் குப்பிரியாவிலுள்ள கென்ட் ஆற்றங்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. ஆரம்பத்தில் ஷாபிலியாவின் படுகொலைக்கான காரணத்தை விசாரணையாளர்களால் அறிய முடியாதிருந்துள்ளது.
இதனையடுத்து ஷாபிலியாவுக்கு இரு வயது இளமையான அவரது தங்கையான அலிஷா, ஷாபிலியாவின் படுகொலையில் தமது பெற்றோருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்து ஆதாரங்களை முன் வைத்ததையடுத்து அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்.
இந்திய - வங்கதேச எல்லையில் ஓடும் டீஸ்டா நதிநீர் பிரச்னை தொடர்பான முந்தைய ஒப்பந்தத்தில் மாற்றினால் ஏற்கமாட்டோம் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கடந்த வாரம் 2 நாள் வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து மன்மோகன் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது வர்த்தகம், தொழில்நுட்பம், தீவிரவாத ஒழிப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.
ஆனால் இரு நாட்டு எல்லையில் ஓடும் டீஸ்டா நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இந்த ஒப்பந்தத்தை வங்கதேச மக்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பார், மன்மோகன் வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
மம்தாவின் நிர்பந்தத்தால் ஒப்பந்தத்தில் மாற்ற செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
முந்தைய ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்த ஒப்பந்தம் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்று நம்புகிறோம் என்று வங்கதேச வெளியுறவுத் துறை செயலர் மிஜாருல் குவாயஸ் கூறினார்.
சீனாவில் தற்கொலைகள் அதிகரிப்பு.
சீனாவில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சீனா நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தற்கொலை முயற்சிகள் கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் சீனர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.
இதில் 2.87 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். இது சீனாவின் மொத்த இறப்பு விகிதத்தில் 3.6 சதவீதமாகும். 75 சதவீத தற்கொலைகள் கிராமப்புறத்தில் நிகழ்கின்றன.
தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களைவிட பெண்கள் 25 சதவீதம் அதிகம். இது வளர்ந்த நாடுகளிலிருந்து முரண்படும் அம்சமாகும். வளர்ந்த நாடுகளில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சீனாவில் நிகழும் இறப்புகளுக்கான காரணங்களில் தற்கொலை 5-ம் இடம் பெறுகிறது. 15 முதல் 34 வயதுடையவர்களின் மரணங்களுக்கு தற்கொலையே பிரதான காரணமாக உள்ளது என்று அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தனது பேரக்குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாடும் கடாபி. 
லிபியாவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த கடாபி தனது பேரக்குழந்தைகளுடன் ஆனந்தமாக விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடுகடுத்த முகத்துடன் காணப்பட்ட கடாபியின் மனதுக்குள் ஒளிந்திருந்த இளகிய மனசை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக உள்ளது.
லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்து தற்போது நாடு போராளிகள் வசமாகியுள்ளது. இதனால் அதிபர் கடாபி நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.
அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கடாபியை பதவியில் இருந்து தூக்கிய பிறகும் லிபியாவில் அமைதி இல்லை. காரணம் யார் நாட்டை ஆளுவது என்று போராளிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி லிபியாவே கதிகலங்கி இருக்கும் வேளையில் திரிபோலியில் உள்ள தனது வீடு உள்ள பாப் அல் அஸீஸியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்றில் கடாபி தனது பேரக்குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவால் லிபியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பழைய வீடியோ என்று தெரிகிறது. அந்த வீடியோவில் கடாபி தனது பேத்தியை கொஞ்சுகிறார், அவர் படுத்திருக்க பேத்தியும், பேரனும் அருகில் அமர்ந்து கொண்டு தாத்தாவிடம் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர், குடும்ப சகிதமாக அமர்ந்து உணவு உண்ணுகின்றனர், பேரக்குழந்தைகளுக்கு, தனது இரும்புக் கரத்தால் உணவு ஊட்டுகின்றார் கடாபி.
இந்த காட்சிகளைப் பார்ப்பவர்கள் எப்பொழுது பார்த்தாலும் கடு, கடு என்று இருக்கும் கடாபிக்கு சிரித்துப் பேசி, விளையாடக் கூடத் தெரியுமா என்று அதிசயிக்கின்றனர். இந்த வீடியோ கடந்த 2005ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.


சீனாவில் நச்சு கலந்த உணவை உண்ட 86 மாணவர்கள் சுகவீனம்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷன்டோங் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நச்சு உணவை உண்ட 86 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
10 மாணவர்கள் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட இவர்கள் வாந்தியெடுத்ததாகவும், உடனே சோர்ந்து போய் மயங்கி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இதேபோன்று இரண்டு பள்ளிகளில் நச்சு உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர்.
வடக்கு சீனாவில் ஹெபேய் மாகாணத்தில் உள்ள இரண்டு ஆரம்பப் பள்ளிகளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் உள்ள சமையல் மையங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
தென்கொரியாவில் ஒரு வருடத்தில் 15,413 பேர் தற்கொலை செய்துள்ளனர். தென்கொரியாவில் தற்கொலை சாவுகள் பெருகியுள்ளது.
மன அழுத்தத்தின் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். படிக்க நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காததாலும், பரீட்சையில் அதிக மார்க் எடுக்காததாலும் மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் 15,413 பேர் தற்கொலை செய்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது 3 மடங்கு அதிக மாகும். எனவே இதை தடுக்கும் முயற்சியில் தென்கொரியா அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக கூடுதல் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக தற்கொலை சாவுகள் சியோலில் உள்ள ஹான் ஆற்றில் தான் நடைபெறுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த ஆற்றில் குதித்து தான் தங்கள் உயிரை விடுகின்றனர். எனவே அந்த ஆற்றங்கரையிலும், பாலங்களிலும் கண்காணிப்பு கமெராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வறுமை ஒழிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. உலக தற்கொலை தடுப்பு தினத்தில் பேசிய தென்கொரிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுதுறை மந்திரி இந்த தகவலை தெரிவித்தார்.
லிபியாவில் நடைபெற்ற சண்டையில் இதுவரை 30 ஆயிரம் பேர் பலி.
லிபியாவில் கடந்த ஆறு மாதத்தில் நடந்த சண்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்க கடாபி படைகள் விமான தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இந்த சண்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும், 50 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் இடைக்கால சுகாதார அமைச்சர் நாஜி பர்கத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பர்கத் மேலும் குறிப்பிடுகையில் கூறியதாவது: மருத்துவமனை மற்றும் மசூதி நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 4 ஆயிரம் பேரை காணவில்லை. சிறையில் இருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடாபி ராணுவம் பலரை கொன்று புதைத்துள்ளது. புதைக்கப்பட்ட இடங்களை மீண்டும் தோண்டி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. எனவே இந்த ஆறு மாதத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
கடாபி ராணுவ வீரர்களே 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிருப்தியாளர்கள் தரப்பில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 900 பேர் கை, கால்களை இழந்துள்ளனர் என்றார்.
பெர்லின் நகரில் குண்டு வைக்க சதித் திட்டம்: இருவர் கைது.
ஜேர்மனியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள மசூதியில் லெபனான் நாட்டை சேர்ந்தவரும், பாலஸ்தீனத்தை சேர்ந்தவரும் அடிக்கடி சென்று வந்தனர். இவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள்.
சமீபத்தில் இவர்கள் ரசாயன பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர், இவர்கள் குறித்து பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இவர்களை கண்காணித்த பொலிசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இவர்கள் பெர்லின் நகரில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்: உச்சகட்ட பாதுகாப்பு.
இரட்டை கோபுர நினைவு நாள்(செப்டம்பர் 11 - 2001) அனுஷ்டிக்கவிருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் கார்குண்டு மூலம் பலத்த தாக்குதல் நடத்திட பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டு முடியும் இந்த தருவாயில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிளானில் இடம் பெற்றிருக்கிறதாம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதும் அவரது வீட்டில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவரம் என்றாலும் தற்போதைய மிரட்டல் எங்கிருந்து வந்தது என்று அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
கடந்த 2001 செப் 11 நடந்த தாக்குதலில் அமெரிக்கா கடும் பாதிப்பையும், அதிர்ச்சியையும் சந்தித்தது. பலரது உயிரை காவு கொடுத்த சம்பவத்தை அடுத்து பயங்கரவாதிகள் ஒழிப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கம் என்ற வழியில் பின் தொடர்ந்து ஒசாமா பின்லேடன் வரை பழி தீர்த்து கொன்றாகி விட்டது. இருப்பினும் அல்குவைதா என்றாலே அமெரிக்கா சற்று அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.
10 வது செப்- 11 நினைவு நாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் இங்கு தாக்குதல் திட்டம் நடத்தவிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நம்பத்தகுந்ததாகவும், இருந்தாலும்து உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் பூசி மெழுகுகின்றனர். இருப்பினும் நியூயார்க், வாஷிங்டன் நகர் முழுவதும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மர்ம தகவலில் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க், வாஷிங்டன் பயங்கரவாதிகள் குறியாக இருக்கும். கார் மற்றும் டிரக்கரில் வெடிகுண்டுகள் நிரப்பி பாலம் மற்றும் சுரங்க பாதைகளில் மோதச்செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திட திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்கென ஆப்கனில் இருந்து 2 அல்குவைதா பயங்கரவாதிகளும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் ஆக மொத்தம் 3 பேர் சேர்ந்து இந்த சதியை நிறைவேற்ற புறப்பட்டு இருப்பதாகவும் இந்த பீதி தகவல் தெரிவிக்கிறது.
இந்த மிரட்டல் குறித்து வெள்ளைமாளிகையில் அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா ஆலோசித்தார். ஆனால் வழக்கமான ஆண்டுதோறும் நினைவு நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். செய்தி தொடர்பாளர் ஜெயர்கார்ன்டு கூறுகையில்,"இந்த ரிப்போர்ட் வந்தவுடனே நாங்கள் முழு அளவிலான கவனத்துடன் செயல்படத்துவங்கியிருக்கின்றோம். எல்லா முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவிதம் என்பதை விளக்க முடியாது" என்றார்.
இது குறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் புளும்பெர்க் கூறுகையில், உறுதி செய்யப்படாத தகவல் என்று கூறினார் . ஆனாலும் உச்சக்கட்ட பாதுகாப்பு நிலையை அறிவித்துள்ளார். எதற்கான பாதுகாப்பு என்று சொல்ல முடியாது.
குறிப்பாக ஆண்டுதோறும் வரும் நினைவு நாளில் சோதனை, பாதுகாப்பு பணிகள் நடப்பது இயல்பான மாற்றம் தான். சிலவற்றை சொல்ல முடியும் சிலவற்றை சொல்ல முடியாது என்றார். பீதி குறித்து புலனாய்வு அதிகாரிகள் ஒரு புறம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF