Saturday, September 17, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை மீது வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக்கூடாது: பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்.பி.
இலங்கை மீது வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என்று பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் செயலாளருமான பிரையன் பின்லே என்பவரே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்திய உபகண்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை குணப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்போது இலங்கையினால் அதனை மேற்கொள்ள முடியாது போய்விடும்.
இலங்கையைப் பொறுத்தவரை பிணக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தபடி மனித உரிமைமீறல் விடயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முன்னேற்றமொன்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அரசியல் தீர்வொன்றிற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எனவே ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு வாய்ப்பொன்று அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தமிழர்களைப் பொலிஸில் இணைத்துக் கொள்ளுமா? கோத்தபாய கேள்வி.
தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா தயாரா என்று கோத்தபாய ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட வேண்டும் என்று தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடமையிலீடுபடுத்த தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ளும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறு வலியுறுத்தும் அமெரிக்கா முதலில் அவ்வாறு செய்து காட்டட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மான் அறிக்கையை மனித உரிமைக்கவுன்சிலில் முன்வைக்க எதிர்ப்பு: மஹிந்த சமரசிங்க.
தாருஸ்மான் அறிக்கையை மனித உரிமைக்கவுன்சிலில் விவாதிக்க பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கவுன்சில் அமர்வில் கலந்து கொள்ள ஜெனீவா சென்றிருந்த இலங்கைப் பிரதிநிதிகள் குழு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையினை மனித உரிமைக் கவுன்சிலில் முன்வைத்து விவாதிப்பது குறித்து பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அத்துடன் மனித உரிமைக்கவுன்சிலின் பல அங்கத்துவ நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நிபுணர்குழு அறிக்கையானது பக்கச்சார்பான முறையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே பல நாடுகளினதும் கருத்தாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: ரொபர்ட் ஓ பிளேக்.
மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென ரொபர்ட் பிளேக் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் இந்தியாவில் இதனைக் குறிப்பிட்டதாக இந்தியாவின் சன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா திரும்பும் போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபேட் பிளேக் இந்தியா சென்றுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக புதுடில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே பிளேக் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும.; தழிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்க கூடாது. இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு போன்றவற்றில் மேலும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்தெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு வழங்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தை நம்புவார்கள.; தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக தொடருமாறு இலங்கை அரசுக்கும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்தும் ரொபேட் பிளேக் வலியுறுத்தியதாக சன் தொலைக்காட்சி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை : சுனந்த தேசப்பிரிய மறுப்பு.
அரசாங்க ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி தம்மை தூற்றியதாக அரசாங்க ஊடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன, எனினும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது.
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றும் தாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக மாலைதீவு ஜனாதிபதி நாசீட் குற்றம் சுமத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மாலைதீவு ஜனாதிபதியுடன் தாம் நட்புறவாக பேசியதாகவும் வேறும் எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போரை அரசாங்கம் இவ்வாறு இழிவுபடுத்தி வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து மாலை தீவு ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலுள்ள இலங்கை இராஜதந்திரிகள் திடீர் மாற்றம்! அவர்களின் சேவையில் ஜனாதிபதிக்கு அதிருப்தி.
இலங்கைக்காக வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகள்  அனைவரையும்  மாற்றிவிட்டு புதிய நியமனங்களை மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
இன்னும் சில வாரங்களுக்குள் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெறலாமெனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டுச் சேவையிலுள்ள இராஜதந்திரிகள் முக்கியமான விவகாரங்கள் குறித்து சர்வதேச சமூகத்தினருடன் கிரமமான தொடர்பாடல்களை ஏற்படுத்தாமை, அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் என்பவையே அரசின் இந்தத் தீர்மானத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெளிநாட்டுச் சேவையிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திரிமார் தான்தோன்றித்தனமான முறையில் செயற்படுவதால் கொழும்பின் இராஜதந்திர வரைமுறைகள் (Protocal) அப்பட்டமாக மீறப்படுவதாக இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்து இராஜதந்திரிகளையும் கொழும்புக்கு அழைத்துக் கடும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை பணித்திருக்கிறார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கோருகிறது சர்வதேசம்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை வழங்குவது தொடர்பான அரசின் நிலைப்பாடு தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின்போது அரசின் இந்த நிலைப்பாடு அறிவிக்கப்படவேண்டுமென சர்வதேச நாடுகள் சில, அரசை அறிவுறுத்தியிருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பிலான தமது அரசின் முக்கியமான யோசனைகளை வெளியிடுவாரெனவும், இந்த மாநாட்டுக்குப் புறப்பட முன்னர் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் முக்கியமான பேச்சுகளை நடத்துவாரென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி முக்கியமாக ஆராயவிருக்கிறார்.
இந்த அதிகாரங்கள் பகிரப்படாமல் இருப்பது குறித்து முக்கியமான நாடுகள் சில அதிருப்தியை வெளியிட்டுள்ளதால் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திற்குப் புறப்பட முன்னர் ஜனாதிபதி, கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஓவியர் ஹுசைன் வரைந்த ஓவியங்கள் 4.2 மில்லியன் டொலருக்கு ஏலம்.
பிரபல ஓவியர் ஹுசைன் வரைந்த ஓவியங்கள் 4.2 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.
இந்திய ஓவியர் ஹுசைன்(95). கடந்த ஜூன் மாதம் காலமானார். இவர் வரைந்த 13 ஓவியங்கள் நியூயார்க்கின் கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது.
இதில் தெளிப்பான் முறையில் வரையப்பட்ட குதிரை ஓவியம் மட்டும் 1.14 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது. மொத்தம் 13 ஓவியங்கள் 4.2 மில்லியன் டொலர் அளவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.
டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு.
ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.
அவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது. டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது.
இதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.
திருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரியில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.
தினசரி வேலை நேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மிக மோசமான நிலையில் உலக பொருளாதாரம்: உலக வங்கி தலைவர் அறிவிப்பு.
உலக பொருளாதாரம் அபாயகரமான நிலையில் இருப்பதாக உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலிருந்து விடுபட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடன் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு பொருளாதாரம் கவலைக்கிடமாகி உள்ளது. இதுபோல் ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலைமையை சமாளிப்பது குறித்து உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியமைப்பின் பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரம் கூடி விவாதிக்க உள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
இல்லாவிட்டால் வளர்ந்த நாடுகளின் பாதிப்பு வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் நிதி நெருக்கடி மீண்டும் பரவி உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தலைவர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர் படுகொலை.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் அல்கொய்தா தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடன் பதுங்கியிருந்தார்.
இந்த ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தலைமை பொறுப்பில் உள்ள நபர் அபுஹப்ஸ் அல்சாகிரி ஆவார்.
இவர் இன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த தகவலை அமெரிக்க தரப்பு தெரிவித்தது. கொல்லப்பட்ட அபு அமெரிக்காவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆவார்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் பின்லேடனுக்கு பிறகு பொறுப்பேற்ற அதியா அப்துல் ரகுமான் பொறுப்புக்கு வந்தார். அப்போது 2ஆம் நிலை தலைவராக இருந்தவர் தான் அபு அல்சாகிரி ஆவார் என அமெரிக்க நிர்வாக தரப்பு அதிகாரி தெரிவித்தார்.
லிபியாவில் சர்கோசி: மக்கள் அமோக வரவேற்பு.
லிபியாவில் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் தற்போது புரட்சிப் படையினரின் தேசிய மாற்றக் கவுன்சில் நிர்வாகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் லிபிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நேட்டோ படையில் இடம் பெற்று இருந்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் தலைவர்கள் புரட்சிப் படையினரின் மையப்பகுதியான பெங்காசிக்கு வந்தனர்.
பெங்காசி வந்த பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனை ஆயிரக்கணக்கான லிபியர்கள் வரவேற்றனர்.
அப்போது கமரூன் உரையாற்றுகையில்,"சுதந்திர லிபியாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்றார். இடைக்கால நிர்வாகத்திற்கு முழு உதவி அளிப்போம் என இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.
லிபிய தேசிய மாற்றக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"புரட்சிப் படையினர் சிர்தே நகரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் பாதுகாப்பை ஊடுருவி சென்றுள்ளனர்" என்றார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் இடைக்கால நிர்வாத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கமரூனும், சர்கோசியும் பலத்த பாதுகாப்புடன் பெங்காசிக்கு சென்றனர்.
அவர்கள் அங்குள்ள சுதந்திர சதுக்கத்தில் உரையாற்றுவதை கேட்க ஆயிரக்கணக்கான லிபியர்கள் கூடி இருந்தனர்.
மத்திய வங்கிகளில் டொலர் புழக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய வங்கி அறிவிப்பு.
உலகின் முன்னணி மத்திய வங்கிகள் கூட்டு நடவடிக்கையாக டொலர் புழக்கத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த தகவலை ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று தெரிவித்து உள்ளது. 
ஐரோப்பிய மத்திய வங்கி நிர்வாக கவுன்சில், பாங்க் ஆப் இங்கிலாந்து, பாங்க் ஆப் ஜப்பான் மற்றும் சுவிஸ் தேசிய வங்கி ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து 3 அமெரிக்க டொலர் புழக்க மேம்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்கிறது.
இந்த நடவடிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஐரோப்பிய மத்திய வங்கியின் இந்த அறிவிப்பால் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தை 3 சதவீதம் வரை அதிகரித்தது.
சில ஐரோப்பிய வங்கிகள் கடன் வாங்குவதில் பெரும் பிரச்னையை சந்தித்தன. ஐரோப்பிய நிதி நெருக்கடி கரணமாக அமெரிக்க நிதியம் தங்களது நிதியை கடனாக அளிக்க தயக்கம் காட்டியதே இதற்கு காரணமாகும்.
பிரிட்டனில் இருந்து ஜப்பானுக்கு அணுக்கழிவு பொருட்கள்: மக்கள் கடும் எதிர்ப்பு.
பிரிட்டனில் இருந்து ஜப்பானுக்கு அணுக்கழிவு பொருள்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடுமையான கதிரியக்க அபாயத்தைக் கொண்டுள்ள இந்த அணுக்கழிவு பொருளை கொண்டு வந்ததற்கு எதிர்ப்புப் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் அணுக்கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு இப்போது முதல்முறையாக அணுக்கழிவுப் பொருள்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பெரும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரிட்டனில் இருந்து 76 பிரமாண்டமான சிலிண்டர்களில் அணுக்கழிவு பொருள்கள் கப்பல் மூலம் ஜப்பானின் ரோகாஷோ துறைமுகத்துக்கு வந்துள்ளன. 3 ஜப்பானிய மின் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கழிவுகளை தங்கள் நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக பிரிட்டன் இதனை அனுப்பியுள்ளது.
இந்த அணுக் கழிவுகளை இறுதியாக எங்கு வைப்பது என்பதை ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் அணுக்கழிவுகள் துறைமுகத்துக்கு வந்துள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் துறைமுகத்தின் வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிரியக்க அபாயம் உள்ள இந்த கழிவுகளை ஜப்பானில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோஷமிட்டனர். அடுத்த சில நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் அணுக்கழிவுகள் அடங்கிய 900 சிலிண்டர்களை ஜப்பானுக்கு அனுப்ப பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்போது இரண்டாவது முறையாக அணுக் கழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக கொண்டு வரப்பட்டது. அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் ஏற்படவில்லை.
பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி.
அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே பசிபிக் கடலில் உள்ள பிஜி நாட்டில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும், நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சுவா உள்பட பிஜி தீவின் முக்கிய தீவுகள் அனைத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் கட்டிடங்கள் மிக பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பிஜியின் டோய் தீவுக்கும், நுகோலாபாவுக்கும் இடையே பூமிக்கு அடியில் 626 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டு: விசாரணையாளர்கள் ஆய்வு.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக் மற்றும் முன்னாள் பிரதமர் டெமினிக் டேவிலே ஆகியோர் ஆப்ரிக்க தலைவர்களிடம் பல லட்சம் டொலர்களை பெற்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாரிஸ் விசாரணையாளர்கள் துவக்கக் கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.
விசாரணையாளர்கள் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சிராக்கின் முன்னாள் உதவியாளரான ரொபர்ட் போர்கி வாராந்த இறுதியில் பிரான்ஸ் ஊடகத்தில் சிராக் மீதான ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்தார். போர்கி வழக்கறிஞர் ஆவார்.
200 லட்சம் டொலர் நன்கொடையை சிராக்கிடமும், விலே பின்னிடமும் நான் தான் தந்தேன். பிரெஞ்சு காலனி ஆதிக்கக்தில் இருந்த நாடுகளின் தலைவர்களிடம் தரப்பட்ட அந்தப் பணம் பெரிய சூட்கேசில் வைத்த தரப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
சிராக் 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்தவர் ஆவார். வருகிற 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி சர்கோசிக்கு சவால் எழுப்பக்கூடியவராக விலே பின் உள்ளார். இந்த இருவரின் மீதான குற்றச்சாட்டு தற்போது பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சர்வதேச ஓசோன் தினம்.
புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான் நம்மை சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.
இதை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் திகதி "சர்வதேச ஓசோன் தினம்" கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்தான இந்த கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை.
1970களின் தொடக்கத்தில் ஆலந்தை சேர்ந்த பால் குருட்சன், புகை மண்டலங்களால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள், மித்தைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் ஓசோனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது.
இவற்றை அதிகம் வெளியிடும் பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவற்றால் ஓசோன் படலத்தில் பெரிய துளை விழுந்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.நா சார்பில் 1987 ஒசோனை பாதுகாக்க "மான்ட்ரியல் வரைவு ஒப்பந்தம்" தயாரானது.
191 நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஓசோன் துளை பெரிதாவது தவிர்க்கப்பட்டாலும், ஓசோனுக்கு நிகழ்ந்த பாதிப்பு சரி செய்யப்படவில்லை.
ஓசோன் துளை மறைய நீண்ட காலமாகும் என கருதுகின்றனர். 2006க்கு பிறகு ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள்ளாவது ஓசோன் துளை மறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல்,குளிர் சாதன பெட்டிகளிலிருந்தும், தீயணைப்பு கருவிகளிலிருந்தும் வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் வாயு, டூ வீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசு அடைதல், சி.எப்.சி, சி.எச்.4 போன்ற வாயுக்கள் வெளியேற்றத்தினால் ஓசோன் படலம் பாதிக்கப்படுக்கப்படுகிறது. இதை முடிந்தளவுக்கு தவிர்ப்பதன் மூலம் ஓசோன் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை வழங்கலாம். 
ஏமனில் தொடரும் வன்முறை: அல்கொய்தாவினர் 12 பேர் பலி.
ஏமனில் கடந்த 33 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போராட்டத்தை பயன்படுத்தி அல்கொய்தாவினர் பலர் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் சனா அருகே அல்கொய்தாவினருக்கும், அரசு படைகளுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு நடந்த சண்டையில் அல்கொய்தாவைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் தலைநகர் சனாவில் இரண்டு இடங்களில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டனர்.
எகிப்தை தொடர்ந்து ஜோர்டனிலும் இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரிகள் வெளியேற்றம்.
எகிப்தைத் தொடர்ந்து ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் எல்லை பகுதியில் கடந்த மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஐந்து பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தும், தீயிட்டும் கொளுத்தினர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் விரைந்து வந்து தூதரக அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் மீட்டுச் சென்றது.
இதே போல ஜோர்டானிலும் இஸ்ரேல் தூதரக முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. தலைநகர் அம்மானில் உள்ள தூதரகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப் போவதாக தகவல் வந்தவுடன் இஸ்ரேல் தூதரகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அவர்களது தாயகத்துக்கு திரும்பினர்.
அல்ஜவாஹிரி பாகிஸ்தானில் தான் உள்ளார்: அமெரிக்கா தகவல்.
அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி இன்னும் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்ற பிறகு இரண்டாவது இடத்தில் இருந்த ஜவாஹிரி தலைவரானார்.
ஒசாமா இறந்துவிட்டாலும் அல்கொய்தா தீவிரவாதிகளைத் தேடும் பணியை அமெரிக்கா நிறுத்திவிடவில்லை. முதலில் ஒசாமாவைத் தேடியது, தற்போது ஜவாஹிரியைத் தேடி வருகிறது.
இந்நிலையில் ஜவாஹிரி பாகிஸ்தானில் இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜாஹிரி பாகிஸ்தானைத் தவிர வேறு எங்கும் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வரவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரைத் துவங்கி நடத்தி வருகிறது. இதனால் ஒசாமைவைப் போன்றே ஜவாஹிரியும் தலைமறைவாக உள்ளார்.
9/11 தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல்கொய்தா ஒரு வீடியோ வெளியிட்டது. அதில் பின்லேடன் பேசியிருக்கிறார். ஜவாஹிரி அமெரிக்காவை மிரட்டி இருக்கிறார். இந்த ஆண்டு அரபிகளுக்கு வசந்தகாலம் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு மந்தமான கடுங்குளிர் காலம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் ஜவாஹிரியின் புகைப்படம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தாவின் ஊடகமான அஸ்ஸஹாப் இதை வெளியிட்டது. ஜிஹாதி இணையதளத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF