Friday, September 30, 2011

இன்றைய செய்திகள்.

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரிட்டனில் உள்ள தமிழர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் சாத்தியம் உள்ளதால் பிரித்தானிய அரசாங்கம் இத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய மருத்துவ அறக்கட்டளையகம் இன்று தெரிவித்திருந்தது.இந்தநிலையில், புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட 50 பேரை வாடகை விமானம் மூலம் பிரித்தானிய எல்லை முகவரகம் பலவந்தமாக திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டமைக்கு மருத்துவ சான்றுகள் உள்ளன என அறக்கட்டளையகம் குறிப்பிட்டது.இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மோசமாக நடத்தப்படும் ஆபத்து உள்ளது என பல தொண்டர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார்.அவுஸ்திரேலியாவிலிருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இலங்கைக்கு மீண்ட போது சித்தரவதைக்கு உட்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது.
கொழும்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட இடிப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை: ஐ.தே.க.
கொழும்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட இடிப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.நகர பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளை உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதென அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனையின் கீழ் வீடுகளை உடைப்பதற்கான தேவையே தற்போது அரசாங்கத்திற்கு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையானது, கொழும்பிலுள்ள வீடுகளை உடைக்கப் போவதில்லை என தெரிவிக்கும் அரசாங்கம் தேர்தல் நிறைவுபெறும் வரை காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க. வானது, இந்த வீடுகளில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தொpய வருகின்றது.ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் ஒன்றிணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வழக்கை வெற்றிக் கொள்ள உதவி புரியும் எனவும் ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது.
சார்ஜாவில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையர் கைது.
சார்ஜாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஆறு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அறுவரும் சார்ஜா நகரத்தில் அமைந்துள்ள பதினான்கு வர்த்தக நிலையங்களைக் கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக அவர்கள் தனியார் வீடுகள் சிலவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.சார்ஜா பொலிசார் மேற்கொண்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட நபர்கள் கொள்ளையடித்த பொருட்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் மடிக்கணணிகள் மற்றும் விலையுயர்ந்த செல்லிடத் தொலைபேசிகள் என்பனவும் உள்ளடங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
கொழும்பில் சிறுபான்மையினரின் வர்த்தகத்துக்கு ஆப்பு?
கொழும்பில் சிறுபான்மையினரின் கையில் உள்ள வர்த்தகத்துக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.அதன் முதற்கட்டமாக கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் அம்பாந்தோட்டைக்கு மாற்றி, அதனையே இலங்கையின்; வர்த்தகத் தலைநகரமாக்கும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அம்பாந்தேட்டையில் தேவையான அளவு நிலம் உள்ளதன் காரணமாகவுமே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும்,  அம்பாந்தோட்டை முற்றிலுமாக சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டம் என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்டத்தில் அண்மையில் துறைமுகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதுடன் விமான நிலைய அமைப்புப் பணிகளும் துரிதமடைந்துள்ளன.இந்த நிலையிலேயே இலங்கையின் வர்த்தக தலைநகராகவும் அது மாற்றப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇவ்வாறான பின்னணியிலேயே கொழும்பின் வர்த்தக நடவடிக்கைகளை அம்பாந்தோட்டைக்கு மாற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
ஐ.நா.வின் மீளாய்வை அடுத்து இலங்கை மீதான பிடி இறுகும்: இந்திய ஊடகம்.
ஐ.நா. வின் மீளாய்வை அடுத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான பிடி இறுகும் என்று இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சிறிலங்காவில் நடந்து முடிந்த போரின் போது ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளது சிறிலங்காவுக்கு மேலும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ஊடகம் பிரஸ்தாப செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மீளாய்வை மேற்கொள்ள சவூதி அரேபிய நாட்டவரான ஐ.நாவின் முன்னாள் சனத்தொகை நிதியப் பணிப்பாளர் தொராயா ஒபெய்ட்டை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.இவர் அடுத்த மாதம் ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் தனது பணியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.நா அதிகாரிகள்> அதன் களப் பணியாளர்கள் மற்றும் சிறிலங்காவில் உள்ள நிபுணர்களின் கருத்துகளையும் இவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவும் அதன் அமைப்புகளும் தவறி விட்டதாக ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததுஅத்துடன் போரின் போதான ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்தநிலையிலேயே பான் கீ மூன் தொராயா ஒபெய்ட்டை ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வுக்காக நியமித்துள்ளதாகவும், இது சிறிலங்காவுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.
இந்தியாவுக்கு 15 மில்லின் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்படவர்களாவர். 
 இவர்கள் 2கிலோ 400 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகளை முதுகில் மறைத்து வைத்து பெங்களூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விமான நிலைய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கம் அரசு உடைமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான அனைத்துத் தீர்மானங்களையும் முறியடிப்போம்: அரசாங்கம்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எவ்வகையான தீர்மானங்களை முன்வைத்தாலும் அதனை முறியடிப்போம். போர்க் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாளை பதில் கிடைத்துவிடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த தமிழர்களும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தினரும், மேற்குலக நாட்டவருமே இன்று இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
இவர்கள் மிக தீவிரமாக இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்ற போதிலும் அதனை பெரும்பாலான நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று முறியடிக்க தேவையான பொறிமுறையை கையாண்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை மகாவலி கேந்திர நிலையத்தில் நடைப்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வர சர்வதேச மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறிப்பாக கனடா மற்றும் மேற்குலக நாடுகள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசத்தில் வாழும் புலி ஆதரவாளர்கள் என்று பல்சார் கூட்டணி இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதாரங்களை தயாரித்து வருகின்றன.
இவர்களின் இலங்கைக்கு எதிரான பிரதான ஆதாரமாக ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கையாளப்பட்டு வருகின்றது.நாளை வெள்ளிக்கிழமை 30ஆம் திகதியே இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்திற்கும் இறுதி நாளாகும்.ஏனென்றால் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்த எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபைக்கோ, பொதுச் சபைக்கோ கொண்டுச் செல்ல முடியாது.
இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஏராளமான நாடுகள் உள்ளன.எனவே குறிப்பிட்ட சிலரின் செயற்பாடுகள் இலங்கைக்கு சவாலாக அமையாது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் நாம் முறியடிப்போம் என்றார்.
நம்பகமான விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும்!- அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து.
வன்னியில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இவ்வாறு வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நம்பகமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார் அவர்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ளமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே மார்க் ரோனர் இதனைத் தெரிவித்தார்.
காலாவதியான வீசாக்களுடன் இலங்கையில் தங்கியிருப்போரை கண்டுபிடிக்க விசேட பிரிவு.
காலாவதியான வீசாக்களுடன் இலங்கையில் தங்கியிருப்போரை கண்டுபிடிப்பதற்கு விசேட பிரிவொன்று நியமிக்கப்பட உள்ளது.இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீசா காலத்தைத் தாண்டி தொடர்ந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யும் நோக்கில் இந்தப் பிரிவு நியமிக்கப்பட உள்ளது.
இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட உள்ளது.சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கக் கூடிய இடங்களில் விசேட சோதனையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மைக்கல் ஜாக்சனின் இறுதி நாட்கள்: குழப்பத்தில் நீதிபதிகள்.
மைக்கல் ஜாக்சனின் நண்பரான நடன இயக்குநர் கெனி ஒட்டேகாவும் ஜாக்சனின் தனிப்பட்ட வைத்தியர் கொன்றட் முரேயினால் அவரது உடல்நிலை கவனிக்கப்படவில்லை என்றார்.2009 ஜுலை 25ல் ஜாக்சனின் இறப்பு வைத்தியரால் அறியாமல் இடம்பெற்றது என்பதை முரே மறுத்துள்ளார். ஆனால் ஜாக்சன் சக்திமிக்க மயக்கமருந்தைப் பயன்படுத்தியதால் இறந்துள்ளார் என்பதை அரச விசாரணையாளர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லொஸ் ஏஞ்சல்சில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வைத்தியர் முரேயின் விசாரணையில் முதலாவது சாட்சியாக நடன இயக்குநர் ஒட்டேகா அழைக்கப்பட்டிருந்தார். இதில் அவர் ஜுன் 19 இல் ஒத்திகைக்காக ஜாக்சன் வந்திருந்த போது எவ்வாறு கவலைப்படத்தக்க நிலையில் இருந்தார் என்று விபரித்தார்.ஜாக்சன் தன்னுடன் உரையாடியபோதும் அவர் சரியான நிலையில் இல்லையென்பதைத் தான் கண்டுகொண்டதாகவும் அதனால் அன்று ஒத்திகை வைக்கவில்லையென்றும் வைத்தியருக்கு அழைப்பு விடுத்தபோது அவரை அணுகமுடியவில்லையென்றும் அதனால் அவருக்குத் தான் உணவூட்டிவிட்டுப் படுக்கையில் போர்வையால் மூடிப் படுக்கவைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் 20ஆம் திகதி ஜாக்சனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கு நின்ற வைத்தியர் ஜாக்சனை ஒத்திகை செய்யவிடாமல் அவரது உடல்நிலையை ஒட்டேகா முன்னேறவிடாமல் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.ஆனால் ஒத்திகை செய்யக்கூடிய நிலையில் ஜாக்சன் இருக்கவில்லை என்பதை ஒட்டேகா தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் 23இலும் 24இலும் அவர் ஒத்திகைக்கு வந்திருந்தார் என்றும் அவரை அப்போது பார்த்தபோது முற்றிலும் வித்தியாசமான நபராகத் தெரிந்தார் என்றும் குறிப்பிட்டார்.
அவர் அவ்விரு நாட்களும் சிறப்பாக நடனமாடினார் என்று கூறினார். அதுதான் மைக்கல் ஜாக்சின் இறுதி மேடை நடனமாகும். இந்த நடனத்தை நீதிமன்றமும் பார்த்தது.வைத்தியர் முரே அவருக்கு உடனடியாக மயக்கத்தைக் கொண்டுவரும் propofol மருந்தினைக் கொடுத்துவிட்டு அலட்சியமாக அவரது அறையைவிட்டுச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.எனினும் வைத்தியருக்காக வாதாடிய சட்டவாளர்கள் அம்மருந்தினை ஜாக்சன்தான் வைத்தியர் வெளியில் இருந்த சமயத்தில் அளவுக்கதிகமாகச் செலுத்தியிருந்தார் என்று கூறினர்.
இந்தியாவை சமாளிப்பதற்காக தான் ஹக்கானி அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது: முஷாரப்.
ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறது இந்தியா என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே அதை சமாளிக்கத் தான் பாகிஸ்தான் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.ஹக்கானி தீவிரவாத அமைப்பு தொடர்பாக பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும், ஹக்கானி தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகினார்.அமெரிக்கா எங்களைக் குற்றம் கூறுகிறது. ஆனால் அமெரி்ககாவின் சிஐஏவுக்கும் உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது. ஏன் ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டாலும் அதை துவக்கி ஊக்குவித்து வருவது சிஐஏ தான். சிஐஏவின் செல்லப்பிள்ளை ஹக்கானி அமைப்பு என்று அமெரிக்கா மீது பதிலுக்கு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கும், ஹக்கானி அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று அநநாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் பதவியில் இருந்தால் பாகிஸ்தானை எவ்வாறு காப்பாற்றுவது என்று தான் யோசித்திருப்பேன். இந்தியா, ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்ப முயலும் போது நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாககத் தான் நினைப்போம்.வடக்கு வசிரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹக்கானி அமைப்புக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடலுக்குள் சொகுசு வாழ்க்கை: விஞ்ஞானிகள் தகவல்.
ஹெலிபேட், நீச்சல் குளம், ஏராளமான குடியிருப்புகளுடன் கூடிய கப்பல் போன்ற பிரமாண்ட மிதவையை தயாரித்தால் எதிர்காலத்தில் கடலிலேயே வாழ்க்கை நடத்தலாம் என்கின்றனர் கட்டிட கலை நிபுணர்கள்.
ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் ஆண்டுதோறும் சொகுசு கப்பல்கள் கண்காட்சி நடக்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட படகு வகைகள், சொகுசு கப்பல்கள் ஆகியவை இடம்பெறும். எதிர்காலத்தில் வர இருக்கிற டிசைன்கள் பற்றியும் கப்பல் கட்டுமான நிபுணர்கள் விளக்கம் அளிப்பார்கள்.
இந்த ஆண்டு கண்காட்சியில் இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் நகரை சேர்ந்த பிஎம்டி நீகல் ஜீ என்ற கட்டுமான கன்சல்டன்சி நிறுவனமும் பங்கேற்றது. அது அளித்த “பிராஜக்ட் உடோபியா” என்ற பிரமாண்ட திட்டம் பலரையும் கவர்ந்தது.இது பற்றி நீகல் நிறுவனத்தின் நிர்வாகி ஹன்ட்ஸ் கண்காட்சியில் தெரிவித்ததாவது: உலகில் பெரும்பாலான பகுதி நீர். எனவே, நிலத்தில் மட்டும்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற லாஜிக் வெகு காலம் சரிவராது.கடலிலும் வாழ்க்கை நடத்தும் அவசியம்கூட எதிர்காலத்தில் ஏற்படலாம். அதை சமாளிப்பதே இதன் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் பிரமாண்ட மிதவை ஒன்று உருவாக்கப்படும்.
ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கக்கூடிய ஹெலிபேட் வசதி, நீச்சல் குளங்கள், 11 தளங்களில் குடியிருப்பு வசதிகள் அதில் இருக்கும். பிரமாண்ட 4 நங்கூரமும் இதில் இருக்கும்.நிரந்தரமாக தங்கும் நாட்களில் 4 நங்கூரத்தையும் கடலில் இறக்கிவிடலாம். பெரும் சூறாவளி, சுனாமியைக்கூட தாக்குப்பிடிக்கும் வகையில் மிதவையும் நங்கூரமும் உறுதியாக அமைக்கப்படும். கடலில் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
குறைந்த வேகத்தில் மிதவையை அப்படியே நகர்த்தி இன்னொரு இடத்துக்கும் கொண்டு செல்ல முடியும். கடைகள், ஹொட்டல்கள், பார் ஆகியவை மிதவையிலேயே இருக்கும். தேவைப்பட்டால் சிறு படகுகளை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடலோர நகரத்துக்கு செல்லலாம்.உடோபியா மிதவைக்கான தொழில்நுட்ப திட்டம் தயாராக உள்ளது. எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு வருகிறது.
சவுதியில் பெண் டிரைவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து.
பெண் டிரைவர்களுக்கு மன்னர் விதித்திருந்த தடையை மீறியதற்காக சவூதி பெண் ஒருவருக்கு 10 கசையடிகள் வழங்குமாறு நீதிமன்றம் விதித்திருந்த தீர்ப்பை சவூதி மன்னர் அப்துல்லா ரத்து செய்துள்ளார்.
மன்னரின் இந்த முடிவு குறித்து தகவல் தெரிவித்த அதிகாரி அதுகுறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டார்.முன்னதாக பெண் டிரைவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி கார் ஓட்டியதற்காக சவூதி நீதிமன்றம் ஷைமா ஜஸ்டைனா என்பவருக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்குமாறு சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பெண்கள் உரிமை குறித்து மன்னர் பேசிவரும் நிலையில் பெண் டிரைவர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த நிலையில் அந்த தண்டனை உத்தரவை மன்னர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியின பகுதியில் பதுங்கியுள்ள கடாபியை பிடிக்க புது முயற்சி.
அல்ஜீரிய எல்லையில் பழங்குடியினர் பாதுகாப்பில் கடாபி பதுங்கி உள்ளார் என்று லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.லிபியாவில் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி தலைமறைவாகி விட்டார். உள்நாட்டுக் கலவரத்தின் மூலம் நாட்டை கைப்பற்றி உள்ள இடைக்கால மாற்று கவுன்சில் நிர்வாகிகள் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்கும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கவுன்சில் நிர்வாகிகள் கூறியதாவது: கடாபியின் ஆதரவாளர்கள் சிர்தே பகுதியில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம்.
கடாபியை பிடிக்கும் வரை லிபியாவுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். அல்ஜீரிய எல்லை பகுதியில் உள்ள நொமாடிக் பழங்குடியினரின் பாதுகாப்பில் கடாபி பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
அவர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா உள்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.அல்ஜீரிய எல்லையில் உள்ள கதாம்ஸ் நகரில் துரெக் பழங்குடியினரின் பாதுகாப்பில் கடாபி பதுங்கி இருப்பதாக மற்றொரு தகவலும் வந்துள்ளது. அதனால் பல வழிகளில் கடாபியை தேடி வருகிறோம். பழங்குடியினரிடம் பேச்சுவார்த்தையும் ஒருபக்கம் நடக்கிறது.
கார் வெடிகுண்டு வெடித்து 11 வயது சிறுமி உட்பட 8 பேர் பலி.
ரஷ்யாவில் கார் வெடிகுண்டு வெடித்து 8 பேர் பலியாயினர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.ரஷ்யாவின் தாஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள லொவாஷின்ஸ்கி மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 11 வயது சிறுமி உட்பட 8 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
தாஜெஸ்தான் மாகாணத்தில் பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம்களின் ஆதிக்கம் இங்குள்ளது. இந்த பகுதியில் தினமும் வன்முறை நிகழ்ந்து வருகிறது.அண்டை நாடான செசன்யாவில் முஸ்லிம்கள் 2 பிரிவாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய பகுதிக்குள் ஊடுருவி வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக தாஜெஸ்தான் மாவட்ட பொலிசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானியர் கொலை வழக்கு: 17 இந்தியர்கள் கைது.
ஷார்ஜாவில் நடந்த கொலை வழக்கில் 17 இந்தியர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த ஷார்ஜாவில் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஷார்ஜா கோர்ட்டு வழக்கை விசாரித்து 17 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 கோடி நிவாரணம் வழங்க 17 பேரும் முன்வந்தனர். இதையடுத்து அவர்களை கோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து கொலை சம்பவத்தின்போது காயம் அடைந்த 2 பேர் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து 17 இந்தியர்களும் மீண்டும் கைதாகி ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாடு திரும்ப இருந்த நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் சூறாவளி: பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நெசட் சூறாவளி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே பிலிப்பைன்சில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் நெசட் சூறாவளி செவ்வாயன்று தாக்கியது.
இந்த புயல் நேற்று சீனாவை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து கடும் சூறைக் காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் தலைநகர் மணிலா வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. சூறாவளியால் ரூ. 110 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் விமான விபத்து: 18 பேர் பலி.
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் 18 பேருடன் சென்ற சிறிய விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வடசுமத்ராவின் பஹோரக் கிராமத்தில் அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 15 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் இருந்தனர்.விபத்து குறித்து உள்ளூர் கிராமத்தினர் தகவல் அளித்ததாகவும், சம்பவ இடத்தை அடைய மீட்புக் குழுவினர் முயற்சித்து வருவதாகவும் போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பாங் எர்வான் தெரிவித்தார்.
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கைது.
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள ஏஷியன் சூப்பர் மார்க்கெட், மான்செஸ்டரில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஓர் இடம் ஆகியவற்றில் கடந்த இருவாரங்களில் பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி பணியாற்றி வந்த 27 இந்தியர்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்து குடியேற்றத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"பிரிட்டனில் வேலை வழங்குவோர், தங்கள் பணியாளர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாக பிரிட்டனில் தங்கியிருக்க உரிமை பெற்றுள்ளனரா என்பதை சோதிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்” என்றார்.
சூப்பர் மார்க்கெட் மற்றும் கட்டுமான நிறுவனம் இரண்டும் தங்களிடம் இருந்து கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள் என்பதை நிரூபிக்கத் தவறினால் ஒரு நபருக்குத் தலா 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று உலக கடல்சார் தினம்.
கடற்கொள்ளை என்பது சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்னை. இதனால் பல்வேறு இழப்புகளை உலகநாடுகள் சந்திக்கின்றன.
கடல் குற்றங்களை தடுத்து நிறுத்துவது, பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் திகதி சர்வதேச கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் உலக கடல்சார் நிறுவனத்தால் 167 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.உலகின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் பெரும்பாலான சரக்கு போக்குவரத்து கப்பல் மூலமே நடைபெறுகிறது.
கப்பலுக்கு பாதுகாப்பளிப்பது, கடற்கொள்ளையர்களிடமிருந்து பிணைய கைதிகளை விடுதலை செய்வது, கடற்கொள்ளையர்களை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு, கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகிய முக்கிய நோக்கங்களை இத்தினம் வலியுறுத்துகிறது.
உலக நாடுகளுக்கு சோமாலியா கடற்கொள்ளையர்கள் சவாலாக விளங்குகின்றனர். 12 மாதங்களில் சோமாலியா கடற் பகுதியில் மட்டும் 286 கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இவர்கள் இப்பகுதியில் செல்லும் கப்பல்களை கடத்தி கொள்ளையடிப்பதுடன் அதில் பயணிக்கும் மாலுமிகளையும் பிணையக் கைதிகளாக பிடித்துக்கொள்கின்றனர்.இதுவரை பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 1,130 மாலுமிகளில் 714 பேர் பணம் கொடுத்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக கடல்சார் நிறுவனம் தெரிவிக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவர்களை ஒழிக்க முடியும்.
புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா.
சீனா தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது.
சீனாவின் ஷென்யாங் ராணுவ மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் இருந்து ஹோங்கி 16 அல்லது ரெட் ப்ளாக் 16 என்ற ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணை தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும். அதோடு விண்ணில் மிக அதிக உயரத்தில் உள்ள மற்றும் மிகக் குறைவான உயரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் படைத்தது.சமீபத்தில் தான் இதே ரக ஏவுகணைகள் இரண்டை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் சிக்கன நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் குழு இன்று ஏதென்ஸ் வருகை.
கிரீஸ் தான் பெற்ற கடன் தொகைக்கு ஈடாக மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று ஏதென்ஸ் செல்கின்றனர்.இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளிடம் இருந்து கிரீஸ் தனது அடுத்த கட்ட தவணையை விரைவில் பெறும் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் முன்வைத்த நிபந்தனைகளின்படி கிரீஸ் பார்லிமென்ட்டில் புதிய சொத்து வரி மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சிற்குச் சென்று கடன் தவணை பெறுவதற்காக முன்வைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொண்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்கின்றனர்.இந்த ஆய்வில் கிரீஸ் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் முதல் தவணையான 110 பில்லியன் யூரோவில் இருந்து 8 பில்லியன் யூரோ கிரீசுக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில் கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கிரீஸ் தனது சக்தியை மீறி நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. 2010 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
ஜேர்மனியின் ஆதரவு: தொடர்ந்து பேட்டியளித்த ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கூறியதாவது: கிரீஸ் தனது கடன் பிரச்னையில் இருந்து மீள்வதற்கான முழு ஆதரவையும் ஜேர்மனி அளிக்கும்.
அந்நாடு தொடர்ந்து யூரோ மண்டலத்தில் நீடிக்கும். கடன் தவணைக்காக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை கிரீஸ் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆய்வுக் குழுவிடம் இருந்து சாதகமான பதிலைப் பெற முடியும்.அதேபோல் ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில்தான் எதிர்காலத்தில் கிரீசுக்கு ஜேர்மனி உதவி செய்யும்.
பல பரிந்துரைகள்: கிரீஸ் மற்றும் யூரோ மண்டல கடன் நெருக்கடியைக் குறைக்கப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அந்நாட்டிற்குக் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் கடனில் 20 சதவீதத்தைத் தள்ளுபடி செய்வதும் ஒன்று.
அதேபோல் ஒட்டுமொத்த அரசுக் கடனில் 50 சதவீதத்தைத் தள்ளுபடி செய்வது மற்றொன்று. யூரோ மண்டலத்தை கிரீஸ் கடன் நெருக்கடி பாதிக்காத வகையில் ஐரோப்பிய வங்கிகளுக்கு அதிகளவில் பணம் அளிப்பது யூரோ மண்டல கடன் நெருக்கடியைத் தீர்க்க உருவாக்கப்பட்ட ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் 440 பில்லியன் யூரோ நிதியை 2 டிரில்லியன் யூரோவாக அதிகரிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பின் நிதியை அதிகரிப்பது தொடர்பாக இன்று ஜேர்மனி பார்லிமென்ட்டில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
குற்றச்சாட்டு: பிரிக்ஸ், ஜி 20 நாடுகள், கனடா, ஜப்பான் நாடுகள், யூரோ கடன் பிரச்னைக்கு உதவுவதாக வாக்களித்துள்ளன. எனினும் இவை அனைத்தும் இன்னும் வார்த்தை அளவிலேயே உள்ளன.
அதேநேரம் ஐரோப்பிய தலைவர்கள் இப்பிரச்னைக்கு விரைந்து முடிவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.கிரீஸ் நாடு கடன் நெருக்கடியில் சிக்கிய பின் அதில் இருந்து மீள ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றிடம் இருந்து கடந்த 2010 மே மாதம் 110 பில்லியன் யூரோ(ஒரு பில்லியன் - 100 கோடி, ஒரு யூரோ - ரூ.65) முதல் கடன் தவணையாகப் பெற்றது. இதற்கு யூரோ மண்டலத்தின் 17 நாடுகளும் ஒப்புதல் அளித்தன.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 109 பில்லியன் யூரோ இரண்டாவது தவணை அளிக்க ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு யூரோ மண்டல நாடுகளில் பெரும்பாலானவை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதேநேரம் கடனை அடைப்பதற்கான கூடுதல் உறுதிகளை பல நாடுகள் எதிர்பார்க்கின்றன.இந்த இரு கடன் தவணைகளைப் பெற கிரீஸ் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் அக்டோபர் 15ம் திகதிக்குப் பின் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கையிருப்பில் இருக்காது. அதனால் முதல் தவணை 110 பில்லியன் யூரோவில் இருந்து தர வேண்டிய 8 பில்லியன் யூரோவை உடனடியாகத் தர வேண்டும் என கிரீஸ் கோரியது.
கடந்த இருவாரங்களுக்கு முன் கூடிய ஐரோப்பிய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கிரீசுக்கு 8 பில்லியன் யூரோ கொடுப்பது குறித்து அக்டோபர் முதல் வாரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அத்தொகையைக் கொடுப்பதற்கு முன் ஏற்கனவே விதிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொண்டிருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.ஐரோப்பாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகப் பெரிய கடன் நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நெருக்கடி தீயில் குளித்து வெளியில் வருவது போன்றது.
பிரான்சில் பட்ஜெட்டுகளை குறைக்க உத்தரவு.
பிரான்ஸ் தனது பட்ஜெட்டில் சலுகைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் புதன் கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. ‌இந்த பட்ஜெட்டில் இரண்டாவது உலகப்‌‌போருக்கு பின் முதன் முறையாக சலுகைகள் குறைக்கப்படவுள்ளன.
ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் 2012ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் சலுகைகளை குறைப்பதால் மட்டுமே கடன் சுமை‌ பற்றாக்குறையை சமாளிப்பது போதுமானதாக இருக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழிக்கு பழி வாங்குவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்.
அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹக்கானி குழுவை "வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு" என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க  இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர் நேற்று மீண்டும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரையும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்தார்.
அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக அதிபர் மாளிகை கூறியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் மார்க் கிராஸ்மேன் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானியிடம் தொலைபேசியில் பேசினார்.
மிரட்டல் விடுத்த பாஷா: பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் மறுபுறம் அரங்கேறி வருகின்றன. இரு தரப்பிலும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்பட்டு வருகின்றன.
இதன் மையமாக சமீபத்தில் வாஷிங்டனுக்குச் சென்ற ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் இனி ஒரு முறை அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால் அதற்குப் பழிவாங்கும் சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்படும் என சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பீட்ரசிடம் நேரில் எச்சரித்துள்ளதாக ஐ.எஸ்.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதிலடிக்குத் தயார்: நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள ஹக்கானி குழு மீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியாது என எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக நிலைக் குழுத் தலைவர் ஜாவேத் அஷ்ரப் காஜி தெரிவித்தார். பெஷாவர் ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி,"ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மிக்க பாகிஸ்தான் என்ற நோக்கத்தின் கீழ் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அதன் மூலம் தான் நாடு தற்போதைய சிக்கல்களை சமாளிக்க முடியும்" என்றார்.
பாகிஸ்தான் தனது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதைப் போலவே அமெரிக்காவும் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன், ஐ.எஸ்.ஐ மற்றும் ஹக்கானி குழு இடையிலான தொடர்பு பற்றி குற்றம்சாட்டிய 22ம் திகதி மாலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டெக்சாஸ் மாகாண ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டெட் போ, பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதி முழுவதையும் தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சபையில் பேசிய டெட் போ,"நாம் வழங்கும் நிதியை பாகிஸ்தான் நமக்கு எதிராக போர் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு அள்ளி விடுகிறது. நாம் தொடர்ந்து நமது எதிரிக்கு நிதி வழங்குகிறோம். நம்மை வெறுக்கவும் நமக்கு குண்டு வைக்கவும் நாம் அந்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறோம்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா உறுதி: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்குப் பேட்டியளித்த மைக் முல்லன்,"நான் பாகிஸ்தானின் நண்பன். ஆனால் அவர்கள் ஹக்கானி குழுவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால் தான் நான் அவர்களின் மீது குற்றம்சாட்ட வேண்டி வந்தது" என்று தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று அளித்த பேட்டியில்,"அமெரிக்கா தனது பார்வையில் தெளிவாக உள்ளது. காபூல் தாக்குதலுக்கு ஹக்கானி குழுதான் பொறுப்பு. அதனால் அக்குழு மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்" என்று கூறினார்.
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவுச் சிக்கலை சமாதானப்படுத்த சவுதி அரேபியா தலையிட்டு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,"இரு நாடுகளும் தெளிவான நேரடித் தொடர்பில் உள்ளன. அதனால் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு அவசியமில்லை" என்றார்.
பென்டகன் அதிகாரிகள் கூறுகையில்,"ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, ஆளுதவி என அனைத்தையும் வழங்குகிறது. துவக்க காலம் முதல் இன்று வரையிலான அதற்குரிய ஆதாரங்களை ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால் காபூல் தாக்குதலால் பாகிஸ்தான் தனது அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. அதனால்தான் வேறு வழியின்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது" என்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF