Thursday, September 29, 2011

இன்றைய செய்திகள்.

யாழ்பாணத்தில் உப்பு விளையுது!
யாழ்ப்பாணம் கைதடி பரவதி கடலில் உப்பு விளைந்து கிடப்பதை கண்ட மக்கள் உப்பினை சைக்கில்களிலும் இயந்திரங்களிலும் அள்ளிவருகின்றனர்.கோப்பாய் ,கைதடி, இருபாலை போன்ற இடங்களில் இருந்து வரும் மக்கள் கொழுத்தும் வெய்யில் என்றும் பாராமல் உப்பினை அள்ளி வருகின்றனர். யாழ்ப்பாண கடைகளுக்கு 1 கிலோ 6 ருபாவுக்கு கொடுக்கின்றனர். இம்முறைதான் இவ்உப்புகூடுதலாக காணப்படுகின்றது.மழை வருவதற்கு முன்னம் இவற்றை அள்ளி விட வேண்டும் என்று கொழுத்தும் வெய்யில் என்று பாராமல் வேலை செய்கின்றனர்.




முச்சக்கர வாகன சவாரியில் ரணில்...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள முச்சக்கர வாகன சாரதிளுடன் மாளிகாவத்தை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது முச்சக்கர வாகன சாரதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் முச்சக்கர வாகனத்தில் ரணில் பயணம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசுரிய, ரவி கருணாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் பிரதான நபர் மேர்வின்: விக்கிலீக்ஸ்.

இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் பிரதான நபராக அமைச்சர் மேர்வின் செயற்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்றினிஸ் A leaked US embassy cable reviled “drug kingpins in SriLanka have political patrons in the government”. என்ற தலைப்பில் அனுப்பியிருந்த இராஜதந்திர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களில் பிரதான நபராக அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுள்ளார்.இலங்கையில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் 'எக்டாஸி' என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிப் போரின்போது பிளேக்'கின் கேள்விக்கு ஏளனமாக பதிலளித்த கோத்தபாய!- விக்கிலீக்ஸ் தகவல்.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலய பகுதிகளில் ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வைத் தொடர்பு கொண்டு கூறினார். 
அதற்கு பாதுகாப்புச் செயலர் "காலநிலை சீரின்மையால் இரண்டு நாட்கள் ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே'' என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் என்று "விக்கிலீக்ஸ்" தகவல் வெளியிட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராகக் கொழும்பில் இருந்த பிளேக் இதுபற்றி வாஷிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12 ம் திகதி அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
2009 மார்ச் 10 ம் திகதி பாதுகாப்பு வலயத்தில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், இதில் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 2009 மார்ச் 12ம் திகதி பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் இருந்தாலும் கூட ஷெல் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு கோத்தபாய ராஜபக்ச, சீரற்ற காலநிலையால் இரண்டு நாட்களாக ஜெட் விமானங்கள் பறக்கவில்லையே என்று தொடர்பில்லாமல், ஏளனமாகப் பதிலளித்ததுடன் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளில் அரசாங்கம் தன்னைக் கைவிட்டுவிட்டது: மிலிந்த மொரகொட.
கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கம் தன்னை கைவிட்டுவிட்டதாக மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் உச்சகட்ட ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததன் பேரிலேயே தான் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட முன்வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் யாரும் அவ்வாறு இதுவரை தனது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை என்று தனது நண்பர்களிடம் அவர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக மொரகொட கொழும்பு மாவட்டத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரிடமும் புகார் செய்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலையில் மொரகொடவின் தேர்தல் பிரச்சாரம் கொழும்பு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் அரச தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் அரச தொலைக்காட்சியிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள்  ஒளிபரப்பாகியுள்ளன
போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் - கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பிய சிறிலங்கா நிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் 'மிகமோசமான நாள்' என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொளிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் மார்ச் 11ல் ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாளி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவிடமிருந்து கடனாகப் பெற்ற ஒவ்வொரு 100 ரூபாவிற்கும் அரசு 1000 ரூபா செலுத்துகிறது!- ரவி குற்றச்சாட்டு.
அரசாங்கம், சீனாவிடமிருந்து 100 ரூபா கடனாகப் பெற்றுக் கொண்டு, ஆயிரம் ரூபாவை திருப்பிச் செலுத்துவதாகவும், இந்தப் பணம் அனைத்தையும் மக்களே செலுத்த நேரிட்டுள்ளதாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் போலியான அபிவிருத்தியே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க பாணியில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மட்டக்குளிப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதிகமான வட்டிக்கு கடன் வாங்கி அதில் நகரம் முன்னேற்றமடைந்துள்ளது என சர்வதேசத்திற் காண்பிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
லிபியாவைப் போன்றதொரு நிலைமை இலங்கையில் ஏற்படுத்த முடியாது!– மங்கள.
லிபியாவைப் போன்றதொரு நிலைமையை இலங்கையில் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் சர்வாதிகார நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், அது லிபியாவைப் போன்றதொரு நிலைமையாக மாற்ற முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட முக்கிய ஐந்து நகரசபைகளை உள்ளடக்கி நகர அதிகாரசபையொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும், இதனை ஜனநாயக நடவடிக்கையாகக் கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா ஆதிக்கம்.
வளைகுடாவில் வாழும் பணக்கார இந்தியா்கள் பத்து நபா்களை பிரபல அமீரக நாளிதழ் வெளியிட்டுள்ளது.
வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர்
மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ், உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் 600 ஸ்டோர்களை நடத்தி வரும் இவரின் குழுமத்தில் 30,000 நபர்கள் பணி புரிகின்றனர்.
2. யூசுப் அலி – 1.75 பில்லியன் டாலர்
வளைகுடாவில் லூலூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வளைகுடாவில் லூலூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் இவரின் எம்.கே குழுமத்தில் 30 நாடுகளை சார்ந்த 25,000 நபர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவை பூர்விமாக கொண்ட யூசுப் அலி அமீரகத்தை தலைமையகமாக கொண்டு தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.பி.ஆர் ஷெட்டி – 1.72 பில்லியன் டாலர்
கர்நாடகவை சார்ந்த பி.ஆர். ஷெட்டி குவைத் போரின் போது கிடைத்த ஏற்றுமதி ஆர்டரை வைத்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ஷெட்டி தற்போது நியூ மெடிக்கல் செண்டர் மற்றும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் இவரும் அமீரகத்தை மையமாக கொண்டு தொழில் நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4.சாப்ரியா குடும்பம் – 1.3 பில்லியன் டாலர்
அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் எவருக்கும் ஜம்போவை தெரியாமல் இருக்க முடியாது. மும்பையில் ரேடியா பாகங்கள் டீலராக இருந்த மனு சாப்ரியா தான் சோனி, நோக்கியா உள்ளிட்ட எலக்ட்ரிக் ஜாம்பாவான்களின் டீலர். அவரின் மறைவுக்கு பின் வாரிசு பிரச்சனை இருந்தாலும் அமீரகத்தின் மிக முக்கிய குழுமமாக இருந்து வருகிறது.
5.பி.என்.சி.மேனன் – 1.2 பில்லியன் டாலர்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்கு சென்று பார்டனருடன் இண்டீரியர் நிறுவனத்தை ஆரம்பித்தவர். ஓமனில் ஆரம்பித்தது போன்று பெங்களூரில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கலக்கிய மேனனின் நிறுவனம் ஓமனின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று.
6.சன்னி வர்கீஸ் – 950 மில்லியன் டாலர்
 கேரளாவை சார்ந்த சன்னி வர்கிஸ், தொடக்கத்தில் ஆரம்பித்த ஒற்றை பள்ளியை இன்று 11 நாடுகளில் 1 இலட்சம் மாணவர்கள் படிக்கும் 100 பள்ளிகளாக ஜெம்ஸ் நிறுவனம் வியாபித்திருக்கிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சையில் அடிபட்டாலும் பத்மஸ்ரீ விருது வாங்கிய சன்னி வர்கீஸ் வளைகுடாவில் கல்வி சேவையில் முக்கிய நபரே.
7.ராஜன் கிலாசந்த் – 900 மில்லியன் டாலர்
 மும்பையில் 60 வருடங்களுக்கு முன் டோட்ஸல் குழுமத்தை ஆரம்பித்த ராஜன் கிலாசந்த் இன்று தன் குழுமத்தை எஞ்சினியரிங், கனிம வளம், வர்த்தகம் போன்றவற்றில் மத்திய கிழக்கில் முக்கிய ஒன்றாக நிறுவியுள்ளார்.
8.டோனி ஜாசன்மால் – 900 மில்லியன் டாலர்
 ஈராக்கில் 1919ல் ஒரு சிறு கடையாக ஆரம்பித்த ஜாசன்மால் அமீரகத்தில் இன்று பரிச்சயமான கடைகளில் ஒன்று. வீட்டு பொருட்கள், பிரிண்ட் மீடியா என்று பல்வேறு பொருட்களின் பிரத்யேக டீலராக விளங்கும் ஜாசன்மால் 5 நாடுகளில் 100 ஸ்டோர்களை வைத்துள்ளது.
9.பகாரானி – 820 மில்லியன் டாலர்
 1944ல் தென் ஆப்பிரிக்காவின் தொடங்கப்பட்ட சோய்த்ராம் இன்று அமீரகத்தை அடிப்படையாக கொண்டு 25 கடைகளை கொண்டு மிகப் பெரிய ரீடெய்ல் ஜாம்பாவானாக திகழ்கிறது
10. டாக்டர் முஹமது அலி – 725 மில்லியன் டாலர்
பட்டியலில் உள்ள 10 பேரில் 2 வது ஓமனை சார்ந்தவரான முஹமது அலி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அவர் ஆரம்பித்த கல்பார் எஞ்சினியரிங் மற்றும் காண்டிராக்டிங் நிறுவனத்தில் சுமார் 27,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம்: பாலஸ்தீனத்தில் சிறுவன் படுகொலை.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாலஸ்தீன சிறுவன் மரணமடைந்துள்ளான்.
யூத ஆக்கிரமிப்பாளர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த எட்டு வயது பாலஸ்தீன் சிறுவன் ஃபரீட் ஜாபர் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளான்.
மேற்குக் கரை நகரான அல் கலீலில் தெருவோரமாய்ச் சென்று கொண்டிருந்த போது யூத ஆக்கிரமிப்பாளர் தனது வாகனத்தால் சிறுவனை மோதிவிட்டு சென்றனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன் ஜாபரை அருகில் இருந்தவர்கள் கிர்யத் அர்பா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிக மோசமான காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஜாபர், அவசர சிகிச்சைக்காக ஹதாஸ்ஸா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான்.
பாலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீன பொது மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடைந்த செயற்கைகோளின் பாகங்களை தேடும் பணி தீவிரம்.
காற்று மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 6 டன் எடையுள்ள ஒரு செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.கடந்த 1995ம் ஆண்டு அது செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து அந்த செயற்கை கோள் படிப்படியாக பூமியை நோக்கி நகர்ந்து வந்தது. பின்னர் புவிஈர்ப்பு சக்தி காரணமாக கடந்த சனிக்கிழமை வட அமெரிக்காவில் வடகிழக்கு பகுதியில் விழுந்தது.
தொடக்கத்தில் அந்த செயற்கை கோளின் உடைந்து சிதறிய துண்டுகள் கனடாவில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த சிதறல்கள் அங்கு விழவில்லை.எனவே நாசா விஞ்ஞானிகள் உடைந்த செயற்கை கோள் சிதறல் விழுந்த இடத்தை தற்போது கணித்துள்ளனர். அதன்படி அவை அமெரிக்க கண்டத்தில் பசிபிக் கடல் பகுதியில் விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
உடைந்து சிதறிய சில துண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து தென் மேற்கில் 420 கிலோ மீ்ற்றர் தூரத்தில் விழுந்திருக்கலாம். மேலும் உடைந்த 25 துண்டுகள் அதில் இருந்து 800 கிலோ மீற்றர் சுற்றளவில் சிதறி கிடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.செயற்கைகோளின் உடைந்த உதிரி பாகங்கள் எங்கு விழுந்தது என சரியாக கண்டுபிடிக்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். எனவே அவற்றை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எகிப்தில் விரைவில் தேர்தல் நடைபெறும்: ஆளும் ராணுவ கட்சி அறிவிப்பு.
எகிப்தில் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.போராட்டத்தின் போது புதிய அதிபர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதை தற்போது ஆளும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது.
செப்டம்பர் 30ந் திகதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.அதன்படி அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 28ந் திகதி நடைபெறும் என ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சுப்ரீம் கவுன்சில் நேற்று அறிவித்தது.தேர்தல் முடிவு வருகிற ஜனவரி 10ந் திகதி வெளியிடப்பட உள்ளது. இதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
பிலிப்பைன்ஸ் புயல் மழைக்கு 16 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் மழைக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நசட் புயல் தாக்கியது.மழைக்காலம் என்பதால் ஏற்கனவே ஒரு மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் காரணமாகவும் பலத்த மழை கொட்டியது.
வேகமாக காற்று வீசியதால் கடல் அலைகள் பனை மர உயரத்துக்கு எழும்பி தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. மணிலா நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
மணிலாவில் 2009ம் ஆண்டு கடும் சூறாவளி தாக்கியது. அப்போது 12 மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியது. இதில் 500க்கும் அதிகமானோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் சிமெண்ட் ஆலை மூடப்படும் அபாயம்.
லாபார்ஜ் சிமெண்ட் ஆலையில் உள்ள ப்ராங்கி தளம் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து 12 அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தற்பொழுது 8வது நாளை எட்டியுள்ளது. இருந்தாலும் திங்களன்று இந்த உண்ணாவிரத போராட்டம் பல அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது.எதிர்வரும் 2012ம் ஆண்டில் அதிக உற்பத்தி செலவுகளை குறைக்கும் விதத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிமெண்ட் ஆலையானது 1930 ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லாபார்ஜின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் பிரான்ஸ் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ப்ராங்கி தளமானது மிகப்பெரிய சிமெண்ட் ஆலையாக கருதப்படுகிறது. இவ்வாலையில் 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொரன்ரோ நகர மேயரின் திட்டத்திற்கு எதிர்ப்பு.
துணை மேயரின் ஒவ்வொரு வீதிகளிலும் தனியார் வரியறவிடல் கட்டடங்களைக் கட்டப்போகும் திட்டத்திற்கு ரொரன்ரோ நகரசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ரொரன்ரோவின் மதிப்பீட்டு நாளில் மேயர் போர்ட்டினால் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தர்க்கத்தில் இதுபற்றியும் வேறுபல விடயங்கள்பற்றியும் வாதிடப்பட்டது.
பல மணித்தியாலங்களாக வாதிடப்பட்டதன் பின்னர் செலாவணியைத் தவிர்ப்பதற்காக நூதனசாலைகளை மூடுவது, ரொரன்ரோ மிருகக்காட்சிசாலையினை அகற்றுவது, நகருக்குச் சொந்தமான 3 திரையரங்குகளை விற்பது போன்ற விடயங்கள் பற்றியும் வாதிடப்பட்ட பின்னர் இப்படியான புதிய கட்டடத்தைத் திறப்பதுபற்றி எதுவும் கூறாமல் வாயடைத்துப்போயிருந்தார் துணை மேயர்.
பின்னர் அவர் தான் அதை ஒரு கருத்தாகவே குறிப்பிட்டதாகவும் முன்னால் கவுன்சிலராக இருந்த போல் சுதர்லான்ட் கூறிய கருத்தையே தான் கூறியதாகத் தெரிவித்தார்.இவர்களது ஒன்றுகூடலில் முதன்மையாக 28 மில்லியன் டொலர் பண வெட்டுக்கள் பற்றியே விவாதிக்கப்பட்டது. அத்துடன் ரொரன்ரோ நகரின் பண ஒதுக்கீடு தற்போது 774 மில்லியன் டொலர் என்று மேயர் குறிப்பிட்டார். இது அண்மைக்காலத்தைவிடவும் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் பண நெருக்கடியினால் சில பராமரிப்புகளை நிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் நில உரிமை மாற்றத்தினால் ரொரன்ரோவிற்கு இவ்வருடன் எதிர்பார்த்ததைவிடவும் 33 வீதம் வருமானவரி அதிகமாகக் கிடைத்ததாகத் தெரிவித்தனர்.இதனால் நகரத்திற்கு 80 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதென்றதோடு நகரத்தைப் பாதுகாக்க எம்மிடம் போதுமானளவு நிதி உள்ளதென்பதை மேயர் மறுக்கக்கூடாதென்றனர்.
சீனாவில் இரண்டு இளம் புத்த பிக்குகள் தீக்குளிப்பு.
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கீர்த்தி மடாலயத்தில் 2 இளம் புத்த பிக்குகள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
அவ்விருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திபெத்திய மடாலயங்களில் பொலிஸ், ராணுவ கண்காணிப்பும் கட்டுப்பாடும் அதிகரித்து வருவதைக் கண்டித்தும் மதச் சுதந்திரத்தில் சீன அரசு தொடர்ந்து தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்விரு புத்த பிக்குகளும் தீ வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து சிசுவான் மாகாணத்தில் உள்ள அபா என்று அழைக்கப்படும் அந்தப் பகுதி பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கிருப்பவர்கள் செய்தி ஊடகங்களைத் தொடர்புகொள்ளாமல் இருக்க சாலைகளில் பொலிசார் வாகனத் தணிக்கை சோதனை உள்ளிட்டவற்றைத் தொடங்கினர்.
செல்பேசிகள் வழியாக யாரும் எழுத்துருவில் தகவல் அனுப்ப முடியாதபடிக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இணையதளத் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
திங்கள்கிழமை பிற்பகல் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்கூட அந்த மடாலயங்கள் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பொலிஸ் தலைகளாகவே காணப்படுகின்றன.
விவாகரத்து வழக்கு: தாய் - மகளை சுட்டுக்கொன்ற மர்ம வாலிபர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நஜ்மா பீபீ(40). இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. எனவே அவர் தனது மகள் சிட்ரா(18) மற்றும் நசீர்(28) என்ற வாலிபருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.பின்னர் அவர்களுடன் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்த மர்ம வாலிபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் நஜ்மா பீபீ, அவரது மகள் சிட்ரா மற்றும் நசீர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரியவில்லை. தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற நஜ்மா பீபீ கடுமையாக போராடி வந்தார்.எனவே அவரது கணவர் கூலிப்படையை ஏவி அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடக்கிறது. சமீபெகாலமாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 1,500 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய அவுஸ்திரேலிய முதலை.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது கீலாங். இப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பெரிய ஏரியில் ஸ்நாப்பி என்ற முதலை உள்ளது. இது 8 அடி நீளம் உடையது.
முதலைக்குரிய அனைத்து குணங்களுடனும் பார்வையாளர்களை மிரட்டி வந்தது. இதை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த முதலை திடீரென நிறம் மாற தொடங்கியது.
தற்போது ஆரஞ்சு நிறத்துக்கு ஸ்நாப்பி முதலை மாறிவிட்டது. இந்த அதிசயத்தை காண பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து விட்டது.முதலை நிறம் மாறியது வியப்பாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் முதலையின் நிறம் மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு: 50000 பேர் நாடு திரும்பினர்.
வேலைக்கான விசா, ஹஜ் பயணம் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சவுதி செல்கின்றனர்.இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியுள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் திறமையற்ற ஊழியர்கள்.
அவ்வாறாக சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதனால் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.இதையறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய தூதரகத்தின் தீவிர முயற்சி காரணமாக சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுக்கு சவுதி அரசு பொது மன்னிப்பு வழங்கியது.இதையடுத்து சவுதியில் இருந்து இதுவரை 50,000 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரக முதன்மை செயலர் பருபால் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் கோபம்: நிதியமைச்சர் பதவி ராஜினாமா.
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிதியமைச்சரை ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் கண்டித்தார். இதையடுத்து நிதியமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கிறது. தற்போதைய பிரதமர் விளாடிமிர் புடின் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல் அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிரதமர் பதவிக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மெத்வதேவ் பிரதமரானால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற மாட்டேன்.எனக்கு அவருக்கும் பொருளாதார கொள்கை முடிவுகள் விஷயத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று ரஷ்ய நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
இதில் அதிருப்தி அடைந்த அதிபர் மெத்வதேவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளிக்கையில், எனது கொள்கையை விமர்சித்த நிதியமைச்சர் அலெக்ஸி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதிபரின் முடிவுகளை அரசு அமல்படுத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தால் ஒரே வழிதான் உள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்யட்டும் என்று கோபமாக கூறினார்.தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் மெத்வதேவ் கடுமையாக பேசியதை அடுத்து நிதியமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அலெக்ஸி ராஜினாமா செய்தார்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பதவியில் உள்ள அலெக்ஸி ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுக்கு பல நல்ல கொள்கைகளை கொண்டு வந்தவர்.அவரது ராஜினாமா ரஷ்ய பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும். அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஹக்கானி அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்.
தலிபான் அமைப்பினைச் சேர்ந்த ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஹக்கானி அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது என அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
எது எப்படியோ அந்த அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றுதான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இது தொடர்பான திட்டவட்ட தகவல் அந்த நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
அந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அமெரிக்கா அனுப்பிய தகவலில் உள்ளது என்றார் லிட்டில். ஹக்கானி அமைப்பு தீவிரவாதிகளுக்கு மிகவும் பத்திரமான இடமாக பாகிஸ்தான் திகழ்கிறது.ஹக்கானி தீவிரவாதிகளால் ஏற்படும் பிரச்னை மோசமானதாக உள்ளது என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹக்கானி மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என பாகிஸ்தான் கூறி வருவது பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. எனினும் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் முடிவு தெளிவாக உள்ளது என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
ஜலாலுதீன் ஹக்கானி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டு அவரது மகன் சிராஜுதீன் என்பவரால் நடத்தப்பட்டுவரும் இந்த இயக்கம் 2008லிருந்து அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது அதை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருகிறது என்றும் டோனர் தெரிவித்தார்.
சீனாவில் ரயில்கள் மோதி விபத்து: 245 பேர் காயம்.
சீனாவில் இரு அதிவேக ரயில்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. 245 பேர் காயமடைந்தனர்.
பெரும்பாலோருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பலருக்கு கை,கால் எலும்புகள் முறிந்துள்ளன. இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. சிக்னல் கோளாறால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு ரயில்களும் மோதிக் கொண்டதில் சில ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இரு ரயில்களில் இருந்தும் மொத்தம் 500 பயணிகள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.சீனாவில் கடந்த சில மாதங்களுக்குள் சிக்னல் கோளாறல் ஏற்படும் இரண்டாவது விபத்தாகும் இது. முன்னதாக ஜூலை மாதம் அங்கு புல்லட் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
மின்னலே காரணம், சிக்னல்களை சரிவரப் பராமரிக்காதுதான் ரயில்கள் விபத்துக்கு காரணம் என்று அந்நாட்டு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். ஆனால் இதை அந்நாட்டு ரயில்வேத் துறை மறுத்துள்ளது.மழைக் காலத்தில் இடி, மின்னலால் இதுபோன்று ரயில் சிக்னல்கள் அடிக்கடி கோளாறாகி வருவதாக அந்நாட்டு ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் சீனா.
அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ள நிலையில் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா சவுதி அரேபியா சென்றுள்ளார்.
அதேநேரம் இஸ்லாமாபாத்திற்கு நேற்று வந்த சீன துணைப் பிரதமர் மெங் ஜியான்ஷூவூ சீனாவின் முழு ஆதரவும் பாகிஸ்தானுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில் ஹக்கானி குழு மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சவுதி அரேபியா இவ்விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முயன்று வருகிறது. இதன் முதற்கட்டமாக ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா நேற்று முன்தினம் திடீரென சவுதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதேநேரம் சவுதி உளவுத் துறை அதிகாரிகள் குழு ஒன்று இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளது. ஆனால் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவுச் சிக்கல் குறித்து விவாதிக்கத்தான் அக்குழு வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ், பாஷா இஸ்லாமபாத்தில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டருடன், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் மார்க் ஸ்டோர்த் இது வழக்கமான சந்திப்பு என்று தெரிவித்தார்.
இந்த ஒட்டுமொத்த சந்திப்புகளும் ஒருபுறம் அமெரிக்காவை சமாதானப்படுத்த முயன்று கொண்டே மறுபுறம் சீனாவுடனான தனது நெருக்கத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளாக நிபுணர்களால் கருதப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சீன துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மெங் ஜியான்ஷூவூ இஸ்லாமாபாத் வந்தார். வெள்ள நிவாரணப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக 250 மில்லியன் டொலர் மதிப்பில் இருதரப்பிலும் நேற்று முன்தினம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பயங்கரவாதத்துக்கு எதிராகவும், இந்த மண்டலத்தில் அமைதி நிலவவும் பாகிஸ்தானுக்கு சீனா தனது முழு ஆதரவையும் அளிக்கும் எனக் கூறிய மெங்,"இந்தாண்டு சீனா, பாகிஸ்தான் உறவின் 60வது ஆண்டு. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ராணுவத் தலைமைத் தளபதி அஷ்பாக் கயானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ராணுவ தளபதி காலித் ஷமீம் வைன் ஆகியோரையும் மெங் நேற்று சந்தித்துப் பேசினார்.பாகிஸ்தான் சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதில் தீவிரமாக இயங்கி வருவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் “எக்ஸ்பிரஸ் டிரிபியூன்” பத்திரிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பீஜிங் சென்றிருந்த பிரதமர் யூசுப் ரசா கிலானி இருதரப்பும் உடனடியாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, இந்தியா உறவுகளில் சிக்கல் உருவாகும் எனக் கூறி சீனத் தலைமை அப்போதைக்கு கிலானியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF