Thursday, September 8, 2011

அழகு - பூமியும் அதில் வாழும் மக்களும்...


நாம் வாழும் இந்த யுகம் மிகவும் அசாதாரமான ஒன்று என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.காரணம், பூமி தன் வாழ் நாள் முழுவதும் கண்ட மாற்றத்தை விட கடந்த ஐம்பது வருடங்களில் கண்ட மாற்றம் தான் மிக மிக வலியதாம்.அழிந்து வரும் காடுகள், பெருகி வரும் நகர பரப்பளவு, நாம் தினம் தினம் கரைக்கும் இயற்கை வளங்கள், வாகனங்களும் உற்பத்திச்சாலைகளும் கக்கும் புகை இவையெல்லாம் நம் பூமியின் வாழ்நாளை குறைக்கும் காரணிகலாம்.

நாம் வாழும் வாழ்க்கைப் பாணியை மாற்றி, மீதமிருக்கும் இயற்கை வளங்களை இழந்துவிடாமல் தடுக்க, பூமியின் தட்ப வெட்பநிலை மாற்றத்தால் நிகழும் வெள்ளம் பூகம்பம் சுனாமி போன்றவற்றை குறைக்க,  இன்னும் பத்து வருடங்கள் தான் இருக்கிறதென கணித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.மேற்சொன்னவற்றை உலகிற்கு உணர்த்த "The Home Project" என்றொரு செயல் திட்டத்தை நிறுவி மூன்று வருட உழைப்பு, ஐம்பது நாடுகளில் நூத்தி இருபது இடங்களின் மேல் பறந்து "Home" என்ற இந்த குறும் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

உயிர் இந்த பூமியில் வந்ததெப்படி, வாழ கற்றதெப்படி, மாற்றங்கள் கண்டதெப்படி என்பதில் ஆரம்பித்து ஆப்பிரிக்க காடுகள், அலாஸ்காவின் பனி உறைந்த ஏரிகள், துபையின் செயற்கை தீவு, அன்டார்டிக்காவின் பனிப் பாளங்கள், வட துருவத்தில் கரைந்து கொண்டிருக்கும் பனி, வறுமையில் வாடும் பங்களாதேஷ்ல் வெள்ளத்தில் மூழ்கிய வயல்கள், சிலி தீவில் குமுறும் எரிமலைகள், ஹைதியில்(Haiti) மண் சரிவினால் காணாமல் போகும் மலைகள், நடுக்கடலில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் டென்மார்க்.. இவை மட்டுமல்லாமல் சீனா, தென் கொரியா, கோஸ்ட்டா-ரீக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், க்ரீஸ், முரீசியஸ் தீவுகள், இந்தியா, இந்தோனேசியா, ஐஸ்லாந்து, ஜப்பான், போட்ஸ்வனா, பிரேசில், கனடா மற்றும் பல நாடுகளில் நம்மை கொண்டு சேர்க்கிறது இந்தப் படம்.

பிரமிப்பூட்டும் கோணங்களில் சுழல்கிறது முழு படமும். படம் முழுவதுமே ஹெலிகாப்டர்களில்  பறந்து படமாக்கியிருக்கிறார்கள். ஹெலிகாப்டரின் முன் பகுதியில் இறுகப்பற்றிக்கொள்ளும் 'CineFlex' எனப்படும் அதி நவீன காமெராவை பயன்படுத்தி தான் இந்த திரை ஜாலம் செய்தார்களாம்.

யான் ஆர்தஸ் - பேர்ட்ராண்ட்(Yann Arthus-Bertrand) என்ற பிரெஞ்சு நாட்டு புகைப்படக்காரர் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தை பற்றிய அனுபவங்களை அவர் கூறுகையில், முதல் வருடம் பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்து அந்தந்த நாட்டில் தாங்கள் படம் பிடிக்க அனுமதி கேட்டே அலைந்தார்களாம்.  இதில் இந்திய அரசாங்கத்திடம் அனுமதி வாங்க அலைந்ததைப் பற்றிச் சொல்லி புலம்பி இருக்கிறார் ராணுவம், வெளியுறவுத்துறை, தூதரகம், விமானப்படை, அரசியல்வாதிகள்  என முன்னும் பின்னும் இவரை அலைக்கழித்து இறுதியில் தான் அனுமதி அளித்ததாம் இந்திய அரசாங்கம்.மேலும் சில நாடுகளில், இவர் படம்பிடிக்க பயன்படுத்திய கேமராவால் அனுமதி மறுத்தார்களாம். காரணம், இந்த கேமராக் கண்கள் பயன்படுத்தும் High-Definition(HD) தொழில்நுட்பம் கொண்டு சுமாராக ஐம்பது மைல் தூரத்தில் சுண்டி விடப்படும் நாணயத்தில் பூவா தலையா என்பதை துல்லியமாக சொல்லி விடலாமாம். ராணுவ ரகசியங்களை வேவு பார்க்க வந்ததாகவும் துரத்தினார்களாம் இதனால்.

இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் உருவாக அதற்க்கு பண உதவி செய்ய முன்வந்தது PPR குரூப் என்னும் பிரெஞ்சு நாட்டு நிறுவனம்(நம்மில் பலருக்கு பூமா(Puma) காலணிகள் மற்றும் கூசி(Gucci) என தெரிந்திருக்கும்)மொத்தம் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  இந்த படம், உலகம் முழுவதிலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்பு, கேமரா என பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறது.

Youtube தளதில் மட்டும் இரண்டு கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

படத்தின் சாராம்சம்...
அழகு - பூமியும் அதில் வாழும் மக்களும்.
பூமியின் அழகை போற்றி பாதுகாப்பதும் அதில் வாழும் மக்களின் பொறுப்பு தான்.சுமாராக ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த படம் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
இதோ உங்கள் பார்வைக்கு..

http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU&feature=watch-now-button&wide=1
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF