Monday, September 5, 2011

இன்றைய செய்திகள்.

காலிமுகத்திடலின் மேலும் 7 ஏக்கர் நிலம் சீனாவின் கைவசம்.

கொழும்பு காலிமுகத்திடலின் முன்னால் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு வழங்க இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் சி.ஏடி.ஐ.சி என்ற விமான தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இந்த காணித் தொகுதி வழங்கப்படவுள்ளது.
முன்னதாக இந்த காணி 125 மில்லியன் டொலர் அதாவது 13.7 பில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படவிருந்தது. எனினும் தற்போது அதனை 99 வருட குத்தகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு எதிர்ப்பு ஏற்படவே தீர்மானம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் புதிய குத்தகை தீர்மானம், சீன நிறுவனம் தாம் ஏற்கனவே வழங்கிய பணத்தை திரும்பக் கேட்டதனால் ஏற்பட்ட ஒன்றா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
ஏற்கனவே இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இடத்தின் 1- ஏக்கர் நிலம் ஹொஹ்கொங்கின் சங்ரி-லா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் வியாபாரத்தொகுதி என்பவற்றுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தற்போது சீனாவின் சி.ஏடி.ஐ.சி நிறுவனத்துக்கு குறித்த காணிக்கு அருகில் உள்ள 7 ஏக்கர் காணி 99 வருட குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் 41 கோடி ரூபா நட்டம்.

தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் இதுவரையில் 41 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2500 மெற்றிக் தொன் தரம் குறைந்த பெற்றோல் சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த பெற்றோலை சந்தைக்கு விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் அதனை நெப்டா எரிபொருளாக மாற்றி, இலங்கை மின்சாரசபைக்கு வழங்கப்படவுள்ளது.
தரம் குறைந்த பெற்றோல் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள சகல நட்டத்தையும் இறக்குமதி செய்த நிறுவனத்திடம் அறவீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனினும், தரம் குறைந்த பெற்றோலை தாம் வழங்கவில்லை எனவும் நட்டத்தை பொறுப்பேற்க முடியாது எனவும் குறித்த சிங்கப்பூர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சண்டேலீடர் தலைகுனியாது பயமின்றி தன் பணிகளை மேற்கொள்ளும் : நிர்வாகம் தெரிவிப்பு.

சண்டேலீடர் செய்திதாள் பயமின்றி யாருக்கும் தலைகுனியாமல் தமது பணிகளை தொடரும் என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது
சண்டேலீடர் செய்திதாள் நிறுவனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
வர்த்தகரான அசங்க செனவிரட்ன என்பவர் அதனை கொள்வனவு செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் லால் விக்கிரமதுங்கவின் உரிமையின் கீழ் ப்ரட்ரிக்கா ஜேன்ஸ், மோகன்லால் பியதிஸ்ஸ ஆகிய ஆசிரியர்களின் தலைமையில் சண்டேலீடர் மற்றும் சகோதர செய்திதாளான இருரெச என்பன தொடர்ந்தும் இயங்கும் என்று சண்டேலீடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் அவசரமாகத் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படை விமானம் சீனாவில் இருந்து ஆயுத தளபாடங்களை ஏற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தது.

இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த விமானம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏழு பேருடன் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கொண்டிருந்த போதே அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த விமானம் சீனாவில் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு ஆயுததளப்பாடங்களை ஏற்றி வந்தது என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக போக்குவரத்து விமானம் கொழும்பில் இருந்து டாக்கா சென்று முதலில் எரிபொருள் நிரப்பியது. அதன் பின்னர் சீனாவின் குங்மின் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சீனாவின் சொங்குயிங் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தது. அங்கிருந்து சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களையும், ஒரு தொகுதி வெடிபொருட்களையும் ஏற்றிக் கொண்டு கொழும்பு வரும் போதே சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த விமானத்துக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கியதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது. அதேவேளை சீனாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றி வந்த சிறிலங்கா விமானத்துக்கு சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே அது கொழும்பில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற போது அவசரமாகத் தரையிறங்கியதாக சென்னை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சட்டவிரோத காணாமல் போதல் தொடர்பான ஐ.நா சாசனத்தில் கையெழுத்திடுமாறு இலங்கைக்கு வலியுறுத்தல்.

சட்டவிரோதமான காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இந்தக்குழு இலங்கைக்கு வருகைத்தர பல தடவைகள் அனுமதி கோரியபோதும் அதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என்று சட்டவிரோதமாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுபபினர் மார்டிஸ் ஜோசு பெல்லாடோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறும் நிறுவன நிகழ்வுக்கு வருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் இரண்டு ஞாபகமூட்டல் கடிதங்களை ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத காணாமல் போவோர் தொடர்பான நடவடிக்கைக்குழு, இலங்கைக்கு அனுப்பியபோதும் அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் 12,230 முறைப்பாடுகளை ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் நடவடிக்கை குழு கொண்டிருக்கிறது.
இதில் 40 முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
6535 முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைனைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. எனினும் 5653 முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
இதேவேளை இலங்கை அரசாங்கம் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காணாமல் போதல் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு பலதடவைகளாக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தரமற்ற பெற்றோலை ஏற்றுமதி செய்யவில்லை : துபாய் நிறுவனம் மறுப்பு.

இலங்கையில் தரமற்ற பெற்றோலை சந்தைக்கு விட்டமை தொடர்பி;ல் தற்போது அரசாங்கம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கிறது
இந்த தரமற்ற பெற்றோல், சிங்கப்பூரில் உள்ள துபாய் நிறுவனம் ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும் ஈ.என்.ஓ.சி என்ற குறித்த துபாய் நிறுவனம் இலங்கையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நியமங்களுக்கு ஏற்பவே தமது நிறுவனம் பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததாக அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை அதிகாரி ஜேர்மி சியா தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கை அரசாங்கம், தம்மிடம் நட்டஈட்டை கோருமானால் எவ்வித நட்டஈட்டையும் வழங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெற்றோல் துபாய் நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த கடனை மீளசெலுத்துவதில் எவ்வித தாமதமும் காட்டப்படமாட்டாது என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குறித்த தரமற்ற பெற்றோல் இறக்குமதி விடய குற்றச்சாட்டு தொடர்பில் பெற்றோலிய திணைக்கள தலைவர் ஹரி ஜெயவர்த்தனவை பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர் பலமான அரசியல் பின்னணியை கொண்டிருப்பதால் அது கைகூடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தியை புலிகள் கொலை செய்தமை குற்றமல்ல, அது ஓர் பழிவாங்கலே : சிபிஐ அதிகாரி.

ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றம் அல்ல என குற்றவாளிகள் நினைத்ததாக முன் நாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.
இவர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர்.
இவர் ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்பதற்கான காரணத்தைக்கூறுவதுதான் விநோதமானது; ரகோத்தமன் கூறுகின்றார்.
நாங்கள் குற்றவாளிகளின் இடங்களை சோதனையிட்டபோது ஆயிரக்கணக்கான சான்றுகளையும் சத்தியக்கடதாசிகளையும் கண்டு பிடித்தோம். அவை அனைத்தும் இந்திய இராணுவம் தமிழீழத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூளியங்களை காட்டின. கற்பளிப்பு, கொலை, கொள்ளை ஆகியவற்றை செய்த இந்திய அமைதிப்படையினரின் குற்றங்களை நிரூபிப்பதற்கான சான்றுகளே அவை அனைத்தும். அடுத்ததாக தம் உயிரையே அர்ப்பணித்து செயற்படக்கூடியவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்கின்றார்.
ஆகவே ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கான 100 சதவீத காரணம் புலிகளுக்கே உள்ளன என கருதினோம். ராஜிவ் கொலையினை அவர்களே செய்தார்கள் என்றாலும் அது ஒரு குற்றம் இல்லை என அவர்கள் நினைக்கின்றார்கள் மாறாக அது ஒரு தண்டனை வழங்கலே என் இப்போதும் நினைப்பதாக ரகொத்தமன் கூறுகின்றார்.
தான் முதன் முதலில் முருகனை சந்தித்தபோது அவர் தன்னை மிருகங்கள் போல் சித்திரவதை செய்யவேண்டாம் தாம் கிரிமினல்கள் அல்ல. தாம் போராளிகள் என கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார். ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஒரு satani force பிசாசுப்படைகள் என்பதனால் அவர்களிடம் மனிதாபிமானம் இருக்காது என்றும் கூறுகின்றார்.
ஒட்டுமொத்தத்தில் இவரிடம் இருந்து என்ன புரிவதென்றால் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பின் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்பமே; அதனை செய்தது புலிகள்தான் அதில் இருந்தே விசாரணையே ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான்.
இந்தியா இலங்கையை அதிக கவனத்தில் எடுத்துக் கொண்டது : விக்கிலீக்ஸ்.

இலங்கையில் நடைபெற்றதாக கூறும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் பிரயோகித்த அழுத்தங்களின் போது இலங்கை சீனாவினை நோக்கி நகர்ந்தமையால் இந்தியா அதனை அதிக கவனத்தில் கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகாரத்துறைச் சேர்ந்த அதிகாரியொருவர் இந்த தகவலை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்தின் பின் இலங்கையில் ஈரான் மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததை அடுத்து இந்தியா தனது விசேட கவகத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயவர்த்தன, பிரேமதாஸவின் உளவாளியாக செயற்பட்டமை காரணமாகவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார்: லங்காபுவத் தகவல்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் அமிர்தலிங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாஸ ஆகியோரின் உளவாளியாக செயற்பட்டார்.
இதன்காரணமாகவே அவரை தமிழீழ விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றதாக இலங்கை அரசாங்கத்தின் நீண்டநாள் செய்தி நிறுவனமான லங்காபுவத் குறிப்பிட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அமிர்தலிங்கம், வோட் பிளேஸில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் வீட்டில் வைத்து அவரையும் முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவையும் சந்தித்ததாக லங்காபுவத் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்தே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு தமது சகாவான கிட்டுவுக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் மகளிர்பிரிவு போராளியான சுபாஸினி, அமிர்தலிங்கத்துடன் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி, தகவல்களை கிரமமாக பெற்று வந்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி பிரேமதாஸிவின் கோரிக்கையை ஏற்றே அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் நாடாளுமன்றத்தில் 1989 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரையாற்றினர்.
இந்த தகவலை பிரேமதாஸவுடன் நெருங்கி செயற்பட்டு பின்னர் பிரேமதாஸவை கொலை செய்ததாக கூறப்படும் பாபு என்ற போராளி, தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்த மாத்தயா என்ற மகேந்திரராஜாவுக்கு தெரிவித்ததாகவும் லங்காபுவத் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறினால் செயற்படுத்துவது எப்படி? பான் கீ மூன் ஆலோசனை.

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீ மூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் இலங்கை அரசும் தனது எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18 வது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. அந்த அமர்வில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரமே முக்கியமாக விவாதிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்படப் பல நாடுகள் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்குலக நாடுகளால் இந்தக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு மனித உரிமைகள் சபையில் இவ்வாறு மேற்கு நாடுகளால் கொண்டுவரப்பட்ட இதுபோன்றதொரு தீர்மானம் இலங்கையால் முறியடிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் போருக்குப் பிந்திய அபிவிருத்திக்கு உதவ வேண்டும் என்று இலங்கை ஆதரவு நாடுகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு ஆதரவான அந்தத் தீர்மானத்தை அன்று இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் என்பன ஆதரித்தன.
எனினும் அதன் பின்னர் போர்க் குற்றச்சாட்டுக்களில் இலங்கை ஈடுபட்டது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை மற்றும் பிரிட்டனின் சனல்4  தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் என்பன வெளியாகிய நிலையில் உலகின் கருத்து இன்று பெருமளவில் மாற்றமடைந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணையை நடத்துமாறு மேற்குலக நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அவ்வாறான ஒரு விசாரணையை நடத்த அடியோடு மறுத்து வருவதுடன் போர்க் குற்றங்கள் எவையும் இங்கு இடம்பெறவில்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.
இத்தகைய பின்னணியிலேயே தற்போது மீண்டும் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான ஒரு நிலையில் என்ன செய்வது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பன தொடர்பாகவே பான் கீ மூன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிறைவேற்றப்படும் தீர்மானம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும்படி கோரும் என்றே அநேகமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் அத்தகைய குழுவை எவ்வாறு நியமிப்பது, அதற்கான சட்டதிட்டங்கள் என்ன, விசாரணைக்கான காலவரையறை, உள்ளடக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பன உட்பட்ட பல விடயங்களையே ஐ.நா. செயலாளர் ஆராய்ந்திருக்கிறார் என்று தெரியவருகிறது.
ஐ.நா. செயலரின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவுக்கான இலங்கை தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு?

காவல்துறைத் திணைக்களத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று உயரதிகாரிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தல், லஞ்சம் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் 28 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் ஆடம்பர சொகுசு வீடொன்றை அமைத்த காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளது.
கலகங்களின் போது கோரிக்கை விடுத்தால் மட்டுமே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் : ஜகத் ஜயசூரிய.

நாட்டில் இடம்பெறும் கலகங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் காவல்துறையினர் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தால் மட்டுமே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால், அவசர நிலைமைகளின் போது இராணுவத்தினரின் உதவியை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாது.
தேவை ஏற்பட்டால் காவல்துறையினர் எழுத்து மூலமான கோரிக்கை விடுக்க வேண்டும்.
குறித்த பிரதேசமொன்றின் கலக நிலைமையை கட்டுப்படுத்த பிரதேச நீதவானின் எழுத்து மூல உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறான நிலைமைகளில் மட்டுமே இராணுவத்தினர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களுக்கு அதிகளவு நன்மை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள போதிலும் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேவை ஏற்பட்டால் படையினர் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையில் முப்படையினர் கூட்டாக இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளைப் பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இடைநிறுத்தம் நீக்கப்படவில்லை!– அமெரிக்கத் தூதரகம்.

அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்ட இடைநிறுத்தம் இன்னமும் நீக்கப்படவில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
வரிச் சலுகைத் திட்டம் நீடிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், உண்மையில் வரிச் சலுகை நீடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
வரிச் சலுகை நீடிப்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் சபையே தீர்மானம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுவரையில் வரிச் சலுகைத் திட்டத்தை நீடிப்பது குறித்து தீர்மானம் எதனையும் காங்கிரஸ் சபை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக வருடாந்த அடிப்படையில் வரிச் சலுகைத் திட்டம் நீடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைத் திட்டம் கடந்த வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.
ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சி : லக்பிம.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதுற்கு சில நாடுகளும் புலம்பெயர் தமிழர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் இந்த சதித் திட்டம் தொடர்பில் புலம்பெயர் இலங்கையர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக ஆளும் கட்சி அமைச்சர்களும் சட்ட வல்லுனவர்களும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வலயம் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை உலக நாடுகள் அறிந்திருந்தன! விக்கிலீக்ஸ் தகவல்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக்கொண்டன என்று பிபிசிக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, ''தான்'' இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பசில் ராஜபக்ஷ அவர்கள், வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5 ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூடாரங்கள்பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.
பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக பசில் ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பல பொதுமக்களைக் கொன்றதாகவும், அத்தகைய தாக்குதல்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தத் தகவல்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.
பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ அவர்களுடனான இரு அண்மைய சந்திப்புக்களின் போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்த விடயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வே தூதுவர் கூறியிருக்கிறார்.
ஆனால், மிக மோசமான மனித நேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்ததாகவும், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குவதற்கு அப்பால், தமது முன்னைய கரிசனைகள் பலவற்றுக்கு இலங்கை சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த நாடுகள் கூறியதாகவும் கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இலங்கைப் படைகள் புதிய பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்தன.
விடுதலைப்புலிகளுடன் சிக்குண்ட பொதுமக்களுக்கு மனித நேய உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு உதவியாகவே பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியிருந்தது.
2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த நோர்வே, வடக்கில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக தாம் விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுப்பதாக இணைத்தலைமை நாடுகளுக்கு கூறியிருந்தது.
மேலும் உணவுகளை வழங்குவதற்கான பசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகளை, அவர்களை விமர்சிக்கும் வகையிலான பகிரங்க அறிக்ககைகள் பாதிக்கலாம் என்று நோர்வே வாதிட்டதாக அமெரிக்க தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளது.
சுகாதார அமைச்சருக்கே தவறான மருந்து.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தனியார் மருந்தகமொன்று தவறான மருந்து வழங்கிய சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் மருந்தகமொன்றிலேயே மருந்துச்சிட்டையை கொடுத்தபோது அமைச்சருக்கு தவறான மருந்து வழங்கப்பட்ட இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் இம்மருந்தகம் முற்றுகையிடப்பட்டபோது, இத்தகைய நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதையடுத்து அமைச்சர் சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய அதிகார சபையின் தலைவர் டாக்டர் ஹேமந்த பேனராகம தலைமையிலான குழுவினரால் இம்மருந்தகம் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
கருவில் இருக்கும் சிசு முதல் வயோதிபர் வரையில் அனைவரையும் அரசாங்கம் நிர்க்கதியாக்கியுள்ளது!– சஜித்.

கருவில் இருக்கும் சிசு முதல் வயோதிபர் வரையில் அனைவரையும் அரசாங்கம் நிர்க்கதியாக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினால் சிசுக்கள், கர்ப்பிணிகள், இளைஞர்கள், யுவதிகள் என நாட்டின் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகளை தொடர்ந்தும் அனுமதிப்பதா என்பதனை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கொழும்பில் இனி காணிகள் இல்லை : சரத் பொன்சேகா.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு தலைநகர் கொழும்பில் இனி காணிகள் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்றும் சரத் பொன்சேகா கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்க அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கு சரத் பொன்சேகா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இனி காணிகளை விற்பனை செய்வதில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
விற்பனை செய்வதற்கு இனி காணிகள் எங்கே இருக்கின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நூறு ஏக்கர் காணி விற்பனை செய்து பெரும் தொகையான பணம் தரகாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ வீடுகள், சிறைச்சாலை காணிகள் உள்ளிட்ட காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மக்களின் வளங்களே இவ்வாறு கொள்ளையிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் முபாரக், கடாபி போன்றவர்களும் இதனையே செய்தார்கள். எனவே மக்களை இதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டியில் இலங்கை பலிக்கடாவாகுமா?

இலங்கையின் வான் எல்லைக்குள் அமெரிக்கப் போர் விமானங்களின் அணி ஒன்று ஊடுருவியது பற்றிய சர்ச்கைள் தணிந்துள்ள நிலையில், சீன வேவுக் கப்பல் ஒன்றுக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்தது பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதுவும் இந்தியாவை வேவு பார்த்த சீன வேவுக் கப்பலே கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தமான் கடலில் சுமார் 20 நாட்கள் வரை தங்கி நின்ற இந்தக் கப்பல் இந்திய கடற்பகுதியில் வேவு பார்த்துள்ளது.
மீன்பிடி இழுவைப் படகு போன்று தோற்றமளித்துள்ள இந்தக் கப்பலை இந்தியக் கடற்படை சுமார் மூன்று வாரங்கள் வரை கண்டு கொள்ளாதிருந்துள்ளது.
அதற்குப் பின்னர் தான் இந்திய கடற்படையினரின் ரேடர்களில் அது சிக்கியுள்ளது.
அது சீன வேவுக் கப்பல் என உறுதி செய்த பின்னரே அதனை இந்தியக் கடற்படை மடக்க முயன்றுள்ளது.
இந்தியா உசாரடைந்து விட்டதை உணர்ந்த சீனக் கப்பல் சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து கொழும்புத் துறைகத்துக்குள் தஞ்சமடைந்து விட்டது.
22 ஆய்வு கூடங்களுடன் கூடிய இந்தக் கப்பல் இந்து சமுத்திரத்தின் கடலின் ஆழம், வெப்பநிலை, தன்மைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு தரவுகள் சேகரித்திருக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர.
சீனா கட்டி வரும் விமானம் தாங்கிக் கப்பலுக்கும் டோபிடோக்களைப் பயன்படுத்துவதற்கும், நீர்மூழ்கிகளின் பயன்பாட்டுக்கும் இவை தேவைப்படுவதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், சீன வேவுக் கப்பல் என்ன தகவலை திரட்டியது என்ற உண்மையான விபரம் யாருக்கும் தெரியாது. அது சிக்கியிருந்தால் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.
ஆனால், இந்தியா பொதுவாக கிழக்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்துவது வழக்கம்.
அண்மைக்காலமாக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்ட போது சீனா அதனை வேவு பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் வலுப்பெற்று வருவது இந்தச் சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் சீனாவின் கடல் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் அதிகரிக்கும் என்றும் இவை போன்ற ஊடுருவல்கள் இடம்பெறும் என்றும் முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
அதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளன. சீனா ஒரு விமானம் தாங்கிக் கப்பலை தானாகவே கட்டி முடித்துள்ளது.
இது வெள்ளோட்டம் விடப்பட்டு விட்டது. ஆனால். இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதில் சில திருத்தங்கள், சீரமைப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதை சீனப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் யங் யுஜின் கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சீனாவின் கடற் பாதுகாப்பு மூலோபாயமானது ஆழ்கடல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சீனாவின் இந்த விமானம் தாங்கிக் கப்பல் ஆசிய நாடுகள் பலவற்றுக்கு பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா இந்த விடயத்தில் கலக்கமடைந்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சீனாவின் படைபலக் கட்டுமானங்கள் இந்தியாவை அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் என்றும் அச்சமூட்டும் வகையில் உள்ளதென்று கூறியிருந்தது.
ஆனால், இந்தக் கருத்தை சீனப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளார்.
சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல அயலவர்கள் பங்காளிகள் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.
ஆனால், உண்மையில் சீனாவும் இந்தியாவும் அவ்வாறு இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
சீனா ஒரு விமானம் தாங்கிக் கப்பல் பற்றியே வாய்திறந்துள்ளது.
ஆனால், சீனா கட்டும் விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை இரண்டு என்றும், மூன்று என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒன்று.
இந்த விமானம் தாங்கி போன்றவற்றுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிப்பதற்கே சீன வேவுக் கப்பல் அந்தமான் கடலில் வேவு பார்த்ததாகக் கருதப்படுகிறது.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் நிறுத்தப்படலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.
அது இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக இருக்கும்.
விமானம் தாங்கிகள் மட்டுமின்றி நீர்மூழ்கிகளினது நடமாட்டங்களும் இந்து சமுத்திரத்தில் அதிகரிக்கலாம்.
இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய, சீன ஆயுதப் போட்டி இந்து சமுத்திரத்தில் வளர்ச்சியடைவதற்கு இலங்கையும் ஒரு காரணமாகி விட்டது.
சீன வேவுக் கப்பல் கொழும்புக்குள்தான் அடைக்கலம் தேடியது என்கின்றன இந்திய ஊடகங்கள்.
ஆனால், இலங்கை கடற்படையோ அப்படி எந்த வேவுக் கருவிகளும் பொருத்தப்பட்ட சீனக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்குள் வரவில்லை என்கிறது.
சீனக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்ததைக் கண்டுபிடிப்பது ஒன்றும் இந்தியாவுக்கு கடினமான காரியமாக இருக்கமுடியாது.
அதேவேளை, இந்தச் செய்தி பொய் என்று இந்தியா மறுக்கவும் இல்லை.
கடந்த ஜுலை மாதம் வியட்நாமிற்குச் சென்றிருந்த இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் ஐராவதி சீனக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் இடைமறிக்கப்பட்டதாக இங்கிலாந்துப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை இந்தியா நிராகரித்திருந்தது. அதுபோல இந்தச் செய்தி நிராகரிக்கப்படவில்லை.
எனவே, சீன வேவுக்கப்பல் விவகாரத்தில் இலங்கைக் கடற்படையின் நிராகரிப்பு எடுபடுமா? என்பது சந்தேகம் தான்.
இதற்கிடையே சீனாவும், இந்தியாவும் இந்து சமுத்திரத்தில் ஒளித்துப் பிடித்து ஆடப் போகும் விளையாட்டில் இலங்கை தான் மையமாக இருக்கப் போகிறது.
அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டு வரும் துறைமுகம் சீனாவின் கடல் ஆதிக்கத்துக்கான ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறது.
இப்போது சீனா கொழும்புத் துறைமுகத்துக்குள்ளேயும் கால் வைத்து விட்டது.
கொள்கலன் இறங்குதுறை ஒன்றை கொழும்புத் துறைமுகத்தில் நிர்மாணித்து அதனை இயக்கும் உரிமையைப் பெற்றுள்ளது சீனா.
இது கொழும்புத் துறைமுகத்தை சீனப் படையின் தேவைகளுக்குப் பயன்படுத்தவதற்கு வசதியாகி விடும்.
இவையெல்லாம் அயல் நாடான இந்தியாவுக்குள் பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியவை.
போரைக் காரணம் காட்டி சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தி வந்த இலங்கை இப்போது, அபிவிருத்தியைக் காரணம் காட்டி வலுப்படுத்தி வருகிறது.
சீனாவுடனான இந்த நெருக்கத்தை குறைப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் ஒன்றும் பலித்ததாகத் தெரியவில்லை.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்படி வளைந்து, நெளிந்து, சுழித்து ஓடலாம் என்பதை இலங்கை நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறது.
அதனால் இரண்டு நாடுகளிடம் வாங்கிக் கொண்டு இலங்கை அரசு நழுவிக் கொள்கிறது.
இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டி தீவிரம் பெறும் தான். இதன் பலாபலன் எப்படி அமையும் என்பதை இலங்கை உணர்ந்து கொள்ளும்.
அத்தகையதொரு நிலையில் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் கூட வியப்பில்லை.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு அமெரிக்கா உதவி.
மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு 9 லட்சம் டொலர்கள் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்றாலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதாபிமான உதவிகளைச் செய்வது அவசியம் என்று அமெரிக்கா கருதியது.
எனவே உணவு, மருந்து - மாத்திரைகள், சோப்புகள், போர்வைகள், சமையல் சாதனங்கள் ஆகியவற்றை தனி விமானத்தில் ஏற்றி அனுப்பியது. அந்த விமானத்தை வட கொரியாவும் அனுமதித்து அதிலிருந்த பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
தென் கொரியாவுடன் தான் அமெரிக்காவுக்கு சுமுக உறவு இருக்கிறது. இப்போது வட கொரியாவுடனும் நட்புறவுக்கு கை நீட்டியிருக்கிறது.
வடக்கு கரோலினாவில் உள்ள சமாரிடன் என்ற அமைப்பு விரைவிலேயே 12 லட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்புக்கு நிவாரண உதவிகளைக் கொண்டு வந்து வட கொரியாவுக்குத் தரப்போவதாகக் கூறியிருக்கிறது.
வட கொரியாவில் கடந்த இலையுதிர் காலத்தின் போதும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பிறகு கடுமையான குளிர்காலம் தொடர்ந்தது. அதன் பிறகு இப்போது கன மழை பெய்து வருகிறது. இயற்கையின் சீற்றத்தினால் அவதியுறும் வட கொரியாவுக்கு அமெரிக்காவின் இந்த உதவி மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது.
கடாபியுடன் ஜேர்மன் உளவுத் துறைக்கு தொடர்பு.
லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கர்னல் கடாபியின் ஆட்சி முடிவுற்ற நிலையில் புரட்சிப் படையினரின் இடைக்கால நிர்வாகம் நடைபெறுகிறது.
கடாபி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் கடாபியின் உளவுத்துறை ஜேர்மனி உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்துள்ளது.
இருப்பினும் ஜேர்மனி உளவுத்துறை விடயத்தில் லிபியாவுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டது இல்லை என ஜேர்மனியின் முன்னாள் உளவுத்துறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் இணையமைச்சரான பெர்ன்ட் சிமிட்பவுர் தெரிவிக்கிறார்.
இவர் 1991ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தவர். லிபியாவில் உளவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்த போது ஜேர்மனி கடாபி உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது.
லிபியா புரட்சி படையினரின் புதிய ஜேர்மனி தூதராக அலி மாசேட்னா அல்-கோதனி நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கத்திய அரசுகளுக்கும் கடாபி நிர்வாகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அறிய அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
பானி நகர முற்றுகை: கடாபி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி.
கர்னல் கடாபியின் ஆட்சி லிபியாவில் இருந்து அகற்றப்பட்ட போதும் பானி வாலித் நகர பழங்குடியின மக்கள் கடாபியின் ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
அவர்களுடன் புரட்சிப்படையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புரட்சிப்படையினருக்கு பதிலடி தரும் படையினராக கடாபியின் பானி பழங்குடியின ஆதரவாளர்கள் உள்ளனர்.
மேலும் தாக்குதலை எதிர்கொள்ள மனிதக்கேடயங்களை உருவாக்கி உள்ளனர் என்றும் புரட்சிப்படையின் பேச்சுவார்த்தையாளர் தெரிவித்தார்.
புரட்சிப்படையினர் ஆயுதம் ஏதும் இல்லாமல் நகருக்குள் வரவேண்டும் என கடாபியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து புரட்சி படை ராணுவம் தான் முடிவு செய்ய வேண்டும் என அந்த பேச்ச வார்த்தையாளர் தெரிவித்தார்.
கர்னல் கடாபியின் மகன் காமிஸ் போரின் போது மரணம் அடைந்ததையும் லிபியா தேசிய மாற்ற கவுன்சில் உறுதிபடுத்தி உள்ளது. அவர் பானி வாலித் அருகே புதைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உளவுத்துறை தலைவர் அப்துல்லா செனுசியின் மகன் முகமதுவும் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புயல் காற்று அபாயம்: மழையில் சிக்கி மக்கள் தவிப்பு.
பிரிட்டனின் ஒட்டு மொத்த பகுதியும் அட்லாண்டிக் புயலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இளவேனிற்காலம் தொடங்குவதற்கு அறிகுறியாக பிரிட்டனில் 27 சென்டிகிரேடு(80டிகிரி பாரன் ஹீட்) வெயில் கொளுத்தியது. இந்த வெயில் தாக்கம் மெக்சிகோ சிட்டி மற்றும் ஸ்பெயின் மாட்றிட் பகுதியை காட்டிலும் கடுமையானதாக இருந்தது.
இந்த வெயிலை தொடர்ந்து மணிக்கு 57 மைல் வேகத்தில் பலத்த காற்றும் திடீர் மழைப்பொழிவும் துவங்கியது. பலத்த காற்றில் கூரை ஓடுகள் பறந்து போகும் நிலையும் இருந்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அலுவலக டாம் மார்கன் கூறுகையில்,"பிரிட்டன் முழுவதும் பெய்யும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். கடுமையான காற்று மற்றும் கனமழை அபாயம் உள்ளது. மணிக்கு 5 மில்லி மீற்றரில் இருந்து 10 மில்லி மீற்றர் வரை மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.
இளவேனிற்காலம் நிச்சயம் இந்த வாரம் துவங்கும், கோடை காலம் வழக்கம் போல திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டனின் மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றும் மழையும் தொடர்ந்து இருக்கும். சூரிய ஒளி சிறிது நேரம் கூட நீடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
கனடா தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கட்டுப்பாட்டை இழந்து புல்வெளி பகுதிக்கு ஓடியது.
அப்போது பயணிகள் அலறினர். கடுமையான வேகத்துடன் குலுங்கிய விமானம் புல்வெளியில் ஓடி நின்றது. இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
சிகாகோவில் இருந்து ஒட்டாவாவுக்கு 44 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் வந்த இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடியுள்ளது. நேற்று மதியம் 3.35 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்புடன் மீட்கப்பட்ட அனைத்து பயணிகளும் நகர பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று ஒட்டாவாவின் தீயணைப்பு துறை அதிகாரி மார்க் மெஸ்சியர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 36 பயணிகளுடன் ஒட்டாவாவில் விபத்துக்கு உள்ளான போது 3 பேர் காயம் அடைந்தார்கள். யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் சிறு நகரங்களிலும் தனது விமான சேவையை மேற்கொண்டுள்ளது.
இதன் விமானங்கள் அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்வதாக உள்ளது.
பணியை விட்டு செல்லும் ராணுவ வீரர்கள்: ஆய்வில் தகவல்.
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏழு பேரில் ஒருவர் பணியை விட்டு சென்று விடுவதாக நேட்டோ நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் ஆப்கன் ராணுவ வீரர்களில் 24 ஆயிரம் பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் கடந்தாண்டில் வேலையை ராஜினாமா செய்த வீரர்களை விட இது இரு மடங்காகும். கடந்த ஜூன் மாதம் மட்டும் ஐந்தாயிரம் வீரர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மொத்தமுள்ள ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீரர்களில் இவர்கள் 3 சதவீதம். 2009 செப்டம்பரில் இதேபோல் அதிகளவில் வீரர்கள் வெளியேறினர்.
இதையடுத்து நடந்த ஆளெடுப்பு, சம்பள உயர்வு, வழக்கமான விடுமுறைகளுக்கு உத்தரவாதம் ஆகியவற்றால் ஆப்கன் ராணுவவீரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக வெளியேறும் நிலையில் அங்கு தலிபான்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வீரர்களின் வெளியேற்றம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஆப்கன் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக உயர்த்தும் நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
லிபிய நகரை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள்.
லிபியா முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவாளர்கள் குவிந்துள்ள பானி வாலித் நகரை மூன்று திசைகளில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள பழங்குடி இனம் எதிர்ப்பாளர்களுடன் சேர்வது குறித்து பிளவுபட்டுள்ளதால் விரைவில் அந்நகர் சரணடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து தென்கிழக்கில் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பானி வாலித் நகரில் "வர்பாலா" என்ற பழங்குடியினர் அதிகளவில் உள்ளனர்.
லிபியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட பழங்குடியினங்களில் "வர்பாலா" இனம் தான் தொகையில் பெரியது. இந்நகரின் மூன்று புறங்களில் இருந்தும் நகருக்குச் செல்லும் வழிகளை நேற்று எதிர்ப்பாளர்கள் அடைத்தனர்.
இதனால் பானி வாலித்துக்கும் வெளியுலகுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் கடாபியும் அவரது மகன் சயீப் அல் இஸ்லாம், முட்டாசிம் ஆகியோர் இருப்பதாக நம்பப்படுகிறது.
பானி வாலித் நகரில் உள்ள வர்பாலா இனத்தவருக்குள் எதிர்ப்பாளர்களுடன் சேர்வது குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்கள் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதனால் அதிக போராட்டம் இல்லாமல் பேச்சு மூலம் விரைவில் அந்நகரம் தங்கள் வசம் வந்து விடும் என எதிர்ப்பாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
அதேநேரம் அந்நகரில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் போர் மூலம் நகரைக் கைப்பற்றவும் எதிர்ப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
சிர்ட் நகரின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பொலிஸ் கேம்ப், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது நேட்டோ குண்டு வீசித் தாக்கியது. அதேபோல் பானி வாலித் அருகில் உள்ள வெடிபொருள் கிடங்கு ஒன்றின் மீதும் நேட்டோ குண்டு வீசியது.
இந்நிலையில் கடாபியின் முன்னாள் நர்சுகள் ஐந்து பேரில் ஒருவரான ஒக்சானா பலின்சயா(25) கடாபியைப் பற்றி அளித்த பேட்டி ஒன்றில்,"அவர் எங்களுக்கு நல்ல வேலைகள், சம்பளம் மற்றும் நல்ல வாழ்க்கையைத் தந்தார். அவர் ஒரு நல்ல உளவியலாளரும் கூட. ஒருவருடன் கைகுலுக்கும் போதே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லி விடுவார்" என்றார்.
கடாபியின் நர்சுகள் அவரை "டாடி" என்று தான் அழைப்பர். ஒக்சானா கடாபியிடம் இரு ஆண்டுகள் பணியாற்றினார். அவரது ரத்த அழுத்தம், இதயநிலை ஆகியவற்றைக் கண்காணித்து மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தார்.
அமெரிக்க விமானங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தாவினர் சதி: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி சிறு ரக விமானங்கள் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11ல் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அதன் 10வது ஆண்டு நினைவு நாள் வரும் 11ம் திகதி அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து நாட்டின் உள்பகுதியில் இயங்கி வரும் சிறு ரக விமானங்கள் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தலாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்க கூடாது: அமெரிக்கா.
பாலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்த மாதம் 20ம் திகதி துவங்கும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காசா பகுதியை ஆக்கிரமித்து பாலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அறிவிப்பதை விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவோம், பின்னர் உரிய முடிவு எடுப்போம் என அமெரிக்கா கூறுகிறது.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்க கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு பெரும் ஆதரவு இல்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் தனிநாடு கோரிக்கை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் ஒபாமா இம்மாதம் 19ம் திகதி முதல் 21ம் திகதி வரை நியூயோர்க்கில் இருப்பார் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஹிட்லருடன் பிரிட்டன் பிரதமர் சாம்பர்லின் ரகசிய பேச்சுவார்த்தை.
நாஜிப் படைக்கு தலைமை வகித்து கொடூரமான தாக்குதலை நடத்தி வந்த ஹிட்லருடன் பிரிட்டன் பிரதமர் சாம்பர்லின் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூனிச் நகரில் ஹிட்லருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளார்.
இந்த சந்திப்பு பிரிட்டன் கேபினட்டுக்கோ அல்லது அயல்துறை அலுவலகத்திற்கோ தெரியாமல் நடந்துள்ளது. அதன்பின்னர் லண்டனில் இரு தரப்பு சந்திப்புகள் நடந்துள்ளன.
மூனிச் நகரில் நடந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மேலும் பல ஒப்பந்தங்களை ஹிட்லருடன் மேற்கொள்ள சாம்பர்லின் தயாராக இருந்தார்.
நாட்டு மக்களின் அமைதிக்காகவும் கலாசார பொக்கிஷங்களை பாதுகாக்கவும் குண்டுவீச்சோ அல்லது விஷவாயுவோ செலுத்தி மக்களை கொல்லவோ வேண்டாம் என ஹிட்லருடன் சாம்பர்லின் ஒப்பந்தம் செய்து சமரசம் செய்து இருப்பதும் ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி விபத்து.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் கனடா அருகே உள்ளது. அங்குள்ள ஏன்ஜார்ஜ் பகுதியில் 2 சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தன.
"நைட்மூட்" என்ற கிராமத்தில் நடுவானில் பறந்த போது ஒரு விமானத்தின் மூக்கு பகுதி மற்றொரு விமானத்தின் மீது மோதியது. இதில் நிலை குலைந்த ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானி பரிதாபமாக இறந்தார். இவரை தவிர அதில் யாரும் பயணம் செய்யவில்லை.
இதற்கிடையே விபத்துக்குள்ளான மற்றொரு விமானம் பத்திரமாக தரை இறங்கியது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வை கண்டித்து இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம்.
இஸ்ரேலில் விலை வாசி மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளனர்.
இந்த விலை வாசி உயர்வுக்கு காரணமான அரசை கண்டித்து நாடு முழுவதும் 4 லட்சம் மக்கள் திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக நடந்த இந்த மாபெரும் போராட்டம் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலம், ஹய்பா மற்றும் இதரப்பகுதிகளில் நடைபெற்றது.
கோடை காலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலில் வீட்டு வாடகை, உணவுப்பொருட்களின் விலை என அனைத்து விடயங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த விலை அதிகரிப்பை சாதாரண நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
விலை வாசி உயர்வுக்கு ஏற்ற வருமானமும் கிடைக்காததால் பொது மக்கள் அரசின் மீது கடுமையான எரிச்சல் அடைந்துள்ளனர். நாட்டின் சீரமைப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு ஒரு அமைப்பை நியமனம் செய்துள்ளார்.
இருப்பினும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நாஜி எதிர்ப்பு படையினரின் பேரணியில் வன்முறை: 1500 பொலிசார் காயம்.
ஜேர்மனியன் டார்ட் மண்ட் நோர்டு ஸ்டட் மாவட்டத்தில் நேற்று புதிய நாஜி ஆதரவு நபர்களின் பேரணி நடைபெற்றது.
வலது சாரி அமைப்பினர் நடத்திய அந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்னொரு போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதில் இடது சார்பு தீவிரவாதிகளுடன் பொலிசார் மோதினர்.
தங்கள் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க முயன்ற பொலிசாரை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் 1500 பொலிசார் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வன்முறையில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது ஒரு பொலிஸ் வாகனமும் கடுமையாக சேதம் அடைந்தது. வலது சாரி அமைப்பை சார்ந்தவர்கள் 400 பேர் பேரணிக்கு தயாராக நின்றிருந்தனர்.
அப்போது இடது சாரி அமைப்பினர் நாஜி எதிர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் நிலை உருவானது. அப்போது பொலிசார் பதட்டத்தை தடுக்க முயன்ற போது வன்முறை தீவிரமானது.
பேரணி நடைபெற்ற இடத்தில் 4 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த மோதலின் போது எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
ஜப்பானில் கடும் புயல்காற்று: மக்கள் அவதி.
ஜப்பான் நாட்டில் சனிக்கிழமை இரவு முதல் வீசிய தலஸ் என்ற புயல் காற்றால் கன மழை பெய்தது. அத்துடன் ஏராளமான இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.
ஜப்பானின் தென் பகுதியில் கரையை நோக்கி வந்த புயல் மிக மெதுவாக மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலேயே தொடர்ந்ததால் பலத்த மழை கொட்டியது.
அதனால் நாட்டின் ஏராளமான தீவுகளில் தண்ணீர் ஊறி நிலங்கள் பெயர்ந்து சரிய ஆரம்பித்தன.
மழையால் எல்லா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு தொடங்கிய கன மழை ஞாயிறும் தொடர்ந்தது. இதனால் மீட்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
பசிபிக் கடல் பகுதியில் சிலி விமானம் விழுந்து விபத்து: 21 பேர் பலி.
சிலியில் 21 பேருடன் சென்ற விமானம் பசிபிக் கடல் பகுதியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் சிலியின் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியாளர் பெலிப்பி கியூபிலோஸ் இருந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்து நடந்த போது உடல்களை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விபத்து காரணமாக இன்று நடக்கவிருந்த முன்னாள் ஜனாதிபதி சல்வேடார் அலன்டேவின் மறு உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி அலன்டே கடந்த 1973ஆம் ஆண்டு படையெடுப்பின் போது மரணம் அடைந்தார். அவரது புதைக்கப்பட்ட உடல் கடந்த மே மாதம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
அவர் தானாக மரணம் அடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என சிலியில் கடுமையான விவாதம் எழுந்த நிலையில் அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கடாபி ஆதரவாளர்கள் சரண் அடைய மேலும் ஒரு வாரம் கெடு: போராட்டக்காரர்கள் அறிவிப்பு.

லிபியாவில் கர்னல் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தற்போது புரட்சி படையினரின் இடைக்கால நிர்வாகம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடாபி ஆதரவாளர்கள் சரண் அடைய மேலும் ஒரு வார காலம் அவகாசத்தை இடைக்கால நிர்வாகம் தந்துள்ளது. புரட்சிப்படையினர் தற்போது கடாபியின் சொந்த நகரமான சிர்தேவில் நிற்கிறார்கள்.
பானி மற்றும் வாலிட் ஆகிய இடங்களிலும் புதிய நிர்வாக படையினர் உள்ளனர். அந்த பகுதிகளில் கடாபிக்கு ஆதரவாக சக்தி வாய்ந்த பழங்குடியின மக்கள் உள்ளனர் என்று தேசிய மாற்றக் கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
கடாபிக்காக போராடிய பழங்குடியின தலைவர்கள் சிலர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்து விட்டனர். புதிய நிர்வாகத்தினர் தங்கள் தலைமையகத்தை பெங்காசியில் இருந்து தலைநகர் திரிபோலிக்கு அடுத்த வாரம் கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
போர் நடைபெற்ற போது தண்ணீர் மற்றும் தண்ணீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு 60 சதவீத மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க துவங்கி விட்டன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF