Wednesday, July 6, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை கடற்படையினருடன் சேர்ந்தியங்கும் சீன வீரர்கள் : இந்திய அதிகாரிகள் விசாரணை.

இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் இதனை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நேற்று கைது செய்யபட்டு விடுதலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 14 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் தமிழக கியூ பிரிவு, கரையோரக்காவல் படையினர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அண்மையில் இலங்கையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு சீன வீரர்கள் கச்சத்தீவில் முகாமிட்டிருப்பதை கண்டதாக அங்கு சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்தநிலையில் சீன வீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து தமிழக எல்லை பகுதி மற்றும் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் இந்திய பாதுகாப்பு தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்கள் தீடீர் மயக்கம் : 74 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
சம்மாந்துறை தாருசலாம் வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலர் இன்று காலை மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, 40 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டதாக உதவி அதிபர் எம்.ஐ. பாரூக் தெரிவித்துள்ளார்.
எனினும், 74 மாணவர்கள் வரை சம்மாந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அவர்களுள் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.முன்னதாக இரண்டு மாணவர்கள் தாங்கியிலிருந்த நீரை அருந்திய நிலையில் மயக்கமுற்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அலுவலகத்திற்கு அறிவிக்கப்படும் முன்னர் மேலும் பல மாணவர்கள் தாங்கியிலிருந்த நீரை அருந்தி மயக்கமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் நீர்த்தாங்கிலிருந்த நீரை ஆராய்ந்த போது அதில் கிருமி நாசினி கலக்கப்பட்டிருந்ததாக உதவி அதிபர் தெரிவித்துள்ளார்.தற்போது குறித்த நீரை மாணவர்கள் அருந்த வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசி பட்டினியால் வாடும் ஆப்பிரிக்க மக்கள்.
உலக அளவில் மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், உணவுப்பொருள் விலை அதிகரிப்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் தவிக்கின்றன.எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா பகுதிகளில் உள்ள 120 லட்சம் மக்கள் பட்டினியில் உயிருக்கு போராடுகிறார்கள். ஆப்பிரிக்க பகுதிகள் பஞ்சத்தில் தவிக்காமல் இருக்க பெருமளவு உணவு, உதவி அளிக்க வேண்டும் என ஆக்ஸ் சர்வதேச தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பசி, பட்டினியில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக கென்யா உள்ளது. இங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய் பாதிப்பை எளிதில் பெறும் உயிர்களாக உள்ளனர். வடக்கு கென்யாவில் உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 90 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.ஆனால் இந்த முகாமுக்குள் கிடைக்கும் சிறிய உணவைப் பெற 5 லட்சம் மக்கள் குவியும் அபாயச்சூழல் உள்ளது. தினம்தோறும் 1300 பேர் இந்த முகாமுக்கு வருகிறார்கள். இந்த முகாமில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை நாடான சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இரண்டு வருட கடும் வறட்சியால் பல லட்சம் மக்கள் உயிருக்காக போராடுகிறார்கள். தூய தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் 3 லட்சம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவ 5 கோடி பவுண்ட் நிதி உதவி உடனடியாக தேவைப்படுகிறது என ஆக்ஸ்பாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்கா இனி வல்லரசு இல்லை: கருத்துக் கணிப்பில் தகவல்.
உலகின் ஒரே வல்லரசாக மிஞ்சி இருக்கும் அமெரிக்கா இனி வல்லரசு இல்லை என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்கர்களே இத்தகைய எண்ணம் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான டைம் இதழ் ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற 3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் அமெரிக்கா வல்லரசாக தொடர்வதாக கருதவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க அதிபர்கள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை கைவிட்டு உள்ளூர் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார சீர்குலைவே ஆபத்தானது என்றும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தலைகீழாக தோன்றிய அதிசய வானவில்.
வான் பகுதியில் மனதை மயக்கும் வானவில் ஏற்படுவது உண்டு. இந்த வானவில் வழக்கமாக வளைந்து காணப்படும். இதில் காணப்படும் பல வண்ண நிறங்கள் நீல வானத்திற்கு அழகு சேர்க்கும்.ஆனால் பிரிட்டன் வெலஸ் ஷயர் வான்பகுதியில் ஏற்பட்ட வானவில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வானவில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.
மேகக் கூட்டப்பகுதியில் காணப்படும் சிறு பனிவடிவங்களின் தாக்கத்தால் இந்த தலைகீழ் அதிசய வானவில் ஏற்பட்டு உள்ளது.மேகத்தில் இருந்து மழைத்துளிகள் பூமியை நோக்கி வரும் போது வழக்கமாக வானவில் ஏற்படும். ஆனால் மழை ஏதும் இல்லாமல் சூரியன் “பளிச்” என சிரித்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த விசேடமான தலைகீழ் வானவில் தோன்றி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த தலைகீழ் வானவில் சில நிமிடங்களில் மறைந்து விட்டது. இதனை பார்த்தவர்கள் தங்கள் கைத்தொலைபேசி கமெராக்களில் படம் பிடித்தனர்.மேகத்தில் பனி துகள்கள் வலது பகுதியில் அணிவகுத்து இருந்ததால் இதுபோன்ற வானவில் தோன்றி உள்ளது என ஆய்வு மைய நிபுணர்கன் தெரிவித்தனர்.


இணையத்தில் ஒபாமா பற்றிய வதந்தி: ரகசிய பொலிஸ் விசாரணை.
அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பொக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் வெளியானது குறித்து அந்நாட்டு ரகசியப் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இத்தகவலை ரகசியப் பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் ஓகில்வி இன்று தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பொக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில்  ஒபாமா பற்றிய செய்தி வெளியானது.
அதில்,"ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று கூறப்பட்டிருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இதனிடையே தங்களது டுவிட்டர் பக்கம் எப்படி சிதைக்கப்பட்டது என்பது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று பொக்ஸ் நியூஸ் இணையதளத்தின் நிர்வாகி மிசென்டி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பர்தா அணிந்து வந்த தீவிரவாதிகள் கைது.
அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட பின் ஆப்கனில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.கடந்த வாரம் காபூல் நட்சத்திர ஹொட்டலில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாயினர்.
இந்நிலையில் ஜலலாபாத் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஏழு பேர் பெண்கள் போல பர்தா அணிந்து வந்தனர்.சந்தேகம் அடைந்த பொலிசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு ஜாக்கெட் ஆகியவை இருந்தது. தீவிரவாதிகள் பிடிபட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
துனிஷிய மாஜி அதிபருக்கு மேலும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
போதை மருந்து, ஆயுதம் கடத்தல் வழக்கில் துனிஷிய மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.துனிஷியா நாட்டின் அதிபராக கடந்த 23 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஜினே பெல் அபிதின் பென் அலி. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் கிளர்ச்சி செய்தனர்.இதனால் இவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி சவூதியில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் இவர் மீது போதை மருந்து மற்றும் ஆயுத கடத்தல் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
துனிஷ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 40 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.ஏற்கனவே இவர் மீது அரசு பணத்தை மோசடி செய்தது உள்ளிட்ட 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 20ம் திகதியன்று தான் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ,64 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பிய அதிபர்: மக்கள் கொண்டாட்டம்.
கியூபாவில் புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கு மூன்று வார சிகிச்சை பெற்ற வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் நேற்று திடீரென நாடு திரும்பினார்.வெனிசுலாவின் 200ம் ஆண்டு கொண்டாட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக அவர் நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து அவர் பொதுமக்களிடம் உரையாற்றினார்.உயிர்வாழ ஒரு போர்க்களத்தை காண வேண்டி உள்ளது என உருக்கமாக பேசினார். ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ராணுவ உடையில் உரை நிகழ்த்தினார். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்த போதும் சோர்வு இல்லாமல் உற்சாக உணர்வுடன் காணப்பட்டார்.
அவர் 30 நிமிடம் உரை நிகழ்த்தினார். மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் நன்றாக சாப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடவுளின் கைகளில் முதலில் என்னை ஒப்படைத்தேன். இரண்டாவதாக என்னை மருத்துவ அறிவியலிடம் ஒப்படைத்தேன் என்றும் அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.சாவேசின் உரயை கேட்க வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். 56 வயது சாவேசுக்கு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட பின்னர் திடீரென நாடு திரும்பி உள்ளார். வெனிசுலாவில் உங்களுக்காக தொடர்ந்து இருப்பேன் என்றும் அவர் முழக்கமிட்டார்.
அமைதி பேச்சு வார்த்தையை தடுக்கும் நேட்டோ படைகள்: லிபிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு.
லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் நேட்டோ படைகளும் புகுந்து உள்ளன.இந்த படைகள் லிபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக லிபியா அரசு குற்றம் சாட்டி உள்ளது. பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என இரு தரப்பினரும் கருதும் நிலையில் நேட்டோ படைகள் போராட்டக்காரர்கள் தலைவர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்துகின்றன என்று லிபிய அரசு கூறி உள்ளது.
லிபியா வெளியுறவு துணை அமைச்சர் காலித் காலிம் கூறுகையில்,"திரிபோலியின் சில பகுதியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இருப்பினும் நேட்டோவின் குறுக்கீடு காரணமாக அவற்றில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது" என்றார்.நேட்டோவில் உள்ள சில நபர்கள் லிபியா அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடைபெற விடாமல் தடுக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.அமைதி பேச்சு வார்த்தை ஏதும் நடைபெறவில்லை என பெங்காசியை தலைமையிடமாக கொண்ட தேசிய மாற்ற கவுன்சில் கூறியது. அமைதி பேச்சு வார்த்தை கடந்த 2 மாதமாக நடைபெற்றது.
இதற்கு இத்தாலி மற்றும் நோர்வே உதவியதாக லிபியா தெரிவித்து இருந்தது. அமைதி பேச்சு வார்த்தைக்கு தாம் ஏதும் உதவவில்லை என்று லிபியாவின் கருத்துக்கு இத்தாலியும் எதிர்ப்பு தெரிவித்தது.கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லம் கூறுகையில்,"தங்களை தாக்குவதே நேட்டோவின் இலக்காக உள்ளது" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர் கடத்திக் கொலை: தலிபான் தீவிரவாதிகளின் வெறிச்செயல்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த 9 ஆயிரத்து 500 வீரர்கள் உள்ளனர். அவர்கள் அந்த நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க முகாமிட்டு உள்ள நேட்டோ படை துருப்புகளில் ஒரு பகுதியினராக பிரிட்டன் வீரர்கள் உள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று ஒரு பிரிட்டன் வீரரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.
அவர் சோதனை சாவடி பகுதியில் தனியாக நடமாடிக் கொண்டு இருந்த போது தலிபான்கள் அவரை கடத்தினர். அந்த வீரரரை தலிபான்கள் தலையின் பின் பகுதியில் சுட்டுக் கொன்றனர். இறந்த வீரர் ஸ்காட்லாந்தின் 4வது படைப்பிரிவை சேர்ந்தவர் ஆவார்.வீரரின் உடலை கண்டுபிடிக்க 12 மணி நேரம் தேடுதல் வேட்டை நடந்தது. ஆப்கானிஸ்தானிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பிரிட்டன் உயர் ராணுவ அதிகாரிகளையும் அமெரிக்க அதிகாரிகளையும் நேற்று சந்தித்தார்.
பிரிட்டன் வீரர் கொல்லப்பட்ட விவரம் அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரது பயணத்தில் வரவேண்டிய வாகனங்கள் வீரரரை தேடும் பணியில் ஈடுபட்டன. இதனால் பிரதமரின் பயணத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.பிரிட்டன் வீரர் கொல்லப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கம் தெரிவிக்கப்பட்டது. வருகிற 2012 ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தின் போது 500 வீரர்கள் நாடு திரும்புவார்கள் என பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்து இருந்தார்.பிரிட்டன் ராணுவத் தலைவர்களின் வேண்டுகோளை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் குறைப்பு நடவடிக்கை மெதுவாக நடைபெறும் என பிரதமர் தெரிவித்தார். பிரிட்டன் வீரரை கொன்றது நாங்கள் தான் என்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஒப்புக் கொண்டனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF