Wednesday, July 27, 2011

இன்றைய செய்திகள்.

மஹிந்த, சிங்களவர்களிடம் வெற்றி, தமிழர்களிடம் தோல்வி – ஏசியா ரைம்ஸ்.

இலங்கையின் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள், இன்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுள்ளமையை காட்டுகிறது. இதனை இந்தியாவின் ஏசியா ரைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் வடக்கு, கிழக்கு தமிழர்களிடம் அவர் தோற்றுப்போயுள்ளதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.
வடக்குக்கு புனரமைப்பும், பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கூறிவருகின்றமை இந்த தேர்தலில் பொய்யாகிப் போனதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமது பொருளதார நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது வடக்கு, கிழக்கு தெரியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தியே தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதாரத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ச, வடக்கின் தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
வடக்கை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி கரம் நீட்டிய போதும் அங்குள்ள மக்கள் அதனை நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நோர்வே பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் இலங்கைத் தமிழரான என் சண்முகரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர் ஒருவரால் தாம் கேவலப்படுத்தப்பட்டதாக அமெரிக்க பெண் முறைப்பாடு.

தாம் இலங்கையர் ஒருவரால் கேவலப்படுத்தப்பட்டதாக அமெரிக்க பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாட்டை செய்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள வர்த்தக தொகுதி ஒன்றில் வைத்து குறித்த இளைஞர், குற்ற உணர்வுடன் தம்மை கேவலப்படுத்தியதாக இந்தக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
மாணவியான தாம் இலங்கைக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் முறையிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த இளைஞரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் விசாரணை அறிக்கையை எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 
பிரபாகரனால் சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க நினைத்தவர்கள் இன்று அமெரிக்காவினால் அதனைச் செய்ய முயற்சி - ஹெல உறுமய.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார்.
நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
‘நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக வடக்கு உட்பட நாடு முழுவதும் 56 வீதமான மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி கூறியுள்ளது.
முகத்தில் ஆவேசம் பொங்க, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்புக்கு எதிராக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு வரவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பெயர்களைக் கூறியபடி எச்சரிக்கை தொனியில் பேசினார் சம்பிக்க ரணவக்க.
‘பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் சாத்தியமாகாது’ என்றும் பேசியுள்ளார் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
வடக்கில் பலவந்தமாக பௌத்த மதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கில் பலவந்தமான முறையில் பௌத்த மதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி ஆதரவு சோசலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வடக்கில் 98 வீதமானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதேசத்தில் பௌத்த மதத்தை பலவந்தமாக பிரச்சாரம் செய்வது பொருத்தமாகது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மக்கள் விருப்பத்துடன் பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டால் அதில் பிழையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் பலவந்தமான முறையில் வடக்கு மக்கள் மீது பௌத்த மதத்தை திணிக்க முற்படுவதாகவும் இது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சோசலிச இளைஞர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமை பௌத்த விரோத அலையாகவும் மாற்றமடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பார்க்கும் காட்சிகள் கிராமங்களில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பிரதேச மாணவர்கள் மர நிழலில் இன்னமும் கல்வியைத் தொடர்ந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ள அச்சங்கம், வடக்கில் 4500 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி காலியில் அமைத்த இரும்புக்கம்பி தடையை அகற்றிய எம்.பி.க்கு அபராதம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட காலி பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பித்  தடையை அகற்றிய குற்றத்திற்காக காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் எம்.பி. யான நிசாந்த முத்துஹெட்டிகம 18 ஆயிரம் ரூபாவை காலி மாநகரசபைக்கு அபராதமாகச் செலுத்தியுள்ளார்.
பஸ்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியானது பயணிகளுக்கு அசௌகரியமாக அமைந்திருப்பதாக முத்துஹெட்டிகம எம்.பி.க்குக் கிடைத்த புகாரையடுத்து, பஸ்நிலையத்திற்கு விரைந்த அவர் எவ்விதமான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளாது, இடையூறாக இருந்ததாகக் கூறப்பட்ட அந்த கம்பி வேலியை ஊழியர் ஒருவரை வைத்து அகற்றிவிட்டார்.
எனினும், எம்.பி.யினால் அகற்றப்பட்ட அந்த இரும்புக் கம்பி வேலியை மீண்டும் உடனடியாக பழைய இடத்திலேயே அமைத்துத் தருமாறு தென் மாகாண முதலமைச்சர் உத்தரவிட்டமைக்கிணங்க, அந்த வேலியை காலி மாநகர சபை மீண்டும் அமைத்தது. அதற்காக காலி மாநகர சபைக்கு 18 ஆயிரம் ரூபா செலவு ஏற்பட்டது.
இந்நிலையிலேயே, நிசாந்த முத்துஹெட்டிகம எம்.பி. மேற்குறிப்பிட்ட 18 ஆயிரம் ரூபாவை காலி மாநகர சபைக்கு அபராதமாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விமானப் படைத் திடீர் தாக்குதல்: 35 தலிபான்கள் பலி.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 35 பாகிஸ்தான் தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எ‌ல்லைப்பகுதியில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் தலிபான்களுக்கு எதிராக வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தான் மாகாணத்தில் நேற்று அமெரி்க்க விமானப்படைகள் திடீர் தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதலில் 35 பாகிஸ்தான் தலிபான்கள் உள்பட தலிபான்களின் முக்கிய தளபதிகளான ஹபீஸ்குல் பகதூர், முல்லா நஸீர் ஆகியோர் பலியாயினர்.
12க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகன் தன்னைத் தானே மாய்த்து கொண்டிருக்க வேண்டும்: ஆன்டர்சின் தந்தை வேதனை.
இத்தனை உயிர்களை கொன்றுகுவித்த தனது மகன் உயிருடன் இருந்திருக்கக்கூடாது. அவன் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று நோர்வேயில் தாக்குதல் நடத்திய ஆன்டர்ஸின் தந்தை கூறியுள்ளார்.
நோர்வே தொலைக்காட்சி ஒன்றுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியின் போது ஆன்டர்ஸ் பெரிங்கின் தந்தை ஜென்ஸ் பிரெய்விக் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியது: ஆன்டர்ஸ் பெரிங்கின் கொடும் செயலை நினைக்கும் போது நெஞ்சே பதறுகிறது. என் வாழ்வின் இறுதி நிமிடம் வரை இந்தச் செயலை நினைத்து மனம் வருந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளேன்.
இந்த இரக்கமற்ற சம்பவத்தைக் கேட்டதில் இருந்தே எனக்கு நிம்மதி இல்லை. கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளேன். சரியான மனநிலையில் உள்ள எவரும் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபடமாட்டார்கள். இந்தச் செயலை வைத்துப் பார்க்கும் போது ஆன்டர்ஸ் பெரிங் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக அவருடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இனிமேலும் அவரை சந்திக்க நான் விரும்பவில்லை. இறுதிமூச்சுவரை அவர் முகத்தைப் பார்க்காமல் வாழ்வதையே மேலானதாகக் கருதுகிறேன்.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள துயரத்தை என்னால் வார்த்தைகளால் கூறமுடியவில்லை என்றார் ஜென்ஸ் பிரெய்விக்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓஸ்லோவில் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 76 பேரை கொன்றார் ஆன்டர்ஸ்.
இவர் எதற்காக இப்படி ஒரு செயலை செய்தார் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நோர்வே தாக்குதலில் மேலும் 2 நபருக்கு தொடர்பு: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ந் திகதி பிரதமர் அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. அதில் 7 பேர் பலியானார்கள்.
அதை தொடர்ந்து 2 மணி நேரத்தில் உடோயா தீவில் ஆளும் கட்சியின் இளைஞர் அணி பயிற்சி முகாமில் பொலிஸ் உடையுடன் புகுந்த மர்ம நபர் சுட்டத்தில் 86 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து அந்த நபரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக்(32) என்று தெரியவந்தது. அவன் ஒரு வலது சாரி தீவிரவாதி என்றும் கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து அவனிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடக்கத்தில் இச்சம்பவத்தில் யாருக்கும் தொடர்பில்லை. தான் மட்டுமே இந்த கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டதாக அவன் கூறி வந்தான். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தான்.
பின்னர் அவன் நீதிபதி கிம்ஹெகர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அவன் நோர்வே ராணுவத்தினரின் தலைவழியாக அணியக்கூடிய சிவப்பு நிற சீருடை அணிந்து இருந்தான். அதை அணிய நீதிபதி தடை விதித்தார்.
பிறகு கோர்ட்டில் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தான். அப்போது அறை கதவுகள் மூடப்பட்டன. தொடக்கத்தில் இந்த 2 தாக்குதல்களிலும் தனக்கு மட்டுமே பங்கு இருப்பதாக கூறி வந்த அவன் இதில் மேலும் 2 தீவிரவாதிகள் உடந்தை என்று தெரிவித்தான்.
இதை தொடர்ந்து அவனை 8 வாரங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.முதல் 4 வாரங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.
விசாரணையின் போது அவனுக்கு வெளி உலகில் இருந்து எந்தவிதமான தகவல் தொடர்பும் இருக்ககூடாது என்றும் தனது உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.
மொராக்கோவில் பயங்கர விமான விபத்து: 78 பேர் பலி.
மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது.
இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விமானம் அகாடிரிலிருந்து லயாயூன் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 6 விமான ஊழியர்கள், 60 ராணுவ வீரர்கள், 12 பொது மக்கள் இருந்தனர். ராணுவ விமானத்தில் வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் அழைத்து செல்லப்படுவர்.
மோசமான வானிலை காரணமாகவே விபத்து நடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்க கடன்சுமை உச்ச வரம்பு: எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்த மக்களுக்கு ஒபாமா வேண்டுகோள்.
நாட்டின் கடன்சுமை வரம்பை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கடன் சுமை வரம்பை உயர்த்த ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஒருவாரகாலமாக குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த ஒபாமா அரசு எடுத்த நடவடிக்கை தோல்வியையே தழுவியது. இதையடுத்துதான் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் அதிபர் ஒபாமா.
இதுதொடர்பாக அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை வருமாறு: அமெரிக்காவுக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நிறைய பொறுப்புகளும், கடமைகளும் உள்ளன.
எந்த ஒரு சூழலிலும் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நாடு உள்ளது. நாடு இதுவரை எப்பொழுதும் சந்தித்திராத நிதி சிக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும் இதனால் நாம் மனம் தளர்ந்திடக்கூடாது.
நாட்டின் நலன் கருதியும், நிதி சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கிலும் சில நிதி சீர்த்திருத்தங்களை அரசு செய்து வருகிறது. இவற்றில் ஒன்று தான் கடன்சுமை வரம்பை உயர்த்தும் அரசின் முடிவு. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இதுதொடர்பான மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கல் நீடிப்பதால் நிதி திரட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் அனைத்துவிதமான சமூக, பொருளாதாரத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. நாட்டின் இப்போதைய நிதிச் சூழலில் கடன்சுமை வரம்பை உயர்த்தாமல் எதுவுமே செய்ய முடியாது.
இதுகுறித்து குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். கடன்சுமை வரம்பு உயர்வு கூடாது, அதுதொடர்பான மசோதாவை எதிர்ப்போம் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளனர்.
நாடு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குகூட நிதியை ஒதுக்க இயலாது. இதுபோன்ற நிலையால் அந்நிய முதலீட்டாளர்கள்கூட அமெரிக்காவில் முதலீடு செய்ய யோசிக்கும் நிலை ஏற்படலாம்.
அப்படி ஒரு நிலைவந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதையெல்லாம் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். அவர்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள நெருக்குதல் அளிக்க வேண்டும்.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இதை உங்களால் செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அதிபர் ஒபாமா.
ஏடனில் கார் குண்டு வெடிப்பு: அல்கொய்தா மீது ஏமன் குற்றச்சாட்டு.
ஏடன் அருகே உள்ள விமானப் படைத்தளத்தில் நேற்று முன்தினம் கார் குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்புக்கு சவுதியில் உள்ள அல்கொய்தா தீவிரவாத உறுப்பினர்கள் காரணம் என ஏமன் அரசு குற்றம் சாட்டியது.
ஏமன் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,"ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்கள் அப்யான் பகுதி வழியாக ஊடுருவி உள்ளனர்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை கார் குண்டு வெடிப்பில் 6 வீரர்கள் மற்றும் ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தனர் என சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதியை கண்டுபிடிக்க ஏமனுக்கு சவுதி அரேபியா நிர்வாகம் உதவி வருகிறது என அவர் கூறினார்.
ஏடனின் பாதுகாப்புதுறை தலைவர் அகமது மசூத் கூறுகையில்,"பாதுகாப்பு படையினர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து உள்ளது. அந்த நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரா என்பது தெரியவில்லை" என்றார்.
ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரின் உடல் கருகிவிட்டது. அவரது முகத்தை அடையாளம் காண முடியவில்லை. மருத்துவ சோதனை மூலமே அவர் யார் என்பதை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் இருந்து பார்க்கும் அளவுக்கு தன் பெயரை மிகப் பெரியதாக பொறித்து வைத்த கோடீஸ்வரர்.
தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பேருந்தில் அமரும் இடம், மலை உச்சியில் என பல இடங்களில் பொறித்து வைப்பார்கள்.
ஆனால் அபுதாபி கோடீஸ்வரர் ஒருவர் தன் பெயரை தன் சொந்த தீவில் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்.
ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் ஹமத் பின் ஹம்டன் அல் நஹ்யான். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர்.
உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.
இவற்றை பார்க் செய்வதற்காகவே அபுதாபிக்கு அருகில் ஒரு பிரமிடு வடிவ அரங்கு கட்டி அசத்தியவர்.
சமீபத்தில் இவர் படைத்திருக்கும் சாதனை உலகையே அசர வைத்திருக்கிறது. அபுதாபிக்கு அருகில் உள்ள புடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார்.
அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக "ஹமத்" என்று முக்கால் கிலோமீற்றர் உயரம், 3 கிலோமீற்றர் நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரம்மாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார். பிரமாண்ட வாய்க்கால் மூலமாக கடல் நீர் செல்லும் வழித்தடம் "ஹமத்" என்று தெரிகிறது.
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் கூட அவரது பெயர் தெரிகிறது. தனது பெயர் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே ஹமத் இவ்வாறு செய்துள்ளார்.
மற்றபடி அங்கு பள்ளம் வெட்டுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.
இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்.
50 வயது தென் ஆப்பிரிக்க நபர் வாராந்த இறுதியில் மரணம் அடைந்தார். அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
சனிக்கிழமை இரவு முதல் துடிப்பு இல்லாமல் அந்த நபர் வீட்டில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து ஈஸ்டர்ன் கேப்பில் உள்ள லிபோடே கிராமத்தில் இருக்கும் தனியார் சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது.
அவரது உடல் 24 மணிநேரம் சவக்கிடங்கிலேயே இருந்தது. இந்த நேரத்தில் அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இறந்து போன அவர் மீண்டும் உயிருடன் நடமாடுவதை பார்த்து உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் உயிர் கிடைத்ததை எண்ணி அவர்கள் சந்தோசப்பட்டனர். அந்த நபரின் பெயரை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. அந்த நபருக்கு நீர்சத்து இழப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறினர்.
இறந்துபோன நிலையில் கிடந்த நடுத்தர வயது நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சவக்கிடங்கு குளிர் தாங்க முடியாமல் ஓடி வந்துள்ளார். அவர் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக ஈஸ்டர்ன் கேப் சுகாதார செய்தித் தொடர்பாளர் சிவே கியூபெலோ கூறினார்.
அமெரிக்க கடன் உச்சவரம்பு: குடியரசு கட்சி மீது ஒபாமா குற்றச்சாட்டு.
அமெரிக்கா தேசிய கடன் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்தில் பிரிதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் மெத்தனம் காட்டியதாக ஜனாதிபதி ஒபாமா குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் இந்த ஆண்டு வரவு செலவு நிதிநிலை பற்றாகுறை 1.5 லட்சம் கோடி டொலராக உள்ளது. இதனால் தேசிய கடன் உச்சவரம்பு அளவான 14.3 லட்சம் கோடி டொலரை எட்டும் அபாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 2ம் திகதிக்குகள் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் அமெரிக்க அரசு எந்த திட்டப் பணிகளுக்கும் நிதி தர முடியாத நிலை ஏற்படும்.
எனவே நிதிநிலை பற்றாக்குறையை குறைக்காத வரை கடன் உச்சவரம்பை அதிகரிக்க ஒப்புதல் அழிக்க முடியாது என குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கூறினர்.
இந்நிலையில் வசதியானவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்தது. அமெரிக்காவின் ஏழை, முதியோர் மற்றும் பொது ஓய்வூதியத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஒபாமா டெமாக்ரேடிக் அரசு முனைந்தது.
வரி அதிகரிப்பு திட்டத்திற்கும் குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியரசுக் கட்சியினர் 1.21 லட்சம் கோடி டொலர் செலவின குறைப்பு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். 1 லட்சம் கோடி டொலர் கடன் உச்சவரம்பை அதிகரிக்க முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து ஒபாமா கூறுகையில்,"இது சரியான முடிவாக இருக்காது. இன்னும் 6 மாதத்தில் மீண்டும் கடன் உச்சவரம்பு அதிகரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்" என்றார்.
கடாபி பதவி விலகினாலும் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம்: பிரிட்டன்.
லிபிய அதிபர் கடாபி பதவியை விட்டு விலகினால் அவர் தனது நாட்டில் இருக்கலாம் என பிரான்ஸ் கூறியது. தற்போது இதே கருத்தை பிரிட்டனும் உறுதிப்படுத்தி உள்ளது. 
லிபியாவில் 42 ஆண்டுகளாக கடாபி ஆட்சி நடத்தி வருகிறார். அவரது அடக்குமுறை ஊழல் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெய்ன் ஜுபேவை லண்டனில் சந்தித்து பேசுவதற்கு முன்னர் பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹாக் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் விதித்த தடையை கூட்டணி நாடுகள் சரியாக செய்து வருகின்றன என்றும் அவர் பாராட்டினார்.
லிபியாவில் நேட்டோ படைகள் நான்கு மாதத்திற்கு முன்னர் செல்லாத பட்சத்தில் பெங்காசியில் இனப்படுகொலையை லிபிய அரசு நிர்வாகம் செய்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பெங்காசி லிபிய போராட்டக்காரர்களின் தலைமையிடமாகும். நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்களை கொல்வதாக லிபிய அரசு நேற்று குற்றம் சாட்டியது.
பிறந்த ஒரே நாளேயான குழந்தைக்கு முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை.
இதயத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைக்கு பிரிட்டனில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்த ஒரு நாளிலேயே அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகச்சிறிய வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையாக ரூடி மாக்ஸ்வெல் ஜோன்ஸ் உள்ளது.
அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் ஒருவித பதட்டத்துடன் அந்த குழந்தையைப் பார்த்தனர்.
ஒருநாள் குழந்தை ரூடிக்கு ரத்த அழுத்தம் குறைந்து வருவதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தவிர்க்க முடியாத இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
குழந்தை பிறந்த இரண்டு வாரம் வரை இதய அறுவை சிகிச்சை செய்யும் போது பலவித பிரச்சனை ஏற்படும். இருப்பினும் குழந்தையின் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு மிக ஆபத்தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை செய்த போது 20 மருத்துவ நிபுணர்கள் உடன் இருந்தனர். குழந்தை ரூடிக்கு இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்ததால் பிரசவ காலத்திற்கு மூன்று வாரம் முன்னதாகவே குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
5 கிலோமீற்றர் ஆழத்திற்கும் கீழே நீர் மூழ்கி கப்பலை இயக்கி சீனா சாதனை.
கடலுக்கடியில் 3 மனிதர்களுடன் சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
ஜியோலாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதில் நீர்மூழ்கியை சுமார் 5057 மீற்றர் ஆழம் வரை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே 3500 மீற்றர் ஆழத்திற்கும் கீழே நீர்மூழ்கிகளை இயக்கி சாதனை படைத்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா இந்த வரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
முகாம்களில் சிறுவர்களுக்கு ஹிட்லரின் சாகச பயிற்சிகள்: ஜேர்மனி அரசு தீவிர ஆலோசனை.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜிபடையை ஆதரிப்பது ஜேர்மனி பெற்றோர்களிடம் அதிகரித்து உள்ளது.
அந்த பெற்றோர் குழந்தைகளை பயிற்சி முகாமுக்கு அனுப்புகிறார்கள். அந்த முகாமில் சிறுவர்களுக்கு படகு ஓட்டும் பயிற்சி, குதிரையேற்றம், மலை ஏறுதல், ஓவியம் வரைதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஹிட்லரின் மீசையை வரையவும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உலகப் போருக்கு பின்னர் தடைசெய்யப்பட்ட சின்னமும் சிறுவர்கள் முகாமில் வைக்கப்பட்டு இருந்தன. நாஜி படைக் கொள்கைகளை ஆதரிக்கும் ஜேர்மனி குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அந்த முகாமில் அதிக அளவு கலந்து கொண்டனர்.
ஹிட்லரின் கொடூர நடவடிக்கைகளை சிறுவர்களுக்கும் சாகசமாக சொல்லி தரப்பட்டுள்ளது. அந்த சிறுவர்களுக்கு உரிய கவனம் அளித்து நல்வழி ஏற்படுத்த ஜேர்மனி அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
பெர்லின் அருகே உள்ள அரன்ஸ் பெல்டே என்ற இடத்தில் சிறுவர்களுக்கு கோடைகால முகாம் நடந்துள்ளது. இந்த முகாமில் நாஜி படையினர் கொடூர தாக்குதல்கள், 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்த விவரங்கள், நாஜிப்படையில் ஹிட்லருடன் சேர்ந்து இனப் படுகொலை செய்த நபர்களின் நடவடிக்கைகள் போன்ற விவரங்கள் இருந்தன.
ஹிட்லரின் நாஜி ஆதரவு ஜேர்மனி அரசுக்கு பெரும் கவலையை அளித்து உள்ளது. நாஜி ஆதரவு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுக்கு நாஜி படை சார்ந்த பெயர்களை வைக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
ஏர் பிரான்ஸ் விமான விபத்து அறிக்கையில் புதிய தகவல்கள் வெளியீடு.
ஏர் பிரான்ஸ் விமானம் 2009ம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்த புதிய அறிக்கையை பிரான்ஸ் விசாரணையாளர்கள் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்கள். இந்த புதிய ஆய்வு அறிக்கையில் விபத்துக்கான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 2009ம் ஆண்டு பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இருந்து தலைநகர் பாரிசுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் நிலைத்தடுமாறி விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் விபத்தில் நொறுங்கிய விமான பாகங்களும், தகவல் பதிவு கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. தகவல் பெட்டியில் எந்த சூழ்நிலையில் விமானம் நொறுங்கியது என்ற விவரம் பதிவாகி உள்ளது.
ஏர் பிரான்ஸ் விமான விபத்து குறித்து வான்வழி விபத்து ஆய்வு விசாரணை ஏஜென்சி ஆய்வு செய்தது. இந்த விசாரணை அமைப்பின் இறுதி அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.
கடந்த மே மாதம் விமானத்தின் தகவல் கறுப்புப் பெட்டி அட்லாண்டிக் கடல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
நோர்வேயில் தாக்குதல் நடத்திய நபரின் குறிப்பேட்டில் கனடா பற்றிய தகவல்கள்: கனடியர்கள் அதிர்ச்சி.
நோர்வேயில் கடந்த வாரம் 32 வயது இளைஞர் ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் கொடூர தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து அவர் உடோயா தீவில் நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமிலும் தாக்குதல் நடத்தினார். அதே நபர் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அரச கட்டிடங்களிலும் குண்டு வெடிக்க செய்தார். இந்த இரு தாக்குதல்களில் 93 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கொடூர தாக்குதல் நடத்திய நபர் தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும் தம் மீது குற்றம் இருப்பதை அவர் ஏற்கவில்லை. ஆண்டர்ஸ் 1518 பக்கம் கொண்ட தனது விளக்க அறிக்கை எழுதி உள்ளார்.
அதில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக எழுதப்பட்டு உள்ளது. முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள். குறிப்பாக அவர் கனடாவில் நடந்த சம்பவங்கள் பற்றிய 40 குறிப்புகளை தனது விளக்க அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
உலகையே உலுக்கும் கொடூர கொலைக்காரர் கனடாவை பற்றி எழுதி இருப்பது கனடிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோர்வேயில் படுகொலை செய்த ஆண்டர்ஸ் கனடா செய்தித்தாள் விவரங்களை தமது குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
தீவிரவாத மற்றும் பயங்கரவாத இஸ்லாமியர்களால் கனடாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து வந்த செய்தி விவரங்களை நோர்வே கொலைக்காரர் ஆண்டர்ஸ் குறிப்பிட்டு எச்சரித்து உள்ளார்.
பல கட்சிகளை அங்கீகரிக்கும் மசோதாவிற்கு சிரிய அரசு ஒப்புதல்.
சிரியாவில் பல கட்சிகளை அங்கீகரிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு அரசியலில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரிய அரசியல் சாசனப்படி அந்நாடு பாராளுமன்ற ஜனநாயக அரசியல் கொண்டது என்றாலும், அரபு சோசலிச மறுமலர்ச்சி கட்சி(ஆளும் பாத் கட்சி) தான் 1963ல் இருந்து ஆட்சியில் உள்ளது.
சிரிய அரசியல் சாசனத்தின் 8வது பிரிவு பாத் கட்சி தான் நாட்டையும், சமூகத்தையும் வழி நடத்தும் எனக் கூறுகிறது. சிரியாவில் தற்போது 11க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள் பாத் கட்சியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட கட்சிகள் தலைமறைவாக இயங்கி வருகின்றன.
கடந்த மார்ச் 15ம் திகதி முதல் சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் அரசியல் சீர்திருத்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. போராட்டத்தை அடக்கும் வகையில் தற்போது பல கட்சிகளையும் அங்கீகரிக்கும் மசோதாவை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
இம்மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். இம்மசோதாவின்படி மதம், பழங்குடியினர் விவகாரம், மண்டல மற்றும் தொழில்ரீதியான அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான கட்சிகள் அனுமதிக்கப்படமாட்டாது. அதே போல் சிரிய நாட்டவர் அல்லாத பிறர் கட்சி துவக்கக் கூடாது.
விபத்து நடந்து ஒரு நாளுக்கு பின் உயிருடன் 4 வயது சிறுமி மீட்பு.
சீனாவில் புல்லட் ரயில் விபத்து நடந்து 21 மணி நேரம் கழித்து 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மணிக்கு 300 கி.மீ வேகத்தில் வந்த மற்றொரு புல்லட் ரயில் மோதியதில் 45 பேர் பலியாயினர்.
ரயில் பெட்டிகளை நகர்த்தி மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் சிறு குழந்தையின் கை ஒன்று அசைந்து கொண்டிருப்பதைப் பணியாளர்கள் பார்த்தனர். பரபரப்படைந்த பணியாளர்கள் உடனே பெட்டிக்குள் புகுந்து அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வந்தனர்.
தற்போது அக்குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மிகக் கொடூரமான இவ்விபத்தில் ஒரு பெண் குழந்தை உயிர் பிழைத்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வைத்து விசாரணை நடைபெற வேண்டும்: ஆண்டர்ஸ் விருப்பம்.
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 7 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் தலைநகரின் அருகே உள்ள உடோயா தீவில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை பொலிஸ் உடையில் வந்த இளைஞர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.
இந்த இரு சம்பவத்துக்கும் காரணமான ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் என்ற 32 வயது இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தனது வழக்கறிஞர் கெர் லிப்பெஸ்டாட் மூலம் தெரித்துள்ள பிரீவிக் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு டவுன்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் தன்னை விசாரிக்க வேண்டும் என்ற பிரீவிக்கின் விருப்பத்தை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுகுறித்த முடிவை நீதிபதி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரீவிக்கிற்கு இரு விருப்பங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினேன் என்று தெரிவிப்பதற்காக பொதுமக்கள் மத்தியில் வைத்து தன்னை விசாரிக்க வேண்டும்.
மற்றொன்று விசாரணையின் போது பொலிஸ் சீருடையில் வர அனுமதிக்க வேண்டும் என்பதாகும் எனத் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக லண்டன் முகவரியிட்ட 1,500 பக்க அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தலைவர் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு.
இஸ்லாத்தை பொறுத்துக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளை கவிழ்ப்பதற்காக என்னைப் போல 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக "தி டெலிகிராப்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்த லண்டனுக்கு பிரீவிக் எப்போது வந்து சென்றார் என்பது பற்றி ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF