Tuesday, July 26, 2011

இன்றைய செய்திகள்.

தமது மகளை சவூதிக்கு அனுப்பிய முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் - ரிசானாவின் தாயார்.

தமது மகளின் வயது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தபோதும் அவரை சவூதிக்கு அனுப்பிவைத்த வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரிசானா நபீக்கின் தாயார் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நான்கு மாதக் குழந்தையின் இறப்பு தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக உள்ள மூதூரை சேர்ந்த ரிசானா நபீக்கின் தாயாரே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
குடும்பத்தின் வறுமை  நிலை காரணமாக தமது மகள், வெளிநாடு செல்ல விரும்பினார். எனினும் வயது குறைவு காரணமாக தாம் அதற்கு விரும்பவில்லை.
இதனை ஏற்றுக்கொள்ளாத வெளிநாட்டு முகவர், தமது மகளை சவூதிக்கு அனுப்பிவைத்ததாக ரிசானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த முகவர் யார் என்பது தமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், ரிசானாவின் பாட்டிக்கே அவரை தெரியும்.
எனினும் ரிசானாவுக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கேள்விப்பட்ட உடனேயே அவரின் பாட்டி அதிர்ச்சியில் இறந்து விட்டதாக ரிசானாவின் தாயார் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவினாலேயே தேர்தலில் தோல்வி ஏற்பட்டது – ரோசி சேனாநாயக்க.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தோல்வியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 
நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றின் உறுப்பினர் என்ற ரீதியில் இந்தத் தேர்தல் தமது கட்சி சிறந்த பெறுபேறுகளை ஈட்டும் என எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கட்சி அடைந்து வரும் தொடர் பின்னடைவுகள் புரியாத புதிராகவே அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்திரோபாயங்களில் நிலவும் குறைபாடே தேர்தல் தோல்விக்கான பிரதான காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி தோல்விகள் ஏற்படுவதனால் கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கொலைக்களம் காணொளி குறித்து விசாரித்தபோது கண்கலங்கிய சந்திரிகா.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிக்கட்டத்தின் போது  கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.
இனங்களுக்கிடைலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதாவது இந்தக் காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன் தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். மேலும் தனது பிள்ளைகள் பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது. 
2ம் இணைப்பு
அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
2004 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தை கலைக்க நேர்ந்தமையையிட்டு நான் கவலையடைந்தேன். எனது கட்சியினன் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார். 
சமத்துவம் அவசியம்
நாடு ஒன்றில் அனைவரும் சம பங்காளிகளாகவும் அரசியல் உரிமைகள் சமமாக பகிரப்படுவதாகவும் அனைத்து பிரஜைகளும் சமூகங்களும் உணரும் நிலைமை ஏற்பட்டால் அந்த நாட்டில் அரசியல் ஸ்திரம் பொருளாதார சுபீட்சம் காணப்படும். பன்முகத்தன்மையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதை தலைவர்களும் பிரஜைகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமையை வழங்கவும் கௌரவம் மனித உரிமை என்பவற்றை மதிக்கவும் வேண்டும். யுத்தங்களின் வெற்றியானது சமாதானத்தை வெல்லக் கூடியதாக இருந்திருக்காது. அரசியல், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சகலருக்கும் சமத்துவமான நிலைமை காணப்படவேண்டும்.
நீதி கிடைக்காது என உணர்ந்தனர்
அன்று தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமை மற்றும் மொழி விவகாரம் என்பன அதிகாரப்பகிர்வு கோரிக்கையை நோக்கி சென்றன.
அவையே இறுதியில் தனிநாட்டு கோரிக்கைக்கு சென்றன. 1958, 1977, 1978, 1980, 1980 போன்ற காலப்பகுதியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்கள், யாழ். நூலக எரிப்பு சம்பவம் என்பன பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தமக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்தியது. பெரும்பான்மை மக்களிடம் தமக்கு நீதி கிடைக்காது என சிறுபான்மை மக்கள் உணர்ந்தனர்.
இந்நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனைத்து அரசாங்கங்களும் தோல்வி கண்டமையினால் ஐந்து ஆயுத குழுக்களின் தோற்றம் இடம்பெற்றது. புலிகளின் தலைமையில் அவை தனிநாட்டுக்காக போராடின. அத்துடன் சிங்கள மொழி மட்டும் அரச மொழி என்ற கொள்கையும் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.
இந்தியா உதாரணம்
1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புக்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த தவறியிருந்தன. அவர்களின் உரிமைகள், அரசியல் மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்த தவறின. இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரத்தின் பின்னர் அந்நாட்டில் நிரந்தர அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சமஷ்டி முறைமையினை கொண்டு வந்ததை நாம் நினைவுகூர வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அந்த நாடு சமஷ்டி முறைமையினை அரசியலமைப்பில் கொண்டுள்ளது.
முதற்தடவையாக நான் முன்வைத்தேன்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எனது அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புரிந்துணர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது. யுத்தம் இருந்த நேரத்திலும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. வீதிகள், பாலங்கள், தொடர்பாடல், மின்சாரம், பாடசாலைகள், பல்கலைக்கழகம், வைத்தியசாலைகள் போன்றவற்றை மேம்படுத்தின. யாழ். நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். எனினும் பொருளாதார அபிவிருத்தி மட்டும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விடாது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.
பல சவால்களுக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையிலான அரசியல் அமைப்பை முன்வைத்தோம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையினை நீக்குவதற்கான யோசனையையும் அதில் உள்ளடக்கினோம். இந்த அரசியல் அமைப்பு சரியானமுறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்குமென உறுதியாக நம்புகிறேன். அவ்வாறான நிலைமை வந்திருந்தால் சர்வதேச மறுப்புக்கள் மற்றும் இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிர்த்திருக்கலாம். எமது யோசனையை புலிகளும் நிராகரித்ததுடன் அப்போதைய பாராளுமன்ற எதிர்க்கட்சியும் நிராகரித்தது.
எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இல்லை
அப்போதைய நிலைமை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து தமிழ்க் கட்சிகள் என்னுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்த போதிலும் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனது அரசாங்கம் அன்று முன்வைத்த அதிகாரப் பகிர்வு திட்டம் தொடர்பில் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோரும் புலம்பெயர் தமிழ் மக்களும் திருப்தியடைந்திருப்பார்கள்.
நாங்கள் கொண்டு வந்த புதிய அரசியலமைப்பு திட்டத்தை அமுல்படுத்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று அப்போது எனக்கு கூறப்பட்டது. இது அதிகார வர்க்கமாக இருக்கும் என்பதால் அதை நான் செய்யவில்லை. காரணம் நான் ஜனநாயகத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவர். ஆனால் இன்றைய நிலைமையில் நிர்வாகம் அதிகாரவர்க்கத்தை நோக்கி நகர்வதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையையும் பலப்படுத்தாமை ஆச்சரியம் அளிக்கிறது.
அபிவிருத்தி மட்டும் போதாது அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியம்
யுத்தம் முடிவு பெற்றுள்ளது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் புலிகளில் இருந்தும் வேறுபட்டவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும். தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இலங்கையில் ஏனைய பிரஜைகளுடன் சமமாக வாழ விரும்புகின்றனர்.
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து மக்களினதும் சமவுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது கூட சிலர் அரசியல் இணக்கப்பாடு அவசியமில்லையென்றும் அபிவிருத்தியே போதுமென்றும் கருதுவதாக தெரிகிறது. ஆனால் வீதிகள், பாடசாலைகள் வைத்தியசாலைகளை அமைப்பதோ மின்சாரம், குடிநீரை பெற்றுக் கொடுப்பதோ மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதல்ல. வடக்குக்கும் கிழக்குக்கும் ஏன் மாகாண சபை முறைமையை கொண்டு செல்ல முடியாது.
சமஷ்டியே தீர்வு
மேலும் சிறுபான்மை மக்களுடன் அவர்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தி நாம் இணக்கப்பாடுகளுக்கு வர வேண்டும். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையே தீர்வாகும் என்பதில் நான் அர்ப்பணிப்புடன் இருந்தேன். இதனால் எனது காலத்தில் மக்களை தெளிவுபடுத்தும் திட்டங்களை முன்னெடுத்தோம். 1994 ஆம் ஆண்டு 23 வீதமான மக்களே பேச்சுவார்த்தையில் பிரச்சினையை தீர்க்க இணக்கம் தெரிவித்ததாக அப்போதைய கணிப்பீடுகள் கூறின. ஆனால் 2 வருடங்கள் நாம் மேற்கொண்ட கருத்தரங்குகள், செயலமர்வுகள் தெளிவுபடுத்தல் காரணமாக 23 வீதமாக காணப்பட்ட பேச்சுவார்த்தை விரும்பிகளின் சதவீதம் 68 வீதமாக உயர்வடைந்தது.
சமாதானத்தை வெற்றிகொள்ளவில்லை
யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தாலும் சமாதான போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. சமாதானத்தை வெற்றிகொள்ள அபிவிருத்தியுடன் அதிகாரப் பகிர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்ல வேண்டும். இதுவே அரசாங்கத்தையும் நாட்டையும் பலப்படுத்துவதுடன் நிரந்தர சமாதானத்தையும் உருவாக்கும் இதுவே பல்லின கலாசார கட்டமைப்பை கொண்ட எமது நாட்டுக்கு சிறந்ததாக அமையும்.
2003 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திடம் இருந்து நான் மூன்று அமைச்சுக்களை  பொறுப்பேற்க வேண்டியேற்பட்டது. காரணம் அப்போது காணப்பட்ட நிலைமையாகும். ஆலயங்கள் தாக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்பட்டது. இவ்வாறு பல்வேறு காரணங்களினால் நான் மூன்று அமைச்சுக்களை எடுத்தேன்.
கவலையடைந்தேன்
எனினும் 2004 ஆம் ஆண்டு அப்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே நான் பாராளுமன்றத்தை கலைத்தேன். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும் நான் கூறினேன். அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் விடயம் தொடர்பில் நான் கவலையடைந்தேன்.
ரணிலிடம் மன்றாடினேன்
மேலும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பது தொடர்பில் பல முயற்சிகளை நான் எடுத்திருந்தேன். 10 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் அழைப்பு விடுத்து வந்தேன். எங்களுடன் இணைந்து செயற்பட்டு இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு நான் கேட்டுவந்தேன்.
இந்த விடயத்தில் நான் ரணிலிடம் பிச்சை கேட்பது போல் இருந்தேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த பிரச்சினைக்கான தீர்வை கொண் டு வர உதவுமாறு நான் கேட்டேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. நான் முடியுமானவரை முயற்சி செய்தேன். தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையையும் முன்வைத்தேன். ஆனால் ஆதரவு கிடைக்கவில்லை. என்றார்.
அவரது தந்தை, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்த நடவடிக்கையையும் சந்திரிகா கடுமையாக விமர்சித்தார்.
அதுவே இனக்கலவரங்களை உருவாக்கவும் சிறுபான்மை சமூகங்கள் வெளியேற்றவும் போருக்கும் காரணமாகியது எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டினார்.
நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அமோக வெற்றியீட்டி, ஜனாதிபதி மகிந்தவின் ஆளும் கட்சி நாட்டின் மற்ற பாகங்களில் வெற்றியீட்டியுள்ளமை இலங்கையின் இனங்களுக்கிடையிலான வேறுபாட்டை தெளிவாகப் புலப்படுத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
நாட்டைச் சுரண்டும் அரசியல்வாதிகளினால் போர் வெற்றி கிடைக்கவில்லை – சரத் பொன்சேகா.

நாட்டைச் சுரண்டும் அரசியல்வாதிகளினால் போர் வெற்றி கிடைக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நான்காம் ஈழப் போரில் வெற்றியீட்டுவதற்கு படையினரும் மக்களுமே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் போது 8000 படைவீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததுடன், 6000 படைவீரர்கள் ஊனமுற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளோ அல்லது அமைச்சின் செயலாளர்களுக்கு பின்னால் செல்லும் கோழை ஜெனரல்களினாளோ புலிகளுக்கு எதிரான போர் வெற்றியீட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறைக்கு மின் விசிறி ஒன்றை பொருத்துமாறு நீதிமன்றம் இன்று, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு இரண்டு மரண தண்டனைகள்.

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு இரண்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
543 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியிருந்தது.
நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மரண தண்டனை விதிப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
2003ம் ஆண்டு முல்லேரியா பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆத்திரத்தில் 8 வயது சிறுவனை தூக்கிலிட்டு கொன்ற தீவிரவாதிகள்: ஆப்கானிஸ்தானில் சம்பவம்.

ஆப்கானிஸ்தானில் ஹெமண்ட் மாகாணத்தில் உள்ள கிரீஸ்க் நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுக்கு போலீஸ் வாகனத்தை தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரது 8 வயது மகனை கடத்தி சென்று விட்டனர். பின்னர் அவனை தூக்கிலிட்டு கொன்று விட்டனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.  
பாஞ்ச்ஷிர் மாகாணத்தின் பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தான் போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி காபூலில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அதிபர் கர்சாய் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கொடூரம் எந்த ஒரு மதத்திலும், கலாசாரத்திலும் அனுமதிக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் தீவிரவாதிகள் விரைவில் வேரறுக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்கடத்தல் சோதனையில் 1000 நபர்கள் கைது.
மெக்சிகோவில் ஆள் கடத்தல் மற்றும் பாலியல் ஆதிக்கம் செய்யும் முறைகேடுகள் குறித்த அதிரடிச் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை முதல் நடந்த இந்த அதிரடிச் சோதனைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது 20 மைனர் பெண்களும் மீட்கப்பட்டார்கள்.
சியுடாட் ஜீராஸ் என்ற இடத்தில் மதுபானக் கடைகள் மற்றும் ஹொட்டல்களில் மெக்சிகோ பொலிசார் சோதனை நடத்தி இந்த ஆட்கடத்தல் நபர்களை பிடித்து வருகிறார்கள்.
சியுடாட் அமெரிக்க எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். மெக்சிகோ மிக அதிக வன்முறை நடைபெறும் இடமாகவும் இந்தப் பகுதி உள்ளது.
2010 ஆம் ஆண்டு இங்கு 3 ஆயிரம் கொலைகள் நடந்தன. மெக்சிகோவின் மிக பயங்கரமான நகரமாக இந்த சியுடாட் உள்ளது. இந்தப் பகுதியில் மாயமாகும் இளம் பெண்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் அடிக்கடி குரல் எழுப்புகின்றன.
மெக்சிகோவின் வடக்கு பகுதியிலேயே அதிக அளவு வன்முறைகள் நடைபெறுகின்றன. இங்கு போதை மருந்து வர்த்தகம், மனித விற்பனை முறைகேடாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் மக்கள் வாழ்க்கை தரம் வீழ்ச்சியடைந்துள்ளது: ஆய்வில் தகவல்.
பிரிட்டனில் மக்களின் வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஐ.எப்.எஸ் ஆய்வு எச்சரித்து உள்ளது.
கடந்த 1970ம் ஆண்டு மிக மோசமான வாழ்க்கை தர வீழ்ச்சி ஏற்பட்டது. அதே போன்ற நிலை தற்போது உருவெடுத்து வருகிறது.
பண வீக்கம், வரி உயர்வு, சம்பள உயர்வில் தேக்கம் போன்ற காரணங்களால் வீட்டு நிர்வாகத்தில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
சாதாரண தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளில் தேசிய வருமானம் மிக மோசமாக குறைந்து உள்ளது. பொருளாதார சரிவை தடுப்பதற்காக தொழிலாளர் அரசு வாட் வரியை ரத்து செய்துள்ளது. இருப்பினும் கூட்டணி அரசின் செலவின ரத்து நடவடிக்கையால் பிரிட்டன் தடுமாறுகிறது.
பிரிட்டனில் வேலை இல்லாத திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது பிரிட்டனில் வீட்டு வருமானம் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் சராசரி குடும்பம் செலவு செய்யும் தொகையில் 360 பவுண்ட் குறைவாக இந்த ஆண்டு செலவினம் உள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி விலைகள் கடுமையாக அதிகரித்து வருவதால் 1990ஆம் ஆண்டு முதல் பணவீக்கத்தை பிரிட்டன் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என பாங்க் ஆப் இங்கிலாந்து சமீபத்தில் எச்சரித்து இருந்தது.
பிரிட்டனில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து உள்ளது என வாழ்க்கை தர வீழ்ச்சி குறித்த ஐ.எப்.எஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மீட்சி பெறுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
34 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
கின்னஸ் சாதனை என்பது பெருமைக்குரிய விடயம் தான். ஆனால் இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் சக்சேனாவுக்கு அது வேதனை.
உத்தர பிரதேசம் பரேலியை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மனைவிக்கு குறை பிரசவத்தில் மகன் பிறந்தான்.
வாரிசு பிறந்த சந்தோஷத்தில் மருத்துவனைக்கு சென்ற மனோஜ் குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். குழந்தையின் ஒவ்வொரு காலிலும் 10 விரல்கள் இருந்தன. ஒவ்வொரு கைகளிலும் 7 விரல்கள் இருந்தன. மொத்தம் 34 விரல்களுடன் குழந்தை பிறந்திருந்தது.
எடை குறைவாக பிறந்ததால் உடனடியாக ஓபரேஷன் மூலம் கூடுதல் விரல்களை அகற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். குழந்தைக்கு அக்ஷத் என்று பெயரிட்டு ஓராண்டாக வளர்த்து வருகிறார் மனோஜ்.
கால்களில் தலா 10 விரல்கள் இருப்பதால் குழந்தையால் நிற்க முடியவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: இது மிகவும் அரிதான நோய். இதை பாலிடேக்டிலி என்று அழைப்பார்கள். பெரும்பாலும் பூனை, நாய்களை பாதிக்கக்கூடிய இந்நோய் மிக அரிதாகவே மனிதர்களையும் பாதிக்கிறது.
இந்நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு கை, கால்களில் கூடுதலாக விரல்கள் இருக்கும். மற்ற உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை. குழந்தை பிறந்து ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டதால் இப்போது ஓபரேஷன் மூலம் கூடுதல் விரல்கள் அகற்றலாம். குழந்தை அக்ஷத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓபரேஷன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ரத்த குழாய்களில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். கால்களில் விரல்களை வெட்டி எடுக்கும் ஓபரேஷன் தானே என்று இதை சாதாரணமாக சொல்லி விடமுடியாது.
ஏனெனில் குழந்தை அக்ஷத்துக்கு கைகளில் கட்டை விரலே இல்லை. கூடுதல் விரல்களில் இருந்து தான் கட்டை விரலை மருத்துவர்கள் உருவாக்க வேண்டும். இதனால் இந்த ஓபரேஷன் மருத்துவர்கள் கடுமையாகவே இருக்கும் என்கின்றனர். அதிக விரல்களுடன் பிறந்த குழந்தையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளான் அக்ஷத்.
தீவிரவாத பகுதியில் நிவாரண உதவிகள்.
வறட்சியின் பிடியில் ஆப்பிரிக்க நாடான சோமாலியா தவித்து வருகிறது. அங்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்சகாபாப் பகுதியில் நிவாரண உதவிகள் அளிக்க தடை இருந்தது.
தற்போது இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிவாரண உதவிகளை அனுமதித்து உள்ளனர். சர்வதேச நிவாரண உதவி மூலம் வறட்சியால் உயிருக்கு போராடும் இஸ்லாமிய பகுதி மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.
லொறியில் கொண்டு செல்லப்பட்ட உணவு 24 ஆயிரம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. உள்ளூர் கொமிட்டியுடன் இணைந்து இந்த உணவுப் பொருட்கள் தரப்பட்டன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பார்டு ஹியர் பகுதியில் உணவுப் பொருட்கள் அளிக்கப்பட்டன.
சோமாலியாவில் உணவுக்காக தவிக்கும் 22 லட்சம் மக்களை நிவாரண உதவிகள் அடைய முடியாத நிலை உள்ளது என உலக உணவுத் திட்டம் கூறுகிறது. சோமாலியா தலைநகர் மொகாதிஷீவில் இருந்து வடமேற்கே உள்ள பார்டு ஹியர் நகருக்கு நிவாரண உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
நேற்று முன்தினம் உணவு உதவி அளிக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தினர் தற்போது சோமாலியாவின் இதர பாதிப்பு பகுதிகளிலும் உதவிகளை மேற்கொள்கிறார்கள்.
மேற்கத்திய நிவாரண உதவிகள் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் எண்ணம் கொண்டவை என அல்சகாபாப் தீவிரவாத நிர்வாகம் முதலில் செஞ்சிலுவை நிவாரண உதவிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது அதன் முடிவை மாற்றிக் கொண்டு உள்ளது.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.
ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி புகுஷிமா கடற்கரை பகுதியில் நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானார்கள்.
மேலும் அங்குள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியானது. கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்போது அங்கு நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதித்த புகுஷிமாவின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 3.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புகுஷிமா கடலில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் அது உருவானதாகவும் அறிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை அபாயம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 240 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நோர்வேயில் தாக்குதல் நடத்திய இளைஞருக்கு பிரிட்டன் தீவிரவாதிகளுடன் தொடர்பு.
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை வலதுசாரி தீவிரவாத அமைப்பை சேர்ந்த இளைஞர் ஆண்டர்ஸ் ப்ரீவிக் கொடூர தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 93 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய இளைஞர் உடோயா ஆளும் தொழிலாளர் கட்சியினரின் இளைஞர் முகாமில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதைத் தவிர ஓஸ்லோவின் அரசு கட்டிட பகுதிகளிலும் குண்டு வெடிப்பு நடந்தது.
தீவிரவாத வெறித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஆண்டர்சுக்கு பிரிட்டன் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டில் பிரிட்டனில் தீவிரவாதிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆண்டர்ஸ் மற்றும் இதர 7 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஸ்காட்லாந்து பொலிசார் நோர்வே நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
நோர்வே தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நோர்வே மன்னர் ஹரால்டு, ராணி சோன்ஜா மற்றும் நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
நோர்வே ஆலயங்களில் இறந்தவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ஆலயங்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. நோர்வே அரசு கட்டிடங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளன.
ஓஸ்லோவில் மிருகத்தனமாக தாக்குதல் நடத்திய ஆண்டர்ஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
லிபிய போராட்டக்காரர்களுக்கு ஜேர்மனி 10 கோடி யூரோ கடன் உதவி.
லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் தேசிய மாற்ற கவுன்சில் அமைப்புக்கு ஜேர்மனி 10 கோடி யூரோ கடன் உதவியை அளிக்கிறது.
லிபியாவில் கடந்த பெப்பிரவரி மாதம் முதல் கர்னல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அப்பாவி மக்களை லிபியா ராணுவம் கொன்று வருவதால் நேட்டோ படைகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சிலுக்கு ஜேர்மனி 10 கோடி யூரோ கடன் உதவியை அளிக்கிறது. இந்த கடன் உதவி பொது மக்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அளிக்கப்படுவதாக ஜேர்மனி தெரிவித்து உள்ளது.
இந்த கடன் உதவி குறித்து ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே கூறியதாவது: கர்னல் கடாபி சொந்த நாட்டு மகக்ளுக்கு எதிராகவே போர் நடத்துகிறார். லிபியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவையும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கிழக்கு லிபியாவில் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த ஜூலை மாதம் 16ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த கூட்டத்தின் முடிவின்படி ஜேர்மனி இந்த கடன் உதவியை போராட்டக்காரர்களுக்கு அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் 50 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பக்திகா பகுதியில் உள்ள ரவ்சா மாவட்டத்தில் அல்கொய்தா மற்றும் தலிபான் அமைப்புடன் தொடர்புடைய ஹக்கானி என்ற அமைப்பின் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாகவும், இவர்கள் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நேட்டோ படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் பயங்கர சண்டை நடந்தது. இதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புர்கா தடையால் சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் செல்லாமல் புறக்கணிப்பு.
பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா ஆடைகளை அணியக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது.
முஸ்லிம் பெண்கள் பாரம்பரியப்படி பெண்கள் வெளியில் செல்லும் போது முகத்தை மறைத்து செல்வது நடைமுறையாகும். பிரான்ஸ் இந்த செயல்பாட்டுக்கு தடைவிதித்து உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை பொது இடங்களில் மூடி செல்லக்கூடாது என பிரான்ஸ் அரசு கூறி கடும் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் பிரான்சில் வசிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் மத்திய கிழக்கு போன்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் முகத்தை மூடும் ஆடைகளை அணியக்கூடாது என பிரான்ஸ் எச்சரித்து உள்ளது.
பிரான்சின் இந்த கட்டுப்பாடு கடுமையான முஸ்லிம் நடைமுறைகளை கடை பிடிக்கும் இஸ்லாமிய நாடுகளை எரிச்சல் அடையச்செய்து உள்ளன. இந்த நிலையில் தங்கள் மத கோட்பாடுகளுக்கு விரோதமாக வெளி இடங்களில் முகத்தை மூடும் ஆடை இல்லாமல் செல்ல இஸ்லாமிய பெண்கள் விரும்பவில்லை.
இதனால் மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் செல்வதை தவிர்த்து வருகிறார்கள். அவர்கள் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் சுற்றுலா விடுமுறைக்கு செல்கிறார்கள்.
அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா நாடுகளில் இருந்து அதிக அளவில் பயணிகள் லண்டன் வருவதாக லண்டன் வர்த்தகர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். அரபு சுற்றுலா பயணிகள் சராசரியாக 2 ஆயிரம் பவுண்ட் வரை செலவிடுகிறார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஜீலை மாதத்தில் மத்திய கிழக்கு சுற்றுலா பயணிகளால் 20 கோடி பவுண்ட் வருமானம் கிடைக்கும் என லண்டன் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆப்கனுக்கு ஆயுதம் இல்லாத சாதாரண விமானங்கள்: கனடிய ராணுவத்தின் ஆபத்தான நடவடிக்கை.
ஆப்கானிஸ்தானில் கடைசி கட்ட போரின் போது ஆயுதங்கள் இல்லாத சாதாரண ஏர் பஸ் விமானங்களை கனடா ராணுவம் இயக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
துபாயில் மிராஜ் ராணுவ தளம் பயன்படுத்த மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதம் இல்லாத ஆபத்தான விமான பயணத்தை கனடா மேற்கொண்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் உள்நாட்டு தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதலை  முறியடித்து அங்கு அமைதி ஏற்படுத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த படை பிரிவில் கனடா படைகளும் இடம்பெற்று இருந்தன. இந்த படை பிரிவினர் ஆப்கானிஸ்தானில் தங்களது பயணத்தை நிறைவு செய்த தருணத்தில் நெருக்கடி ஏற்பட்டது.
கனடாவில் தங்கள் நாட்டு வர்த்தக விமானங்களை கூடுதலாக இயக்க துபாய் அனுமதி கேட்டது. அந்த அனுமதியை கனடா ஏற்க மறுத்ததால் துபாயில் உள்ள ராணுவ தளத்தை கனடா பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கனடா ராணுவ விமானங்கள் துபாயில் இறங்க முடியவில்லை. இதனால் காந்தகாருக்கு ஆயுதம் இல்லாத ஏர் பஸ் விமானங்களை கனடா ராணுவம் அனுப்பியது. வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கனடா கொண்டு வர அவை இயக்கப்பட்டன.
இந்த சாதாரண விமானங்களில் எந்த வித ராணுவ பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. தீவிரவாதிகள் ஏவுகணை வீசினால் அதனை தற்காத்துக் கொள்ளும் வசதிகள் இல்லை. மிக ஆபத்தான முறையில் ஆப்கானிஸ்தானில் இந்த விமானங்கள் இயக்கப்பட்டன என்று 2010ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆடை அலங்கார நிகழ்ச்சி நடந்த ஹொட்டலில் திடீர் குண்டு வெடிப்பு.
பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் உள்ள தனியார் ஹொட்டலில் நேற்று முன்தினம் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடந்த போது திடீரென குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இஸ்லாமி ஜம்மியதுல் உலமா மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி மதவாத அமைப்பினர் சிலர் சேனாப் கிளப் சவுக் பகுதியில் இந்நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு செய்யாவிட்டால் ஹொட்டலை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். எனினும் பொலிசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் பேச்சு நடத்தியதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பின் குறிப்பிட்ட நேரத்தில் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடந்த போது திடீரென அந்த ஹொட்டலில் குண்டு வெடித்தது. எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவரும் பாதியிலேயே வெளியேறினர்.
இதையடுத்து நிகழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிவுக்கு வந்தது. இதனிடையே பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
குணமடைந்து நாடு திரும்பினார் வெனிசுலா அதிபர்.
புற்றுநோய்க்காக கியூபாவில் சிகிச்சை பெற்று வந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் குணமடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை நாடு திரும்பினார்.
வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 56 வயதான இவரது இடுப்பு எலும்புப் பகுதியில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் இவர் கியூபா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த அவர் பூரண குணமடைந்ததாக தெரிவித்ததை அடுத்து ஹியூகோ அங்கிருந்து நாடு திரும்பினார்.
அவரது அமைச்சரவை சகாக்கள் விமான நிலையத்தில் ஹியூகோவை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,"நான் பூரண குணமடைந்து விட்டேன். புற்றுநோய்க்கான செல்கள் எனது உடம்பின் எந்தவொரு பகுதியிலும் இப்போது இல்லை என்று பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்" என்றார்.
கைகள் இல்லாத சிறுவன் பந்து வீச்சாளராக தெரிவாகி சாதனை.
கைகள் இல்லாத பள்ளி சிறுவன் நட்சத்திர கிரிக்கட் வீரராக தெரிவாகி புதிய சாதனை படைத்து இருக்கிறான்.
கிரிக்கட்டில் சுழல் பந்து வீச்சு என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நடுக்கம் இருக்கும். பந்து காற்றில் தள்ளாடி வருவதைப் போல தரையில் விழுந்தவுடன் விக்கெட்டை நோக்கி வேகமாக திரும்பும்.
அப்படி வரும் பந்தை தடுக்க தவறினால் ஸ்டம்ப் கீழே விழும். துடுப்பாட்ட வீரர்கள் பெவிலியனுக்கு நடைகட்ட வேண்டியது தான். இந்த அருமையான சுழல்பந்து வீச்சாளராக 11 வயது சிறுவன் கெரன்டஸ் கிப்ஸ் திகழ்கிறான்.
இந்த சிறுவனுக்கு பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லை. இருந்தாலும் வலது கை பகுதியில் பந்தை மிக இறுக்கமாக பிடித்து மிக நேர்த்தியாக பந்தை வீசுகிறான். அவனது பந்து வீச்சுத்திறனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அங்கீகரித்து உள்ளது.
ஹொலிடே கடற்கரை கிரிக்கட் போட்டிகளின் போது கெரனின் திறமையை உறவினர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிறுவன் தற்போது வொர்சஷயரில் உள்ள ரெட்டிச் உள்ளூர் கிளப்பில் ஆடுகிறான்.
என்னால் இந்த அளவு சிறப்பாக ஆட முடியுமோ அதனை வெளிப்படுத்த ஆடச் செல்கிறேன் என சிறுவன் உறுதியுடன் கூறுகிறான். இந்த சிறுவனின் திறமை குறித்து 29 வயது தாய் கேரி கூறுகையில்,"உடல் ஊனம் அவனை பின்னடைய செய்யவில்லை. அவனது நம்பிக்கையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF