எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி இந்த விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட உள்ள பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலளார் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நட்பு நாடு என்ற அளவில் தென்சூடானின் சுதந்திரத்தில் இலங்கை பங்கேற்பதாக ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் 54 வது சுதந்திர நாடாக மாறியுள்ள தென்சூடானின் தலைநகர் லூபாவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் இலங்கையின் சார்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் கென்ய தூதுவர் ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் நைரோபியின் இலங்கை உயர்ஸ்தானிகரையே தென்சூடானின் உயர்ஸ்தானிகராக நியமிக்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது .
அத்துடன் இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வுக்காணப்பட வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கோரியுள்ளதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த அவர், அந்த அறிக்கை குறித்து இன்னும் கேள்வி எழுப்பபடுவதாக குறிப்பிட்டார்.
சில நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இதனை எழுப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் குறிப்பிடவில்லை.
இலங்கையில 20 வீதமான தமிழர்கள் வாழகின்றனர். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் நண்பர்களும் உறவினர்களும் ஆவர்.
எனவே அந்த மக்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவது இயல்பானதே என்று அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழர்கள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்று இந்தியா எண்ணம் கொண்டிருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குறித்த இந்திய இணையத்தளத்துக்கு கருத்துரைத்த இந்திய பேச்சாளர் இலங்கை தமிழர்கள் தொடர்பிலான இந்தியாவின் கரிசனை பல்வேறு சந்தப்பங்களிலும் ஸ்ரீலங்காவுக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மெக்சிகோ நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டறிந்து அதனை அழிக்கும் முயற்சியி்ல் இறங்கியுள்ளனர்.
மெக்சிகோ போதை மருந்து கடத்தலுக்கு பெயர் போன நாடாக திகழ்கிறது. இங்குள்ள சில மாகாணங்களில் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களிடையே வன்முறையும், கொடூர கொலைகளும் அரங்கேறி வருகின்றன.
அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக போதை மருந்து கடத்தல் தொழில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவின் வடகிழக்கு மாகாணமான பார்ஜா கலிபோர்னியாவில் ஷான்கூயின்டின் நகரில் ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில்(1.2 சதுர கி.மீ) மாரிஜூனா எனும் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தை அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்த ராணுவத்தினர் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி கூறியதாவது: நாட்டில் இந்த அளவுக்கு 300 ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது இது தான் முதல் தடவை. அதுவும் கஞ்சா செடிகள் நன்கு வளர்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.தற்போது இப்பகுதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி நில உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார். இச்செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
லிபியாவில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மாயம்: அமெரிக்கா கவலை.
லிபியாவில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் காணாமல் போனது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அவை பயங்கரவாதிகள் கையில் சிக்கியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசு எதிர்ப்பு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் வீரர்கள் எளிதில் சுமந்து செல்லும் வகையில் அமைந்த எஸ்.ஏ-7 ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஏராளமான எண்ணிக்கையில் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ரஷிய தயாரிப்புகளான இந்த வகை விமான எதிர்ப்பு பீரங்கிகள், அதிபர் கடாபியின் ஆதரவுப் படையினர் விட்டுச் சென்ற ஆயுத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தவையாகும்.
காணாமல் போன பீரங்கிகள் அனைத்தும் அல்கொய்தா போன்ற பயங்கரவாதிகள் கைகளில் சிக்கினால் அவை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் லிபியாவின் கை ஓங்கிய ஆரம்ப நாள்களில் இந்த வகை பீரங்கிகள் மாயமாகத் தொடங்கின. பிறகு அது கட்டுப்படுத்தப்பட்டது.
இப்போது லிபியாவின் மேற்கு மாகாணப் பகுதியில் மீண்டும் கடாபி ஆதரவுப் படையினர் முன்னேறி வரும் நிலையில் பெரும் எண்ணிக்கையில் பீரங்கிகள் காணாமல் போயிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவின் எல்லையோரப் பகுதிகளில் ஆயுத விற்பனை என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போன இந்த விமான எதிர்ப்பு பீரங்கிகள் கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வதற்காக திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போன பீரங்கிகளை மீட்கவும், அவற்றை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் அண்ட்ரூ ஜே ஷாப்பிரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிரியா மீது பொருளாதார தடை: பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்.
கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி வலியுறுத்தியுள்ளார்.
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசை எதிர்ப்பவர்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதைக் கண்டித்து பாரீசில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி,"சிரியா அதிபரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் மீது அரசு முரட்டுத்தனமாக நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. எனவே சிரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.
அத்துடன் சிரியா நாட்டின் அதிபராக நீடிக்கும் தகுதியை பஷர் அல் அசாத் சட்டப்பட்டி இழந்துவிட்டார் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும் பிரான்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு.
ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 2012ல் முடிவடைகிறது. அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தான் மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடப்போவதில்லை என பி.பி.சி தொலைக்காட்சிக்கு ஹிலாரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் கூறியதாவது: வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க நான் விரும்பவில்லை. எனது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட ஆர்வமாக உள்ளேன்.
இதனால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எனது வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். மகளிர் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்தவரை செய்ய நினைத்தேன். கூடுமானவரை தேவையானவற்றை செய்துள்ளேன்.
மனித உரிமை, சுயகெளரவம், சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அமெரிக்காவின் தலைமை இந்த உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அமெரிக்காவின் முக்கியத்துவத்தையும், தலைமையின் அவசியத்தையும் நிலைநிறுத்தவதே எனது முக்கிய பணியாக கருதுகிறேன்.
மக்கள் பணியாற்றுவதில் நான் எப்போதும் களைப்படைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது நீண்ட ஓய்வெடுக்க நேர்ந்தால் உடற்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வது வழக்கம். எனவே எனது வேலையில் நான் ஒருபோதும் களைப்படைந்ததில்லை.
30 ஆயிரம் நபர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை.
அர்ஜென்டினாவில் கடந்த 1970 முதல் 1982ம் ஆண்டு வரை ராணுவ ஆட்சி நடந்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் பேர் எல்வேசுபியோ சிறையில் இருந்து ராணுவத்தினரால் கடத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ராணுவ அதிகாரிகளால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று ராணுவ ஆட்சி நடந்த 7 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இதை தொடர்ந்து புரட்சியின் மூலம் கடந்த 1983ம் ஆண்டு மக்கள் ஆட்சி மலர்ந்தது. எனவே ராணுவ ஆட்சியின் போது பொது மக்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகள் மீது பியூனோஸ் ஏர்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனிதாபமானம் இன்றி கொலை பாதக செயலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஹெக்டார் காமென், ஹியூகோ பாஸ் கரேலி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டபட்டிருந்த ராணுவ தலைமை தளபதி கடந்த மாதம்(ஜூன்) சிறையில் மரணம் அடைந்தார்.
திரிபோலியை அழிக்கப் போவதாக வெளியான தகவல் பொய்யானது: லிபியா.
திரிபோலி கைப்பற்றப்பட்டால் அதனை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது.
லிபியாவில் கடாபி ஆதரவு படையினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லிபியாவுக்கான ரஷ்ய தூதர் அந்நாடு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கிளர்ச்சியாளர்கள் லிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்றினால் அந்த நகரை அழிக்கும் திட்டமுள்ளதாக லிபிய பிரதமர் அல் பக்டாடி அல் மக்மூடி தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு லிபியா மறுத்துள்ளது.
இது குறித்து லிபிய அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"திரிபோலியை அழிக்கும் திட்டமுள்ளதாக கூறுவது தவறானது. இது போன்ற கருத்துக்களை வெளியிடவில்லை என ரஷ்ய தூதர் அலுவலகம் எங்களிடம் கூறியுள்ளது. இது தவறான தகவல். திரிபோலி நகரை அழிக்க மாட்டோம்" என்றார்.
முர்டோக்கிடம் விசாரணை நடத்த அமெரிக்க எப்.பி.ஐ முடிவு.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர்.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசித் தகவல்களை திருட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை முயன்று உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பிரபலங்களின் தொலைபேசியின் ரகசிய தகவல்களை எடுத்து செய்தி வெளியிட்டதற்காக பிரிட்டனில் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறுத் துறைகளின் பிரபலங்களின் எதிர்ப்புக் காரணமாக நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை கடந்த ஞாயிறன்று மூடப்பட்டது.
150 ஆண்டுகளுக்கும் மேலாக வந்த இந்த பத்திரிக்கை மூடப்பட்டதில் அதன் அதிபர் முர்டோக் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதலில் பாதிப்பு அடைந்த நபர்களின் தொலைபேசி தகவல்களை நியூஸ் ஆப் தி வேர்ல்டு திருட முயன்றுள்ளது என அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வு துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் செனட்டர்களும் மூத்த குடியரசு கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியதின் பேரில் எப்.பி.ஐ விசாரணை துவக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் எம்.பி.க்கள் கேள்விகளுக்கு முர்டோக்கும், அவரது மகன் ஜேம்சும் பதிலளிக்க ஒப்புக் கொண்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண் விமானிகளுக்கு அமெரிக்காவில் பயிற்சி.
முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் விமான படையில் பெண்கள் சேர தொடங்கியுள்ளனர். அவர்களில் சோர்யாசலே உள்பட 3 பெண்கள் விமானி ஆக பணிபுரியும் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு அமெரிக்காவில் அல்பாமாவில் உள்ள ராணுவ கல்லூரியில் விமானி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடக்கத்தில் 6 முதல் 8 வாரங்கள் இவர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை பயிற்சி வழங்கப்படும்.
பின்னர் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவார்கள். இவர்களுடன் ஆண் விமானிகளும் பயிற்சிக்காக அங்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்களுக்கு முதலில் ஹெலிகாப்டரில் விமானியாக பயிற்சி அளிக்கப்படும்.
இந்த தகவலை ஆப்கானிஸ்தானில் சான் அண்டோனியோ லேக்லேண்டு விமான படை தள கமாண்டர் மசூமா ஜுசானி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வளத்திற்காக உயிரை விடவும் தயார்: லிபியா உறுதி.
லிபியாவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தை காப்பாற்றுவதற்காக உயிர் விடுவோம் என லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் முழங்கினார்.
லிபியா பிரகா நகரம் எண்ணெய் வளம் மிக்கப்பகுதியாகும். இந்த எண்ணெய் வளம் மிக்க பகுதி மீது போராட்டக்காரர்களும் நேட்டோ படையினரும் வான்வழித், தரைவழி மற்றும் கடல்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும் லிபிய செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டினார்.
எண்ணெய் வளத்தை காப்பாற்ற உயிர் துறப்போம். எண்ணெய் வளத்திற்காக உயிரை கொல்வோம் என்றும் அவர் எச்சரித்தார். லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக கர்னல் கடாபியின் ஆட்சி நடைபெறுகிறது.
அவரது ஆட்சியை அகற்றி தேசிய மாற்ற கவுன்சில் ஆட்சியை கொண்டுவர மேற்கத்திய நாடுகள் முனைப்பு கொண்டு உள்ளனர். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என கடாபி முழங்கினார்.
நாட்டின் மேற்கு பகுதியான அகிலாட்டில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி வீர உரை நிகழ்த்தினார். விசுவாசம் உள்ள உங்களை விட்டு என்னால் நகர முடியாது என்றார்.
அவரது உரை லிபிய அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் மத்தியிலிருந்து போராட்டம் நடைபெறுகிறது.
அமெரிக்காவை தாக்க அல்கொய்தா தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் அம்பலம்.
இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தின் போது மீண்டும் அமெரிக்காவை தாக்க அல்கொய்தா திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தான் கொல்லப்படுவதற்கு முன்பாக அல்கொய்தா அமைப்பின் தலைவர்களுடன் பேசிய ஒசாமா இரட்டை கோபுர தாக்குதலில் 10ம் நினைவு தினத்தில் மீண்டும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
எனினும் இது ஆலோசனை அளவிலேயே இருந்ததாகவும், அதற்குள் ஒசாமா கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடன் பிரச்சனையால் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து: ஒபாமா கவலை.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை மீறி விட்டது. அமெரிக்கா முழுவதும் கடன் நெருக்கடி தலைதூக்கி உள்ளது. இதனால் தனது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து வரும் என ஒபாமாவுக்கு கவலை ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் வாங்குவதற்கான கடன் உச்சவரம்பு 14.3 டிரில்லியன் டொலர் ஆகும். ஒரு டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி அளவை குறிக்கும். இந்த கடன் உச்சவரம்பு நிலையை உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா எட்டி விட்டது.
அந்த நாடு தனது கடன் உச்சவரம்பை அதிகரிக்கா விட்டால் அதன் கடன் தொகைகளுக்கு திரும்ப செலுத்த முடியாத பிரச்சனை ஏற்படும். இந்த கடன் உச்சவரம்பை ஆகஸ்ட் 2ம் திகதி அமெரிக்கா உயர்த்த வேண்டி உள்ளது.
குடியரசு கட்சியினருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போது ஒபாமா கூறுகையில்,"தற்போதைய கடன் பிரச்சனையால் எனது பதவி பறிபோகும் நிலையும் உள்ளது" என தெரிவித்தார்.
அமெரிக்காவின் கடன் பிரச்சனையை சமாளிக்க ஒபாமாவின் டெமாக்ரேட்ஸ் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுடன் மோதி வருகிறார்கள்.
டெமாக்ரேட்ஸ் கட்சியினர் சில செலவின ரத்து வசதி உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு குடியரசு கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிரிட்டனில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
பிரிட்டனில் வாகனங்களை ஓட்டுபவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேலாக மது அருந்திய நிலையில் வண்டியை ஓட்டுகிறார்கள். இந்த அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதையும் டிரைவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். கடந்த ஆண்டு ஆல்கஹால் கட்டுப்பாடு வரையரை உயர்த்தபட்டதை தொடர்ந்து மது அருந்தி வாகனம் ஓட்டுவதாக ஆய்வில் டிரைவர்கள் தெரிவித்தார்கள்.
அட்மிரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. ஆல்கஹால் அருந்தும் போது பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை கருத்தில் கொண்டு குடிக்கும் அளவு குறைகிறது என பத்தில் ஒரு டிரைவர் தெரிவித்தார்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எப்போதும் அதிக அளவில் மது அருந்தி வாகனம் ஓட்டியே விபத்துக்கள் ஏற்படுகின்றன. விடுமுறை தின கொண்டாட்ட நாள்களை காட்டிலும் இந்த மாதங்களில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஆல்கஹால் வரையறைக்கு மேல் அதிக அளவு மது அருந்தியதாக கருதும் போது வேறு ஒருவரை வாகனம் ஓட்ட செய்வதாகவும் டிரைவர்கள் தெரிவித்தனர்.
ராணுவ மையத்தில் அணு ஆயுத குவிப்பு: ஜேர்மனி அரசு மீது சமூக ஆர்வலர் வழக்கு.
மேற்கு ஜேர்மனியில் உள்ள ராணுவ மையத்தில் அதிக அளவு அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த அணு ஆயுதங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. ரைனே லேண்ட் பாலடினேட் ராணுவ மையத்தில் ஏறக்குறைய 20 அணு வெடி குண்டுகள் உள்ளன என்று வழக்கு தொடர்ந்த அமைதி ஆர்வலர் எல்க் கோலர் அரசின் மீது குற்றம் சாட்டினார்.
இப்படி அணு ஆயுதங்களை குவிப்பது ஜேர்மனியின் அடிப்படை சட்டத்திற்கு எதிரானது என அணு எதிர்ப்பு ஆர்வலரான எல்க் கோலர் தெரிவித்தார்.
ஜேர்மனி அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ள கோலர் ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆவார். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி பெடரல் அரசு மீது வழக்கு தொடர்ந்தார். நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் யாருடையதாக இருந்தாலும் உடனடியாக அகற்ற வேண்டும் என அவர் கூறினார்.
ஜப்பான் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டு வீரியத்தை விட 13 மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டுகள் 10 முதல் 20 வரையில் ஜேர்மனியில் உள்ளன. இந்த அணு குண்டுகள் எபல் பிராந்தியத்தில் மலைப்பகுதிக்கு கீழே பாதாள அறை பகுதியில் உரிய பாதுகாப்புடன் உள்ளன.
இந்த இடம் பெல்ஜியம் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. ஐரோப்பா அவசர நிலையின் போது அமெரிக்க அணு ஆயுதங்களை எடுத்து செல்ல ஜேர்மனியின் அதி வேக போர் விமான மையமும் உள்ளது.
அணு ஆயுதங்கள் உள்ள இடத்தில் இருந்து வழக்கு தொடர்ந்துள்ள கோலர் வீடு 4 கிலோ மீற்றர்(2.5மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
ராணுவ அணிவகுப்புடன் துவங்கிய பாஸ்டிலே தின கொண்டாட்டம்.
பிரான்சில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் திகதி புரட்சி தினமான பாஸ்டிலே தேசிய விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரான்சில் கடந்த 1789ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பாரிசில் உள்ள பாஸ்டிலே சிறைச்சாலையை புரட்சியாளர்கள் திரண்டு தாக்கினர்.
அந்த கொந்தளிப்பு போராட்டம் பிரான்சில் புரட்சி ஏற்பட வழிவகுத்ததுடன் சுதந்திரமும் பெற்று தந்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டிலே தினம் தேசிய விடுமுறை கொண்டாட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
பிரான்சில் நேற்று பாஸ்டிலே தினம் கொண்டாடப்பட்டது. ராணுவ அணி வகுப்பும் நடைபெற்றது. அனைத்து மக்களும் உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஒருவித பதட்டத்துடனேயே காணப்பட்டார்.
வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஒரு பிரான்ஸ் வீரர் கொல்லப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட மறுநாள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு நிகோலஸ் சர்கோசி திடீர் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். பாஸ்டிலே தினம் ஆப்கானிஸ்தான் ஓபரேஷனில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சமர்ப்பணம் என்று அவர் அறிவித்தார்.
நிகோலஸ் சர்கோசி நேற்று பாதுகாப்பு துறையினருடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தானில் தற்கொலை படையினரால் பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து விவாதித்தார்.
முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிற 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் துருப்புகள் நாடு திரும்புகின்றன. அதற்கு முன்பாக அங்கு பிரான்ஸ் வீரர்களை பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க அகதிகளை காப்பாற்ற கனடா அதிக நிதி உதவி: தொண்டு அமைப்புகள் வலியுறுத்தல்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் பசி, பட்டினியால் பரிதவிக்கிறார்கள். குறிப்பாக சோமாலியா மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவேளை உணவு கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் பார்க்கிறார்கள்.
பட்டினியில் பரிதவிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு கனடா பெரும் உதவிகளை அளிக்க வேண்டும் என தொண்டு நிறுவனங்களும், அகதிகள் நிவாரண உதவியாளர்களும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சோமாலியாவில் உணவு மட்டுமல்ல தண்ணீரும் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான சோமாலிய மக்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக அவர்கள் கென்யா நாட்டிற்கு அதிகம் இடம் பெயர்ந்து உள்ளனர். ஆப்பிரிக்க வறட்சி பாதிப்புக்கு உதவி செய்யும் வகையில் கனடா ஏற்கனவே 115 லட்சம் டொலர் நிதி உதவி செய்து உள்ளது.
வறட்சியில் வாடுவோர்க்கு உதவ கென்யாவில் உள்ள தாதாப் பகுதியில் மிகப்பெரும் முகாம் கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. இந்த முகாமில் கேர் கனடா தொண்டு நிர்வாகம் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
தாதாப் முகாமுக்கு அகதிகளாக வருவோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. முகாமுக்கு வெளியே 60 ஆயிரம் அகதிகள் காத்து இருக்கிறார்கள். தாதாப் முகாமில் கனடா நிதி உதவி அதிகரிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கேர் கனடா தொண்டு நிறுவனத்தின் தலைவர் கெவின் மெக்கார்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். முகாம் பகுதியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க உரிய உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாதாப் அகதிகள் முகாமில் உள்ள பெண்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் பெற பல மைல் தூரம் நடக்கிறார்கள். அதே போன்று சமையல் செய்வதற்கான விறகுகளை பெறவும் அதிக தூரம் நடக்க வேண்டி உள்ளது.
அகதிகள் முகாமில் உள்ள பெண்களுக்கும் உதவ அதிக நிதி அளிக்க வேண்டும் என கேர் கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு: உலக நாடுகள் கடும் கண்டனம்.
மும்பையில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தெற்கு மும்பையின் மக்கள் நெருக்கம் மிகுந்த ஜவேரி பஜார், தாதர் ரயில் நிலையம் அருகே, சர்ணி ரோடு ஓபரா ஹவுஸ் கலையரங்கம் அருகே என 3 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து வெடித்தன.
இதில் 18 பேர் சம்பவ இடங்களிலேயே இறந்தனர். 131 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐ.நா செயலர் பான் கி மூன்: நோக்கம் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஒரு பெரும் குற்றச்செயல்.
உலக நாடுகளின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் பாயங்கரவாத செயல்கள் பெரும் சவாலாக உள்ளன. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் தங்கள் உறவினர்களை இழந்து தவிக்கும் இந்திய மக்களுக்கு ஐ.நா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பராக் ஒபாமா: மும்பையில் நிகழ்த்தப்பட்டுள்ள குண்டுவெடிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு உதவும்.
ஹிலாரி கிளிண்டன்: எந்த நோக்கத்துக்காக பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களோ அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
இச்சம்பவத்தால் எனது இந்தியப் பயணத்தில் தடை ஏதும் இருக்காது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவங்களின் போது தான் நம்முடைய ஆதரவு இந்தியாவுக்கு அவசியமாகும். அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம்.
குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பத்தாருக்கும் அமெரிக்க மக்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹிலாரியுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரஷியா அமைச்சர் செர்ஜி லவ்ராவும் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அப்போது தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி: இது ஒரு கோழைத்தனமான, கண்மூடித்தனமான செயல். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு தங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐக்கிய அரபு நாடுகள்: ஐக்கிய அரபு நாடுகள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாபின் சையது அல் நயான் கூறியது: ஏற்றுக்கொள்ள முடியாத இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி:குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், உடைமைகளை இழந்து தவிப்போருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தோனேஷியா: பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு இந்தோனேஷியாவின் ஆதரவு எப்போதும் உண்டு என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்டி நடலேகவா குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற்றம்.
இந்தோனேஷியாவில் சுலேவெய்ஸி மாகாணத்தில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் அப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுலேவெய்ஸி மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள லூக்கோன் எனும் எரிமலை நேற்று இரவு 10.50 மணியளவி்ல் வெடித்து சிதறி புகையுடன் கூடிய தீஜூவாலையுடன் லாவாவினை வெளியேற்றியது.
இதனால் அப்பகுதியில் வசி்ப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா பேரிடர் மேலான்மை தலைவர் பிரெய்ன்லோர்லா தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் தகவல்கள் திருட்டு.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு மேம்பாட்டு ஒப்பந்தம் தொடர்பான 24 ஆயிரம் கணணி தகவல்கள் திருடுபோனதாக அந்நாட்டு ராணுவ இணை அமைச்சர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராணுவ இணை அமைச்சர் வில்லியம் லியான் கூறியதாவது: அமெரிக்காவின் ராணுவ மேம்பாட்டு திட்டம் தொடர்பாகவும் அதன் தலைமையகமான பென்டகனில் உள்ள கணணி தகவல்களை சைபர் தாக்குதலிலிருந்து சமாளிக்க சில வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இந்த வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகள் தான் பென்டகனின் 24 ஆயிரம் கணணி தகவல்கள்(விபரங்கள்) திருடி விட்டனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து தான் இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடந்துளளது தெரியவந்துள்ளது.
அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இந்த செயலில் வெளிநாட்டு சக்திகளுக்கும் தொடர்புள்ளது.
லிபிய தலைநகரை அழிக்க கடாபி திட்டம்: ரஷ்ய சிறப்பு தூதர் அதிர்ச்சித் தகவல்.
லிபியா தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்நகரை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளார்.
கடாபியிடம் இன்னும் ஏராளமான ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளன. இதுவரை நடந்த தாக்குதல்களில் ஏவுகணைகளை கடாபி பயன்படுத்தவில்லை என லிபியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கெயில் மர்கெலோவ் கூறினார்.
லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ச்சி நடக்கிறது. நேட்டோ படைகளுடன் சண்டையிட்டு வரும் லிபியா அரசுக்கு தற்போது பல வழிகளிலும் சிக்கல் எழுந்துள்ளது.
கடாபிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த 4ம் திகதி துருக்கி அரசு வாபஸ் பெற்றது. இதனால் கடாபிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள துருக்கி - லிபியா வங்கியில் லிபியா அரசின் பணம் டிபாசிட் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை கடாபிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சமீபத்தில் லிபியா அரசின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.
இதனால் விரைவில் லிபியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று அமெரிக்கா புலனாய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில் லிபியாவின் மேற்கில் உள்ள குவாலிஷ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இதற்கிடையில் லிபியாவிற்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விபரம் ரஷ்ய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.
அதில் மெர்கெலோவ் லிபியா தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்கள் கையில் வீழ்ந்தால் தற்கொலைப் படைத் திட்டம் ஒன்றை செயல்படுத்த கடாபி திட்டமிட்டுள்ளார்.
அதாவது நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி திரிபோலியை தகர்க்க திட்டமிட்டுள்ளார். இதை கடாபியே என்னிடம் தெரிவித்தார். கடாபி இதுவரை ஏவுகணைகள் எதையும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை.