இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் : மங்கள.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இடமுண்டு என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்வது குறித்த ரோம் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. எனினும் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."2002ம் ஆண்டு ரோம் சர்வதேச சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசாங்கம் அதில் கையெழுத்து இடவில்லை.
இதில் கையெழுத்து இடாத நாடாக இருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கோரிக்கையின்படி நெதர்லாந்தின் ஹெய்ட் நகரில் உள்ள சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு இலங்கை இராணுவத்தினரை கொண்டு செல்ல முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதே நிலைமையே சூடானின் ஜனாதிபதி பசீருக்கு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், சூடானும் இலங்கையைப் போன்று இந்த சாசனத்தில் கையொப்பம் இடவில்லை என குறிப்பிட்டார்.
ஐ.நா செயலர் பான் கீ மூன் - ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேன் கீ மூனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சித்தலைவர் ஐ.நா. செயலாளரை தெளிவுபடுத்தியுள்ளார்.அதேவேளை, தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் பொது அரசியல் தீர்வு தொடர்பில் இடம்பெற்றுவருகின்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் இதன்போது கருத்துகள் பறிமாறப்பட்டுள்ளன.
பொது அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வது குறித்து எதிர்கட்சித் தரப்பில் உள்ளடங்கும் கட்சிகளுடான கலந்துரையாடல்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.இது தவிர எதிர்கட்சித் தலைவர், அமெரிக்காவின் சில உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சபை அரசியல், அணிக்குள்ளும் பரவி பிளவை ஏற்படுத்தியது: சங்கக்கார.
"1996 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பணமும் அதிகாரமும் வந்தன. அணியிலுள்ள வீரர்கள், சபையின் அதிகாரப் போட்டியில் சம்பந்தப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் சபையின் அரசியலானது அணிக்குள்ளும் பரவி பிளவையும் தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது" இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.அத்துடன், அனைத்து நாடுகளிலும் தேசிய கிரிக்கெட் சபைகளுக்கான நிர்வாகிகள் அரசியல் தலையீடின்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் பணிப்புரையை இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார வரவேற்றுள்ளார்.
நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்து சில நாட்களில் சங்கக்காரவின் கருத்து வெளிவந்துள்ளது.லோர்ட்ஸ் அரங்கில், நேற்று திங்கட்கிழமை தான் நிகழ்த்திய, எம்.சி.சி. கொலின் கௌட்ரி ஞாபாகர்த்த எம்.சொற்பொழிவில் மேற்படி கருத்தை சங்கக்கார தெரிவித்துள்ளார்.கடந்த பல வருடங்களாக அணியினரால் உயர்ந்த மதிப்பளித்து போற்றப்படும் ஐக்கியம், வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகிய பண்புகளை நிர்வாகிகளும் கடைபிடிக்க வேண்டும் என குமார் சங்கக்கார கூறினார்.
இங்கிலாந்துடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி பெற்றதற்கு மறுநாள் சங்கக்கார இந்த உரையை நிகழ்த்தினார்.இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கொலின் கௌட்ரியின் ஞாபகார்த்தமாக 2001 ஆம் ஆண்டு முதல் இந்த சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு வருகிறது.போட்டிகளில் விளையாடும் காலத்தில் இச்சொற்பொழிவை நிகழ்த்திய முதலாவது வீரர் குமார் சங்கக்கார என்பதுடன் இச்சொற்பொழியை நிகழ்த்திய ஒரேயொரு இலங்கை வீரரும் அவராவார்.
'நிர்வாகத்தில் மேலும் தொழிற்சார் தன்மையையும் முன்னோக்கிய சிந்தனையும் வெளிப்படைத் தன்மையும் இல்லாவிட்டால் பொதுமக்களின் ஆதரவை நாம் இழக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். உண்மையில் இது ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. விசுவாசமான ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருவது அதிகரிக்கிறது. அவர்களின் ஆர்வம்தான் கிரிக்கெட்டிற்கு சக்தியளிக்கிறது. அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து வேறுபுறம் திரும்பினால் முழு முறைமையுமே சீர்குலைந்துவிடும்' என சங்கக்கார கூறியுள்ளார்.
அரசியல் தலையீடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள், தவறான நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அங்கத்துவ நாடுகளின் சபைகளை இடைநிறுத்துவது என்ற ஐ.சி.சியின் நிலைப்பாடு இதற்கு தீர்வாக அமையலாம்.இது அணிகளை களமிறக்கும் மற்றும் ஐ.சி.சியிடமிருந்து நிதி மற்றும் ஏனைய உதவிகளை பெறும் ஆற்றலை இல்லாமலாக்ககக் கூடும். எனினும் ஓர் இலங்கையர் என்ற வகையில் நாமே தீர்வுகளை தேடிக்கொள்ளும் நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்' என குமார் சங்கக்கார தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றமை நாட்டின் ஐக்கியத்திற்கான மிகப் பெரிய தருணம் என சங்கக்கார கூறினார்.அதேவேளை, நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு தொண்டரினால் தலைமை தாங்கப்படும் மேன்மையான நோக்கம் கொண்ட மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து பல் மில்லியன் டொலர் நிறுவனமொன்றாக மாற்றமடைந்தது. அப்போதிருந்து அது கொந்தளிப்பான நிலையிலுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
"1996 ஆம் ஆண்டின் வெற்றியுடன் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பணமும் அதிகாரமும் வந்தன. அணியிலுள்ள வீரர்கள் சபையின் அதிகாரப் போட்டியில் சம்பந்தப்பட்டனர். இந்த வழியில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் , வீரர்களின் விசுவாசத்தை தமது சொந்த இலக்குகளை அடைவதற்காக பயன்படு;த்திக்கொண்டனர். பல சந்தர்ப்பங்களில் சபையின் அரசியலானது அணிக்குள்ளும் பரவி பிளவையும் தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது" எனவும் அவர் கூறியுள்ளார்.
சங்கக்காரவின் உரை குறித்து விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு
இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகத்திலுள்ள அரசியல் தலையீடுகள், ஊழல்கள் குறித்து விமர்சித்த இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.33 வயதான சங்கக்கார, நேற்றுமுன்தினம் லண்டன் லோர்ட்ஸில் நிகழ்த்திய எம்.சி.சி. கொலின் கௌட்ரி ஞாபகார்த்த சொற்பொழிவில் இவ்விமர்சனங்களை தெரிவித்திருந்தார். வெளிப்படையான அந்த உரையின்பின் குமார் சங்கக்காரவை அரங்கிலிருந்தவர்கள் எழுந்து நின்று பாராட்டி கௌரவித்தனர். எனினும் இலங்கையில் அந்த உரை சர்ச்சையை கிளப்பியுள்ளது.சங்கக்காரவின் உரை குறித்து விசாரணை நடத்தி விளக்கமளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
சங்கக்காரவின் உரை குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விளக்கமளிக்குமாறு சங்கக்கார கோரப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மீதான நிதி முறைக்கேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையடுத்து அதன் இடைக்கால நிர்வாகக் குழுவை கலைத்த சில நாட்களிலேயே முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்கார இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு வீரர். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் அவர் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளார். இதுபோன்ற கருத்தை கூற்றுகளை அவர் வெளியிட முடியாது"என அமைச்சர் அளுத்கமகே தெரிவித்துள்ளார்."அவர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கிரிக்கெட் நிர்வாகம் குறித்தோ கிரிக்கெட் குறித்தோ அவர் பேச முடியாது. தன்னைப்பற்றி எதுவும் பேசலாம். இது குறித்து உடனடியாக அறிக்கையொன்றை எனக்கு சமர்ப்பிக்குமாறு கிரிக்கெட் சபைத் தலைவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்" என அமைச்சர் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கை விலைக்கு வாங்கும் சீனா: மக்கள் கவலை.
பேஸ்புக் இணையத்தளத்துக்கு தடை விதித்துள்ள சீன அரசு அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட் பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது.மேலும் சிட்டி பேங்க் மூலமாகவும் 1.2 பில்லியன் மதிப்புள்ள பேஸ்புக் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது. அதிகபட்சமான பங்குகளை வாங்கி அதன்மூலம் பேஸ்புக் இணையத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயல்வதாகத் தெரிகிறது.
சுமார் 700 மில்லியன் பயனீட்டார்களைக் கொண்ட பேஸ்புக் இணையத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எப்படியாவது சீனாவிலும் கால் பதிக்க பேஸ்புக் தீவிரமாக உள்ள நிலையில் அந்த நிறுவனத்தையே வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருகிறது.பேஸ்புக்கை சீனா வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தி சீனர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தங்கள் வருத்தத்தை சில சீனர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிளாகுகளில் தெரிவித்து வருகின்றனர்.
ஜெல்லி மீன்கள் படையெடுப்பால் அணு மின் நிலையம் அவசரமாக மூடப்பட்டது.
ஜெல்லி மீன்கள் படையெடுப்பால் இஸ்ரேலின் ஹாடெரா மின் நிலையம் மூடப்பட்டது. ஏற்கனவே ஸ்காட்லாந்து அணு மின் நிலையத்தில் குளிர்விக்கும் பகுதியில் ஜெல்லி மீன்கள் படையெடுத்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.ஸ்காட்லாந்து அணு மின் நிலைய நிகழ்வுக்கு மறுநாள் இந்த சம்பவம் இஸ்ரேல் அணு மின் நிலையத்தில் ஏற்பட்டு உள்ளது. அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறாமல் இருக்க கடல் நீரால் அணு மின் உலைகள் குளிர்விக்கப்படுகின்றன.
அதே போன்று இஸ்ரேல் அணுமின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டு வரப்படுகிறது. இந்த கடல் தண்ணீர் வரும் பாதையை ஜெல்லி மீன்கள் கூட்டம் அடைத்ததால் தண்ணீர் வருவது நின்று போனது. இதனால் அணு மின் நிலையம் சூடாகாமல் தடுக்க உடனடியாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.உலக நாடுகளில் கரிய மில வாயுக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெப்பநிலை அதிகரிப்பதால் கடல் நீரில் அமிலத் தன்மை அதிகரித்து உள்ளது. எனவே ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றன.
இந்த நடவடிக்கையால் அணு மின் நிலையங்களின் குளிர்விப்பு பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. உலகில் தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர் கடலின் அமிலத்தன்மை 30 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கடல்சார் உயிரியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
தன்னைத் தானே படம் எடுத்த அதிசய குரங்கு.
இந்தோனேஷியாவில் கமெரா மூலம் தன்னை தானே ஒரு குரங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டது.வன விலங்குகளின் வாழ்க்கை முறையை புகைப்படம் எடுக்கும் புகைப்பட நிபுணர் டேவிட் ஸ்லாடர் கிரேசி(46). இவர் இந்தோனேஷியாவில் உள்ள காடுகளில் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க தனது கமெராவை எடுத்து சென்றார்.
அதை ஒரு இடத்தில் கீழே வைத்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு குரங்கு அந்த கமெராவை திருடி சென்றது. பின்னர் அது தன்னை தானே புகைப்படம் எடுத்து கொண்டது.அது நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து குவித்தது. அப்போது மனிதர்களை போன்று லென்ஸ்சை சரி செய்து புகைப்படம் எடுத்தது. அதை பார்த்த டேவிட் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். பிறகு அந்த குரங்கு அவரது கமெராவை போட்டு விட்டு காட்டுக்குள் சென்று விட்டது.
200ம் ஆண்டு கொண்டாட்டத்தில் வெனிசுலா மக்கள்.
வெனிசுலாவின் 56 வயது ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டார். அவருக்கு கியூபாவில் மூன்று வார மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டிகள் அகற்றப்பட்டன.வெனிசுலா நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலைப் பெற்ற 200ம் ஆண்டு விழா தற்போது துவங்கி உள்ளது. இந்த விழாவில் நோயின் பிடியில் சிக்கிய சாவேஸ் மக்கள் முன்தோன்றினார்.
தலைநகர் காரகாசில் மிகப்பெரும் திரையில் அவர் தோன்றி,"நான் உங்களுடன் இருக்கிறேன். என் ஆன்மாவும் உங்களுடன் தான் உள்ளது" என உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய சக்திகள் இருந்தும் நாம் விடுதலை பெற்று உள்ளோம் என அவர் தெரிவித்தார். 200ம் ஆண்டுவிழாவை இதைவிட சிறப்பாக கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹியூகோ சாவேஸ் கடந்த 1999ம் ஆண்டு முதல் வெனிசுலாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். வருகிற 2012ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு அடுத்த 6 ஆண்டு ஆட்சி தொடர அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.வெனிசுலாவின் பொருளாதாரத்தின் நிலையை உயர்த்த எரிவாயு மற்றும் எண்ணெய் துறைகளை அவர் நாட்டுடமை ஆக்கினார்..
40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடிகள்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் அல்டிரின் ஆகியோர் சந்திரனில் அமெரிக்காவின் தேசிய கொடியை நட்டி பறக்க விட்டனர்.அதை தொடர்ந்து ஆய்வுக்காக 6 முறை சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் நாட்டு கொடியை அங்கு நாட்டினர்.
இந்நிலையில் அந்த கொடிகள் இன்னும் அங்கு பறந்து கொண்டிருக்கின்றனவா? என்பதை அறிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாந்தா பார்பரா லிப்ராதியின் ஆன்னி என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனில் நாட்டிய 4 கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. 2 கொடிகள் மட்டும் காணவில்லை. அவை சந்திரனில் வெளியாகும் வாயுக்களால் சிதைந்து கிழிந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
10 நிமிடத்தில் 62 ரொட்டிகளை சாப்பிட்டு சாதனை படைத்த நபர்.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் ஆண்டு தோறும் அகில உலக சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதற்கான போட்டி நடந்தது. அதில் 16 பேர் கலந்து கொண்டனர்.போட்டி தொடங்கியதும் அனைவரும் அங்கு வைத்திருந்த இறைச்சி கலந்த ரொட்டியை ஆவலுடன் தின்றனர். அவர்களில் ஜோய் என்பவர் அகில உலக சாப்பாட்டு ராமன் பட்டம் வென்றார்.
இவர் 10 நிமிடத்தில் 62 ரொட்டிகளை சாப்பிட்டு சாதனை படைத்தார். இப்பட்டத்தை இவர் தொடர்ந்து ஜந்தாவது முறையாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகாமஸ் தீவுப் பகுதியில் சுறா மீன் பிடிக்க தடை.
பகாமஸ் தண்ணீர் எல்லைப் பகுதியில் சுறா வேட்டையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. விற்பனை செய்யவும் தடை போடப்பட்டு உள்ளது.கரிபீயன் தேசமான பகாமசின் 6 லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நீர் எல்லை சுறா சரணாலயமாக உருவாகிறது. சுறா வேட்டையாடுவதற்கான தடையை தலைநகர் நாசுவில் வேளாண்துறை அமைச்சர் லாரி கார்ட் ரைட் நேற்று அறிவித்தார்.
சுறா வேட்டையாட ஹோண்டுராஸ், மாலத்தீவு, பாலே தீவுகளில் தடை உள்ளது. அந்த வரிசையில் பகாமஸ் தீவுக் கூட்டமும் இணைந்து உள்ளது. சுறா வேட்டையாடினால் 3 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை 5 ஆயிரம் டொலராக அதிகரித்து உள்ளது.ஆண்டுதோறும் 7 கோடியே 30 லட்சம் சுறாக்கள் வேட்டையாடப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 1993ம் ஆண்டு பகாமஸ் நீள் வரிசை மீன் பிடிக்கு தடை விதித்தது. இதனால் 40 வகை சுறா இனங்கள் காப்பாற்றப்பட்டன.
இருப்பினும் அப்போது ஒட்டு மொத்தமாக சுறா வேட்டைக்கு தடைவிதிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூர் கடல் உணவு தயாரிப்பு நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் சுறா இறைச்சியை ஹொங்கொங்கிற்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்தது.இந்த அறிவிப்பால் மனம் நொந்த ஆர்வலர்கள் சுறா வேட்டைக்கு தடைவிதிக்க புதிய சட்டம் பிறப்பிக்க போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்.
மெக்சிகோவில் உள்ள செதுமாய் சிறையில் ரமிரெஸ் ஜெரினா இருந்தார். சட்டவிரோத பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்ததாக அவர் 2007ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. தனது வாழ்க்கைத் துணைவரை சிறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என 19 வயது பெண் மரியா முயன்றார்.
அவர் பெரிய கறுப்பு நிற சூட்கேசை மெக்சிகோ சிறைக்குள் கொண்டு சென்றார். பின்னர் அவர் வரும் போது ஒரு விதமான பதட்ட நிலையுடன் காணப்பட்டார்.அவர் தடுமாற்றத்துடன் இருப்பதை பார்த்த சிறை பாதுகாப்பு நிர்வாகத்தினர் உஷார் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதை திறந்த போது சிறைக்கைதி ரமிரெஸ் இருப்பது தெரியவந்தது.
சிறைக்காவலர்கள் அதிர்ச்சி அடைந்து கைதியை கடத்த முயன்ற பெண் மரியாவை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சூட்கேசில் கைதி தப்ப முயன்றதை தொடர்ந்து மெக்சிகோ சிறைகளில் உஷார் நிலை கடைபிடிக்கப்படுகிறது..
ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி.
சவுதி அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் சென்ற படகு செங்கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில் 197 பேர் பலியானார்கள். சூடான் கடல் பகுதியில் படகு மூழ்கியது.விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளதாக சூடான் ஊடக மையம் தெரிவிக்கிறது. இது அரசு சார்பு நிறுவனம் ஆகும்.
சவுதி அரேபியாவுக்கு ஆட்களை கடத்திச் சென்ற போது படகு தீப்பிடித்தது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டது. படகில் இருந்தவர்கள் சட், நைஜீரியா, சோமாலியா மற்றும் எரிட்ரியா பகுதியில் இருந்தவர்கள் ஆவார்கள்.விபத்துக்கு காரணமான நான்கு ஏமன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் வழியாக 247 பேர் கடத்திச் செல்லும் முயற்சியையும் சூடான் உள்ளூர் நிர்வாகத்தினர் முறியடித்தனர்.சவுதி அரேபியா மற்றும் ஏமன் இடையே ஆள்கடத்தல் செய்ய செங்கடல் பகுதி பிரசித்தி பெற்றதாகும். கடந்த மாதம் லிபியாவில் 850 நபர்களுடன் சென்ற கப்பல் துனிஷியாவில் மூழ்கியது. இதில் 150 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வயது பிரிட்டன் சிறுமியின் புதிய சாதனை.
பிரிட்டனின் டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீற்றர் தூரத்தை நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.அவரது சாதனை உலக கின்னஸ் சாதனையிலும் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த சிறுமி மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறுமி டேவின் சாதனை அளவை வேறு யாரும் இந்த வயதில் நிகழ்த்தவில்லை. எனவே அவர் சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அந்த சிறுமியின் சாதனையை 41 வயது தந்தை ராப் தாயார் டிரசன் பெருமிதம் பொங்க மகளை பார்க்கிறார்கள். 4 வயதில் 600 மீற்றர் நீந்துவதே மிகப்பெரிய விடயமாக இருக்கும். ஆனால் எனது மகள் 2 ஆயிரம் மீற்றரை நீந்தி பெரிய சாதனை படைத்து இருக்கிறாள் என்று கூறுகிறார்கள்.கடந்த பெப்பிரவரி மாதம் முதல் இந்த சிறுமி நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப்படை பிரிவில் ஜேர்மனி இணைந்தது.
பிரச்சனை ஏற்படும் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் கூட்டுப்படைகள் களம் இறங்க உள்ளன. இந்த கூட்டுப்படை பிரிவில் ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் இணைந்து உள்ளன.வருகிற 2013ஆம் ஆண்டு முதல் இந்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப்படை பிரிவு தனது பணியை மேற்கொள்ளும். ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப்படை ஒப்பந்தத்தில் இந்த 3 நாடுகளும் பிரஸ்சல்ஸ் நகரில் கையெழுத்திட்டன.
இந்த கூட்டுப்படை பிரிவில் மொத்தம் 1700 வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். இவர்கள் சுழற்சி முறையில் நெருக்கடி உள்ள இடங்களில் பணியாற்றுவார்கள். இந்த கூட்டுப்படை உருவாக்கம் குறித்து மூன்று நாடுகளும் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஆலோசனை செய்து வருகின்றன.2 போர் குழுக்கள் தயார் நிலையில் உள்ள குழுக்களாக நிறுத்தப்பட்டு இருக்கும். அவை 6 மாதத்திற்கு ஒரு முறை அவசர நிலையை கருத்தில் கொண்டு பணியில் ஈடுபடுத்தப்படும். இருப்பினும் தயார் நிலையில் உள்ள 2 போர் குழுக்கள் உடனடியாக களம் இறங்காது.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப்படைக்கு சுழற்சி முறையில் தலைமை பதவி அளிக்கப்படுகிறது. தற்போது போலந்து தலைமை வகிக்கிறது. அந்த நாடு முக்கிய மோதல் துருப்புகளை அளிக்கும். ஜேர்மனி பயன்பாட்டு உதவிகளை அளிக்கும்.ஓபரெஷனல் கட்டளைகளை பிறப்பிக்கும் மையம் மான்ட் வாலரியன் பகுதியில் செயல்படும். இந்த இடம் பாரிசுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த 3 நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த 1992ஆம் ஏற்படுத்திக் கொண்டன.
இ.கோலி பக்டீரியா பரவலுக்கு காரணமான விதைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை.
இ.கோலி பக்டீரியா பரவ காரணமாக இருந்த எகிப்து வெந்தயம் போன்ற சமையல் வாசனை விதைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.இ.கோலி பக்டீரியா பாதிப்பால் ஜேர்மனியில் 48 பேரும், சுவீடனில் ஒருவரும் உயிரிழந்தார்கள். இந்த பக்டீரியா எகிப்து விதைகளில் இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.
உயிருக்கு அபாயம் விளைவிக்கும் எகிப்தின் சமையல் வாசனை விதைகள் மற்றும் சோயா பீன்ஸ்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிக தடை விதித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த நாளில் பெருமளவு மார்க்கெட்டுகளில் சமையல் விதைகள் விற்பனையில் இருந்தன. மேலும் பிரிட்டன் உள்பட 12 நாடுகளுக்கு எகிப்தில் இருந்து சமையல் விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன என்ற தகவலும் வெளியானது.
இ.கோலி பக்டீரியாவால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 4 ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த பக்டீரியா பிரான்ஸ் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த 2009ஆம் ஆண்டு முதல் எகிப்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கறி விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இ.கோலி பரவ காரணமாக இருந்த எகிப்து நிறுவனத்தின் விதைளையும் ஐரோப்பிய கொமிஷன் கண்டறிந்து உள்ளது.
கனடா தீவிரவாத பட்டியலில் தலிபான்களின் பெயர்கள்.
கனடா பெடரல் அரசு அதிகாரப்பூர்வ தீவிரவாத பட்டியலில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்த்தது. இந்த அமைப்பு தெரிக் எ தலிபான் பாகிஸ்தான் என அறியப்படுகிறது.இந்த தீவிரவாத குழு வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலை சார்ந்த பழங்குடியினரின் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை பரவி உள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய நோக்கமாக பாகிஸ்தான் அரசை எதிர்ப்பது, கடுமையான ஷரியா சட்டத்தை அமல்படுத்துவது ஆகியவை ஆகும். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள நேட்டோ துருப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்துவது என்பதும் இதன் நோக்கமாக உள்ளது.
பாகிஸ்தானில் நடந்த பல தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு இந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சி.ஐ.ஏ உளவு அமைப்பு முகாமிலும் இந்த தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது.அதே போன்று கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் நியூயோர்க் சதுக்கத்தில் குண்டு வெடிக்கவும் இந்த தெரிக் தலிபான் அமைப்பு முயற்சி மேற்கொண்டது.
தீவிரவாத அமைப்பு குறித்து கனடா பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோவ்ஸ் கூறுகையில்,"தீவிரவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து நிர்வாகம் மிகுந்த கவனம் கொள்ள வேண்டி உள்ளது" என்றார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா ஓமர் தெரிக் எ தலிபான் தங்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் அரசு நிர்வாகம் மீதே தாக்குதல் நடத்த வேண்டும் என்பதாகும்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு.
சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஹாமா நகரை சுற்றி வளைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது.அதிபர் பாஷர் அசாத் பதவி விலக வலியுறுத்தி சிரியாவில் புரட்சி வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்களை ராணுவத்தின் உதவியுடன் அரசு ஒடுக்கி வருகிறது. ராணுவ தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.கடந்த வாரம் ஹாமா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஹாமாவில் அரசுக்கு எதிராக பெரும் கூட்டம் திரண்டது ஆட்சியாளர்களுக்கு உறுத்தலாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஹாமா நகரை ராணுவம் சுற்றி வளைத்தது. நகரின் எல்லைகள் அனைத்தும் சீல் வைத்து மூடப்பட்டன. ராணுவ டாங்கிகளும் குவிக்கப்பட்டன. அப்பாவி மக்கள் மீது ராணுவத்தினர் சுட்டதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் நாஸர் அல் ஷாமி உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை பிரிவில் நாஸர் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிரியாவின் பல நகரங்களில் ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர்.
1982ம் ஆண்டு இப்போதைய அதிபரின் தந்தையும் அப்போதைய அதிபருமான ஹபீஸ் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது ஹாமாவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர். மீண்டும் அதுபோன்ற நிலை நடக்கக்கூடும் என்று அஞ்சுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.ராணுவத் தாக்குதலுக்கு பயந்து ஏராளமானோர் அண்டை நாடான துருக்கி நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அப்படி தப்பிச் செல்லும் கும்பல் மீது செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் சுட்டதில் தாயும், கைக்குழந்தையும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான சிரிய மக்கள் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நிலநடுக்கம்.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சொத்து பாதிப்பு, உயிரிழப்பு குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை.அவுஸ்திரேலியாவில் மிகவும் மிதமான அளவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இதனால் எவ்வித உயிர்ச்சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்டோரியா, மெல்போர்ன் நகரங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது 4.4 புள்ளிகளாக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல் நியூஸிலாந்திலும் 5.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. புவிக்கடியில் 161 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால் நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகம் தெரியவில்லை.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. அதேசமயம் நியூஸிலாந்தில் உள்ள புவியியல் மையத்தில் நிலநடுக்கத்தின் அளவு 6.5 புள்ளிகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்துக்கடியில் 62 கி.மீ ஆழத்தில் பதிவானதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு நன்கு உணரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் 7.1 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.கடந்த செப்டம்பரில் இப்பகுதியில் பதிவான நிலநடுக்கம் 6.3 புள்ளிகளாகும். இதில் 181 பேர் உயிரிழந்தனர். நகரின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதியத்தின் தலைவராக லாகர்ட் பதவியேற்பு.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் நேற்று பதவியேற்றார்.சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தலைவருக்கான தேர்தலில் பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இதையடுத்து ஐ.எம்.எப் தலைவராக 55 வயதான கிறிஸ்டைன் லகார்ட் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் கிறிஸ்டியன் லகார்ட் புதிய தலைவராக பதவியேற்றார்.
அவருக்கு ஐ.எம்.எப் அமைப்பின் தற்காலிக நிர்வாக இயக்குனர் ஜான்லிப்ஸ்கே பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து இவர் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். இவருக்கு சலுகைகள் உள்பட ஆண்டுக்கு 4 லட்சத்து 6 ஆயிரத்து 940 டொலர் சம்பளமாக கிடைக்கும்.
ஐ.எம்.எப் தலைவரின் பணி:
1. சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு உதவுவது.
2. நாடுகளின் நாணய பரிவர்த்தனை மதிப்புகளை கண்காணிப்பது.
3. கடன் பெற்ற நாடுகள் திரும்ப செலுத்துகின்றனவா என்பதை கண்காணிப்பது.
4. உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது.