Wednesday, July 27, 2011

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா.


பெண் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம் என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்பெர்டின் தெரிவித்துள்ளார். வழமையாக கைதிகளை தடுத்து வைக்கப்படும் அளவை விடவும் இலங்கையில் 302.4 வீதம் அதிகளவில் கைதிகள் தடுத்து வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அதிகளவான சிறைச்சாலைகள் பிரித்தானியரால் 100 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். அப்போது இலங்கையின் சனத்தொகை 3 மில்லியனாக இருந்த போது இவை கட்டப்பட்டது என்று கிறிஸ்டினா தெரிவித்தார். சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் சிறைக்கைதிகளே தடுத்துவைக்கமுடியும் என்றபோதிலும் தற்போது சிறைகளில் 30 ஆயிரத்து 933 சிறைக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கிறிஸ்டினா தெரிவித்தார்.

தண்டப்பணம் செலுத்த முடியாத காரணத்தினால் 50 வீதமானவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலியல் தொழிலாளிகள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் என சகல தரப்பினரும் ஒரே சிறைச்சாலை கூடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று பெண் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். 150 பேருக்காக நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலையில் தற்போது 650 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழமையாக சாப்பிடுவதும், குளிப்பதும், படுப்பதுமே நடைபெறுகிறது. பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய எந்தவிதமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 75 பெண் கைதிகளுக்கும் இரு மலசலகூடங்களையே உபயோகிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF