காத்தான்குடி சித்தீகியா மாணவர் விடுதியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாணவர் விடுதிக்கு இரவு உணவு திருமண வீடொன்றிலிருந்து வந்துள்ளது. இவ் உணவை உட்கொண்ட மாணவிகளில் முப்பத்தைந்து பேர் மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்றுக்காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்டதால் காத்தான்குடி வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விடுதியில் காத்தான்குடி மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளும் தங்கியுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் நசீர்தீன் மற்றும் டாக்டர் அம்ஜத்ஹசன் ஆகியோர் அடங்கிய குழு இவர்களை பரிசோதித்து உடனடியாக சிகிச்சை வழங்கியது.
எவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும் குணமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் மாணவிகள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடன் வழங்கும் நாடுகள் வளச் சுரண்டலில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – ஐ.தே.க
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் வளச் சுரண்டலில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு சில நாடுகள் பாரியளவில் கடன்களை வழங்கி வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற போதிலும் அதன் பின்னணியில் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்துமே கடன் என்னும் வகையீட்டுக்குள் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் சீனா இலங்கைக்கு உதவி வழங்கியுள்ள போதிலும் அவை அனைத்துமே கடன் அடிப்படையில் வழங்கப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடன் தொகை மீளச் செலுத்தப்பட வேண்டியது இவ்வாறு சொற்பளவு கடனை வழங்கி மறுபறுத்தில் நாட்டின் வளங்களை சீனா சுரண்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடன் தொகைகளில் அதிகமானவை கூடுதலான வட்டிக்கு பெற்றுக்கொள்ளப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சீனா உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் சீனாவின் நோக்கம் ஆராயப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் தனியார்மயப்படுத்தல்களை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி : அரசு அறிவிப்பு.
இலங்கையின் வடக்கு பிரதேசத்துக்கு இன்று முதல் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தடையின்றி செல்லமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்குக்கு செல்ல வெளிநாட்டு கடவுசீட்டை கொண்டிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த வாரத்தில் நீக்கப்பட்டது.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு செல்ல முயற்சித்த போது, வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் அப்பால் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் சர்வதேச மட்டத்தில் தம்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடும் - ஜனாதிபதி தெரிவிப்பு.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கக் கூடும். எனினும் இவற்றின் மூலம் அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாடுகளிலிருந்தோ, உள்நாட்டிலிருந்தோ விடுக்கும் விமர்சனங்களை தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவ்வாறு வெளியிடப்படும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாடுகளிலிருந்தோ, உள்நாட்டிலிருந்தோ விடுக்கும் விமர்சனங்களை தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவ்வாறு வெளியிடப்படும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் ரணில் - பான் கீ மூன் சந்திப்பு இடம்பெற்றது : திஸ்ஸ அத்தநாயக்க.
வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் பான் கீ மூனை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஓர் வழமையான சந்திப்பாக கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நன்மதிப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஸ்டான்டட் சாட்டெட் வங்கிக்கு 162 மில்லியன் டொலர்களை செலுத்துமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸடான்ட்ட் சாட்டெட் வங்கிக்கு 162 மில்லியன் டொலர்கள் மற்றும் அதற்குரிய வட்டியையும் செலுத்தவேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் ஒன்று நேற்று உத்தரவிடடுள்ளது
எரிபொருள் கொள்வனவு மற்றும் விலைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டு வங்கிகளும் செய்துகொண்ட ஹெட்ஜிங் உடன்படிக்கையின்படியே இந்த உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
லண்டன் நீதிமன்றத்தின் இ;ந்த உத்தரவு குறித்து தமக்கு இன்னும் தெரியவரவில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்ததீர்ப்பு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஸ்டான்டட் சாட்டட் வங்கி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்போது, 2007 ஆம் ஆண்டு இலங்கை பெறறோலிய கூட்டுத்தாபனம் வருடம் ஒன்றுக்கு கொள்வனவு செய்த 2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 26 மில்லியன் பெரல் எரிபொருள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஸ்டேன்டட் சாட்டட் வங்கிக்கு 161,733.500 டொலர்கள் மற்றும் வட்டியை செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு வங்கிகள் இரண்டும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தமக்கு பணம் செலுத்தவேண்டும் என்று வங்கிகள் கோரியபோதும் அதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுத்து வந்தது.
சரத் பொன்சேகா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி! தினமும் சிகிச்சைபெற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா இன்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், எக்ஸ்ரே பரிசோதனைகளின் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும், இது ஓர் அற்புதமான ஆச்சரியம் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எரிபொருளில் கலப்படம், மின்சார விநியோகத் துண்டிப்பு என நாட்டு மக்கள் பல வழிகளில் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தினந்தோறும் சிகிச்சை பெறவேண்டும் மருத்துவர்கள் ஆலோசனை
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அவரது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வாரத்தில் 7 நாட்களும் மருத்துவமனைக்கு செல்லவேண்டியுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகா உரிய காற்றோட்டம் இல்லாத வசதியற்ற அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு குறைந்த வசதிகளே செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜாகொட குறிப்பிட்டார்.
சிரியாவுக்கு அதிபர் அல் அசாத் தேவையில்லை: ஹிலாரி கிளிண்டன் ஆவேசம்.
சிரியாவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் தேவையில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க மற்றும் பிரெஞ்சு தூதரகங்கள் மீது சிரியாவில் தாக்குதல் நடத்தியதற்கு ஹிலாரி இவ்வாறு கடுமையாக விமர்சித்தார். டமாஸ்கசில் பஷார் ஆதரவாளர்கள் அமெரிக்க, பிரான்ஸ் தூதரகங்களை அடித்து நொறுக்கினார்கள்.
இந்த தாக்குதல்களில் தூதரக ஜன்னல்கள் நொறுக்கப்பட்டன. ஒருவர் காயம் அடைந்தார். அமெரிக்க தூதர் ரொபர்ட் போர்டு மற்றும் பிரான்ஸ் தூதர் எரிக் செவாலியர் ஹமாவில் போராட்டக்காரர்கள் பகுதிக்கு வந்தனர்.
அவர்களது வருகையை கண்டித்து பேருந்தில் கும்பலாக வந்தவர்கள் தூதரகங்களை தாக்கினார்கள். தூதரகம் தாக்கப்பட்டதற்கு வாஷிங்டனில் உள்ள சிரிய தூதருக்கு அமெரிக்க எதிர்ப்பு சம்மன் அனுப்பியது.
சர்வதேச விதிமுறைகளை சிரியா கடுமையாக மீறுகிறது என பிரான்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். சிரியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் நின்ற காவலர்களை எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்து துப்பாக்கியால் விரட்டினர்.
பிரெஞ்சு தூதரின் கார் நொறுங்கியது. பிரான்ஸ் தூதரகம் மீது எதிர்ப்பாளர்கள் முட்டை, தக்காளியை எறிந்தனர். சிரியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் யாரும் காயம் அடையவில்லை என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எகிப்து எரிவாயு குழாயில் குண்டு வெடிப்பு.
எகிப்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு செல்லும் எரிவாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது.
சினாய் தீபகற்பத்திற்கு வடக்கே உள்ள அல் அரிஷ் நகர் அருகே இந்த எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்டதாக எகிப்து மெனா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
குண்டு வெடிப்பதற்கு முன்னர் முகத்தை மூடிய துப்பாக்கி ஏந்திய நபர்கள் அந்த இடத்தை விட்டு காவலர்களை வெளியேற்றினர். சினாய் பகுதியில் இந்த ஆண்டு ஏற்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.
இன்று அதிகாலை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 10 மீற்றர் உயரத்திற்கு தீ எழும்பியது.
ஜோர்டான் தனது 80 சதவீத மின் உற்பத்திக்கு எகிப்து எரிவாயுவையே நம்பி உள்ளது. இஸ்ரேல் தனது 40 சதவீத எரிவாயு தேவையை எகிப்து மூலமே பெறுகிறது.
2008ம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்கு எகிப்து எரிவாயு சப்ளை செய்து வருகிறது. இந்த எரிவாயு சப்ளை 20 ஆண்டு ஒப்பந்தம் ஆகும்.
பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியை இஸ்ரேல் தடுத்து வருவதால் எரிவாயு தரக்கூடாது என எகிப்துக்கு எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் எரிவாயு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
உலகின் மிக செலவு மிகுந்த நகரம்: லுவான்டா முதலிடம்.
அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மெர்சர் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் செலவு மிகுந்த மற்றும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வுப் பட்டியலில் மொத்தம் 214 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் உலகின் மிகவும் செலவு மிகுந்த நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி உலகின் மிகவும் செலவு குறைந்த நகரமாக பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மாஸ்கோ 4-வது இடத்திலும், ஜெனீவா 5-வது இடத்திலும், லண்டன் 18-வது இடத்திலும், பாரீஸ் 27-வது இடத்திலும், நியூயோர்க் 32-வது இடத்திலும் உள்ளன.
வீட்டு வசதி, உணவு, போக்குவரத்து செலவு உட்பட மொத்தம் 200 பிரிவுகளின் கீழ் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்சில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நெக்ரோஸ் ஆக்சி டென்டல் மாகாணம் உள்ளது. அங்குள்ள காயுவாயான் நகரில் இருந்து 85 கி.மீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
பரபரப்பு அடங்கியவுடன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். அதைத் தொடர்ந்து 5 மணி அளவில் மீண்டும் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாத்திரங்கள் உருண்டோடின. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்ற அச்சத்தில் மீண்டும் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டரில் 5.5 மற்றும் 5.7 என்ற அளவில் பதிவானதாக வானியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த பரபரப்பு அடங்கிய சிறிது நேரத்தில் அதாவது 6.49 மணிக்கு மீண்டும் பூமி குலுங்கியது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். கடைசியாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இன்று காலையில் அதிகாலை 4.47 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் 6.49 மணி வரை அதாவது 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
ஆப்கனிலிருந்து 1000 வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவர்: சர்கோசி.
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆப்கானிஸ்தானுக்கு இன்று எதிர்பாராத வகையில் வந்தார். அவர் நேட்டோ படைகளுடன் உள்ள பிரான்ஸ் வீரர்களை சந்தித்து பேசினார்.
காபூலுக்கு தென்கிழக்கே உள்ள சரோபி மாவட்டத்தில் தமது நாட்டு வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜெனரல் டேவிட் பெட்ராயஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆகியோரை சந்திக்க சென்றார்.
பிரான்சின் தேசிய விடுமுறைக்கு இரண்டு நாள் முன்பாக சர்கோசி ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். இதற்கு முன்னர் அவர் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதமும் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் வருகை தந்தார்.
ஆப்கானிஸ்தானில் 22 வயது பிரெஞ்சு வீரர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு மறுநாள் சர்கோசி ஆப்கானிஸ்தான் வந்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருமளவு பிரான்ஸ் வீரர்கள் நாடு திரும்புவார்கள் என சர்கோசி ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நான்கு ஆயிரம் வீரர்களை படிப்படியாக நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து இருந்தது.
அடுத்த ஆண்டு கோடை காலத்திற்குள் 33 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா.
கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த பயங்கர கார் விபத்தில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
காரில் அவருடன் பயணித்த காதலியும் காயமடைந்தார். இவர்கள் சென்ற கார் படுவேகமாக போய் ஒரு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
மாரடோனாவின் 81 வயதான தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது தான் மாரடோனா விபத்துக்குளாகி விட்டார்.
பியூனஸ் அயர்ஸில் உள்ள தனது வீட்டுக்கு அருகிலேயே விபத்துக்குள்ளானார் மாரடோனா. உடனடியாக மீட்கப்பட்ட அவரும், அவரது காதலியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இருவரும் கடும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாரடோனாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அவரது காதலிக்கு இடுப்பில் காயமேற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அர்ஜென்டினா அணியின் முன்னாள் கப்டனாக அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர் மாரடோனா. விரைவில் அவர் ஐக்கிய அரபு எமிரேடிஸில் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
ஒசாமாவை பிடிக்க அமெரிக்க நடத்திய நாடகம் அம்பலம்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒளிந்திருந்தது பின்லேடன் தானா என்பதை கண்டறிய அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2ம் திகதி அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஒசாமா அபோதாபாத்தில் ஒளிந்திருப்பதை மேலும் உறுதி செய்ய அவரது குடும்பத்தினரின் டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை அந்த நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
அங்கிருந்தவர்கள் ரத்த மாதிரிகள் அந்த முகாமின் போது சேகரிக்கப்பட்டன. இதற்காக பாகிஸ்தான் மருத்துவர் ஒருவரை அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் அந்த மருத்துவர் ஒசாமா தங்கியிருந்த வீட்டின் காம்பவுன்ட் சுவரை தாண்டி உள்ளே சென்ற போதும், ஒசாமா தங்கியிருந்ததை பார்க்கவோ அல்லது அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவோ முடியவில்லை என அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரிந்து சென்ற பெண் தனது 2 குழந்தைகளை கொடூரமாக கொன்றார். அவர் தனது குழந்தைகளை மூச்சு திணற வைத்து கொன்று காரின் பின் பகுதியில் ஒளித்து வைத்தார்.
தனது இளம் குழந்தைகளை கொன்ற பெண் பியோனா டோனிசன். 45 வயது உள்ள அந்த பெண் தனது 3 வயது மகன் ஹாரியையும், 2 வயது மகள் எலிசியையும் கொன்றார்.
தனது கணவரை பழி வாங்கும் நடவடிக்கையாக அந்த பெண் குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் அந்த பெண் எழுதி வைத்து உள்ளார்.
கணவர் தனது பேச்சை கேட்க வேண்டும் என்று பியானோ எதிர்பார்த்து உள்ளார். இந்த தம்பதி கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு வரை பியானோ நிதிச்சேவை பணிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு 6 மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் சொல்லாமல் பிரிந்து சென்றார். அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி தனது குழந்தைகளுடன் அந்த பெண் தனது வீட்டில் இருந்தும் வெளியேறினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பெரும்பாலானவர்கள் குண்டர்கள்: ஆய்வில் தகவல்.
சவூதி அரேபிய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து மக்களின் உடலுழைப்பு வெகுவாக குறைந்து விட்டது.
மேலும் எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சவுதி அரேபிய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
உடல் பருமன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே அந்நாட்டு அரசு தயாரித்து வரும் பெரிய நோய்கள் பட்டியலில் உடற்பருமனையும் சேர்த்துள்ளது. உடற்பருமனால் ஏற்படும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதோடு உயிர் இழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன.
சவூதி அரேபிய சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவ மையங்களுக்கு பரிசோதனைக்காக வந்தவர்களில் 97 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தொடர்பான பிரச்னைகளுக்காக வந்துள்ளனர். எனவே அந்நாடு சுகாதார துறைக்கு பெரும் தொகை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் அந்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியது.
மது போதைக்கு நான் அடிமை இல்லை: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மார்டினே அப்ரி பதிலடி.
பிரான்சில் வருகிற 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட இருந்த சோசலிஸ்ட் கட்சியின் டொமினிக் ஸ்டிராஸ்கான் தற்போது பாலியல் வழக்கில் சிக்கி விசாரணையில் உள்ளார்.
முன்னாள் சர்வதேச நிதிய தலைவரான அவர் தேர்தலில் போட்டியிடுவது என்பது சந்தேகமாகி உள்ள நிலையில் சோலிஸ்ட் கட்சி பெண் வேட்பாளர் மார்டினே அப்ரியை தேர்தலில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வேட்பாளர் மீதும் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அவரது கணவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்று ஒரு தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது.
மேலும் மார்டினி அப்ரி மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவருக்கு எதிராக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிற்க உள்ள அப்ரி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் என்பதுடன் லிலே பகுதி மேயராகவும் உள்ளார்.
அவரது கணவர் ஜீன்-லூயிஸ் புரோசச்சன் இஸ்லாமியர் அல்லது சலாபிஸ்ட் என்று எதிர்தரப்பினரால் தவறுதலாக பிரசாரம் செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் அதிகம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
அவர்களது வாக்குகளை பெறும் வகையில் எதிர்தரப்பினர் அப்ரியின் கணவர் ஒரு முஸ்லீம் என்ற பிரசாரத்தை கையில் எடுக்கத் துவங்கி இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக அப்ரி எச்ரித்துள்ளார்.
அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தை நெருங்கி கொண்டிருக்கும் ஆபத்து.
விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் பாகம் மோதும் வாய்ப்புள்ளதால் அட்லாண்டிஸ் விண் ஓடத்துக்கு ஆபத்து எதுவும் ஏற்படும் நிலையுள்ளது.
அட்லாண்டிஸ் விண் ஓடத்தை அமெரிக்கா சமீபத்தில் விண்ணில் செலுத்தியது. இந்த விண் ஓடம் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டுவிட்டது. விண்நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் செல்கிறது.
இந்நிலையில் 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கின்ற ரஷிய செயற்கைக்கோளின் ஒரு பாகமானது அட்லாண்டிசும், சர்வதேச விண்வெளி நிலையமும் உள்ள இடத்துக்கு மிக நெருக்கமாகப் பறந்து வருவது தெரிய வந்திருக்கிறது. இதன் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை.
இது அட்லாண்டிஸில் அல்லது சர்வதேச விண்நிலையத்தில் மோதினால் அவற்றுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக் கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்நிலையத்தின் அருகில் முக்கால் கிலோமீற்றர் சுற்றளவுக்குப் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை விண்வெளி வீரர்கள் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய விண் வெளியில் நடக்க இருக்கிறார்கள். அப்போது விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ரஷிய செயற்கைக்கோள் பாகம் இவர்களுக்கு மிக நெருக்கமாக மிதந்து வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அது இவர்களை மோதுமா என்பது தெரியவில்லை.
அவசியம் ஏற்படுமேயானால் விண் ஓடத்தை உந்துசக்தி கொடுத்து சற்றே இடம்பெயரச் செய்யவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்வெளி வீரர்களுக்கு ரஷிய செயற்கைக்கோளின் பாகம் இடைஞ்சலாக இருக்காது என்றே விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதனால் அவர்களுக்கு ஆபத்து எதுவும் நேராது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆண்டுகளாக விண்வெளியில் பல செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவை காலாவதியான பின்னரும் தொடர்ந்து விண்ணில் மிதந்து வருகின்றன.
இதுபோல விண்ணில் மிதக்கும் 22 ஆயிரம் செயற்கைக்கோள் பாகங்களையும் பொருள்களையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணிக்கு 17 ஆயிரம் கி.மீ வேகத்தில் விண் நிலையமும் அட்லாண்டிசும் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த வேகத்தில் செல்லும் போது விண்ணிலுள்ள மிகச் சிறிய இரும்புத்துகள் கூட மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.
சர்வதேச விண்நிலையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 விண்வெளி வீரர்கள் உள்ளனர். இந்த விண்நிலையத்தின் பகுதிகள் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை விண் ஓடங்களில் எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.
ரஷ்யாவில் துவங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையொட்டி முதன் முதலாக ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அந்நாட்டு துணைப்பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் தென் ஆப்ரிக்காவின் டர்பனில் கடந்த 8ம் திகதி நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவில் துணைப்பிரதமர் அலெக்ஸாண்டர் ஜூகூவோவ் கூறியதாவது: ரஷ்யாவில் வரும் 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சோச்சி மாகாணத்தில் துவங்குகிறது.
ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில் 120 நாட்களுக்கு 28 ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து இந்த ஒலிம்பிக் ஜோதி நடக்கிறது. இதற்காக 14 ஆயிரம் பேர் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வரவுள்ளனர்.
முன்னதாக முதன் முறையாக விண்வெளிக்கு ஒலிம்பிக் ஜோதியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ரஷ்யாவில் மிகப்பெரிய மலை உச்சிக்கும், உலகின் மிகவும் அழமான ஏரிக்கு அடியிலும் இந்த ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படவுள்ளது.
பிரான்ஸ் நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள லிபிய அரசு.
பிரான்சு நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக லிபியா தலைவர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
லிபியா தலைவர் கடாபி பதவி விலக வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து நேட்டோ நாடுகளும் கடாபி பதவி விலக வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவேன் என்று கடாபி சவால் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் பிரான்சு நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியில் கிளர்ச்சியாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. பிரான்சு நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
எங்களது பிரதிநிதி பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஆட்சி மாற்றக் கவுன்சிலை நாங்கள் தான் உருவாக்கினோம். எங்களுடைய ஆதரவு இல்லாமல் பணம் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் கிளர்ச்சியாளர்களால் நீடிக்க முடியாது.
திரிபோலியுடன் ஒப்பந்தம் ஏற்படும் போது போரை வாபஸ் பெறும்படி நாங்கள் கிளர்ச்சியாளர்களை கட்டாயப்படுத்துவோம் என்று பிரான்சு அதிபர் சர்கோசி கூறியதாக கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் கடாபி அரசுடன் கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடாபி தோற்கும் வரை காத்திருக்கக் கூடாது. லிபியா தலைவரும் பதவியை விட்டு இறங்க வேண்டும்.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஜெரார்டு லாங்கியூட் கூறிய சில மணி நேரங்களில் கடாபியின் மகன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு எழுத்துபூர்வமாக அமெரிக்கா அளித்துள்ள பதிலில் ஆட்சி மாற்றம் எப்படி ஏற்பட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கிளர்ச்சியாளர்கள். கடாபி பதவியில் நீடிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
தனி நாடாக பிரிந்தாலும் சர்ச்சை ஓயவில்லை: அப்யாய் நகருக்கு போட்டி.
சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரத்தின் மீது அத்துமீறி தெற்கு சூடான் அதிகாரம் காட்டக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.
சூடான் நாட்டில் இருந்து பிரிந்து கடந்த 9ம் திகதி உலகின் 193வது நாடாக தெற்கு சூடான் உதயமானது. 20 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த போரில் தெற்கு சூடான் 15 லட்சம் மக்களை பலி கொடுத்து தனி நாடாக உதயமாகியுள்ளது. ஆனாலும் இன்னும் சர்ச்சை ஓயவில்லை.
இருநாடுகளையும் பிரிக்கும் எல்லையில் தற்போது சூடான்(வடக்கு சூடான்) நாட்டின் கட்டுப்பாட்டில் அப்யாய் நகரம் உள்ளது. இது எண்ணெய் வளமிக்க நகரம். இந்நகரத்தின் மீது தெற்கு சூடான் நிர்வாக அதிகாரம் செலுத்தக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. எனவே போரை முடிவுக்கு கொண்டு வந்து தெற்கு சூடான் மக்களின் விருப்பப்படி தனி நாடு அறிவிப்பை செயல்படுத்தினேன்.
அதற்காக சூடான் கட்டுப்பாட்டில் உள்ள அப்யாய் நகருக்கு தெற்கு சூடான் சொந்தம் கொண்டாடக் கூடாது. அப்படி சொந்தம் கொண்டாடினால் இருநாடுகளுக்கும் இடையில் புதிய விரோதம் உருவாகும்.
அப்யாய் எல்லைப் பகுதியில் ஐ.நா.வின் அமைதிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாபஸ் பெறவேண்டும். இங்கு எத்தியோப்பியா அமைதிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படலாம்.
இருநாடுகளும் இதை வரவேற்கிறோம். ஐ.நா அமைதிப் படையினரால் செய்ய முடியாததை எத்தியோப்பியா படையினரால் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
கடந்த 2004ம் ஆண்டில் அப்யாய் நகருக்கு தனி சுயாட்சி வழங்கப்பட்டது. அரபு நாடோடி பழங்குடியின மக்களை அதிகம் கொண்ட இந்நகருக்கு தேர்தல் நடத்துவது தள்ளிப் போவதால் அப்யாய் நகரின் மீது அதிகாரம் செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
கடந்த மே மாதம் இருதரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் அப்யாய் நகரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் சூடான் நாட்டினர் கொண்டு வந்தனர். தற்போது ஐ.நா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.