Tuesday, July 19, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையர், இந்தியர்களை கொண்ட கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்.

இந்து சமுத்திரத்தின் வடக்கு பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்று கடத்தப்பட்டது.இந்த தகவலை ஐரோப்பிய ஒன்றிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பலில் இந்தியா, இலங்கை கென்யா உட்பட்ட நாடுகளை சேர்ந்த 16 பேர் உள்ளனர்.
எம் வி ஜூபா என்ற இந்தக்கப்பல்,கடந்த சனிக்கிழமையன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து சோமாலியாவுக்கு செல்லும் வழியி;ல் சோமாலிய கடற்பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கப்பலை கடத்திய பின்னர் கப்பலுக்குள் 9 சோமாலிய கடற்கொள்ளையர்கள் உள்ளிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமைமிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஆகக்குறைந்த இடம்.

உலகளாவிய புதிய தரவுகளின்படி இலங்கை ஆகக்குறைந்த திறமைகளை கொண்ட நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுக்காக எடுக்கப்பட்ட 60 நாடுகளில் இலங்கைக்கு 59 வது இடமே கிடைக்கப்பெற்றுள்ளது.ஹெட்ரிக் மற்றும் ஸ்றுக்லர்ஸ் சமூகம் பொருளதார நிபுணர் குழுவும் இந்த தரவுக்கணிப்பை நடத்தின.உலகளாவிய திறமை குறிகாட்டி 2011 என்ற குறிக்காட்டிக்காகவே இந்த தரவுகள் எடுக்கப்பட்டன.
இதில் அமரிக்கா முதலாம் இடத்தை பெற்றுள்ளது.<நைஜீரியா 60 வது இடத்தை பெற்றுள்ளது.இந்தியா 35 வது இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் 57 வது இடத்தை பெற்றுள்ளது.இந்த தரவுகளுக்காக குடியாட்சி, கட்டாயக்கல்வி, பல்கலைக்கழக கல்வி, தொழிலாளர் தரம், வேலை செய்வோரில் பட்டம் பெற்றவர்கள் போன்ற காரணங்கள் கணக்கிடப்பட்டன.
"நான் சொன்னதை செய்வேன்! செய்வதை சொல்வேன்" வேலணையில் மஹிந்த தமிழில் உரை.

உங்களுடைய உரிமை உங்களிடமே இருக்கின்றது. அதனை யாரும் எடுத்துவிட முடியாது. அதில் கவனமாக இருங்கள். நான் சொல்வதைத்தான் செய்வேன்! செய்வதைத்தான் சொல்வேன்! என்னை நம்புங்கள்! என யாழ்.வேலணையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வேலணைப் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது. கடந்த 30வருடங்கள் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களும் துயரங்களும் இனி இல்லை. யாரையும் சந்தேகப்பட வேண்டாம் யாருக்கும் பயப்பட வேண்டாம்.

யுத்தம் முடிந்து 2 வருடங்களில் நாம் வடக்கின் அபிவிருத்திக்கு பெருமளவு செலவிட்டுள்ளோம் வடக்கின் அபிவிருத்தி துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றது.
சிலர் மக்களைத் தொடர்ந்தும் தவறான வழியில் கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். இவர்கள் தங்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் சுகங்களையும் வெளிநாடுகளில் வைத்து விட்டு இங்கே வந்து மக்கள் பற்றிப் பேசுகிறார்கள்.
இது பற்றி மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். என்றார்.


இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்.
இந்தோனேசியாவின் சுலாவேசியில் உள்ள மவுண்ட் லோகோன் எரிமலை இன்று இருமுறை வெடித்ததால் சாம்பல் புகை வானத்தில் சுமார் 2000 அடி வரை எழும்பியது.
இது அபாயகரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த லோகோன் எரிமலை பல ஆண்டுகள் அமைதியாக இருந்தது. ஆனால் கடந்த வாரம் இது உயிர் பெற்று மீண்டும் வெடித்தது.
ஞாயிறன்று இந்த எரிமலை வெடித்த போது சாம்பல் புகை அதிகபட்சமாக 11,400 அடி வானில் உயரே எழும்பியது.
இந்தோனேசிய தீவுக் கூட்டப்பகுதியில் டஜன் கணக்கில் பயங்கர எரிமலைகள் உள்ளன.
பசிபிக் மற்றும் இந்திய கடலில் அபாயம் ஏற்படக்கூடிய "பசிபிக் நெருப்பு வளையம்" என்ற பகுதியில் இத்தீவுக் கூட்டங்கள் உள்ளன.
இதனால் இங்கு எரிமலை அபாயம் மற்றும் இதர இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.
எரிமலை பாதிப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு இயற்கை பேரிடர் நிர்வாக முகமை சார்பில் 35 ஆயிரம் டொலர் அவசர நிதியாக அளிக்கப்பட்டு உள்ளது.
சிரியாவில் கலவரம்: 16 பேர் சுட்டுக் கொலை.
சிரியாவில் அதிபர் பசர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பல இடங்களில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 16 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
சிரியா கலவரத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஜிசர் அல்சுகர் என்ற சர்க்கரை ஆலையில் அடைத்து வைத்து ராணுவத்தினர் சித்ரவதை செய்து கொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் கலவரம் தொடர்ந்து நடப்பதால் ஏராளமானோர் அண்டை நாடான துருக்கிக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலர் சுட்டுக் கொலை.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர்ஷா(42). இவர் மரணம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலராக இருந்தார்.
இவர் கராச்சியில் தங்கியிருந்தார். நேற்று இவர் குலிஸ்தான் இ ஜாவ்கர் பகுதியில் உள்ள கம்ரான் சவ்ராங்கி என்ற இடத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். பின்னர் அவரது காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் உடன் பயணம் செய்த அவரது நண்பர் மைராஜ்காலித் ஜகிரானிக்கும் காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த அமீர்ஷாவை கராச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் மைராஜ் காலித் ஜகிரானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலைக்கான சம்பவம் தெரியவில்லை. எனவே விசாரணை நடைபெறுவதாக கராச்சி தலைமை பொலிஸ் அதிகாரி சவுத்மிர்ஷா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமீர்ஷா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து கராச்சியில் கலவரம் மூண்டது. கொல்லப்பட்ட அமீர்ஷா பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வந்தார். தொடக்கத்தில் அக்கட்சியின் இளைஞரணியில் சேர்ந்தார்.
தேர்தலையொட்டி கடந்த 2007ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய போது அவரது பாதுகாவலர் ஆனார்.
ஒட்டு கேட்பு விவகாரம்: பொலிஸ் கொமிஷனர் பதவி ராஜினாமா.
இங்கிலாந்தில் கடந்த 168 ஆண்டுகளாக வெளிவந்த பிரபல பத்திரிக்கை நியூஸ் ஆப் தி வேர்ல்டு. கடந்த சில ஆண்டுகளாக போன் ஒட்டு கேட்பு மூலம் பரபரப்பு செய்திகளை வெளியிட்டது அம்பலமானது.
இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றதால் தீவிர விசாரணை நடந்தது. பொலிசாருக்கு பல கோடிகளை லஞ்சமாக கொடுத்து போன் ஒட்டு கேட்பு வேலையில் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை ஈடுபட்டது தெரிந்தது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை நிறுவனத்தை மூடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார்.
இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரெபாகா ப்ரூக்ஸ்(43) லண்டனில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
இவ்விவகாரத்தில் ஸ்காட்லாந்து யார்டு புலனாய்வு பொலிசாரும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று லண்டன் பொலிஸ் கொமிஷனர் பால் ஸ்டீபன்சன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பத்திரிகையின் முன்னாள் எக்ஸிகியூட்டிவ் எடிட்டர் நீல் வாலிஸ் என்பவரை சில காலம் பொலிஸ் கொமிஷனர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு ஆலோசகராக பொலிஸ் கொமிஷனர் பால் ஸ்டீபன்சன் நியமித்திருந்தார்.
போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நீல் வாலிசும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பால் ஸ்டீபன்சன் தனது பதவியை ராஜினாமா செய்தது தெரியவந்துள்ளது.
நெல்சன் மண்டேலாவின் 93வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 93வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு 67 நிமிடங்கள் மக்கள் தன்னார்வ தொண்டு வேலைகளில் ஈடுபட்டனர். இது அவரது 67 ஆண்டு அரசியல் போராட்டத்தை குறிக்கும். மில்லியன் கணக்கில் குழந்தைகள் ஒன்றாக இணைந்து சிறப்பு பாடலை பாடினர்.
இவர் தனது பிறந்தநாளை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு ஹீரோவாக தோன்றினார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் அனைவரும் இன்று பல வித தன்னார்வ திட்டங்களை அறிவித்தனர்.
இதுகுறித்து பான் கூறுகையில்,”நெல்சன் மண்டேலாவின் வழியைப் பின்பற்றி எழுச்சியூட்டும் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
ஆப்கன் அதிபரின் மூத்த ஆலோசகர் படுகொலை.
ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் மூத்த ஆலோசகர் ஒருவர் காபூலில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
உரூஸ்கான் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஜான் முகமது கான் அதிபரின் முக்கிய ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
அவரும், அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த உரூஸ்கான் எம்.பி முகமது ஹாஷீம் வாதன்வால் என்பவரும் ஒரு குழுவினரால் படுகொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒரு வாரத்துக்கு முன்பு அதிபரின் சகோதரர் அகமது வாலி கர்சாய் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிபரின் ஆலோசகரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதியுதவி நிறுத்தப்பட்டதால் ஆட்குறைப்பில் ஈடுபடும் பி.பி.சி
உலகம் முழுவதும் செய்திகளை தரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பி.பி.சி செய்தி நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணியில் இருந்து குறைக்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் சுமார் 100 பேர்கள் வரையில் நீக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"அரசு அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் சுமார் 650 பணியிடங்களை குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நிறுவனம் உள்ளாகியுள்ளது" என்றார்.
மேலும் வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் நிதி நிலையில் 16 சதவீதம் வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
கோமா நிலையில் முபாரக்.
எகிப்து முன்னாள் பிரதமர் ஹோஸ்னி முபாரக்(83). இவரது 30 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து தற்போது ராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆட்சியில் இருந்த போது லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொன்று குவித்ததாகவும் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் செங்கடல் பகுதியில் உள்ள ஷாம் எல் ஷேக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்டு மாதம் 3ந் திகதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சையின் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்த தகவலை அவரது வக்கீல் பரீத்எல்-டீப் தெரிவித்ததாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஆனால் இத்தகவலை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆசெம் அஷ்ஸாம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி கூறியதாவது: நான் அவரது உடல் நிலையை பரிசோதித்தேன். தற்போது அவர் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாக தான் சிறிது மயக்கம் ஏற்பட்டதே தவிர அவர் கோமா நிலைக்கு செல்லவில்லை.
அவரது உடல்நிலையை மருத்துவமனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மயக்கத்தில் இருந்து அவரை மீட்க போராடி வருகின்றனர்.
கராச்சியில் தொடரும் கலவரம்: 11 பேர் பலி.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட 11 பேர் 24 மணிநேரத்திற்குள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகர் கலவரத்திற்கு புகழ்பெற்றதாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
நிலவரம் கட்டுக்குள் வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே நேற்று மீண்டும் அந்நகரில் கலவரம் வெடித்துள்ளது. இதற்கு இருசம்பவங்கள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
கராச்சியின் குலிஸ்தான் இ ஜாகர் பகுதியில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேசிய விமான நிறுவனப் பிரிவின் தலைவர் அமீர் ஷா, அவரது நண்பருடன் சேர்த்து மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் பரவியது.
மேலும் கராச்சியில் கச்சி அமான் கமிட்டி என்ற அமைப்பு நடத்திய பேரணியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.
கோபம் கொண்ட கமிட்டி ஆதரவாளர்கள் மவுரிபூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சில கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து நடந்த கலவரத்தில் பால்டியா நகரில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களால் எல்லைப் பாதுகாப்புப் படையினர், துணை நிலை ராணுவப் படையினர் என மொத்தம் 500 ராணுவ வீரர்கள் கராச்சி நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF