Wednesday, July 20, 2011

இன்றைய செய்திகள்.

நாட்டை கூறுபோட ஒருபோதும் இடமளியேன்: யாழில் மஹிந்த தெரிவிப்பு.

'இந்த நாட்டை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
 'நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
இனவாத அரசியல் இனி வேண்டாம். இனம், குலம் பார்த்து நான் வேலை செய்வதில்லை. ஏன் என்றால் நான் இந்த நாட்டின் தலைவன். நீங்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறீர்கள் என நான் அறிகிறேன்.
இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இனி நீங்கள் யோசியுங்கள். நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும்' என்றார்.
தனியார் மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பணியாற்ற இலங்கை டாக்டர்கள் எதிர்ப்பு.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற இந்தியாவில் இருந்து 100 மருத்துவ பயிற்சியாளர்களை அனுமதிக்கும் நிர்வாகத்தின் முடிவுக்கு இலங்கை டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேவையான தகுதிகள் இல்லாத 100-க்கும் மேற்பட்ட இந்திய டாக்டர்களை அனுமதிக்கும் இலங்கை மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத் துறையின் மேலாண் இயக்குநர் ஆகியோரின் முடிவால் பாதிப்படைந்துள்ளோம் என்று டாக்டர்கள் சங்கமான அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மூத்த அலுவலர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்துவது குறித்து அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்று குணசேகர குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் புதிய தீர்மானம் இலங்கைக்கு ஏற்புடையதல்ல – ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடந்த வாரம் நிறைவேற்றிய தீர்மானம் 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கடந்த வாரம், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் நடத்துபவர்களையும் களங்கத்துக்குரிய பட்டியலில் இணைப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.
எனினும் இந்த தீர்மானம், இறுதி யுத்தத்தின் போது பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் தாக்கப்பட்டமை காரணமாக ஸ்ரீலங்காவுக்கும் பொருந்துமா என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்கப்பட்டது.
எனினும் ஐக்கிய நாடுகள் சபை, இந்த தீhமானம் ஸ்ரீலங்காவுக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், 2011 ஜூலை 12 ம் திகதியில் இருந்து செல்லுபடியாகும் என்று ஐக்கிய நாடுகள சபையின் சிறுவர் மற்றும் மோதல் தொடர்பான விசேட பிரதிநிதியின் இணைப்பு அதிகாரியான திமோத்தி லா ரோஸ் தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா குறித்த பட்டியில் இருந்து தம்மை நீக்குமாறு ஐக்கிய நாடுகளிடம் அண்மையில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்கார அமெரிக்கத் தூதுவரை சந்தித்தார்?

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, அமெரிக்க தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸை, சங்கக்கார நேற்றைய தினம் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு தொடர்பான தகவலை குமார் சங்கக்காரவோ அல்லது அமெரிக்கத் தூதரகமோ உறுதிப்படுத்தவில்லை.
இலங்கை கிரிக்கட் துறையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக அண்மையில் லண்டனில் நடைபெற்ற கொலின் க்ரவுட்லி நினைவுப் பேரூரையில் காரசாரமான விரிவுரையொன்றை சங்கக்கார நிகழ்த்தியிருந்தார்.
இந்த உரை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, விளையாட்டு;த்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாட்டின் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்ன விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஹிலாரி- ஜெயலலிதா சந்திப்பு. இலங்கை விடயம் ஆராயப்படுமா? அமெரிக்கர்கள் மத்தியில் முரண்பட்ட தகவல்கள்.

இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் சென்னைக்கு உத்தியோகபற்றற்ற விஜயத்தை மேற்கொள்கிறார். எனவே அவர் அங்கு இலங்கை தொடர்பில் பேச்சு நடத்தமாட்டார் என்று அமெரிக்க உயரதிகாரி குறிப்பிட்;டுள்ளார்.
தெற்காசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாக அதிகாரியும் ஹிலாரி கிளின்டனுடன் இந்திய விஜயத்தில் இணைந்திருப்பவருமான அதிகாரி ஒருவர், ஹிலாரி நிச்சயமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இலங்கை தொடர்பில் ஆராய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயம் தொடர்பில் தமிழகத்தின் 60 மில்லியன் மக்கள் கரிசனை கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கை விடயம் தொடர்பில் ஹிலாரி, ஜெயலலிதாவுடன் கலந்துரையாடுவார் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ரிசானாவுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எதிர்விளைவை தரக்கூடும் என்று எச்சரிக்கை.

சவூதியில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள மூதூர் பெண் ரிசானா நபீக்கை விடுதலை செய்யுமாறு கோரி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படடுள்ளது.
சவூதியில் இருந்து ரிசானா நபீக்கின் குடும்பத்தினருடன் தொடர்புகளை கொண்டுள்ள வைத்திய கலாநிதி கிபாயா இஸ்திகார் என்பவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் போராட்டங்கள் இறந்துபோன குழந்தையின் பெற்றோரை கோபம் கொள்ளவைக்கக்கூடும் என்று கிபாயா குறிப்பிட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த கிபாயா, கடந்த 10 வருடங்களாக சவூதியில் பல்வைத்தியராக கடமையாற்றுகிறார்.
அவரே சவூதியில் சிறைவைக்கப்பட்டுள்ள ரிசானாவை கிரமமாக சென்று பார்வையிட்டு வருகிறார்.
ரியாத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிசானாவை, மாதம் ஒருமுறை சென்று பார்வையிட்டு அவருக்கு உளரீதியான ஆலோசனை வழங்கிவருவதாக கிபாயா குறிப்பிட்டுள்ளார்.
ரிசானாவினால் கொல்லப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே ரிசானாவுக்கு விடுதலை உண்டு. எனினும் அவர்கள் கொலைக்குற்றவாளி ரிசானாவுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்கள்.
எனவே இந்த விடயத்தை கவனமாக கையாளவேண்டும் என்று கிபாயா கோரியுள்ளார்.
இலங்கையில் அதீத அதிகாரம், நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகள் மிக குறைவு : சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடினமாகிக்கொண்டிருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து இரண்டு வருடங்களாகியும் இலங்கையின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நல்லிணக்கததுக்கான நடவடிக்கைகளில் தாமதம் காட்டிவருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் மீண்டும் முறுகல் நிலை தோன்றி வருகிறது.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களுக்கான உரிய தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் பாரிய துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் பங்காளி நாடுகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்றவை இலங்கைக்கு கடுந்தொனியுடனான வலியுறுத்தலை விடுக்க வேண்டும்.
அத்துடன், வெளிப்படையாக வடக்குக் கிழக்கில் பொதுநிர்வாகத்தை ஏற்படுத்துவதுடன் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறையில் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை கொண்டிருக்கிறார். அவரின் சகோதரர்களும் அதிகளவான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்கள்.
அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டங்கள் இன்னும் அமுலில் உள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதியினால் நல்லிணக்கத்துக்காக அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் மத்தியில் நம்பிக்கையை வெல்லவில்லை. அந்தக்குழு இறுதியில் அதிகாரமற்ற ஆணைக்குழுவாகவே அமைந்துள்ளது.
போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக வடக்கு கிழக்கில் பல குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு பரிந்துரைகளை செய்திருக்கிறது.
உடனடியாக சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.
அவசரகால சட்டம்; பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
போரின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
போரில் மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்து மீளத் திரும்பிய மக்களுக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டுஈடுகள் வழங்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் நிறுததப்பட வேண்டும்.
தமிழ்ப்பெண்களுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இறுதித் தீர்வின் போது முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் உட்பட்ட பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்.
இதேவேளை இலங்கையின் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன இலங்கையில் நல்லிணக்கத்துக்காக ஊக்கத்தை அளிக்க வேண்டும்.
அத்துடன் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்த சர்வதேச விசாரணையை இந்த நாடுகளும் அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை இணங்கும் வரை, அது நடைமுறைப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு இராணுவ உதவிகளை குறித்த நாடுகள் நிறுத்த வேண்டும்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் அபிவிருத்தி பங்காளிகளும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கான நிதியுதவிகளை கண்காணிக்க வேண்டும்.
அத்துடன் வடக்கு கிழக்கை புனரமைப்பு செய்வதில் இலங்கை அரசாங்கம் தமது சொந்த நிதியை செலவிடுவதற்கு குறித்த அமைப்புகளும் நாடுகளும் வலியுறுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகளும் அதன் உறுப்பு நாடுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப உரிய செயற்பாடுகளுக்கு இலங்கையை முன் நகர்த்தி செல்ல வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை இணங்கும் வரை அதன் படையினரை ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படைகளில் இணைக்கக்கூடாது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைத்தமை தொடர்பிலும் இலங்கைப் படையினர் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டம், காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான நிலைமையை வெளிக்கொணர்தல் உட்பட்ட மனிதாபிமான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்துக்கு உதவவேண்டும்.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச பொறிமுறைக்கு உதவ வேண்டும்.
சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் கைவிட செய்ய வேண்டும் போன்ற பரிந்துரைகளை சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு செய்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் 87 பேருக்கு அந்நாட்டு அரசு விசா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டிற்கான ராணுவ உதவியில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமத் சுஜா பாஷா அந்நாட்டின் புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புலனாய்வு ரகசியங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தங்களது வழக்கமான பணிகளைத் துவக்க 87 அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு இஸ்லாமாபாத் விசா வழங்கியுள்ளது.
மேலும் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த போது அவரது குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ அடையாளத்திற்கான ரத்தம் எடுக்க தடுப்பூசி முகாம் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அபிரிதியை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வெற்றிகரமாக பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் அட்லாண்டிஸ் விண்கலம்.
அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ் விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.
இந்த பயணத்திற்கு பின்னர் விண்வெளித் திட்டத்தில் தற்போது ஈடுபடப்போவது இல்லை என அமெரிக்கா அறிவித்து உள்ளது.
அட்லாண்டிஸ் பயணம் முடிந்ததால் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இதர விண்வெளி வீரர்களிடம் பிரியா விடை பெற்றனர்.
இன்று 14.28 ஜி.எம்.டி நேரப்படி அட்லாண்டிஸ் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிகிறது. விண்வெளி நிலையம் அருகே அமெரிக்க தேசிய கொடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விண்கல கமாண்டர் கிறிஸ் பெர்குசன் கூறுகையில்,"இந்த கொடியை ஏதேனும் ஒரு விண்வெளி வீரர் பூமிக்கு கொண்டு வருவார். விண்கல பயணம் முடிவடையாது" என்றார்.
அட்லாண்டிஸ் விண்கலம் ஜுலை 8ம் திகதி தனது இறுதி விண்வெளி பயணத்தை மேற்கொண்டது. விண்வெளி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களுடன் 4 வீரர்களுடன் விண்கலம் பறந்தது.
அட்லாண்டிஸ் விண்கலம் வியாழக்கிழமை அமெரிக்காவை வந்தடையும். அந்த இறுதிப் பயணத்துடன் அமெரிக்காவின் 30 ஆண்டு விண்வெளித் திட்டம் முடிவுக்கு வருகிறது.
இனிமேல் எப்போது அமெரிக்க விண்கலம் விண்ணிற்கு செல்லுமோ என்ற கவலை வீரர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
திபெத்தும் சீனாவின் ஒரு பகுதி தான்: அமெரிக்கா.
திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அவரை சந்திக்க கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்தும் அதை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜெய்கார்னே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தலாய்லாமா நோபல் பரிசு பெற்றவர். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மதத் தலைவர். எனவே தான் அவரை அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார்.
அமெரிக்காவை பொறுத்தவரை திபெத் சீனாவின் ஒரு பகுதி தான். அதன் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதே நேரத்தில் திபெத் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
மேலும் அவர் கூறும் போது தலாய்லாமா பிரதிநிதிகளுடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் நீண்டநாள் பிரச்சினையை தீர்த்து கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா கருதுவதாகவும் தெரிவித்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது விமானம் விழுந்து விபத்து.
பாகிஸ்தானின் கராச்சியில் சிறியரக விமானம் ஒன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கராச்சியின் கோரங்கி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மோதுவதற்கு முன்பு தாழ்வான உயரத்தில் அந்த விமானம் பறந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அந்த விமானம் விமானி இல்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் விமானம் என்று  பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.
அந்த விமானம் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை.
கடாபி அரசு நிர்வாகத்துடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சியாளர்களை அமெரிக்க தூதர்கள் சந்தித்தனர். கடந்த நான்கு மாதமாக லிபியாவில் தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ படையினர் தாக்குதலை நிறுத்தும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
லிபியா அரசு அதிகாரிகளை சந்தித்தது உண்மை தான் என ஒரு அமெரிக்க அதிகாரியும் ஒப்புக் கொண்டார்.
இந்த சந்திப்பு சமாதான நடவடிக்கை அல்ல. கடாபி விரைவில் பதவி இறங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே சந்தித்தோம். இனிமேல் லிபிய அரசு நிர்வாகத்தை சந்திக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.
மத்திய கிழக்கு கொள்கையில் வெளியுறவுத் துறையின் முதன்மை அதிகாரியான ஜெப்ரி டி பெல்ட்மான் உள்பட மூன்று அமெரிக்க ராஜிய பிரதிநிதிகள் லிபிய அரசின் நான்கு உறுப்பினர்களை சந்தித்தனர்.
அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை துனிஷியாவில் சந்தித்ததாக லிபிய தரப்பு தகவல்கள் கூறுகின்றன. கடாபி பதவி விலக தயாராகி விட்டார் என லிபிய தூதர்களை குறிப்பிட்டு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜுபே தெரிவித்து இருந்தார்.
லிபியா தரப்பில் இருந்து துருக்கி, நியூயோர்க், பாரிஸ் என அனைத்து இடத்திற்கும் தூதர்கள் வருகிறார்கள் என அலய்ன் ஜுபே குறிப்பிட்டு இருந்தார். லிபியாவில் பிரகா நகரை கைப்பற்றி விட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
ஆனால் அந்த கடலோர நகரம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என லிபிய அரசு கூறுகிறது. திரிபோலியில் விமான நிலையம் அருகே நேட்டோ நடத்திய வான்வழித் தாக்குதலில் சிவிலியன் ரேடார் மையம் தகர்க்கப்பட்டது.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையின் நிருபர் திடீர் மரணம்: இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை.
இங்கிலாந்தில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சிக்கிய 168 ஆண்டு கால பாரம்பரிய பத்திரிகை நியூஸ் ஆப் தி வேர்ல்டு சமீபத்தில் மூடப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக் நாடாளுமன்ற குழு விசாரணையை சந்திக்கவுள்ளார்.
இவரது நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெபேகா ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் பொலிசார் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் லண்டன் பொலிஸ் கொமிஷனர் பால் ஸ்டீபன்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது உதவி பொலிஸ் கொமிஷனர் ஜான் ஏட்ஸும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவில் இவர் முக்கிய அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு கோரிக்கை எழுந்த போது இது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என ஜான் ஏட்ஸ் முடிவெடுத்தார்.
அது தவறான முடிவு என ஒப்புக்கொண்ட ஜான் ஏட்ஸ் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டேவிட் கமரூன் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்புகிறார்.
இந்நிலையில் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையில் பணியாற்றிய நிருபர் சியன் ஹோரே தனது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். போன் ஒட்டு கேட்பு மூலம் செய்திகளை வெளியிட்டதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பது போல் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் ஹோரே மரணம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. நியூஸ் ஆப் தி வேர்ல்டு விவகாரத்தில் தொடர்ந்து பல திருப்பங்கள் ஏற்படுவது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி அரசு கணணிகளில் தகவல்கள் திருட்டு போகும் அபாயம்.
ஜேர்மனியின் அரச நிர்வாக கணணிகளில் தகவல்களை திருட அச்சுறுத்தல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சுங்க ஆணையக கணணி தகவல்களை திருடுவதற்கு உதவி செய்த 23 வயது இளைஞர் ஒருவரை ஜேர்மனி பொலிசார் கைது செய்தனர். அந்த நபர் குறிப்பிட்ட அரசு தகவல்களை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
அந்த நபரின் அபார்ட்மென்ட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த இளைஞர் நீதிபதி முன்பாக திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது.
சுங்க இலாகா சேவையின் ஒரு முக்கிய பகுதியில் கணணி தகவல் திருடர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் பொலிஸ் உளவு செயல்பாட்டையும் தொந்தரவு செய்துள்ளனர். சந்தேகிக்கும் தீவிரவாதிகள் மற்றும் பெரும் குற்றவாளிகள் குறித்த விவரங்களில் கணணி தகவல் திருடர்கள் ஊடுருவி உள்ளனர்.
பல்வேறு தகவல் திருட்டுகள் ரஷ்ய கணணிகள் மூலமாக நடைபெற்று உள்ளன. ஜேர்மனி சுங்க இலாகாவின் சர்வர்களில் இருந்த பொலிஸ் தகவல்களை கணணி தகவல் திருடர்கள் திருட முயன்றுள்ளனர்.
கணணி தகவல்களை திருடுவதற்கு ஏதுவாக என்ன தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய அரசு தரப்பில் 10 சதவீத படைபிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தகவல்கள் திருடப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு அவசரமாக ஆலோசனை செய்து வருகிறது.
பாகிஸ்தானில் 16 பொலிசாரை தலிபான்கள் சுட்டுக் கொல்லும் நேரடிக் காட்சிகள். 
பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் "லைவ்லீக்" என்ற இணையதளத்தில் நேற்று வீடியோ காட்சியை வெளியிட்டனர்.
அதில் பாகிஸ்தானை சேர்ந்த 16 பொலிசார் மலைப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகள் பின்புறமாக மடக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது. அவர்களின் முகம் பீதியில் உறைந்திருந்தது.
இந்த நிலையில் முகத்தை துணியால் மறைத்தபடி 4 தலிபான் தீவிரவாதிகள் அவர்கள் முன்பு துப்பாக்கியுடன் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சுவாத் பள்ளத்தாக்கில் 6 அப்பாவி குழந்தைகளை கொன்றதாக குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. அதற்கு தண்டனையாக அனைவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து அவர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த பொலிசார் அப்படியே மண்ணில் சாய்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.
இந்த காட்சிகள் உண்மை. சுட்டுக்கொல்லப்பட்டது பொலிசார் தான் என பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டது. கடந்த ஜுன் மாதம் 1ந் திகதி ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர்-பக்துன்கலா மாகாணத்தில் அப்பர் டிர் என்ற இடத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
அதில் 27 பொலிசாரும், 40 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 16 பொலிசாரை காணவில்லை.
அவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட பின் அவர்களது உடல்களை அப்படியே போட்டு விட்டு சென்றனர். இந்த தகவலை ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.






சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து ஐ.நா அவசர கூட்டம்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா மிக கடுமையான வறட்சி நிலையை எட்டி உள்ளது.
அந்த நாட்டை சேர்ந்த 15 லட்சம் மக்கள் உயிர் பிழைக்க அருகாமையில் உள்ள நாடுகளுக்கு ஓடி வந்துள்ளனர்.
சோமாலியாவின் வறட்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அவசர கூட்டத்தை நடத்துகிறது. பிரான்சின் வேண்டுகோளை தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே தெரிவித்தார்.
இந்த கூட்டம் தற்போதைய பதவி முடிந்து செல்லும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு இயக்குனர் ஜெனரல் ஜாக்குஸ் டியோப் தலைமையில் ரோமில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் சோமாலியாவுக்கு அளிக்கப்படும் சிறப்பு நிவாரண உதவி பற்றி அறிவிக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச தொண்டு ஒக்ஸ்பாம் ஆகியவை உடனடி நிவாரண உதவி கோரி வேண்டுகோள் விடுத்தன.
சோமாலியா பிராந்தியத்தில் 1 கோடியே 20 லட்சம் மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள். அவர்கள் உயிருக்கு போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா: ஒபாமா கவலை.
அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை எட்டிவிட்ட நிலையில் அந்த உச்சவரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து அந்நாட்டு காங்கிரஸ் சபையில் இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால் அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
அமெரிக்கா வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் வாங்கிய கடன் தொகை கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டொலரைத் தொட்டது. இது தான் அமெரிக்காவின் கடன் உச்சவரம்புத் தொகை.
இதையடுத்து அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் கடன் உச்சவரம்பு மாற்றியமைக்கப்படா விட்டால் நாடு நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. 1 டிரில்லியன் டொலர் என்பது ஒரு லட்சம் கோடி  டொலர்).
கடந்த ஒரு வார காலமாக வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமா தலைமையில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஐந்து முறை ஆலோசனைகள் நடந்தன.
அதில் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும், நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வளமான அமெரிக்கர்களின் வரி அதிகரிக்கப்பட வேண்டும் என அதிபர் ஒபாமா கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள்,"கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமானால் வரியை அதிகரிக்கக் கூடாது. அரசின் செலவினங்களைப் ஆண்டுக்கு 111 பில்லியன் டொலர் வீதம் குறைக்க வேண்டும்" என நிபந்தனை விதித்தனர். இதனால் ஐந்து கட்ட ஆலோசனையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கடன் உச்சவரம்புத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால் அமெரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான தீர்மானத்தை இம்மாதம் 22ம் திகதிக்குள் எடுக்க வேண்டும், அதையடுத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் மொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் முடித்து விட வேண்டும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் செலவினங்களைக் குறைத்து கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தத்திற்கு வழி செய்யும் "கட், கேப் அண்டு பேலன்ஸ்" என்ற மசோதாவை எதிர்க்கட்சியின் மூத்த தலைவரும், பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னர் கொண்டு வர உள்ளார்.
இம்மசோதா நிறைவேறுமானால் ஒபாமா அரசு குடியரசு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாகும். மேலும் செனட் சபையில் அரசு சார்பில் மசோதா கொண்டு வர முடியாது.
இதனால் அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும். இந்த மசோதாவை நிறைவேறவிடாமல் அரசின் மசோதாவை வெற்றி பெற செய்யும் முயற்சியில் ஒபாமா உள்ளார். இது நடக்கையில் அரசு மசோதா நிறைவேறாதவாறு அபாய நிலை ஏற்படும் குழப்பமான சூழ்நிலை உள்ளது.
மொராக்கோ நாட்டில் சீர்திருத்தம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.
மொராக்கோ நாட்டில் சீர்திருத்தம் கோரி மன்னருக்கு ஆதரவானவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துனிசியா, எகிப்து, சிரியா, லிபியாவைத் தொடர்ந்து மொராக்கோ நாட்டிலும் 47 ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் மன்னர் முகம்மதுவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டு மன்னரின் அதிகாரம் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரத்தை மன்னர் பகிர்ந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் "பெப்பிரவரி 20 இயக்கம்" என்ற பெயரில் செயல்பட்டு வரும் மன்னருக்கு எதிரானவர்கள் தொடர்ந்து சீர்திருத்தம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான காசாபிளாங்காவில் மன்னருக்கு எதிரானவர்கள், சீர்திருத்தம் கோருவோர் என ஆயிரக்கணக்கில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.
தலைநகர் ரபாத்தில் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொராக்கோவில் மன்னருக்கு பெரிய அளவில் மக்கள் மதிப்பளிப்பதால் மற்ற அரபு நாடுகளைப் போல பெரிய அளவில் கிளர்ச்சி வெடிக்கவில்லை.
அல் ஜவாஹிரியை கொலை செய்ய நிச்சயம் உதவி செய்வோம்: பாகிஸ்தான் உளவுத்துறை உறுதி.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்புக்குத் தலைவராக பொறுப் பேற்றுள்ள அல் ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் உளவுத் துறை உறுதி அளித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு அளிக்கவிருந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
இதைப் பெறுவதற்காக கடந்த வாரம் அமெரிக்காவுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் சுஜா பாஷா, அல்கொய்தா அமைப்புக்கு புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அல் ஜவாஹிரியைக் கொல்ல அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கடந்த மே 2ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இருக்குமிடம் தெரியவில்லை.
இந்நிலையில் இவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தால் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து ஜவாஹிரியைக் கொல்வோம் என்று சுஜா பாஷா தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு அய்மன் அல் ஜவாஹிரியும், பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத்தும் சந்தித்துப் பேசிய விடயம் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
2008ம் ஆண்டு முற்பாதியில் நிகழ்ந்த இந்த சந்திப்புக்கு பிறகு இவர்கள் பற்றிய தகவல் எதுவும் ஐ.எஸ்.ஐ.க்கு கிடைக்கவில்லை. ஆனால் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் மெஹ்சூத் கொல்லப்பட்டார்.
இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய விவரத்தை ஐ.எஸ்.ஐ அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் தெரிவித்ததாக "டிரிபியூன்" நாளேடு இப்போது செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களிரின் சந்திப்பு தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் நடைபெற்றதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு முன்பு வரை அமெரிக்காவின் தாக்குதல் இலக்கில் மெஹ்சூஸ் இடம்பெறவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பை ஒரு பொருட்டாகவே அமெரிக்கா கருதவில்லை.
அல்கொய்தா அமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசிய பிறகு தான் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்ததாக அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புத்துறைச் செயலராக பழங்குடியினப் பகுதிகளில் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சியின் போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான் பணியாற்றினர். அந்த வகையில் வஜிரிஸ்தான் பகுதியிலிருந்த பிரிகேடியர் மக்மூத் ஷா, இவ்விரு தலைவர்கள் சந்திப்பு குறித்து முன்னரே தகவல் தெரிவித்திருந்தார். 2008 ம் ஆண்டுக்குப் பிறகுதான் மெஹ்சூத் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கோமாவில் இருந்து மீண்டார் முபாரக்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் நான்காவது முறையாக நேற்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.
துணைப் பிரதமர் யேயா எல் காமலை தொடர்ந்து மூன்று அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
எகிப்து நாட்டை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எழுந்த மக்கள் நெருக்கடியையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார்.
தற்போது ஷரம் எல் ஷேக் ரெசார்ட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முபாரக் கோமா நிலைக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது கோமாவில் இருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சியை எதிர்த்தும், விரைவில் சீர்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தியும் முபாரக் ஆட்சியிலிருந்த அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், கடந்த 8ம் திகதியில் இருந்து புதிய கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து துணைப் பிரதமர் காமல் மற்றும் இவரைத் தொடர்ந்து மூன்று அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கிளர்ச்சியின் போது அப்பாவி பொது மக்களை கொன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் 700 பொலிஸ் அதிகாரிகளின் பதவியும் பறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முபாரக் வீழ்ச்சிக்குப் பின்னர் நான்காவது முறையாக எகிப்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. முபாரக் ஆதரவு அமைச்சர்கள் 15 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
முக்கிய அமைச்சர்களான வெளியுறவுத்துறை, நிதித்துறை, ராணுவம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். புதிய துணைப் பிரதமர்களாக பழம்பெரும் பொருளாதார வல்லுனர் ஹசெம் பெப்லாவி மற்றும் வக்பு கட்சி தலைவர் அலி அல் சில்மி ஆகிய இருவரையும் பிரதமர் எசாம் ஷரப் நியமித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF