தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை – ரணில்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸார் உரிய முறையில் விசாரணை செய்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் நாட்டம்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த அதிகளவான இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா - கொழும்பிற்கு இடையில் விமான சேவை ஆரம்பம்.
வவுனியாவிற்கும் கொழும்பு இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவையொன்று இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் புதல்வருமே கூட சட்டதிட்டங்களை மீறுகின்றனர்! - கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
ஒழுக்கமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று தொடர்ந்து கூறிவரும் ஜனாதிபதியும் அவரது புதல்வரும் அவரது கட்சியினருமே வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குற்றஞ்சாட்டி உள்ளது.
பெற்றோல் விவகாரம்! லண்டன் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு - சுசில் பிரேமஜயந்த.
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக லண்டன் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து லண்டன் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றுத் தெரிவித்தார்.
துர் ஆட்சிக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்யவும் தயார் – சரத் பொன்சேகா.
துர் ஆட்சிக்கு எதிராக உயிர் தியாகம் செய்யவும் தயங்கப் போவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கில் ஹிலாரி, ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்- விமல்.
இலங்கைப் பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சம்: ஐ.நா அவசர கூட்டம்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பஞ்சத்திற்கு தீர்வு காண்பதற்காக ஐ.நா சபையின் அவசரக்கூட்டம் வரும் 25ம் திகதி நடைபெறுகிறது.
ஒசாமா பின்லேடன் கொலையில் சதிச்செயல் இல்லை, இது பாகிஸ்தான் தற்போதைய அரசின் கவனக்குறைவால் தான் நடந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் கூறியுள்ளார்.
லிபியா தலைவர் கடாபியை விரட்டுவதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடம் இருந்து கூடுதலாக ஆயுதங்கள் வாங்க கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் பொலிசாருக்கு ஜூடோ பயிற்சி வழங்குவதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் துருக்கியில் முகாமிட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக்போர்ட் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்ச் கிப்(84), லான் செஸ்டர்(71), டிரேசி ஆடன்(44) ஆகியோர் திடீரென மரணம் அடைந்தனர்.
சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
அமெரிக்காவின் கடைசி விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் இன்று அதிகாலை பூமிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
அல்கொய்தா அமைப்பில் சேரும் வகையில் சிறுவர்களை ஈர்க்க கேலிச்சித்திர படம் ஒன்றை தயாரிக்க அல்கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய யூரோ கடன் பிரச்சனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு பொதுநிலை மேற்கொள்ள பிரான்சும், ஜேர்மனியும் தற்போது முடிவு செய்து உள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாட்டு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உஸ்பெஸ்கிஸ்தான். இது ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது.
தாய்லாந்து இளவரசருக்கு சொந்தமான விமானத்தை விடுவிக்க ஜேர்மனி நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கர்னல் கடாபி பதவி விலக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5 மாதமாக போராட்டம் நீடித்து வருகிறது.
பிரிட்டனில் தொலைபேசி தகவல்களை திருடி வெளியிட்ட குற்றத்திற்காக நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை இந்த மாதம் மூடப்பட்டது.
கனடா மற்றம் அமெரிக்காவை இணைக்கும் எல்லை பகுதியில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.
எகிப்து நாட்டில் மூன்று கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக அந்நாட்டிற்கான இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனது செய்தித் தொடர்பாளரை நியமித்தது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வருத்தம் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களை அவதானிக்கும் போது இந்த நிலைமை புலனாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச சொத்து துஸ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாள் தோறும் முறைப்பாடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதன்முறையாக தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் சுயாதீனமான முறையில் நடத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபடுவோரிடமிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கிளைக் காரியாலயங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கிளைகளை அணுகுவதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவசர பணிகள் காரணமாக செல்பவர்களின் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
இப் போக்குவரத்திற்காக பயணி ஒருவரிடம் இருந்து ஒரு வழிக் கட்டணமாக ரூபா 6,600 அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழ். செயலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதித் தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் நடத்திய கூட்டத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சட்டங்களைப் பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதியே சட்டங்களை மீறுகிறார் என்றனர் கூட்டமைப்புப் பிரதி நிதிகள்.
தேர்தல் ஒன்றுக்கு திகதி குறிப்பிட்ட பின் அந்தப் பிரதேசங்களில் திறப்பு விழாக்கள் அடிக்கல் நாட்டு வைபவங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை தேர்தல் பிரசாரமாக்குவது அரச சொத்துக்களை பாவிப்பது பொது இடங்களில் போஸ்ரர் ஒட்டுவது பதாதைகள் மற்றும் கட்அவுட்களை பார்வைக்கு வைப்பதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்களாகும் என தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் தொடர்பில் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.,கிளிநொச்சி மாவட்டங்களில் முகாம் இட்டிருக்கும் ஜனாதிபதியும் அவரது புதல்வரும் சகோதரன் மற்றும் அமைச்சர்களும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிடும் அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகின்றனர்' என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 20 ம் திகதி இரவுடன் நிறுத்தப்பட வேண்டும் எனத் தடைவிதிக்கப்பட்ட போதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரின் ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டமைப்பு வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர். இராணுவத்தால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். ஆதரவாளர்களின் தனியார் கல்வி நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஆளும் கட்சி பணிமனையில் அரசினால் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இத்தகைய மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்றில் நேற்று ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்த நிலையில் ஹெஜிங் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கமைய, அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
2007,2008 ம் ஆண்டுகளில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 2008 ம் ஆண்டு இறுதியில் ஒரு பெரல் மசகு எண்ணெய் விலை 45 டொலர்களாகக் குறைந்தது. ஆனால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாக இருந்தது.
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியே சிபாரிசுகளை முன்வைத்தார் என்று ஜே.வி.பியின் எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க கூறியவை தவறு. நிதி அமைச்சு இது தொடர்பில் மேற்பார்வை மட்டுமே செய்தது. அரசு மக்களின் நலத்தை நோக்காகக் கொண்டே செயற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும், அந்த உடன்படிக்கைக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பிலும் ஜே.வி.பி எம்.பி. அனுர குமார திசாநாயக்க நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமான பதிலை அளித்தார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்றிருந்த போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக உயிரை துச்சமாகக் கொண்டு போரில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அமெரிக்காவின் உயர் மட்ட இராஜதந்திரிகள் மாநில அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திப்பது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிலாரி கிளின்ரனின் இந்திய விஜயம் குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
செல்வதற்கு இடமில்லாமல் ஹிலாரி ஆசியாவிற்கு விஜயம் செய்யவில்லை எனவும், காரண காரியத்துடன் அவர் ஆசியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் பயன்படுத்தி சீனாவை வலுவிழக்கச் செய்யும் முனைப்பாக இந்த விஜயம் கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பஞ்சத்திற்கு தீர்வு காண்பதற்காக ஐ.நா சபையின் அவசரக்கூட்டம் வரும் 25ம் திகதி நடைபெறுகிறது.
கென்யா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. சோமாலியா நாட்டின் உள்நாட்டு சண்டையால் அங்கு 20 ஆண்டுகளாக பஞ்சம் நிலவுகிறது.
37 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஒரு வேளை உணவு கூட கிடைக்காத காரணத்தால் அவர்கள் அண்டை நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.
ஏற்கனவே அந்த நாடுகளும் பஞ்சத்தில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் வெளிநாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதால் வெளிநாட்டு உதவிகள் ஏற்கப்படுகின்றன.
ஆக்ஸ்பாம் தொண்டு அமைப்பு கிழக்கு ஆப்ரிக்க மக்கள் வறுமையில் சாவதை ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயத்தில் அக்கறை செலுத்த பிரான்ஸ் முன்வந்துள்ளது.
3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகள் தற்போது இந்நாடுகளுக்கு தேவைப்படுவதால் இது குறித்து பேச ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளின் அவசர கூட்டம் வரும் 25ம் திகதி ரோம் நகரில் நடைபெற உள்ளது.
பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது அரசின் கவனக்குறைவே: முஷாரப்.ஒசாமா பின்லேடன் கொலையில் சதிச்செயல் இல்லை, இது பாகிஸ்தான் தற்போதைய அரசின் கவனக்குறைவால் தான் நடந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் கூறியுள்ளார்.
அதிபர் பதவியிலிருந்து விலகிய முஷாரப் 2008-ல் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முஷாரப்(67) வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தானில் கடந்த மே மாதம் பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.
இதில் சதிச்செயல் இருந்ததாக கருதவில்லை. மாறாக பாகிஸ்தானின் தற்போதைய அரசின் கவனக்குறைவே காரணம். இதன் பிறகும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உறவினை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனது ஆட்சி காலத்தில்(1999-2008) அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தது. அப்போதைய அதிபர் புஷ்சுடன் நான் நல்லுறவினை ஏற்படுத்தியிருந்தேன். தற்போது பாகி்ஸ்தானில் பலவீனமான அரசு உள்ளது.
விரைவில் பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். வரும் 2013ம் ஆண்டு அங்கு நடைபெறவுளள தேர்தலில் எனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி போட்டியிடும்.
மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அமெரிக்காவுடனான உறவினை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் அணு ஆயுதம் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது நிலைமையை பரிசீலிக்க வேண்டும்.
பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்.லிபியா தலைவர் கடாபியை விரட்டுவதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடம் இருந்து கூடுதலாக ஆயுதங்கள் வாங்க கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
லிபியா தலைவர் கடாபியை எதிர்த்து அந்நாட்டில் கிளர்ச்சி நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு நேட்டோ படை ஆயுதம் மற்றும் விமான வழி ஆதரவு அளித்து வருகிறது.
அடுத்த மாதம் வரும் ரம்ஜானுக்கு முன்பாக கடாபியை விரட்டி விட்டு நாட்டை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் விரும்புகின்றனர். இதற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
நேட்டோ படையில் உள்ள பிரான்ஸ் நாடு லிபியா நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு முதல் முதலாக அங்கீகாரம் அளித்ததும் பிரான்ஸ் தான்.
ஏற்கனவே திரிபோலி நகரின் தென்மேற்கே உள்ள நபூசா மலைப்பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு பிரான்ஸ் ஆயுதம் வழங்கி உள்ளது. எனவே கூடுதல் ஆயுங்களை தற்போதும் பிரான்ஸ் வழங்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.
இதற்காக நேற்று முன்தினம் பாரிஸ் சென்ற கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் அகமது ஹசீம், ராம்தான் ஜர்முக், சுலைமான் போர்ட்டியா மற்றும் பிராஹிம் பிடல்மால் ஆகியோர் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிடம் கூடுதல் ஆயுதங்கள் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதேபோல் கூடுதல் ஆயுதங்களைப் பெற நேற்று ஸ்பெயின் சென்ற கிளர்ச்சியாளர்களின் தலைவர் மஹ்மூத் ஜிப்ரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிரினிடாட் ஜிமேனசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிளர்ச்சியாளர்களின் தலைவர்களில் ஒருவரான சுலைமான் போர்ட்டியா இதுகுறித்து கூறுகையில்,"எங்களுக்கு சிறிய அளவில் செய்யப்படும் உதவி திரிபோலியை மிக விரைவில் பிடிக்க உதவும். எங்கள் பணிகளை எப்படி எளிதாக செய்யலாம் என்பது குறித்து தற்போது விவாதித்து வருகிறோம்" என்றார்.
ஆப்கன் பொலிசாருக்கு சிறப்பு சண்டை பயிற்சி: ஜப்பான் குழுவினர் விரைவு.ஆப்கானிஸ்தான் பொலிசாருக்கு ஜூடோ பயிற்சி வழங்குவதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் துருக்கியில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டது முதல் ஆப்கனில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை ஆப்கன் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆப்கன் பொலிசாருக்கு ஜூடோ தற்காப்புக் கலை பற்றிய பயிற்சி வழங்க முடிவு செய்து ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் உதவி கேட்கப்பட்டது.
ஆப்கனில் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் பயிற்சி முகாம் நடத்தலாம் என ஜப்பான் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி துருக்கியில் பயிற்சி முகாம் நடத்த அந்நாட்டு அரசிடம் உதவி கேட்கப்பட்டது. துருக்கி அரசு சம்மதம் வழங்கியதை தொடர்ந்து அந்நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள சிவாஸ் நகரில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக ஜப்பான் பொலிஸ் ஏஜன்சியை சேர்ந்த ஆறு அதிகாரிகள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எய்ஜி எய்புகு என்பவர் ஜூடோ கலையின் நுணுக்கங்கள் பற்றி விரிவான விளக்கவுரை வழங்குவார்.
துருக்கிப் பொலிசாருக்கு சொந்தமான இடத்தில் வரும் 25ம் திகதியில் துவங்கி அக்டோபர் 7 வரையிலும் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் ஆப்கன் பொலிசார் 500 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து டோக்கியோ நகர பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜூடோவின் ஒழுக்கம், கட்டுப்பாட்டில் துவங்கி ஜூடோ பயிற்சி சீருடை அணிவது உட்பட பல்வேறு செய்முறைப் பயிற்சிகள் ஆப்கன் பொலிசாருக்கு வழங்கப்படும்.
தற்காப்புக் கலை பற்றி தெரிந்துகொள்வது ஆப்கன் பொலிசாருக்கு புதிய அனுபவமாக இருக்கும். பொலிஸ் பணிக்குரிய ஒழுக்கம் மற்றும் தொழில் முறைகளை உணர தற்காப்புக் கலையின் ஆற்றல் அவர்களுக்கு உதவும்.
இங்கிலாந்தில் மூன்று நோயாளிகளை கொன்ற மருத்துவ தாதியிடம் விசாரணை.இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக்போர்ட் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்ச் கிப்(84), லான் செஸ்டர்(71), டிரேசி ஆடன்(44) ஆகியோர் திடீரென மரணம் அடைந்தனர்.
இவர்கள் நோய் தாக்கம் காரணமாக உயிர் இழக்கவில்லை. அதிக வீரியம் கொண்ட மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
எனவே இதுபற்றி பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ரெபேக்கா லிங்ஸ்டன் என்ற தாதி 3 பேரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் பாட்டிலில் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் ஏற்றி 3 பேரையும் அவர் கொலை செய்துள்ளார்.
இதேபோல் மேலும் 12 பேருக்கு அவர் குளுக்கோசில் இன்சுலின் மருந்தை செலுத்தி இருந்தார். ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர்.
ரெபேக்கா லிங்ஸ்டனை பொலிசார் கைது செய்தனர். மூன்று பேரையும் கொன்றதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடவில்லை. அவர் மனவிரக்தியால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சட்டவிரோதமாக கென்யாவிற்கு கொண்டு வரப்பட்ட யானை தந்தங்கள் தீயிட்டு அழிப்பு.சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.
அதிபர் மிவாய்கிபாகி முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனை அதிபரே முன்னின்று நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில்,"இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன" என்றார்.
இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய அட்லாண்டிஸ்.அமெரிக்காவின் கடைசி விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் இன்று அதிகாலை பூமிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
புளோரிடா கென்னடி விண்வெளி மையத்துக்கு இன்று காலையில் அட்லாண்டிஸின் சக்கரங்கள் தரையிறங்கின.
30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்துக்கு சேவை செய்த அட்லாண்டிஸ் வரலாற்றில் தனக்கான இடத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்த விண்கலத்தில் பணியாற்றிய கமாண்டர் கிறிஸ் பெர்குசன் கூறியதாவது: 1981ம் ஆண்டில் விண்வெளிப் பயணத்தை துவக்கிய அட்லாண்டிஸ் விண்கலம் என்னைப் போன்ற பல திறமையான வல்லுனர்களுக்கு உற்ற தோழனாக இருந்தது.
தற்போது அது பயணத்தை முடித்திருப்பது தங்களுக்கு வேதனை அளித்தாலும் வெற்றிப் பயணத்தில் இதன் பங்கு அளப்பரியது.
அட்லாண்டிஸ் விண்வெளியில் 13 நாட்கள் இருந்தது. சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான 4 மெட்ரிக் டன் அளவுள்ள உதிரி பாகங்கள் மற்றும் சரக்குகளை அட்லாண்டிஸ் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களை கவரும் வகையில் கேலிச்சித்திர படங்கள் தயாரித்து வெளியிட அல்கொய்தா திட்டம்.அல்கொய்தா அமைப்பில் சேரும் வகையில் சிறுவர்களை ஈர்க்க கேலிச்சித்திர படம் ஒன்றை தயாரிக்க அல்கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த குறும்படம் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சுவரொட்டிகளில் சிறுவர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
புனித போர் கதைகள், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் விதத்தில் இந்த படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மல்ட்டி மீடியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் அமைப்பில் சிறுவர்களை சேர்க்கும் முயற்சியில் அல்கொய்தா அமைப்பு இறங்கியுள்ளது.
அபு அல்-லைத் அல்-ஏமன் என்ற அமைப்பு அல்-ஷாமவுக் ஜிகாதிஸ்ட் என்ற அரபு இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
கிறீஸ் கடன் பிரச்சனை: பிரான்ஸ் - ஜேர்மனி சமரசம்.ஐரோப்பிய யூரோ கடன் பிரச்சனை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு பொதுநிலை மேற்கொள்ள பிரான்சும், ஜேர்மனியும் தற்போது முடிவு செய்து உள்ளன.
ஜேர்மனியுடன் நடைபெற்ற 7 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் யூரோ பிரச்சனையில் தீர்வு காண முடிவு எட்டப்பட்டு உள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிறீஸ் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண ஐரோப்பிய மண்டலத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த இரு நாடுகள் சந்திப்பு நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய மண்டல பொருளாதாரத்தில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் ஆலோசனை நடைபெறுகிறது.
ஜேர்மனி, பிரான்ஸ் ஆலோசனையின் போது ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் விவாதத்தில் பங்கேற்றார் என அதிபர் ஏங்கலா மார்க்கெல் தெரிவித்தார். கிறீஸ் கடன் பிரச்சனையை தீர்க்க கடன் அளிக்கும் நாடுகள் இழப்பை ஏற்க வேண்டும் என ஜேர்மனி முன்னர் தெரிவித்து இருந்தது.
இதற்கு பிரான்சும் ஐரோப்பிய மத்திய வங்கியும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலை நீடித்தால் ஐரோப்பா முழுவதும் நெருக்கடி ஏற்படும் என அவை தெரிவித்தன. கிறீசுக்கு கூடுதல் கடன் அளிப்பது தொடர்பாகவும் தனியார் கடன் அளிப்போர் பங்கு குறித்தும் வங்கிகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவை தாக்க அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாட்டு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த தாக்குதல் எச்சரிக்கையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை விடுத்து உள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் சார்பில் அமெரிக்க பயன்பாட்டு அமைப்புகளில் சைபர் மற்றும் மனித தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின் 10வது நினைவு தினம் இந்த ஆண்டு வருகிறது.
அந்த நேரத்தில் அமெரிக்காவின் ரசாயனம் அல்லது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த மே மாதம் 2ம் திகதி அல்கொய்தாதலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அமெரிக்க கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போது அமெரிக்காவின் பல இடங்களை தாக்குதவதற்காக மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் கிடைத்து உள்ளன.
கடந்த ஆண்டு அல்கொய்தா இயக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நபரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் பென்சில்வேனியாவில் 5 அணு மின் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். எனவே அல்கொய்தா ஆட்கள் அமெரிக்க நிறுவனத்திலும் ஊடுருவி இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உஸ்பெஸ்கிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 13 பேர் பலி.ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உஸ்பெஸ்கிஸ்தான். இது ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது.
உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள பெர்கானா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 86 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெர்கானா நகரில் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் இதுபற்றி கூறுகையில்,"நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் குழுவை அனுப்பி உள்ளோம். பக்கத்து நாடான கிர்கிஸ்தான் உதவியையும் நாடியுள்ளோம். இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உள்ளது. எனவே நிலைமை மோசமாக இருப்பதாகவே கருதுகிறோம்" என்றார்.
இதேபோல பக்கத்து நாடான கிர்கிஸ்தான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகி இருந்தது. இதன் மைய பகுதி பூமிக்கு அடியில் 18 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கம் 3 நிமிடம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2008ம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் பிடிபட்ட தாய்லாந்து இளவரசர் விமானத்தை நீதிமன்றம் விடுவித்தது.தாய்லாந்து இளவரசருக்கு சொந்தமான விமானத்தை விடுவிக்க ஜேர்மனி நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
2 கோடி யூரோ வங்கி உத்தரவாதம் அளித்தால் விமானத்தை விடுவிக்கலாம் என லேன்ட் ஷட் கோர்ட் கூறியது. தாய்லாந்து அரசிற்கும், ஜேர்மனி கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே உள்ள வர்த்தக பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து இளவரசர் விமானம் கடந்த வாரம் மூனிச் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட விமானம் தாய்லாந்து இளவரசருக்கு சொந்தமானது ஆகும். இந்த விமானம் தாய்லாந்து அரசுக்கு உரியது அல்ல. தனி நபரான இளவரசருக்கு சொந்தமானது. எனவே அந்த விமானத்தை பறிமுதல் செய்ய வேண்டாம் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்த விமான பறிமுதல் நடவடிக்கையால் ஜேர்மனி மற்றும் தாய்லாந்து இடையே உறவில் விரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் காசித் பெர்லின் வந்தார். அப்போது அவர் ஜேர்மனி வெளியுறவு துறை மூத்த அமைச்சக அதிகாரி கார்னெலியாவை சந்தித்தார். அப்போது விமான பறிமுதல் நடவடிக்கை மிகப்பெரும் தவறு என குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு ஜேர்மனி வால்டர் பா கட்டுமான நிறுவனத்திற்கும் தாய்லாந்து அரசுக்கும் இடையே 26 கிலோ மீற்றர் சாலை கட்டுமான பணியில் பிரச்சனை ஏற்பட்டது. சுங்க வரி நிர்ணயம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக 3 கோடி யூரோ நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என ஜேர்மனி நிறுவனம் போராடி வருகிறது. அதன் அடிப்படையில் தாய்லாந்து இளவரசர் விமானத்தை பண மீட்பு நடவடிக்கை குழுவினர் மூனிச்சில் பறிமுதல் செய்தனர்.
லிபியாவில் கடாபி தங்க பிரான்ஸ் ஆலோசனை: போராட்டக்குழு தலைவர்களுடன் சர்கோசி பேச்சு.லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கர்னல் கடாபி பதவி விலக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5 மாதமாக போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கடாபி லிபியாவில் தங்க விரும்பினால் அவர் தனது பதவியை கைவிட வேண்டும். பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் லிபியாவில் இருக்க தடை இருக்காது என பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.
கடாபி நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் நிலையில் தான் நாட்டைவிட்டோ அல்லது பதவியைவிட்டோ வெளியேற முடியாது என கூறி வருகிறார். இந்த நிலையில் நேற்று பாரிசில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி லிபியா போராட்டக்குழுவின் 3 தலைவர்களுடன் பேசினார்.
இந்த சந்திப்பின் போது மிஸ்ரட்டா பகுதியை சேர்ந்த அந்த தலைவர்கள் பிரான்ஸ் தங்களுக்கு உரிய ஆயுத உதவி மற்றும் நிவாரண உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறுகையில்,"லிபியா போராட்டக்காரர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்வது என்பது குறித்து பார்ப்போம்" என்றார்.
லிபியாவின் கிழக்கு பகுதி போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிஸ்ரட்டா போராட்டகுழு தலைவர்கள் ரமதான் ஜமோ மற்றும் அகமது ஹாசிம் ஆகியோர் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியை சந்தித்தார்கள்.
கணவரை காப்பாற்றிய மனைவிக்கு பாராட்டு: சீன பத்திரிக்கைகள் புகழாரம்.பிரிட்டனில் தொலைபேசி தகவல்களை திருடி வெளியிட்ட குற்றத்திற்காக நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை இந்த மாதம் மூடப்பட்டது.
168 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த பத்திரிக்கையின் அதிபர் முர்டோக். இவருக்கு 80 வயது ஆகிறது.
தொலைபேசி தகவல் திருட்டு தொடர்பாக முர்டோக்கிடம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் உள்ளே புகுந்து முர்டோக் மீது முக ஷேவிங் கிரீமை தூக்கி எறிந்தார். அந்த நிலையில் முர்டோக்கை அவரது 42 வயது மனைவி காப்பாற்றினார்.
தாக்குதல் நடத்திய நபரையும் தடுத்து நிறுத்தினார். 80 வயது முர்டோக்கின் மூன்றாவது மனைவி வென்டி டேங்க். கடந்த 1998ம் ஆண்டு அவர் முர்டோக்கை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கிரேஸ் மற்றும் குளோ என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவர் முர்டோக்கை காப்பாற்றிய வென்டியை சீன மக்கள் இணையத்தளத்தில் வெகுவாக புகழ்கிறார்கள். "நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் சீன பெண்ணை திருமணம் செய்யுங்கள். அபாய நேரத்தில் இருக்கும் போது உங்களை பாதுகாக்க வீரமாக செயல்படுவாள்" என சீன இணையதளத்தில் வென்டியின் செயலை பாராட்டுகிறார்கள்.
வென்டி டேங்க் சீனாவின் நடுத்தர குடும்ப பெண். யேல் பல்கலைகழக வணிகப்பள்ளி மாணவி. இவர் முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் குழுமத்தில் வேலை பார்த்து உள்ளார்.
யோகா கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். யேல் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படித்த பின்னர் 1998ம் ஆண்டு முர்டோக்கை சந்தித்தார். சீனாவுக்கு முர்டோக் சென்ற போது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். முர்டோக் 31 வயது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த போது வென்டியை திருமணம் செய்தார்.
எல்லைப் பகுதியில் துப்பாக்கிகளுடன் அமெரிக்கர்கள்: பாதுகாவலர்கள் எச்சரிக்கை.கனடா மற்றம் அமெரிக்காவை இணைக்கும் எல்லை பகுதியில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த எல்லை பகுதியில் தாராள போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்கர்கள் எடுத்து வரும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் குறித்து பாதுகாவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவிற்கு வரும் அமெரிக்கர்கள் தாங்கள் எடுத்து வரும் துப்பாக்கி விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் உரிய அனுமதியையும் பெற்று இருக்க வேண்டும என கனடா காவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் குண்டுகள் நிரப்பப்பட்ட 10 துப்பாக்கிகளை காவலர்கள் கைப்பற்றினர். கனடா எல்லை சேவை முகமை தற்போது வெளியிட்டு உள்ள வரையறை அறிக்கையில் கொண்டு வரும் ஆயுதங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத ஆயுதங்களை எல்லை பாதுகாவலர்கள் பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அபராதம்.இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லண்டன் சென்றார். அப்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாகனம் செல்வதற்கு விதிக்கப்படும் கன்ஜெக்சன் கட்டணத்தை செலுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்த கட்டணத்தை கட்டவில்லை. இதன் காரணமாக ஒபாமாவுக்கு 120 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளிவரும் தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் ராணுவம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்: சர்வதேச நீதிமன்றம்.தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.
தாய்லாந்து, கம்போடியா எல்லையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள் நுழைந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவரை கம்போடியா கைது செய்தது.
இதையடுத்து தாய்லாந்து 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி கோவிலைச் சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடந்ததில் 28 பேர் பலியானது தெற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
இப்பிரச்னை தொடர்பாக ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டை கம்போடியா நாடியது. விசாரணை மேற்கொண்ட சர்வதேச கோர்ட்,"இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்" என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா தலைநகர் பாங்காக்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த உத்தரவு குறித்து புதிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவு எங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்காது.
ஆனால் இந்த உத்தரவு குறித்து புதிய அரசுக்கு பரிமாற்றம் செய்யவும் எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை. எல்லையில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை கம்போடியா வாபஸ் பெற வேண்டும். எங்களது வீரர்கள் குறைந்தளவில் மட்டுமே முகாமிட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் புதிய பிரதமராக பியூ தாய் கட்சி பதவியேற்கவில்லை. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தம் என்றும் 1962ம் ஆண்டில் சர்வதேச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் மூன்று கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்த முடிவு.எகிப்து நாட்டில் மூன்று கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பார்வையாள்களுக்கும் அனுமதியளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு(83) எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
17 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு பிறகு கடந்த பெப்பிரவரி மாதம் அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது இடைக்கால அரசும், ராணுவமும் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் செப்டம்பர் மாதம் 18ம் திகதி நடக்கலாம் என தெரிகிறது. இப்பாராளுமன்ற தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மமாதுக் ஷாஹீன் கூறுகையில்,"நாடு முழுவதும் 120 மாவட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலை ராணுவமே முன்னின்று நடத்தினாலும், நீதித்துறை தான் கண்காணிக்கிறது. இதற்காக சிறப்பு நீதிபதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்" என்றார்.
மேலும் எகிப்தில் முக்கிய அரசியல் கட்சிக்கு நிகரான அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்பும் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதே போன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சியும் போட்டியிடுகிறது.
ஈரானில் அமெரிக்க விமானம் அழிப்பு.ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக அந்நாட்டிற்கான இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசின் இணையதளத்தில் ஈரான் அரசியல்வாதியான அலி அகாசாடே கூறியதாக செய்தி வெளியானது.
அதில்,"ஈரானின் மத்தியில் யுரேனிய வளம் நிறைந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்: மன்னிப்பு கோரிய பிரதமர்.தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனது செய்தித் தொடர்பாளரை நியமித்தது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்தே நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆன்டி கோல்சனை தமது செய்தித் தொடர்பாளராக நியமித்ததற்காக கமரூன் வருத்தம் தெரிவித்தார். இந்தப் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமானது.
பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக பிரபலமானவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக இந்தப் பத்திரிகை மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்தப் பத்திரிகைக்காக தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆன்டி கோல்சனை தமது செய்தித் தொடர்பாளராக நியமித்த பிரதமர் டேவிட் கமரூன் மீதும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆப்பிரிக்கப் பயணத்தைப் பாதியில் ரத்து செய்துவிட்டு கமரூன் நாடு திரும்பினார்.
தனது விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவர் வாசித்தார். அப்போது அவர் கூறுகையில்,"கோல்சனை பணியில் அமர்த்தியது நான்தான். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அந்தத் தவறால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அவருக்கு பணி வழங்கியிருக்கக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து எம்.பி.க்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். "இப்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கோல்சனை தெருவுக்கே கொண்டு வந்தவர் பிரதமர். அதற்காக பாதி வருத்தத்தை மட்டும் தெரிவித்துவிட்டு முழுமையான மன்னிப்புக் கோராமல் இருப்பது ஏன்? என்று லேபர் கட்சியைச் சேர்ந்த எட் மிலிபாண்ட் கேள்வி எழுப்பினார்.
"மனிதர்களை கணிப்பதில் ஏற்பட்ட மாபெரும் தவறு இது" என்றும் அவர் கூறினார்.