Friday, July 29, 2011

தரைக்கு கீழே உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி செயல்படும் வாகனம் தயாரிப்பு.


தரைக்கு கீழே பதிக்கப்பட்ட மின்கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டுதல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோலில் "சியோல் கிராண்ட் பார்க்" என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. ராட்சத ராட்டினம், ஹொட்டல், நீச்சல் குளம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
பூங்காவை சுற்றிப் பார்க்க டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது. டீசலுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து கொரியா அறிவியல், தொழில்நுட்ப கழகம் ஆய்வு நடத்தியது. மின்காந்த தூண்டுதல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கான வாகனங்கள் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதற்கு ஓன்லைன் எலக்ட்ரிக் வீக்கிள்(ஓஎல்இவி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டிராம் வண்டிக்கு தண்டவாளம் தேவையில்லை. 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட இது கார் போலவே ஓடும். பூங்கா முழுவதும் டிராம் செல்லும் தடத்தில் அடையாளத்துக்காக நீல நிற கோடு போடப்பட்டிருக்கும்.
இந்த கோட்டுக்கு நேராக தரைக்கு கீழே சுமார் ஒரு அடி ஆழத்தில் மின்சார கம்பிகள் செல்லும். அந்த வழியாக செல்லும் போது மின்காந்த தூண்டுதல் விசையை பயன்படுத்தி மின்சாரத்தை வாகனம் நேரடியாக உறிஞ்சிக் கொள்ளும். இதன்மூலம் இன்ஜின் இயக்கப்படும்.
இதுபற்றி பொறியிலளார்கள் கூறுகையில்,"பாதாள மின்கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்சாரம் எப்போதும் தடைபடாது. மின்காந்த தூண்டுதல் முறையில் மின்சாரம் உறிஞ்சப்படுவதால் மின் இழப்பு அவ்வளவாக இருக்காது. சொற்ப அளவே புகை வெளியாகும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது" என்றனர்.
பூங்காவில் இந்த வாகனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் டாப் 50 கண்டுபிடிப்புகளில் ஓஎல்இவி ஒன்று என்று டைம்ஸ் இதழ் கவுரவப்படுத்தி விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF