Sunday, July 24, 2011

இன்றைய செய்திகள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு!- த ஹிந்து.

தமிழர் பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வகை செய்யும் 13-வது பிளஸ் திருத்தம் குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ஷே, 'த ஹிந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியல் தீர்வு எப்போது?
அரசியலமைப்பு சட்டத்தின்படி, அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு எனது கட்சியையும், இதர கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளேன். அவ்வாறு அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நான் ஏற்றுக் கொள்வேன். இறுதியில், நாடாளுமன்றத்துக்கு அந்தத் தீர்வு கொண்டு செல்லப்படும்.
மும்பையே உதாரணம்!
பாதுகாப்பு விவகாரங்கள் அனைத்தும் அரசிடம் தான் இருக்க வேண்டும். இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள்... மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் மெதுவாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசிடம் சென்று உத்தரவைப் பெற வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தான் பாதுகாப்பு விவகாரங்களை அரசிடமே (இலங்கை அரசு) வைத்துள்ளோம்.
இராணுவமயமாகும் வடக்குப் பகுதிகள்!
வடக்குப் பகுதிகள் இராணுவமயமாகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஈராக்கில் என்ன நடக்கிறது? இவ்வளவு நாட்கள் ஆகியும் அங்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இங்கு, போர் முடிந்தவுடன் 'கற்ற பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான ஆணையம்' அமைப்பை அமைத்தேன்.
தெற்குப் பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அந்த வகையில் தான் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இது, இராணுவ ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உணர வேண்டும்.
சனல் 4 வீடியோ
சனல் 4 வெளியிட்டது ஒரு திரைப்படம். நிர்வாண கோலத்தில் உள்ளவர்களைக் கட்டி வைத்து பின்னால் இருந்து சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதில் கட்டி வைக்கப்பட்டிருப்பது தமிழர்கள் அல்ல. அவ்வாறு கட்டி வைக்கப்பட்டு சுடப்படுவது இலங்கை இராணுவத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்பவர்கள் தான் விடுதலைப்புலிகள். சுடும் நபர்கள் அணிந்திருக்கும் பெல்ட், புலிகளுடையது. அதுபோல் இராணுவத்தினர் அணிந்திருக்க மாட்டார்கள். எனவே, அது திரைப்படம் தானே தவிர உண்மையான ஆவணப் படம் அல்ல. இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறோம்.
அந்தப் படத்தின் அசல் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்வதற்கு கேட்டிருக்கிறோம். இராணுவத்துக்கு எதிராக எந்தவித ஆதாரங்கள் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அளிக்கலாம். நாங்கள் அவற்றின் மீது முழுமையாக விசாரிக்க காத்திருக்கிறோம்.
ஜெயலலிதாவுக்கு அழைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை வருமாறு, அவரைச் சந்தித்த இலங்கைத் தூதர் மூலம் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்கள் அதற்கு தயாராக இல்லாத பட்சத்தில் அல்லது நேரமின்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பலாம்.
இந்திய மத்திய அரசுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி, அவரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைக்கலாம். தமிழ்நாடு மட்டுமின்றி, இதர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் இங்கு வரலாம். அவர்கள் வடக்குப் பகுதியில் உள்ள நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த பேட்டியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட இரும்புத் தடுப்பு அகற்றப்பட்டது.

ஜனாதிபதியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காலி புதிய பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட் டிகமவினால் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது.
நேற்று முன்தினம் காலை இந்த இடத்துக்குச் சென்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்து ஹெட்டிகம, இரும்புத் தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரும்புத் தடுப்பை அகற்றுமாறு வலியுறுத்தி, காலி பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் கடந்த புதன் கிழமை தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இரும்பு தடுப்பால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்கின்றர் என்று தனியார் பஸ் ஊழி யர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த இரும்புத் தடுப்பு அகற்றப்பட்டதை அடுத்து, தனியார் பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான நடவடிக்கை! அமெரிக்காவின் ஜனநாயக விருத்திக்கு எதிரான செயற்பாடாகும் - அரசாங்கம்.

இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில்; அமெரிக்காவின் நடவடிக்கைகள், அமெரிக்காவின் ஜனநாயக விருத்தி செயற்பாடுகளுக்கு முரணான செயலாகும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் இரண்டு முகங்களை வெளிப்படுத்துகிறது என்றும் இலங்கை அரசாங்கம் குறிபபிட்டுள்ளது.
 
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமையால் நிதியுதவிகளை ரத்து செய்யும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொண்டது.
இது தொடர்பிலேயே இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தடையானது, அமெரிக்கா போதிக்கும் ஜனநாயக வரம்புகளுக்கு எதிரானதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை உள்ளூர் மட்டத்தில் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை விட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை வடக்கில் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் இந்தியாவில் வைத்து விடுத்த வேண்டுகோள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர், ஏற்கனவே அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
30 வருட ஆயுத கலாசாரம் இருந்த இடத்தில் சில கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சங்கடமான நிலையில் கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை.

தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையானது சங்கடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 13 ல் இந்த பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1044 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஸ்கோஷியா பிரின்ஸ் என்ற இந்தக் கப்பலானது வாரத்திற்கு இரு தடவைகள் மேற்கொள்ளும் பயணத்தில் 150 பயணிகளையே ஏற்றிச் செல்வதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இச் சேவையை மும்பாயைத் தளமாகக் கொண்ட பிளேமிங்கோ லைனஸ் இயக்கி வருகிறது. பயணச்சீட்டுகள் விநியோகம், சந்தைப்படுத்தல் பொதிகள் என்பவற்றை இது ஏற்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் இச் சேவையானது தனது கொள்ளளவில் 15 வீதத்துடன் கப்பல் செல்லுமானால் ஏற்புடையதாக இருக்க முடியாதென தூத்துக்குடி துறைமுக ட்ரஸ்ட்டைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இந்தச் சேவை தொடர்பாக முன்னணி பயணிகள் பயண முகவரமைப்புகள் பல அறியாமல் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன்,. ஆட்கள் பல்வேறு பக்கேஜ்கள் இருப்பது குறித்து தெரியாமல் உள்ளனர்.
இத்தகைய சேவைகளுக்கு பொருத்தமான சந்தைப்படுத்தல் முக்கியமானதாகும். இந்த விடயத்தில் இயக்குபவர் பொதுவான விற்பனை முகவர்களை சென்றடைய முயற்சிக்கவில்லை. இப்போதும் தனியான பதிவு முறைமையே காணப்படுகிறது என்று கப்பல் துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஆனால், சேவையை இயக்குபவர் நம்பிக்கையுடன் இருக்கின்றார். 60 வீதமான பயணிகள் வர்த்தகர்கள் ஆகும். பிரதானமாக ஆடைகள், ஏனைய பொருட்களை கொண்டு செல்கின்றனர். நாங்கள் மெதுவாக சந்தையை எட்டிப்பிடித்து வருகின்றோம். சேவையின் வர்த்தகத்துறை சாதகத்தன்மை குறித்து இப்போது கருத்துத் தெரிவிக்க முடியாது என்று பேச்சாளர் கூறியுள்ளார்.
சீனாவில் இளம் வயதில் மரணமடைவது அதிகரிப்பு.
சீனாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 72 கோடீஸ்வரர்கள் இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் சராசரி சீனரை விட இந்த கோடீஸ்வரர்கள் அற்ப ஆயுளில் இறந்து விடுகின்றனர். கடந்த 2003 ம் ஆண்டு முதலான எட்டு ஆண்டுகளில் 72 கோடீஸ்வரர்கள் பல்வேறு காரணங்களால் அற்ப ஆயுளில் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். ஆனால் சீன கோடீஸ்வரர்களின் ஆயுள் அவர்களை விட மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு முதல் கடந்த எட்டு ஆண்டுகளில் 72 சீன கோடீஸ்வரர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் போட்டியாளர்கள் உள்ளிட்டோரால் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்களது தொழில் நலிவடைந்து ஏற்பட்ட இழப்பின் காரணமாகவே இவர்கள் இப்படிப்பட்ட முடிவை தேடிக்கொண்டுள்ளனர்.
ஏழு பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 14 பேர் தண்டனைகள் மூலம் மரணமடைந்துள்ளனர். தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயன்றதன் காரணமாக இவர்கள் தண்டனை பெற்று மரணத்தை தழுவியுள்ளனர்.
17 பேர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர். உடல்நலக்குறைவால் சராசரியாக தங்களது 48வது வயதில் இறந்துள்ளனர். இதில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக அதிகம் பேர் இறந்துள்ளனர்.
நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு. 
நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே நேற்று முன்தினம் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் பலியாயினர்.
பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் எண்ணெய் அமைச்சக அலுவலகங்களும் குண்டு வெடிப்பில் பலத்த சேதம் அடைந்தன. அப்பகுதியில் உள்ள பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றின் கட்டடமும் சேதமானது.
இச்சம்பவத்தின் போது பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் அலுவலகத்தில் இல்லாததால் உயிர் பிழைத்தார். கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளால் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என யூகங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் நோர்வே நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய ஏரியான டைரிப்ஜோர்டனின் நடுவில் அமைந்துள்ள உடோயா தீவில் ஆளும் தொழிலாளர் கட்சி இளைஞர் அணியினரின் கோடைப் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பொலிஸ் உடையில் வந்த நபர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை வட்டமாக நிற்கச் சொன்னார். பின் அவர்களை குருவியை சுடுவது போலச் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்.
இதைப் பார்த்து மிரண்டு போன மற்றவர்கள் அருகில் இருந்த ஏரித் தண்ணீருக்குள் குதிக்க ஆரம்பித்தனர். சிலர் அங்கிருந்த புதர்கள் மற்றும் மரங்களுக்குப் பின்னால் ஓடி ஒளிந்தனர்.
பொலிஸ் உடையில் வந்த அந்த நபர் தண்ணீருக்குள் ஒளிய முயன்றவர்களை நோக்கியும் வெறித் தனமாகச் சுட்டார். இச்சம்பவத்தில் பலர் பலியாகினர்.
குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 91 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் தான் தீவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்தின் பேரில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(32) என்ற நோர்வே இளைஞரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓஸ்லோ நகரில் உள்ள அவரது வீட்டையும் பொலிசார் நேற்று சோதனையிட்டனர். ப்ரீவிக்கிடம் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் ஒரு வெடிக்காத குண்டும் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ப்ரீவிக் குறித்து நோர்வேயின் என்.ஆர்.கே செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ப்ரீவிக் வலதுசாரி பயங்கரவாதி. அவர் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவல்களைப் பார்க்கும் போது இது உறுதிப்படுகிறது.
அவர் சட்டப்படி வாங்கிய உரிமத்தின் பேரில் பல ஆயுதங்களை வைத்திருக்கிறார். சொந்தமாக அவருக்கு காய்கறிப் பண்ணை உள்ளது. குண்டுகள் தயாரிக்க அவருக்கு உரம் விற்பனை செய்யும் கம்பெனி உதவியிருக்கக் கூடும்.
ஆனால் நோர்வேயில் உள்ள பல சிறிய வலதுசாரி பயங்கரவாத இயக்கங்களுடன் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சில சிறிய குற்றங்கள் தவிர பெரிய குற்றங்கள் எதுவும், அவர் மீது இதுவரை பதிவாகவில்லை. எனினும் புதிய நாஜி அமைப்பைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு நோர்வே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நாஜி அமைப்பு 1990களில் ஸ்கேண்டிநேவியாவில் தொடர் கொள்ளைகள், கொலைகளில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. தற்போது இது செயலிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயங்கர அனல் காற்று: 22 பேர் பலி.
அமெரிக்காவில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் வாட்டும் வெயிலுக்கு இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.
டெக்சாஸ் முதல் மிச்சிகன் வரை 17 மாகாணங்களில் அனல் காற்று வீசுகிறது.
ஒகியோ மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
அயாவோ மாகாணத்தில் 51 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதால் மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
வாஷிங்டனிலும் மக்கள் புழுக்கத்தால் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெயில் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
தாக்குதலை எதிர்கொள்ள ஏவுகணைகளை தயாரிக்கும் ரஷ்யா.
ரஷ்யாவின் மத்திய பகுதி தலைநகர் மாஸ்கோவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன.
எனவே அவற்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெறாமல் தடுக்க ரஷ்யா தீவிரமாக உள்ளது. அதற்காக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தடுக்கும் எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
அதற்கு எஸ்-300, எஸ்-400 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் எஸ்-400 எதிர்ப்பு ஏவுகணை மிகவும் அதிநவீனமானது. இது எதிரிகளின் ஏவுகணைகளை தாக்க விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. எஸ்-300 எதிர்ப்பு ஏவுகணையும் சிறப்பு வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் மூன்றில் 2 பங்கு பகுதிகளை பாதுகாக்க முடியும். இவை வருகிற டிசம்பர் 1ந் திகதி அன்று பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் லெப்டினென்ட் ஜெனரல் வலேரி இவானோவ் தெரிவித்தார்.
இது குறித்து ரஷ்யாவின் பன்னாட்டு சிறப்பு பிரதிநிதி டிமித்ரி ரோகோசின் வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் கேட்டார்.
ஜப்பானில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர்.
மேலும் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து கதிர்வீச்சு வெளியேறி பரவியது. எனவே கதிர்வீச்சை தடுக்கும் நடவடிக்கையில் ஜப்பான் அரசு தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் அங்கு தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்ட மியாகி மாகாணத்தின் பசிபிக் கடற்கரை பகுதியில் ஜப்பான் நேரப்படி இன்று மதியம் 1.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு வீடு திரும்பினர். இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் இது ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது தொகோகிஷின்கன்சென் புல்லட் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதமதிப்பு மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நோர்வே பிரதமரை கொல்ல சதி: பொலிஸ் தீவிர விசாரணை.
நோர்வே நாட்டில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 87 பேர் பலியாயினர். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள 20 மாடி அரசு கட்டிடத்தில் நேற்று குண்டு வெடித்தது. இந்த கட்டிடத்தில் தான் பிரதமர் ஸ்டோல்டன்பர்க் அலுவலகம் உள்ளது. சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் கட்டிடம் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி 7 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த போது பிரதமர் ஸ்டோல்டன்பர்க் அலுவலகத்தில் இல்லாததால்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சற்று நேரத்தில் அருகே உள்ள உட்டோயா தீவில் ஆளும் தொழிலாளர் கட்சி கூட்டத்தில் பொலிஸ் வேடமணிந்த மர்ம மனிதன் புகுந்து சரிமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துப்பாக்கி சூட்டில் 80 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த கூட்டத்திலும் பிரமதர் ஸ்டோல்டன்பர்க் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிரதமரை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவனை பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர். இரு தாக்குதல்களிலும் அவன் ஒருவனே ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். இச்சம்பவத்தில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை என்றும், மனநிலை பாதித்தவரின் செயல் போல் உள்ளது என்றும் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.
நோபல் பரிசு வழங்கும் விழா ஒஸ்லோ நகரில் தான் நடத்தப்படும். இந்த நகரில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் ஸ்டோல்டன்பர்க் கூறுகையில்,"இந்த தாக்குதல்களால் நோர்வேயின் அமைதியை குலைக்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்" என்றார்.
லிபிய தலைநகரில் நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல்.
லிபியாவில் அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தனக்கு எதிராக போராடிய மக்கள் மீது கடாபி ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தினார். மக்கள் மீது குண்டு வீசும், கடாபி ஆதரவு ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க நேட்டோ படை களமிறக்கப்பட்டது.
நேட்டோ படை ராணுவத்தினர் மற்றும் அவர்களது நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகள் பலர் பலியாவதாக லிபியா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நேட்டோ படை கடாபி ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் திரிபோலியில் போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது.
இதில் சர்வதேச மீடியா தங்கியிருந்த ஹொட்டலுக்கு அருகே குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.
புது மனையில் குடியேறிய இளவரச தம்பதி.
தங்களது வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இளவரச தம்பதி லண்டனிலுள்ள கென்சிங்ரன் அரண்மனையிலுள்ள தங்களது முதலாவது அலுவலகக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்தக் கட்டடம் பிரான்சின் வேர்செய்ல்ஸ் கட்டடத்தைப் போல பிரம்மாண்டமான பரப்பைக் கொண்டதல்ல. இதில் ஒரு குளியலறையும் இரு படுக்கையறைகளும் மட்டுமே உள்ளன.
இவர்கள் முன்பு அன்றூசில் கல்லூரி நண்பர்களாயிருந்த காலப்பகுதியில் பயன்படுத்திய சிறிய வீட்டைவிடச் சற்றுப் பெரிதாகவே கென்சிங்ரன் அரண்மனை இருந்தது. இது 17ம் நூற்றாண்டிலிருந்து அரச குடும்பத்தினரின் பாவனையிலிருந்து வந்தது.
மேலும் இளவரசி டயானா 1981 இலிருந்து 1997 இல் அவர் இறக்கும் வரை பயன்படுத்திய மாளிகையாகவும் இதுவே இருந்தது. அவர் இறந்த போது இந்த அரண்மனையின் வாயிலில் தான் ஆயிரக்கணக்கானோர் பூக்களைக் குவியல் குவியலாகக் குவித்திருந்தனர்.

இளவரசர் சாள்சும் சிறுவர்களான இளவரசர் வில்லியமும் ஹரியும் 1997இல் கென்சிங்ரன் வாயிலில் டயானாவிற்காக வைக்கப்பட்ட பூங்கொத்துகளைப் பார்வையிடுகின்றனர். முன்பு கிளாரென்ஸ் ஹவுசில் தான் இளவரசர் ஹரியுடன் வில்லியமும் கேட்டும் தங்கியிருந்தனர். ஹரி லண்டனில் தங்குவதையே விரும்பினார்.
இதிலுள்ள பகிடியான விடயம் என்னவெனில் 600 அறைகளும் அதற்கென்றேயான தனித்த காவல்துறைப் பிரிவும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்தும் இவர்கள் வேறிடங்களில் தங்கியது தான்.
கடந்த வாரம் வில்லியமும் கேற்றும் புதிய கென்சிங்ரன் வீட்டிற்கு வர இரு நாட்கள் எடுத்தன. இப்போது அவர்கள் வடக்கு வேல்சிலுள்ள அங்கிள்சேயில்(Anglesey) உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இங்கு தான் இளவரசர் றோயல் வான்படையின் தேடுதல் மற்றும் மீட்பு உலங்குவானூர்தியின் விமானியாகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 41 பேர் பலி.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள மாகாணம் ஹெனான். இங்குள்ள பீஜிங் - ஜூஹாய் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று மாடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
35 இருக்கைகள் கொண்ட அந்த பேருந்தில் 47 பேர் பயணம் செய்தனர். வீகாய் நகரிலிருந்து சங்ஷா நகருக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
"விசாரணைக்கு பின்பே பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் தெரியும்" என பணிப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி சாங் கவுஹாய் கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க திட்டமிடும் பாகிஸ்தான்: அமெரிக்க தளபதி.
இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று அமெரிக்க முப்படைகளின் துணைத் தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஏ.வின்னிபீல்ட் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் இத்தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான் ராணுவமோ இந்தியாவை ஒரு எதிரி நாடாகவே சித்தரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது தங்களுக்கு அச்சுறுத்தல் என தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டு வருகிறது. இதன் மூலம் பிற நாடுகளின் அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ரஷிய படைகள் நுழைந்தபோது அதை எதிர்த்துப் போராடிய குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவிக்கிறது. ரஷிய படையை விரட்ட உதவியதற்கு நன்றிக் கடனாக இக்குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் புலி வாலைப் பிடித்துவிட்டது என்றும் எச்சரித்துள்ளது. ஒருகட்டத்தில் பயங்கரவாத குழுக்களே பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் என்ற விபரீதத்தை அவர்கள் உணரவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பயங்கரவாத குழுக்களை ஊக்குவிக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பாகிஸ்தான் எடுத்துவிட்டது. இது மிகவும் மோசமான அணுகுமுறை என்பதை அந்நாடு உணரவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். ஹக்கானி குழுமத்தின் செயல்பாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
பாகிஸ்தானுடனான நட்புறவைத் தொடர்வது என்பது மிகவும் சிக்கலானது. இதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். ஆனால் பல சமயங்களில் இந்த கருத்தை உலகம் முழுவதற்கும் வெளிப்படுத்துவதில் நம்மிடையே தயக்கம் நிலவுகிறது.
தேச நலன் கருதி பல சமயங்களில் மெளனமாக இருப்பதுதான் பல சமயங்களில் ஆபத்தாக அமைந்துவிடுகிறது என்றும் வின்னிபீல்ட் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பயங்கரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்குதல் அளிக்க வேண்டும். ஹக்கானி குழு பாகிஸ்தானுக்கே மிகுந்த அச்சுறுத்தலாக மாறிவருவதை உணர்த்த வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹக்கானி குழுவின் பயங்கரவாத நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி ஆப்கனிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை உணர வேண்டும். சமீபத்தில்தான் அரசியல் தலைவர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்த ஓரளவு வெற்றியை பாகிஸ்தானுக்கு உணர்த்தி வெளியில் உள்ள அச்சுறுத்தலைவிட உள்நாட்டு அச்சுறுத்தல் மிகவும் பயங்கரமானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அனைத்து பயங்கரவாத குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை அந்நாட்டுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அறிக்கையில் வின்னிபீல்ட் கூறியுள்ளார்.
பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட கிரீஸ்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் நாடுகளை பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாட்டில் வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கடன் கடந்த ஆண்டு 340 பில்லியன் யூரோவை எட்டியது. இதையடுத்து அந்த நாடு கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கிரீஸுக்கு கடன் கொடுத்த சில ஐரோப்பிய நாடுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் மட்டும் இல்லாமல் யூரோவிற்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் ஜேர்மனி யூரோவை விட்டு தனது பழைய நாணயமான டாய்ச் மார்க்கிற்கு திரும்ப தயாராக உள்ளதாக அறிவித்தது.
இதனால் கிரீசிற்கு கடன் பிரச்னையை சமாளிக்க கடந்த ஆண்டு மே மாதம் யூரோ பயன்படுத்தும் சில நாடுகளும், ஐ.எம்.எப் அவசர நிதி நிறுவனமும், 110 பில்லியன் யூரோ வழங்கின.
மேலும் இதே போன்ற நிதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 85 பில்லியன் யூரோ ஐயர்லாந்துக்கும், இந்த ஆண்டு மே மாதம் 78 பில்லியன் யூரோ போர்சுகலுக்கும் வழங்கப்பட்டன.
மேலும் சில நாடுகள் கடன் பிரச்னையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஐரோப்பியன் பைனான்ஷியல் ஸ்டெபிலிடி பெசிலிடி(யூரோப்பிய நிதி ஸ்திரத் தன்மை பாதுகாக்கும் வசதி) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் நிதி பிரச்னையில் உள்ள நாடுகளின் சார்பாக  ஐரோப்பிய யூனியன் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தால் 440 பில்லியன் யூரோ வரை யூரோப்பிய யூனியன் சார்பில் கடன் வாங்க முடியும்.
அதே சமயம் கிரீஸ் போன்ற நாடுகளில் அரசு செலவுகள் கடுமையாக குறைக்கப்பட்டன. இதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதை தவிர மேலும் சில நிதி அமைப்புகள் உருவாக்கப்பட்டு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும் கிரீசால் தனது கடனை திரும்பக் கொடுக்க முடியாத சூழ்நிலை மறுபடியும் எழுந்துள்ளது.
கிரீஸ் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய நாடுகளை காப்பாற்றும் வகையில் இரண்டாம் முறை அந்த நாடுகளுக்கு நிதி உதவி மற்றும் கடன் காலத்தை தளர்த்தும் நடவடிக்கைகளை எடுக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில் பெரும் கருத்து வேறுபாடு நிலவியது.
பிரதானமாக பிரான்ஸ், ஜேர்மனி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. ஜேர்மனியின் கருத்தில் கிரீஸ் போன்ற நாடுகளின் நிதியை சீர் செய்வது மிகவும் கடினம் என்பதால் கடன் கொடுத்தவர்களின் பணத்தில் ஒரு பகுதியை திரும்பக் கொடுக்காமல் இருப்பது தான் சரி என்று கூறி வந்தது.
இது ஐரோப்பாவில் மற்ற நாடுகளின் கடன் வாங்கும் தகுதியை குறைத்து விடும் என்பதால் பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பிரச்னை உச்சகட்டத்தை எட்ட நேற்று பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோசியும், ஜேர்மனி நாட்டு அதிபர் மெர்கலம் சந்தித்து வித்தியாசங்களை தீர்த்துக்கொண்டனர்.
இதையடுத்து இன்று ஐரோப்பிய யூனியனின் பிரஸல்ஸ் மாநாட்டில் யூரோப்பில் நலிவடைந்து வரும் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி கிரீஸ் மட்டும் அல்லாமல் அபாயத்தில் உள்ள ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் புதிய கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அதே நேரம் சில பழைய கடன்கள் அடைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் டொலருக்கு எதிரே யூரோவின் விலை உயர்ந்தது. திட்டத்தின் முழு வடிவம் நாளை தெரியவரும் என்றாலும் நிதி சந்தைகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளன.
கனடாவை நோக்கி நகர்ந்து வரும் பாரிய பனிக்கட்டி: கப்பல்களுக்கு எச்சரிக்கை.
கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும்.
இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது.
அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லாத போதிலும் செய்மதித் தொழிநுட்பத்தின் மூலம் இதனை அவதானித்துவருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியை மனைவிகளுக்கு வழங்கிய சீன விஞ்ஞானி கைது.
ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியை தன் இரு மனைவியருக்கு வாரி வழங்கிய சீன நிலவியல் விஞ்ஞானி கைது செய்யப்பட்டார்.
சீனாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிப்பவர் டுவான் ஷென்ஹாவோ(52). இவர் சீனப் பல்கலைக்கழகத்தில் நிலவியலுக்கான உயர்படிப்பை முடித்தார். கடந்த 1988ல் இருந்து அமெரிக்காவில் வசிக்கிறார்.
கடந்த 2002லிருந்து கலிபோர்னியா பல்கலையில் சீன அறிவியல் அகாடமியில்(சி.ஏ.எஸ்) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒரு மனைவியும் வழக்கறிஞருமான காவோ ஷியா தன் கணவர் ஆறு கோடியே 75 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாகப் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில்,"ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தை ஷென்ஹாவோ தன் வேறு இரு மனைவிகளுக்கு வாரி வழங்கியுள்ளார். அவர்களுக்கு ஆடம்பர பங்களாக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்" என ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
ஷியாவின் புகாரின்படி டுவான் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மனைவியால் சுட்டிக் காட்டப்பட்ட பெண்கள் தன் மாணவிகள் எனவும், மனைவிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சி.ஏ.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"டுவானின் மோசடி விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான நிறுவனங்களின் பெயரைக் கெடுத்து விட்டது" என்று குறிப்பிட்டுள்ளது.
எகிப்தின் புதிய அரசில் அமைச்சர்கள் பதவியேற்பு.
எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் பதவி விலகியதை அடுத்து புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி ஹூசைன் தந்தாவி தலைமையில் சுப்ரீம் கவுன்சில் குழு பதவியேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளியுறவுதுறை, சுகாதாரம், தொழில் மற்றும் வர்த்தகம், விமான போக்குவரத்து துறை, ராணுவம், உயர்கல்வி, தொலை தொடர்பு, போக்குவரத்து, விவசாயம், நீர்வளத்துறை போன்ற துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்துறை மற்றும் நீதித்துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து அப்பதவியிலேயே நீடிப்பர் என்று பிரதமர் எஸ்ஸாம் ஷரப் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது தான் முக்கிய பணி என்றும், மேலும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சட்டதிட்டங்கள் உருவாக்கபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு புதிய நெருக்கடி.
பிரிட்டிஷ் ஸ்கை செய்தி நிறுவனத்தை வாங்குவதில் ரூபர்ட் முர்டோக்குக்கு தோல்வி ஏற்பட்டதால் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் புதிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
பிரிட்டனில் மூடப்பட்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக நியூஸ் கார்ப்பரேஷன் தலைவர் ரூபர்ட் முர்டோக் பிரிட்டன் பாராளுமன்றத்தின் விசாரணைக்கு உள்ளானார்.
நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் முன்னாள் எடிட்டரை தனது செய்தித் தொடர்பாளராக நியமித்துக் கொண்டதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஸ்கை செய்தி நிறுவனத்தை ரூபர்ட் முர்டோக் வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் டேவிட் கமரூன் உதவி செய்தார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனர் ஆன்டிகுல்சனும் ஈடுபட்டிருந்தார்.
ரூபர்ட் முர்டோக் தற்போது பிரிட்டிஷ் ஸ்கை நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதால் அந்த நிறுவன பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விளக்கத்தை அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன.
ஸ்கை நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்விக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என கமரூன் தெரிவித்துள்ளார். இவருக்கு துணைப் பிரதமரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்கை நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளை ஒளிவு மறைவில்லாமல் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவதால் பிரதமருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF