தரம்குறைந்த எரிபொருளை சந்தைக்கு விட உயரதிகாரியே உத்தரவிட்டார்.
பல நூற்றுக்கணக்கான வாகனங்களில் இந்த எரிபொருள் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டமையை அடுத்தே தரம் குறைந்த எரிபொருள் சந்தைக்கு விடப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த எரிபொருள் கடந்த ஜூன் 14 ம் திகதி இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து இறக்குமதிக்கான கோரிக்கை வந்தபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோலியத்துறை அமைச்சின் செயலாளர் டியூட்டஸ் ஜெயவர்த்தன துபாய் நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த எரிபொருளுக்கான இறக்குமதிக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் வெளியான பின்னர் டியூட்டஸ் ஜெயவர்த்தன பதவி நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கடற்றொழிலாளர் மாவட்ட சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ;
கடந்த முப்பது வருடகாலமாக பல துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துள்ளீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலம் பெற முடியாத தரப்பினர் எதற்காயினும் பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களினால் அவ்வாறு சொல்லத்தான் முடியுமே தவிர எதையும் செய்ய முடியாது.
மக்களுக்கு பலவற்றை செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அதனால் நாம் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருகிறோம். அதேபோன்று தொடர்ந்தும் செய்வோம்.
ஆனால், ஒரு சிலர் நாம் சொல்வதற்கெல்லாம் குறை கூறலாம். ஆகவே இதனை முறியடித்து மக்கள் எம்முடன் சேர்ந்து செயற்பட வேண்டும்.
கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி நன்கறிவார். அதற்கேற்றாற் போலவே உங்களது வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படுகிறது.
உலகத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களைப் போன்று இலங்கையில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளது. அதிலும் வடபகுதி மீனவர்கள் பெரும் இடைஞ்சல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
2006 ஆம் ஆண்டில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையினாலும் தற்போதைய அமைச்சரினதும் செயற்பாட்டினாலும் தென்பகுதியும் கிழக்கும் பாரிய அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்கள் வடக்கில் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இதனை விரைவாக மேற்கொண்டு வருகிறோம்.
இங்கு கோரப்பட்டதற்கிணங்க இரு இறங்கு துறைகள் புனரமைக்கப்படவுள்ளன. கடற்தொழிலாளர்களுக்கு மேலும் வசதிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றார்.
நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்.
எகிப்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது மக்கள் மீது வன்முறையை ஏவி சுமார் 900 பொதுமக்கள் பலியானதற்கு நீதி வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடுமையான வெப்பத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முபாரக் வெளியேறினாலும் ஆட்சியின் நோக்கங்கள் அப்படியே நின்று போயுள்ளன. பொருளாதாரம் மீண்டும் படு மோசமாகவே உள்ளது. மக்களில் பலர் அடுத்தது என்ன என்ற குழப்பத்தில் உள்ளனர்.
முபாரக்கிற்குப் பிறகு அதிகாரத்தைப் பிடித்த ராணுவத்தினர் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த மக்களாட்சி நடைமுறைக்கான தேர்தலை ஒத்தி வைத்துள்ளது குறித்தும் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
முபாரக்கை ஒழித்துக் கட்டினாலும் அவரது கீழ் இயங்கிய எந்திரங்களான நீதித் துறை, காவல்துறை, அரசு அதிகாரிகள் துறை ஆகியவற்றில் எந்த வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ராணுவ அதிகாரிகள் குழு மீதும் பரவலான அதிருப்தி நிலவி வருகிறது. 18 நாட்கள் வீதிப் போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 900 பேருக்கும் நீதி கிடைக்கவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான காவல்துறையினர், ராணுவத்தினர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆளும் ராணுவ அதிகாரிகள் குழுவினர் வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டக்கார்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 7 காவல்துறை அதிகாரிகள் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். இதனால் இரண்டு நாட்கள் அங்கு பொதுமக்கள் சாலைகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதித்துறை ஊழல் மயமானதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.
மேலும் முந்தைய அரசின் ஊழல் அதிகாரிகளை நிரபராதிகள் என்று புதிய அரசு விடுவித்துள்ளது.
இதனால் அங்கு முபாரக் போனாலும் ராணுவ அதிகாரிகள் ஆட்சியில் மீண்டும் பழைய நிலையே தொடரும் என்றும் மாற்றம் என்பது கானல் நீர் தான் என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தினால் கூடுதல் வரி: அவுஸ்திரேலிய அரசு.
சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு தனி வரி விதிக்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலை மிகவும் நாசப்படுத்தும் 500 நிறுவனங்களுக்கு இவ்வாறு வரி விதிக்க அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி நிறுவனங்கள் வெளியேற்றும் ஒவ்வொரு டன் கரியமில வாயுக்கும் தலா 23 அவுஸ்திரேலிய டொலர்கள் வரியாக கட்ட வேண்டும்.
மிகவும் அதிகளவில் காற்றை மாசுபடுத்தும் உலக நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும். அந்நாட்டில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் காற்று மிகவும் மாசடைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அமெரிக்காவில் அத்து மீறி நுழையும் விமானங்கள்.
அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப் டேவிட் பகுதியில் அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின.
அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன.
இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின.
இதில் ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமான பாதுகாப்பு தளபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தன் ஜோடியை தேடி ஆறு முறை நகருக்குள் ஓடி வந்த கரடி.
தன் ஜோடியை தேடி நகருக்குள் வந்த கரடியை வன உயிரின அதிகாரிகள் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அந்தக் கரடியை வலையில் பத்திரமாக பிடித்து காட்டிற்குள் விட்டனர்.
அமெரிக்காவின் நியூஜொ்சி ஈஸ்ட் பிரான்ஸ் விக் பகுதியில் மரத்தின் மேல் கரடி ஏறிக் கொண்டு அதிகாரிகளுக்கு கண்ணாமூச்சி காட்டியது. இந்த ஆண் கரடி ஏற்கனவே கடந்த ஆண்டு 6 முறை காட்டில் இருந்து தப்பி ஓடிவந்து உள்ளது.
பல மணிநேரம் சாலைப் பகுதியிலேயே ஆண் கரடி நடந்து வந்ததால் அதன் உடல் எடை குறைந்து உள்ளது. கரடி பல மைல் நடந்து வந்ததில் 30 பவுண்ட் எடை குறைந்து உள்ளது.
ஒவ்வொரு முறையும் இந்த கரடி அரசு வன உயிரின பூங்கா பகுதிக்குள் பத்திரமாக கொண்டு விடப்பட்டு உள்ளது. கரடியை பிடித்த குழுவில் இருந்த வன உயிரின நிபுணர் கிம் டினேஸ் கூறுகையில்,"காட்டில் இருந்து தப்பி ஓடி வந்த கரடி இந்த முறை 100 மைல் நடந்து வந்துள்ளது" என்றார்.
நியூஜெர்சி பிராந்தியத்தில் அதிக பெண் கரடிகள் உள்ளன. வயது குறைந்த இந்த கரடி பெரிய கரடிகளுடன் சண்டை போட முடியாமல் நாடோடி போல பல மைல் கணக்கில் நடந்து களைத்து போய் இருக்கிறது. இனிமேல் நடக்க முடியாது என்ற நிலையில் மரத்தில் ஏறியது.
இதனை அதிகாரிகள் மயக்க ஊசி போட்டு பிடித்து விட்டார்கள். பிடிபட்ட ஆண் கரடி மீண்டும் காட்டில் இருந்து தப்பி வேறு பகுதியில் நடக்க ஆரம்பிக்கலாம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் முகாமிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பகுதியிலேயே கவனம் செலுத்தி வந்த அமெரிக்க ராணுவம் தற்போது பாகிஸ்தான் எல்லையில் கவனம் செலுத்துகிறது. 2014ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பழங்குடியினர் பிராந்தியத்தில் பதுங்கி உள்ள தீவிரவாதிகள் எல்லையின் வழியாக ஊடுருவி தாக்குதலை நடத்துகிறார்கள். தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் ஒளிந்து கொள்கிறார்கள்.
தலிபான் அல்கொய்தா மற்றும் அல்கொய்தாவுடன் தொடர்பு உடைய ஷக்காணி தீவிரவாத அமைப்பு ஆகியவற்றை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒடுக்க அமெரிக்கா தீவிரக் கவனம் செலுத்துகிறது.
அடுத்த ஆண்டு கோடைக் காலத்தின் போது ஆப்கானிஸ்தானில் இருந்து 33 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்புகிறார்கள். ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதியில் தான் தலிபான்கள் ஆதிக்கம் உள்ளது.
இந்தப் பகுதியில் கூட்டுப்படை நடவடிக்கை தற்போது உள்ளது. மலை சார்ந்த மாகாணப் பகுதிகளின் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்கள். எனவே கிழக்கு எல்லைப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் கவனம் செலுத்துகிறது என ஜுலை 4ஆம் திகதி அமெரிக்க கமாண்டர் ஜெனரல் டேவிட் பெட்ராஸ் கூறினார். இந்த தளபதியின் பணிக்காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
தனது இறுதி பதிப்பை வெளியிட்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு.
இங்கிலாந்தில் கடந்த 168 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த பிரபல வார பத்திரிகை நியூஸ் ஆப் தி வேர்ல்ட் கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்கள் பற்றி மிகவும் பரபரப்பான செய்திகள் வெளியிட்டது.
அரசு குடும்பத்தினர், முக்கிய அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. சிலரின் தனிப்பட்ட விடயங்களும் அம்பலமானதால் பெரும்புள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகைக்கு எப்படி இந்த தகவல் கிடைத்தது? என பலரும் திகைப்படைந்தனர். இங்கிலாந்து அரசுக்கும் பாதிப்படைந்ததால் பிரச்சனை நாடாளுமன்றம் வரை சென்றது.
இதையடுத்து பத்திரிகையின் முன்னாள் எடிட்டரும், இங்கிலாந்து பிரதமரின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான ஆண்டி கவுல்சன், முன்னாள் மூத்த நிருபர் கிளைவ் குட்மேன்(63) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து தீவிரமாக நடந்த விசாரணையில்,"பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்து ரகசிய தகவல்களை பெற்றது, போன் ஒட்டு கேட்பு போன்றவற்றின் மூலம் தான் இந்த பத்திரிக்கை ரகசிய தகவல்களை பெற்று பரபரப்பாக செய்தி வெளியிடுகிறது" என கண்டறியப்பட்டது.
இவர்கள் பொறுப்பில் இருந்த போது தான் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. நெருக்கடியை சந்தித்த பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகிகள் ரூபர்ட் முர்டோ மற்றும் அவரது மகன் ஜேம்ஸ் முர்டோ ஆகியோர் பத்திரிகை நிறுவனத்தை மூடுவதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தனர்.
அதன்படி நேற்று தனது இறுதி பதிப்பை அச்சடித்தனர். இது அந்த பத்திரிக்கையின் 8 ஆயிரத்து 674வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் பக்கத்தில் "நன்றி குட்பை" என அச்சிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்தவர் லியோன் இ பனேட்டா. இவரது தீவிர முயற்சி மற்றும் அறிவாற்றலால் தான் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை தொடர்ந்து ராபர்ட் கேட்ஸ்சுக்கு பதிலாக புதிய ராணுவ மந்திரியாக பனேட்டா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பதவி ஏற்றவுடன் முதன் முதலாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் வந்தார்.
அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது திறமையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
அதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகளை எங்களால் வெற்றி பெற முடியும். பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் நாடுகளில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த 10 முதல் 20 தலைவர்கள் பதுங்கி உள்ளனர். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம்.
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கம் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதே நிலைமை தொடரும். இதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் விரைவில் அழிக்கப்படுவார்கள். அவர்கள் தான் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது,"அல்கொய்தாவின் தற்போதைய புதிய தலைவர் அஸ்மான் அல்-ஜவாகிரி பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார்" என்றார்.
ஸ்பெயினில் நடைபெற்ற காளை விரட்டு விழா.
ஸ்பெயின் பாம்ளோனாவில் சர்ச்சைக்குரிய காளை ஓட்ட திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்ற பல இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர் காளை மோதியதில் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.
மேலும் 7 இளைஞர்கள் கடுமையாக காயம் அடைந்தனர். காளை தாக்கியதில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயது நபர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார். காளை சண்டையின் போது அவரும் இன்னும் சில இளைஞர்களும் வெள்ளை சட்டை மற்றும் சிவப்பு துணியை தலையில் கழுத்தில் கட்டி அணிந்து காளையை விரட்டினார்கள்.
அவருக்கு இதயப்பகுதியில் காளையின் கொம்பு குத்தியது. சம்பவ இடத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உத்தரவின் பேரில் உடனடியாக அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காளை விரட்டு விழா மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. முந்தய தாக்குதல்கள் பற்றி கவலைப்படாமல் இளைஞர்கள் உற்சாகமாக குவிந்து இருந்தார்கள். இன்றைய தினத்திலும் முரட்டுக்காளைகள் மோதியதில் 3 பேருக்கு கால், கணுக்கால் மற்றும் முகப்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
ஸ்பெயின் காளை திருவிழா போட்டியின் போது காளைகளுக்கும் மனித உயிர்களுக்கும் உயிர் அபாயம் ஏற்படுகிறது. மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தும் இநத காளை திருவிழா பாரம்பரியமாக ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி படை கடந்த இரண்டாம் உலகப் போரின் போது பல ஆயிரம் மக்களை கொன்று குவித்தது.
ஹிட்லர் படையினர் குறிப்பாக யூதர்களை குறி வைத்து கொன்று குவித்தனர். ஏறக்குறைய 30 ஆயிரம் யூதர்களை கொல்வதற்கு ஜேர்மனியின் டெம்ஜன்ஜக் உதவினார். இந்த நபருக்கு தற்போது 91 வயது ஆகிறது.
உக்ரேன் நகரில் பிறந்த டெம்ஜன்ஜக்கிற்கு கடந்த மே மாதம் மூனிச் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. விசாரணை நடந்த காலத்தில் அவர் 18 மாதம் சிறையில் இருந்தார்.
இந்த நிலையில் தம் மீது குற்றம் இல்லை என அவர் முறையீடு செய்தார். இதனை விசாரணை செய்வதை நீதிபதி நிலுவையில் வைத்தார். மேலும் டெம்ஜன்ஜக் வயதை கருத்தில் கொண்டும் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போயை சூழ்நிலையில் அவர் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்றும் அவர் வெளிநாட்டிற்கு செல்வார் என்ற அச்சமும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு வயது முதிர்ந்த டெம்ஜன்ஜக்கிற்கு விடுதலை தரப்பட்டது.
அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைக்க மாட்டோம் என்று ஜேர்மனி விசாரணையாளர்கள் தெரிவித்தனர். ஜேர்மனி இரண்டாம் உலகப் போரின் போது போலந்தை ஆக்கிரமித்தது.
அப்போது சோபிபார் முகாமில் விஷ வாயுக்களை நாஜிக்கள் பரவச் செய்து 27 ஆயிரத்து 900 யூதர்களை கொன்றனர். இவர் முகாம் கொலைக்கூடத்தின் பாதுகாப்பாளராக டெம்ஜன்ஜக் இருந்தார்.
லாகர்டே மீதான விசாரணை முடிவு: பிரான்ஸ் நீதிமன்றம் தள்ளி வைப்பு.
பிரான்சின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை நீதிமன்றம் முடிவை தள்ளி வைத்து உள்ளது. இந்த முடிவை நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
கடந்த 2008ஆம் ஆண்டில் கிறிஸ்டியானே யாருடைய ஆலோசனையும் இல்லாமல் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் நண்பரான தொழிலதிபருக்கு 28 கோடியே 50 லட்சம் யூரோ நிதி உதவியை முறைகேடாக வழங்கினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
முன்னாள் அரசு வங்கியுடன் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண இந்த நிதி உதவி அளித்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த விடயத்தில் தாம் எதும் முறைகேடு செய்யவில்லை என லாகர்டே தொடர்ந்து கூறி வருகிறார். லாகர்டே மீதான விசாரணை குறித்து இரண்டாவது முறை நீதிமன்றம் தனது முடிவை தள்ளி வைத்து உள்ளது.
காசாவுக்கு சென்ற கனடா நிவாரண படகு பல வாரங்களாக கிறீசில் தவிப்பு.
காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற கனடா ஆர்வலர்கள் கிறீசில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் பயணத்தை தொடர முடியாமல் திரும்பினர்.
பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள். அங்கு செல்லும் தண்ணீர் குழாய் பாதைகள் தடுக்கப்பட்டு உள்ளன.
மருந்து வசதிகள், உணவுப்பொருட்கள் போன்றவை கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இந்த நிலையில் உலக நாடுகள் காசாவுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. ஆனால் பல்வேறு தடைகள் காரணமாக சென்று அடைய முடியவில்லை.
கனடாவில் தாகிர் என்ற படகில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த பொருட்கள் பல வாரங்களாக கிறீசில் முடங்கி கிடக்கிறது. இதனால் கனடா ஆர்வலர்கள் தங்கள் பயணத்தை கைவிட்டனர்.
கனடா படகு திங்கட்கிழமை கரை திரும்ப வேண்டும் என்றும் கிறீஸ் உத்தரவிட்டது. ஆர்வலர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நிவாரண படகுகளை அனுப்பவில்லை என கிறீஸ் நிர்வாகம் கூறுகிறது.
காசா நுழையும் படகுகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள். கடந்த ஆண்டு நிவாரண பொருட்களுடன் சென்ற படகை இஸ்ரேல் வீரர்கள் தாக்கியதில் 9 துருக்கி ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். 45 பேர் காயம் அடைந்தனர்.
கராச்சியில் வன்முறை தீவிரம்: 100 பேர் பலி.
கராச்சியில் கடந்த 5 நாள்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இக்கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கராச்சி நகரை சுற்றியுள்ள குவாஸ்பா, ஒராங்கி, கட்டி பஹாரி போன்ற இடங்கள் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கராச்சி நகர் அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மன்சூர் விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதிபர் சர்தாரி கலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்து வருகிறார்.
தேர்தல் சீர்திருத்தம் கோரி மலேசியாவில் எதிர்க்கட்சிகள் பேரணி.
மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தம் கோரி எதிர்க்கட்சியினர் ஆதரவுடன் நடந்த மெகா பேரணியில் பங்கேற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவில் ஆளும் கட்சி கடந்த 54 ஆண்டுகளாக தேர்தல் முறைகேடுகள் மூலமே ஆட்சியைக் கைப்பற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி பிரசாரம் செய்து வருகின்றன.
இதன் இறுதியாக நேற்று தலைநகர் கோலாலம்பூரில் மெகா பேரணி நடந்தது. "பெரிஷ் 2.0" என்ற அரசு சாரா அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
பேரணிக்கும், கூட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் அவை இரண்டும் சட்டவிரோதம் என மலேசிய அரசு அறிவித்தது. அதையும் மீறி நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பேரணியைக் கலைக்க பொலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீச்சியடித்தல் ஆகியவற்றைப் பிரயோகித்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அரசுக்கு ஆதரவாகவும் இரு பேரணிகள் நேற்று நடந்தன. இதனால் இருதரப்புக்கும் இடையில் கலவரம் மூளும் அபாயம் இருந்தது. எனினும் அதுபோல எதுவும் நடக்கவில்லை.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிகாலை நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானது.
தொழில்துறையில் கோலோச்சி வரும் ஜப்பானில் தொடர் நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலநடுக்கத்தில் ஏற்பட்ட தேசம் குறித்து விவரம் இன்னும் அறியப்படவில்லை.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நில நடுக்கம் 9 ரிக்டராக பதிவானது. தொடர்ந்து தாக்கிய சுனாமியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். புகுஷிமா அணு உலை பெரும் பாதிப்பை சந்தித்தது.
இருப்பினும் இந்த துயர் நீக்கி விரைந்த மீட்பு பணி காரணமாக கடந்த வாரத்தில் இருந்து வழக்கமான பணிகள் சீராக போய்க்கொண்டிருந்தன. குறிப்பாக வாகன உற்பத்திகள் மீண்டும் சீராக தயாரிக்கும் பணி நடந்தது.
இந்நேரத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜப்பான் வடக்கு பகுதியில் காலை நேரப்படி 9. 57க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. செண்டாய் நகரின் கிழக்கு பகுதியில் 130 கி.மீ தொலைவில் உள்ள ஹோன்சு தீவுப்பகுதியில் இந்த நிலநடுக்கம் இருந்தது.
இதனால் தொடர்ந்து சுனாமி தாக்கும் என்ற அச்சத்தில் ஐவே, மியாகி உள்ளிட்ட முக்கிய தீவு பகுதி மற்றும் கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திருப்ப பெறப்பட்டது.
புகுஷிமா நகரில் உள்ள முக்ககி அணு உலையில் இருந்தும் ஊழியர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இன்று ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் இன்னும் வரவில்லை.