Saturday, July 30, 2011

இன்றைய செய்திகள்.

கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கரு.வுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது: ரணில்.

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளவர்கள் கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பலவாறான கருத்துக்களை கொண்டுள்ளபோதும் கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு தான் விசேட பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஐக்கிய தேசிய கட்சி கிளை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னை வந்து சந்தித்த விடயத்தையும் அதன்போது பறிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கரு ஜயசூரிய தனக்கு அறிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தான் வெளிநாடு சென்றுள்ளதால் கட்சியில் இடம்பெறும் விடயங்கள் குறித்து தொலைபேசி ஊடாக தனக்கு அறிவிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி கிளை காரியாலயங்களை மேம்படுத்தி 2012ம் ஆண்டளவில் வலுவான சர்வதேச வலையமைப்பாக அவற்றை மாற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது - ரணில்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்கு சூடான் முன்னெடுக்கக் கூடாது என்றும், அந்த அமைப்புக்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது என்றும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது ஆயுதம் ஏந்திய அமைப்போ இல்லாத நிலையில் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது என்பது தெற்கு சூடானுக்குள்ள இறைமை சம்பந்தப்பட்ட உரிமை அல்லவா என்று இங்கு லண்டனில் பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
சனல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்மட்டம் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்கு சூடான் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் மற்றும் வெளியுறவு மற்றும் பொதுநலவாயம் தொடர்பான துணை அமைச்சர் அலெஸ்ட்டார் பேர்ட் ஆகியோரையும் சந்தித்துள்ள ரணில் விக்ரமசிங்க, அவர்களுடன் எதுபற்றி பேசினார் என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டது.
குறிப்பாக, இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்தே பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் ரணில் கூறினார்.
இலங்கையின் பிரச்சனையை, முடிந்தால் இலங்கைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும் என்று தமது நிலைப்பாட்டைக் கூறியதாக தெரிவித்த ரணில், அரசியல் தீர்வுத்திட்டம் பற்றி பேச்சு நடத்தி, இழக்கப்பட்ட உயிர்களுக்காக என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஆராய வேண்டும் என்று எடுத்துரைத்ததாகவும் பிபிசியிடம் கூறினார்.
தமது சந்திப்பில், சானல் 4 செய்திகள் பற்றி பேச்சு நடத்த வில்லையென்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளாத போது, போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு இலங்கை செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று கருத்து தெரிவித்தார்.
அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டால், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக் கொள்ளமுடியும் என்ற தொனியிலும் ரணில் விக்ரமசிங்க பதில் கூறினார்.  
இதற்கிடையே, புதிதாக மலர்ந்துள்ள தெற்கு சூடானை பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தெற்கு சூடான் தொடர்புகளை வைத்திருந்ததாலேயே தமது அதிருப்தியை தெரிவித்ததாக ரணில் கூறினார்.
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை தெற்கு சூடான் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற ரீதியில் தமது கருத்தை முன்வைத்ததாக அவர் கூறினார்.
வன்னியின் இறுதிப் போர் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! திங்களன்று வெளியிடப்படுமாம்!

இலங்கையின் வன்னியில் நடந்த இறுதிப் போர் தொடர்பான விவரங்களை உள்ளடக்கி பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையின் உண்மை சார்ந்த அலசல்கள் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவும் கலந்துகொண்டார்.
இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச் சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பங்கேற்ற படையினர் மற்றும் படை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2006 ஜுலையில் மாவிலாறில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது வரையான சம்பவங்கள் இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.
உக்ரேன் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: 16 பேர் பலி.
உக்ரேனின் கிழக்கு பிராந்தியமான லுகான்ஸ்க் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 16 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10 பேரை காணவில்லை. இன்று ஏற்பட்ட இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என உக்ரேன் அவசர நிலை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மாயமான தொழிலாளர்கள் எங்கே உள்ளனர் எனத் தெரியவில்லை. உலகிலேயே மிக ஆபத்தான சூழ்நிலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக உக்ரேன் சுரங்க தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே தரப்படுகிறது. சோவியத் கால பழைய கருவிகளே இந்த சுரங்கப் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
உக்ரேனில் சுரங்க விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:57 மணிக்கு விபத்து ஏற்பட்டது.
அவுஸ்திரேலிய குடியேற்ற காவல் மையத்தில் அகதிகள் தற்கொலை செய்வது அதிகரிப்பு.
குடியேற்ற காவல் மையங்களில் உள்ள அகதிகள் காயப்படுத்திக் கொள்வதும், தற்கொலை செய்வதும் அடிக்கடி ஏற்படுகின்றன.
கிறிஸ்துமஸ் தீவு பகுதி உள்பட பல மையங்களில் அகதிகளாக புகலிடம் தேடுவோர் விபரீத முடிவு எடுக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவுஸ்திரேலியா இன்று அறிவித்தது.
அவுஸ்திரேலியாவின் தீர்வாய தலைவர் ஆலன் ஆஷர் கூறுகையில்,"நீண்ட காலமாக குடியேற்றக் காவல் மையத்தில் வைப்பதால் உளவியல் ரீதியாக புகலிடம் தேடுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார்.
ஆயிரக்கணக்கான புகலிடம் தேடும் நபர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். கிறிஸ்துமஸ் தீவில் ஜூன் மாத இறுதியில் இது போன்ற 30 சம்பவங்களும், ஜூலை மாதம் முதல் வாரம் 50 சம்பவங்களும் நடந்துள்ளன.
ஏதோ மிகப்பெரிய அளவில் தவறு இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை புகலிடம் தேடி வந்த 5 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.
புகலிடம் தேடி வந்தவர்களில் ஆண்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாகவும் தற்கொலை மற்றும் காயப்படுத்திக் கொள்வது ஏற்படுகிறது.
கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பான 14.3 லட்சம் கோடி டொலர் அளவை ஆகஸ்ட் 2ஆம் திகதிக்குள் உயர்த்த வேண்டும். இல்லையென்றால் எந்த பணிகளுக்கும் ஒபாமா நிர்வாகத்தால் பணம் தர முடியாது.
கடன் உச்சவரம்பை உயர்த்த மக்கள் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் ரத்து செய்ய வேண்டும் என குடியரசுக் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
கடன் உச்சவரம்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையிலும், செனட்டிலும் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. இவர்கள் ஆதரவுடன் தான் கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டி உள்ளது.
பிரதிநிதிகளின் சபையில் உள்ள 45 குடியரசு கட்சி உறுப்பினர்கள் வலதுசாரி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள். அவர்கள் தான் கடன் உச்சவரம்பை அதிகரிக்க முக்கிய நபர்களாக இருப்பார்கள்.
75 லிபரல் டெமாக்ரேட்ஸ் உறுப்பினர்கள் மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களில் செலவினம் ஏற்படுவதை குறைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடன் உச்சவரம்பு உயர்த்தும் விவகாரம் கடுமையாக நடந்து வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்க தேனீர் விருந்து நிகழ்ச்சிகளும் அமெரிக்காவில் அடிக்கடி இடம் பெறுகின்றன.
இந்த ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை எட்டும்: வளரும் நாடுகள் கவலை.
பூமியில் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி என்ற அளவை எட்டும்.
இந்த மக்கள் தொகை பெருக்கம் வளரும் நாடுகளை வெகுவாக பாதிக்கும். மக்கள் தொகை அதிகரித்தாலும் இயற்கை ஆதாரவளம் குறிப்பிட்ட அளவிலேயே இருப்பதால் வளரும் நாடுகள் பிரச்சனையில் சிக்கும் என ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ப்ளும் கூறினார்.
1999ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது. 2100ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை ஆயிரத்து 100 கோடியாக அதிகரித்து இருக்கும்.
2050ஆம் ஆண்டில் தற்போது உலக மக்கள் தொகையுடன் மேலும் 230 கோடி மக்கள் கூடுதலாக இருப்பார்கள். இதில் வளர்ச்சி அடையாத நாடுகளிலேயே மக்கள் தொகை பெருக்கம் அதிகம் இருக்கும்.
இந்த மக்கள் தொகை பெருக்கத்தில் 49 சதவீதம் ஆப்ரிக்கா நாடுகளில் காணப்படும். மக்கள் தொகை பெருக்கத்தால் பணக்கார நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இடையே மோதல் ஏற்படும்.
இந்த 2011ஆம் ஆண்டு 13 கோடியே 50 லட்சம் பேர் பிறப்பார்கள், 5 கோடியே 70 லட்சம் பேர் இறப்பார்கள். எனவே சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு இந்த ஆண்டு 7 கோடியே 80 லட்சமாக இருக்கும்.
காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
ஆப்ரிக்கா கண்டத்தின் மத்தியில் காங்கோ நாடு உள்ளது. இது அடர்ந்த புதர்கள் மற்றும் மிகப்பெரிய ஆறுகள் நிறைந்தது. எனவே இங்குள்ள ஆறுகளில் பெருமளவில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஈகுவேடர் மாகாணத்தில் உள்ள ஷுயாபா ஆற்றில் படகு ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 220 பேர் பயணம் செய்தனர்.
செல்லும் வழியில் இந்த படகு மற்றொரு படகின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் 220 பேருடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர்.
மீட்பு குழுவினரும் 105 பேரை மீட்டனர். சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் தவிர 100 பேரை காணவில்லை. எனவே அவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்த விசாரணை நடத்தப்பட்டது. இதில் படகில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு.
போர்ச்சுகலில் கடந்த 2007ம் ஆண்டு கடத்தப்பட்ட 4 வயது பெண் குழந்தை இந்தியாவின் காஷ்மீரில் வளர்வது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த கதே-ஜெர்ரி தம்பதியின் பெண் குழந்தை மெடலீன் மெக்கான். குழந்தையின் 4வது பிறந்த நாளை கொண்டாட அனைவரும் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் போர்ச்சுகலில் உள்ள பிரயா டா லஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு மெடலீன் திடீரென காணாமல் போனாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியை நாடினர். அவர்கள் தொடர்ந்து குழந்தையை தேடி வந்தனர்.
இதற்கிடையில் காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு பிரிட்டனை சேர்ந்த சிலர் சமீபத்தில் சுற்றுலா சென்றனர். அப்போது மெடலீன் போலவே ஒரு குழந்தையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
அவர்களில் ஒரு பெண் தைரியமாக லே பொலிசில் தெரிவித்திருக்கிறார். இப்போது அந்த குழந்தைக்கு 8 வயதிருக்கும். லே பொலிசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று தனியார் புலனாய்வு ஏஜென்சியினர் கூறுகின்றனர்.
பிரான்சை சேர்ந்த பெண்ணும், பெல்ஜியத்தை சேர்ந்த அவரது கணவரிடம் அந்த குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை எங்களுடையதுÕ என்று இருவரும் கூறுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து லே பொலிசார் கூறுகையில்,"குழந்தையை டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்மை தெரியவரும். இந்த பிரச்சனை குறித்து பிரிட்டன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்" என்றனர்.
குழந்தை மெடலீன் காணாமல் போனது எப்படி? என்பது குறித்து சமீபத்தில் தான் அவளது பெற்றோர் புத்தகம் ஒன்று வெளியிட்டிருந்தனர். கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க ஸ்காட்லாந்து பொலிசாருக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிட்டுள்ளார்.
லிபிய போராட்டக் குழு தலைவர் படுகொலை.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக போராடும் போராட்டக் குழு தளபதி அப்தல் பதா யூனூஸ் கொல்லப்பட்டார். அவர் பல ஆண்டுகள் கடாபியின் கூட்டாளியாக இருந்தவர் ஆவார்.
எனவே அவர் கடாபியுடன் ரகசிய உறவு வைத்து இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். போராட்டக் குழு தளபதி யூனூஸ் கொல்லப்பட்டதை தேசிய போராட்டக்குழு கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் உறுதிப்படுத்தினார்.
யூனூசை கொலை செய்த கும்பலின் தலைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலை செய்யப்பட்ட அப்தல் பதா யூனூஸ் ராணுவ ஓபரேஷன் குறித்து விளக்கம் தர வேண்டும் என போராட்டக்குழு கவுன்சில் கூறி இருந்தது.
அவர் உயர் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டு உள்ளார். யூனூசை கொலை செய்தவர்கள் கடாபியுடன் தொடர்பு உள்ளவர்களா என்பதை போராட்டக்குழு தலைவர் தெரிவிக்கவில்லை. போராட்டக்குழு தளபதியுடன் அவரது இரு உதவியாளர்கள் முகமது கமீஸ் மற்றும் நசீர் அல் மத்கரும் கொல்லப்பட்டனர்.
போராட்டக்குழு தளபதி கொல்லப்பட்ட விவரத்தை பெங்காசி ஹொட்டலில் ஜலீல் தெரிவிக்கும் போது அங்கு ஓடிவந்த ஒரு நபர் துப்பாக்கியால் வானத்தில் சுட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பதவியை விட்டு வெளியேறும் சர்கோசி: இணையத்தள திருடர்களின் அட்டகாசம்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் அலுவலகமான எல்.சி.பேலசின் இணையத்தளத்தில் தகவல் திருடர்கள் புகுந்துள்ளனர்.
அந்த இணையத்தளத்தில் சர்கோசியின் கார்ட்டூன் வடிவத்தைச் சேர்த்து உள்ளனர். சர்கோசி அரண்மனையில் இருந்து வீதியை நோக்கி வருவது போல தகவல் திருடர்கள் சித்தரித்து உள்ளனர். தகவல் திருடர்கள் நிகோலஸ் சர்கோசி பதவியை விட்டு வெளியேறுவதை போல கார்ட்டூனை வடிவமைத்து உள்ளனர்.
அந்த வீடியோ கேமில் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் நீங்கள் அதிகமாக கிளிக் செய்தால் நாம் சர்கோசியை வேகமாக வெளியேற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் திருடர்கள் அனுப்பிய வீடியோ கேமில் ஒவ்வொரு முறை பட்டனை கிளிக் செய்யும் போதும் அலுவலகத்தில் இருந்து வீதிக்கு சர்கோசி ஒவ்வொரு அடியாக வெளியேறும் வகையில் சித்திரம் அனுப்பப்பட்டு இருந்தது.
தகவல் திருடர்கள் சர்கோசி அலுவலக இணையத்தளத்தில் ஊடுருவியதை எல்.சி.பேலசும் உறுதி செய்தது. சர்கோசியின் பேஸ்புக்கில் கடந்த ஆண்டு இணையத்தள திருடர்கள் ஊடுருவி அவரது ராஜினாமாவை அறிவித்தனர்.
இதற்கு 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து நினைவுபடுத்தி இருக்கிறீர்கள், உங்களுக்கு நன்றி என சர்கோசி பதில் அனுப்பி உள்ளார்.
லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
லிபியாவில் நேட்டோ படைகள் கடாபி ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் கனடா ராணுவமும் ஈடுபட்டு உள்ளது.
இரவு நேரத்தில் மின்னணு சமிஞ்ஞை சூழலில் கனடா விமான வீரர்கள் குண்டுகனை வீச வேண்டி இருக்கிறது. மங்கிய வெளிச்சத்தில் குண்டுகளை வீசும் போது ராணுவ தளங்களுக்கு பதிலாக பொது இடங்களிலும் குண்டு விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தானில் பொது மக்கள் பலியாவதை போல லியியாவிலும் ஏற்படுகிறது என கனடா போர் விமான வீரர்கள் கூறுகிறார்கள். லிபியா பாலைவனப் பகுதியிலும், கடலோரப் பகுதியிலும் கனடா வீரர்கள் கண்காணிப்பை மேற்கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
லிபியாவில் பல நாடுகளின் படைகளும் கடாபி ராணுவத்தை தாக்குவதால் ஆயுதம் ஏந்திய வண்டிகள் குறுக்கே சென்று வருகின்றன. யார், எங்கே இருக்கிறார்கள் என கணிக்க முடியாத அளவிற்கு போர் யுத்த தூசி படர்ந்துள்ளது. இதனால் வீரர்கள் உயிருக்கும் அபாய நிலை உள்ளது.
 மிகுந்த நெருக்கடியில் தான் லிபியா போரில் ஈடுபடுகிறோம் என பிரிட்டிஷ் கொலம்பியா டன்சன் பைலட் மெக்லெட் கூறுகிறார். லிபியாவில் கனடாவின் போர் விமானங்கள் 592 முறை பறந்து 413 குண்டுகளை வீசி உள்ளன. லிபியாவில் கனடா போர் விமானங்கள் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். அதன் பிறகு நாடாளுமன்ற பரிசீலனைக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்படும்.
இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு.
19ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற போலந்து ஓவியம் இரண்டாம் உலகப் போரின் போது மாயமானது.
போலந்து மக்களால் போற்றப்பட்ட ஓவியக் கலைஞர் அலெக்சாண்டர் கெரிமிஸ்கியின் யூதப் பெண் ஆரஞ்சு விற்பனை செய்யும் காட்சியை வரைந்து இருந்தார்.
அந்த ஓவியத்தில் ஆரஞ்சு விற்பனை செய்யும் பெண் இரு கையிலும் ஆரஞ்சு கூடைகளுடன் இருப்பதையும், கடுமையான எடை இருந்த போதும் உதட்டில் புன்னகையுடன் இருப்பது போல காணப்பட்டது.
67 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இந்த ஓவியம் ஜேர்மனியின் ஹம்பர்க் ஏல மையத்தில் விற்பனைக்கு வந்த போது மீட்கப்பட்டது. போலந்து ஓவியம் சொந்த நாடு திரும்பியதை எண்ணி போலந்து மக்கள் அரிய புதையலை மீட்டதை போல உற்சாகம் அடைந்தனர்.
போலந்தின் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியத்தை பொது மக்கள் பார்வைக்கு புதன்கிழமை போலந்து கலாசாரத் துறை அமைச்சர் போக்டன் சோ ஜெவிஸ்கி திறந்து வைத்தார்.
ஆரஞ்சு விற்பனை பெண் ஓவியம் 1880 – 81 ஆம் ஆண்டில் வரையப்பட்டது. ஓவியர் அலெக்சாண்டர் கெரிமிஸ்கியின் பல ஓவியங்களில் வார்சாவின் வீதிகளில் வாழும் யூத மக்களை சார்ந்ததாக இது இருந்தது.
மூலிகை எண்ணெயில் வரையப்பட்ட அந்த ஓவியத்தில் போலந்து வார்சா வானம் பனி சூழலில் இருப்பதையும் காட்டுகிறது. போலந்தை நாஜி ஜேர்மனி ஆக்கிரமித்த நிலையில் 1944ம் ஆண்டு இந்த ஓவியம் மாயமானது.
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் பி.பி.சி நிருபர் உள்பட 22 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தலிபான்களை வேட்டையாடுவதற்காக நேட்டோப்படையினர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
நேற்று டிரின்கோட் எனும் நகரில் மூன்று முறை மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் குழந்தைகள் மற்றும் இப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஆப்கான் பிரிவு பி.பி.சி. நிருபர் ஓமித்கஹாவல்காக் என்பவர் உள்பட 22 பேர் பலியாயினர்.
மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
வரும் 2014ம் ஆண்டிற்குள் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுபடைகள் ஆப்கானை விட்டு வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருவது கவலையளிப்பதாக உரூஸ்கான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் மிலாத் முடாஸர் கூறினார்.
அதிபருக்கு எதிரான போராட்டம்: 3000 கிளர்ச்சியாளர்கள் மாயம்.
சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக இதுவரை கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் மூன்றாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த நான்கு மாதங்களாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் மீது சிரியா ராணுவத்தினர் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
கிளர்ச்சி தொடங்கிய மார்ச் 15ம் திகதி முதல் ஆயுதம் இல்லாமல் கிளர்ச்சி செய்தவர்களில் 1,600 பேரை சிரியா ராணுவத்தினர் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் தங்கள் இணையதளத்தில் மேலும் கூறியிருப்பதாவது: அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களை ராணுவத்தினர் கடுமையான முறையில் கையாண்டு வருகின்றனர்.
அமைதியாகப் போராடுவோரைக் கூட வீண்பழி சுமத்தி மிருகத்தனமாக நடத்துகின்றனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டும் அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.
ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என கிளர்ச்சியாளர்கள் மாயமாகி வருகின்றனர். இவ்வாறு இதுவரை 2 ஆயிரத்து 918 கிளர்ச்சியாளர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF