Thursday, July 14, 2011

மும்பையில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்: 20 பேர் பலி .

மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன. தாதர் மேற்குப் பகுதியில் கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்தது.ஜவேரி பஜார் பகுதியில் கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீற்றரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் 3வது குண்டு வெடித்தது.


இந்த மூன்று சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக ஒரு தகவலும், 15 பேர் காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். மேலும் என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF