Saturday, July 23, 2011

இன்றைய செய்திகள்.

சிலாபத்தில் குழாய்க் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேற்றம்!

சிலாபம், முன்னேஸ்வரம் பௌத்த விகாரையில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேறிவருகிறது.
முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த வகையான வாயு வெளியேறியது.
முதலில் மீதேன் வாயு என ஆய்வாளர்கள் குறிப்பிட்ட போதும் பின்னர் அதனை மறுத்துள்ளனர். சுமார் 200 மீற்றர் தொலைவிற்கு குழாய் மூலம் வாயுவை கொண்டு சென்று பரிசோதித்த போதும் மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் மேலும் 2 குழாய் கிணறுகளை தோண்டி ஆய்வு செய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விசேட குழுவொன்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மாலவி நாட்டில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம். 
ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
எகிப்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் லிபியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலவி நாட்டிலும் போராட்டமும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டுள்ளது. இங்கு பிங்குவா முதாரிகா பல ஆண்டுகளாக அதிபராக உள்ளார். தற்போது இங்கு பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைநகர் லிலாங்வியில் ஒரு கும்பல் கடைகளை சூறையாடியது.
போராட்டக்காரர்கள் அதிபர் முதாரிகா கட்சி பிரமுகர்களின் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை கொள்ளையடித்தனர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். கலவரத்தை அடக்க பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலவரத்தை அடக்க பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகினர். 44 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பொது மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்கும்படி அதிபர் முதாரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு. 
நோர்வேயில் இன்று பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலங்கங்கள் உள்ள மையப் பகுதியில் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பச் செய்திகள் தெரிவிக்கின்றன.
17 மாடிகளையுடைய பிரதமர் அலுவலகத்தின் பெரும்பாண்மையான யன்னல்கள், கதவுகள் நொருங்கியுள்ளதாகவும் அவ்வலுவலகத்திற்கு அருகேயுள்ள எண்ணெய் வள அமைச்சின் காரியாலயம் எரிந்து கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இக் குண்டுவெடிப்பிற்கான காரணம் உடனடியாகத் தெரியவராத போதும் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நொருங்கிய நிலையில் காரொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




இளவரசி டயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்றம் முடிவு.
இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய பிரெஞ்ச் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் வருடம் பிரான்சில் நடந்த கார் விபத்தில் பலியானார். இந்த வழக்கை தற்போது மீண்டும் விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ஸ்காட்லாந்து முன்னாள் தலைமை அதிகாரி லார்ட் கோண்டன், முன்னாள் லண்டன் துணை கொமிஷ்னர் சர் டேவிட் வெனீஸ் ஆகியோரிடம் விசாரணை செய்ய பிரான்ஸ் நீதிபதி ஜெரார்டு காடியோ திட்டமிட்டுள்ளதாகவும் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி விலகுவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: கடாபி.
லிபியாவில் அதிபர் பதவியில் இருந்து பதவி விலக கர்னல் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று செய்தி வெளியானது.
41 ஆண்டு காலம் ஆட்சி செய்து வரும் கடாபி பதவி விலகுவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என தற்போது கடாபி அறிவித்து உள்ளார்.
தீர்ப்பு தினம் வரும் வரை எனக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை இருக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தனது சொந்த நகரமான சிர்தேவில் பல ஆயிரம் ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி இவ்வாறு முழங்கினார். போராட்டக்காரர்களுக்கு லிபிய மக்கள் பதிலடி தருவார்கள் என்றும் கடாபி தெரிவித்தார்.
லிபியாவில் பெப்பிரவரி 14ம் திகதி முதல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களத்தில் உள்ளன. கடல் பகுதி நகரமான சிர்தேவில் கடாபி ஆதரவாளர்கள் பச்சை நிற தொப்பியை தலையில் அணிந்து இருந்தனர். குழந்தைகள் முகத்தில் கடாபிக்கு ஆதரவான வார்த்தைகளும் எழுதப்பட்டு இருந்தன.
கடாபி பதவியை துறந்தால் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம் என பிரான்ஸ் கூறிவருகிறது. கடாபி பதவி விலக வேண்டும் என அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
பூமி வெப்பமயமாதலால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை.
உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் தருவதாக உலக வெப்பமயமாதல் உள்ளது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் எச்சரித்து உள்ளது.
உலக வெப்பமயம் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சிறிய நாடுகளின் நிலபரப்பும் அழிந்து வருகிறது என ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் கவலையுடன் தெரிவித்தது.
உலக வெப்பமயமாதல் நடவடிக்கையில் பெருந்தன்மையான சமரசம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா.வில் ஜேர்மனி தூதர் பீட்டர் தெரிவித்தார்.
உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அடுத்த கட்ட அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் பல லட்சம் மக்கள் உள்ள பின்தங்கிய தீவுகள் அழியும் நிலையில் உள்ளன. கங்கை, நைல் மற்றும் பெரும் கடலோரப் பகுதிளான கராச்சி, நியூயோர்க், சிங்கப்பூர், டோக்கியோ ஆகியவற்றின் பாதுகாப்பை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்கள் எடுத்த முயற்சிகளும் உரிய பலனை அளிக்கவில்லை. மிக மோசமான விளைவு ஏற்படுவதற்கு முன்னர் தற்காப்பு நடவடிக்கை தேவை என்றும் பீட்டர் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் கடன் பிரச்சனை: வரிகளை அதிகரிக்க ஒபாமா அரசு முடிவு.
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்து விட்டது. இதனால் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் தனது பதவிக்கும் ஆபத்து வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது 3 லட்சம் கோடி டொலர் புதிய கடன் உச்ச வரம்பிற்கு குடியரசு கட்சியினரும் ஒபாமாவின் டெமாக்ரடிக் கட்சியினரும் ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
வாஷிங்டனின் இந்த அறிவிப்பால் உலக பங்கு சந்தை விறுவிறுப்பு அடைந்து உள்ளது. கிறீஸ் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண ஐரோப்பிய தலைவர்கள் உத்தேச ஒப்புதல் முடிவு எடுத்த நிலையில் பங்கு சந்தை வேகம் பிடித்தது.
தற்போது அமெரிக்க அரசும் கடன் உச்ச வரம்பை அதிகரித்து உள்ளதால் வருகிற நாட்களில் முதலீட்டாளர்கள் கூடுதல் லாபத்தை எதிர்நோக்கலாம். ஆகஸ்ட் மாதம் 2ம் திகதிக்குள் அமெரிக்க கடன் உச்ச வரம்பான 14.3 லட்சம் கோடி டொலர் கடன் உச்ச வரம்பை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.
அப்படி செய்யாத பட்சத்தில் ஒபாமா அரசால் எந்த பணிகளுக்கும் நிதி தர முடியாத நிலை ஏற்படும் என்ற அபாயமும் இருந்தது. வருவாயை அதிகரிக்க வரியை கூட்டவும், செலவினத்தை குறைக்கவும் ஒபாமா அரசு முடிவு செய்தது. வரி உயர்வுக்கு குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஏமனில் சுட்டுக் கொலை.
ஏமனில் 2 முக்கிய அல்கொய்தா தலைவர்கள் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் முன்னோர்கள் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர் அமெரிக்கப் படையினரால் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாலும், அல்கொய்தாவினர் பல நாடுகளில் இன்னும் செயல்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள அப்யான் மாகாணத்தில் ஜிஞ்ஜிபார் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த இடத்தை அவர்கள் செவ்வாய்க்கிழமை சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை புதன்கிழமை வரை நீடித்தது.
இதில் ஆயாத் அல்-சபாவானி, ஆவாத் முகமது சலே அல்-சபாவானி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயாத் அல்-சபாவானி, ஆவாத் முகமது சலே அல்-சபாவானி ஆகிய இருவரும் அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்கள் என ராணுவத்தினர் கூறினர்.
இங்கிலாந்து மருத்துவமனையில் மேலும் இருவர் மரணம்: மருத்துவ தாதியிடம் விசாரணை.
பிரிட்டன் ஸ்டாக்போர்ட் மருத்துவமனையில் மேலும் 2 நோயாளிகள் மரணம் அடைந்தனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் மரணம் தொடர்கிறது.
நேற்று காலை 84 வயதுடைய நோயாளி டெரிக் வீவரும் 84 வயது பெண் ஒருவரும் மரணம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இதே மருத்துவமனையில் ஏற்கனவே மூன்று நோயாளிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 நோயாளிகள் இறந்துள்ளனர்.
நோயாளிகள் தொடர் மரணம் தொடர்பாக 27 வயது மருத்துவ தாதி ரெபக்சா கைது செய்யப்பட்டார். அவரிடம் கூடுதல் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவரை தொடர்ந்து காவலில் வைக்க கைது வாரண்ட் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த ஜுலை மாதம் 7ம் திகதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 14 நோயாளிகளில் 5 பேர் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட முறையை பொலிசார் கண்காணித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் 41 வயது நபர் அபாய நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அனுபவம் வாய்ந்த மருத்துவ தாதி மான்செஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் ஆய்வு செய்த போது 36 குளுக்கோஸ் பாட்டிலில் இன்சுலின் கலந்து இருப்பது தெரியவந்தது.
ஆளில்லா கண்காணிப்பு விமானம் பாகிஸ்தானில் அறிமுகம்.
கடற்கரை பகுதிகளை கண்காணிக்கவும், எதிரி படைகளின் தொலைத்தொடர்பு வசதிகளை துண்டிக்கவும் பாகிஸ்தான் தனது கடற்படைக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானிலேயே தயாரிக்கப்பட்ட யூகாப்-2 என்ற பெயருள்ள இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானத்தில் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க கண்காணிப்பு விமானம் போல் இதை தரையிலிருந்து இயக்க முடியும்.
இதன் அறிமுக விழா கராச்சியில் உள்ள பி.என்.எஸ் மெஹ்ரம் விமானப்படை தளத்தில் நடந்தது. கடற்படைத் தலைவர் அட்மிரல் நோமேன் பஷீர் விமானத்தை இயக்கி வைத்தார்.
ஹிட்லர் உதவியாளரின் உடல் கடலில் கரைப்பு.
ஜேர்மனி கல்லறையில் புதைக்கப்பட்ட ஹிட்லர் உதவியாளரின் உடல் சாம்பல் 24 ஆண்டுகளுக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது.
நாஜி படைத்தளபதி ஹிட்லரின் முக்கிய உதவியாளர் ருடால்ப் ஹெஸ். இவர் 1987ம் ஆண்டு பெர்லின் சிறைச்சாலையில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் ஷன்செடல் கல்லறையில் வைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் ருடால்ப் ஹெஸ் கல்லறை இடிக்கப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இந்த தகவலை ஜேர்மனியின் தெற்கு மாநிலமான பவாரியாவில் உள்ள ஷன்செடல் கிறிஸ்தவ ஆலய அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
ருடால்ப் ஹெஸ் புதைக்கப்பட்ட கல்லறை குத்தகை இடம் புதுப்பிக்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் கிறிஸ்துவ ஆலய நிர்வாகம் ருடால்ப் ஹெஸ் இட குத்தகையை நீட்டிக்க விரும்பவில்லை.
கல்லறையை இடிக்க ஹெஸ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கல்லறையை இடிக்க ஒப்புக் கொண்டனர்.
இரண்டாம் உலகப் போரை முன்னதாக கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ருடால்ப் ஹெஸ் ஸ்காட்லாந்தில் பாராசூட்டில் தரை இறங்கினார். அவரது இந்த பயணம் இப்போதும் நினைவு கூறப்படுகிறது.
இருப்பினும் ருடால்ப் ஹெஸ் கிரிமினல் குற்றவாளி என்றும் 1946ம் ஆண்டு போர் தீவிரமாக அவர் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 93 வயதில் ருடால்ப் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
பிரான்சில் புதிய அணு மின் திட்டத்தில் தாமதம்.
உலக நாடுகளில் அணு உலை பிரச்சனை கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் இ.டி.எப் நிறுவனம் தனது புதிய அணு உலை அமைப்பு பணியை 2 ஆண்டுகள் தாமதம் செய்துள்ளது.
வருகிற 2014ஆம் ஆண்டு துவங்க இருந்த புதிய அணு உலையை 2016ஆம் ஆண்டில் துவக்க திட்டமிட்டு உள்ளது. அணு உலைகயில் தீவிர பாதுகாப்பு பணிகள் குறித்து ஆராய்வதால் இந்த தாமதம் ஏற்பட்டு உள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் ஜப்பான் அணு மின் உலையில் அணு கதிர்வீச்சு பரவியது.
இதனால் உலக நாடுகள் அணு மின் திட்டம் குறித்து கடுமையாக விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் பிரான்சில் பெரும் அணு மின் உற்பத்தி நிறுவனமான இ.டி.எப் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு பிரான்சில் 2 ஆண்டுகளில் துவங்க இருந்த அணு மின் நிலையம் 2016ஆம் ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக துவக்க பணி தாமதமாகி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. புதிய அணு மின் நிலையம் 500 கோடி டொலர் மதிப்பிற்கு பதிலாக 6 கோடி பில்லியன் டொலர் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
வான்கூவரில் 260 லட்சம் டொலர் கோகைன் போதை மருந்து கடத்தல்.
வான்கூவர் கடல் பகுதியில் 260 லட்சம் டொலர் கோகைன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இரு நபர்கள் குற்றவாளி என விக்டோரியா நீதிமன்றம் அறிவித்தது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவை சேர்ந்தவர் ஸ்காட் பீட்டர்சன்(39) மற்றும் மெக்சிகோவை சேர்ந்த விசன்டே ஹெர்னான்டஸ் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
அவர்கள் 2010ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா சரித்திரத்தில் இல்லாத வகையில் ஆயிரம் கிலோ போதை மருந்தை கடத்தினர். அவர்கள் வான்கூவர் கடல் பகுதியில் 15 மீற்றர் நீள படகில் போதை மருந்தை கடத்திய போது பிடிபட்டனர்.
அந்த படகு ஹார்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த படகு மேற்கு கடலோர பகுதியான பனாமாவில் இருந்து வந்த போது பிடிபட்டது.
கனடாவின் பல்வேறு நகரங்களில் சப்ளை செய்வதற்காக அந்த போதை மருந்து கொண்டு வரப்பட்டது என பொலிசார் தெரிவித்தனர். போதை மருந்து கடத்திய குற்றவாளிகளுக்கு எத்தனை வருட சிறை தண்டனை என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் விக்டோரியா நீதிமன்றம் வருகிறார்கள்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF