Sunday, July 3, 2011

இன்றைய செய்திகள்.

இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ.

இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.வடக்கில் எஞ்சியுள்ள இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவது குறித்து காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல இடம்பெயர் முகாம்களும் மூடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த 255238 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 5000 பேரே எஞ்சியிருப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி இடம்பெயர் முகாமக்ளில் எஞ்சிய இடம்பெயர் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார் : பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விரபங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பான் கீ மூனை எதிர்வரும் 5ம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவின் அரசை வீட்டுக்கு அனுப்பும் : விக்கிரமபாகு கருணாரட்ன.
அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை.இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளன. எனினும், அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.
தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேர ணையை அரசு 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இந்தக் குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கும் அரசு தீர்மானித் துள்ளது.அரசிடம் அரசியல் தீர்வு ஒன்று இல்லாததன் காரணமாகவே அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது. இதனை மேலும் இழுத்தடிக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நியமிக்க முனைகிறது என அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், அரசிடம் உண்மையாகவே அரசியல் தீர்வு உள்ளதா, அப்படி இருந்தால் ஏன் காலத்தை இழுத்தடிக்கின்றது, இதனால் அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுமா என கேட்டபோதே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் உதயனுக்குத் தெரிவித்தவை வருமாறு:
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறே அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை வந்த ரொபட் ஓ பிளேக்கிடம் அரசு இது விடயம் தொடர்பில் இணங்கியது. இந்தியாவும் இதனையே கூறியுள்ளது.ஆனால், அரசு தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை எனக் கூறுகின்றது. அதனாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனூடாகத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றது.ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே தீர்மானிக்கும். வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை தங்களின் வாக்குரிமை மூலம் நிரூபித்துள்ளனர்.
மஹிந்தாவை ஆட்சியில் அமர்த்திய நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே
உண்மையாகவே தீர்வு இருந்தால் கூட்டமைப்பினருடன் பேசி வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசு அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.அரசு அப்படியே காலத்தை இழுத்தடிக்க முனையுமானால் அமெரிக்க, இந்திய அரசுகள் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஏனெனில், இந்தியாவும், அமெரிக்காவுமே மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியதுடன், யுத்தத்தை முடிப்பதற்கு பெருமளவு பங்களித்தன. எனவே, இலங்கை விடயத்தில் கட்டாயம் அவர்கள் தலையிட வேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனில், இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆயுதம் வழங்கிய நாடுகளும் பொறுப்புக் கூறவேண்டும்.
மஹிந்த என்ற பொம்பை
தொடர்ந்தும் அரசு இனப்பிரச்சினை தொடர்பில் மௌனம் காக்குமானால், சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.இலங்கை அரசை மஹிந்த என்ற பொம்மை ஒன்று ஆட்சி செய்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக அரசு பக்கம் உள்ள இனவாதத்தைத் தூண்டும் அமைச்சர்களின் தாளத்துக்கு மஹிந்த என்ற பொம்மை ஆடுகின்றது.அவர்களின் அழுத்தத்தாலேயே கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, தீர்வை வழங்க அரசு தயங்குகின்றது என்றார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பின்லேடன் புகழ் பாடும் கவிதை போட்டி.
அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கப்படை இரண்டு மாதங்களுக்கு முன் சுட்டுக் கொன்றது.சர்வதேச தீவிரவாதியாக கருதப்பட்ட பின்லேடன் பாகிஸ்தானில் ஹீரோவாக மதிக்கப்படுகிறார். பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பின்லேடன் பெயரில் இலக்கிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லேடனை புகழ்ந்து பாடும் சிறந்த கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுரம் பற்றி எரியும் பின்னணியுடன் இலக்கிய போட்டி போஸ்டர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.எந்த அமைப்பினர் இந்த போட்டியை நடத்துகின்றனர் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மதவாத மாணவர்கள் அமைப்பினர் மற்றும் தலைவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஊழலால் மக்களின் செல்வாக்கை இழக்க நேரிடும்: அதிபர் எச்சரிக்கை.
நாட்டில் புரையோடியுள்ள ஊழலால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என சீனாவை ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகிலேயே அதிகளவில் எட்டு கோடி உறுப்பினர்கள் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த 1921 ஜூலை 23ம் திகதி ஷாங்காயில் சிறிய குழுக்களுடன் இணைந்து இக்கட்சியை மாவோ ஜிடாங் துவக்கினார்.
பெரிய அளவிலான ரத்த யுத்தத்திற்கு பின் கடந்த 1949ல் தேசிய கட்சியை தோற்கடித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1958ம் ஆண்டில் தொழிற்சாலை உற்பத்தியை பெருக்க மாவோ தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.அப்போது பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் இறந்ததாக வரலாறு கூறுகிறது. கடந்த 1966ம் ஆண்டில் கட்சியை தூய்மைப்படுத்த அறப்போர் துவக்கினார் மாவோ.
மாவோவின் இறப்புக்குப் பின் 1976ம் ஆண்டில் தலைமைக்கு வந்த டெங் ஜியாவ்பிங் சந்தை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் உலகிலேயே இரண்டாம் இடத்திற்கு சீனாவின் பொருளாதாரம் முன்னேறியது.உலக பொருளாதாரத்தில் இப்போது தலை நிமிர்ந்து நிற்கும் அந்நாட்டை ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் 90வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக துவக்கப்பட்டது. தலைநகர் பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் அதிபர் ஹூ ஜிண்டாவோ துவக்கி வைத்தார்.
ஹூ ஜிண்டாவோ பேசியதாவது: நாட்டில் புரையோடியுள்ள ஊழலால் மக்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய ஆதரவை இழப்பதோடு நம்பிக்கையையும் இழக்க நேரிடும். கட்சித் தொண்டர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.வரலாற்றில் நாம் செய்த தவறுகளால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளோம். இதற்கு காரணம் சீனாவின் உண்மையான நிகழ்வுகளுடன் நம்முடைய வழிகாட்டு நெறிமுறைகள் ஒத்துழைக்காதது தான்.இந்த தவறுகளை அரசாங்கத்துடன் இணைந்து மக்களும் திருத்தி இன்று நிமிர்ந்து நிற்கிறோம். தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்ல கட்சி உத்வேகத்துடன் உள்ளது. சீனாவில் ஊழலை சரிசெய்யாவிட்டால் சட்டத்திற்கே ஆபத்தாகிவிடும்.
ஸ்டிராஸ்கான் மீதான வழக்கில் புதிய திருப்பம்.
சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ்கான் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் பெண்ணை ஐ.எம்.எப் முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.இதையடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்ட கான் நியூயார்க்கில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை ஸ்ட்ராஸ்கான் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் அவர் மீது ஓட்டல் பணிப்பெண் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
கினியா நாட்டைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண் ஏற்கனவே தன்னைப் பற்றி அகதிகள் முகாமிற்கான விண்ணப்பத்தில் பொய்யான தகவல்கள் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் வாதாடிய அட்டர்னி ஜெனரல்,"ஸ்ட்ராஸ்கானுக்கு எதிரான பாலியல் வழக்கு மிகவும் வலுவாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று கோர்ட்டில் ஸ்ட்ராஸ்கானுக்கு ஆதரவாக அவரது வக்கீல் இந்த வாதங்களை முன் வைத்தார். மேற்கு ஆப்ரிக்காவில் கினியா நாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தவர் அப்பணிப்பெண்.
அப்போது விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அவர் கொடுத்திருப்பதாகவும், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் வெளிநாட்டில் பணம் பதுக்கியது போன்ற குற்றச்சாட்டுகளும் அப்பெண் மீது இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் அவர் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் முக்கிய வேட்பாளராக களத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 ஆண்டுகளுக்கு பின் சூசி முதன் முதலாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்.
21 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு முதன் முதலாக வெளி இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூசி.மியான்மர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய ஜனநாய லீக் கட்சியின் பொதுச் செயலாளரான ஆங்சான் சூசி 1989ம் ஆண்டு முதல் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
இந்த சமயத்தில் 1990ல் நடந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. ராணுவ ஆட்சியாளர்கள் அவரை சிறையிலேயே அடைத்து வைத்திருந்தனர்.அமைதிக்காக 1991ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் ஆங்சான் சூசியாவார். இந்நிலையில் அவர் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்படாலும் யாங்கூனைவிட்டு இதுவரை அவர் வெளி இடங்களுக்கு செல்லவில்லை.
இப்போது தான் முதல் முறையாக மியான்மர் நாட்டின் பழமையான நகரமான பகன் நகருக்குச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். ஜூலை 4ம் திகதி அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். சூசியுடன் அவரது மகன் கிம் அரிசும் செல்கிறார்.இதுதொடர்பாக தேசிய ஜனநாயக லீக் கட்சி முக்கியத் தலைவர்களில் ஒருவர் கூறுகையில்,"ஆங்சான் சூசி வரும் திங்கள்கிழமை முதன் முதலாக பகன் நகருக்குச் செல்கிறார். இது அரசியல் சுற்றுப்பயணம் இல்லை. தனிப்பட்ட பயணமாக சூச்சி செல்கிறார். பகன் நகரில் இருவரும் 5 நாட்கள் தங்குவார்கள். அவரது அரசியல் சுற்றுப்பயணம் இன்னும் திட்டமிடப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஆங்சான் சூசி அரசியல் சுற்றுப்பணம் மேற்கொள்ளக்கூடாது என்று மியான்மர் உள்துறை இலாகா அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர் அவ்வாறு சென்றால் அவரது கட்சித் தொண்டர்கள் சட்டத்தை மீறிவிடுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே ஆங்சான் சூசி அரசியல் சுற்றுப்பயணம் செய்வதற்கு பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர் சுதந்திரமாக தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார்.
லஷ்கர் இ தொய்பாவால் தான் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல்: அமெரிக்கா.
பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.தீவிரவாத அமைப்புகளும் அவற்றை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதலும் என்ற நோக்கத்தில் "தேசிய தீவிரவாத ஒழிப்பு அமைப்பு" ஒன்றை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.அந்த அமைப்பு தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக அறிக்கை தயாரித்துள்ளது. 19 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை வெள்ளை மாளிகை இப்போது முதன் முதலாக வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தெற்கு ஆசிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்புதான் 2008ம் ஆண்டு மும்பையில் பெரும் தாக்குதலை நடத்தியது. அதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இந்த அமைப்பை ஒடுக்க உலக நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால்தான் அச்சுறுத்தல் உள்ளது.
இந்த அமைப்பை ஒடுக்க மற்ற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தெற்கு ஆசிய நாடுகளின் பலம், உறுதித்தன்மையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதுபோல் ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளின் பலத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறது.மேலும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடியும்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து அல்கொய்தா அமைப்பை ஒடுக்கிவிட்டாலும் அந்த அமைப்புடன் தொடர்புடைய சில தீவிரவாத அமைப்புகள் இன்னும் சில நாடுகளில் பரவியுள்ளன.அந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அது பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை.
ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளதாக உள்துறை அமைச்சர் எச்சரித்து உள்ளார்.ஜேர்மனி உளவுத்துறை தகவல்படி கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 470 தீவிரவாதிகள் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது முந்தய ஆண்டைக்காட்டிலும் 1200ஆக அதிகரித்து உள்ளது என உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் பிரடெரிக் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு பின்னர் அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் குறித்து பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.எதிர்காலத்தில் பயங்கர தாக்குதல் நடைபெறும் என்பதையும் நாம் அறிய முடிகிறது என ஜேர்மனி உளவுத்துறை தலைவர் ஹெய்ன்ஸ் ப்ரோம் எச்சரித்தார். தீவிரவாதம் மற்றும் இடது சார்பு தீவிரவாதம் என இருதரப்பிலும் ஜேர்மனிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
முந்தய ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது அடிக்கடி வன்முறை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இடதுசாரி தீவிரவாதிகள் எண்ணிக்கை ஜேர்மனியில் 32 ஆயிரத்து 200ஆக உள்ளது என்றும் அந்த உளவுத்துறை தலைவர் குறிப்பிட்டார்.சலாபிசம் என்ற மதவாத இஸ்லாமியர்களால் தீவிரவாதம் தலைதூக்கும் நிலை உள்ளது. அனைத்து சலாபிஸ்ட்டுகளும் தீவிரவாதிகள் இல்லை என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டனின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு புலம்பெயர்ந்து வருபவர்களே காரணம்: டன்கன் ஸ்மித்.
இடம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு நபர்களால் பிரிட்டன் இளைஞர்களின் வேலை பறிக்கப்படுகிறது என பிரிட்டன் பணி மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டன்கன் ஸ்மித் எச்சரித்து உள்ளார்.வெளிநாட்டு நபர்கள் மிக குறைந்த ஊதியத்திற்கு பணிகளை ஒப்புக் கொள்வதால் லட்சக்கணக்கான பிரிட்டன் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது என டன்கன் ஸ்மித் தெரிவித்தார்.
குடியேற்ற நடைமுறையில் பிரதமர் டேவிட் கமரூன் கவனக்குறைவுடன் இருக்க கூடாது. பொருளாதார வீழ்ச்சிக்கு முன்பாக உருவாக்கப்பட்ட பெரும்பாலான பணி இடங்களை இடம்பெயர்ந்து வந்த வெளிநாட்டவர்களே கைப்பற்றி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.குடியேற்ற விவகாரம் தொடர்பாக பிரிட்டன் கூட்டணி அரசில் குழப்பம் நிலவுகிறது. குடியேற்ற விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க லிபரல் டெமாக்ரேட் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்றும் டன்கன் ஸ்மித் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிரிட்டனில் அயல்நாட்டு தொழிலாளர்களை பணிக்கு தேர்வு செய்வதற்கு முன்னர் பிரிட்டன் இளைஞர்களால் அந்த பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.பணிக்கான விசா, மாணவர்கள் விசா மற்றும் குடும்பத்தினருடன் சேருதல் போன்ற அனைத்து குடியேற்ற விதிமுறைகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் டன்கன் எச்சரித்தார்.நிறுவனங்களும், இடம்பெயர்ந்து வருபவர்களும் குடியேற்ற முறையை தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஐரோப்பாவை தகர்ப்போம்: கடாபி.
லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார்.லிபியாவில் பொது மக்களை பாதுகாக்கவும் போராட்டக்காரர்களுக்கு உதவவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நேட்டோ படைகள் லிபிய ராணுவ தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்துகின்றன.இந்த நிலையில் கடாபியின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் தலைநகர் திரிபோலியின் கிறீன் சதுக்கத்தில் குவிந்தனர். அவர்கள் பச்சைக் கொடியை அசைத்தவாறு கடாபியை புகழ்ந்து கோஷம் போட்டனர்.
லிபிய தலைநகர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொலைபேசி வழியாக பேசினார். நேட்டோ படையினர் தங்களது வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவோம் என கடாபி எச்சரித்தார்.நேட்டோ படைகள் உடனடியாக விலகுவது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விபரீத விளைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ராணுவ மையங்களை தகர்ப்பதற்காக லிபியாவில் வீடுகள், அப்பாவி பொது மக்கள் மீது நேட்டோ படைகள் தாக்கி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
சிரியாவில் ராணுவம் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொது மக்கள் போராடி வருகின்றனர்.போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. கலவரத்தில் இதுவரை 1350 பொது மக்களும், 350 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதை தொடர்ந்து அரசியல் சட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என அதிபர் பஷார் அல் ஆசாத் அறிவித்துள்ளார். அதை பொது மக்கள் ஏற்கவில்லை. அவர் பதவியை விட்டு விலகியே தீர வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.
எனவே நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹமா, அலெப்போ, டெர் அல் ஷோர், அமவுதா, சுவெய்தா, அல் பாரா, வடாகியா உள்ளிட்ட நகரங்களில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.பேரணியில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அதிபர் பஷாருக்கு எதிராக கோஷமிட்டனர். "பஷாரே நாட்டை விட்டு வெளியேறு, சிரியாவுக்கு சுதந்திரம் கொடு" என்பன போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஒரு கட்டத்தில் பேரணியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களும் நடந்தன. எனவே பேரணியை அடக்க ராணுவத்தினரும், பொலிசாரும் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 14 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லிதுவேனியா சென்றுள்ள அவர்,"சிரியா ஜனநாயகத்தை எதிர் நோக்கியுள்ளது. அதற்கு தகுந்தபடி பஷார் அல் ஆசாத் நடந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
சர்கோசியின் மீது தாக்குதல் நடத்திய நபரிடம் விசாரணை.
தென்மேற்கு பிரான்சின் பிராக்ஸ் நகரில் அதிபர் சர்கோசி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் இருந்து வேகமாக முன்னேறிய 32 வயது நபர் ஒருவர் சர்கோசியின் தோளை பிடித்து இழுத்து தள்ளினார்.
சற்றும் இதை எதிர்பாராத சர்கோசி தடுமாறி விழப் போனார். ஆனால் பக்கத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை தாக்க முயன்ற நபரை கீழே தள்ளி விட்டனர்.பிறகு அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகும் சர்கோசி தொடர்ந்து மக்களை சந்தித்தார்.
அதிபரை தாக்க முயன்ற நபரிடம் ஆயுதம் ஏதுமில்லை. நாடக அரங்க தொழிலில் இருப்பவர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீப காலமாக சர்கோசிக்கு பிரான்ஸ் மக்களிடம் ஆதரவு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்தன. அவர் மீது அதிருப்தி அடைந்த நபர் தாக்க முயன்றிருக்கலாம் என தெரிகிறது. அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் அதிபர் தேர்தலில் மீண்டும் சர்கோசி போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்.
பாரீசில் 1997ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா பலியானார். ஆனாலும் அவரை இங்கிலாந்து மக்கள் இன்னும் மறக்கவில்லை.டயானாவுக்கு நேற்று 50வது பிறந்தநாள். லண்டனில் அவர் வாழ்ந்த கென்சிங்டன் மாளிகை வாசலில் நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என ஏராளமானனோர் திரண்டு டயானா படத்துக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.மலர்கொத்துகள், வாழ்த்து அட்டைகள், கேக், சொக்லேட்களால் அந்த இடம் நிரம்பி வழிந்தது. வெளிநாட்டினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
"மெர்லின் மன்றோ, க்ரேஸ் கெல்லி போன்ற உலகப்புகழ் பெற்றவர்கள் வரிசையில் டயானாவும் அழியாப்புகழ் பெற்று விளங்குகிறார்" என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார் ஒரு ரசிகர்.டயானாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு தின நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பதாக ஜான் லுக்ரி(56) என்ற ரசிகர் பெருமைப்பட்டுக் கொண்டார். டயனாவின் 50வது பிறந்தநாளுக்கு அரச குடும்பத்தினர் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றாலும், மக்கள் அவரை மறக்காமல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
லிபிய அதிபரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை: ஹிலாரி.
லிபிய அதிபர் முஹம்மர் கடாபியின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவிற்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுப்பதனை தவிர்த்து கடாபி உடனடியாக பதவி விலக வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.லிபிய மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கடாபி செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடாபி படையினரிடமிருந்து லிபிய மக்களை பாதுகாக்கும் நோக்கில் நேட்டோ படையினர் செயற்பட்டு வருவதாகவும், ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதே வேளை லிபிய படையினர் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நேட்டோ கூட்டுப்படையினர் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் ஐரோப்பிய வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என கடாபி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF