ஐ.தே.க.வின் காலி ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கூடாது: ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐ.தே.க.வினால் காலியில் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சிக்கு துணிச்சல் இருக்குமாயின் காலி மாவட்டத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்திக்காட்டட்டும், பார்க்கலாம் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.அச்சவாலை ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் முதலாவது ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 01ம் திகதி காலி எல்பிட்டியில் நடாத்தவுள்ளது.
அவ்வாறான நிலையில் நேற்று பத்தேகம பிரதேச பாடசாலையொன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம மேற்கண்டவாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.காலியில் எனக்கெதிராக 01ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த ஐ.தே.க. தயாராகியுள்ளது. அன்றைய தினம் நானும் எட்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லவுள்ளேன். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கக் கூடாது.
அவ்வாறு தேவையில்லாமல் பொலிஸ் பாதுகாப்பை வழங்கி ஏற்பட்ட களேபரம் காரணமாகவே முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பதவியை இராஜினாமாச் செய்ய நோ்ந்தது. அவர் ஒரு முட்டாள். புதிய பொலிஸ் மா அதிபர் புத்திசாலி. அவர் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க மாட்டார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.அமைச்சர் மோ்வின் சில்வா பாணியில் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம சவால் விடுத்திருந்த போதிலும், ஐ.தே.க. ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் அன்றைய தினம் கட்டாயமாக நடைபெறும் என்று ஐ.தே.க.வின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சர்வதேச நடவடிக்கைகளில் சீனாவின் யுவான் நாணயம்.
சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, ஹொங்கொங் டொலர், ஜப்பானிய யென், நியூசிலாந்து டொலர், நோர்வே க்ரோனர், ஸ்டெர்லிங் பவுண், சிங்கப்பூர் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டொலர் என்பன அடங்கும்.
விடுதலைப் புலிகள் திருகோணமலையில் புதைத்து வைத்துள்ள தொண்ணூறு கோடி பணத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை.
விடுதலைப் புலிகளினால் திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டுள்ள தொண்ணூறு கோடி ரூபாவை தேடிப்பிடிக்கும் முயற்சியில் பாதூகப்புத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்டத்தில் பலமாக இயங்கிய காலப்பகுதியில் பிரஸ்தாப தொகைப் பணம் பிரதேச மக்களிடமிருந்து கப்பமாகப் பெறப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.அதனை பிளாஸ்டிக் கொள்கலன்களில் இட்டு தம்பலகாமத்தை அண்மித்துள்ள சூரங்கல் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்துள்ளதாக கிடைத்துள்ள இரகசியத் தகவலொன்றையடுத்தே அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிசாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்தளவு பாரிய தொகைப் பணத்தை பூமிக்கடியில் புதைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரஸ்தாப பணத்தொகையைப் புதைத்து வைப்பதில் முக்கிய பங்காற்றிய விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் இராணுவத்தினருடனான மோதல்களின் போது கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோரக்கூடாது: சரத் பொன்சேகா.
தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையில் சமூகமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களிடம் ஓரிரண்டு வார்த்தைகள் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் வாழும் தமிழர்கள் அனாவசியமான அதிகாரங்களைக் கோராமல், இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கல் மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு அதிகாரத்தை வழங்குமாறு கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழத் தீர்மானிக்க வேண்டும்.தென்னிலங்கை சிங்களவர்களும் வடக்கில் வாழும் தமிழர்களுடைய அழகான கலாசார அம்சங்களைப் புரிந்து கொண்டு, அவர்களின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் வடக்கில் தேவையற்ற பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கப் பார்க்கின்றது. இல்லாத பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கி, அதனை வைத்து அரசியல் செய்வது தான் அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதன் காரணமாகத் தான் வடக்கின் அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு மீண்டும் பயங்கரவாத சூழலொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு.
விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
1. சீனா.
2. இந்தோனேசியா.
3. ஜப்பான்.
4. இந்தியா.
5. பிலிப்பைன்ஸ்.
6. இத்தாலி.
7. பிரித்தானியா.
8. பிரேசில்.
9. நைஜீரியா.
10. அமெரிக்கா.
2. இந்தோனேசியா.
3. ஜப்பான்.
4. இந்தியா.
5. பிலிப்பைன்ஸ்.
6. இத்தாலி.
7. பிரித்தானியா.
8. பிரேசில்.
9. நைஜீரியா.
10. அமெரிக்கா.
பிரான்ஸ் அதிபர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ஒருவர் தாக்கி கீழே தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தெற்கு பிரான்சில் உள்ள டொலுயீசில் மேயர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்கு சென்றார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கூட்டத்தை தாண்டிச் செல்கையில் திடீர் என்று ஒருவர் சர்கோசியின் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதில் சர்கோசி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.உடனே அவர் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டார். இதைப் பார்த்த காவலர்கள் சர்கோசியைத் தாக்கியவரை கைது செய்தனர். அந்த நபர் ஏன் தாக்கினார் என்று உடனடியாகத் தெரியவில்லை.
பின்லேடன் குடும்பத்தை விடுவிக்க வேண்டும்: உமர் பின்லேடன் வேண்டுகோள்.
பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்று அவரது மகன் உமர் பின்லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.கத்தார் தலைநகர் டோஹாவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அந்நாட்டு அரசின் பிடியில் உள்ள பின்லேடனின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்.
அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அந்த அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் பாகிஸ்தான் அரசு பாதுகாக்க வேண்டும்."கத்தார் பின்லேடன் குழுமம்" என்ற குடியிருப்பு கட்டுமான நிறுவனத்தை உமர் பின்லேடன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியா மீது பிரான்ஸ் ஆயுதங்கள் வீச்சு: ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம்.
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் குழுக்கள் பகுதியில் பிரான்ஸ் ஆயுதங்கள் வான் வழியே வீசப்பட்டு உள்ளன.இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் அபாய நிலைக்கு ஆளாகி உள்ளது. பிரான்சின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.லிபிய தலைநகர் திரிபோலிக்கு தென்மேற்கே பழங்குடியின பேராளிகள் பிராந்தியம் உள்ளது. இங்கு தங்களது ஆயுதங்கள் வீசப்பட்டதை பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்க ஒன்றிய கொமிஷன் தலைவர் ஜுன் பிங் கூறுகையில்,"பிரான்ஸ் நடவடிக்கையால் போரில் உருக்குலைந்த சோமாலியா பிரச்சனை லிபியாவில் உள்ளது" என்றார்.ஈக்வடோரியல் கினியா பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் லிபிய விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
லிபியாவில் உள்நாட்டு போர் அபாயம், நாடு துண்டாடப்படும் நிலை, சோமாலியா போன்ற அவலநிலை, நாடு முழுவதும் ஆயுதங்கள், தீவிரவாத அபாயம் போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என ஜுன் பிங் எச்சரித்தார். இந்த அபாய நிலை அருகாமையில் உள்ள நாடுகளுக்கும் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.லிபியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய அமைதித் திட்டம் மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ள போர் நிறுத்தம் தேவை என்றும் அவர் கூறினார்.
ஈரான் நடத்திய ரகசிய ஏவுகணை சோதனை: இங்கிலாந்து குற்றச்சாட்டு.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் வில்லியம் கேக் கூறுகையில்,"கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை மூன்று ஏவுகணை சோதனைகளை ஈரான் ராணுவம் ரகசியமாக நடத்தியுள்ளது. தற்போது அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு விரோதமானது" என்றார்.ஆனால் இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை திசை திருப்ப இங்கிலாந்து மேற்கொள்ளும் சூழ்ச்சி இது என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நியூயோர்க் விமான நிலையத்திற்குள் படையெடுத்த ஆமைகள்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கென்னடி விமான நிலையம் ஜமைக்கா வளைகுடா பகுதியின் முனையில் அமைந்துள்ளது.இப்பகுதியில் வசிக்கும் ஆமைகள் முட்டையிடும் சீசனில் கடற்கரையை நோக்கி கூட்டமாக செல்வது வழக்கம்.
கென்னடி விமான நிலையத்தில் பதுங்கியிருந்த சுமார் 150 ஆமைகள் நேற்று காலை 6.45 மணியளவில் ஓரே நேரத்தில் கடற்கரையை நோக்கி வெளியேறத் தொடங்கின.விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் ஏராளமான ஆமைகள் ஊர்ந்து சென்றதை பார்த்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமான போக்குவரத்தை மாற்றியமைத்தனர்.பிஸியான காலை நேரத்தில் புறப்பட தயாராகி கொண்டிருந்த விமானங்கள் அனைத்தையும் மாற்று ஓடுபாதை வழியாக இயக்கினார். இதனால் விமானங்கள் 30 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.
கணணி திருடர்களால் அல்கொய்தாவின் ஓன்லைன் இணையதளம் சீர்குலைவு.
இணையதளம் வழியாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் அனுப்பி தொடர்பு கொள்ளும் அல்கொய்தாவின் நடவடிக்கையை கணணி திருடர்கள் சீர்குலைத்துள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு வல்லுநர் ஒருவர் கூறினார்.அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அல்கொய்தாவின் ஓன்லைன் தொடர்புகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் ஒரே ஒரு நம்பத்தகுந்த விநியோக சேனல் கூட அந்த அமைப்புக்குக் கிடைக்கவில்லை என அல்கொய்தாவின் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிளாஷ்பாயின்ட் குளோபல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இவான் கோல்மன் தெரிவித்தார்.இந்த சேதத்தை சரிப்படுத்தி மீண்டும் தங்கள் நெட்வொர்க்கைப் பெற அவர்களுக்கு பலநாட்கள் பிடிக்கும் என்றும் அந்த தடுப்பு வல்லுநர் கூறுகிறார்.
சவூதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது: பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில் கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும் மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது.
1960ல் சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் தற்போது அந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் 58 சதவீதம் பெண்கள் கல்வி கற்கின்றனர்.ஆனாலும் பணியிடங்களில் வெறும் 15 சதவீதம் பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பெண்களை பெரியளவில் பணியில் சேர்க்கும்படி அந்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தவிட்டு வருகிறது.
சவுதியில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவு என்பதால் அரசு சார்பில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை. அனைவரும் கார் வைத்திருக்கின்றனர்.ஆனால் பெண்கள் கார் ஓட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதால் இவர்கள் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு முக்கிய வேலைகளுக்காக வெளியே செல்லும் போது வீட்டில் ஆண்களை அல்லது டிரைவர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் வீட்டில் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி டிரைவர்களின் சம்பளமாக சென்று விடுகிறது.
சவுதி மன்னர் அப்துல்லா கூறுகையில்,"பெண்கள் கார் ஓட்டுவது சமுதாயம் சார்ந்த விடயம். இந்த விடயத்தில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறிவிட்டார். இந்நிலையில் 1990ல் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 47 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அனைவரும் தங்களது வேலையை இழந்தனர். நாட்டில் இருந்து வெளியேற இவர்களுக்கும், இவர்களது கணவர்களுக்கும் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டுவதற்கு அனுமதி கோரி அந்நாட்டின் பெண் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனாலும் மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில் கடந்த 17ம் திகதி ரியாத்தில் 40 பெண்கள் துணிந்து கார் ஓட்டினர். கணவர்களை காரில் அமர வைத்து கடைகளுக்கு ஷாப்பிங் சென்றனர்.இதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரவேற்றிருந்தார். கடந்த இரு வாரங்களாக கார் ஓட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் கார் ஓட்டிய ஐந்து பெண்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பெண் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காபூல் ஹோட்டல் தாக்குதல்: தலிபான் தீவிரவாதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இன்டர் காண்டினன்டல் ஹோட்டல் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று அதிகாலை முடிவுக்கு வந்தது.ஆப்கானிஸ்தான் கமண்டோக்கள் நேட்டோ ஹெலிகாப்டர் உதவியுடன் தலிபான்கள் தாக்குதலை முறியடித்தனர். இந்த தாக்குதலின் போது ஸ்பெயின் விமான ஓட்டுநர் உள்பட 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் 9 தலிபான்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் பகுதியில் முந்தய நிலையை காட்டிலும் பாதுகாப்பு உள்ளது. எனவே அங்கு உள்ள துருப்புகளில் 33 ஆயிரம் வீரர்களை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்ப பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறி இருந்தார்.அவரது கருத்தை பொய்ப்பிக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரில் கடுமையாக தாக்கி உள்ளார்கள். தீவிரவாதிகளின் எதிர்பாராத தாக்குதல் ஒபாமாவை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் எங்கள் பணி முடிவடையவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துகிறது என புதன்கிழமை இரவு அவர் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.தீவிரவாதிகள் எங்கள் எல்லை சோதனை சாவடி வழியாக வரவில்லை. அவர்கள் மேற்கு மலைப்பகுதி வழியாக ஊடுருவி உள்ளனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த போது பல்வேறு இடங்களை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு மாநாட்டில் பங்கேற்க ஹோட்டலுக்கு வந்திருந்தனர். அங்கு அயல் நாட்டு உயர் அதிகாரிகளும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்.
வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்ண உணவின்றி இம்மக்கள் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர்.இதுகுறித்து வடகொரியாவின் பயோங்யாங்கில் உள்ள வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அலுவலகத்திற்கான சுவிஸ் ஏஜன்சி கதரினா ஜெல்வெஜர் கூறியதாவது: வடகொரியாவில் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் நாட்டிற்கு கிடைத்து வந்த நன்கொடைகள் குறைந்து சர்வதேச அளவில் விலைவாசி மற்றும் இறக்குமதி மீதான செலவு அதிகரித்துள்ளதால் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களாக ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சில பகுதிகளில் குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலங்களைத் தோண்டி புல் மற்றும் மூலிகை இலைகளை பறித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டில் குளிர் பருவம் நீடித்ததால் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளும் குறைந்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டில் உலக உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் உணவு வழங்கப்பட்டது. இது கடந்தாண்டில் 55 ஆயிரம் டன்களாகக் குறைந்தது.
ஆனால் நடப்பு மாதத்தில் வெறும் 11 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற தவறான வழிகளில் உணவு உதவியை பயன்படுத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.மேலும் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உரமும் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெங்குளூ என்ற நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் 175 கி.மீ தூரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 5.6 என பதிவான இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மேலும் சிலி நாட்டின் துறைமுக நகரமான வல்பாரைசோவிலிருந்து தென்மேற்கு திசையில் 94 கி.மீ தொலைவில் தலைநகர் சாண்டியாகோவின் மேற்கு திசையில் 136 கி.மீ தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
547 நாட்களுக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை விடுவித்த தலிபான்கள்.
கடந்த 547 நாட்களுக்கு முன்னர் இரண்டு பிரான்ஸ் பத்திரிகையாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கடத்திச் சென்றனர்.அவர்களது நிலை என்ன என்று தெரியாத நிலையில் திடீரென விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலை எல்சீ பேலஸ் நேற்று அறிவித்தது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஹெலார்வே மற்றும் ஸ்டெபானே என்ற இரு பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே உள்ள மாகாணமான காபிசா மலைப் பகுதியில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி பிரான்ஸ் பத்திரிகையாளர்களை தலிபான்கள் கடத்தினார்கள்.
பத்திரிகையாளர்கள் எதிர்பாராத தருணத்தில் விடுவிக்கப்பட்ட நிகழ்வு அவர்களது குடும்பத்தினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்ட விடயம் மிகுந்த சந்தோஷத்தை தருவதாக உள்ளது.அவர்கள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் பத்திரிகையாளர் விடுவிப்பு தகவலால் பாரிஸ் நகரில் பத்திரிகையாளர்களின் ஆதரவாளர்களும், உடன் வேலை பார்க்கும் பணியாளர்களும் குவிந்தனர். தலிபான்கள் விடுவித்த ஒரு பத்திரிக்கையாளரின் பெயர் ஸ்டெபானே போனேர். அவருக்கு 46 வயது ஆகிறது.கமெரா மேனாக பணிபுரியும் அவர் ஈராக் போர் நிகழ்வுகளை படம் பிடித்து உள்ளார். அவர் 2000ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது.தலிபான்களிடம் பிடிபட்ட மற்றொரு பத்திரிகையாளர் ஹெலர்வே கெஸ்குரே ஆவார். அவருக்கு வயது 47 ஆகிறது. இவர் முன்னாள் யுகோசுலாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் நிகழ்வு குறித்த தகவல்களை நேரில் சென்று எழுதி வந்தார்.
பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படும்: தலிபான்கள் எச்சரிக்கை.
அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத இயக்கத் தலைவர் வாலி உர் ரெஹ்மான் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில்,"பாகிஸ்தானில் 10 இடங்களைத் தாக்க தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அதில் முதல் இடமாகவே மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தைத் தாக்கியதாகவும்" கூறினார்.கடந்த மாதத்தில் கராச்சியிலுள்ள மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தை தலிபான்கள் தாக்கி இரு உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தினர். 10க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொன்றனர்.
இந்நிலையில் மேலும் 9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ள ரெஹ்மான் பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.இன்னும் 8 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்த ரெஹ்மான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் தாக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நேட்டோ உள்ளிட்ட நாடுகளில் விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் அவற்றில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையே முதல் குறியாகும் என்று எச்சரித்தார். ரெஹ்மானின் தலைக்கு அமெரிக்கா ரூ.27 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மே 2ம் திகதி பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளிலும் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை.அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்த முயன்ற தலிபான்களின் திட்டம் முறியடிக்கப்பட்டாலும், மேற்கு நாடுகளில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் திறன் மற்றும் தாக்குதல் வலிமை குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.