Sunday, September 4, 2011

இன்றைய செய்திகள்.

ஐ.நா. மனிதஉரிமை சபையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் விளக்கம் அளிக்கப்படும் : அரசு.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது உரிய பதில்களைத் தெளிவாக வழங்கத் தயாராகவே உள்ளது அரசு.
மேற்படி மாநாட்டிற்குச் செல்லும் குழுவில் பங்குபெறும் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு நாடுகள் வெவ்வேறான கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகளும், எதிராக பல நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைமீது சுயாதீன விசாரணை தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்துக்குத் தகுந்த பதில் வழங்கப்படுமா என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் வினவியபோது, ஜெனிவா மாநாட்டின்போது தகுந்த பதில் வழங்கத் தயாராகவுள்ளோம் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நானும் இன்னும் சில அமைச்சர்களும் செல்லவுள்ளோம்.
குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதில்கள் அந்த மாநாட்டின்போது அளிக்கத் தயாராகவுள்ளோம். அதற்கான சவாலை ஏற்றுள்ளோம்.
மனித உரிமை மாநாட்டின் போது கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தெளிவான, தகுந்த பதில்களை அளிக்கவுள்ளோம்.
அதேபோன்று, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ஐரோப்பா உட்பட ஏனைய முக்கிய நாடுகளின் நிலைப்பாடுகள் ஜெனிவா மாநாட்டின்போது எமக்கு அறிவிக்கப்படும் என்றார். 
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது : படையினர்.

வடக்கில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நோக்கத்திற்காக வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக குறித்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்படும் : உயர் கல்வி அமைச்சு.

இலங்கையில் பல்கலைக் கழக மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதன் பின்னர் அவற்றை மாணவர்களிடம் கையளிக்க உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக உப வேந்தர்கள் இதற்கான விருப்பத்தினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடைத்தாள்களை திருத்தும் போது, சில விரிவுரையாளர்கள் உரிய வகையில் திருத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை என மாணவர்கள் முறையிடுகின்றனர்.
இந்த முறைப்பாடுகளை அடுத்தே திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களிடமே கையளிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டுக்கு எதிராக பாரிய சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன : வீரவன்ச குற்றச்சாட்டு.

நாட்டுக்கு எதிராக பாரியளவில் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் காலனித்துவ நாடுகள், இலங்கையை பிரிவினைவாத சூழ்ச்சியில் சிக்க வைப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இந்த சதி வலைகளில் அரசாங்கம் சிக்கிவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சிஸ்சிறிபாயவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மேற்குலக நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன.
நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பால் அவுஸ்திரேலியாவின் ஆளுங் கட்சிக்குள் குழப்பம்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டின் தலைமைத்துவம் தொடர்பில் அவரது ஆளும் தொழிற் கட்சியில் குழப்பநிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனக்கு பதவி விலகும் நோக்கம் கிடையாது என கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்தவர்களை மலேசியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் திட்டம் சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளமையானது பிரதமர் ஜூலியா கில்லார்ட்டிற்கு பாரிய அடியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜூலியா கில்லார்ட்டின் பதவி நிலைக்கு, நியமிக்கப்படக்கூடியவர்களும் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் உள்ளடங்கலான பலரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. கெவின் ரூட் பொதுத் தேர்தலையொட்டி கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி விலகினார்.
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களில் ஜூலியா கில்லார்ட்டின் மக்கள் அங்கீகாரம் கெவின் ரூட் பதவி விலக நிர்ப்பந்தத்துக்குள்ளாகிய போது இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் ஜூலியா கில்லார்ட் நேற்று வெள்ளிக்கிழமை தனது மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்பும் வகையில் பல தடவைகள் தொலைக்காட்சியில் தோன்றினார்.
நான் செய்ய வேண்டியவைகள் நிறைய உள்ளன என்று கூறிய ஜூலியா கில்லார்ட், நான் இந்தப் பதவிக்கு சேவையாற்ற மிகச் சிறந்த நபராக உள்ளேன். நான் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளேன். சிறந்த எதிர்காலத்தை நோக்கி இந்த தேசத்தை இட்டுச் செல்வதே எனது பணியாகவும், எனக்கு எதிர்காலம் தொடர்பான தெளிவான நோக்குள்ளதாகவும், நாங்கள் முக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்றும் தெவித்தார்.
ஆளுங் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தன்னை அணுகி தான் பதவி விலகுவது தொடர்பில் கேட்டுக் கொள்ளவில்லை என ஜூலியா கில்லார்ட் வலியுறுத்தினார்.
ஜூலியா கில்லார்ட்டின் ஆட்சி அதிகாரமானது கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரதும் 3 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்கட்சி வட்டாரத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத சிலர் கெவின் ரூட்'டை பதவி நிலைக்கு கொண்டு வர யோசனை தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய பத்திகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்படுபவர்கள் வசையில் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தும் உள்ளடங்குகிறார்.
ஜூலியா கில்லார்ட் தனது அதிகாரத்தை இழந்து விட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது நண்பர்கள் சிலர் ஜூலியா கில்லார்ட் சிறந்த தலைவர் என தெரிவித்துள்ளனர். 
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை : என்.கே. இளங்கக்கோன்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
சிவில் சட்டங்கள் நாட்டில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கடந்த காலங்களைப் போன்றே பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் இயங்கி வரும் என தெரிவித்துள்ளார்.
தேடுதல் வேட்டைகள், சுற்றி வளைப்புக்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள் என பொலிஸாரின் வழமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா மாநாட்டில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டால் ஆபத்து!- ஐ.தே.க. எச்சரிக்கை.

சர்வதேச நாடுகள் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெனீவா மாநாட்டில் இலங்கை பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாநாட்டில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமாயின் எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 வீடியோக் காட்சிகள் என்பன நாட்டிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்த்து விடும். எனவே அரசாங்கம் தமது பிரதிநிதிகளை தயார் நிலையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கருத்துத் தெவிக்கையில்,
ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரங்கள் முக்கிய இடம்பிடிக்கும் என்று உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச அளவிலும் பேசப்படுகின்றது.
எவ்வாறாயினும் கடந்த சில காலங்களாகவே இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் சுமத்தி வருகின்றது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆக்கபூர்வமாக அரசாங்கம் செயற்படவில்லை. இராஜதந்திர ரீதியில் உரிய முறையில் அணுகவும் இல்லை.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையாகும்.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலே சனல் 4 தொலைக்காட்சி வீடியோக்களையும் வெளியிட்டது. இந்த வீடியோ காட்சியானது மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாது இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
எனவே சனல் 4 வீடியோவில் காணப்படும் போர் குற்றச்சாட்டுக்களும் சாட்சியங்களும் நாட்டிற்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான பாரியளவிலான விமர்சனப் பார்வையை இன்று இலங்கை மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ளன.
ஆகவே தான் ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கை விடயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கையர் என்ற வகையில் நாட்டை பாதுகாக்க வேண்டியது நம் அனைவனதும் கடமையாகும். மாநா ட்டில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்ப டுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப் புடன் பதில் கூறப்பட வேண்டும். அரசாங் கம் ரண்பட்டு பிரச்சினைகளை வளர்த் துக் கொள்ளக்கூடாது என்றார். 
அரசாங்கக் காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது!

அரசாங்கக் காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், இனிவரும் காலங்களில் அரசாங்கக் காணிகள் 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சர்ச்சைக்குரிய செங்கரிலா ஹோட்டல் காணி விற்பனையைத் தொடர்ந்து அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்தள்ளது.
காலிமுகத் திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமைகத்திற்கு சொந்தமான காணிகளை செங்கரிலா ஹோட்டலுக்கு காணி விற்பனை செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அரசாங்கக் காணிகள் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாக பிரதிப் பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக பொலிஸ் அனுமதியைப் பெறுவதற்கு இலகுவான குறுந்தகவல் முறை.

வெளிநாடு செல்வதற்கு பொலிஸ் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளும் தேவையினை உடையவர்கள் ஏற்கனவே பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைத்துள்ள தங்களுடைய அறிக்கையின் தொடர்பான தகவல்களைக் குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிராஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 
இதன்படி, PLC  (இடைவெளி) CRT  (இடைவெளி)  (பதிவு இலக்கம்)  என்பவற்றை உங்களுடைய கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து 1919  என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை அனுப்புவதன் மூலம் உங்களுடைய பொலிஸ் அறிக்கை குறித்த தகவல்களை இலகுவில் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ நாட்டில் இரு பத்திரிக்கையாளர்கள் படுகொலை.
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் 2 பெண் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் காண்டரலினே என்ற அரசியல் பத்திரிகையின் நிறுவனர் ஆவார். மெக்ஸிகோ சிட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பெண்களின் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் மார்சலா யார்சே(45) மற்றும் ரோஸியோ கோன்சாலெஸ்(48) என்ற இரு பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்தது.
இருவரின் கைகளும் பின்பக்கம் கட்டப்பட்டு இருந்ததாகவும், கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதுவொரு கொடூரமானக் கொலை என்று காண்டரலினே இதழின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
30 குழந்தைகளை கடத்திச் சென்ற ஆப்கன் பயங்கரவாதிகள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 30 குழந்தைகளை ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஜாவுர் பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த 30 குழந்தைகள் நேற்று ஈத் பண்டிகையைக் கொண்டாடிய போது தவறுதலாக எல்லையைத் தாண்டி ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்திற்குள் சென்று விட்டனர்.
அப்போது ஐந்து வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்திய பயங்கரவாதிகள் தாரிக் இ தலிபான் அமைப்பினராக இருக்கலாம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்களை விடுவிப்பதற்காக பழங்குடியினத் தலைவர்கள் ஆப்கனுக்குச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டுத் தரும்படி பாகிஸ்தான் அரசு மற்றும் பழங்குடியினத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த விமானம் மாயம்.
சிலி நாட்டை சேர்ந்த காஸா 212 என்ற விமானம் ஒன்று 21 பயணிகளுடன் பசிபிக்பெருங்கடல் பகுதியில் உள்ள ஜூலியன் பெர்னாண்டஸ் தீவின் மேற்பகுதியில் பறந்து கொண்டு இருந்தது.
அப்போது மர்மமான முறையில் காணாமல் போனது. காணாமல் போன விமானம் கடுமையான காற்றின் காரணமாக கடலில் விழுந்து இருக்கலாம் என தெரிகிறது.
கடலில் விமானம் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 21 பயணிகளும் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பயணிகளின் பொருள்கள் கடலின் மேற்பகுதியில் மிதப்பதாக தீவின் மேயர் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் வெளியீடு.
விக்கிலீக்ஸ் இணையதளம் தன் வசம் இருந்த மேலும் இரண்டரை லட்சம் அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை நேற்று முழுவதுமாக வெளியிட்டது.
இதனால் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அவுஸ்திரேலிய அரசால் கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டு பிரபலம் அடைந்த "விக்கிலீக்ஸ்" இணையதளம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "தி கார்டியன்", அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளிவரும் "தி நியூயார்க் டைம்ஸ்", ஜேர்மனியின் "டெர் ஸ்பைஜல்", ஸ்பெயினின் "எல் பைஸ்" மற்றும் பிரான்சின் "லீ மாண்ட்" ஆகிய பத்திரிகைகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
அதன்படி அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இந்தப் பத்திரிகைகள் மூலம் முதலில் வெளியாகும். அதன்பின் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் இந்த ஆவணங்கள் வெளியாகும். ஆனால் கடந்தாண்டு டிசம்பரில் விக்கிலீக்ஸ் இணையதளம் தரும் தகவல்களின் ஆதாரங்கள் குறித்து சந்தேகம் கொண்ட "தி கார்டியன்" அதனுடனான தனது உறவை சட்டப்படி முறித்துக் கொண்டது.
இந்நிலையில் சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிடாமல் வைத்திருந்த அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்கள் குறித்த கடவுச்சொற்களை கார்டியன் பத்திரிகை வெளியிட்டு விட்டதாக அசாஞ்ச் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து வெளியிடாமல் இருந்த இரண்டு லட்சத்து 51 ஆயிரம் அமெரிக்க ரகசிய ஆவணங்கள் நேற்று விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றை எவ்வித கடவுச்சொற்களும் இன்றி நேரடியாக இணையதளத்தில் எவரும் பார்க்கலாம். இவற்றுக்கு எந்தப் பத்திரிகையும் உரிமை கோர முடியாது.
இதனால் கடுப்பாகிப் போன "தி கார்டியன்" உள்ளிட்ட ஐந்து பத்திரிகைகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில்,"விக்கிலீக்சின் இந்த நடவடிக்கை எங்களை வருத்தப்படுத்தியுள்ளது. தற்போது வெளியான ஆவணங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவை அனைத்தும் முழுக்க முழுக்க அசாஞ்சின் நடவடிக்கையே" என விளக்கம் அளித்துள்ளன.
இந்நிலையில் வெளியான ஆவணங்களில் அவுஸ்திரேலிய உளவுத் துறை தொடர்பாகவும் ஒரு ஆவணம் இருப்பதால் அசாஞ்ச் அவுஸ்திரேலிய அரசால் விரைவில் கைது செய்யப்படலாம் என தி கார்டியன் பத்திரிகை கூறியுள்ளது.
இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: தனியாக பிரிந்து சென்ற சிறு நகரம்.
இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டின் ஒரு சிறு நகரம் தன்னை விடுதலை அடைந்ததாக அறிவித்து புதிய நாணயங்களையும் வெளியிட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இத்தாலி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் பல்வேறு நிதியுதவிகளைப் பெற்றுள்ளது.
அதற்கு ஈடாக பல நிர்வாகத்தில் பல செலவுகளை அது குறைக்க வேண்டும். அதன்படி சிறிய உள்ளூர் நிர்வாகங்களை பெருநகர நிர்வாகங்களுடன் இணைத்து வருகிறது இத்தாலி அரசு.
இதற்கு ப்ரோசினோன் மாகாணத்தைச் சேர்ந்த பிலெட்டினோ என்ற சிறு நகரம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மொத்தம் 550 பேர் மட்டும் வாழும் இந்நகரின் நிர்வாகம் ட்ரெவி என்ற அண்டை நகர நிர்வாகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
இதனால் நகர மேயர் லுகா செல்லாரியின் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து செல்லாரி பிலெட்டினோ விடுதலை அடைந்ததாக அறிவித்தார்.
தொடர்ந்து "பியோரிட்டோ" என்ற பெயரில் புதிய நாணயங்களையும் அச்சடித்தார். இந்த நாணயங்கள் உடனடியாக அந்நகரில் புழக்கத்துக்கு விடப்பட்டன. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்த நாணயங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
இந்த அதிரடி நடவடிக்கையால் பிலெட்டினோ ஐரோப்பா, ரஷ்யா முழுவதும் பிரபலமாகி வருகிறது. "ஒருகாலத்தில் இத்தாலி முழுவதும், இதுபோன்ற சுயேச்சை சிறு நகரப் பகுதிகளாகவே இருந்தன. இத்தாலியால் நான்கு பக்கமும் சூழப்பட்டுள்ள சான் மரினோ போன்ற சிறு நாடுகள் இருக்கும் போது பிலெட்டினோ வாழ முடியாதா?" எனக் கேள்வி எழுப்புகிறார் மேயர் செல்லாரி.
பழங்குடியினருக்கு பாடம் கற்பிக்க சிறுவர்களை கடத்திச் சென்ற தலிபான்கள்.
பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் அந்நாட்டு ராணுவத்தை ஆதரிக்கும் பழங்குடியினருக்கு பாடம் கற்பிக்கவே 25 சிறுவர்களைக் கடத்தினோம் என பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மேற்கில் உள்ள பஜாவுர் பழங்குடியினப் பகுதியில் நேற்று முன்தினம் 60 சிறுவர்கள் ஈத் பண்டிகையையொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
விளையாட்டின் போது அவர்கள் வழி தவறி ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் சென்றனர். ஐந்து வாகனங்களில் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் வெளியிட்ட அறிக்கையில்,"எங்களுக்கு எதிராக பழங்குடியினத் தலைவர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவுகின்றனர். அவர்களுக்குப் பாடம் கற்பிக்கத்தான் 25 சிறுவர்களைக் கடத்திச் சென்றோம்" என்று கூறியுள்ளார்.
கடாபிக்கும் அமெரிக்க உளவுத் துறைக்கும் இடையே ரகசிய தொடர்பு.
திரிபோலியில் உள்ள உளவுத் துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
திரிபோலி மீது நேட்டோ விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சேதம் அடைந்த கட்டடங்களுள் லிபியா உளவுத் துறை அலுவலகமும் ஒன்று. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களைக் கைப்பற்றி அவற்றில் உள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவற்றின் படி கடாபியின் ஆட்சியில் லிபியா உளவுத் துறை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பிரிட்டனின் எம் 16 உள்ளிட்ட பல நாடுகளின் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்தது. ஆனால் கடாபி தான் மேற்குலகிற்கு முழு எதிரியாக தன்னைச் சித்திரித்துக் கொண்டார்.
லிபியாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் அமெரிக்காவிடம் இருந்தனர். அவர்களை மீண்டும் லிபியாவுக்குக் கொண்டு வந்து விசாரிப்பது குறித்து சி.ஐ.ஏ லிபியா உளவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டது.
கடந்த 2004ல் இதற்காக ஒரு நிரந்தர அலுவலகத்தை திரிபோலியில் திறப்பது குறித்து சி.ஐ.ஏ ஆலோசித்தது. கடாபி எதிர்ப்பு ராணுவத்தின் தளபதி அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் ஒரு காலத்தில் அல்கொய்தாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட "லிபியா இஸ்லாமிய போராட்டக் குழு"வில் இருந்தவர்.
அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சி.ஐ.ஏ.வால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பின், லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் திருப்பி அனுப்ப 2004 மார்ச்சில் சி.ஐ.ஏ.வுக்கும், லிபியா உளவுத் துறைக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.
அதே போல் பிரிட்டனின் எம் 16க்கும், அப்போதைய லிபியா உளவுத் துறைத் தலைவர் மூசா குசாவுக்கும் இடையிலும் தகவல் தொடர்பு நடந்துள்ளது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும், சி.ஐ.ஏ.வும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.
இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் இன்டர்நெட்: நிபுணர்கள் எச்சரிக்கை.
இளைஞர்களிடம் பரவி வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடுகள் சிதைந்துவிடும் என்று சீன அரசக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவியல் வளர்ச்சியில் இன்டர்நெட் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சில நிமிடங்களில் உலகளவில் தகவல்கள் பரவ இன்டர்நெட் வழிவகுப்பது சீன அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுக்கு எதிராக இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இன்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். இதன் மூலம் பொதுமக்களிடம் ஆங்காங்கே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
இன்டர்நெட் தகவலின் அடிப்படையில் சீனாவில் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த சீன அரசு ஆயிரக்கணக்கான இன்டர்நெட் வெப்சைட்டுகளை அழித்து விட்டது. பல வெப்சைட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. எனினும் இன்டர்நெட்டை சீனாவில் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் அதிகரித்து வரும் இன்டர்நெட் மோகத்தை தடுக்காவிட்டால் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில் கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்துவிடும். பல நாட்டு அரசுகள் நெருக்கடியை சந்தித்து வருவதற்கு இன்டர்நெட்தான் காரணம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் அரசு நாடுகளில் இருந்து பலரும் பலவித எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருவதால் அவற்றை எப்படி தடுப்பது என்று தெரியாமல் சீன அரசு கைபிசைந்து வருகிறது. இன்டர்நெட்டில் உடனடியாக கருத்து பரவுகிறது. அது ஒரு மாபெரும் இயக்கத்துக்கு வழிவகுக்குகிறது என்று கம்யூனிச எழுத்தாளர்களும் அரசை எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி சீறி பாய்ந்து வரும் ராக்கெட்டின் உடைந்த பாகங்கள்.

பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன.

இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண்வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன.
அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன. அவை பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. அவை தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ராக்கெட்டின் உடைந்த உதிரி பாகங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்ற விரைவில் அகற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகி உள்ளது. அதற்கான எச்சரிக்கையை அமெரிக்காவில் உள்ள தேசிய ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
பூமியை விண்வெளியில் தற்போது சுமார் 1000 செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு செயல்படுவதாகவும், சுமார் 16,094 உடைந்த பாகங்கள் பூமியை நெருங்கி வருவதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே ராக்கெட் உடைந்த பாகங்களை அகற்றும் புதிய திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
நோயால் அவதிப்படும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சிராக்.
முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஜர்க்குஸ் சிராக்(78) உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்படுகிறார். இதனால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சிராக் மீதான ஊழல் வழக்கு தலைநகர் பாரிசில் நாளை துவங்க உள்ள நிலையில் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நீதிபதியிடம் கடிதம் தரப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்துடன் சிராக் உடல் நிலை மிக மோசமாக இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ்களும் இணைக்கப்பட்டு உள்ளன. சிராக்கின் உடல் பல ஆண்டுகளாக மிக மோசமாக ஆகி உள்ளது.
அவர் மிகவும் சோர்வடைந்து நடக்கவே தடுமாறுகிறார் என அவரது மருமகன் பிரடரிக் சலாட்-பாரோக்கஸ் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சிராக் பாரிஸ் மேயராக இருந்த போது பொது நிதியை முறைகேடு செய்தது உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இருப்பினும் எந்த குற்றச்சாட்டிலும் அவர் குற்றவாளி என இதுவரை அறிவிக்கப்படவில்லை. 2ஆம் உலகப்போருக்கு பின்னர் நாட்டின் மிக பெரிய தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபராக சிராக் உள்ளார்.
இவர் கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக் மீது படையெடுத்ததை எதிர்த்து சர்வதேச அளவில் பேசப்பட்டவர் ஆவார். சிராக் 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். இதனால் நாட்டின் உயர் தலைவருக்கு எதிராக அப்போது விசாரணை நடத்த முடியாத சூழல் இருந்தது.
அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி புயல் அபாயம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பெரும் புயலாக உருமாறி அமெரிக்காவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக அந்நாட்டு வானிலை அறிவிப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில ஆளுநர் பாபி ஜிண்டால் செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலத்தில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருவதால் கடலோரப் பகுதிகளிலும், உள்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில பகுதிகளில் 30-லிருந்து 38 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அபாயத்தை எதிர் நோக்கி தயாராக இருப்பது கடந்த காலத்திலிருந்து பெற்ற அனுபவமாகும்.
மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள இதுவே சரியான தருணம் என்று அவர் தெரிவித்தார். மெக்ஸிகோ வளைகுடாபகுதி கடலிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றியுள்ளன.
மிஸிஸிப்பி நதியின் முகத்துவாரத்திலிருந்து 360 கிலோ மீட்டர் தெற்கில் மையம் கொண்டுள்ள அந்த காற்றழுத்தத் தாழ்வு மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
ஐரின் புயலால் வெள்ளக்காடான அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி இயல்பு நிலைக்கு மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. 2005ம் ஆண்டு காத்ரீனா புயலால் அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் மக்களை காப்பாற்றுவதற்காக ஜேர்மனி 100 கோடி யூரோ நிதியுதவி.
லிபியாவில் அத்தியாவசிய மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதற்காக 100 கோடி யூரோவை ஜேர்மனி விடுவித்துள்ளது.
கடாபி ஆட்சிக் காலத்தில் முடக்கி வைக்கப்பட்ட 700 கோடி யூரோவில் இப்போது 100 கோடி யூரோவை விடுவிக்க முன்வந்துள்ளது. இத்தகவலை ஜேர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கருத்தரங்கில் லிபியாவின் நண்பர்கள் குறித்த விவாதத்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
மனிதாபிமான உதவிகளுக்காக 100 கோடி யூரோவை விடுவிக்கும் ஜேர்மனியின் முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர லிபியாவில் ஏற்பட்டுள்ள இடைக்கால சீரமைப்பு கவுன்சிலுக்கு(என்.டி.சி) ஜேர்மன் அரசு தேவையான ஒத்துழைப்புகளை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக குடிநீர் விநியோகம் சீர் செய்வது, மருத்துவமனை மற்றும் போக்குவரத்து சேவைகளை 6 மாதங்களுக்கு மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல வட அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு நீண்ட கால அடிப்படையில் உதவிகளைச் செய்ய ஜேர்மனி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்டமைப்பு, காவல்துறைக்கு பயிற்சி உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
லிபியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்வதற்காக முடக்கிவைக்கப்பட்ட தொகையை விடுவிக்க முன்வந்துள்ள நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும். லிபியாவில் கடந்த மார்ச் ஏப்ரலில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்தபோது அந்நாட்டு அரசின் சொத்துகளை ஜேர்மனி முடக்கியது.
இதேபோல பிரான்ஸ் அரசும் முடக்கி வைத்துள்ள 150 கோடி யூரோவை விடுவிப்பதற்கு ஒப்புதல் பெற்றுள்ளது. ஏற்கெனவே 14 கோடி லிபியன் தினார்களை விடுவிக்க பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
விரைவிலேயே பிரிட்டன் நிறுவனம் அச்சிட்ட 90 கோடி பிரிட்டன் பவுண்ட் மதிப்பிலான நோட்டுகளை அந்நாட்டுக்கு பிரிட்டன் அனுப்ப உள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டிருந்த 150 கோடி டொலர் தொகையை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இப்போதுள்ள மதிப்பின்படி வெளிநாட்டு வங்கிகளில் 6,000 கோடி டொலர் அளவுக்கு லிபிய சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரசின் மதிப்பீட்டின்படி பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு 3,700 கோடி டொலர் என மதிப்பிட்டுள்ளது. 20 நாடுகளில் லிபியாவின் சொத்துகள் பரவியுள்ளன.
கடாபியின் சொத்துகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. பாரீஸில் நடைபெற்ற கருத்தரங்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்றார்.
மொத்தம் 28 நிறுவனங்களின் பங்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் வங்கிகள், துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்களும் அடங்கும்.
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்புகள் கண்டுபிடிப்பு.
4500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த எலும்புகளை ஆய்வாளர்கள் வான்கூவர் தீவின் எல்லை பகுதியில் உள்ள நமு தீவில் கண்டுபிடித்தனர்.
அதனை பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹெய்ட் சக் பர்ஸ்ட் நேஷன் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
சைமோன் பிரேசர் பல்கலைக்கழகம் தொல்லியல் ஆய்வாளர் ராய் கார்ல்சன் மற்றும் ஹெய்ட் ஸ்விக் பர்ஸ் நேஷன் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.
கடந்த 1977ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டும் முயற்சி தொடங்கியது. அவை மீண்டும் கொண்டு வரப்பட்டது குறித்து ஹெய்ட்சக் தலைவர் ஹார்வி ஹம்சிட் பெருமிதம் அடைந்தார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் எங்களது முன்னோர்களின் எலும்புகள் தாய் பூமிக்கு வந்துள்ளது என அவர் தெரிவித்தார். ஆய்வாளர்களின் தற்போதய ஆய்வில் 142 முன்னோர்களின் உடல் எலும்புகள் சேகரிக்கப்பட்டு தாய் மண் திரும்பி உள்ளது.
அந்த எலும்பு பகுதி வைக்கும் இடத்தில், அந்த முன்னோர்களுக்கு பயணத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பலகையில் எழுதி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடாபியின் ரகசிய ஆவணங்கள் ஆய்வு.
லிபியாவில் இருந்து தப்பி ஓடிய கடாபியும், அவரது ஆதரவாளர்களும் தப்பி ஓடும் அவசரத்தில் தங்களது ரகசிய ஆவணங்களை விட்டுச் சென்று உள்ளனர்.
இந்த ஆவணங்கள் பல ஆண்டுகளாக யாரும் நெருங்க முடியாத நிலையில் பயங்கர பாதுகாப்புடன் இருந்தன. தற்போது இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆவணங்கள் தலைநகர் திரிபோலியில் ராணுவ புலனாய்வு மையம் உள்ள கட்டிடத்தில் இருந்தன. இந்த வளாகத்தில் ஒரு கட்டிடம் நேட்டோ வான்வழித் தாக்குதலில் நொறுங்கியது.
இதர கட்டிடங்கள் சேதம் அடையாமல் இருந்தன. இதில் கடாபியின் அடக்குமுறை ஆட்சி தெரியவந்தது. அதில் எழுதப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருந்தது. சில ஆவணங்கள் குறிப்பிட்ட நபர்களை அழிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலக நிர்வாகம் அப்துல்லா அல் செனுசிக்கு உரியதாகும். இவர் கடாபியின் மைத்துனர் ஆவார். இவர் மனித இனத்திற்கு எதிராக கொடுமை செய்தவர். இவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடுகிறது.
சில ஆவணங்களில் சில அரசியல் தலைவர்களை குறிப்பிட்டு "அலையும் நாய்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கடாபி சொத்துக்கள் மற்றும் நண்பர்கள் விவரமும் உள்ளன. தலைநகர் திரிபோலியில் 1996ம் ஆண்டு அபு சலிம் சிறையில் 1200 அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவரமும் உள்ளது.
துருக்கியில் இருந்து இஸ்ரேல் தூதர் உடனடியாக வெளியேற உத்தரவு.
இஸ்ரேல் தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு காஸா பகுதியில் சென்று கொண்டிருந்த துருக்கி அரசுக்கு சொந்தமான கப்பல் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்திற்கு துருக்கி அரசு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோர வலியுறுத்தியது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல் அரசு மன்னிப்பு கோராமல் காலம் கடத்தி வந்தது.
இதனையடுத்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது டாவூடோக்லு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரகத்தில் உள்ள இரண்டாம் கட்ட அதிகாரிகளை தவிர உயர் மட்ட அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதலின் 10வது நினைவு தினம்: பலியானோரின் நினைவாக தொலைபேசிகள் கண்காட்சி.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதலில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகள் மிக உயரமான உலக வர்த்தக மைய கட்டிடத்தை தற்கொலைப்படை நபர் மூலம் மோதச் செய்து உலகின் மிகப்பெரும் கொடூரத்தை நிகழ்த்தினர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் கருகிப் போன மொபைல் தொலைபேசிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த தொலைபேசிகள் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கண்காட்சியில் வைக்கப்படுகிறது.
உயிரை நடுங்க வைக்கும் இந்த கோர நிகழ்வை நினைவு கூறும் கண்காட்சி பார்வையாளர்களளை அதிரச் செய்கிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் மீட்புக்குழுவினர் உடல்களை அகற்றிய போது அங்கிருந்த தொலைபேசிகள் ஒலிப்பதை கேட்டு அதனை சேகரித்தனர்.
60 மொபைல் போன்கள் தாக்குதல் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு அமெரிக்காவின் எப்.பி.ஐ வசம் உள்ளது. அவை தற்போது கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. உலக வர்த்தக கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ரிச்சர்டு ரீட்டின் கடவுச்சீட்டு கிடைத்துள்ளது.
அதே போன்று அந்த தீவிரவாதி வெடிகுண்டை இயக்க வயர் பிணைத்து இருந்த ஷீவும் கைப்பற்றபட்டு உள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் கண்காட்சியகத்தில் வைக்கப்படும் இந்த மொபைல் போன் தவிர தாக்குதலின் போது உருகுலைந்து போன கட்டிடத்தின் வடக்கு கோபுர ஆண்டனா பகுதி பொருட்களும் இடம்பெறுகின்றன.
தென் சீன கடல் பகுதியில் சர்ச்சை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா விருப்பம்.
தென் சீன கடல் பகுதியில் உருவாகியுள்ள சர்ச்சையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு சீனாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வியத்நாமுக்கு சென்று திரும்பிய இந்திய கடற்படைக் கப்பலை சீன கடற்படைக் கப்பல் மிரட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது: இந்தியா, சீனா இடையே இந்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையை அமெரிக்கா ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏதும் ஏற்படவில்லை என்று இந்தியா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.
கடந்த ஜூலை 22ம் திகதி வியத்நாமிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் ஐராவதம், தெற்கு சீன கடல் பகுதி வழியாக வந்தபோது சீன கடற்படைக் கப்பல் இடைமறித்து கடுமையான தொணியில் கேள்வியெழுப்பியது.
இதுகுறித்து தங்களுக்கு எவ்வித தகவலும் தெரியாது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவ் லபான் கூறியிருந்தார்.
பொதுவாக சர்வதேச கடல் பகுதியான தென் சீன கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் செல்கின்றன. இப்பகுதியைப் பயன்படுத்துவதில் அடிக்கடி சர்ச்சை நிகழ்வது தங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட லபான், இத்தகைய பிரச்னைகள், சர்ச்சைகள் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
பிரச்னை தீவிரமடைந்து உயிரிழப்போ, காயமோ ஏற்படும் அளவுக்கு வளரவிடக்கூடாது என்றார். இந்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சிரியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை.
சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இதன் மூலம் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ், துருக்கி எல்லை அருகில் உள்ள நகரங்கள் என நாடு முழுவதும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன.
மக்கள் மீது பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதியில் நான்கு பேரும், டைர் அல் ஜோர் நகரில் மூன்று பேரும் பலியாயினர்.
இந்நிலையில் போலந்து நாட்டின் சாபாட் நகரில் நேற்று கூடிய ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த "லிபியாவின் நண்பர்கள்" கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சிரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகள் விதிக்கும்படி வலியுறுத்தினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF