Thursday, September 1, 2011

இன்றைய செய்திகள்.

அரசாங்கம் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றது – ஜே.வி.பி.

அரசாங்கம் காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களக்கும் பல்தேசிய கம்பனிகளுக்கும் விற்பனை செய்து வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒரு அங்குலம் காணி கூட இல்லாத லட்சக்கணக்கான மக்கள் இலங்கையில் வாழ்ந்து வருவதாக ஜே.பி.யி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், லட்சக்கணக்கான ஏக்கர் காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பொருளாதார அமைச்சின் ஊடாக இந்தக் காணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நாட்டின் காணிகள், நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர வேறு நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணை மனு தொடர்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை!-இந்திய உள்துறை அமைச்சு.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க ஜனாதிபதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. இந்த பதிலை மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவுள்ளதாக தினமலர் செய்திதாள் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், செப்டம்பர் 9ம் திகதி; தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்.
அதுவரை தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் தனித்தனியே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
கருணை மனு, 11 ஆண்டுகள் நான்கு மாதங்கள் இந்திய அரச அதிபரிடம் நிலுவையில் இருந்தது. இது தொடர்பில் முடிவெடுக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பதிலளிக்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- சரத் பொன்சேகா.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுவதனை தடுக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள் அதிகாரத்தை கையில் எடுக்கும் நவடடிக்கையை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் தலையீடு செய்யக் கூடாது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஜனநாயக நெறிமுறைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் முக்கிய அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார் : திஸ்ஸ அத்தநாயக்க.

அவசரகாலச் சட்டத்தின் சில முக்கியமான அதிகாரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பல முக்கியமான அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அவசரகாலச் சட்டத்தின் முக்கியமான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்த போதிலும், உண்மையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் எந்த நேரத்திலும் முப்படையினரை கடமையில் ஈடுபடுத்தக் கூடிய வகையில் விசேட அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்குதல் உள்ளிட்ட பல காரணிகள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பல அவசரகாலச் சட்ட சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நாட்டு மக்களை அணி திரட்டுதல் என்னும் தொனிப்பொருளில் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது : சமூக சேவைகள் அமைச்சு.

நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகை வளர்ச்சி வீதம் ஒரு வீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றது என சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
பெண்கள் அதிகளவில் தொழில் புரிவதே இந்த நிலைமைக்கான பிரதான காரணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளைகளை பராமரிப்பதில் காணப்படும் நெருக்கடிகளினால் அநேகமான பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில் நாட்டம் காட்டுவதில்லை.
எனினும், முதியவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் உயர்வடைந்து செல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இருபது வீதமான வயோதிபர்கள், முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் வயோதிபர்கள் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்ட நீக்கத்தின் மூலம் பயங்கரவாதிகளுக்கு விடுதலை கிடைக்காது : கோதபாய ராஜபக்ஷ.

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதன் மூலம் பயங்கரவாதிகளக்கு விடுதலை கிடைக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோj;தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதிகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் நன்மையை கருத்திற் கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச்சட்டத்தை நீக்குதல் தொடர்பான யோசனையை நாடாளுமன்றில் முன்வைத்ததார்.
அவசரகாலச் சட்ட நீக்கத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் எதிர்நோக்கி வந்த பல தடைகள் நீங்கும். எனினும், பயங்கரவாதிகளுக்கு எவ்வித வாய்ப்பும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்hர்.
சிறைச்சாலை ஆணையாளரின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்படவுள்ளது : சிறைச்சாலை அமைச்சு.

எதிர்வரும் காலங்களில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வோரின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
செயற்திறனற்ற மற்றும் மோசடிகளில் ஈடுபடும் சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு கூடுதலான காலம் பதவியில் நீடிக்க அனுமதி அளிக்கப்படக் கூடாது என சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
பதவிக் காலம் தொடர்பான யோசனைத் திட்டமொன்றை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளது.
கடந்த காலங்களில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் பதவிக்காலம் ஒரு ஆண்டாக அமைந்திருந்தது.
உரிய முறையில் கடமையாற்றினால் பதவிக் காலத்தை மூன்று மாதங்களின் பின்னர் நீடிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ. கொடிப்பிலியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறைச்சாலைகளில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய விதிமுறைகள் நள்ளிரவில் நடைமுறைக்கு வந்தது.



சிறிலங்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்று நள்ளிரவுடன் நீங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனாலும் அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தொடரும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எவரும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் அவசரகாலச்சட்டத்தை நீக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதன்படி நேற்று நள்ளிரவு - 30ம் நாள் இரவு 12 மணி- தொடக்கம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் சில புதிய விதிமுறைகளைச் சேர்க்கும் வகையிலான உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சட்டமாஅதிபர் மொகான் பிரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், உயர்பாதுகாப்பு வலயங்களும் தொடர்ந்து பேணப்படும்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் வாய்ப்பை வழங்க முடியாது என்றும் சிறிலங்காவின் சட்டமா அதிபர் கூறியுள்ளார். அத்துடன் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை கையாள்வதற்காக சிறப்பு விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்தவொரு உறுப்பினரும் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச்சட்ட பின் ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சிறப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர்மேலும் கூறியுள்ளார். இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

லிபியாவில் பதுங்கு குழிகள் கட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு உதவிய சுவிஸ்.

லிபியாவில் சர்வாதிகாரி கர்னல் கடாபியின் 42 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும் அவர் புரட்சிப்படையினரிடமோ அல்லது நேட்டோ படையிடமோ சிக்கவில்லை.
கடாபி தலைநகர் திரிபோலியில் யாரும் பார்க்க முடியாத பாதாள அறைகளில் ஒளிந்து இருக்கலாம் அல்லது அவரது சொந்த ஊரான சிர்தேவில் பதுங்கு குழியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடாபியின் பாதாள பதுங்கு குழிகள் மிக சொகுசானவை. மிக ஆடம்பரமானவை. அந்த பதுங்கு குழிகளுக்குள் போவதற்கு பல சிக்கலான குறுக்கு வழிகளில் செல்ல வேண்டும் என கடாபிக்கு கண் அறுவை சிகிச்சை அளித்த பிரேசில் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் உள்ள அதி நவீன சொகுசு பதுங்கு குழிகளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுவதற்கு சுவிசின் முக்கிய பொருட்கள் பயன்படுத்தபட்டுள்ளன. அந்த பாதாள அறைகளுக்கான கருவிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன என்று ஓய்வு பெற்ற பொறியாளர் எரிச் பஸ்சர் கூறுகிறார்.
1970 மற்றம் 1980ஆம் ஆண்டுகளில் சுவிஸ் பொறியாளர்கள் மற்றும் அமெரிக்க பொறியாளர்களால் லிபியாவில் பதுங்கு குழிகள் பாதுகாப்பான வழிகளில் அமைக்கப்பட்டன என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இவர் பெடரல் இன்ஸ்டிடியூட்டின் தொழில்நுட்பத்தில் பாதாள அறை நிபுணராக பணியாற்றியவர் ஆவார். லிபியாவில் உள்ள பாதாள அறைகளில் சமையல் அறை சாப்பிடும் கூடம், கொம்யூனிகேஷன்ஸ் வசதி மற்றும் படுக்கை என அனைத்து வசதிகளும் உள்ளன.
லிபியாவில் உள்ள பதுங்கு குழிகள் போன்று சுவிசிலும் பதுங்கு குழிகள் ராணுவத்தை சாராத மக்களுக்காக 1960 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டன. அந்த பதுங்கு குழிகள் துப்பாக்கி குண்டுகளால் தகர்க்க முடியாத அளவு சக்தி வாய்ந்தவை ஆகும்.
பிரித்தானிய வங்கிகளில் முடக்கப்பட்ட லிபியா சொத்து விடுவிக்க முடிவு.
கடாபி ஆட்சியின் போது, பிரிட்டன் வங்கிகளில், லிபியாவின் சொத்து 95 கோடி பவுண்ட் வைப்பு செய்யப்பட்டு இருந்தது.
லிபியாவில், பொது மக்களுக்கு எதிராக கமாபி ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அந்த சொத்துக்களை பிரிட்டன் வங்கிகளில் முடக்கின. தற்போது போர் முடிந்துள்ள நிலையில், லிபியா சொத்துக்களை விடுவிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை லிபியா மீதான, பொருளாதார தடை நீக்க ஒப்பக் கொண்டுள்ளதை அடுத்து, இந்த சொத்துக்கள் திருப்பி அளிக்கப்படுகிறது.
இந்த நிதி லிபியாவின், தற்போதைய அவசர மனித நேய உதவிகளுக்கு தேவைப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் லிபியாவில் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்தத் தகவலை பிரிட்டன் அயல் முறை செயலாளர் வில்லியம் ஹாக் தெரிவித்தார்.
இதே போன்று ஜெர்மனி அரசு லிபியாவின் முடக்கிய சொத்துக்கள் 100 கோடி யூரோவும் பிரான்சில் முடக்கப்பட்ட 500 கோடி யூரோவும் விடுவிக்கப்படுகின்றன. லிபியாவின் 150 கோடி டொலர் சொத்துக்களை விடுவிக்குமாறு கடந்த வாரம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுள்ள நிலையில் இதர நாடுகள் நிதியை விடுவிகின்றன.
டொமினிக் ஸ்டிராஸ்கான் உளவியல் ரீதியாக பாதிக்கபட்டு உள்ளார் : பிரான்ஸ் முன்னாள் பிரதமர் தெரிவிப்பு.
பிரான்ஸ் சொசியல் கட்சி தலைவரும் சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவருமான டொமினிக் ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
முதலில் நியூயார்க் சோபிடல் ஹோட்டல் பெண் ஊழியர் நபிசடோ டயலோ அவர் மீது குற்றம் சாட்டினார்.
அந்த குற்றச்சாட்டில் இருந்து கடந்த வாரம் தான் ஸ்டிராஸ்கான் தப்பினார். இதையடுத்து பிரான்ஸ் எழுத்தாளர் டிரிஸ்டானே பானன் மீது 2003ஆம் ஆண்டு பாலியல் வன்முறைக்க முயன்றதாக குற்றசாட்டு உள்ளது. இது குறித்த சேசலிஸ்ட் கட்சி தலைவரும் பிரான்சின் மிக உயரிய மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமருமான மைக்கேல் ரோகர்டு கருத்து தெரிவித்து உள்ளார். இவர் 1988ஆம் ஆண்டு முதல் 91 ஆம் அண்டு வரை பிரதமராக இருந்தவர் ஆவார்.
63 வயது டொமின்க் மீது தொடர்ந்து பாலியல் குற்ச்சாட்டுகள் வருகின்றன. அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறேன். அதனாலேயே இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன என்றார். டெடாமினிக் 2012அம் ஆண்டு ஜனாபதி தேர்தலின்பொது சோசலிஸ்ட் கட்சி வெட்பாளராகக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். அவர் மீது தொடாந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் சோசலிஸ்ட் கட்சியனரை அதிர்ச்சி அடைய செய்துள்ளன.
இதனால் டொமினிக் வருகிற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டி போட முடியாத நிலை உள்ளது. அவர் திறமை மிக்கவர். ஆனால் நடந்து வரும் நிகழ்வகள் வெட்கப்படக்கூடியதாக உள்ளது என மைக்கேல் ரோகர்டு வேதனைப்பட்டார். டொமினிக் மீது இருந்து நம்பிக்கை போய்விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
துருக்கி படையினர் நடத்திய தாக்குதலில் 160 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் பலி.
துருக்கிப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 160 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கிப்படையினர் விமானங்களின் மூலம் குதிர்ஷ் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குர்திஷ் படையினருக்கும் துருக்கிப் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் துருக்கிப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 9 படையினர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.
அதன் பின்னர் துருக்கிப் படையினரின் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குர்திஷ் துருப்பினரின் 38 நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதனால் இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடரக் கூடிய சாத்தியம் கிடையாது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 40000 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-எகிப்து பகுதியில் போர் பதட்டம் அதிகரிப்பு.
இஸ்ரேல்- எகிப்து எல்லைப்பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இரண்டு போர் கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18-ம் தேதியன்று இஸ்ரேல்-எகிப்து எல்லைப்பகுதியான காஸா பகுதியில் நடந்த வான் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிக்குபழியாக இஸ்ரேல் நிலைகள் மீது பாலஸ்தீனயர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 8 இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்-எகிப்து பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எகிப்தின் செங்கடல்பகுதியில் இஸ்ரேல் ராணுவம், இரு போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் உள்துறை அமைச்சர் மெட்டன்வில்னாய் கூறியதாவது:
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த பாலஸ்தீனியர்களின் சில பயங்கரவாத அமைப்புகள், எகிப்து செங்கடல் பகுதி வழியாக ‌சினாய் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்கிறது. இதனை எகிப்தும் கண்டுகொள்வதில்லை.
எனினும் பதிலடி கொடுக்க இஸ்ரேலும் தயாராகிவிட்டது. இதன் முன்னோட்டமாக இரு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரமும் தாக்குதல் நடந்த ராணுவ வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இஸ்ரேலின் இந்த செயல் 1979-ம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தினை மீறியதாகும் என எகிப்து கூறியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF