Sunday, December 5, 2010

கோடீஸ்வர நாடுகளில் சீனாவுக்கு மூன்றாமிடம்



பீஜிங்:கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில், சீனா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உள்ளன.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 2009ல் சீனாவில், ஆறு லட்சத்து 70 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 2008ஐ விட இது 60 சதவீதம் அதிகம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், "சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி, தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முதலீட்டு சந்தையின் வளர்ச்சி ஆகியவையே சீனாவின் இந்த வேகமான வளர்ச்சிக்கு காரணம்' என்றார்.இதுகுறித்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:லட்சம் கோடி வைத்திருப்பவர்கள் (பில்லியனர்) அமெரிக்காவில் 117 பேரும், சீனாவில் 64 பேரும் உள்ளனர். இதில் சீனா இரண்டாமிடத்தில் இருக்கிறது.

சீனாவில் நிர்வாக இயக்குனர்கள், தொழில்முறை முதலீட்டாளர்கள், அதிக பணவசதி படைத்த தனிநபர்கள் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய துறைகளை தவிர, மருந்து தயாரிப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில் முனைவோர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர்.செல்வ வளம், சீனாவின் கடற்கரைப் பகுதிகள் தவிர, சீனா முழுவதும் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் பரவி வருகிறது. 2009ல் குவாங்டாங், ஷீஜியாங், ஜியான்சு, ஷான்டாங் ஆகிய மாகாணங்களிலும், பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களிலும் வசிப்பவர்களில் பாதிக்கு மேல் கோடீஸ்வரர்கள் தான்.

அதேநேரம், மத்திய மற்றும் மேற்கு பகுதி சீனாவில் முதலீடு அதிகரிப்பது என்பது, சீனாவின் 12வது ஐந்தாண்டு திட்டக்காலமான 2011ல் இருந்து 2015க்குள் நடக்கும். ஆனால் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் இந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெறும் 0.2 சதவீதம் மட்டும் தான்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF