மனிதனின் உடல் வளர்ச்சி 21 வயது வரை இருந்தாலும், மூளை வளர்ச்சி குழந்தைப் பருவத்துடன் நின்று விடும் என்ற நம்பிக்கையை சமீபத்திய ஆராய்ச்சி பொய்யாக்கியுள்ளது. 40 வயது வரை மூளை வளர்வதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி லண்டனில் ‘டெய்லி மெயில்’ பத்திரிகையில் வெளியான தகவல் வருமாறு: லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாரா ஜெய்னே பிளக்மோர் தலைமையிலான குழுவினர் மனித மூளை வளர்ச்சி பற்றி விரிவாக ஆராய்ந்தனர். மனித மூளை 40 வயது வரை வளர்வது அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பேராசிரியர் சாரா கூறுகையில், ‘‘மனித மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்துடன் முடிவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்பட்டது. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் அந்த நம்பிக்கையில் உண்மையில்லை எனத் தெரிந்தது. மனித மூளையின் பல பகுதிகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் 30 முதல் 40 வயது வரை நீடிக்கிறது’’ என்றார்.
முடிவு எடுத்தல், திட்டமிடுதல், புரிந்து கொள்ளுதல், முறையற்ற சமூக நடத்தைக்கான எண்ணம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் ஈடுபடும் மூளையின் முன்பகுதியில் வளர்ச்சி ஏற்படுகிறது. கருவில் இருக்கும்போதே வளரத் தொடங்கும் இந்தப் பகுதி, குழந்தைப் பருவத்திலும் வளர்கிறது. வாலிப வயதில் மறுசீரமைப்பு செய்து கொள்கிறது. பிறகு மீண்டும் வளர்ச்சியை தொடரும் அது 40 வயது வரை கூட நீடிக்கும் என்றும் சாரா தெரிவித்தார். இந்த வயதுக்குப் பிறகும் புதிய திறமைகளை மனிதன் கற்றுக் கொண்டாலும், அதற்கான உயிரியல் மற்றும் மரபணுவின் அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் 40 வயதுக்குள் ஏற்பட்டதாக இருக்கும் என்றும் சாரா கூறினார்.