Friday, December 17, 2010

மன்னாரில் பிடிக்கப்பட்ட இரண்டு பிரமாண்டமான கடற்பன்றிகள்! மீனவர்கள் கைது


மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் மிகவும் பிரமாண்டமான இரண்டு கடற்பன்றிகள் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளன.

 அவற்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர் ஒருவரை அப்பகுதியில் உள்ள கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த மீனவரை மன்னார் பொலிஸார் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

நேற்று மதியம் 2-30 மணியளவில் தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவர் தான் ஏற்கனவே கடலில் போட்டிருந்த வலையினை பரிசோதித்த போது 2 பிரமாண்டமான கடற்பன்றிகள் மாட்டி இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

பின் அவற்றை கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளார். இதன்போதே கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரை கைது செய்துள்ளதோடு குறித்த 2 கடற்பன்றிகளையும் மீட்டனர்.

அவர்களை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். கடற்பன்றிகள் இரண்டு சோடியாக அகப்பட்டு உள்ளமையை கேள்வி பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கடற்பன்றிகளைப் பார்வையிட்டுள்ளனர்.

மேற்படி இரண்டு கடற்பன்றிகளும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக கொழும்பிற்கு ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF