சிம்பன்சி குரங்குகள், கிருமிக்கொல்லிச் சத்து நிறைந்த ஒரு தாவரத்தின் இலையைத் தேடிப் பிடித்துத் தின்னும் விஷயத்தை அமெரிக்கா, ஜப்பான், கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிமபன்சிகள், கனிந்த பழங்கள், இலைகள், விதைகள் என்று பலவற்றையும் சாப்பிடுகின்றன. அவற்றின் உணவு விருப்பம் வித்தியாசமானது.
சிம்பன்சிகள் ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 300 வகையான தாவரங்களை ருசி பார்ப்பதுண்டு. ஆனால் டெய்சி குடும்பத்தைச் சேர்ந்த அஸ்பிலியா என்ற இனத்தின் மூன்று வகைச் செடிகள் மீது சிமபன்சிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. அந்தச் செடிகளில் இருந்து அவை ஒரே ஓர் இலையைத் தேர்ந்தெடுத்து அதை அப்படியே விழுங்கிவிடுகின்றன.
சிம்பன்சிகளின் இந்த நடத்தை, வழக்கத்துக்கு மாறான ஒன்று. எனவே, ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையிலான ஓர் ஆய்வுக் குழு அந்த இலைகளை ஆராய்ந்தது. அந்த இலைகளில் சிறப்பு அம்சங்களைக் கொண்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமான பல ஆப்பிரிக்க மூலிகை மருந்துகளில் அஸ்பிலியா இனத்தைச் சேர்ந்த செடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓர் இனச் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, இடுப்பு வாதம், இடுப்பு நரம்புவலி, நரம்புத் தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இன்னொரு செடியின் இலைகள், புண்கள், வயிற்றுக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றைத் தீர்க்க உதவுகிறது. அஸ்பிலியாவில், `தயாருப்ரைன் ஏ’ என்ற கிருமிக்கொல்லிச் சத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
மற்ற பல தாவர இனங்களிலும் இயற்கையிலேயே இந்தச் சேர்மம் காணப்படுகிறது. வடஅமெரிக்காவில் வசிக்கிற ஒகனாகன் கோல்விலி இந்தியர்கள் என்ற பழங்குடியினர், ஒரு செடியில் இருந்து கண் மருந்து, புண் மருந்து தயாரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள். தயாருப்ரைன் ஒரு வலுவான கிருமிக்கொல்லி. அது பல அசாதாரண பாக்டீரியாக்களை கொல்கிறது.
வட்டப் புழு, புளுக்குகள் போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களையும் அது அழிக்கிறது. சில ஆப்பிரிக்கச் சமூகங்கள், குடல் புழுக்களை அழிக்கும் மருந்தாக அஸ்பிலியா மொசாம்பி சென்சிஸ் என்ற தாவரத்தைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கு வருகிற வியாதிகள்தான் சிம்பன்சிகளுக்கும் வருகின்றன. எனவே அவை தமது நோய்க்கு மருந்தாக அஸ்பிலியா இலைகளைச் சாப்பிடுவது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.