Monday, December 13, 2010

சதாம் தூக்கு தண்டனை.."கால்களை கயிற்றால் கட்டி நரகத்துக்கு போ" என்று சொல்லப்பட்ட கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்



வாஷிங்டன் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
சதாம் உசேன் கடந்த 2006 - ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

 அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007 - ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

 அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.

தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார். சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ‘பயமாக இருக்கிறதா’ என்று சதாமிடம் ஈராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாபக் அல் ரூபே கேட்கிறார். ‘பயம் எதுவும் இல்லை.நான் ஆட்சிக்கு வரும்போதே எதிர்பார்த்ததுதான்’ என்கிறார் சதாம்.

தூக்கு மேடை ஏறும் வரை குர்ஆன் புத்தகத்தை கையில் வைத்திருந்த சதாம், அதை ஈராக் தலைமை நீதிபதியும் தனது நெருங்கிய உறவினருமான அவாத் அல்பந்தரின் மகனிடம் ஒப்படைக்கும்படி கூறி பரூனிடம் கொடுத்தார். ‘எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்’ என ஈராக் வீரர்களிடம் பரூன் சொல்கிறார்.

சதாமின் கால்களை வீரர்கள் கயிற்றால் கட்டினர். ‘காலை கட்டுகிறீர்களே. தூக்கு மேடையில் எப்படி ஏறுவது?’ என்று சதாம் கேட்கிறார். ‘நரகத்துக்கு போ’ என சதாமை ஒரு வீரர் திட்டுகிறார். உடனே பரூன், ‘‘யாரும் எதுவும் பேசக் கூடாது’’ என எச்சரிக்கிறார். சதாமை வீரர்கள் தூக்கு மேடைக்கு தூக்கி செல்கின்றனர். தலையை மூடிக்கொள்ள கொடுத்த துணியை வேண்டாம் என்கிறார் சதாம். சிறிது நேரம் பிரார்த்தனை செய்த பின் அவரது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. சதாம் தூக்கில் தொங்கியபோது, அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் ‘‘முக்தடா, முக்தடா, முக்தடா’’ என கூச்சலிட்டார். முக்தடா அல் சதர் என்பவர் ஷியா பிரிவு மதத் தலைவரின் தந்தை. சதாம் ஆட்சியில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் போடாதீர்கள் என பரூன் மீண்டும் எச்சரிக்கிறார்.

சதாம் இறந்ததும் தூக்கு மேடையில் இருந்து அவரது உடல் அகற்றப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டது. சதாமின் உடல் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டதா என மத குரு ஒருவர் உறுதி செய்கிறார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன் மீது ஈராக் சட்டப்படிதான் வழக்கு விசாரணை நடந்து, ஈராக் அரசுதான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது என அமெரிக்கா கூறியது. தூக்குமேடையை அமெரிக்க வீரர்களே கட்டினர் என்பதையும் சதாம் தூக்கு தண்டனையில் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதையும் விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF