Tuesday, December 14, 2010

குழந்தைகள் புத்திசாலிகளாக வீட்டில் நூலகம்: ஆய்வில் தகவல்



குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்க, அவரவர் வீடுகளில் சிறு நூலகங்கள் இருந்தாலே போதும் என அமெரிக்கா, நெவேடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

இதற்காக, குழந்தைகளுக்கு வகுப்பு பாடங்களுடன் தனித்திறனாய்வு பயிற்சிகளாக, யோகா, தியானம், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு போன்ற சிறப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும், குழந்தைகளின் உடலுக்கும், மனதிற்கும் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வலியுறுத்துவது வழக்கம். குழந்தைகள் கல்வியில் ஆர்வம் செலுத்துவது குறித்து, அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் 20 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆய்வில், வீட்டில் 500 புத்தகங்கள் கொண்ட சிறு நூலகம் இருக்கும் பட்சத்தில், குழந்தைகளின் ஆர்வம் புத்தகங்கள் பக்கம் திரும்புவது தெளிவானது.

மேலும், இந்த ஆய்வில் மூன்று ஆண்டுகள் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டுகள் படித்த பெற்றோர் வீடுகளில், சிறு நூலகம் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குழந்தைகளின் படிப்பில் பெரும் மாறுதல்கள் காணப்பட்டது. சிறு நூலகங்கள் இருக்கும் வீட்டில் மூன்று வயதிலேயே குழந்தைகள் புத்தகங்கள் பக்கம் திரும்புவது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு நூலகம் உள்ள வீடுகளில் வளரும் குழந்தைகளின் கல்வித் தரமும் சராசரி உயர்ந்தது. இந்த ஆய்வின் மூலம், பெற்றவர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால் தான், குழந்தைகளும் நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் மாறியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF