
தாய்லாந்தில் தவறுதலாகத் துண்டுதுண்டாகக் கிழித்து குப்பையில் போடப்பட்ட சுமார் இரண்டு லட்சம் ரூபாய் உள்ளூர் நாணயத்தை (6600 அமெரிக்க டொலர்) தடயவியல் நிபுணர் ஒருவர் மீண்டும் ஒட்டி பாவனைக்கு ஏற்றவிதத்தில் உரியவரிடம் ஒப்படைத்து சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் ஏழு நாட்களாகும். ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரியும் லீ என்ற நபர் தனது கைகளில் இருந்த பற்றுச்சீட்டுக்களோடு இந்தப் பணத்தையும் கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார்.
அதுவும் உரிய கழிவகற்றும் இயந்திரப்பகுதிக்குச் சென்று விட்டது. பின்னர் விடயம் தெரியவந்ததும் அதை நீதி அமைச்சின் தடயவியல் பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு முப்பது வயதான லியூஹூய் என்ற தடயவியல் நிபுணர் ஏழு தினங்களாகப் பணியாற்றி உருக்குலைந்து போன பணத்தை மீண்டும் உரிய நிலைக்குக் கொண்டுவந்துள்ளார்.
தாய்லாந்தின் நீதி அமைச்சின் தடயவியல் பிரிவுக்கு வருடாந்தம் இது போன்ற 250 முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவை அனைத்தும் இலவசமாகவே கையாளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.