Wednesday, December 29, 2010

ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை விசா விதிகளில் சிறிது தளர்வு



ஐக்கிய அரபு நாடுகள் எமிரேட், அடுத்தாண்டு முதல் அமல்படுத்த உள்ள புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அங்குள்ள தொழிலாளர்களுக்கு விசா வழங்க ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். ஆறு மாத காலத் தடை ரத்து செய்யப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

அங்குள்ள வெளிநாட்டவர்களில் ஏற்கனவே உள்ள வேலை அனுமதிச் சட்டப்படி, ஒரு தொழிலாளர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்துக்குச் செல்ல வேண்டுமானால் அவருக்கு ஆறு மாத காலம் தடை விதிக்கப்படும்.ஆனால் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள, புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அந்தத் தடை ரத்து செய்யப்படும்.

இதனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்துக்குச் செல்ல உடனடியாக விண்ணப்பம் அனுப்பி, தனது வேலையை தொழிலாளர் மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக, ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனம் அல்லது தொழில் வழங்குவோரிடம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.

இது குறித்து துபாய் வானொலியில் பேசிய அந்நாட்டு தொழிலாளர் துறை செயல் இயக்குனர் ஹூமைத் பின் டீமாஸ் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகள் ஒரு நிறுவனம் அல்லது வேலை வழங்குவோரிடம் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இனி ஆறு மாதத் தடை என்பது கிடையாது.

அவர்கள் உடனடியாக தங்கள் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்.இதனால் வேலை வழங்குவோர், தங்களிடம் தான் வேலை பார்த்தாக வேண்டும் என்று தொழிலாளர்களை அவர்களின் விருப்பமின்றி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொழிலாளர் விலகினால் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

அதேபோல், ஒருவர் தனது குடியுரிமை விசாவை ரத்து செய்து விட்டு, மீண்டும் ஐக்கிய அரபு நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்தால் அவருக்கு புதிய அனுமதி கிடைக்காது. குறைந்த பட்சம் அவர் மீண்டும் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்தால் தான் புதிய அனுமதி கிடைக்கும்.ஒரு தொழிலாளருக்கும் அவருக்குத் தொழில் வழங்குவோருக்கும் இடையில் உள்ள உறவு புதிய சட்டப்படி இரண்டு ஆண்டுகளோடு முடிந்து விடுகிறது.இவ்வாறு டீமாஸ் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF