கடந்த 50 ஆண்டுகளாக அணுக்கள் பிளவுபடுதல் என்ற முறையின் மூலமே அணுக்கரு உலை செயல்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக 1997-ஆம் ஆண்டில் இருந்து ஹைட்ரஜன் ஐசோடோப்பு வாயுக்கள் உதவியுடன் இணைவு முறையினால் ஆற்றலை பெற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் தேசிய அணுக்கரு பாதுகாப்பு மைய துறையினர் உலகின் மிகபெரிய லேசர் அறிவியல் கட்டுமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். இதற்கான திட்டத்தின் மதிப்பீடு 2.2 பில்லியன் பவுண்டு (ரூ.32 ஆயிரத்து 900 கோடி) ஆகும். திட்டத்தின் முதல் படியாக விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று, கடந்த நவம்பர் 2ல் சோதனை முயற்சியாக பல நூறு அறைகள் கொண்ட அமைப்பை உருவாக்கினர். இந்த அறைகளில் உள்ள துளைகள் ஒவ்வொன்றும் 10 மீட்டர்கள் விட்டம் கொண்டவை. அதில் 30 செ.மீ. தடிமனான கான்கிரீட் அமைப்பு லேசர் கற்றைகளை அறையினுள் நுழைய செய்கிறது. மேலும் 850 கம்ப்யூட்டர்கள், லேசர் கற்றைகளை 50 மைக்ரோ மீட்டர்கள் அளவிற்குள் ஒழுங்குபடுத்தி கொண்டு வரும் செயலை செய்கிறது.
பின்னர் 192 லேசர் கற்றைகளை ஒரே நேரத்தில் அணுக்கரு உலையின் மையபகுதியில் எரிய செய்து அதனை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளான டிரைட்டியம் மற்றும் டியூட்ரியம் வாயுக்கள் அடங்கிய கண்ணாடி போன்ற அமைப்பினை நோக்கி செலுத்தினர். இதில் வெளிப்பட்ட ஆற்றல்களின் அளவு 1.3 மில்லியன் மெகா ஜூல்கள். இது உலக சாதனையாகும். மேலும் அதிகபட்சமாக 6 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வெளியிடப்பட்டது. சூரியனின் மையபகுதி 27 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது பார்ப்பதற்கு பூமியில் ஒரு சிறிய நட்சத்திரம் ஒளிர்வது போல் காணப்பட்டது.
எனவே, வெற்றிகரமாக அமைந்த இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில் வரும் 2020 ஆண்டுக்குள் அணுக்கரு நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன் மூலம் 2050 ஆண்டில் இருந்து அமெரிக்காவின் நான்கில் ஒரு பகுதி மக்களின் ஆற்றல் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் அணுக்கரு பிளவு முறை போல் அல்லாமல், இணைவு முறையானது கேடு விளைவிக்கும் எந்தவித உபரி பொருளையும் தராது. சுற்றுசூழலுக்கு உகந்தது மற்றும் பாதுகாப்பானது. இதற்கான மூலப்பொருள்களும் பரவலாக கிடைக்கும். எனவே வருங்காலத்தில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அது பலவகைகளில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு மைய துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.